12
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
காதலித்துப் பார்!!!!!!!
விஷ்ணு தன் டீம் மை பார்வையிட்டு , ஒரு முறை சுற்றி வந்தான் . பின் தன் கேபினில் உள்ள பொருட்களை ஒழுங்கு செய்தான். நிமிர்ந்து மணி பார்க்க.. அரை மணி நேரம் கூட கடக்க வில்லை.. அவனால் சௌமினி இன்றி கடக்கவும் முடியவில்லை.. திரும்ப அவள் நம்பர்க்கு டயல் செய்துப் பார்த்தான். திரும்பவும் ஸ்விட்ச் ஆஃப். தன் கேபினை கால்களால் முடிந்த மட்டும் அளவெடுத்து பார்த்தான். இருக்க இருக்க தன்னவளை காண வேண்டும் என்ற தவிப்பு அதிகமானது தவிர குறையவேயில்லை. கிளம்பி விட்டான் தன் காதலின் விடுதி நோக்கி..
அது வேலை செய்யும் பெண்களுக்கான விடுதி.. ஆண்கள் உள்ளே வர அனுமதியில்லை. பெற்றவராயினும், கூட பிறந்தவராயினும் வெளியில் உள்ள விசிட்டர் ஹாலில் தான். பெண்களுக்கு மட்டும் உள்ள சென்று வர அனுமதி உண்டு. பிற்பகல் நேரம், அவ்விடுதியின் பொறுப்பாளர் சற்று ஓய்வு எடுக்கும் நேரம்.. காலையில் பெண்கள் எல்லாம் சென்ற உடன், வேலையாளை வைத்து அறைகளை சுத்தம் செய்து, அவரை அனுப்பி விடுவார். யாரேனும் ஓரிருவர் தான் அறையில் இருப்பார்கள்.. பெரும்பாலும் மதியம் அனைவரும் சாப்பாடு எடுத்து சென்று விடுவதால், மாலை வரை அங்கு அமைதியாக தான் இருக்கும்.. வேலை செய்யும் ஒன்றுயிரண்டு பெண்களும் சீரியலில் ஐக்கியமாகி விடுவார்கள். விஷ்ணு இந்த விபரம் எல்லாம் அறித்தவன் தான், அவளின் அறை முதற்கொண்டு..
தலையில் டீ-ஷேர்டோட இணைந்திருக்கும் குல்லா மாதிரி அமைப்பை தலையில் போட்டு முகத்தை மறைத்து கொண்டான். கண்களை மறைத்தவாறு கண்ணாடி வேறு, தன்னை ஒரு முறை நன்றாக கார் கண்ணாடியில் பார்த்து கொண்டான்.. யாருக்கும் பார்த்த உடன் அடையாளம் தெரிகிறதா என்று..
காரை இரு தெருவிற்கு முன்னமே நிறுத்தியவன்.. வெகு நிதானமாக நடந்து சென்றான். சௌமினி விடுதியை நெருங்கியவன், ஒருமுறை தன் விழிகளை சுழல விட்டு, கண் இமைக்கும் நேரத்தில் எகிறி விடுதியினுள் குதித்து விட்டான்.
மெதுவாக, விடுதியினுள் நுழைந்தான் , பின்புற ஜன்னல் வழியாக மாறி மாறி ஏறி மொட்டை மாடியில் வந்து குதித்தான். இவர்களின் தொலைபேசி உரையாடலில் அதிகம் அவள் மொட்டை மாடியிலிருந்து தான் பேசுவாள், மாடியில் இருந்து கீழே இறங்கிய உடன் முதல் அறை தான் சௌமினி மற்றும் சுஜி உடையது என்ற விவரமும் அவள் மூலம் அவனுக்கு பரிச்சியம் .
இப்போது அது தான் அவனுக்கு கை கொடுத்தது.. மெல்ல படி இறங்கியவன், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மற்ற அறைகள் வெளியில் பூட்டி இருக்க, பூட்டாத அறையை மெல்ல தட்டினான். கதவு திறக்கும் ஒலியில் சட்டென்று அருகிலிருந்த தூணின் பின் புறம் ஒளிந்தவன், யார் திறக்கிறார்கள் என்று நோட்டம் விட்டான்.
அவனின் மனதை ஏமாற்றாமல், அவனின் காதல் மின்மினி தான் கதவை திறந்து, யார் தட்டியது என்று பார்த்தாள். யாரும் இல்லாததால் "யாரா இருக்கும்? ஒரு வேளை விடுதி பொறுப்பாளர் தட்டி இருப்பாரோ " என்று தனக்கு தானே பேசி கொண்டு , அவரிடம் இங்கே இருந்தே கேட்க எண்ணி
வாய் திறந்தவளின் இதழ்கள் வலிய கரத்தால் மூட பட, அவள் திமிறி விடுவிக்கும் முன் , அந்த வலிய கரம் அவளை அறைக்குள் தள்ளிக்கொண்டு போனது.
அவனின் முரட்டு தனத்தில் யாரோ என பயந்து , திமிறி , கை கால்களை உதைத்து விடு பட முயல, அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. ஆனால் ஸ்பரிசம் அவன் யார் என்று கூற, எதிர்ப்பை விடுத்து ஒரு எதிர்பார்ப்புடன் அவனை நோக்க, அவனும் தன் முகத்தை மறைத்திருந்த அந்த குல்லாவை நீக்கி, வசீகர சிரிப்புடன் அவள் நெற்றி மோதி, மூக்கு நுனியில் மென் முத்தம் ஒன்று இட்டு, " மினிம்மா.. ஃபீவர் குறைஞ்சுதா டா.. நீ இல்லாம என்னால அங்க இருக்கவே முடியல டி பொண்டாட்டி" என்ற விஷ்ணுவின் கொஞ்சலில் கிறங்கி போனாள் சௌமினி.
" ம்ப்ச்.. தள்ளி போங்க.. ஃபீவர் உங்களுக்கும் ஒட்டிக்கும்" என்று அவள் விலக, இன்னும் அவளை ஒட்டி " பரவாயில்லை.. பொண்டாட்டிய ஒட்டிக்கிட்டா.. ஃபீவர் வரட்டும்டி பொண்டாட்டி.. இன்னும் கூட ஒட்ட ஏதாவது செய்யவா? " மோகத்தோடு முட்ட.. அடடா காதல் இத்தனை சுகமானதா என்று கிறக்கமாக சௌமினி..
" சோர்வா இருக்கு, அதான் லீவ் போட்டுடேன்.. சுஜி இருந்தா ஏதுன்னா பேசி கிட்டே இருப்பான்னு தான் , போக மாட்டேன் சொன்னவளை , திட்டி அனுப்பி விட்டேன்"
" அதுவும் இப்போ வசதியா தான் இருக்கு நமக்கு"
" ச்ச்சோ.. போங்க" என்ற அவள் சிணுங்களில் அவனுக்கு உன்மத்தம் ஏற, அவனின் அணைப்பு இன்னும் இறுக்கியது..
பின், சுழல் நிலை கருதி, அவளை விலக்கியவன் அவளின் கட்டிலில் அமர, அப்போது தான் நியாபகம் வந்தவள் அவசரமாக சென்று அறை கதவை சாத்தினாள். தன்னை சுய ஆராய்ச்சி செய்ய, நலுங்கிய நைட்டி, கலைந்த தலை என யோகி பாபு தங்கச்சி மாதிரி இருக்க, உடனே குளியலறை புகுந்து, அவசர கதியில் தலை ஒதுக்கி, முகம் கழுவி வந்தாள்.
ஈரம் மின்னிய உதடு .. கவர்ச்சியாய் அவனை தீண்ட அழைத்தது, நொடியில் அவளை இழுத்து ஈர உதடுகளில் ஆராய்ச்சி நடத்தினான் தன் வல்லிய உதடு கொண்டு..
ஆராய்ச்சி முடித்து தன்னவளை, விஷ்ணு தன் மடியில் தலை வைத்து படுக்க வைத்து கொண்டான் தாய் என.. மெல்ல அவளின் தலையை கோதி கொடுத்தவன், " வீட்டை ரொம்ப மிஸ் பண்றீயா மினி"
மெல்ல அவனை அண்ணார்ந்து பார்த்து, கண்கள் கலங்க ஆமாம்.. இல்லை என எல்லா பக்கமும் தலை ஆட்டினாள்.
அவள் மூக்கு நுனியை பிடித்து, " ஒரு பக்கம் தலையை ஆட்டு டி.. இப்படி எல்லா பக்கமும் ஆட்டினா.. நான் என்ன நினைக்கிறது . ஆமாம் வா.. இல்லை யா?" என்றான் அவள் மனது அறியும் பொருட்டு..
ஆமாம் என்றவளை அவன் முறைத்து பார்க்க.. " காலையில் இருந்து தனியா இருந்தேனா.. ரொம்பவே மிஸ் பண்ணுனேன்.. எங்க பெரியப்பா.. அப்பா.. பெரியம்மா.. அம்மா அண்ணனுங்க எல்லாரையும்…" இப்போது அப்பட்டமான பொறாமை அவன் கண்களில்..
விஷ்ணுவின் தலையை கீழ் நோக்கி இழுத்தவள், அவன் கண்களை நேராகப் பார்த்து, " ஆனா இப்போ இல்லை.. எல்லோருடைய மொத்த உருவமாக தான் நீங்க இருக்கீங்களே… கொஞ்சம் நேரம் என்னை பார்க்க முடியாம, திருட்டு தனமா வந்து இருக்கீங்க.. இதை விட வேற என்ன வேண்டும் எனக்கு" என்றவளை அப்படியே அள்ளி கொள்ள ஆசை கிளர்ந்தது விஷ்ணுவிற்கு..
சட்டென்று எழுத்து உட்கார்ந்தவள், அவனை நோக்கி, " எப்படி இங்க வந்தீங்க " என்று ஆர்வமாக கேட்க , அவன் தான் வந்ததை சொன்னான்.. ஆ வென்று பார்த்தவளை பார்த்து அவன் வாய் விட்டு சிரிக்க, அவள் அவசரமாக சென்று அவன் வாயை பொத்தினாள்.
" டிரெய்னிங் பத்தல மினி உனக்கு.. டிரெய்னிங் பத்தல.."
" டிரெய்னிங் ல எல்லா எக்சாமிலும் நான் A + தெரியுமா"
" அதுல வாங்கி என்னடி புரோஜனம், அந்த A + என்னனு உனக்கு தெரியலையே டி" என்று பெரு மூச்சு விட்டான்…
அவள் அவனை முறைக்க…" முறைக்காதடி.. சிரிச்சா வாய் அடைக்க , இப்படி தான் கை வச்சு மூடு்வாங்களா.. " என்றவனை பார்த்து கண்களாலே எரித்தாள்.. "எப்போ பார், அதே நியாபகம் தானா உனக்கு" என்றாள் ஏக மரியாதையில்..
" கொஞ்சம் கூட.. புருசன் என்ற மரியாதை இல்லடி உனக்கு.. ஆசையா.. பாவா வானு கூப்பிடலாம் ல"
" பாவா.. னா என்ன அர்த்தம்"
" எங்க பக்கம்.. மாமாவை இல்ல புருஷனை அப்படி தான் கூப்பிடுவாங்க"
" நல்லாவே இல்லை.. "
" என்னடி இப்படி பொசுக்குனு சொல்லிட்ட"
" பின்ன கூப்பிடும் போதே.. ஒரு கிக் வேணாம்"
" கிக்..கா.." என்று இப்போது அவன் வாயை பிளந்தான்.
" ஆமாம்.. பாவா..என்ன கிக் இருக்கு இதுல, அதே மாமா.. மாமு னா எப்படி இருக்கும் தெரியுமா"
முறைத்து பார்த்தவனின், மடியில் அமர்ந்து, அவனின் விழி நோக்கி, மிக கிறக்கமாக " மாமா" என்று அழைத்தாள்.
அவளின் இந்த புது பரிமாணம், அவனுக்கு ஜிவ் என்று இருக்க.. " மினி.. மாமா டபுள் ஓகே.. நாம அதையே லாக் பண்ணிடலாம்.. கம்ப்யூட்டர் ஜி லாக் கரோ" என்றான்.
அவளும் "நிஜமாவா மாமா..அப்போ பாவா.."
" அது பாவம்.. விட்ரலாம் டி"
இப்போது கல கல வென்று சௌமினி சிரிக்க.. விஷ்ணு தன் இதழ்கள் கொண்டு மூடி இருந்தான் மிக தேர்ந்த வல்லுநனாக.
சடசடவென்று கதவு தட்டப்படும் சத்தத்தில் அதிர்ந்து, விலகி, ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்க்க.. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்பட்டது.
தன்னை சரி படுத்தி கொண்டு, மெல்ல குரல் கொடுத்தாள் சௌமினி, " யாரு"
" சௌமினி.. உன்னை பார்க்க உங்க வீட்டுல இருந்து வந்து இருக்காங்க.. விசிட்டர் ஹால் ல இருக்காங்க, சீக்கிரம் வா" என்ற விடுதி பொறுப்பாளர் பேச்சில் மயக்கம் வராத குறை தான் சௌமினிக்கு. அவளுக்கு காய்ச்சல்
என்று ஏற்கனவே சுஜி சொல்லி இருந்ததால், அவரும் வெகு நேரம் நிற்காமல் கீழே சென்று விட்டார்.
அப்போது தான் தன் போனின் நினைவே அவளுக்கு வந்தது. உடனே எடுத்து உயிர்ப்பிக்க, எண்ணிலடங்கா மிஸ்டு கால்கள் அவள் வீட்டாரிடம் இருந்து. நேற்று இரவு லேசான காய்ச்சல் என்று கூற, அவ்வளவு தான், வீட்டு வைத்தியம், கை வைத்தியம் என அம்மாமார்கள் கூற ஆரம்பிக்க.. அவர்களிடம் இருந்து பிடுங்கா குறையாக அப்பா மார்கள்.. காய்ச்சல் அதிகமா.. குறைச்சலா.. எப்போ எப்படி இருக்கு என்று கேட்ட கேள்வியையே, ஒவ்வொரு மாடுலேசனில் ஒவ்வொருவரும் கேட்டனர்..
அடுத்து அண்ணன் மார்கள் .. பாசமலர்கள் விடுவார்களா என்ன.. தாங்கள் கிளம்பி வரட்டுமா என்று ஆரம்பித்து, அவளிடம் பேசி கொண்டே பஸ் எடுக்க தயாராக.. இவர்கள் ஒரு ரவுண்ட் முடிக்கும்
முன், அடுத்த ரவுண்டுக்கு அப்பா மார்களும், அம்மா மார்களும் வெயிட்டிங்.. போதா குறைக்கு சுஜி போனையும் விட்டு வைக்கவில்லை அவர்கள்.. ஒரு சாதாரண காய்ச்சலுக்கு இவ்வளோ அலப்பறைகள்.. பேசி பேசியே டயர்ட் ஆகி, இதுக்கு மேல் தாங்காது என்று இரண்டு பேர் போனையும் அணைத்து தூக்கி போட்டு விட்டாள். ஃபோன் எடுக்க வில்லைவென நேரில் வந்து இறங்கியிருக்கும் இவர்கள் பாசத்தை என்ன சொல்ல…
" அச்சோ.. முதல இங்க இருந்து கிளம்புங்க, கீழ எங்க வீட்டுல இருந்து வந்து இருக்காங்க.. போங்க.. போங்க.. சீக்கிரம்"
" என்னடி.. இப்போ தான்.. நீங்க தான் என் எல்லாமே னு சொன்ன.. அதுக்குள்ள விரட்டுற.. அவங்க வரட்டும்.. என்னை பார்த்தா என்ன இப்போ, மாப்பிள்ளை எப்படி அவங்க பொண்ணு மேல அக்கறையா இருக்கேன்னு தெரிஞ்சு கிட்டும்" என்று கூறி தன் ஒற்றை காலை மடித்து கட்டில் வைத்து நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
" ஒரு சக்கரையும் வேண்டாம் சாமி.. நீங்க கிளம்புங்க" என்று அவனை எழுப்ப முயன்றாள்.
" என் அக்கறை தெரிஞ்சிக்க வேண்டாம் சரி . நாங்க அவங்ககிட்ட கேட்கிறேன்.. அவங்களோட அக்கறை பத்தி.. நேற்று இருந்து ஃபீவர்.. இப்போ தான் வராங்க. .. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.. " என்று அவர்களை குறை சொல்லுவதை பார்த்து நெற்றி கண் இல்லாமலே எரித்தாள் அவனை..
" பொண்ணுகளுக்கு அம்மா விட்ட சொன்னா மட்டும் அப்படியே பத்திர காளியா மாறிடிறீங்க"
" அப்பா..போதும் உங்க பிரசங்கம்.. முதல கிளம்புங்ங்கக"
" இப்படி சொன்ன.. எப்படி… ரொமான்டிக் ஆ… அப்புறம் நீ என்னமோ சொன்னீயே….." என்று நாடியில் விரல் வைத்து யோசித்தவன்…" ஆன்ன் கிக் ஆ… அப்படி கூப்பிடு நான் கிளம்புறேன்"
தலையில் அடித்து கொண்டவள், " என் நேரம்… மாமா… உங்க மாமாமார் வந்து இருக்காக.. அய்த்த மார் வந்து இருக்காக.. அப்புறம் உங்க மச்சான் மார் எல்லாம் வந்து இருக்காக… கிளம்புங்க மாமா…" என்றவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான்.
அந்நேரம் கதவு மீண்டும் தட்ட பட.. வெளியில் அம்மா மார் சத்தம் கேட்க.. உச்ச கட்ட அதிர்ச்சியில் விஷ்ணுவும்.. சௌமினியும்..
"இந்த ஆட்டத்துக்கு நான் வரல டா "என்று கியூபிட் கட்டில் அடியில் தஞ்சம் புகுந்தது...