நேசம் 4
“என்ன டா வந்த நேரத்துல இருந்தே பொம்பளைங்க மாதிரி மீரா பத்தி புரளி பேசிட்டு இருக்கீங்க? இது என்னோட பேச்சிலர் பார்ட்டி… ஜஸ்ட் என்ஜாய் பண்ணுங்க, யாரையும் ஹர்ட் பண்ணாதீங்க” என்று புது மாப்பிள்ளை ஈஸ்வர் ஓடி வந்து அத்தனை பேர் கவனத்தையும் மீரா மீதிருந்து திருப்பி, ஆட்டம் பாட்டம் பக்கம் தள்ளியிருந்தான்.
அவன் நல்லது நினைத்து மீராவிடம் வேலைகளை ஒப்படைத்திருக்க, இங்கே அவன் நண்பர்கள் வேறு சம்பவங்களை சிறப்பாக நிகழ்த்தி அவன் திட்டத்தை கெடுத்து விடுவார்களோ என்ற பயமே வந்து விட்டது அவனுக்கு.
அதை விட அதிக கோபம் கிருஷ்ணா மீது வந்தது.
அவளை அவ்வளவு தூரம் விமர்சிக்கிறார்கள். வாயை மூடிக்கொண்டு எனக்கென்ன வந்தது என்பது போல் நிற்கிறானே. இவனால் தானே அவள் இத்தனை விமர்சனங்களுக்கும் உள்ளாகிறாள் என்ற குற்றவுணர்வு சிறிது கூட இல்லாது நெஞ்சை நிமிர்த்தி நின்றுக் கொண்டிருப்பவனை அதிருப்தியாக பார்த்தான் ஈஸ்வர்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட கிருஷ்ணாவோ, அசட்டையாக அவனிடமிருந்து விழிகளை திருப்பி கொண்டவன்,
“நீ என்ன யோசிக்கிறனு புரியுது. ஆனா அதுக்கான ஆள் நான் இல்லை. முதல்ல அவ இருக்கிற இடத்துக்கு என்னை நீ கூப்பிட்டதே தப்பு. இதுல நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணலன்னு வேற பார்க்காதா. அவளுக்காக என் இது கூட அசையாது” என்று தன் தலைமுடியை இழுத்து காட்டியவன்,
“நான் கிளம்புறேன்” என்று முறுக்கிக் கொண்டு செல்ல எத்தனிக்க,
“சரி சரி கோபப்படாத. நீ யாருக்காகவும் எதுவும் பேச வேணாம். எனக்காக தானே வந்த. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இரு” என்று அவனை சமாதானம் செய்தே பார்ட்டியில் இருக்க வைத்தான்.
அந்த சமயம் அவன் நண்பர்கள் “என்ன மச்சா நீ கட்டிக்க போற பொண்ண எங்களுக்கு அறிமுக படுத்த மாட்டியா?” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அருகே வர,
ஈஸ்வரும் இவர்களுக்கு எதிர் திசையில் குழுமியிருந்த பெண்கள் பக்கம் பார்வையை திருப்பி “கௌரி” என்று தன் வருங்கால மனைவியை அழைத்தான்.
அவள் நட்பு வட்டாரங்களும் வந்திருந்தார்கள்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள் ஈஸ்வர் அழைக்கவும், தோழிகளிடம் சொல்லி விட்டு அவன் அருகே வந்தாள்.
“இதான்டா நான் கல்யாண பண்ணிக்க போற பொண்ணு கௌரி. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ல டாக்ட்ரா இருக்காங்க” என்று தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க,
அவளும் இன்முகமாக அனைவருக்கும் ஒரு ஹாய் சொன்னாள்.
“இது கிருஷ்ணா. நான் சொல்லியிருக்கேன்ல” என்று கண்ணை காட்ட அதை புரிந்து கொண்டவளும்,
“உங்களை பத்தி தான் பாதி நாள் பேசிட்டு இருப்பார். கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா ஒருநாள் வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட வரணும்” என்று அவள் அன்பாக அவனை அழைக்க,
“கண்டிப்பா” என்றான் கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன்.
“அப்போ நாங்கல்லாம் வர கூடாதா?” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க,
“தாராளமா வரலாம். ஆனா… இந்த மாதிரி ஆல்கஹால் எல்லாம் என்னோட வீட்ல அலோட் கிடையாது” என்று அவர்கள் உரையாடல்கள் ஆரம்பித்தது.
“அப்போ இன்னைக்கு தான் ஈஸ்வருக்கு கடைசி இன்டிபென்டன்ஸ் டே யா?” என்று கேலி கிண்டல்கள் நடுவே பார்ட்டியும் களை கட்டிக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் என்று தனி தனியாக நின்றிருந்தவர்கள் சிறிது நேரத்தில் சகஜமாக பேசி சிரித்து ஒன்று கூடி களித்திருக்க,
இதில் எதிலும் நாட்டம் கொள்ளாது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணாவை வெகு நேரமாக நோட்டம் விட்டு கொண்டிருந்த கௌரியின் தோழி ஒருத்தி அவன் அருகே வந்தாள்.
“ஹாய்… நான் சுப்ரியா” என்று கையை நீட்ட,
நீட்டிய அவள் கரத்தை விழிகள் சுருக்கி பார்த்தவன்,
“சாரி… நாட் இன்டெர்ஸ்டெட்” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே பேச்சை முடித்திருந்தான்.
அதில் சிறிது முகம் கறுத்து போனது சுப்ரியாவுக்கு.
ஆனாலும் ஆளுமையான அழகன் அவனை விட்டு செல்ல மனமில்லை. தன் ஏமாற்றத்தை போலி புன்னகைக்குள் மறைத்து கொண்டவள்,
“எதுக்கு இன்டெர்ஸ்ட் இல்ல… ஜஸ்ட் பேசலாமே. போர் அடிக்குது” என்றாள்.
உன்னை விட்டு நகரமாட்டேன் என்ற தொனியில் அவன் அருகேயே டேரா போட,
‘சரியான இம்ச டா’ என்று விழிகளை உருட்டி சலிப்பாக மூச்சு விட்டுக் கொண்டவன் விழிகளில் சிக்கினாள் மீரா.
பார் அருகே வேண்டா வெறுப்பாக நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு இந்த வாசனை எதுவும் ஒத்து வராது.
முடிந்த அளவு அவளுடைய உதவியாளர்களை வைத்தே ட்ரிங்க்ஸ் பார்ட்டியை நடத்தி விடுவாள்.
ஈஸ்வர் “உன்னோட மேற்பார்வையில நடந்தா நல்லாயிருக்கும். ப்ளீஸ் நீ வாயேன்” என்று கோரிக்கை வைத்து அழைத்த பிறகே அவளும் வந்திருந்தாள்.
இங்கே வந்த பிறகு கிருஷ்ணாவின் லீலைகளில் மது பானங்கள் அருகே நிற்க வேண்டியதாகிற்று.
அடிக்கடி துப்பட்டாவால் மூக்கை பொத்தியபடி அசௌகரியமாக நின்றிருந்தவளை விழிகளில் எள்ளலுடன் பார்த்த கிருஷ்ணாவோ தன் எதிரே அமர்ந்திருந்த பெண்ணை பாராது, மீரா மீது வன்மமாக பார்வையை நிலைக்க விட்டப்படி “பேசலாமே” என்று சொல்ல,
ஏக குஷி சுப்ரியாவுக்கு.
வாயெல்லாம் புன்னகையுடன் அமர்ந்திருந்தவளிடம்,
“ட்ரிங்ஸ்?” என்று கிருஷ்ணா கேட்க,
“சுயோர்” என்றாள் அவள்.
உடனே மீராவை கண்களால் சுட்டிக் காட்டி,
“கால் ஹெர்” என்று அவளை அழைக்க சொல்லி இவன் கட்டளையிட,
அவன் மீதிருந்த ஈர்ப்பில் அந்த பெண்ணும் அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து மீராவை அழைத்தாள்.
“சர்வீஸ்” என்று சுப்ரியா குரல் கொடுக்கவும், மீரா அருகில் நின்றிருந்த பையன் ட்ரேயுடன் கிளம்ப எத்தனிக்க,
“நீங்க வாங்களேன்” என்று மீராவை அழைத்தவளை புருவம் சுருக்கி பார்த்தவள் அப்போது தான் அவள் அருகே அமர்ந்திருந்த கிருஷ்ணாவை கவனித்தாள்.
அவன் வேலை என்று புரிந்தது. அவர்களை நோக்கி செல்லவிருந்த தன் பணியாளனை தடுத்து நிறுத்தியவள்,
“நான் பார்த்துகிறேன்” என்று விட்டு அவளே அவர்களுக்கு சர்வீஸ் செய்ய வந்தாள்.
சிறிய அளவு கண்ணாடி கிளாசில் இருந்த வெண்ணிற திரவத்தை சுப்ரியா தனக்காக எடுத்துக் கொள்ள,
அவள் எடுத்ததும் திரும்பி செல்லவிருந்த மீராவிடம்,
“அவருக்கும் செர்வ் பண்ணுங்க” என்றாள் சுப்ரியா.
கிருஷ்ணாவை திரும்பி கூட பாராது,
“அவர் ட்ரிங்ஸ் பண்ண மாட்டார்” என்று மீரா சொல்ல,
அதில் சிறிது அவமானமாக உணர்ந்த சுப்ரியாவோ,
“உங்கிட்ட அப்படி சொன்னாரா?” என்று கோபமாக கேட்டவள், இழித்து கொண்டே கிருஷ்ணா புறம் திரும்பி,
“ஏன் கிருஷ்ணா நீங்க ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டீங்களா?” என்று கேட்க,
அவனுக்கும் விருப்பம் இல்லை தான். இந்த குடியால் ஒருமுறை வாழ்க்கையை இழந்தது போதும் என்று எட்டு வருடங்களாக இந்த வாசனையை கூட நுகர்ந்து பார்க்க விரும்பாதவன், ‘அவள் சொல்லி நான் கேட்க வேண்டுமா?’ என்ற ஈகோவில்,
“வொய் நாட்” என்று சொல்லிக் கொண்டே மீராவை விழிகளால் பொசுக்கியபடி அவள் கையிலிருந்த ட்ரெயிலிருந்து கருப்பு நிற திரவம் ஒன்றை எடுத்து வாயில் மொத்தமாக சரித்து கொண்டான்.
இவ்வளவு நேரம் அவன் முகம் பார்ப்பதை கூட தவிர்த்திருந்த மீராவோ, இப்போது அவனை விழிகள் சுருக்கி பார்த்தாள். சிறிதே சிறிது கண்டிப்பு அதில் இழையோடியதை அவனும் கவனித்தான்.
பல நாட்கள் கழித்து குடித்திருக்கிறான். அவன் உடல் அந்த திரவத்தின் சுவையையும், நெடியையும் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் அசௌகரியத்தை உண்டு பண்ண, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது தன் முன் அமர்ந்திருந்த சுப்ரியாவை பார்த்து இதழ் பிரித்து சிரித்தப்படி இருக்க,
அவளோ, “என்ன கிருஷ்ணா நீங்க? ஜியர்ஸ் சொல்ல முன்னாடியே குடிச்சிட்டீங்க. இன்னொன்னு எடுத்துக்கோங்க” என்று சொல்லி சுப்ரியாவே இன்னொரு கிளாஸை எடுத்து அவன் கையில் கொடுக்க,
மீரா முன்பு மறுக்க தோன்றாது வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அதை வாங்கி கொண்டவன்,
சுப்ரியா கையிலிருந்த குட்டி குடுவையுடன் தட்டி விட்டு விரும்பமின்றி அதையும் வாயில் சரித்துக் கொண்டான்.
ஒன் மோர் என்று சொல்லிக் கொண்டே இன்னொன்றை எடுத்து அவனுக்கு கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்து கொள்ள,
‘எக்கேடும் கெட்டு போ’ என்ற தொனியில் தான் வெறும் சர்விஸ் கேர்ளாக அங்கே நின்றிருந்தாள் மீரா.
பல ஒன் மோர்கள் போயிருக்க, தன்னிலை இழந்த நிலையில் பிதற்ற ஆரம்பித்திருந்தாள் சுப்ரியா.
“கிருஷ்ணா… யூ ஆர் சோ ஹாண்ட்சம். வில் யூ மேரி மீ” என்று குளறலாக கேட்க,
சலிப்பாக இருந்தது மீராவுக்கு. அவன் அழகன் தான் இல்லையென்று சொல்ல முடியாது. அந்த அழகுடன் சேர்த்து இப்போது பெயர், புகழ், தொழில் ஆளுமை என்று எல்லாம் இணைந்திருக்கும் அவனை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் தான்.
ஆனால் மீராவுக்கு அந்த பிடித்தமும் அவன் மீது வரவில்லை, அவன் ஆளுமையும் அவளை கவரவில்லை.
பள்ளி காலம் துவங்கி கல்லூரி காலம் வரை அவனிடம் நட்பாக பல பெண்கள் அவளை பகடைக்காயாக பயன்படுத்தியதும் உண்டு.
அவனும் ஒன்றும் ஒழுக்க சிகாமணியாக வாழ்ந்தது இல்லை.
“மீரா… உன் பிரண்ட் ஹேமாவ எப்படி கரெக்ட் பண்றது கொஞ்சம் சொல்லேன்” என்று அவளிடமே பல பெண்களை காதலிப்பதாக சொல்லி நான்கே நாளில் காதல் முறிவு என்றும் வந்திருக்கிறான்.
இப்போது சுப்ரியாவோ பார்த்த அரைமணி நேரத்தில் அவனை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்க,
‘என்ன தான் சொல்றான் பார்ப்போம்?’ என்ற சிறு ஆவல் அவள் விழிகளில் இழையோட திரும்பி கிருஷ்ணாவை பார்த்தாள்.
அவனும் நிதானத்தில் இல்லை தான். ஆனாலும் வெளிக் காட்டி கொள்ளாது ஸ்திரமாக சுப்ரியாவை பார்த்து, “நோ” என்றிட,
அவளை அறியாது மனதில் பெரும் நிம்மதி. அதன் வெளிப்பாடு மெல்லிய புன்னகை மீரா இதழ்களில் குடிக் கொண்டது.
சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணாவோ,
“ஐ அம் ஆல்ரெடி என்கேஜ்ட்” என்று மீராவை உறுத்து விழித்துக் கொண்டே சொன்னான்.
‘ரொம்ப சந்தோசப்பட்டுக்காத உனக்காக அவளை நிராகரிக்கல, நான் நிராகரிக்கிற இடத்துல கூட நீ இல்லை’ என்பது போல் இருந்தது அவன் பார்வை.
நிச்சயம் இந்த பார்வை அவளை கொஞ்சமும் அசைக்கவில்லை.
‘ஒருத்திக்காவது உண்மையா இருக்க நினைக்கிறியே அதுவரைக்கும் சந்தோசம்’ என்பது போல் தான் மீராவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் “ஓ நோ… கிவ் மீ ஒன் சான்ஸ் போர் மீ? என்று கேட்க,
“வாய்ப்பே இல்லை” என்று விட்டான்.
“அப்போ… ஒன் நைட் ஸ்டே பண்ணலாமா?” என்று சுப்ரியா மோக குரலில் கேட்க,
தூக்கிவாரி போட்டது மீராவுக்கு.
அவளை விட அதிக அதிர்ச்சியில் “நெவெர் எவர்” என்று பதட்டமாக மறுத்திருந்தான் கிருஷ்ணா.
அவள் சொன்ன வார்த்தைகளின் செயல்பாடுகள் நொடியில் அவன் பழைய நினைவுகளை மீட்டெடுத்து அவனை நிலையிழக்க செய்திருந்தது.
ஏற்றிய போதையெல்லாம் ஒற்றை நினைவில் இறங்கிய உணர்வு.
அந்த இரவையும், நிகழ்வையும் மறக்க முடியாமல் தானே இன்றளவும் தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கிறான்.
குப்பென்று வியர்த்து விட்டது. அருகே நின்றிருந்த மீராவை ஏறிட்டு பார்க்கவே குற்றவுணர்வாக இருந்தது.
நொடியில் பதட்டமானவனுக்கு இரு பெண்களுக்கு அருகே அமர்ந்திருப்பதே அசௌகரியமாக இருந்தது.
“வொய் நாட். ஐ கீப் இட் சீக்ரெட். உங்க பியன்ஸிக்கு தெரியாம பார்த்துக்கலாம்” என்று சுப்ரியா சொல்ல,
“ஷட் அப்” என்று அவளை திட்டியது என்னவோ மீரா தான்.
கிருஷ்ணாவோ இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தவன் யாரிடமும் சொல்லாது அங்கிருந்து செல்ல,
அவன் நிதானத்தில் இல்லை என்பதை அறிந்திருந்த மீராவோ எதை பற்றியும் யோசிக்காது அவன் பின்னால் சென்றிருந்தாள்.