Share:
Notifications
Clear all

சண்டியரே 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

சண்டியரே 8

மணக்கோலத்தில் மணப்பெண்ணாய் தங்கமயில் தங்கமென அலங்காரத்தோடு காத்திருக்க.. ஆனால் மணமகன் குரு ஆதிரனோ இன்னும் வந்து சேரவில்லை. கமலாம்பிகை மயூரன் இருவரும் மயிலின் இரு புறம் தவிப்போடு நின்றிருந்தனர். கண்கள் கோவில் வாயிலை தொட்டு தொட்டு மீண்டது மூவருக்கும்..

இகிழ்ச்சியாக அவர்களைப் பார்த்தவர் “நீங்க எதிர்பார்க்கிற எவனும் வரமாட்டானுங்க..! அப்படியெல்லாம் இந்த தியாகேசன குறைச்சு மதிப்பிடாதிங்க.. செய்ய வேண்டிய வேலையை பக்காவா நேத்து இராவே செஞ்சிட்டேன்..! எவனும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.!” என்று எகத்தாளமாக சிரித்தார்.

“ஆமா ஆமா செய்ய வேண்டிய வேலை எல்லாம் ரொம்ப சிறப்பா செஞ்சிட்டு தான் வந்திருக்க போல தியாகேசா..” என்று அருகில் குரலில் திடுக்கிட்டு அவர் திரும்பிப் பார்க்க..

அங்கே விஜயராகவன் கோபமாக நிற்க.. அவர் அருகில் குரு ஆதிரன் ரௌத்திரத்தோடு நின்றிருக்க.. அவர்களின் சொந்தங்கள் எல்லாம் தியாகேசனைப் பார்த்து “உன்னை ஒரே வெட்டா வெட்டவா? பல குத்துகளா குத்தவா?” என்று முறைப்போடு நிற்க..

தியாகேசனுக்கு தூக்கி வாரி போட்டது. “எப்படி.. எப்படி இது நடந்தது? எப்படி இவர்கள் வந்தார்கள்? நான் போட்ட பிளான் எல்லாம் என்ன ஆச்சு?” என்று இன்னும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 

அதிர்ச்சி குறையாமல் நின்றிருந்த அத்தானின் அருகில் வந்த ஆதிரன் அவரது சட்டை காலரை கொத்தாக பிடித்து “எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண நீ இப்படி பண்ணி இருப்ப? சின்ன குழந்தைனு கருணை கூடவா உனக்கு இல்ல? அந்த அளவுக்கு உனக்குள்ள இருந்த மனிதம் செத்துப் போய் மிருகம் வந்துடுச்சா?” என்று உறுமினான்.

ஆதிரன் பேசியது கேட்டதும் கமலாம்பிகைக்கும் மயிலுக்கும் தூக்கி வாரி போட்டது. “சின்ன குழந்தைய என்ன பண்ணினார்?” என்று பயத்தோடு தம்பியை பார்த்து கேட்டார்.

 “என்ன நடந்துச்சுனு உன் புருஷன் கிட்ட கேளு கா.. ஆள பாரு.. பேர பாரு தியாகேசனாம். ஆனா செய்யறது எல்லாம் பொறுக்கி வேலை..” என்றான் முகத்தை மட்டும் அக்காவின் பக்கம் திருப்பி..

“யோவ் என்னய்யா பண்ணி தொலச்ச.. உன்னையே பார்த்து மரியாதையா அமைதியா போற புள்ளை இப்பல்லாம் உன்னால கோவமாக கத்திட்டு சண்டை போடுற அளவுக்கு கொண்டு வந்து விட்டு வச்சிருக்க.. சின்ன பிள்ளைன்னா.. ஆருரன் புள்ளையா? என்னய்யா பண்ணி தொலச்ச சொல்லுய்யா? இந்த மாதிரி ஏதாவது எடக்கு முடக்கா பண்ணிட்டு இருந்தேன்னா.. புருஷனும் பார்க்க மாட்டேன் மனுஷனும் பார்க்க மாட்டேன்.. சோத்துல விஷத்தை வச்சுருவேன்.. ஆமா பார்த்துக்கோ..” என்றதும் அவரோ திடுக்கிட்டு மனைவியை பார்த்தார். 

“சோத்துல விஷத்தை வைக்காத கா.. விஷத்துல சோத்த வை உன் புருஷனுக்கு” என்றவன் “காலையிலிருந்து குழந்தையை காணும். வீடு ஃபுல்லா நாங்க தேடி எங்கேயுமே கிடைக்கல.. ஆறு மாச குழந்த எங்க போயிடுவா.. சொல்லு?” என்றதும் கமலாம்பிகை அதிர்ந்து “இவர் ஏதும் செஞ்சுட்டாரா ஆதிரா? குழந்தைக்கு ஒன்னும் ஆகல இல்ல.. நல்லா இருக்கா இல்ல? எனக்கு நெஞ்சே படபடன்னு அடிச்சிக்குது” என்றவர் குழந்தை நல்லா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் அத்தனை பிரார்த்தனை அவரிடம்..!

ஆனாலும் தம்பியும் அப்பாவும் திருமணத்திற்கு கிளம்பி வந்ததிலிருந்து பெரிதாக தம்பி மகளுக்கு பாதிப்பில்லை என்று புரிந்து கொண்டார். 

“நாங்க அந்த புள்ளைய காணோங்குற கேப்புல அந்த குடிகார பயல கொண்டு வந்து உன் மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இந்த ஆளு பிளான் போட்டு இருக்காரு கா. அப்படி எல்லாம் நடந்தா உலகம் அழிஞ்சிடாது..! இவர் என்னதான் திட்டம் போட்டாலும் மேல ஒருத்தன் இருக்கான்னு நிரூபிச்சிட்டான். குழந்தையை கண்டுபிடிச்சாச்சு..”என்றான் தியாகேசன் மேல் இருந்த கோபம் சற்றும் குறையாமல். 

“ஆரூரா காப்பாத்திட்டப்பா.. ஈசா..!” என்று வேண்டிக் கொண்ட கமலாம்பிகை “குழந்தை எங்கடா இருக்கா? ஒன்னும் பிரச்சனை இல்ல இல்ல..” என்று பதட்டத்தோடு கேட்டார்.

“ஹாஸ்பிடல்ல இருக்கா கா. பாத்துக்க சொல்லிட்டு வந்து இருக்கேன்” என்றான் ஆதிரன் கலங்கிய குரலில்.

சகோதரனின் மகள் தான். ஆனாலும் இத்தனை நாட்களாக மகளாக பாவித்து வளர்த்தவன் அந்த நிலையில் அவளை கண்டதும் மனம் தவித்து போனது. குழந்தையை இப்படி செய்தவனை அடித்து துவம்சமாகிட கிளம்பவனை தடுத்து நிறுத்தி “முதலில் காரியத்தை பார் குரு.. அதன் பின் வீரியத்தை காட்டலாம்..!” என்று விஜயராகவன் அழைத்து வந்து விட்டார்.

“குழந்தை ஹாஸ்பிடல இருக்காளா? அங்கு சேர்க்கும் அளவுக்கு என்ன மாமா ஆச்சு?” என்று இப்பொழுதுதான் மயில் வாய் திறந்து கேட்க..

“உன் குடிகாரப்பன் என் பெண்ணை கொல்ல பார்த்தான்” என்றான் பல்லை கடித்துக்கொண்டு..

“இல்ல.. இல்ல.. நான் கொல்ல எல்லாம் சொல்லல.. நான் தூக்கி மோட்டர் ரூம்ல பதுக்கி வச்சுக்கடா யார் கண்ணுக்கும் தெரியாம, கல்யாணம் முடிஞ்சதும் வந்து வீட்ல கொடுத்துடுடானு சொன்னேன். கொல்லலாம் பார்க்கல.. அடியே கமலா நிசம் டி.. என்னை நம்பு டி..!” என்று அங்கே இருந்த ஜாதி ஜனத்தை பார்த்து எங்கே தன்னை கொலைகாரன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கத்தினார் தியாகேசன்.

‘கொல்ல பாத்தாரா?? அதுவும் பச்சை குழந்தையையா??!!’ என்று மயில் அப்பனை அருவருப்பாக பார்த்தவள், “நீ எல்லாம் அப்பனா? நீயும் ரெண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்க தானே? சின்ன பிள்ளை கொல்ல உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு?” என்று காட்டமாக கேட்டாள். மயிரன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அப்பாவை முறைத்தான்.

தன் அப்பா கோபப்படுவார் பேசுவார் அவ்வப்போது சில்லரைதனமாக சில வேலைகள் செய்வார் என்று நினைத்திருந்தவளுக்கு தன் அப்பா கொலை செய்வாரா? அதுவும் சின்ன குழந்தையை? என்று நம்பவே முடியவில்லை.

“ஐயோ மயிலு..! சொன்னா கீழே நிஜமாவே மோட்டார் ரூமுக்குள்ள புள்ளைய தூக்கி வச்சு மறைச்சு வைக்க தான் சொன்னேனே தவிர கொல்ல எல்லாம் யாரையும் அனுப்பவே இல்ல மயிலு.. இது உன் மேல சத்தியம்.!” என்று சத்தியம் செய்யப் போனவரின் கையை தட்டி விட்டார் கமலாம்பிகை.

“என் பொண்ணு நூறு வருஷம் புருஷனோடு நல்லா வாழ வேண்டிவ.. உன் பொய் சத்தியத்தை வேணா உன் தலையில அடி.. இல்லன்னா நீ மாப்பிள்ளையா கொண்டு வந்தியே அவன் தலையில அடி.. ரெண்டு பேர் தலையிலும் இடி விழ!” என்று சீறினார்.

அதன் பின் தான் அதுவரை அங்கே லோகநாதன் வரவில்லை என்பதை கண்டு “இந்த குடிகார பையன் எங்க போனான்? ஒருவேள காலைல குடிச்சிட்டு மப்புல எங்கேயும் கிடக்குறானோ அவன் தான் மாப்பிள்ளை என்கிறதை மறந்துட்டு? அவன் கிட்ட தானே இந்த வேலையை கொடுத்தோம் நாம..” என்று யோசித்தார். 

“உன் குடிகார மாப்பிள்ளைய தேடுறியா நீ? என் பொண்ண என்ன பண்ண சொன்னீயோ அதேதான் அவனுக்கு பண்ணி வச்சிருக்கேன்” என்றான் கொடூரமாக ஆதிரன். 

“மோட்டர் ரூம்ல அடைச்சு வச்சிருக்கியா? நான் இப்பவே அவனை போய் கூட்டிட்டு வரேன் என்ன நடந்தாலும் சரி என் பொண்ணு உனக்கு கிடையாது..! இந்த கல்யாணம் நடக்காது..!” என்று இங்கேயும் அங்கேயும் குறுக்கு மறுக்காக வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார். 

தியாகேசன் சொந்தபந்தங்கள் கூட அவரை பார்த்து முகம் சுளித்தனர். தங்களுக்குள் கிசுகிசுப்பாக இல்லை சத்தமாக பேசிக் கொண்டனர், தியாகேசனை பற்றி அவதூறாக.. ஆனால் அதை எல்லாம் கண்ணிலும் காதிலும் விழுந்தாலும் “இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் அந்த புள்ளைக்கு என் புள்ளையை அம்மாவா ஆக விடமாட்டேன்..!” என்று குதித்துக் கொண்டிருந்தார் தியாகேசன்‌

“நான் வரும்போது போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு தான் வந்திருக்கேன். என் புள்ளையை பம்பு செட்டில் தண்ணில அமுக்கி கொல்ல பார்த்தேனு.. அதனாலதான் இப்ப அவள ஹாஸ்பிடல்ல வெச்சிருக்கேன். கூடவே டாக்டர் சர்டிபிகேட் வாங்கியாச்சு.. நீ இப்படி ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேனா கண்டிப்பாக போலீஸ் கம்பிதான்” என்று ஆதிரன் சொன்னதும், 

பம்பு செட்டில் வைத்து கொல்ல பார்த்தாரா என்று அத்தனை பேருமே திகைத்து விட்டனர்.

 “என்னது போலீஸா?’ அடங்கினார் தியாகேசன். சில நிமிடம் மட்டுமே ஆனாலும் அவர் கொண்ட ஆணவம் அவரை பேச வைத்தது.

“போலீஸ் தானே..!! போ போ.. போய் என்ன வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணு. நானும் உள்ள போறேன். ஆனா இந்த கல்யாணத்தை மட்டும் நடத்த விட மாட்டேன் டா..!” என்று அவர் கொதித்தார்.

“போலீஸ்ல போய் என் புள்ளையை கொல்ல முயற்சி பண்ணுனேன்னு சொல்ல மாட்டேன்..!” என்று ஆதிரன் நாக்கை கன்னத்தில் துலாவி ஒரு மார்க்கமாக அவரை பார்த்தான்.

“வேற என்ன சொல்லுவ? கல்யாணத்துக்கு சமாதிக்க மாட்டேன்னு சொல்லுவியா? சொல்லிக்கோ.. நீ போலீஸ் ஸ்டேஷன்லையே வச்சு கல்யாணத்தை பண்ணாலும் அங்கேயும் வந்து தடுப்பேன்டா..!” என்று நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு தன் பொண்ணை ஆதிரன் அண்ட விடாமல் அடை காத்து நின்றார்.

“சேச்ச.. அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் மாமோய்.. நீ எப்போ எங்க கல்யாணத்தை தடுத்த.. எங்க கல்யாணம் பண்ணி வைக்க இவ்வளவு வேலையும் பார்த்ததே நீதானே இதுக்கு ஊரே சாட்சி தெரியுமா?” என்றான் எள்ளலாக..!

“ஆமா டா.. அப்ப வேலை பார்த்தேன். அப்ப புடிச்சி இருந்தது. இப்ப புடிக்கல அதனால நடக்க விட மாட்டேன்..!”

“கரெக்ட்.. ஆனா அது உனக்கு மட்டும் தானே தெரியும் போலீசுக்கு தெரியாதே..! எனக்கும் தங்கத்துக்கும் கல்யாணம் நிச்சயமானது.. பத்திரிக்கை எடுத்து ஊர் ஊரா நீ சுத்துனது.. மண்டபம் எடுத்தது விருந்துக்கு ஏற்பாடு பண்ணினது.. என்று ஊருக்கே தெரியும். இப்படி ஒரே பொண்ணு கல்யாணத்தை பிரம்மாண்டமா நடத்திக்கிட்டு இருக்கும்போது இடையில் யாராவது வந்து கோல்மால் பண்ணினா.. என் மாமனுக்கு கோபம் வருமா வராதா? அவன எப்படி சும்மா விடுவாரு?” என்றதும் திகைப்படைந்தார் தியாகேசன்.

“என்னடா சொல்ற? நான் என்னடா பண்ணுனேன்?” என்று பதறினார். கூடவே லோகநாதன் காலையிலிருந்து இன்னும் இங்கே வரவில்லை. ஃபோன் அடித்தாலும் எடுக்கவில்லை. அந்த பயம் வேற அவரை ஆட்டிப் படைத்தது.

“எங்க கல்யாணத்துல வந்து இடைஞ்சல் பண்ணின லோகநாதன.. என் அத்தானே மோட்டர் பம்புல கை கால கட்டி போட்டு தண்ணீர் திறந்து விட்டு அவனை மூச்சு திணற திணற வச்சு கொன்னுட்டாருன்னு சொல்லிடுவேன்..! சாட்சிக்கு அங்காளி பங்காளினு எல்லாரையும் கூப்பிடுவேன்..” என்று அவர்களைப் பார்க்க..

“ஆமா ஆதிரா.. நாங்களும் வருவோம் சாட்சிக்கு..” என்றதும் இப்பொழுது நிஜமாகவே ஆடித்தான் போனார் ஆதிரனின் அதிரடியில் தியாகேசன்.

அதெல்லாம் விட லோகநாதன் இப்பொழுது மூச்சுக்கு திணறிக்கொண்டு பம்புசெட்டில் கிடக்கிறான் என்ற செய்தியே அவருக்கு இன்னும் கைகால் எல்லாம் உதறலெடுக்க..

“இல்ல.. இல்ல.. சத்தியமா சொல்றேன் டா உன் பொண்ணு நான் அப்படி எல்லாம் பண்ண சொல்லவே இல்ல..! மறைச்சு வைக்க மட்டும் தான் சொன்னேன்.. அதுக்காக என்ன கொலை கேஸ்ல எல்லாம் மாட்டி விடாதடா” என்று அழுது விடுபவர் போல பேசியவரை கண்டு சுட்டு விரலால் காதை குடைந்தான் ஆதிரன். 

“அவன கொன்னு அந்த பழியை என் மேல போட்டுடாதடா ஆதிரா உனக்கு கெஞ்சி கேட்டுக்கறேண்டா..” என்று கெஞ்சியவரை அப்பொழுதும் அவரை கண்டு கொள்ளாமல் தன் சட்டையின் கைபட்டனை நிறுத்தி நிதானமாக போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு பக்கம் கோபமாக பொத்துக்கிட்டு வந்தாலும்.. மறுபக்கம் பயமாகவும் தான் இருந்தது இப்படி ஆதிரனது அதிரடி ஆட்டத்தில்..

“ஆமா உம்ம வயசு என்ன?” என்று கேட்டான். இப்ப எதுக்கு இதை கேட்கிறான் என்று அவனைப் பார்த்தவர் “52..!” என்றார். 

“எங்க அப்பா வயசு என்ன தெரியுமா? 65..! அவர் இன்னவரைக்கும் மாப்பிள்ளைனு உமக்கு மரியாதை கொடுத்து பேசுறாரு.. நான் உம்ம வருங்கால மாப்பிள்ளை.. என்னைய வாடா போடான்னு பேசுவீரோ?” என்றவனை பார்த்து..

‘அடப்பாவி..; ஐயோ எதற்கெல்லாம் மூஞ்சியை தூக்குறான்.. முடியல இவன் கூட..’ என்று எண்ணியவர், “தப்புதேன்.. தப்புதேன்..” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவர் “தயவு செய்து அந்த லோகநாதன் விட்டுடு சொல்லு மாப்பிள்ளை” என்றார் தாழ்ந்து. 

ஆதிரன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன..??” என்று கேட்க “விட்டுடுங்க மாப்பிள்ளை.. விட்டுடுங்க மாப்பிள்ளை.. தயவுசெய்து அந்த குடிகார பய லோகநாதன விட்டுவிடுங்க மாப்பிள்ளை” என்று கெஞ்சினார். 

“கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா..!” என்று காது மடல் அடியில் இடது கையை வைத்து அவன் கேட்க..

‘படுத்துறானே.. படுத்துறானே.. நானே சுகர் பேசன்ட் டா’ என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே தியாகேசனால் முடிந்தது. 

“மாப்பிள்ளை அந்த லோகநாதன் விட்டுடுங்க.. அவனை கொலை பண்ணி என் மேல பழிய போடாதீங்க.. சத்தியமா உங்க பொண்ண பம்பு செட்டுக்குள்ள எல்லாம் வச்சு நான் கொல்ல சொல்லல.. அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது” என்றார்.

“இப்ப சொன்னீரே அதான் சரி.! உமக்கு அந்த அளவு எல்லாம் தைரியம் பத்தாது” என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்தான். 

“ஆனாலும் ஏன் அவனை அப்படி பண்ண தெரியுமா? அந்த நாதாரி பய தான் நீர் அனுப்புன ஆளுகிட்ட என் பொண்ண தண்ணில அமுக்கி கொல்ல சொன்னான். என் பொண்ண அப்படி செய்ய சொன்னவனை சும்மா விட்டு நான் என்ன சொம்பனா?” என்றதும் அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்துவிட்டார். 

“அடப்பாவி அவன் குடிகாரன் பாவிதான் நினைச்சா.. அவன் கொலைகார பாவியா இருக்கானே? அவனுக்கு போய் என் பொண்ண நீ கட்டி கொடுக்க பாத்திருக்க.. நீ எல்லாம் மனுசனா நீ எல்லாம் ஒரு அப்பனா?” என்று அத்தனை திட்டினார் கமலாம்பிகை. 

மாமன் நன்றாக திட்டு வாங்கும் வரை அமைதியாக இருந்தான்.

ஆனால் தியாகேசனோ ஆதிரனைப் பார்த்து “என்னைய கொல கேசில் மாட்டி விட்டுவிடாத மாப்பிள்ளை.. உங்க அக்கா கழுத்தில அப்புறம் தாலி தங்காது” என்று கெஞ்சினார். உண்மையில் அவருக்கு ஆரூரன் மீது வெறுப்புத்தானே ஒழிய கொலை செய்யும் அளவுக்கு எல்லாம் மா பாதகன் இல்லை.

“என் அக்கா காலத்துல தாலி தங்கனும்னா.. உம்ம பொண்ணு கழுத்துல என் கையால தாலி ஏறனும்..! அதுவும் உம்ம வாயால சொல்லணும்..!” என்று நிமிர்ந்து நின்று பேசியவனை கண்டவர் ‘கடைசியிலே என் வாயாலேயே தாலி கட்டுனு சொல்ல வச்சிட்டானே’ என்று நொந்தவர்,

“வாங்க மாப்பிள்ளை.. வந்து என் பொண்ணு குளத்துல தாலி கட்டுங்க முகூர்த்தத்துக்கு நேரமாச்சு” என்றார்.

“சரி சரி முகூர்த்தத்துக்கு நேரமாச்சு எல்லாரும் வாங்க..” என்ற ஆதிரன், நூலறுந்த பட்டம் போல் தொய்ந்து போனவரை “மச்சான் தவசி.. உன் சித்தப்புவ தூக்கிட்டு சாமி சன்னதிக்கு வந்து சேரு” என்றான்.

“அதுக்கு என்ன மாப்பி.. இழுத்துட்டு வந்துடுறேன்..” என்றான் ஆதிரனின் ஒன்றுவிட்ட மச்சான் ஒருவனான கும்பகோணத்தை சேர்ந்த தவசிராஜ்.. “வா.. வா.. சித்தப்பு நான் உன்ன பிடிச்சிக்கிறேன்” என்று அவரை இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். 

அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் என்று பல நாயன்மார்களாலும்.. சங்கீத மும்மூர்த்திகளால் பல கீர்த்தனைகளாலும்.. மனம் உருகி பக்தி சொட்ட சொட்ட பாடப் பெற்ற எம்பெருமான் தியாகராஜ சன்னதி முன் நின்றனர் குரு ஆதிரன் தங்கமயில் மற்றும் இருவரின் குடும்பத்தினர்.

இறைவனிடம் ஆசிப் பெற்ற பொன் தாலியை தன் வலது புறம் நின்றிருக்கும் தங்கமயில் கழுத்தில் கட்டி, தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் குரு ஆதிரன். 

விஜயராகவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க மகன் பேத்தியை வாழ்த்த.. கமலாம்பிகை தன் பெண்ணை காப்பாற்றிவிட்டோம் என்று நிம்மதி தன் தம்பி கையில் கொடுத்துவிட்ட பெரும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்க.. மயிரனோ மாமனை கட்டி அணைத்து வாழ்த்தை தெரிவித்தான். வந்திருந்த சுற்றமும் உறவும் நண்பர்களும் அத்துணை வாழ்த்துகள் கூற.. ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார் என்றால் அது தியாகேசன் தான்..!

இக்கல்யாணத்தை தடுக்க முடியாத பெரும் கோபத்துடனும் அந்த லோகநாதனுக்கு எதுவும் ஆகி என்னை மாட்டி விட்டுருவானோ என்று பயத்துடனும் மனமே இல்லாமல் மணமக்களை வாழ்த்தினார் தியாகேசன்.

அன்று தம்பதிக்களுக்கான தனி இரவு.‌.!

தங்களை பற்றி அறிந்துக் கொள்ளும் முதல் இரவு..!

“உன் மனசில் வேற யாராவது இருக்காங்களா.. தங்கம்?” என்று குரு ஆதிரன் கூர் பார்வையோடு கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தாள் தங்கமயில்..!!

தொடரும்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top