5
அப்பா என்ற வார்த்தை அவளுக்குள் சிறு நம்பிக்கையையும்.. அதே நேரம் பெரும் பயத்தையும் ஏற்படுத்தியது.
அவளையும் அறியாமல் அவளது கைகள் நடுங்க.. உதடுகள் துடிக்க.. அதை மடித்துக் கடித்து தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.
அப்பா என்றால் பாசத்தில் பாய்ந்து ஓடும் காலம் எல்லாம் கானல் நீராய் போய் வெகுகாலம் ஆனது. ஏதோ அவரை கண்டாலே ஒருவித பயம் என்பதைக் காட்டிலும் ஒரு அசூசை உணர்வுதான் சிறிது காலமாக அஸ்திரா மனத்தில். ஆனால் அதையெல்லாம் தாண்டி 'இவனிடம் இருந்து தப்பிக்க.. அவரை பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று யோசனையும் அவள் மனதில் உதித்தது.
"பளிங்கு போல உன் முகம் பொண்டாட்டி.. நீ மனசுல நினைக்கிறதெல்லாம் அப்படியே அதுல தெரியுது டி!!" என்று மனைவியின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு வருடியவன், மெல்ல மெல்ல கனிந்த கன்னங்கள் தாண்டி.. சிவந்த இதழ்கள் கடந்து.. சிறுத்த தாடை அருகே வந்து.. சங்கு கழுத்தில் இறங்கிய விரல்.. சற்றே தயங்கி.. வருடி.. அவள் எதிர்பாராத நேரம் சற்றென்று மூர்க்கத்துடன் அவளது கழுத்தை பற்றியது.
"என்ன தீரா.. பெருசா பெருசா திட்டமெல்லாம் போடுறியே பொண்டாட்டி!! போடு.. போடு. நீ எந்த திட்டம் போட்டாலும் நேத்து நடந்ததெல்லாம் இல்லைன்னு ஆகாது டி!! நீ எனக்கு மட்டுந்தேன் பொண்டாட்டி.. அத எந்த கொம்பனாலும்.. ஏன் உன் நொப்பனாலும் கூட மாத்த முடியாது! இப்ப போய் நீ அந்த அம்பலவாணன் முன்னாடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னைய விட்டுப் போகனும்னு நினைச்சா.. உன்ன கூட்டிட்டு போய் அப்படியே வைப்பாருனு நினைக்கிறியா உன் நொப்பன்?" என்று அவன் கூற வருவதின் பொருளை உணர்ந்தவளுக்கு உடல் திடுக்கிட்டது. அதுவரை குனிந்திருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்!!
அவன் சொன்னதை சரியாக புரிந்து கொண்டாள் என்பதை அவள் கண்களின் பயமும் உடல் நடுக்கமும் அவனுக்கு நன்கு உணர்த்த..
"அதே.. அதே தான் பண்ணுவான் உன் அப்பங்காரன்!! ஆனா இந்த வீரா பொண்டாட்டி மேல கை வைக்க முடியுமா அவனால?" மரியாதை எல்லாம் ஏகத்திற்கும் பறந்து போய் இருந்தது அவனிடம். அதை அவள் கண்கள் கேட்டதுவோ?
"மரியாதை கொடுக்கும் அளவுக்கெல்லாம் மனுசன் கூட கிடையாது உன் நொப்பன்.. அவன் பண்ணியதை எல்லாம் மன்னிக்கிற அளவுக்கு பெரிய மனுசனும் நான் கிடையாது!!" என்றான் இடது கையால் மீசை நுனியை முறிக்கியவாறு!!
"ஆமா.. நீயி எல்லாம் மனுசனே கிடையாது மிருகம்!!" என்று முணுமுணுத்தாள் அஸ்திரா.
"ம்ஹீம்.. மிருகம் இல்லடி என் மரிக்கொழுந்தே.. மிருதன்!! மனிதனும் மிருகமும் கலந்த செய்த கலவை நானு!! எங்க மிருகமாய் இருக்கணும்.. எங்க மனுசனா இருக்கணும்.. எனக்கு தெரியும்டி!! அத போல எங்க புருஷனா இருக்கனும்னு தெரியும்" என்றான் புருஷனில் சற்றே அழுத்தம் கொடுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் சிறிதே வன்மையாக கடித்தான். வன் காதல் செய்யும் மிருதன் அவன்!!
"நான் வரலை.. அங்கன வந்து நானு என்ன பேச போறேன். அப்படியே பேசினாலும் பொட்ட கோழி கூவி விடிஞ்சிடுமா என்ன இந்த ஊருல?" என்று கண்ணீர் சொரிந்தாள்.
அவளது கண்ணீரை விட அவளது வார்த்தைகள் தந்த வலிகள் தான் வீராவின் நெஞ்சித்தை சுட்டது.
'எப்படி இருந்த பெண் அவள்? இன்று யாரையும் காணவே பயந்து இருக்கிறாள் என்றால்.. என்ன செய்து வைத்திருக்கிறார்கள் இவளது வாழ்க்கையை!" என்று வன்மமும் கோபமும் அவளது வீட்டாரிடம் திரும்பியது. ஆனால் அவன் உள்ளுக்குள் இருந்த மனசாட்சியோ 'நீ மட்டும் என்ன செய்திட்ட வீரா? அவ மனசை புரிந்து கொண்டாயா? அதை புரிந்து கொண்டுதான் அவளுக்கு மாலை சூட்டினாயா? இல்லை மஞ்சம் சேர்த்தாயா?' என்று எள்ளி நகையாடியது.
'என்னுடைய சுண்டு விரல் நகர்வு கூட என் ரதியின் நல்லதற்காக மட்டும் தான்!!' என்றவனது காதல் உள்ளம் நிமிர்ந்து நின்றது.
ரதியா??!! ஆம் ரதியே தான்!! இம்மாற(ர)னின் காதல் ரதி அவள்!! ஆனால் அந்த ரதி அவன் மனதுக்குள் மட்டுமே சிரிப்பாள்.. சிணுங்குவாள்.. காதலாய் கொஞ்சுவாள்.. கனிவாய் பேசுவாள்.. திகட்ட திகட்ட காதல் செய்வாள்.. மொட்ட மொட்ட மோகம் கொடுப்பாள். ஆனால் கண்ணெதிரில் இருப்பவளோ தீரா..
வெறும் தீரா!!
இந்தத் தீராவுக்குள் இருக்கும் அவனது ரதியை மீட்டு எடுப்பானா வீரா?
"பொட்டு கோழி கூவி பொழுது விடியாது தான்!! ஆனால் கொண்டவன் துணை இருந்தா கூரை மீது ஏறி கூட கூவலாமடி என் ஜில்லு!! என்று அவளது கண்களை உற்றுப் பார்த்து கூறியவனின் கண்களில் இருந்து என்ன என்று அவளுக்கு சற்றும் புரியவில்லை. ஆனால் அவளையும் அறியாமலேயே உள்ளுக்குள் ஒரு சிறு நம்பிக்கை. திக்குத் தெரியாத காட்டில் மின்மினிப்பூச்சி வெளிச்சமாய்!!
'இவனும் விடப் போவது இல்ல.. அவரும் நான் வராமல் சண்டையை நிப்பாட்ட போறதில்ல.. இதற்கு முடிவுதான் என்ன?' என்று தெரியாமல் ஒரு பெருமூச்சை விட்டவள் எழுந்து தனது ஆடைகளை சரிசெய்து கொண்டு முகத்தை சீர் செய்தாள்.
கட்டிலில் படுத்திருந்தவன் சற்றே அவள் புறம் திரும்பி கைகளிரண்டையும் தலைக்கு பின்னே வைத்து கால் மீது கால் போட்டு ஆட்டிக் கொண்டே அவளை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.
கண்ணாடி வழியே அவள் இவனை முறைக்க.. 'அப்படித்தான் பார்ப்பேன்
அதிலென்ன தப்பு? என் பொண்டாட்டி நான் பார்க்கிறேன்!' என்று தெனாவட்டான சிரிப்பு ஒன்று அவன் முகத்தில் தோன்றி உதட்டில் நெளிந்தது!!
அழுத கண்களும் வீங்கிய இமைகளும் வெளியே தெரியாதவாறு சற்று பவுடரை பூசிக் கொண்டாள். நெற்றிலிருந்து குங்குமம் அவனது அணைப்பில் கலைந்திருக்க. அதை சரி செய்தாள். வகுடிலிருந்த குங்குமத்தை சற்று அழுத்தமாக வைத்தாள். எக்காரணத்தை முன்னிட்டும் அப்பாவிடம் மீண்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று ஒரு எண்ணம் அவளிடம்.
அவளுக்கும் தான் தெரியுமே இவ்வூரில் நடக்கும் சில அக்கிரமங்கள்!! அறுத்துக் கட்டுவதும்.. கௌரவ கொலை என்ற பெயரில் வீட்டுக்குள்ளே வைத்து கதையை முடிப்பதும்.. என்று ஏகப்பட்ட அநியாயங்கள் நடக்கும். ஆனால் சமீப காலமாக சற்குணம் மற்றும் அசோகன் தலையீட்டால் அவை பெரிதும் குறைந்திருந்தாலும் அம்பலவாணன் போன்றவர்களால் அவை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் இவர்கள் பார்த்து பார்த்து அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி வைத்து இருந்தாலும்.. ஒரே ஒரு இரவில் ஏதாவது ஒரு தலையைக் கொய்து அத்தனையையும் சாய்த்து விடுவார்கள் அம்பலவாணன் கூட்டத்தை சேர்ந்தவர்கள். மீண்டும் பழைய அமைதியைக் கொண்டுவர காட்டிலும் போதும் போதும் என்றாகிவிடும் சற்குணத்துக்கு அசோகனுக்கும்!!
இவ்வூருக்கு அதிகம் வந்தது இல்லை என்றாலும் சற்குணத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள் அஸ்திரா. அவருக்கு முன் நின்று இந்த திருமணத்தில் எனக்கு பிடித்தம் இல்லை என்று ஒரு வார்த்தை சொன்னாலே போதும்.. அவரே மகனுக்கு புத்திமதி செய்து இவளை அம்பலவாணனிடம் ஒப்படைத்து விடுவார். அதற்கு இவளுக்கு தைரியமும் இருக்கிறது.. அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டான் வீரா என்று நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் அதற்கு பின்??
அம்பலவாணனிடம் மாட்டினால் மேற்கூறிய அநியாய அக்கிரமங்களில் ஏதாவது ஒன்று நடக்கும் கண்டிப்பாக!! ஒரு பெண்ணுக்கு எத்தனை முறைதான் கழுத்தில் தாலி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்?
மனதில் எழும் எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி.. அழுத தடயங்களை மறைத்து விட்டு கண்ணாடியை பார்த்தவளுக்கு சற்று முகம் தெளிந்தாற் போல் இருந்தது. அவளின் அத்தனை மன எண்ணங்களையும் அவளது முகத்திலேயே படித்துக் கொண்டுதான் இருந்தான் அமைதியாக வீரநெடுமாறன்!!
"போலமா பொண்டாட்டி!!" என்று அவனும் எழுந்தவன் முன்னே செல்ல இவள் தலைகுனிந்தவாறு பின்னே வர சட்டென்று திரும்பி நிற்க.. அவன பின்னே சென்றவள், அவன் தேக்கு மர மார்பில் மோதி, பின் விலகி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க..
"மூஞ்ச தொங்க போட்டுட்டு வராத டி எதோ தப்பு செஞ்ச மாதிரி.. நிமிர்ந்து மாமனுக்கு ஏத்தாப்பல செருக்கோட வா!!" என்று அவன் சொல்லி செல்ல.. இவள் "நீயி என்னவாது சொல்லிக்கோ" என்றவாறு யாரையும் அந்த வீட்டில் பார்க்க பிடிக்காமல் கீழே குனிந்தவாறு அவனது வேட்டி மடித்த கால்களை பின்தொடர்ந்தது இவளது கொலுசு அணிந்த இளம் கால்கள்!!
'இவளை எல்லாம் திருத்தவே முடியாது!' என்று பொருமலோடு முன்னே சென்றவன் அவளை இழுத்து தன் கைகளில் வைத்துக் கொள்ள தான் ஆசை!! ஆனால் இங்கே தங்கள் ஊரார் குடும்பத்தார் முன்னாடி செய்தால் இவன் வாய்க்குப் பயந்தோ அல்லது அவன் அப்பாவிற்கு மரியாதைக்காகவோ யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் அதே நியாயத்தை அம்பலவாணனிடம் அவனின் கூட்டதாரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா??. பன்றியோடு சேர்ந்த கன்றும் நாறும் என்பதுபோல அவனோட சேர்ந்த கூட்டமும் அப்படித்தான்!!
அதனால் அந்த கூட்டத்திற்கு முன்னால் தன்னவளை அவர்களின் வாய்க்கு அவலாக்க விரும்பாமல் சற்று முன்னால் செல்ல.. தயங்கி தயங்கி பின்னால் வந்தவள் எங்கே சென்று நிற்பது என்று தெரியாமல் இரு கோஷ்டிக்கும் சற்று தள்ளி நின்று கொண்டு இருக்க..
மகன் அருகில் நின்றவுடன் மருமகளை எதிர்பார்த்த சற்குணம் அவள் தள்ளி நிற்பதை பார்த்து "ஆத்தா இங்கன வா.. வந்து என் பக்கத்துல நில்லு" என்று சற்று உரக்கவே அழைத்தார். அதில் நிமிர்ந்து ஒருமுறை அவரை பார்த்தவள் விடுவிடுவென்று அவர் அருகில் நின்று கொண்டாள்.
சற்குணத்திற்கு வலது பக்கம் நின்று கொண்டிருந்த வீராவோ அங்கே அவள் வருவாள் என்று எதிர்பார்க்க.. அவரின் இடது பக்கம் நின்று கொள்ள.. "இவளை!!" என்று பல்லைக் கடித்தவாறு நின்றிருந்தான்.
அசோகனுக்கு மனது அத்தனை நிம்மதியாயிருந்தது. யார் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் இளம்வயதிலேயே கைம்பெண்ணாக இருந்தால் அவருக்கு அவ்வளவு மனம் துடிக்கும். அதுவும் சொந்த தம்பி பெண்ணென்றால்.. அதுவும் அவர்கள் கையில்.. அவர் பிள்ளைகளோடவே வளர்ந்தவள்.
இன்று மஞ்சள் பூசிய முகம்.. இரு புருவங்களுக்கு இடையில் திலகமும் கழுத்தில் மஞ்சள் கயிறு மிதமான அளவில் ஒளிர்ந்த மகளை நினைத்தவருக்கு அப்படியொரு நிறைவு!! சந்தோசம்!!
அசோகனின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சற்குணத்திற்கு அவரின் மனநிம்மதி புரிய.. யாரும் அறியாமல் மெல்ல தலையை ஆட்ட அவரும் கண் மூடித் திறந்தார்.
ஆனால் அதற்கு எதிர்மாறாக கண்கள் தீப்பிழம்போடு.. விட்டால் மகளே இப்பொழுதே அந்த அக்னிக்கு இரையாக்கி விடுவார் போல அமர்ந்து இருந்தார் அம்பலவாணன்.
