தூகை 49

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  
49
 
“என்னடா சக்தி பண்றது இப்போ?” என்று கலங்கிய முகத்தோடு கேட்கும் அக்காவை கண்டவன், அவள் அருகில் சென்று அவளது கையை பிடித்து “இதுல நம்ம ஒன்னும் செய்யறதுக்கு இல்ல வதனி.. என்னதான் பக்கம் பக்கமா நம்ம அறிவுரை கூறினாலும்.. இது மாதிரி நிறைய பிரச்சனை வரும்னு கூறினாலும்.. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளனுமே? அப்படி என்னதான் இருக்கும் போய்தான் பார்ப்போமேங்குற அசட்டு துணிச்சல் ஒரு புறம், இன்னொரு புறம் யாருன்னு தெரியாதவங்க கூட எதுக்கு பேசணும்? அவன் எதுக்கு பணம் தரணும்? அவனுக்கு லாபம் இல்லாம இதை செய்வானா? அப்படினு யோசிக்க சிந்திக்க தெரியாத அவர்களது அறிவும் தான் காரணம்..”
 
“மூணாவது என் சிற்றறிவுக்கு தெரிஞ்சு நான் சொல்றதுக்கு, மூணாவது மொழிய திணிக்கிறதுக்கு பதிலா குழந்தைகளுக்கு இது மாதிரி அறிவியல் சார் கண்டுபிடிப்புகளால் வரும் பிரச்சினை பத்தி பாடம் எடுத்தால் நல்லா இருக்கும்”
 
“கூடவே தனிமனித ஒழுக்கம் என்னான்னு சின்ன வயசுல போதி வகுப்பு இல்லை இங்கிலீஷ்ல மாரல் ஸ்டோரீஸ் க்ளாஸ்னு இருக்கும். இது மாதிரி கதைகள் வழியே சொல்லி கொடுத்து நமக்கு நல்ல பழக்க வழக்கத்தை கொடுத்தாங்க.. அதெல்லாம் இப்ப எங்க இருக்கு சொல்லு?”
 
“விதவிதமா எக்ஸ்ட்ரா க்ளாஸ் போறதுல ஒரு ஆக்டிவிட்டீஸூம் ஒழுங்கா கத்துக்குறது இல்ல.. இது இல்லையா அது.. அது இல்லையா இது.. இப்படி ஓடிட்டே வந்துட்டே இருக்கோம். அந்த ஓடுதல் அவங்களுக்கு தேவை இல்ல..! ஆனா அதை விட பிள்ளைக என்ன பண்றாங்க? ஸ்கூல்ல என்ன நடந்தது? காலேஜ்ல என்ன நடந்துச்சுன்னு மனசு விட்டு பேசணும்”
 
“மனசு விட்டு பேசுனா எல்லாம் சரி ஆகிடுமா?” கேட்டாள் கணவனை ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே..
 
“கண்டிப்பா மனசு விட்டு பேசுனா எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு இடத்தில் தீர்வு கிடைக்கும். இவங்க ஏன் வெளில தேடுறாங்க? அவங்களுக்கு அப்பா அம்மாவிடம் கிடைக்காது ஏதோ ஒரு ஒண்ணு வேறொரு இடத்தில கிடைக்கிறதுனாலதானே? அது அம்மா அப்பாவிடம் கிடைச்சா தேடி போறத நிறுத்திடுவாங்க..! வருங்காலத்துல இந்த சமுதாயம் என்னென்ன சீர்கேட்டையெல்லாம் பார்க்க போகுதுன்னு பார்ப்போம்..” என்றான் பெருமூச்சு விட்டப்படி.
 
“யாரும் இதற்கு கம்ப்ளைன்ட் பண்ண முடியாதா டா? இந்த மாதிரி பிராப்ளம் நடக்குதுனு நீங்களே ஆக்ஷன் எடுத்து இந்த ஆப்பை க்ளோஸ் பண்ண முடியாதா?”
 
“பண்ணலாமே..! தாராளமா பண்ணலாம். ரிசண்டா கூட ஒரு ஆப்ப சென்னை கமிஷனர் போதைப்பொருளை பயன்படுத்துறவங்க நிறைய பேரு இந்த ஆப்ல இருக்காங்கன்னு சொல்லி அத பேன் பண்ணாங்க. ஆனா என்ன பிரயோஜனம்? அடுத்த சில நாள்ல.. வேற பேருல.. வேற ரூபத்துல.. வந்து இறங்க தான் போகுது?” என்றதும் திடுக்கிட்டு கணவனை பார்த்தாள் வதனி.
 
‘அந்த ஆப்பை விட்டு விட்டேன் என்று சொன்னாயே.. இப்பொழுது வேறு எதிலாவது இது மாதிரி மாட்டிக் கொண்டாயா?’ என்ற கேள்வி அவளது கண்களில் தெரிய “ஆண்டவா..!” என்றவன் இல்லை என்று வேகமாக தலையசைத்தான். 
 
“நான் சொல்ற ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி அதிர்ச்சியானா.. அதிர்ச்சி ஆகிட்டே இருக்க வேண்டியது தான்” என்றவன்,
 
“அம்மா கோவிலுக்கு போறேன்னு சொன்னாங்க.. அதனால சமைச்சு வச்சுருக்க மாட்டாங்க. புருஷனுக்கு மட்டும் பாசமா பேக் பண்ணி அனுப்பி இருப்பாங்க. நீ ஏதாவது சமைச்சியா இல்லையா?” என்று கேட்ட தம்பியை பார்த்தவள்,
 
“இரு அம்மா குழும்பு கொடுத்திருக்காங்க சாதம் மட்டும் வச்சிடுறேன். சாப்பிட்டு போவியாம். கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கிறதுனா எடுடா” என்றாள்‌ சமையலறை நோக்கி சென்று கொண்டே..
 
“இல்ல இல்ல.. ரெஸ்ட் வேணாம். நீ சாதம் மட்டும் வை” என்றான்.
 
சோறு ஆக்கி, உருளைக்கிழங்கு மசியல் செய்து அப்பளம் பொரித்து அவள் அம்மா காரகுழம்பு கொண்டு வந்தார் அல்லவா அதனோடு பூசணி தயிர் பச்சடியும் செய்து வைக்க.. 
 
“ரொம்ப நாள் கழிச்சு உன் கையால சாப்பிடுறேன்” என்றவனின் கண்கள் கலங்க.. 
 
“சக்தி..” என்று அழைத்த அவளின் நாவும் தழுதழுத்தது.
 
“போதும்டி டேம்மை ஆஃப் பண்ணு” என்றவன்,
 
“நீங்க சாப்பிட வரலையா? இப்படி குறுகுறுன்னு நான் சாப்பிடுறத பார்த்துட்டு இருந்தா எனக்கு வயிறு வலிக்குமா வலிக்காதா? வாங்க வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று சற்று தள்ளி அமர்ந்து இவர்களை பார்த்து இருந்த நிரஞ்சனை வம்படியாக அழைத்து உண்ண வைத்தான் விகர்த்தனன். 
 
தம்பிக்கு முன் ஒன்றும் கூற முடியாமல்.. அதுவும் சாப்பிடும் போது மனதை வருத்த வேண்டாம் என்று அமைதியாக வதனி உண்ண, இவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டு உண்டனர்…
 
சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் “ஓகே கைஸ் நான் கிளம்புறேன்” என்று எழுந்து கொண்டான்.
 
கதவு வரை சென்றவன் திரும்பி இருவரையும் பார்த்து “எல்லா தப்புக்கும் தண்டனை தான் கொடுக்கணும்னு இல்ல வதனி.. மன்னிப்பு கூட கொடுக்கலாம்..!
இன்னைக்கு இருக்கும் உலகத்துல நேத்து இருக்கிறவங்க நாளைக்கு இருப்பாங்களாங்குறதே கேள்விக்குறிதான்? அப்படி தண்டனை கொடுக்க கூட ஆள் இல்லாமல் போக சான்ஸ் இருக்கு” என்றதும்,
 
“வாயை மூடுடா.. எரும” என்று சீறினாள் வதனி.
 
“நான் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு தான் நீ என்கிட்ட கோபப்படுறனு எனக்கு தெரியுது. ஆனா கோபத்தை எல்லா நேரமும் இழுத்து பிடித்து வைச்சிக்கனும்னு அவசியம் இல்லை வதனி. மன்னிச்சு மறந்தும் போகலாம்” என்றான் அக்காவை பார்த்து..
 
“மன்னிக்க சொல்ற மூஞ்சிய பாரு.. நீ மன்னிச்சியா டா மொதல்ல..! இத்தனை வருஷம் பேசாம.. ஏன் என்னை உன் கிட்ட கூட நெருங்க விடாமல் தள்ளி வைச்சவன் தான டா நீ..! நீ பேசாதடா மன்னிப்பு பத்தி எல்லாம்!” என்று வதனியும் சற்று காரமாக கேட்டாள். அத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த அழுத்தம் நீங்க..
 
“பெரிய பருப்பு இவன்.. இப்ப பேச வந்துட்டான்..! இவன் நம்மள மன்னிக்க மாட்டானாம்? பார்க்க மாட்டானாம்? எட்டி இருந்தே முறைச்சு பார்ப்பானாம்? பிள்ளை கிட்ட கூட பேச மாட்டானாம்.. ஆனா.. மத்தவங்களுக்கு மட்டும் வண்டி வண்டியா அட்வைஸ் கொடுப்பானாம்? போடா டேய்..!” என்று அவள் ஆத்திரம் மனத்தாங்கல் அனைத்தையும் சேர்த்து அழுதுக் கொண்டே பேச..
 
அக்காவின் இந்த அதிரடி பதிலில் ஒரு நிமிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்து நின்றான் விகர்த்தனன்.
 
அடுத்த நிமிடமே வேகமாக வந்து அக்காவை இறுக்கமாக கட்டிக் கொண்டவன், “ஐ அம் சாரி.. சாரி.. சாரி வதனி. நான் அப்படி பண்ணியிருக்கக் கூடாது. ஏனோ அந்த காலகட்டத்தில நீ வீட்டை விட்டு போனதனால.. ஒரு புறம் நீ இப்படி போயிட்டேனு கோபம்.. எங்களை சுத்தி இருந்த சொந்தங்கள் உறவுகளீ பேச பேச ஒரு அழுத்தம்.. அம்மா அப்பா பட்ட வேதனையை பார்த்து வருத்தம்.. இப்படி எல்லாம் கலந்த கலவையாய் சுத்திட்டு இருப்பேன். எனக்கு அத யார்கிட்ட இறக்கி வைக்கும்னு கூட தெரியல.. நீயும் பக்கத்துல இல்லாம.. நான் யார்கிட்ட இதெல்லாம் மனம் விட்டு பேச? சொல்லு..!” என்றான் வருத்தமாக.
 
தம்பியின் பேச்சைக் கேட்டவள், அவனை இன்னும் அணைத்து, தான் செய்த தப்பு தன் குடும்பத்தினர் அத்தனை பேரையும் எப்படி பாதித்திருக்கிறது என்று புரிந்து கதறித் தீர்த்தாள்.
 
“ஏய் ரிலாக்ஸ் வதனி.. இவ்வளோ வேகமாக சத்தம் போட்டு அழதாடி.. வயித்துல பாப்பா இருக்கு.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..!” என்று அக்காவின் முதுகை வருடி கொடுத்தவன் இவர்களையே கலங்கி கண்களோடு பார்த்திருந்த நிரஞ்சனை பார்த்து, 
 
“என்னங்க வேடிக்கை பாக்குறீங்க அழுவுறது உங்க பொண்டாட்டிங்க, கூட அழ தோணலையா உங்களுக்கு? சமாதானப்படுத்த தோணலையா உங்களுக்கு?” என்று கேள்வி கேட்டான்.
 
இல்லை என்று தலையசைத்தான்‌ நிரஞ்சன்.
 
“ஆகா.. ஆனாலும் இவ்வளவு வஞ்சகம் ஆகாதுங்க.. எங்க அக்கா உங்க கூட பேசாம இருக்குறானு அவ அழுறத ஒரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க பாத்தீங்களா?” என்று நிரஞ்சனை பார்த்து கண்ணடித்துக் கொண்டே அவனை மாட்டி விட எத்தனித்தான் விகர்த்தனன்.
 
மெதுவாக அவனது புஜத்தில் கிள்ளினாள் வதனி.
 
“அவுச்.. வலிக்குது டி” என்றவனை கண்டு இன்னும் அவள் உதடு பிதுக்கி அழுக..
 
“இந்த பிரக்னன்சினால உனக்கு ஹார்மோனல் சேஞ்சஸ் வந்திருக்கு போல.. அதுதான் திடீர்னு பத்திரகாளி மாதிரி பேசுற அடிக்குற.. திடீர்னு அழுகிற.. போன பிரசவத்துல உன்னை சமாளிச்ச உன் புருஷன் நிஜமா பாவம் தான்” என்றதும் மீண்டும் ஒரு கிள்ளு கிடைத்தது அவனுக்கு.
 
“பிரக்னென்சி ஹார்மோனல் சேஞ்சஸ்னால மேகா அழல சக்தி, இத்தனை வருஷமா அவ மனசுல வச்சிருந்த அந்த வலி வருத்தம் குற்ற உணர்ச்சி அதெல்லாம் ஒடச்சுக்கிட்டு வருது உன்னோட ஒத்தை அணைப்புல.. நீ கேட்ட ஒத்த சாரியில..! அழுகட்டும் சக்தி.. அவ இன்னும் நல்லா அழுகட்டும்..! அவ மனசுல இருக்குற பாரம் குறையுற வரைக்கும் நல்லா அழுகட்டும் சக்தி..!” என்றவன் விகர்த்தனனின் முதுகில் மெல்ல தட்டினான்.
 
 
அக்காவை சரியாக புரிந்து வைத்திருக்கும் நிரஞ்சனை ஒரு மெச்சுதலாக பார்த்தவன் “சரிடி போதும் அழுததெல்லாம் போதும்.. இப்படி அழுது ஸ்ட்ரெஸ் ஏத்திக்காத.. சரியா? ரிலாக்ஸ் ஆகு முதல்ல” என்றவன்,
 
மாமன் தண்ணி கொண்டு வந்து கொடுத்தால் அக்கா குடிப்பாளா என்று இவனே சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவன், அவளை நாற்காலியில் அமர வைத்து, அவள் கால் அருகே அமர்ந்து கொண்டான் விகர்த்தனன்.
 
“என் மனசுல இருந்த உன் மேலான கோபம் வருத்தம் எல்லாம் உன்னை அந்த மழை நேரத்துல பார்த்த உடனே உடைஞ்சு சுக்கு நூறா போச்சு..! மறுபடியும் என் மேல தான் எனக்கு கோபம்.
 
“அவ தான் அப்படி பண்ணுனானா.. நீ எப்படி டா விட்டு கொடுத்த? என்ன இருந்தாலும் அவ உன் அக்கா இல்லையா? குழந்தை பிறந்த போது அந்த பிஞ்சுக்குழந்தை பார்க்காமல் எப்படிடா நீ இருந்த? அவ தவழ்ந்து கொஞ்சும் மொழி பேசும் போது நீ ஏன்டா பார்க்காம இருந்த? உன் மருமகளே ‘என் மாமானு’ உன்னை தேடி கூப்பிடும் போதும் அவளை தூக்கி போட்டு பிடிச்சு முகர்ந்து கொஞ்சாம எப்படி அவ்வளோ கட்டுப்பாடாக இருந்தேனு? எனக்கு நானே பல முறை என்னை திட்டி இருக்கேன் வதனி..” என்று கலங்கிய குரலோடு தம்பி கூறியதும் அக்காவாய் நெகழ்ந்து போனாள் வதனி.
 
தான் மட்டுமல்ல தன்னை பிரிந்ததனால் அவனும் தான் ஏகப்பட்ட பாசத்தை அன்பை மனதில் சுமந்து கொண்டு காட்ட முடியாமல் தவித்திருக்கிறான் என்று உணர்ந்து அவனின் கைகளை இறுக்க பற்றி கொண்டாள். 
 
“ஆனா கடந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை கெடுத்துக்க கூடாதுன்னு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே அப்ப கொடுக்காத பாசத்தை என் மருமகளுக்கு நான் கொடுத்திட்டே இருப்பேன்.. உன்னோட அடுத்த குழந்தைக்கு முதல் குழந்தைக்கு செய்ய முடியாததையும் சேர்த்து செய்வேன். போதுமா? மனசு ஆறிட்டுசா? இனி ரிலாக்ஸா இரு..! அப்படியே நான் சொன்னதையும் யோசி” என்றவன் நிரஞ்சனிடம் தலையசைத்து விட்டு சென்றான்.
 
அதுவரை சலசலவென்று பேசிக் கொண்டிருந்த விகர்த்தனன் சென்றதும் ஓர் அசாத்திய அமைதி அங்கு நிலவியது.
 
இந்த அசாத்திய அமைதி இரைச்சலை விட அதிகமாக மனதையும் காதையும் வலிக்க செய்யுமா என்ன? ஆம்..! மௌனத்திற்கு அத்தனை பெரிய சக்தி உண்டு..!
 
பெருமூச்சு விட்டபடி முன்னால் சக்தி உட்கார்ந்திருந்த அதே இடத்தில் சென்று அமர்ந்தான் நிரஞ்சன். மெதுவாக அவளது கால்களை பற்ற அவள் ஏதோ சிந்தனையில் இருக்க.. அவளுக்கு அது முதலில் தெரியவே இல்லை. பின்பு அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள், அவனை தள்ளிவிட.. அவளது முட்டியில் தலை வைத்து, “என்னை விலகிடாத மேகா..! ப்ளீஸ் மன்னிச்சிடேன்” குலுங்கி அழுதான் நிரஞ்சன்.
This thread was modified 3 weeks ago by Jiya Janavi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top