45
அன்று…
மேகலாவுக்கும் தங்க பாஸ்கரனுக்கும் இரவெல்லாம் நிம்மதியான தூக்கம் இல்லை. தங்க பாஸ்கரன் புரண்டு புரண்டே படுத்து இருந்தார், உறங்காமல்..
அருகில் படுத்திருந்த விகர்த்தனனுக்கும் தூக்கம் இல்லை.
“அக்கா இங்கே உள்ள இருக்குறா.. ஆனால் அவளின் கணவன் வெளியே மழையில் நனைந்து கொண்டே நிற்கிறாரு? என்ன ஆனது இருவருக்குள்ளும்? இருவரும் நகமும் சதையும் போல இணைந்தே தானே இருப்பாங்க? இப்பொழுது இப்படி ஒரு பிரச்சனைக்கு என்ன காரணமாக இருக்கும்? அவரு அம்மா அக்கா தங்கை ஒரு மாதிரினு கேள்விப்பட்டிருந்தேனே.. அவர்களோட ஏதும் பிரச்சனையா வதனிக்கு?” என்று என்னென்னவோ நினைத்துக் கொண்டு, மற்றவர் மீது தான் அவனின் எண்ணம்.
ஆனால் நிரஞ்சனால் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று விகர்த்தனன் யோசிக்கவேயில்லை..
என்னதான் அக்கா திருமணம் சொல்லாமல் செய்திருந்தாலும் நிரஞ்சனைப் பற்றி, சற்று வயது வந்ததும் முழுமையாக விசாரித்து அறிந்திருந்தான் விகர்த்தனன்.
அக்கா எப்படி வாழ்கிறாள்? நிரஞ்சன் எப்படி பார்த்துக் கொள்கிறான்? அவர்கள் வீட்டில் சகோதரிகள் வதனி மீது கொண்டுள்ள நிலைபாடு.. திடீர் கஷ்யாணத்தால் பிரேமாவின் வருத்தம் என்பது வரை இவனுக்கு தெரியும்.
ஏன் நிரஞ்சன் சமீபத்தில் மாற்றிய டிரைவிங் லைசன்ஸ் முதற்கொண்டு அறிவான் விகர்த்தனன்.
வெளிப்பார்வைக்கு அழகிய பழமாய் இருந்த அவர்களது இல்லற வாழ்வு உள்ளுக்குள் அழுகி புழு அரித்திருந்தது அவன் தெரியாமல் போனதால், நிரஞ்சன் மீது அவனுக்கு கொஞ்சமும் சந்தேகமே வரவில்லை.
அந்தோ பாவம்..!
தானும் உறங்காமல் படுத்திருந்தவன், இருமுறை வாசல் கதவை ஓசைப்படாமல் திருந்து பார்த்துவிட்டு தான் வந்தான்.
அருகில் தந்தையும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பதை அறிந்து அவர் தோளை தட்டிக் கொடுத்தவன் “தூங்குங்க ப்பா ஒன்னும் இல்ல எல்லாம் சரியாயிடும். ஏதாவது ரெண்டு பேருக்குள்ள சின்ன பிரச்சினையாக தான் இருக்கும்” என்று ஆறுதல் படுத்தினான்.
“உனக்கு வதனியோடு பிடிவாத குணத்தை பற்றி தெரியும் தானே சக்தி? எதையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டா.. இத்தனை வருஷம் நம்மை வந்து பார்க்காம இருந்ததிலேயே உனக்கு அது தெரியலையா?”
“அதுல வதனிய மட்டும் நம்ம தப்பு சொல்ல முடியாது ப்பா.. நாமும் தான் அவளை பார்க்காமல் இருந்தோம். வந்தவளையும் முகத்தில் அடித்தாப்ல திருப்பி அனுப்பனோம்” ஒரு முறை கணவனோடு வந்தவளை கதவை திறக்காமல் வெளியே அனுப்பியதை சுட்டி காட்டினான்.
“அது நியாயமான பெத்தவங்களுக்கு வர உரிமையான கோபம் ஆற்றாமை வருத்தம். அதுக்காக அவ அப்படியே தானே இருந்தா அவளும் பிடிவாதத்தோட..! சரி பழசை விடு என் கவலையே வேற” என்றார் நன்றாக திரும்பி மல்லாக்க படுத்தபடி..
“அதெல்லாம் இப்போ ஒன்னும் பெரிய பிரச்சனையா இருக்காது பா” என்றான்.
“இல்ல சக்தி உனக்கு புரியல. உங்க அக்கா எங்கேயும் அவளோட புருஷனை எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டா.. அடுத்தடுத்து அவ நம்ம வீட்டுக்கு வராமல் இருந்ததற்கான காரணம்.. நாம எங்கே அவரை திட்டிடுவோமோ அவமானப்படுத்திடுவோமோ என்கிற பயம் தான்” என்றார்.
அப்பாவை புரியாமல் பார்த்தான் விகர்த்தனன்.
“இப்போ இவ்வளவு பிடிவாதமா அவரு வெளியில நிக்கிறது பார்த்தும் இவ உள்ளுக்குள்ளே இருக்கானா? அப்போ வேற எதுவும் பெருசா பிரச்சனை ரெண்டு பேருக்குள்ள இருக்குனு தானே அர்த்தம்??” என்று தந்தை கேட்க..
விகர்த்தனன் திடுக்கிட்டு “அவர் வெளியில் நிற்கிறது உங்களுக்கு எப்படி பா தெரியும்?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.
“ஒரு அனுமானம் இருந்தது. உன் அக்காவை அவரு தனியா அனுப்ப மாட்டாரு. அதுவும் இல்லாம நீயும் கதவு சாத்தம்போது ஒரு தடவை வெளியில போய் பாத்துட்டு வந்த.. அதுக்கப்புறம் எனக்கு தெரியாம இரண்டு தடவை போய் செக் பண்ணிட்டு வந்துட்டியே? அதுலேயே நான் தெரிஞ்சுகிட்டேன். நான் வாழ்ந்து பார்த்தவன் டா. வாழ்க்கையின் புரிதல் எனக்கு இருக்கு” என்றார் வருத்தமாக.
“சரி பா.. அமைதியா இருங்க. இப்ப தூங்குங்க காலையில பேசிக்கலாம்” என்று தங்க பாஸ்கரனை தூங்க வைத்தவனுக்கு,
அப்பா சொன்னதில் இருந்து கண்டிப்பாக நிரஞ்சன் வதனியை விட்டு விடமாட்டான் என்று ஒரு தைரியம் இருந்தது.
எல்லோரும் போல இருவரும் இணைந்து இருந்தால் போதும் என்று நினைத்தான் விகர்த்தனனும்.
ஆனால் இங்கே நிலைமையோ தலைக்கீழ்..!
அவன் விட்டு விட மாட்டான். இவள் தானே விட்டுவிட துடிக்கிறாள்?
இரண்டு நாள் அமைதியாக சென்றது. பெரும்பாலும் தங்க பாஸ்கரன் வீட்டிலேயே அமைதியாக இருந்தார். அவருடைய மகளிடம் எதுவும் பேசவில்லை. அவ்வப்போது பேத்தியிடம் மட்டும் சிறிது சிறிது பேசினார்.
மிரு பெரிய மீசையோடு இருக்கும் தாத்தாவிடம் செல்ல சற்று அஞ்சினாள். மாமனை ஏற்கனவே பழக்கம் உள்ளதால் அதனால் அவனோடு நன்றாக ஒட்டிக்கொண்டாள். அதோடு அவளுக்கு பார்த்து பார்த்து பிடித்ததை செய்து தரும் ஆச்சியின் மீது கொள்ளை பிரியம் தோன்றியது.
மேகலா ஏதாவது கேட்க ஆரம்பித்தால் வதனியின் முறைப்பில் அமைதியாக வாயை மூடிக்கொள்ளவார் தான். ஆனால் பேச்சை குறைக்க மாட்டார்.
“இந்த ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. என்ன தான் நடந்துச்சுனு சொல்லி தொலைஞ்சா தான் என்னவாம்? எங்களுக்கு எவ்வளவு பதைப்பதைபா இருக்கு. இப்ப புரியாது டி உனக்கு? நீயும் ஒரு பொண்ணு வச்சிருக்கல்ல.. அப்போ புரியும்” என்று மகளை வறுத்து எடுத்துக் கொண்டுதான் இருந்தார்.
“நீ என்னவாவது பேசிக்கொள்” என்ற வதனி தனக்குள்ளே நிறைய நிறைய யோசித்துக் கொண்டிருந்தாள்.
நான்கு நாட்கள் சென்றதும் “எனக்கு ஒரு வீடு பார்த்து தாங்க” என்று பெற்றவர்கள் முன் வந்து நின்றாள்.
“உனக்கும் உன் புருஷனுக்குமா?” என்று விகர்த்தனன் கேலியாக கேட்க.. அவனை ஓரப்பார்வையால் முறைத்தவள் “எனக்கும் என் பொண்ணுக்கு மட்டும்” என்றாள் ஆணித்தரமாக..
“அவசரப்படாத வதனி.. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்ற அம்மாவை நிதானமாக பார்த்தவள் விரக்தியாக சிரித்தாள்.
“அப்படியே இருந்தாலும்.. எதுக்கு நீ தனியா வீடு பார்க்கணும்? இங்கேயே.. எங்களோட இரு” என்று மேகலா கூறினாள்.
“அதானே..! அம்மா சொல்ற மாதிரி நம்ம வீட்டுல நீ இருக்க வேண்டியதுதானே?” என்று தம்பியும் கேட்டதும் இடலமாக தலையாட்டி மறுத்தவள்,
“ஏற்கனவே நான் செஞ்சு வெச்ச அனர்த்தங்கள் எல்லாம் போதும். இன்னும் உனக்கு கல்யாணம் ஆகல.. எனக்காக பார்த்தா.. உனக்கு வரப் பொண்ணோட உறவுக்குள்ள சிக்கல் வரும். அதுக்கு ரெண்டு எட்டு தள்ளி இருக்கிறதே நல்லது” என்றவளை இப்பொழுது அனைவரும் முறைப்பாக பார்த்தனர்.
எப்படி நீ அப்படி சொல்லலாம் என்று பொருள் அதில்..!
“இப்ப ஏத்துக்க கஷ்டமா இருக்கலாம். ஆனா அது தான் எல்லாருக்கும் நல்லது. என்ன இருந்தாலும் நீங்க எல்லாம் ஒரு குடும்பம். நான் தனி தானே..!” என்றவளின் முகம் கசங்கி இருக்க மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
பெண்ணின் முகத்தை இவ்வாறு காண சகிக்காத தங்க பாஸ்கரன் அவரும் முகத்தை திருப்பிக் கொண்டார், கலங்கிய கண்களை மறைத்தபடி..
மேகலா தான் திட்டிக்கொண்டே இருந்தார் மகளை. வதனி அதை கண்டுகொள்ளவே இல்லை.
“நான் தனியா போறதுல மாற்றமில்ல.. உங்களால முடிஞ்சா பார்த்து தாங்க.. இல்லன்னா நானே பாத்துக்கிறேன்” என்றதும் தங்க பாஸ்கர் மகளை தீர்க்கமாக பார்த்தவர், பின் மகனிடம் திரும்பி “அவங்களுக்கு ஒரு வீடு பார்த்து கொடு” என்றவர், அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்..
அடுத்த ஒரு வாரத்தில் விகர்த்தனனும் அவனுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக நான்கு வீடு இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட் மாடியில் ஒற்றை படுக்கயறை வீட்டை பார்த்துக் கொடுத்தான்.
பக்கத்து வீட்டில் வயதான தம்பதிகள் இருக்க அவளுக்கு பாதுகாப்பாய் இருந்தது.
இவளுக்கு கல்யாணத்துக்கு என்று சேர்த்து வைத்த சாமான்களை தான் மேகலா கொடுத்தார்.
மற்ற செலவுக்கெல்லாம் அவர்களை எதிர்பார்க்கவில்லை வதனி. தாலி செயினுடன் மெல்லிய செயின் ஒன்று கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருப்பாள். அதை மெதுவாக தடவி பார்த்தவள், ஒரு விரக்தியோடு தாலியை மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டவள், செயினை கழட்டி தம்பியிடம் கொடுத்தாள்.
அதை தம்பியிடம் அடகு வைக்க சொல்லி தான்
மற்ற செலவுகளை பார்த்துக் கொண்டாள். கூடவே தனக்கு ஒரு வேலையும் தம்பி மூலம் தேடிக் கொண்டாள்.
