1
திங்கட்கிழமை காலை பரபரப்புடன் சென்னை மாநகரமே ஓடி கொண்டிருக்க.. அந்த இரண்டு அடுக்கு வீட்டின் முதல் தளத்தில் , தன் அறையில் இருந்த ஏழு அடி உயரமுள்ள கண்ணாடியின் முன் நின்று கொண்டு, நிதானமாக தன் டையினை சரி செய்து கொண்டிருந்தான் விஷ்ணு பிரசாத்.. எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் தனியாக தெரியும் அளவுக்கு ஆறு அடிக்கு சற்று அதிகமான உயரம்.. அவனை போலவே யாருக்கும் அடங்காத அலையென கேசத்தை ஜெல் போட்டு வாரிருந்தான். கூர் மூக்கு, அழுத்தமான உதடுகள், மேலுதட்டை மறைத்தாற் போல இருக்கும் அடர்ந்த மீசை, இரண்டு நாள் தாடியுடன் எப்பொழுதும் இருக்கும் தாடை என ஆளை அசத்தும் வசீகரத்துடன் விஷ்ணு பிரசாத்.. நண்பர்களுக்கு பிரசாத்.. ஆபிஸில் வி.பி. பெற்றோருக்கு தம்முடு.. ஆம் நம் நாயகன் சுந்தர தெலுங்கு பையன் (டோலிவுட் டே தான்)
மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவன், டைனிங் டேபிள் நோக்கி சென்று அமர்ந்து, " மா.. டிஃபன்" என்று அவனுடைய வழக்கமான இரண்டு வார்த்தைகளில் கேட்டான். எப்போதும் அளந்து தான் பேசுவான் மீதி வார்த்தைகளை அவன் கண்களே பேசும்.
அவன் அப்பா நாகேந்திர பிரசாத், தன் பார்ட்னரும் நண்பரும் ஆன, ரோசையா ரெட்டியை நம்பி தொழிலில் முதலீடு செய்து, அவரால் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு, நட்டமடைந்தவர். பின் அங்கே மீதம் இருந்த சொத்துக்களை விற்று விட்டு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். பிரசாத்'ஸ் என்ற பெயரில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இரண்டு இப்போது சென்னையில். அம்மா ரோகிணி , அவரும் கணவனுக்கு உதவியாக, அவரோடு இணைந்து தொழிலை பார்த்து கொள்கிறார். விஷ்ணுவோ தந்தையின் வற்புருத்தலுக்காக எம்.பி.ஏ முடித்தவன், அவனுக்கு விருப்பமான சாப்ட்வேர் தொழில் டீம் மேனேஜர் தற்போது. அவனின் குணம் அறிந்து விட்டு பிடிப்போம் என்று உள்ளனர் பெற்றோர்கள். பூஜை அறையில் இருந்து வந்த, ரோஹிணி மகனது நெற்றியில் விபூதி இட முயல வழக்கம் போல, தடுத்தவன், ஒற்றை விரலை ஆட்டி வேண்டாம் என்றான்.
" தம்முடு , சாமியை ஒதுக்குறது அவ்வளோ நல்ல பழக்கம் இல்லை பா.. இஸ்டுக்கோ ரா" சென்னை பழக்கத்தில் பெரும்பாலும் தமிழ் தான் அவர்கள் வீட்டில்.
"மா.. பசிக்குது" என்ற வார்த்தையில் தாயின் வாயை அடைத்துவிட்டு, தன் வயிற்று பாட்டை பார்த்தான்.
மகனை முறைத்து கொண்டே " ஜூன் வந்தா உனக்கு, 27 முடிஞ்சு 28 ஆரம்பிக்க போகுது, பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்"
" இப்போதைக்கு இஷ்டமில்லை"
" பின்ன எப்போ தான், கல்யாணம் பண்ணிக்க போற, நீ தான் தொழில் பார்க்க மட்டேங்கிற, வர கோடலு பார்த்துப்பாள் இல்லையா"
"அதற்கு எதுக்கு கல்யாணம்… மேனேஜரை அப்பாய்ண்ட் பண்ணிட்டாலே போதும்"
"பாவா, நீங்க ஒன்னும் கேட்க மாட்டீங்களா.. இவனை " என்று செய்தித்தாளில் முகத்தை நுழைத்து இருந்தவரை பார்த்து கேட்க, அவரோ மனைவியையும் மகனையும் பார்த்து 'இன்னைக்கு என்னை வைச்சு ஆரம்பிக்கிறாளே 'என்று மனதில் மட்டும் நினைத்து கொண்டு, மகனிடம் "ஏண்டி நானா.. அம்மா தான் சொல்லுறாள் இல்ல" என்றவரை பார்த்து முறைத்தான்.
" ரோஹி.. சொல்லிட்டேன் டா", என்றவ பார்த்து தலையில் அடித்து கொள்ள தான் முடிஞ்சது ரோஹினியால்.
தாய் தந்தையின் இந்த பிணைப்பு பார்த்தவனின் உதட்டு ஓரம் அபூர்வமாய் தோன்றும் மென்னகையுடன் தன் ஆடி காரை நோக்கி சென்றான் .
தன் பிளாக் ஆடியை லாவகமாக பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, லிஃப்ட் ஐ தவிர்த்து மூன்றாம் தளத்தில் இருக்கும் தன் ஆபிஸ் நோக்கி படியில் விரைந்து ஏறினான்.
முன்னூறு பேர் மேல் வேலை பார்க்கும் அந்த ஐடி நிறுவனத்தில் நான்கு மேனஜரில் ஒருவன், விஷ்ணு.. அதுவும் மிக இளவயதில்.. அதுவே மற்றவர்கள் அவன் மீது பொறாமை பட, குறிப்பாக பெண்கள் அவனை வட்ட மிட போதுமாய் இருந்தது. அவர்களுக்கு கோகுல கண்ணன் போல இவன். விஷ்ணுவோ பெண்களை பார்க்கும் போது ஷோ கேஸ் பொம்மையை பார்க்கும் பாவனை தான். ஆனாலும் இந்த கண்ணனை அந்த கோபியர்களும் விடுவதில்லை.. இவனும் மசிவதில்லை.. கனல் கண்ணில் தள்ளி நிறுத்தி விடுவான் கன்னிகளை. இவன் கண்ணில் காதலை கொண்டு வரும் கன்னி யாரோ..
அன்றும் அவனின் வரவை ஆவலாக பார்த்த வண்ணம் இருந்தது ஒரு கோபியர் கூட்டம்.
" சுபி, வந்துட்டான் டி.. ஹே இன்னைக்கு எனக்கு பிடிச்ச ஸ்கை ப்ளூ கலர் ஷர்ட் டி.."
"அஞ்சு, ஸ்கை ப்ளூ எனக்கும் பிடிச்ச கலர் தான்"
" நீங்க இரண்டு பேரும் நிறுத்துங்க.. நான் தான் அவனுக்கு இன்னைக்கு மேட்டச் ஆ போட்டு வந்து இருக்கேன்"
"டிரஸ் மேட்சா இருந்து என்ன பண்ண பிரீத்தி, அவனுக்கு நான் தான் பர்பெக்ட் மேட்ச்"
"குள்ள வாத்து கோகி, நீ அவனுக்கு மேட்ச் அஹ்ஹ" என்று கூற மற்றவர்கள் சிரித்தனர்.
இவர்கள் இங்கே வழக்கடித்து சிரித்து கொண்டு இருக்க, இவர்களின் கோகுல கண்ணன், கோபியரின் ரமணன் அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தான் கண்களில் கனலோடு..கூட்டத்தில் ஒருத்தி இவனை பார்த்து விரைந்து ஓட, மற்றவர்களும் அடுத்த நிமிடம் அவ்விடம் விட்டு மறைந்தனர்.
"சில்லி கேர்ள்ஸ்" வழக்கமான இரண்டு வார்த்தையோடு கடந்து விட்டான்.
அறைக்குள் நிழைந்தவனை இண்டர்காம் அழைத்தது, அவனின் சீனியர் மேனேஜர் ரகுராம் தான் மீட்டிங் ஹால் வருமாறு கூறினார்.
" மே ஐ கம் இன் சர்" என்றவனை உள் அழைத்தார். அங்கே மற்ற மூன்று மேனஜர்களும் ஏற்கனவே அமர்ந்து இருந்தனர். இவனை விட 3 வயது பெரியவனும் இன்னும் திருமணமாகாமல் , 90ஸ் கிட் பரிதாபம் என்று அங்குள்ள கோபியர் கூட்டத்தால் அன்போடு அழைக்கபடும் நட் என்கிற நட்ராஜ் தான் விஷ்ணுவிற்கு இங்கே இருக்கும் ஒரே நட்பு.
"என்ன டா.. காலையிலேயே பயங்கர வரவேற்பு போல"
" எப்படி இருந்தது" என்றான் நக்கலாக..
" ரொம்ப பொறாமையா இருந்தது"
" வேணும்னா உனக்கும் ஏற்பாடு பண்ணவா நாளைக்கு"
"நிஜமாவா டா" என்று கேட்டவனின் குரலில் அத்தனை பரவசம்.
" ம்ம்ம்.. நம்ம ஹெச். ஆர். டிபார்ட்மெண்ட் ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணி இருக்காம்.. பண்ணிடலாமா வரவேற்பு"
" ஏன் டா.. ஏன்.. அது பொண்ணு இல்லடா.. ஆண்டி.. உனக்கு மட்டும் 20+.. எனக்கு 30+ ஆ .. " என்று கோபமாக கேட்டவனை, மேலும் கீழும் பார்த்தவன், " உன் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி சொன்னேன் டா" என்று கிண்டலடித்தான் விஷ்ணு. கொலைவெறியுடன் அவனை பார்த்தான் நட்.
"ஆனாலும் உன்னை எல்லாம் இன்னும் உலகம் நம்புது பாரு"
" மிஸ்டர் நட்ராஜ், நீங்க தான் மீட்டிங் ஒழுங்கா அட்டெண்ட் பண்ண மாட்டீங்க.. அட்டெண்ட் பண்றவங்களையும் டஸ்டர்ப் பண்ணாம இருக்கலாம் இல்லையா" என்ற சீனியரின் பேச்சில் திடுக்கிட்டு விஷ்ணுவை பார்க்க, அவனோ தன் முன் இருந்த மீட்டிங் ஷெடியுல் ஐ தீவிரமாக படித்து கொண்டு இருந்தான்.
"அட பாவி.. எப்படி டா.. எப்போ டா..ஏன் டா.." என்று வாய்க்குள் முணகியவாறு சீனியர் ஐ பாவமாக பார்த்து வைத்தான்.
" ஓகே கைஸ்.. லிசன்.. புது புராஜக்ட் ஒன்னும் நமக்கு அலாட் ஆகி இருக்கு.. அதுக்கு நாம ஃபுல்லா ப்ரசெர்ஸ் தான் செலக்ட் பண்ண போறோம்.. டீம் லீடர் எக்ஸ்பீரியன்ஸ் பர்சன்ஸ் போட்டுக்கலாம். "
" சர், ஃபுல்லா ப்ரசர்ஸ் னா.. கொஞ்சம் கஷ்டம்.. அவர்களுக்கு டிரெய்னிங் கொடுத்து, அப்புறம் வேலை வாங்குறது எல்லாம்.. ரொம்பவே சிரமம், அப்புறம் டைம் குள்ள முடிக்கிறது அதை விட கஷ்டம்" என்றார் மூத்த மேனேஜர் ஒருவர், அடுத்தவரும் அவரை வழி மொழிய, நட்டுக்கோ என்ன சொல்லுவது என்று புரியில்லை. அவனும் கூட்டத்தோடு தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
இப்போ சீனியரின் பார்வை விஷ்ணு பக்கம் செல்ல, மற்றவர்கள் பார்வையும் அவரை தொடர்ந்தது. எப்போதும் மற்றவரால் முடியாததை முடித்து காட்டுபவன் அல்லவா.. இம்முறையும் அவனின் மேல் உள்ள எதிர்பார்ப்பை துளி அளவும் வீணடிக்காமல் ஒத்து கொண்டான்.
" ஜி, எனக்கு ஓகே.. பட் சில கண்டிசன்ஸ் இருக்கு.. அதுக்கு நீங்க ஓகே நா.. ஐ வில் ஹேண்டில் திஸ் புராஜக்ட்"
" சொல்லு வி.பி... என்ன உன்னுடைய கண்டிஷன்ஸ்.."
" ப்ரஷேர்ஸ் ஹயர் பண்ணற போது, இன்டர்வியூ ல நானும் இருக்கணும், எனக்கு தேவையான டீம் மெம்பர்ஸ் அண்ட் டீம் லீடர் நான் தான் செலக்ட் பண்ணுவேன்"
" ஐ நீட் செபரட் பிளேஸ் ஃபார் மை டீம்.. இதுக்கு எல்லாம் ஓகே நா.. எனக்கும் ஓகே"
"இன்டர்வியூ போது உனக்கு நான் தெரிய படுத்துறேன், அப்புறம் செப்பரேட் பிளேஸ்.. அரேஞ்ச் பண்ணுறது இப்போ கொஞ்சம் கஷ்டம் வி.பி."
"இல்லை ஜி.. கண்டிப்பா செப்பரேட் பிளேஸ் வேணும்.. நியூ அண்ட் ப்ரஷ்ஷேர்ஸ் வைச்சு செய்யும்போது அவங்க என் கண் பார்வையில் இருக்கனும்.. நீங்க எனக்கு கோ ஆப்பரேட் பண்ணுங்க"
" ஓகே வி.பி…" என்றவாறு சீனியர் கிளம்ப, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
நட் விஷ்ணுவிடம் " டேய், உனக்கு என்ன டா நான் பாவம் பண்ணினேன். இப்படி அவர்கிட்ட என்னை மாட்டிவிட்டுடு... வழக்கம் போல நீ நல்ல பெயர் வாங்கிட்ட.. நீ எல்லாம் நல்லா வருவடா, " புலம்பியவனை பார்த்து சிரித்து கொண்டே , வெளியேறினான் விஷ்ணு, "டேய் .. என்னை இப்படி படுத்துறத்துக்கு , எவ வந்து உன்னை என்னென்ன பாடு படுத்த போறாளோ"
நட்டின் புலம்பல் நம் கியூபிட்க்கு கேட்டது போல, அதுவும் ததாஸ்து என்றது.
குறிஞ்சியும் மருதமும் சேர்ந்த அழகான மலை சார்ந்த வயல்வெளி அது, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் இயற்கை அன்னை அந்த பகுதியை மட்டும் கொஞ்சம் அதீத வனப்புடன் படைத்து விட்டாள் போல.. பச்சை பட்டாடை போர்த்தியது போல இருந்த அவ்வயல்வெளியின் வரப்புகள் ஊடே நடந்து சென்றது தங்க கொலுசுகள் போட்ட பாதங்கள் இரண்டு.. தங்க கொலுசுகளுக்கு போட்டி போட்டு ஜொலிக்கும் பாதங்களை பார்த்த நெற்கதிர்கள் மேலும் மேலும் அப்பாதத்தை பார்க்கவே தலை கவிழ்ந்தனவா …அல்லது பாதங்களே இவ்வளவு அழகு என்றால், அப்பெண்ணின் மற்ற அவயங்கள்… காண வழியில்லாமல் வருந்தி இன்னும் தலை சாய்த்து கொண்டனவா அவைகள்..
நடந்து சென்ற அப்பாதங்கள் நின்ற இடமோ அவ்வயலின் முடிவில் இருந்த அந்த அல்லி குளக்கரையில்.. , நீண்ட தன் கருங்கூந்தலை விரித்து போட்டு இருந்த விதம் அவள் கருங்கூந்தல் அழகி என கட்டியம் கூறியது. வில்லேன வளைந்த புருவங்கள் மத்தியில் சிறு பொட்டு, அழகிய கயல் விழிகள் இரண்டும் அலை பாய்ந்த வண்ணமிருந்தது… சிவந்த உதடுகள் பார்ப்பவரை பித்தம் கொள்ள செய்யும், கன்னியவளின் வளைவு நெளிவுகள் பார்ப்பவர்கள் பிரம்மன் மிக சிறந்த படைப்பாளி என எண்ண வைக்கும், இருக்குமோ என்ற இடை , நீண்ட கால்கள் என மொத்தத்தில் பல்லவர் கால சிற்பம் ஒன்று எழுந்து வந்ததோ எண்ணம் தோன்றும் பார்ப்பவருக்கு..
அலை பாய்ந்து கொண்டு இருந்த அந்த விழிகள் யாரை தேடுகிறது என நாமும் பார்த்து இருக்க, அந்த அழகியின் இடை ஒரு முரட்டு கரத்தால் வளைக்கபட்டு தன்னை நோக்கி இழுக்க பட, இடையோடு, பெண்ணும் இணைந்து அந்த முரட்டு கரத்தின் பின்னே சென்று முட்டி நின்ற இடமோ பரந்து விரிந்து ஒரு ஆணின் மார்பில்..
பிடித்த இடையை இன்னும் இறுக்கி, தன்னவளை தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்ட அந்த உருவத்தை பார்த்தாள் இல்லை பெண். காரணம் அவளின் உள்ளம் கவர்ந்த கள்வன் போல அவன், பனியனோடு இருந்த அந்த பரந்த மார்பை மட்டுமே பார்த்த வண்ணம் இருந்தவளின், தாடை நிமிர்த்த பட, அப்போதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. அந்த முரட்டு கரம், அம்முயற்சியை விட்டுட்டு, பின்னோக்கி சென்று, அவள் தலையை தன்னை நோக்கி தள்ள, அவள் எதற்கு என்று யோசிக்கும் முன், அவளின் சிவந்த இதழ்கள், அடர்த்தி வன் ஆண் இதழ்களால் மூடியிருந்தன, இருவரில் எது யாருடைய இதழ்கள் என்று தெரியா வண்ணம் அவ்விரு இதழ்களும் தங்களுக்குள் லயித்து இருக்க, அந்த காளையின் முரட்டு கரங்கள் அவளின் இடையின் வளைவுகளை அளந்து கொண்டிருந்தது… முரட்டு இதழ்களின் சற்று அதிகப்படியான முரட்டு தனத்தால், பெண்ணிற்கு வலி ஏற்பட்டு விட, தலையைப் பின்னுக்கு சாய்த்து ….
"ஆஆ….. என தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்து அலறினாள் நம் நாயகி சௌடாம்பிகை அலைஸ் சௌமினி… விஷ்ணுவின் தூக்கத்தை கெடுக்க கியூபிட் தேர்ந்தெடுத்த அவனின் காதல்…