மாமனே 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

மாமனே… 22

 

கறி விருந்து தடபுடலுக்கு பின்பு சொந்தங்கள் பந்தங்கள் இளைப்பாறி கொண்டிருக்கும் வேளையில் கலியப்பெருமாளின் கையை சுரண்டி கொண்டிருந்தான் களஞ்சியம்!!

 

"சும்மா இருடா.. ஏதாவது பேசுன கொன்னுபுடுவேன் கொன்னு!! ஊருக்கு போற வரைக்கும் வாயை திறக்க கூடாது.. ஆமா!" என்று அவரும் மிரட்டி கொண்டிருந்தார்.

வார்த்தைகள் மெதுவாக வந்தாலும் சைகை பாஷையில் அத்தனை கோபத்தை காட்டினார்.

 

இவர்களின் இந்த சைகை பாஷையை அருகில் இருந்தவர் கவனித்தாலும் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விடாமல் களஞ்சியம் தொந்தரவு கொடுக்க கலியபெருமாள் விட்டால் அமர்ந்திருக்கும் அந்த இரும்பு நாற்காலியை எடுத்து அவன் மண்டையில் போட்டு விடுவது போல அத்தனை உக்கரத்தோடு முறைத்துக் கொண்டு இருந்தார்.

 

வழக்கம்போல ஒரு பெருசு தான் ஆரம்பித்தது "என்ன பெருமாளு… புள்ள ரொம்ப நேரமா உன்கிட்ட எதையோ கேட்டுகிட்டே இருக்கியான். என்னன்னு சொல்ல? பாரு புள்ள மூஞ்ச பாவமா வேற வச்சிட்டு இருக்கியான்" என்றார் களஞ்சியத்தின் உள்குத்து தெரியாமல்..

 

"அது ஒன்னும் இல்ல பெரியப்பா நீங்க விடுங்க.. அந்த பொசகெட்ட பய எதையாவது பேசிகிட்டு இருப்பியான். அதெல்லாம் நம்ம காதுல வாங்க முடியுமா? ஆயிரம் ஜோலி கடக்கு நமக்கு!" என்று அவர் பேச்சை கத்திரிக்க பார்க்க.. 

 

"அய்யய்யோ இல்ல தாத்தா.. நீங்களாவது நான் கேட்க சொல்லுங்க அப்பாவ.." என்று அவரிடம் பவ்யமாக நின்று அப்பாவை கண்களால் காட்டி பேச சொன்னான். அவர் முடியாது என்று மறுக்க.. பெரியவரின் உந்துதலில் "இந்த எடுபட்ட பயலுக்கு… அந்த வள்ளி பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணுமாம்!" என்று நச்சென்று சுத்தி வளைக்காமல் ஒரே போடாக போட அனைவரும் முகமும் அதிர்ச்சியில்!!

 

அப்போதுதான் ஒரு சில பெருசுகள் சோடா கேட்டது என்று சோடா சப்ளை செய்து கொண்டிருந்த ஜீவனுக்கு "நல்ல வேள நம்ம கிட்ட சொன்ன மாதிரி இவங்க கிட்ட சொல்லாம டீசன்ட்டா சொன்னானே!" என்று தலையில் எடுத்துக் கொண்டு வந்தவன் "அப்படி எல்லாம் கொடுக்க முடியாதுங்க!" என்றான் பெண்ணுக்கு தம்பியாய்…

 

"ஏன் முடியாது? ஏன் முடியாது? பாருங்க… அவங்க ரெண்டு பேரோட நான் ரொம்ப டீசன்ட்டான ஆளு! ரெண்டு பேரும் உங்களுக்கெல்லாம் சொல்லாம கொள்ளாம தாலி கட்டுனாய்ங்க! ஒருத்தன் பொண்ணு தூக்கிட்டு போய் தாலி கட்டுனான். இன்னொருத்தன் பொண்ணு சாமி கும்பிட்ட நேரத்தில் கட்டினான். ஆனா நான் உங்க கிட்ட எல்லாம் அனுமதி கேட்டு நிக்கிறேன். அப்போ இந்த மாதிரி அநியாயம் பண்றவனுக்கு தான் எதிர்காலம்! என்ன மாதிரி நல்லவனுக்கு இது காலமே இல்லையா?" என்று வராத கண்ணீரை புஜத்தில் அவன் துடைத்துக் கொள்ள அங்கிருந்து பெரியவர்களுக்கோ உருகி போயிற்று மனம்.

 

"ஏனுங்க சம்மந்தி.. பிள்ளை கேட்கிறது நியாயம் தானுங்களே? அந்த ரெண்டு பேரும் நம்மகிட்ட சம்மதம் கூட கேட்காம கல்யாணம் பண்ணி போட்டோனுங்க.. இந்த புள்ள எவ்வளவு பொறுமையா பொறுப்பா சம்மதம் கேக்குதுங்! பேசியே பார்க்காமல் எப்படி நீங்க வேணாமனு சொல்லலாமுங்க? இருங் நம்ம சுந்தரவேலு மாமா கிட்ட கேட்போமுங்க!" என்று கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணிக்கவேலின் உறவினர் ஒருவர் கூற..

 

"எஸ்!! ஐ அம் வெரி வெரி குட் பாய்!" என்பது போல அடக்க ஒடுக்கமாக நின்று களஞ்சியத்தை பார்த்த ஜீவன் "ஏன் மாப்பு‌‌.. அங்கே என் கிட்ட சொன்னத இங்க சொல்றது! குடும்பமே கூடி உன்னை குத்த வச்சு கும்முவானுங்க!" என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவன் இந்த விஷயத்தை தன் மாமனிடம் கூற விரைந்து சென்றான்.

 

சுந்தரவேலுவிடம் எதுவோ பேசிக்கொண்டு தோட்டத்தில் நின்றிருந்த மாணிக்கவேலை பார்த்து "மாமா.. மாமா.. காரியமே கேட்டுச்சு போங்க" என்று இவன் உரத்த குரலில் கூவிக்கொண்டே ஓட..

 

"என்னடா என்ன ஆச்சு?" என்று கேட்டவனிடன் அவன் விவரம் சொல்ல சுந்தரவேலு சற்று யோசனையில் ஆழ்ந்தார்.

 

"அந்தக் காஜி பையன் களஞ்சியத்தை…" என்று இவன் வேட்டியை மடித்துக் கொண்டு காப்பை முறுக்கிக் கொண்டு கிளம்ப..

 

"செத்த நில்லுங்க தம்பி.. அந்த பிள்ளை கேட்கிறதுல ஒன்னும் தப்பு இல்ல.."

 

"அதில்லிங் ஐயா…" என்றதும், ஒரு பார்வை பார்க்க.. அவனும் சற்று அடங்கினான். ஆனால் ஜீவனை முறைக்க தவறவே இல்லை. ஏனென்றால் இது எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டவன் இவன் தானே!! ஆனால் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நின்றவனை பார்த்து தந்தைக்கு தெரியாமல் அவன் தலையில் வேகமாக தட்டி "உள்ள போடா.. பெரியவங்க பேசும்போது உனக்கு என்ன வேலை இங்கே!" என்றான்.

 

"ரொம்ப பண்ணாதீங்க மாமா… இந்த பெரியவங்க நீங்க பேச வைக்கிறது காரணமே நான் தான்! இந்த ஜீவனோட ஐடியா இல்லைன்னா நீங்க எல்லாம் குடும்பமாக பேச முடியுமா? அதுக்கு கிடைக்கிறது வெறும் சாணி!" என்றபடி சென்றான்.

 

அப்புறம் என்ன மீண்டும் ஒரு சொந்த பந்தங்களின் பஞ்சாயத்து! இந்த பக்கம் மதுரையும்.. அந்த பக்கம் கோயம்புத்தூரும்.. தங்கள் சொல் வழக்கு பேச்சால் குழைத்து அதிகாரமாக.. தன்மையாக பேசி, நன்மை தீமைகளை ஆராய்ந்து ஒரு வழியாக வள்ளிக்கும் களஞ்சியத்திற்கும் கல்யாணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

 

களஞ்சியமும் கதிரேசனும் மதுரை என்பதால் அடுத்தடுத்து திருமணத்தை மதுரையிலேயே நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட… அடுத்து ஒரு பெரிய விருந்து திருமாறன் முறைப்படி இரு வீட்டாரையும் அழைத்து மதுரையில் கொடுத்தார்.

 

அதன் பின் கதிரேசன் தேனுவின் திருமணம் கோலாகலமாக சோழவந்தானில் நடந்தது. அதற்கும் ஒட்டு மொத்த குடும்பமும் பஸ் பிடித்துக் கொண்டு கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் அலைந்தது.

 

"மாமா.. ஏன் மாமா நம்ம சார்பா இந்த மதுரையிலிருந்து ஒரு பஸ் கோயம்புத்தூரும்… கோயம்புத்தூருக்கு ஒரு பஸ் மதுரைக்கும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறேன். ஏன்னா முக்காவாசி நேரம் நம்ம சொந்தங்கள் தான் போகுது வருது.. மாத்தி மாத்தி ஏதாவது ஒரு விசேஷம் நடந்து கொண்டே இருக்கு. மீதி இருக்கிற நேரம் வாடகைக்கு விடலாம் என்ன சொல்றீங்க?" என்றதும்,

 

"உனக்கு அந்த பிசினஸ் இன்ட்ரஸ்ட் இருந்தா செய்ய டா! நான் உனக்கு முதல்ல போடுறேன்" என்ற மாமனை அதிசயமாக பார்த்து "இப்படி எல்லாம் பொசுக்குனு நல்லவனா மாறாதிங்க மாமா.. எனக்கு ஷாக் ஆகுதுல! எனக்கு இருக்கிறது சின்ன மனசு!!" என்று சொன்னாலும் மாமனின் இந்த வார்த்தையில் அவனுக்குள்ளும் சில யோசனைகள் ஓடியது.

 

ஏனென்றால் ஜீவன் படித்தது மெக்கானிக்கல் சம்பந்தமாய் தான். அவனுக்கு எந்த அடகு கடை ஒட்டவே இல்லை. மாணிக்கவேலின் வற்புறுத்தாலும் மாணிக்கவேல் அருகே இருந்தால் தான் மலர்விழியால் அவனை நெருங்க முடியும் என்ற காரணத்தினாலும் தான் இவ்வளவு நாள் பல்லை கடித்து கொண்டு இருந்தான். இப்பொழுது மாமன் சொல்வது சரியாக இருக்க, மாமன் உதவியோடு இரண்டு பஸ்களை வாங்கி விட்டான் ஜீவன்.

 

ஜீவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை இப்பொழுது களஞ்சியத்திற்கு மாற்றிக் கொடுத்தான் மாணிக்கவேல்.

 

"ஒழுங்கா கணக்கு வழக்கு பாக்கணும் இல்ல..!" என்று மிரட்டியது மாணிக்கவேல் அல்ல வள்ளி!!

 

ஏனென்றால் ஏற்கனவே களஞ்சியம் கடன் வாங்கியதை மாணிக்கவேல் வள்ளியிடம் கூறி இருக்க "நீ கவலைப்படாத மாமா அவரை நான் பார்த்துக்கிறேன்!" என்று விட்டாள். ‌

 

ஒரு வழியாக களஞ்சியம் வள்ளி திருமணமும் முடிந்து விருந்து மருந்து என்று கிட்டத்தட்ட இதற்கே ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.

 

காலம் மட்டும் ஆறு மாதம் ஓடவில்லை…மாணிக்கவேலின் அதீத காதலில் நம் மலர்விழியும் இப்பொழுது ஆறு மாதம்.

 

இவர்கள் மதுரையில் இருக்க அவ்வப்போது அல்லிமலரும் சுந்தரவேலும் தான் வந்து பார்த்துக் கொண்டு சென்றனர். அவர்களால் மகனை அங்கே திரும்ப அழைக்கவும் முடியாமல், வயதான காலத்தில் இங்கே அங்கேயும் அலைய முடியாமல் அல்லல் ப்பட்டனர். ஆனாலும் வாயை விடவில்லை அல்லிமலர்.

 

ஏனென்றால் மகனின் சந்தோஷம் முக்கியம்! அதை கொடுத்த மருமகள் முக்கியம்! இவர்கள் இருவரும் கொடுத்த வர போகிற பேரப்பிள்ளை அதி முக்கியம்!! என்பதால் தன்னோவுகளை தங்களுக்குள்ளேயே மறைத்துக் கொண்டு சிரித்த முகத்தோடு வலம் வந்தனர்.

 

பிள்ளைகளின் மகிழ்ச்சியை விட.. மகிழ்வான வாழ்வை விட வேற என்ன வேண்டும் பெற்றொருக்கு!!

 

ஏழாவது மாதம் சீரும் சிறப்புமாய் அனைவரையும் அழைத்தே வளைகாப்பு முடித்தான் மலர்விழிக்கு!!

 

வளைகாப்பு முடிந்ததும் சோழவந்தான் கிளம்புவாள் என்று அனைவரும் எதிர்பார்க்க மலர்விழியோ "நான் கருமத்தம்பட்டிக்கு போறேன்!" என்றாள் பிடிவாதமாய்.

 

அனைவருக்கும் ஆச்சர்யம் அதைவிட அல்லிமலர் அவளை அதிர்ச்சியோடு நம்பாமல் பார்த்தார்.

 

தனியறையில் "அம்மணி… ஏனுங்க இந்த பிடிவாதம்!" என்று மாணிக்கவேல் கேட்க..

 

"இல்லை மாமா.. என்ன இருந்தாலும் நம்ம வேர் அங்க தானே! இது நீங்க பொழைக்க வந்த இடம் மாமா. வயசான காலத்துல மாமாவும் அத்தையும் அங்குட்டும் இங்குட்டும்

அல்லல் படுறது உங்களுக்கு தெரியலையா? நம்மள அவங்க கூடவே வச்சுக்கணும் அவங்க கண்ணுல தெரியுற ஆசை உங்களுக்கு புரியலையா? 

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டுட்டு இருக்க போறீங்க? அப்போ இன்னும் உங்க மனசுல நான் வரல? என் காதல் உங்களை மாத்தல? என் அன்பு உங்கள வேற யோசிக்க விடல? இன்னும் அவங்களை…." என்று அவள் கூற வர…

 

சட்டென அவளது அகரங்களை சிறை பிடித்தவன் மூச்சு முட்டு முட்ட அவளுக்கு தான் அதரங்களாலே தண்டனை கொடுத்து விலகியவன் "என்னை பார்த்தால் அந்த பொண்ண நெனச்சிட்டு இருக்க மாதிரியா டி தெரியுது? மொத்தமா உருமாறி மலரோட புருஷனா தான் இருக்கேன்!" என்றான்.

 

அவன் கூற்றில் அவள் மையலாய் பார்க்க…

 

மனைவியின் கண்களில் காதலை கண்டவனுக்கு.. நித்தம் நித்தம் தன் காதலால் அவனை கொள்ளை கொள்ளும் மனைவயின் மீது இன்னும் பித்தானது காதல் மனது!

 

அவள் பார்க்கும் போதெல்லாம் அவனுள் தோன்றும் இந்த உணர்வு வெகு புதிது!! அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவனின்

மோகம் உச்சக்கு ஏறி விட்டது!! இழுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்து இறுக்கினான், மூச்சுத் திணறுமளவு அவள் இதழோடு இதழ் பொருத்தி ஆழ்ந்து முத்தமிட்டான்.

 

அதி வன்மையாய்..!!

பெருங் காதலாய்…!!

நனி நேசமாய்…!!

 

அதை தாங்க இயலாதவளாய் தன் இதழ் கடித்து சமன்ப்படுத்த முனைய.. அவனோ அவளின் வேலையை தானே எடுத்துக் கொள்ள.. அவன் இதழ்களும் பற்களும் தேனூறும் இதழ்களில் கவி பாட.. கிறங்கி முயங்கி நின்றாள் தோகை!!

 

"என்ன மாமா… போகலாம் தானே நம்ம ஊருக்கு?" என்று அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே கேட்கும் மனைவியை எங்கனம் மறுக்க..

 

"ம்ம்.. போகலாமுங்க அம்மிணி!" என்றான் காதலோடு!!

 

அவனை எங்கே தட்டினால் எங்கே விழுவான் என்று தெரியாத என்ன? அதை அறிந்து தானே இப்படி பேசி வைத்து அவன் வாயாலேயே போகலாம் என்று வார்த்தை வர வைத்தாள். ஆனால் அந்த வெற்றி களிப்பை முகத்தில் காட்டாமல், "சரி மாமா!" என்றாள் சந்தோஷத்தோடு.

ஆனாலும் அவன் முகம் தெளியாமல் இருக்க..

 

"ஆனாலும்.. அய்த்தையும் மாமாவும் பாவம் தானே?" என்றதும் அவன் அவன் முகத்தில் பெருமிதம் நம்மை விட நாம் பெற்றோரை புரிந்து கொண்டாளே என்று!!

 

"சரி வா.. வெளியில் எல்லோரும் காத்திருப்பாங்க!" என்று அழைத்து வந்தான்

 

வேதாமணியிடம் என்ன சொல்வது என்று தயங்கி நின்றனர் இருவரும்.

 

அல்லிமலரும் மருமகளின் மனம் அறிந்து அவளை திருஷ்டி எடுத்து முத்தம் வைத்தார் ஆனந்த கண்ணீரோடு.

 

"இவரு ஊருக்கு வரலைனாலும் பரவாயில்ல அம்மணி.. நாங்க நாங்க வந்து பாத்துட்டு போறோமுங்க அம்மணி.. இதனால உங்களுக்குள்ள பிரச்சினை வேண்டாம். இவர இவ்வளவு தூரம் நீ மாத்துனதே எங்களுக்கு போதும்! பிரசவம் முடிஞ்சு பேரபிள்ளையோட மூணு பேரும் சேர்ந்து ஊருக்கு வாங்க.." என்றார்.

 

"நெசமா வா அய்த்த சொல்றீங்க?" என்றதும் "ஆமாம் டா!" என்றார்.

 

அதன்படி பசவத்திற்கு என்று மூன்று மாதங்கள் சீராட அம்மா வீட்டிற்கு சென்றாள். அவ்வப்போது மனைவியை சென்று பார்த்து வந்தான் மாணிக்கவேல்.

 

ஒன்பதாம் மாதம் ஆரம்பத்தில் "அத்த.. அங்க எங்க வீட்டுக்கு போய்டலாம். நாங்க பார்த்து டாக்டர் பக்கத்துல இருக்காங்க" என்றதும் வேதாமணியும் திருமாறனும் இவர்களோடு வந்து தங்கிக் கொள்ள..

 

அடிக்கடி மனைவியை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மாலை போல அழைத்து வருவான். கூட்டமில்லா நேரத்தில் தரிசனம் முடித்து சிறிது நேரம் பொற்றாமரை குளத்தில் அமர்ந்து மெல்ல மெல்ல அவளை கோயிலை சுற்றி நடக்க விடுவான். அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும் செய்வார்கள்.

 

"ஏன் மாமா.. உங்களுக்கு என்ன புள்ள வேணும்?" என்று இவள் கேட்க..

 

"இந்த மாதிரி உன்ன விளையாட்டா.. பாசமா.. அன்பா.. தெனாவட்டா ஒரு பொண்ணு நல்லா கெத்தா வேணும்!" என்றான்.

 

"ததாஸ்து..!" என்று சிரித்தாள் மனைவி.

 

அவன் விரும்பியது போல தான் அழகான பெண் குழந்தையை அவள் ஈன்றெடுக்க.. அவளுக்கு அழகுமீனாள் என்று பெயரிட்டு மகள் மனைவியோடு திரும்பவும் கருமத்தம்பட்டிக்கு சென்றான்.

 

 இப்பொழுது முழு விவசாயி!! கூடவே நகை அடகு கடை மற்றும் பைனான்ஸ் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தான். குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க..

 

மற்றொரு கடையை கதிரேசனுக்கு கொடுத்து விட்டான். ஆனால் இரண்டு கடைகளிலும் சரி பாதி உரிமை உள்ளவன் இவன். அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வதோடு மட்டும் சரி!!

 

மற்றபடி இரு அக்கா மகளுக்கும் சமமாக பிரித்து கொடுத்திருந்தான்.

ஜீவனின் டிரான்ஸ்போர்ட் இப்பொழுது மூன்று பஸ்களோடு நன்றாகவே ஓடியது. அவனின் பஸ்ஸில் தான் மதுரையில் மாணிக்கத்தின் அக்காக்கள் குடும்பம் இங்கே கருமத்தம்பட்டிக்கு வந்திருந்தது ஒரு விசேஷத்திற்கு.

 

 

"ஆமா மதுரையில் இரண்டு பேத்துக்கு மட்டும் கடை ஓபன் பண்ணி கொடுத்து இருக்கிங்க.. மீதி இரண்டு எப்ப மாமா ஓபன் பண்ண போறிங்க?" என்று அடுத்த அக்கா மகள்களும் இருவரும் இவனை பார்த்து கேட்க..

 

"அதுக்கு எதுக்கு மதுரையில் ஓபன் பண்ணும்? நீங்க எங்க கல்யாணம் பண்ணிட்டு போறீங்களா.. அங்க நான் கடை திறந்து தரேன்!" என்றதும் "சூப்பர் மாமா.. எங்க அழகு மாமா!" என்று இருவரும் அவன் கன்னம் கொஞ்சி சென்றனர்.

 

ஒரு வருடத்திற்கு முன்னால் என்றால்.. இவன் முன்னே நின்று பேசக்கூட தயங்குவார்கள்! இன்று கன்னம் கிள்ளி கொஞ்சி செல்லும் அக்காள் மகள்களை தான் பாச புன்னகையோடு பார்த்திருந்தான்.

 

"ஏனுங்க.. சும்மா கனவு கண்டுக்கிட்டே நிக்காதிங்க! உங்க புள்ள அழறா பாருங்... அவளை கொஞ்சம் ஆட்டி விடுங்க.. இன்னைக்கு அத்தை மாமா மதினிகள் எல்லாம் விசேஷத்துக்கு போயிட்டு மதியத்துக்கு மேல வருவாங்கனு சொல்லிட்டாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் நான் சமைக்க போறேன். அதுவரைக்கும் உங்க பொண்ணு உங்க பொறுப்பு..!!" என்று மலர்விழி சத்தம் கொடுத்துக்கொண்டே சமையல் செய்ய, அவளை பின்னிருந்து அணைத்தவன், 

 

"என்ற பொண்ணு மட்டுமல்ல.. நீங்களும் என்ற பொறுப்பு தானுங்க அம்மிணி.." என்றவன் கற்றை மீசை உரச உரச அவள் பின் கழுத்தில் கோலமிட்டு, மென்மையாக பற்கள் கொண்டு கடிக்க.. கரங்களோ அவளை முன் பக்கமாக அணைத்திருக்க.. விரல்களோ நாவிகள் கோலமிட்டன..

 

"ம்ம்ம்…" என்று மலர்விழி கண் மூடி கிறங்க..

 

அவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவன், அடுத்த நிமிடம்‌ தன் மகளை தேடி சென்று விட்டான்.

 

நடந்தது கனவா நனவா என்று விழித்தபடி கையில் கரண்டியோடு சமையல் கட்டில் மலர் விழி நின்று இருக்க…

 

 "கனவு காணாம சமையல பாருங்க அம்மிணி!" என்றான் நமட்டு சிரிப்போடு மாணிக்கவேல்.

 

பெரிய வீட்டின் கூடத்தில் அவனது அம்மாவின் பருத்தி புடவையில் உறுத்தல் இல்லாமல் படுத்து விளையாண்டு கொண்டிருந்தாள் மாணிக்கத்தின் மாணிக்கம்..

மூன்று மாத குழந்தை தான் ஆனாலும் அப்பாவை இனம் கண்டுகொள்ளுவாள். அவனை பாத்திரத்தில் பொக்கை வாய் திறுந்து அப்படி ஒரு சிரிப்பு மகளிடம்!!

 

குனிந்து அவன் மகளின் வாசம் பிடிக்க மகளோ தன் எச்சிலால் அவன் கன்னத்தை நிறைக்க…

 

மனம் மட்டுமல்ல வாழ்க்கையும் நிறைந்த உணர்வு மாணிக்கவேலுக்கு!!

 

அன்று மணிமேகலையின் மீது வைத்த காதல் தோல்வியால் ஊரை விட்டு சென்றவன், இன்று மலர்வழி கொடுத்த காதலால் அதே ஊரில் நிறைவாய் மகிழ்வாய் வாழ்கிறான்.

 

காதலிப்பதை விட காதலிக்கப்படுவது அதி சுகம்!!

 

யார் சொன்னது முதல் காதல் தான் உயிர்ப்பு உள்ளது என்று!!

 

யார் சொன்

னது முதல் காதல் தான்

ஆத்மார்த்த காதல் என்று!!

 

முதல் காதல் தோல்வியிலும்..

மீண்டும் காதல் மலரும்!!

 

There is a live and love.. after a love failure..

 

சுபம்!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top