47
அன்று..
இரவு முழுக்க கொட்டிய மழையில் நின்றிருந்தவன் அப்படியே மடங்கி அருகில் இருந்து சிறுத் திண்டில் அமர்ந்திருந்தான்.
காலையில் அனைவருக்கும் முன் விழித்த விகர்த்தனன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்க்க.. அங்கே குறுக்கியப்படி காலை கட்டி கொண்டு அமர்ந்திருந்த நிரஞ்சனை கண்டு மனதில் சற்று வருத்தம் தான்.
‘ஆனாலும்.. இவரு இப்படி உட்கார்ந்து இருப்பதை பார்த்தால் தெருவில் உள்ளவர்கள் என்ன பேசுவார்களோ? எத்தனை திணை கதை கட்டுவார்களோ?’ என்று பல வருடங்களாக அத்தெருவில் வாழ்ந்த அவனுக்கு தானே தெரியும்.
“இங்க பாருங்க..” என்றதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்த நிரஞ்சனின் கண்களோ அத்தனை சிவப்பாய் இருந்தது.
“இங்க உட்கார்ந்து சீன் கிரியேட் பண்ணி பிரச்சனை பண்ணினா.. பிரச்சனை வேறு விதமாக போகும். இங்க உள்ளவங்க வதனிய ஏதும் தப்பா பேசுவாங்க. தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க” என்றவன் நிரஞ்சனின் பதிலை எதிர்ப்பாராமல் உள்ளே வந்து விட்டான்.
விகர்த்தனன் சொல்வதும் சரி என்று புரிந்த நிரஞ்சனுக்கு ‘இங்கே நாம் நின்று இருந்தால் அனாசியமாக மனைவியின் பெயர் தான் அரைப்படும்’ என்று வீட்டுக்கு வந்து சேர..
பிரேமாவோ காலையிலேயே விழித்து மூவரையும் காணாமல் “எங்கு சென்று விட்டார்கள் மூவரும்? ஒருவேளை பிள்ளையை கொண்டு போய் விட போய் இருக்கிறார்களா? நான் தான் தாமதமாக விழித்து விட்டேனா?” என்று மெதுவாக எழுந்து,
வதனி.. வதனி.. என்று கூப்பிட்டபடி ஹாலில் வந்து அமர அங்கேயும் எந்த அரவும் இல்லாமல் இருக்க, அவர் சிறு பயத்தோடு மகனின் அறையை சென்று பார்க்க அங்கே காலியாக இருந்தது. குழப்பத்தோடு மீண்டும் வந்து அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து ஈர உடையோடு தலைக்கலைந்து.. விழிகள் சிவப்பேறி வந்த மகனைக் கண்டு “ஆதவா என்ன ஆச்சுடா? ஏன்டா இப்படி வந்திருக்க?” என்றவர் மெல்ல அவனைத் தொட்டு பார்க்க.. உடம்பும் ஜுரத்தால் கொதித்தது.
“என்னாச்சுடா எங்கடா வதனி? மிருக்குட்டி?” என்று அவர் விடாமல் கேள்வி கேட்க.. அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத தன் மீதே அவனுக்கு அத்தனை வெறுப்பு.
“எனக்கும் வதனிக்கும் ஒரு சின்ன பிரச்சனை நைட்டு கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா..” என்றவன் நேராக தன் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
எப்பொழுதும் வதனி படுக்கும் பகுதியில் படுத்து அவளது வாசனை சொச்சம் மிச்சம் இருக்கிறதா அந்த தலையணையில்? அவள் போர்த்தியாருந்த போர்வையில்? என்று அதனை கட்டிப்பிடித்துக் கொண்டவன் கண்களில் கண்ணீர் விடாமல் வர, காய்ச்சலின் வீரியத்தில் உறங்கினான்.
மகனும் ஜுரத்தில் படுத்திற்க வேறு வழி இன்றி மகள்களை தான் அழைத்தார் பிரேமா. வந்தவர்களும் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று தூக்கத்தில் இருந்து தம்பியிடம் கேட்க முடியாமல்.. அன்னையிடம் கேட்டனர்.
அவருக்குமே பதில் தெரியாது, என்ன விளக்க?
அன்றைக்கு மட்டும் சமைத்து வைத்துவிட்டு சென்றனர். ஆனால் அடுத்த நாளிலிருந்து என்ன செய்வது? உணவுக்கு என்ன பண்ணுவது? கூப்பிட்ட குரலுக்கு ஓடிடு வரும் மருமகளை அப்பொழுது தான் மிகவும் தேடினார் பிரேமா.
அவர் அடிபட்ட நாளிலிருந்து இந்நாள் வரை கூப்பிட்ட சொல்லுக்கு “இதோ அத்த” “வர்றேன் அத்த” என்றபடி வந்து நிற்கும் அந்தப் பெண் இப்பொழுது இல்லை..!
கொஞ்சம் சாப்பாடு உப்பு சப்பு இல்லாமல் இருந்தாலே “என்ன சாப்பாடு சமைச்சிருக்க.. வாயில வைக்க முடியல” என்று திட்டினாலும்,
“இப்போதைக்கு இதுதான் உங்களுக்கு நல்லதுனு டாக்டர் தான் சாப்பிட சொல்லி இருக்கிறார். கண்டிப்பா சாப்பிட்டு தான் ஆகணும்” என்று கோபமாக பதில் உரைத்தாலும் அதில் ஒரு அன்பு இருக்கும். அதை இப்பொழுது மிகவும் தேடினார் பிரேமா.
நிரஞ்சன் உடல்நிலை தேறி வரவே மூன்று நான்கு நாட்கள் ஆனது. எந்த மருந்து எடுத்துக் கொள்ளாமல் அம்மாவுக்கு உணவை ஆர்டர் செய்துவிட்டு அம்மாவின் பிடிவாதத்தில் கொஞ்சோண்டு உணவை கொறித்து விட்டு மகன் செல்ல.. என்ன செய்வது என்று தெரியாமல் வதனிக்கு அழைத்தார். ஆனால் அவரின் அழைப்பை அவள் எடுக்கவே இல்லை.
நான்கு நான்கு கழித்து அதற்கு மேல் வேலைக்கு விடுமுறை எடுக்க முடியாத காரணத்தினால் இவன் வேலைக்கு சென்றான்.
அப்போது ஜோதிமணியை தேடி சில நபர்கள் வந்து வங்கி வாசலில் சத்தமிட்டு கொண்டிருக்க.. செக்யூரிட்டி அவர்களை எல்லாம் உள்ளே விடாது தடுத்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்துக்கொண்டே என்னவென்று புரியாமல் உள்ளே நுழைந்த நிரஞ்சன் அங்கிருந்த சீனியரிடம் “என்ன ஆச்சு சார்? ஏன் இவ்வளவு சத்தம் வெளியில? யார் அவங்க?” என்று கேட்.
அவரும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ஜோதிமணி ஏதோ கையாடல் பண்ணிட்டானாம். அதுதான் வந்து சத்தம் போட்டுட்டு இருக்காங்க” என்றார்க்ஷ
“அவர் இங்கேவா இருக்காரு?”
“ஆமா.. ஆமா.. உள்ள தான் வேலை செய்ற போல பதுங்கியிருக்கிறான்” என்றார்.
உள்ளறையில் அவனை சென்று “என்ன ஆச்சு ஜோதா சார்?” என்று கேட்டான் நிரஞ்சன்.
“எல்லாம் நாசமா போச்சு நிரஞ்சன் சார். என்னன்னு சொல்ல? எல்லாம் என்னோட ஒரு தப்புனால இன்னைக்கு நான் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிட்டு இருக்கேன்..” என்று தலையில் கை வைத்தபடி அழுது அழுது வீங்கி முகத்தோட வந்திருந்த ஜோதி மணியை கண்டு திடுக்கிட்டான் நிரஞ்சன்.
“வீ ஃப்ரெண்ட்ஸும் உங்களுக்கு ஒரு ஆப் பத்தி சொன்னேன்ல.. அந்த ஆப்ல எனக்கு நிறைய பேரு பிரண்ட்ஸ் ஆனாங்க. அதுல ஒருத்தன் தான் தர்மேஸ்வரன் பேரு என்னமோ அந்த தர்மவான் பேரா இருக்குன்னு நம்பி.. அவன் மூலியமா என் பிரண்டுக்கு ஒரு நிலம் வாங்கி கொடுக்க அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். ஆனா அந்த டோக்கன் அட்வான்ஸ் ஓனருக்கு கொடுக்காம அவனே ஆட்டைய போட்டுட்டான் போல.. அது மட்டும் இல்லாம எனக்கே தெரியாம என் பிரண்டு கிட்ட ஓனர் கேட்டார்னு சொல்லி இதுவரைக்கும் 10 லட்சத்தை அடைய போட்டுட்டான்” என்று அழுதான் ஜோதிமணி.
“என்ன பத்து லட்சமா?” அதிர்ந்தான் நிரஞ்சன்.
ஆமா என்று தலையாட்டியவன் “என் பிரண்டுக்கு அப்புறமும் பணம் கேட்டவுடனே சந்தேகம் வந்து ஓனர்கிட்டயே நேரா போய் கேட்டான். இதுவரைக்கும் ஒத்த பைசா அந்த ஓனருக்கு வரவே இல்லையாம். உன்ன நம்பி தானே கொடுத்தேன் இப்ப நீ தான் இதுக்கு ஜவாப்.. ஒழுங்கா பணத்தை எடுத்து வைக்கணும் அத்தனை மிரட்டல்.. வீட்டு வாசலுக்கு வந்து மிரட்டுட்டு போய்ட்டாங்க.. நான் வேற வழியில்லாமல் வேறு வீடு மாறிட்டேன். இப்போ வேலை பாக்குற இடத்துலயும் வந்து சத்தம் போடுறாங்க.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல நிரஞ்சன்” என்று ஜோதிமணி கூறிக் கொண்டிருக்கும் போதே
“சார்.. உங்கள மேனேஜர் கூப்பிடுகிறார்” என்று ப்யூன் வந்து அழைத்தான்.
“போச்சு.. இவர் என்ன சொல்ல போறாரோ? ஒத்த ஆப்புனால என் வாழ்க்கை மானம் மரியாதை எல்லாம் போச்சு.. ஆப்பிள உக்கார்றதுன்னு அப்போ சொல்லுவாங்களா அதோட உண்மை காரணம் இப்ப புரியுது. நிரஞ்சன் சார் நீங்களும் அந்த ஆப்ல இருந்தா தயவு செய்து வெளில வந்துருங்க பணம் போனாலும் குடும்பமாவது மிஞ்சும்” என்று சென்றான்.
அங்கே மேனேஜர் கேவலமாக பேசியதும் அவனை வெளியே அனுப்பியதும் நிரஞ்சனுக்கு துல்லியமாக கேட்டது.
“சிறு பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி மொத்தமாய் மாட்டி.. அதிலிருந்து வெளிவர முடியாமல் இப்படி முழிக்கிறோமே? பிரச்சனைகள் வேற வேற தான் ஆனால் காரணம் இந்த ஆப் தான்” என்று தன்னையும் ஜோதி மணியும் நினைத்து வேதனை கொண்டான் நிரஞ்சன்.
*ஆண்களாலான நமக்கே இவ்வளவு பிரச்சனை வருதுன்னா.. இதுல சேரும் பெண்களின் நிலை? அதனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்? இதில் ஏதாவது ட்ராப்பில் மாட்டிக்கொண்டால்..” நினைக்கவே நிரஞ்சனுக்கு கண்களை கட்டியது.
வேலை முடித்து சோர்வாக வீட்டுக்கு வந்து நிரஞ்சனை கண்ட பிரேமாவோ கத்தி தீர்த்தார்.
“என்னால இந்த கடை சாப்பாட்ட சாப்பிட முடியலடா.. வயசானவளுக்கு ஒத்துக்க மாட்டேங்குது. வதனிய என் பேத்தகய கூட்டிட்டு வாடா.. நான் ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்கறா வதனி” என்று முதலில் ஏதோ வீராப்பாக பேசியவர் அதன்பின் மகனின் அமைதியில் ஆடி போய் பின் அடங்கிப் போனார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களாக அந்த வீட்டிலேயே இருந்த பெண் அவளின் பிரிவு, இப்பொழுதுதான் என் பேத்தி உரிமை பாசம் என்று வந்திருக்க அந்த பிஞ்சை பிரிந்து இருப்பது, கூடவே என்னதான் ஏசினாலும் பேசினாலும் தனக்கு என்ன நடந்தாலும் அன்பாக பார்த்துக் கொள்ளும் மருமகள்.. என்று அவர்களை பிரிந்த 10 நாளிலேயே இன்னும் அவருக்கு உடம்பு நோவு கண்டது.
அன்று புரியாத அவளின் அன்பு வெறும் கடமை என்று நினைத்தவர், இன்று முற்றும் முழுதும் புரிவதாய் அவருக்கு.
15 நாட்கள் கடந்த நிலையில், என்னை அவளிடம் நீ அழைத்துச் சென்று ஆக வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்த வேறு வழி இன்றி அவர்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்றால், ஏதாவது சண்டை சச்சரவு வரும் என்று மகள் படிக்கும் பள்ளிக்கு மாலை வேளை போல அன்னையை அழைத்து சென்றான்.
இருவரையும் பார்த்தவள் ஏதும் பேசாமல் அமைதியாக நிற்க பிரேமாவே சென்று வதனியின் கையை பிடித்து
“வீட்டுக்கு வந்துரு வதனி, எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். நானோ வயசானவ.. வயசானவங்க இன்னொரு குழந்தை மாதிரி சொல்லுவாங்க.. நானும் உன் பொண்ணு மாதிரி தானே? என்ன விட்டு போயிடுவியா நீ?” ஏதேதோ அவள் பிரிவின் தாக்கம் அவரைப் பேச வைத்தது.
அவரின் இந்த மாற்றத்தை அதிர்ச்சியாக பார்த்தவள், பின் தலையாட்டி “நாங்க வரதுக்கு வாய்ப்பு இல்ல அத்த.. என்னை நீங்களும் படுத்தாதீங்க. அப்புறம் உங்க பிள்ளை கிட்ட சொல்லுங்க நான் போற வரப்ப எல்லாம் நின்னு பாக்க வேணாம்னு. பாக்குறவங்க என்னை தான் அசிங்கமா பேசுவாங்கன்னு சொல்லுங்க..” அதெல்லாம் கேட்டுக் கொண்டே நின்றிருந்த நிரஞ்சன், அதன்பின் அவளை அவள் வீடு இருக்கும் பகுதிக்கு சென்று பார்க்கவே இல்லை.
மகளை பள்ளி முடியும் நேரத்தில் வந்து பார்ப்பவன் அப்போதே அவளையும் கண்ணில் நிரப்பி கொண்டு வலி வேதனையோடு செல்வான்.
வதனி சென்ற ஒரு மாதத்தில் அவனுக்கு பதவி உயர்வும் கிடைத்தது. அப்போதிருந்த சந்தோசமோ மகிழ்ச்சியோ அந்த பதவி உயர்வு மீது இருந்த போதையோ எதுவுமே இப்போது இல்லை அவனிடம்.
மெல்லிய சிரிப்போடு அதனை ஏற்றுக்கொண்டான்.
”நீ முன்னமே என்கிட்ட வந்து இருந்திருந்தா.. எனக்கு இத்தனை பிரச்சனை இல்லைல” என்று தன் மீது உள்ள தவறுக்கு மற்றவற்றையெல்லாம் குற்றம் கண்டுபிடித்தான்.
பிரேமாவுக்கு வெளி உணவு ஒத்துக்கொள்ளாமல் போக பின் இவனே சிறு சிறு சமையல்களை கற்றுக் கொண்டான். யூடியூப் பார்த்து..
பிரேமா மகனிடம் பேசவே இல்லை. கேட்கும் கேள்விக்கு பதில் மட்டுமே வரும். அதுவும் வர வர குறைந்து போய் “எப்போ என் மருமகளை பேத்திய நீ கூட்டி வருயோ அப்பத்தான் டா உன்கிட்ட பேசுவேன்” என்று அஹிம்சையை கையில் எடுத்தார்.
அப்போதாவது மகன் மனம் மாறுவானா என்று?
அவ்வப்போது போனில் பேசும்போது வதனியிடமும் “நம்ம வீட்டுக்கு எப்போ நீ வர? மிருகுட்டிய எப்ப கூட்டிட்டு வர?” என்று கேட்டுக் கொண்டு இருப்பார்.
“நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா நான் உங்களுக்கு போன் பண்ணவே மாட்டேன் அத்த” என்றதும், சவலை பிள்ளை ஆனார் பிரேமா.
இப்படியாக இரண்டு மாதம் போன நிலையில் தான் வதனியை காணாது. அவள் உடம்புக்கு என்னவோ என்றவன் பயந்து விகர்த்தனின் உதவியை நாட…
அவன் மீண்டும் தந்தையாய் ஆன செய்தியை கேட்டு அத்தனை துள்ளி குதித்தான். வானத்தை வசப்படுத்திய உணர்வு..!
எத்தனை வருட தவமாய் கையில் கிடைத்த வரத்தை எண்ணி பூரித்தான்.
ஆனால் அத்தனையையும் கைனக்காலஜிஸ்டிடம் அழைத்து சென்று “அபார்ஷன் செய்யுங்கள்” என்ற வதனியின் ஒற்றை வார்த்தையில் பறிபோனது.
அன்று மனைவிக்காக அவளை வந்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்றவன்,
இன்று தங்கள் மகவுக்காக அதுவும் பின்னாளில் அழிந்து போன இந்த மகவை கண்டு நிச்சியம் மனைவி கண்ணீர் வடிப்பாள் என்
று அவளுக்காகவும் தான் மீண்டும் வந்தான்.
அவள் திட்டினாலும் உதாசீனப்படுத்தினாலும் அவளோடவே இருக்கிறான் நிரஞ்சன்.
