அழகன் 3
“செப்பு சிலையாட்டாம் அழகாதேன் இருக்க.. புருஷன முந்தாணையில முடிஞ்சிக்க வெறும் அழகு மட்டும் பத்தாது ஆத்தா.. வாய்க்கு ருசியா வக்கணையா ஆக்கி போடவும் தெரிஞ்சிருக்கணும்? உனக்கு சமைக்க தெரியுமா?” என்று அவர் கேட்க..
“அதெல்லாம் நன்னா செய்வா மாமி..!” என்று ரங்கநாயகி பின் குரல் கொடுக்க…
“உன்கிட்ட கேட்டனா.. சுப்..! நீ வாய் மூடு. நான் என் பேத்தி கிட்ட கேட்டுகுதேன்” என்று தந்தட்டியாட ரங்கநாயகியை முறைத்தவர், பின் ஆண்டாள் புறம் திரும்பி அவள் கன்னத்தை வருடியப்படி கேட்டார்.
“அது.. அது.. பாட்டி..” என்று அவள் திக்க..
“எது பாட்டியா? அதெல்லாம் வேணாம். உனக்கு அம்மாச்சி முற வேணும். வாய் நிறைய அம்மாச்சி இல்ல ஆச்சினு கூப்பிடு கண்ணு” என்றார்.
“சரிங்க ஆச்சி..!” என்று ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
“அப்புறம் கண்ணு.. இந்த காலத்துல புள்ளைவோ போல குழந்த பெத்துகிறத தள்ளிப்போடாத சொல்லிப்புட்டேன்.. கல்யாணமான ஒன்பதாவது மாசமே இரட்ட புள்ளய பெத்து என் கையில கொடுத்துப்புடணும் ஆமா..” என்றதும் அரண்டு விட்டாள் ஆண்டாள்.
“எதே? இரட்ட புள்ளையா? அதுவும் ஒன்பதாவது மாசமே வா? அச்சோ ரங்கநாதா…!”’என்று மனம் திடுக்கிட்டவள்,
“ஏன் அம்மாச்சி.. ஒன்பதாவது மாசமே வேணுமா? இந்த பத்தாவது பதினோராவது மாசமெல்லாம் ஒத்துக்க மாட்டேளா? அதுவும் இரட்ட புள்ளையே தான் வேணுமா?” என்று சற்று கடுப்பை வெளிக்காட்டி கேட்க..
“ஆண்டாளு..!” என்று ரங்கநாயகி மகளை அதட்ட..
“அட இரு நாயகி.. புள்ள யாருகிட்ட பேசுது? என் கிட்ட தானே.. நான் அவ அம்மாச்சி தானே.. விடு நான் பேசிக்கிறேன்” என்றவர், ஆண்டாளின் தாடையை பற்றி
“ஆமாங்கண்ணு.. ஒன்பதாவது மாசமே வேணும்..! இரட்ட புள்ள தான் அப்போ வேணும்னுல்ல.. கொஞ்சம் பொறுத்து.. இரண்டாவது மூணாவது பிரசவத்துல கூட இரட்ட புள்ளய பெத்துடு..”
“எதே? இரண்டாவது மூணாவது பிரசவத்துலேயா?” என்று அதிர்ந்தாள்.
ஆனால்.. சொக்கியம்மாள் ஆச்சியோ விடாது.. “ஓஓ முடியாதா கண்ணு? அப்போ பரவாயில்ல நாலாவுது அஞ்சாவதுல பார்த்துக்கலாம் விடு” என்றதும் அதுவரை அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவள், பொத்தென்று தரையில் அமர்ந்து விட்டாள்.
‘அய்யோ.. இந்த அம்மாச்சி என்னைய ஏடிஎம் மிஷனு போல புள்ளைய பெக்குற மிஷனுனு நினைச்சிட்டாளா? ரங்கநாதா.. ஏன் இப்படி இவாளோட எல்லாம் என்னை கோர்த்துவிட்ட.. நேக்கு பயந்து பயந்து வருது..!’ என்றவளின் பயந்த வெளிறிய முகத்தை கண்டு சிரிப்பை அடக்கிய சொக்கியம்மாள்,
“ஏன் ஆத்தா… கம்மியா சொல்லிட்டேனா?” என்று அப்பாவியாய் கேட்க..
“எது? கம்மியா வா?” என்று எழுந்து அமர்ந்தவள்,
“ஏன் ஆச்சி உங்களுக்கு இது கம்மியா வா தெரியது?” என்று ஆண்டாள் அலற..
“ஆம்தா.. எனக்கு போஸ் பாண்டி பொறவு ரெண்டு புள்ள பொறந்து எதுவுமே தங்கல.. சரி நம்ம மருமவளாவது வத வதனு வூடு நிறைய புள்ள குட்டிகள பெத்து போடுவானு பார்த்தா.. அந்த சிறுக்கி மவ… உன் புருஷனையும் உன் நாத்தியையும் பெத்து எழவே பெரும் பாடாச்சு.. அந்தளவு சத்துக்காரி உன் அய்த்த..!”
“அச்சோ… பாவம் அத்த..” என்று அத்தைக்காக அவள் மனம் இரங்க..
“அதான் அப்பவே முடிவு எடுத்திட்டேன். என் பேரன் அழகனுக்கு வர்ற பேத்திக்கு நல்ல நாட்டுகோழியும்.. இள வெள்ளாட்டு கறியும்.. மத்தி கெளுத்தி விரா மீனுமா ஆக்கிப் போட்டு, அவ உடம்ப தேத்தி.. ஒரு ஏழெட்டுப் புள்ளயாவது பெக்க வைச்சிடுனும்னு வைராக்கியத்துல இருக்கேன் ஆத்தா..!” என்றார் சொக்கியம்மாள் தன் வெண்கல குரலில்..!
“அச்சோ.. ரங்கநாதா.. கறி மீனா? உவ்வே…!” என்று அவள் அலற..
“ஹா.. ஹா.. ஆமா கண்ணு.. அப்பதேன் அம்மாச்சி மாதிரி நல்லா எழுவதஞ்சி வயசுலேயும் நல்லா கிண்ணுனு இருக்க முடியும்.. வூட்டுக்காரன முந்தாணையில முடிஞ்சு மகாராணியா வூட்ட ஆள முடியும்.. வேணும்னா உன்ற தாத்தன் கிட்ட கேளு” என்று அவர் வெட்கப்பட…
ஆண்டாளோ அவரின் வெட்கத்தில் அவரின் அந்நியோன்யமான தாம்பத்யம் வாழ்வை கண்டு மெய் சிலிர்த்தாள்.
‘அதெல்லாம் சரிதான்.. இந்த ஆச்சி சொல்றதுக்கு எல்லாம் என்னால தலையாட்ட முடியாது.!’ என்று விரைப்பாக மனதுக்குள் நினைத்தவள்… அதே விரைப்போடு நிமிர்ந்து அவரை பார்த்து “அப்படியெல்லாம் என்னால முடியாது..” என்று கணீர் குரலில் சொல்ல வந்தவள், அவரின் முகத்தை பார்த்ததும் அத்தனை விரைப்பும் காணாமல் போக,
சிலிர்த்துக் கொண்டு வந்தவள் சிக்கன் குன்னியா வந்த சீக்கு கோழி போல குரல் மெலிந்து “சரி ஆச்சி” என்றாள்.
சொக்கியம்மாள் அப்பத்தாவோ கலகலவென்று சிரித்து “அப்போ சரி கண்ணு.. ராவு நல்லா தூங்கு. நாளை இருந்து உன் மிஷன் ஸ்டார்ட்.. அதே இரட்டை புள்ள.. ஒன்பது மாசம்? சரியா?” என்று கேட்க.. எல்லா பக்கமும் தலையாட்டியவளை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார்.
மாமி தன் மகளிடம் விளையாடுகிறார் என்று புரிந்த ரங்கநாயகி மென் புன்னகையோடு அனைத்தையும் பார்த்திருந்தார்.
அவருக்கு தான் இவரின் குணத்தை தெரியுமே..!
இத்தனை வருடங்களில் கலைவாணியை பார்க்க இவர் வரும்போது எல்லாம் வீட்டில் கண்டிப்பாக சைவம் மட்டுமே இருக்கும். அது எத்தனை நாளாக இருந்தாலும் அசைவம் அவர்கள் வீட்டுப்படி அண்டாது..!
அப்படியாகினும் யாராவது அன்பாக “எங்க குளத்துல மீன் பிடிச்சோம்.. உங்களுக்கு விரா மீனு பிடிக்கும்னு கொண்டு வந்தேன் பெரியம்மா..”
“எங்க பங்காளிக வந்தாக கிடா வெட்டுனோம்னு இந்தாக குறும்பாட்டு கறி மதனி.. அண்ணனுக்கு ஆக்கி போடு”
“நம்ம மருமவனுக்கு நாட்டுக்கோழி சூப்பு வச்சுக்கொடு அண்ணி… வெளிய தொரவு அலையுற புள்ள..”
“இந்தா கலை யக்கா.. உனக்கு கொடல் கூட்டு புடிக்கும்ல.. இன்னைக்கு வூட்டுல ஆக்குனேன்.. உனக்காக கொண்டு வந்தேன்”
என்று இப்படியாவது வாரத்திற்கு ஒரு தரம் அன்போடு வரும் சொந்தங்கள் அழகன் வீட்டிற்கு உண்டு..!
அவ்வாறெல்லாம் வரும் பொழுது ரங்கநாயகி பெருந்தன்மையாக “நீங்க அவங்களுக்கு சமைச்சு கொடுங்க மன்னி.. நேக்கு நான் தனியா பார்த்துக்கிறேன்” என்று முகத்தில் அருவருப்பை காட்டாமல் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்வார்..!
அழகன் ஆண்டாள் திருமணம் பேசும்பொழுது முதல் பிரச்சனையே இந்த சாப்பாடு தான் பெரும் பிரச்சனையாக வந்தது..!
ஆனால் ரங்கநாயகி “என் பொண்ணு அசைவம் சாப்பிட மாட்டா.. சமைக்க மாட்டா.. ஆனா உங்களுக்கு பிடித்தமானதா நீங்க சாப்பிடும்போது அதையெல்லாம் அவ அசூசையா பார்க்க மாட்டா.. ஏன்னா அப்பப்ப இவங்க அவ அப்பாவும் இங்கே வாங்கி வந்து சாப்பிடுவார் தானே.. அதனால அதுக்கெல்லாம் அவள் பழகி இருக்கா.. நீங்க இது ஒரு பெரிய விஷயமா பார்க்க வேணாம் மன்னி” என்று சொன்னதும் தான் மேற்கொண்டு இவர்களது திருமண பேச்சு வார்த்தை நடந்தது..!
அறைக்கு வந்தவள் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு “என்ன மா.. இந்த ஆச்சி இப்படி எல்லாம் பேசுறா? நேக்கு பயந்து பயந்து வர்றது மா” என்று அவள் கண்கள் கலங்கி இமைகளை படபடக்க அடித்து பேச..
“அட அசடே கல்யாண பொண்ணு அழலாமா?… மாமி பெரியவா உன்னாண்ட சும்மா விளையாடுறா… இதை எல்லாம் பெருசு பண்ணாத ஆண்டாள்” என்று முதலில் கனிந்திருந்த அவரது குரலில் அடுத்து கண்டிப்பு இருந்தது..!
“இல்லமா.. நோக்கு புரியவேயில்ல என்னோட பரிதவிப்பு. அசைவமே நேக்கு ஆகாது. அதுல என்னை சாப்பிட வைக்கிறேன்னு சொல்றா அந்த ஆச்சி..” என்று மூக்கு உறிஞ்சிய மகளின் மனதை புரிந்த ரங்கநாயகி தான் அமர்ந்து, அவளை அருகே அமர வைத்தார்.
“உன் பேரு என்ன டி?” என்று வினவ..
“லூசா மா நீ.. நேக்கு பேரு நீ தானே வச்ச.. அப்புறம் என்னான்ட ஏன் பெயரை கேக்குற…?” என்று முறைத்துப் பார்த்த மகளின் அழகில் லயித்த ரங்கநாயகி, தற்போது முகத்தை சற்று கடினமாக வைத்து
“நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் சரியா பதில் சொல்லு எசக்கு பிசா சொல்லி என்கிட்ட அடி வாங்காத” என்றார்.
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு “ஆண்டாள் நப்பின்னை.!” என்றாள்.
“பேர கிட்ட இப்படி தான் சொல்லுவியா முழு பேரை சொல்லு?” என்று அன்னை கடித்ததும்..
“இந்த அம்மாவுக்கு என்னமோ ஆச்சு என்றபடி எஸ். ஆண்டாள் நப்பின்னை.!” என்றாள்.
“அந்த எஸ் என்கிறது..?”
“அம்மா நிஜமாவே நோக்கு என்னமோ ஆச்சு?” என்று பல்லை கடித்த மகளை முறைத்ததும் “எஸ் என்கிறது என் தோப்பனார் சாரங்கபாணி” என்றாள் வெடுக்கென்று..!
“இதுதாண்டி சுவாஸிதம்..! சாரங்கபாணியான உன் தோப்பனார் வீட்டு பழக்கவழக்கத்தை தானே நீ அனுசரிக்கணும்.. ஆனா அப்படியா நீ வளர்ந்தே..?” என்றதும் ஏதோ புரிவது போல் இருக்க..
இல்லை என்று தலையாட்டினாள் ஆண்டாள்.
“சின்ன வயசுல இருந்து உன்னை நான் என் ஆத்து வழக்கப்படி தான் வளர்த்தேன். பாசுரம் பாட வைச்சு.. விரத முறைகளை கத்து கொடுத்து ஆஷ்டான அனுஷங்கள் எல்லாம் கத்துக்கொடுத்தேனேனோ.. ஆனா இது எதுக்குமே உன் தோப்பனாரோ ஒரு வார்த்தை சொன்னதில்லை..! இத்தனைக்கும் நம்ம நாட்டுல எல்லாம் தந்தை வழி பழக்கம் தான் வழக்கம்.?” என்று கேட்க..
ஆண்டாளுக்கு இந்த கோணம் புதிது. இது மாதிரி எல்லாம் அவள் யோசித்ததே கிடையாது.
அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் என்று புரிந்தாலும், அப்பா வழக்கத்தை பின்பற்றாமல் நாம் அம்மாவை பின்பற்றுகிறோமே என்றெல்லாம் அவள் நினைத்தது கிடையாது.
அதேபோல சாரங்கபாணையும் என் பிள்ளை..! என் உரிமை..! என் இஷ்டப்படி தான் வளர்க்கணும்..! அப்படி எல்லாம் கூறவே மாட்டார்.
“உனக்கு எது பிடித்தமோ அதை செய் ராசாத்தி” என்று விட்டு விடுவார்.
“நோக்கு பேர் வச்சதுல இருந்து இத்தனை நாள் நோக்கு பார்த்து பார்த்து செஞ்சது வரைக்கும் எல்லாமே நான்தான். ஆனா அதுக்கு பின்னே உறுதுணையா நமக்கு பக்க பலமாய் அரனாய் இருந்ததெல்லாம் உன் தோப்பனார். ஆனாலும் ஒரு வார்த்தை என்னான்ட கேட்க மாட்டார்..”
“அவர் மட்டும் இல்ல இறந்து போன உன் பாட்டியும் சரி.. இப்ப நீ புகுந்து வீட்டுக்கு போக போற உன் அத்தையும் சரி.. யாருமே எங்க வீட்டு பிள்ளை எங்க இஷ்டப்பட்டு தான் வளரணும். நீ என்ன உன் இஷ்டப்படி வளர்க்கிற? அப்படி எல்லாம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்..! வெறும் காய்கறி மட்டும் கொடுக்கிற.. ஏன் முட்டை அசைவம் எல்லாம் கொடுக்க மாட்டேங்குற.. நீ கொடுக்கலைன்னா நாங்க கொடுத்து வளர்ப்போம்.. அப்படி எல்லாம் என்னான்ட அவா யாரும் வந்து சண்டை போட்டதும் கிடையாது. உன்னை எங்ககிட்ட இருந்து பிரிச்சு அவா வளர்த்ததும் கிடையாது..! ஆனா அப்படி செய்ய அவாளுக்கு முழு உரிமை உண்டு தானே? ஒரு வேலை அவா அப்படி செஞ்சிருந்தா?”
“ஆமாமில்ல..!” என்று யோசித்தாள்,
அவளின் அத்தையோ இறந்து போன பாட்டியும் சரி இதுவரைக்கும் இவளை சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் சாப்பிடணும்.. இதை சாப்பிடக்கூடாது என்று கண்டிப்பாக கூறியது இல்லை.
இவள் எதை ஆசைப்பட்டு கேட்கிறாளோ அதை மிகுந்த சந்தோஷத்துடன் சமைத்துக் கொடுப்பார்கள்..!
நம்ம நாட்டுல பொதுவா மருமகள்னு வரும்போது அவ தான் பணிந்து போணும்.. புக்காத்துல என்ன பழக்க வழக்கமோ அதுதான் அவா வழக்கப்படுத்திக்கணும்.. நேக்கு.. அப்படி எல்லாம் சொல்லி கஷ்டப்படுத்தியதே இல்ல என் மாமியாரும்.. என் நாத்தனாரும்.. அவ்வளவு பெருந்தன்மையா அவா இருக்கும்போது.. நாமும் சில பல விஷயத்த விட்டுக்கொடுத்து போவதில் தப்பு இல்லையே ஆண்டாள்..?” என்று ரங்கநாயகி கேட்டதும்
“நேக்கு இப்போ நன்னா புரிஞ்சது மா.. இனி நான் போற இடத்துல அந்த பழக்க வழக்கத்தை எல்லாம் அனுசரிச்சு கத்துக்க பாக்குறேன்” என்றாள்.
“நல்லா புரிஞ்சுக்கோ அது அவங்க ஆத்து பழக்கம் மட்டும் இல்ல.. உன் தோப்பனார் ஆத்து பழக்கமும் கூட சரியா?” என்றதும் சரி தலையாட்டிய மகளின் கன்னத்தை வருடி
“சமத்து புள்ள.. சரி சரி தூங்கு நாழியாயிடுத்து.. விடிய காத்தால எழுந்திருக்கணும்” என்று இருவரும் உறங்கினர்.
சாரங்கபாணி சமையல் மட்டுமல்ல நாளைக்கு வரவிருக்கும் உறவினர்களுக்கெல்லாம் கொடுக்க தாம்பூலப் பை அவரது மேற்பார்வையில் தான் நடந்து கொண்டிருந்தது. அதனால் இரவு உணவு உண்டு விட்டு அவர் அந்த வேலைகளில் மும்மரமாக இருந்தார்.
இரவு அவரிடமிருந்த சாவியை வைத்து உள்ளே வந்தவர், உறங்கும் மகளையும் மனைவியையும் பார்த்துவிட்டு கீழே ஒரு விரிப்பை விரித்து படுத்து விட்டார்.
ரங்கநாயகி பக்கம் எந்த சொந்த பந்தங்களும் கிடையாது. இருந்த ஒன்னு ரெண்டு பேரும் இவர்கள் திருமணத்திற்கு பின் அவர்களுடனான உறவை முழுவதுமாக முறித்துக் கொண்டு விட்டார்கள்.
சுருக்க சொல்ல வேண்டுமென்றால் இந்த ரங்கநாயகியை தலைமுழுகி விட்டார்கள். அதற்கெல்லாம் அவரோ கவலைப்படவே இல்லை.
ஒரு ஆபத்து காலத்தில் உதவாத.. கை கொடுக்காத உறவுகளின் உறவு எதற்கு? அதுவும் தன்னை தாங்கும் கணவனும் அவர் குடும்பமும் இருக்கையில் இவர்கள் எதற்கு? என்று இவருமே ஒதுங்கி விட்டார்.
இப்போது பெண்ணின் திருமணத்திற்கு இவர் யாரையும் தன் பக்கத்திலிருந்து அழைக்கவில்லை.
இவருக்கு தெரிந்த நண்பர்கள் அக்கம்பக்கம் பழகியவர்களை மட்டும் அழைத்து இருந்தார்க்ஷ
மற்ற சொந்தங்கள் எல்லாம் இரு வீட்டாருக்கும் பொது என்பதால் போஸ் பாண்டியும் சாரங்கபாணியும் சென்று அனைவரையும் நேரில் அழைத்து வந்து விட்டனர்.
அதுவும் மண்டபத்தில் இவர் பெரும்பாலும் கலைவாணி உடன் நின்று கொண்டார்.
மறுநாள் பிரம்ம முகூர்த்த வேளையில் அலங்கார பூசிதையாக நாத்தனாரின் கையை பிடித்து வந்த மகளை தான் கண்கள் ஆனந்தத்தில் கலங்கு பார்த்திருந்தனர் சாரங்கபாணி தம்பதியினர்.
திருமணம் திருப்பரங்குன்றம் கோயிலில் முடித்து அதற்கு பின் விருந்து உபச்சாரம் எல்லாம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அருகருகே மணமகனும் மணமகளும் இருக்க.. வேலவன் பொற் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் செய்யப்பட்ட பொன் தாலி மஞ்சள்கயிறு அழகனின் கைவந்து சேர..
தன்னருகே தலை குனிந்து அடக்கத்தின் மறு உருவமாக நின்றவளின் முகத்தை பார்த்து தாலி கட்ட தான் அவனுக்கும் ஆசை.
ஆனால் அவளும் பூமிக்கு அடியில் இருக்கும் புதையலை லேஸர் கண்களால் பார்த்து அதை தோண்டி எடுப்பது போல அதி மும்மரமாக குனிந்து தலையை நிமிராமலே இருந்தாள்.
ஆனால் அவனுக்கு அவள் முகத்தை பார்த்துக் கொண்டு தான் தாலி கட்ட வேண்டும் என்று விருப்பம்..
சட்டென்று யாரும் அறியாமல் அவளது இடுப்பில் அவன் கிள்ள…
“அச்சோ.. ரங்கநாதா…!” என்று அவள் சன்னமாக அலற…
“ரங்கநாதா இல்ல.. அழகன்.. கள்ளழகன்..!” என்று புன்னகையோடு அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு பொன் தாலியை அவள் சங்கு கழுத்தில் அணிவித்து இரண்டு முடிச்சு போட.. மூன்றாவது முடிச்சியை அழகனின் தங்கை அங்கயற்கண்ணி போட்டாள்.
சுற்றமும் சொந்தமும் உறவும் மஞ்சள் அரசி மலர்களால் ஆசீர்வாதம் செய்து அவர்களை வாழ்த்த.. திருமணம் முடித்து இருவரும் அந்த திருப்பரங்குன்றனை அவன் தேவியோடு தரிசனம் முடித்து மண்டபம் வந்தனர்.
அதன் பின் கேட்கவும் வேண்டுமா? விருந்து கொண்டாட்டத்தை..!
மண்டபத்தின் வாயிலில் பெரிய பெரிய சைஸில் இருந்த ஸ்பீக்கரில் பாடல்கள் அலற.. மண்டபத்தின் உள்ளே சொந்த பந்தங்கள் அதைத் தாண்டி தங்களுக்கு உரத்த குரலில் ஒருத்தரை ஒருத்தர் பேசி சிரித்து அவ்வப்போது சுணக்கம் சண்டை என்று செல்ல… விருந்து உபச்சாரம் களைக்கட்டியது.
மேடை ஏறி மணமக்களை வாழ்த்திய பெரியவர்களிடம், வணக்கம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கி என்று ஆண்டாளின் இடுப்பு நொந்தது.
“என்ன மதனி.. என்னாச்சு?” என்று ருக்மணி கேட்க..
“இவா நேக்கு என்ன உறவு முறை வேணும்?” என்று குழப்பமாக அவளை பார்த்ததும்..
“நான் அழகன் அண்ணனுக்கு ஒன்னு விட்டு தங்கச்சி.. உங்களுக்கு நாத்தனார் முறை.. அங்கயற்கண்ணி பெரிம்மா கூப்டாங்கன்னு போயிட்டா.. அதான் நான் உங்க பக்கத்துல வந்தேன். எதுவும் உதவி தேவையா?” என்று அவள் கேட்டேன்..
மெல்ல அவளிடம் “ரொம்ப இடுப்பு வலிக்குது குனிஞ்சு குனிஞ்சு..!” என்றால் பாவமாக..!
“இன்னைக்கு ஒரு நாள் செத்த பொறுந்துங்க மதனி.. எல்லார் கிட்டேயும் ஆசிர்வாதம் வாங்கணும் இல்ல.. அதுக்கு பின்னால சரியாயிடும். ஆனா இதுக்கே இப்படின்னு
ராவுக்கு என்ன பண்ணுவீக?” என்று அவள் கண்ணடித்து கேட்ட தினுசில்..
“என்னது? நைட்டா? இன்னைக்கே வா?” என்று அலறிய ஆண்டாளோ இன்று இரவு சடங்கை எதிர்பார்க்கவில்லை..!
தொடரும்..
