சண்டியரே 18
பொன்வயல்.. விஜயராகவன் தமயந்தி தம்பதியினருக்கு கமலாம்பிகை என்ற மகள் மட்டுமே..!
இரண்டாவது குழந்தை ஏனோ சட்டென்று தரிக்கவில்லை தமயந்திக்கு.
“சொத்து சுகம் அத்தனை இருக்கு.. என்ன தான் பெண் குழந்தை இருந்தாலும் அது வாரிசாகாதே..! சீக்கிரம் ஒரு பையன பெத்துக்கோ..
“இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம். இதையெல்லாம் ஆள ஒரு வாரிசு வேணாமா?”
“சீக்கிரமா சொத்தை ஆள ஒரு வாரிசை பெற்றுக் கொள்..!” என்று ஊரார் சுற்றம் எல்லாம் பேச பேச தமயந்தி மிகவும் வருந்துவார்.
இந்த விரதம் விட அந்த மிருகத்தை கடைபிடி சீக்கிரம் ஆண்பிள்ளை பிறக்கும் என்று அவர் கடைபிடிக்காத விரதமும் இல்லை.. நோன்பும் இல்லை..! கேட்டவற்றையெல்லாம் செய்ய தொடங்கினார்.
ஒருவழியாக அவர் தனது இரட்டை மகன்களை பெற்றெடுக்கும் போது கமலாம்பிகைக்கு 13 வயதாகி விட்டது.
ஆனால் அது கூட பெரிதாக பேசப்படவில்லை அக்கிராமத்தில்.. 40 வயதில் பிள்ளை பெற்றவன் என்ற பெருமைதான் விஜயராகவனுக்கு..!
ஆனால் 35 வயதில் திடகாத்திரமாக இருந்தாலும் இரட்டை குழந்தைகள் கூடவே அவர் இருந்த விரதம் அது இது என்று கொஞ்சம் உடம்பு பலவீனமானது தமயந்திக்கு.
காலம் செல்ல செல்ல.. தான் நன்றாக இருக்கும்போதே மகளை சீக்கிரம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அவரது இருபதாவது வயதிலேயே சொந்தத்திலேயே தியாகேசனுக்கு மணமுடித்து வைத்தனர்.
ஒன்றுக்கு இரண்டு மச்சான்கள் அதுவும் சின்ன வயது மச்சான்கள் என்று அவ்வப்போது சீண்டி விளையாடுவார் தியாகேசன். அதற்கு அவரை சுற்றி இருக்கும் அவர் வயது உடைய மாமன் மச்சான் பங்காளி உறவினர் ஏற்றிவிட.. அந்த வாலிப வயதில் கொஞ்சம் ஏகத்துக்குமே விளையாடுவார் மச்சான்களிடம்..!!
குரு ஆதிரன் சற்றே பொறுமையானவன்.. நிதானமானவன்..!
அதனால் மாமா என்ன செய்தாலும் பேசினாலும் அமைதியாக கடந்து விடுவான். மேலும் அந்த எட்டு வயதில் அவர்கள் பேச்சோ அதன் அர்த்தமோ அவர்களுக்கு புரியாது. ஆனால் சிவ ஆரூரன் அப்படியே எதிர்பதம். சற்றென்று கோபப்படுபவன். தப்ப என்றால் தப்புதான்..! அவனுக்கு அது யாராக இருந்தாலும்..!
ஒரு அளவுக்கு மேல் தியாகேசன் சீண்டும்போதெல்லாம் “யோவ் மாமா அவ்வளவு தான் உனக்கு பாத்துக்கோ.. இன்னொரு தடவை இப்படி தலையில் தட்றது சீண்டுறது புரியாம ரெட்டை அர்த்தத்துல பேசுறது.. இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சிக்கிட்ட, எங்க அக்காவ உன் வீட்டுக்கெல்லாம் அனுப்பவே மாட்டேன். எங்களோடவே வச்சுக்குவேன்” என்று தன் அறிவுக்கு தெரிந்த வரையில் அவன் அவரை திட்டி விட்டுப் போக..
பக்கத்தில் இருந்தவர்களாம் கொல்லென்று சிரித்து விட்டார்கள். “தியாகேசா உன் குட்டி மச்சான் பொண்டாட்டிய அனுப்ப மாட்டானாம். உன்னால பொண்டாட்டி இல்லாம ராவு தூங்க முடியுமா? நீ தான் போய் வீட்டோட மாப்பிள்ளையா இருந்துக்கணும் போல..” என்று அவர்கள் கிண்டல் செய்ய, அது என்னமோ சற்று இளக்காரமாக தியாகேசன் மனதில் பதிந்தது.
வீட்டோட மாப்பிள்ளை என்றால் கிராமத்தில் அதுவும் அந்த காலத்தைப் பொறுத்த வரைக்கும் ஏதோ தான் ஆம்பளை இல்லையோ என்று சுற்றமும் உறவும் கூறி விடுமே என்று ஒரு பயம்..! மாமனார் வீட்டோடு இருப்பது மகா கேவலம் என்று நினைப்பு..!
இப்படியாக நாட்கள் கடக்க அடுத்த வருடமே தங்கமயிலை ஈன்று எடுத்தார் கமலாம்பிகை.
பேருக்கு ஏற்றாற் போல பொன்னால் செய்த செப்பு சிலையாக தான் இருந்தவளை கண்டு “என் தங்கம்..” என்று ஆசையாக கொஞ்சுவான் ஆரூரன்..
பிள்ளை பிறந்து ஐந்து மாதங்கள் வரை கமலாம்பிகை தாய் வீட்டில் சீராட... அப்பொழுது பெரும்பாலும் அக்காவின் மகளை தன் கூடவே வைத்திருப்பான் ஆரூரன்.
ஆதினும் அதிகமாக அப்பாவின் பின்னே சுற்றுபவன், அதனால் வீட்டில் அதிகம் ஓட்ட மாட்டான்.
ஆனால் ஆரூரனுக்கு அப்பாவை விட அம்மாவை அதிகம் பிடிக்கும்.! அதுவும் இவர்கள் பிறந்ததிலிருந்து அதிகம் தாங்கி வளர்த்த அக்காவை இன்னும் அதிகம் பிடிக்கும். அதனால் அவன் குடும்பத்தோடு ஒட்டுதல் அதிகம் உண்டு.
இப்படியாக நாட்கள் செல்ல.. ஆறாம் வகுப்பு முதல் உள்ளூரில் சேர்க்காமல் வெளியூரில் நல்ல பள்ளியில் இருவரையும். சேர்த்து விட்டார் விஜயராகவன்
அதனால் அக்கா மகளை பார்க்கும் நேரம் அவர்களுக்கு குறைய ஞாயிறு ஆனால் ஆரூரனுக்கு விடிவது கமலாம்பிகை வீட்டில் தான். அதுவும் தங்கும் தங்கம் என்று அவன் கொஞ்சும் போதெல்லாம் தியாகேசனுக்கு செம கடுப்பு வரும்.
“ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தானே லீவு அன்னைக்கு கூட உங்க வீட்ல இருக்க மாட்டியா?” என்று கேட்டே விடுவார்.
“ஏன் நான் வந்தா உங்களுக்கு என்ன? நான் தங்கத்தை பார்க்க வந்தேன். உங்களை ஒன்னும் இல்லை..” என்று எடுத்து எறிந்து பேசும் மச்சானை அறவே பிடிக்காமல் போனது ஒரு கட்டத்தில் தியாகேசனுக்கு. அவன் செயல் யாவும் பிடிக்காமல் போனது.
எல்லாத்துக்குமே காரணம் மனம் தான்..!! தனக்கு பிடித்தவர் என்றால் அவர் செய்யும் பெரும் தவறுகளை கூட பொறுத்துக் கொள்ளும்.. அதே தனக்கு பிடிக்காதவர்களின் சிறு தவறுகளை கூட தாங்க முடியாது வெடித்து சிதறுவர்..! அப்படித்தான் தியாகேசனும்.
தங்கம் வளர்ந்து தளிர் நடை போடும்போதெல்லாம் அவளை தூக்கி அரவணைத்து கொள்வார்கள் தாய் மாமன்களாய் ஆதிரனும் ஆரூரனும்..!
ஆதிரனை விட ஆரூரனுக்கு மயில் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு..!
கமலாம்பிகை “அம்மா நானும் இரட்டை பொம்பள புள்ளையா பெத்திருக்கலாம். ரெண்டு பேரையும் தம்பிகளுக்கே கட்டி வச்சி இருப்பேன்” என்று பேச்சுவாக்கில் அன்னையிடம் கூறுவார்.
“அதுக்கு என்ன கமலா.. இன்னொரு பேத்திய பெத்துக் கொடு.. ரெண்டு பேரையும் என் வீட்டுக்கே நான் எடுத்துக்கிறேன். தங்கமாய் பார்த்துகிறேன்” என்று அவரும் சிரிப்பார்.
இப்படியே நாட்கள் கடந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்?? ஆனால்.. விதி.. யாரைத்தான் விட்டது??
ஆண்டுகள் கடக்க இப்பொழுது பன்னிரண்டாவது முடித்திருந்தனர் இருவரும். ஆரூரன் அவனது கனவான மருத்துவத்தின் பக்கம் செல்ல.. அதற்கான நுழைவுத் தேர்வில் மும்முரமாக இருந்தான்.
அதுபோல ஆதிரன் இன்ஜினியரிங் பக்கம் செல்ல, அவனும் முனைப்புடன் படித்துக் கொண்டிருந்த நேரம்.
அதுபோலவே ஆரூரனுக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில் படிக்க இடம் கிடைத்தது அதுவும் கிராமப்புற மாணவன் மருத்துவம் பயில்வது அதுவும் பணத்தின் ஆளுமை இல்லாமல்.. தன் படிப்பை கொண்டு பயில்வதெல்லாம் பெரிய விஷயம்..! கொண்டாடி தீர்த்து விட்டார் விஜயராகவன். விருந்து மருந்து என்று வீடே அமர்க்களப்பட தியாகேசனுக்கு என்னவோ அது பிடிக்கவே இல்லை.
அவரின் மகளோ ஜஸ்ட் பாஸ் கேஸ் தான்..! இன்னும் சில பாடங்களில் தத்தி புத்தி தாவதற்கு அத்தனை கஷ்டப்பட.. மச்சான்கள் இருவரின் படிப்பு திறமை கண்டு பொறாமை பட்டார் தியாகேசன். மயூரன் பிறந்து அப்பொழுதுதான் இரண்டு வயதாக இருந்தது. கமலாம்பிகையும் அன்னையைப் போல இரண்டாவது குழந்தையை மிக இடைவெளி விட்டு பெற்றிருந்தார்.
இந்த சமயத்தில் பொன்வயலில் ஊர் காக்கும் அம்மனுக்கு திருவிழா வர திருவிழாவுக்கு என்று இளைஞர்களின் வட்டம் ஒன்று சேர்ந்து கூட்டம் கும்மாளம் என்று சந்தோஷமாக கழித்தினர்.
போன வருடம் நுழைவு தேர்வுக்கு என்று முனைப்பில் படித்ததால் கொண்டாட்டங்களை தவிர விட்டுசகோதரர்கள் இருவரும் இப்போது அதில் பங்கெடுக்க.. அங்கே ஆட்டத்துக்கும் பட்டத்துக்கும் குறைச்சலா என்ன?
அதே நேரம் தன் 11 வது வயதிலேயே பூப்படைந்தாள் தங்கமயில். வீடு இன்னும் மகிழ்ச்சியில் விழாக்கோலம் பூண்டது. அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார் தமயந்தி தன் ஒற்றை பேத்திக்கு..!
தாய்மாமன் சீர் என்று ஊரையே அழைத்துக் கொண்டு மேளதாளத்தோடு சென்று சீர் செய்து விஜயராகவன். தியாகேசனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி..!
விஜயராகவன் செய்வார் என்று தெரியும். ஆனால் இத்தனை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பின் அங்காளிகள் பங்காளிகள் எல்லாம் “உனக்கு என்னடா மாமனாரும் நல்ல வசதியானவரு.. மச்சான்ல ஒருத்தன் இன்ஜினியரு.. இன்னொருத்தன் டாக்டரு.. அவர்களும் செய்வானுங்க.. கொடுத்து வச்சவன்டா..!” என்று சொல்ல பூரித்து போனார் தியாகேசன்.
ஆனால் அதிலே சில உறவுகள் “உன் சின்ன மச்சான் டாக்டர் பார்த்து புடிச்சு போட்டுக்கோ.. பின்னால் எந்த பிரச்சினையும் இருக்காது உன் பொண்ணுக்கு” என்றதும் அவர் அருவருப்பாக முகம் சுளித்தார்.
ஏனோ முன்னை விட கட்டிளம் காளையாக தேஜஸோடு படிப்பின் களையும் சேர்ந்து கொள்ள டாக்டர் என்ற பெருமையோடு உலா வரும் ஆரூரனை பிடிக்கவே இல்லை அவருக்கு.
அதுபோல அமைதியாக அமர்த்தியாக வலம் வரும் ஆதிரனை கண்டு இவறை போலவே அவனும் இருந்திருக்கலாம் என்று முடித்துக் கொள்வார்.
மாமன் சீர் செய்ய மயிலுக்கு மாலையிட ஆதிரனை தான் முதலில் அழைத்தார்கள். அவனோ கூச்சத்தோடு செல்லவில்லை. அதனால் ஆரூரனே தாய்மாமன் சீர் எல்லாம் செய்து மயிலுக்கு மாலையிட்டான்.
அதுவரை அக்கா மகளின் மேலிருந்தது பாசம் மட்டுமே..
வளர்ந்த குமரியாய் பாவாடை தாவணையில் மஞ்சள் பூசிய முகத்தோடு கண்களில் வெட்கத்தோடு கன்னங்களில் செம்மை பூச மேல் பார்வையாய் தன்னை நிமிர்ந்து பார்த்த அவளின் அழகில் கவரப்பட்ட ஆரூரனுக்கு பாசம் நேசமானது அங்கேதான்..!!
“சேச்சே.. அவ சின்ன பொண்ணு..” என்று மனது தடை போட்டாலும் பெரிய மனுஷியாகிட்டா தானே என்று மற்றொரு மனம் அவனுக்கு சாதகமாக பேசியது.
அவ்வப்போது ஓரக் கண்ணால் தன்னை தழுவி செல்லும் தங்கமயிலின் பார்வைகள் அவனின் வாலிப மனதில் ஸிங்கார கீதம் வாசித்தது லாளிதம் சேர்த்தது.
கூடவே வேம்பு அருகில் நின்று ஏதோ அவளிடம் சிரித்துப் பேச அதற்கு பதிலுக்கு வெட்கத்தோடு தலை குனிந்து கொள்ளும் தங்கமயிலோ இன்னும் பேரழகியாய் தெரிந்தாள் ஆரூரனுக்கு.
அதுவும் அந்த வயதில் ஹார்மோன்களின் சதிராடல் அதிகம் இருக்கவே… முன்னை விட இப்பொழுது வனப்பில் வளர்ச்சியில் அழகில் பெண்மை பூத்திருக்க.. ஆரூரன் பார்வையும் தங்கமயில் தான் தழுவிக் கொண்டிருந்தது.
அதை கண்டு கொண்ட தியாகேசனும் சபையில் ஏதும் பேசாமல் அமைதி காத்தார். ஆனால் பல்லை கடித்தபடியே ஆரூரனை முறைத்துக் கொண்டு இருந்தார்.
அடுத்து திருவிழாவுக்கு அனைவரும் சென்றாலும் தங்கமயில் வீட்டிலேயே இருக்க அவளுக்கு துணைக்கென்று கமலாம்பிகையும் இருந்து கொண்டார்.
அவ்வப்போது திருவிழாவிலிருந்து மயிலுக்கு என்று பிடித்த பலகாரங்களை வாங்கி வந்து கொடுத்துவிட்டு செல்வான் ஆரூரன்.
“அக்கா இது மயிலுக்கு பிடிக்கும் கொடுத்திடு..” என்று சில சமயம் அக்காவிடம் கொடுப்பவன், சில சமயம் அவளை பார்த்து கொடுத்து விட்டு செல்வான். அப்போதெல்லாம் தீண்டியும் தீண்டாமல் வாங்கும் அவளின் ஸ்பரிசம் இளம் காளையின் மனதை ஜிவ்வென்று உச்சி வானில் பறக்கச் செய்யும்.
ஆரூரன் வந்து சென்றாலே மகளையும் பெண்ணையும் தேவையில்லாமல் திட்டி தீர்ப்பார் தியாகேசன். ஆனால் காரணம் புரியாமல் கமலாம்பிகை “உங்க அப்பாவுக்கு 40 வயசு ஆகுதுல அதுதான் குணம் மாறுது” என்று நொடித்து விட்டு செல்வார்.
திருவிழா என்றாலே கொண்டாட்டத்தில் இருக்கும் நேரம். இளைஞர் அணி சார்பாக அனைவரும் ஒரே கலரில் சட்டை எடுத்துக் கொண்டனர். வெள்ளை வேஷ்டி.. தெருவில் பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் ஒரே கலரில் சட்டையும் வேஷ்டியும் போட்டு இருப்பதைக் கண்டு பெரியவர்களுக்கும் சந்தோஷம்..!
“இந்த பிள்ளைங்க இப்படி ஒத்துமையா இருந்து ஒவ்வொரு விஷயம் நடத்தினால் நல்லபடியா இருக்கும். ஆனால் திருவிழா சமயத்தில் எவன் அடிச்சுக்காம இருக்கணும்..” என்று அவ்வப்போது அவர்களை கண்காணித்தும் கொண்டனர்.
காப்பு கட்டுதலில் ஆரம்பித்து, முளைப்பாரி வைத்து தினமும் கும்மி கொட்டுதல். அதன் பின் இசை கச்சேரி.. அடுத்த நாள் காலை பால்குடம் இரவு பட்டிமன்றம்.. அதற்கு அடுத்த நாள் சாமி ஊர்வலம் அத்தோடு திருவிழா முடிய கடைசி நாள் ஆர்கெஸ்ட்ரா என்று அழைக்கப்படும் இன்னிசை கச்சேரி நடந்தேறியது.
அன்றும் அதே போல அனைவரும் ஒரே கலரில் சட்டை அணிந்து மேடையில் பாடப்படும் பாடலுக்கு ஏற்ப இங்கே தங்களுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இளைஞர்கள் இளைஞிகள் என்று சற்று தள்ளி தள்ளி அமர்ந்திருந்தனர். அது ஒரு திடலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது இயற்கை தேவைக்கும் சற்று தள்ளி இருக்கும் மரத்தின் பின்னே அல்லது புதர்களுக்கு பின்னால் தான் சென்று வருவார்கள். அப்படி சென்று ஒரு பெண் அழுது கதறிக்கொண்டு ஓடிவர..
“என்னாச்சு? என்ன ஆச்சு? என்னது அவளுக்கு?” என்று விசாரிக்க.
பின்னே வந்த கும்பலை கைக்காட்டி அழுது கரைந்தாள் அவள். அந்த கும்பலில் ஒருவனாக ஆரூரனும் நின்றிருந்தான். ஆதிரன் விழா அமைப்பில் பொறுப்பாளராக இருக்கும் விஜயராகவனுக்கு துணையாக மற்ற வேலைகளில் இருப்பதால்.. பொதுவாக இம்மாதிரி கேலிக்கூத்துகளில் அவன் கலந்து கொள்வதில்லை. அதனால் அன்று அவன் அப்பாவோடு இருந்ததால் இங்கே நடந்தது தெரியவில்லை.
“என்னாச்சுமா? என்ன ஆச்சு?” என்று அன்றைய பொறுப்பு எடுத்து இருக்கும் ஒரு பெருசு கேட்க.. அவளது அருகில் இருக்கும் பெண்கள் காதில் கூற.
“இயற்கைக்கு ஒதுங்குனவள யாரோ அசிங்கமா தொட்டு இருக்காங்களாம் பெரியப்பா” என்றாள் அந்த பெண் சற்று அதிர்ச்சியோடு..
“என்ன? என்ன நம்மூரில் இப்படியா? என்று ஆரம்பிக்க..
“நான் இல்லை.. நீ இல்லை..” என்றதும் அங்கு வந்த தியாகேசனுக்கு இது எல்லாம் கேட்டதும், “நம்ம ஊர்ல அப்படி யாரெல்லாம் செய்ய மாட்டாங்க..” என்று அடித்துச் சொன்ன ஆரூரனை கண்டவர், “எப்படி உனக்கு தெரியும்?” என்று பாய்ந்தார்.
“எப்படி தெரியும்னா நாங்க தான் இங்கேயும் அங்கேயும் பாதுகாப்புக்கு நிற்கிறோம் இல்ல.. அப்படி எல்லாம் யாரும் போன மாதிரி தெரியல..” என்றான்.
ஆரூரன் சொல்ல வந்த அர்த்தமோ வேற யாராவது வெளியூர் ஆட்களாக இருக்கும் என்று. நம்ம ஊர் பொண்ணுங்களை நம்ம ஊர் ஆண்கள் இது மாதிரியாக யாரும் தவறாக தொட்டுவிட மாட்டார்கள் என்று எண்ணத்தில்..
அதை மிக சரியாக தவறாக புரிந்து கொண்ட தியாகேசன் “மாப்பிள பேச்செல்லாம் ஒரு தினுசு இருக்கு.. வெளியூர்ல போய் படிக்கிறல அதுதான்..” என்று ஆரம்பித்தவரின் பேச்சு அவனையே குற்றம் சாட்ட..
“இந்த கும்பல் தான் அந்த பொண்ணு அழும்போது அந்த பக்கம் இருந்து வந்தது..” என்று யாரோ ஒருவர் கூற, “நாங்க தம் அடிக்க போனோம்..” என்றான் அதில் ஒருவன்.
ஆரூரனுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் கிடையாது.
“ஆமா.. நீ தான் தம்மடிக்க மாட்டியே நீ எங்க போன?” என்று அத்தனை பேரும் நடுவில் வைத்து கேட்டார் தியாகேசன்.
அதில் அவமானமாக உணர்ந்த ஆரூரன் “எனக்கு சிகரெட் புகை ஒத்துக்காது. அதனால நான் தள்ளி போய் நின்னுட்டு இருந்தேன்.. அவனுங்க தம்மடிச்சிட்டு வந்தவுடன் அவங்க கூட ஜாயின் பண்ணிட்டேன்” இப்பொழுது எல்லாரும் பார்வையும் இவன் மேல் இன்னும் சந்தேகத்தின் சாயல் அதிகமாக பட.. அதனை ஊதி பெருசாக்கியது என்னவோ தியாகேசன் தான்..!!
“அப்ப நீ தான் போய் அந்த புள்ளகிட்ட சிலுமிஷன் பண்ணுனியா?” என்று கேட்டு விட்டார்.
அவரின் சட்டையை பாய்ந்து பிடித்த ஆரூரன் “எவ்வளவு தைரியம் இருந்தா என்ன பத்தி நீ தப்பா சொல்லுவ?” என்று உறும..
இப்படியாக மாமன் மச்சானுக்குள் அங்கே சண்டை நடைபெற்றது. அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட அங்கே வந்த விஜயராகவனிடம் மற்றவர்கள் “உங்க பையன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்.. உங்க மாப்பிள்ளை தான் பாத்துட்டு சொல்றாரு..” என்று அப்படியே விஷயத்தை மாற்றி கூறி விட வந்தவர் மாப்பிள்ளையிடம் சண்டை போடும் மகனை அசூசையாக பார்த்து தனியாக இழுத்து விட்டார் ஒரு அறை..!
“அப்பா..!!” என்று அவன் அதிர்ந்து பார்க்க..
“என்ன காரியம் பண்ணி வச்சி இருக்க?” என்று பேச..
தன்னை நம்பாமல் பேசும் அப்பாவை அதிர்ச்சியாக பார்த்தான் ஆரூரன் நான் அப்படியா என்று அடிபட்ட வலியோடு அவரைப் பார்த்தான்.
இன்னும் பிரச்சினையின் தீவிரம் அதிகமாக அங்கே குற்றம் சாட்டப்பட்டது ஆரூரன் என்றானது. கண்ணால் பார்க்காமல் அது அவன் தான் செய்தான் என்று உறுதியாக மொழிந்தார் தியாகேசன். அவன் மீது இருந்த பல வருட வெறுப்பு அப்பொழுது வெளிப்பட்டது..!
அப்பாவே அவனை நம்பாமல் போக அவனுக்கோ அந்த கணம் அங்க இருக்கவே பிடிக்கவில்லை. அடிபட்ட பார்வையால் அப்பாவை பார்த்தவன் கோபத்தோடு தியாகேசனை பார்த்து முறைத்து விட்டு சென்றான்.
அதற்குள் விஜயராகவன் அவர்களிடம் மகன் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டு எப்படியோ அந்த பிரச்சினையை முடித்து வைத்தார். ஆனால் அதற்குள் அவர் பட்ட பாடும் கேட்ட பேச்சும் அதுவும் தியாகேசனின் வாய் ஓயவே இல்லை. ஏன் மகனின் புத்தி இப்படி போய்ட்டு என்று விஜயராகவனே வருந்தும் அளவுக்கு செய்து விட்டனர் கூட்டத்தில் இருந்தவர்கள்.
விஜயராகவன் வீட்டில் வந்து மகனை திட்ட ஆதிரன் தம்பிக்கு ஆதரவாக நிற்க.. தமயந்தி பயந்து போய் பார்த்தார் இருவரையும்..
ஆனால் மறுநாளே கிளம்பி ஹாஸ்டலுக்கு சென்று விட்டான் ஆரூரன். அவன் அங்கே தான் தங்கி படித்துக் கொண்டிருந்தான். தினமும் வந்து போவது முடியாத காரியம் என்று. இப்பொழுது அனைவரும் விடுமுறையில் இருக்க இவன் மட்டும் வீட்டில் இருக்க பிடிக்காமல் சென்று விட்டான்.
ஹாஸ்டலிலும் எல்லாம் தனியாக இருக்க பிடிக்காமல் கல்லூரி நூலகத்திலேயே கிடையாக கிடந்தான். அடுத்து வந்த பத்து நாட்களும்..
அந்த பத்து நாட்களில் தியாகேசன் இவர்கள் வீட்டுக்கு வந்து போட்ட ஆட்டம் சொல்லில் அடங்காது..!!
“எப்படி இப்படி ஒரு பிள்ளையை பெத்துங்க? இப்படி செஞ்சுட்டானே..!!” அப்படி இப்படி என்று அத்தனை பேசி சென்றார் வரும்போதெல்லாம்..
எவ்வளவுக்கு எவ்வளவு ஆரூரனை அந்த ஊர் தாங்கியதோ… குடும்பம் பெருமை கொண்டதோ அனைத்தையும் குலைத்து விட்டு போனார் தியாகேசன்.
ஆம்..! அந்த ஒற்றை மனிதனின் தனி மனித வெறுப்பினாலும்... விஜயராகவனின் சரியாக விசாரிக்காத செயலாலும்.. ஆரூரன் என்ற மனிதனின் நடத்தை அங்கு கேள்விக்குறியானது..!!
மகன் இப்படிப்பட்டவன் அல்ல என்று தெரிந்தும் பேசும் மாப்பிள்ளை எதிர்த்து கேட்க முடியாமல் மௌனித்து போனார் தமயந்தி. ஆதிரனும் அவரிடம் பேசாமல் பேச்சை கத்தரித்துக் கொண்டான். துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விஜயராகவன் அமைதியாக இருந்து கொண்டார்.
ஆனால் ஏற்கனவே உடம்பு நலிந்திருந்த தமயந்தி ஆரூரனின் பிரிவை தாங்கவே முடியவில்லை. அவன் சென்று ஒரு மாதம் ஆகியும் வீட்டில் யாருடனும் அவன் தொடர்பு கொள்ளவில்லை யார் போன் செய்தாலும் தான் வேலையாக இருக்கிறேன் என்று ஏதாவது காரணம் சொல்லி பேச மறுத்து விட்டான். அதுவே அவரின் உடல் நிலையை குலைக்க..
ஒரு நாள் விடிய காலையில் கழிவறைக்க செல்ல எழுந்தார் தமயந்தி. திடீரென்று ஏற்பட்ட தலை சுற்றலில் மயங்கி விழ தலையில் பலமான அடி.. அதிக ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னமே உயிர் இழந்தார் தமயந்தி.
அன்னையின் இறப்பு செய்தி கேட்டு பதிறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான் ஆரூரன். அப்போதும் தியாகேசன் வாய் ஓயவே இல்லை..!!
“இப்படிப்பட்டவன எல்லாம் எதுக்கு ஊருக்குள்ள விடுறீங்க? வந்து உடனே பார்த்த உடனே கிளம்பி ஓட சொல்லுங்க.. இவன்லாம் இருந்தா வீட்ல இருக்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லை..!” என்று துக்க வீடு என்றும் பாராமல் விஷத்தை கக்கினார்.
கணவனையும் கண்டிக்க முடியாமல் தம்பியையும் அரவணைக்க முடியாமல் தவித்தது கமலாம்பிகை தான்.
விஜயராகவனுக்கு மகன் மீது ஏககோபம்..!
“நீ ஒழுங்கா பேசி இருந்தா உங்க அம்மா உன்ன நெனச்சே கவலைப்பட்டு இருக்க மாட்டா.. கவலைப்பட்டு கவலைப்பட்டு தான் அவளுக்கு உடம்பே இப்படி ஆயிடுச்சு..!” என்று மகனை ஏச,
அனைத்தையும் பொறுத்து அமைதியாக கண்ணீர் உகுத்தபடி இறந்த அன்னையின் சடலத்தில் அருகே அமர்ந்திருந்தான் ஆரூரன்.
அவனின் கண்கள் அன்னையை மட்டுமே வெறித்து பார்த்திருந்தது. யாரின் ஆதரவும் அவனுக்கு தேவை இல்லை என்று நினைத்திருக்க.. அவன் விரல்களோடு விரல்கள் பின்னிக் கொண்டான் ஆதிரன். என்றும் நான் இருக்கிறேன் என்று கூறுவது போல..!
அன்னையின் காரியம் முடிந்ததும் தம்பியை தனியாக அணைத்து கொண்டவன், “ஏன் டா இப்படி பண்ற? நான் இல்லையா உனக்கு? யாராவது ஏதாவது சொன்னால் அப்படியே ரோசப்பட்டு போயிடுவியா? ஒன்னு நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று நிரூபிக்கணும்..! சொன்னா சொல்லுங்கடா என்று அவன் பேசினால் போடானு நீ பாட்டுக்கு உன் வேலையை பாக்கணும்..! இப்படி ஏண்டா இருக்க?” என்று தம்பிக்காக அவன் ஆதங்கப்பட..
“உன்ன மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாதுடா..!! நான் இப்படித்தான் தப்புன்னா தப்புதான்..! அவன் வாயை உடைக்காமல் வாய் வார்த்தை பேச மாட்டேன்.!” என்று இருவருக்கும் சின்ன சச்சரவு..
அந்நேரம் பார்த்து “ஆதி மாமா உங்களை தாத்தா கூப்பிட்டாங்க” என்றபடி வந்தாள் மயிலு.
“இதோ போறேன்..” என்று அவன் சென்று விட ஆரூரனை பார்த்தவள் மனதில் ஏக குழப்பம்..!
தந்தை அத்தனை சொல்லி இருந்தார். அவனிடம் பேசக்கூடாது..! அவன் பக்கம் போக கூடாது..! அவன் இருக்கிற பக்கமே நீ இருக்கக் கூடாது..! என்று ஆயிரம் அறிவுரைகள்.
ஆனால் ஏன் எதற்கு என்றெல்லாம் காரணம் தெரியாது அவளுக்கு. முன்னாலே இவளுக்கு தெரியும் ஆரூரறை தந்தைக்கு பிடிக்காது என்று, அதனால் இப்படி சொல்கிறார் என்று நினைத்திருக்க..
“எப்படி இருக்க மயிலு?” என்று ஆரூரன் கேட்க..
“நல்லா இருக்கேன் ஆரூ மாமா.. நீங்க ஏன் போனே பண்றதில்ல முன்ன மாதிரி..” என்று கேட்க அவளிடம் உண்மையை சொல்ல முடியாமல்,
“கொஞ்சம் படிக்கிற வேலை நிறைய இருந்துச்சு.. நான் உன்ன மாதிரி என்ன தவளையா? தத்தித்தத்தி தாவி பாஸ் பண்றதுக்கு.! நான் எல்லாம் கிளாஸ் டாப்பர் தெரியுமா? எவ்வளவு படிக்கணும் அதுவும் இப்போ நான் டாக்டர்..!” என்று அவன் பெருமையாய் பேச “ஆமா.. ஆமா.. பெரிய டாக்டர்..!” என்று உதட்டை சுழித்தாள் மயில்.
ஏனோ சுழிக்கும் அவள் உதடுகளை கவ்வி சுவைக்கும் எண்ணம் அப்பொழுது தோன்று ச்சே என்று தலையை உதறிக் கொண்டான் ஆரூரன். ஆனால் மயில் மீது ஏற்படும் இந்த மையல் அவனுக்கு தீர்ந்த பாடே இல்லை..!!
மெல்ல அவளை நெருங்கி “என்னை உனக்கு பிடிக்குமா தங்கம்?” என்று கேட்க..
“பிடிக்குமே மாமா..” என்றாள் அவள் பதிலுக்கு. அந்த பதில் அத்தனை உவப்பாக இருக்க..
“ஞாபகம் வச்சுக்கோ தங்கம்..! எப்பவுமே நீ ஆரூரனுக்கு மட்டும் தான்..” என்றதும் சரி மாமா என்று அவள் புரியாமல் அழகாக தலையாட்ட, அவளின் தலையை ஆதூயமாக தடவிவிட்டான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கே வந்துவிட்டார் தியாகேசன் மூக்கில் வியர்த்தவராய்..!!
அப்புறம் என்ன “எப்படிடா நீ என் பொண்ணு கூட பேசலாம்..?” அப்படி இப்படி என்று அவர் பேச.. பதிலுக்கு இவனும் பேச, “உன்ன மாதிரி பொம்பள பொறுக்கி எல்லாம் என் பொண்ணு பக்கத்துலயே நான் விடமாட்டேன் டா” என்று சீறினார் தியாகேசன்.
பதிலுக்கு தன் தொடையை தட்டி “பார்த்துகிட்டே இரு மாமோய்.. உம்ம பொண்ண கட்டி அவளை எனக்கு பொண்டாட்டியாக்கி.. உன்னையும் மாமனாராக்கி என் புள்ளையை உன் மூஞ்சில உச்சா அடிக்க வைக்கல.. நான் ஆரூரன் இல்ல..!” என்று சவால் விட்டான்.
கொத்தாக பிடித்து விட்டார் அவனது சட்டையை, அதற்குப்பின் மீண்டும் ஒரு கலவரம் அங்கே..!
விஜயராகவனுக்கு மனம் விட்டே போனது. “ஏன்டா? ஏன் டா? இப்படி பண்ற அம்மா செத்ததுக்கு வந்து இருக்க.. நீ அதை விட்டுட்டு இப்பவும் பொம்பள புள்ள பின்னால போவியா?” என்று கேட்க அந்த வார்த்தையின் வீரியத்
தில் அடி வாங்கியவன், கருமாதி வரைக்கும் கூட இல்லாமல் சென்று விட்டான் கல்லூரிக்கு.
அடுத்து அம்மாவின் கருமாதிக்கு அழைக்க சென்று ஆதிரனுக்கு அங்கே ஆரூரன் இல்லை.. சென்று விட்டான் என்ற செய்தி இடியாக இடித்தது..!!
தொடரும்..
