38
இன்று..!
உள்ளறையில் மகளோடு உறங்கிக் கொண்டிருந்த மனைவியை தான் விடிவிளக்கின் வெளிச்சத்தில் பார்த்திருந்தான் நிரஞ்சன்.
கண்களை அவளில் இருந்து அவனால் எடுக்க முடியவில்லை. பல நாட்கள் இல்லை பல மாதங்கள் ஆகிறது எப்படி மனைவியின் மகளையும் தூங்கும் பொழுது ரசித்திருந்து அதெல்லாம் ஏதோ பழைய காலம் போல தோன்றியது அவனுக்கு. இடையில் தன் நெறியில் இருந்து வழுவிய நிலையில் மகளையும் மனைவியையும் ரசித்ததே இல்லை..!
ரசிப்பதா? மனைவி சரியாக தூங்கினாளா? ஒழுங்காக சாப்பிட்டாளா? என்றெல்லாம் நிரஞ்சன் கண்டு கொண்டதே இல்லை..!
அவனைத் தான் வேறு ஒரு மாயை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்ததே..!!
பெருமூச்சோடு மெல்ல மனைவியை நெருங்கி நின்றவன் அவளின் காலடியில் மெதுவாக அமர்ந்தான்.
“என்னை பிரிச்சு வச்சிடாத மேகா.. எவ்வளவு வேணாலும் தண்டனை கொடு.. அடி.. திட்டு.. பேசாம கூட இரு. என்ன வேணா செய்.. ஆனா பிரிஞ்சு மட்டும் போயிடாதடி..! நான் பிணமாகிடுவேன்.. ஏன்னா என் உயிர் நீ டி..!” என்றான் கலங்கிய மெல்லிய குரலில் அவளிடம் யாசகம் கேட்கும் யாசகனாய்..!
“என் மனைவி…!! மேகா என் மனைவி..!” என்று அவனுக்குள் சொல்லி சொல்லி பார்த்துக்கொண்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் மனைவியை சற்றே கூர்ந்துப் பார்த்தான்.
முன்னைவிட மிகவும் இளைத்திருந்தாள். கன்னங்கள் எல்லாம் ஒட்டி போய் இருக்க கண்கள் மட்டும் அவளுக்கு பெரிதாய் தெரிந்தது. நீண்ட அடர்த்தியான கூந்தல் இப்போது கடத்தியின்றி நீண்டு கிடந்தது.
இத்தனை வருட தாம்பத்திய வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாதவன் இல்லை அவன்.
அவள் ஆசை விருப்பம் அவா அனைத்தும் அவன் ஒருவனே..! அப்படி இருந்தும் நெறி தவறிய தன்னை நினைத்து அவனையே வெறுத்தான்.
“காதல் கொண்டு.. பெற்றோரை பிரிந்து.. நானே எல்லாம் என என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாக இருந்தாள்.. ஆனால் அவளை நான் என்ன செய்து வைத்திருக்கிறேன் இப்பொழுது?” என்று அரற்றினான்.
இளமையின் மிடுக்கில்.. ஆண்மையின் திமிறில்..
தடுக்கி விழுந்த நாட்களில் அவளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டேனே..!
அப்போது... மின்மினி பூச்சியை கண்டு மனம் பிறழ்ந்து என் நிலாவின் அன்பை மறந்துவிட்டேன்..
வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணரவில்லை.
அர்த்தமில்லா கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன். அத்தனையும் பொறுத்து போனாள்”
ஒருவேளை முன்பே நான் வழித்தறி செல்வதை கண்டு திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ என்னவோ?
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு என்னையும் வழி தவற விட்டாய்?” என்று அவளிடம் கேள்வி கேட்டவன் குனிந்து அவள் பாதத்தில் தன் முகத்தை புதைத்திருந்தான்.
மெதுவாக அவள் கால்களை எடுத்து
அவன் கண்ணில் ஒற்றிக் கொண்டு அழுதான்.
அவன் கண்களின் நீர் அவள் கால் பாதங்களில் விழ அந்த குளிர்ச்சியில் சட்டென்று காலை இழுத்துக் கொண்டவள் பதறி எழுந்து அமர “ஒன்னுமில்ல மேகா.. தூங்கு.. நான் தான்” என்று அவன் அவளை ஆற்றுப்படுத்த பார்த்தான்.
“ஏன் உங்க கள்ளக்காதலி ஞாபகம் வந்துட்டாளா? ஓவரா உணர்ச்சி பொங்கிட்டா.. அது தணிக்கை நான் வேணுமோ?” என்று சுடு சொற்களை அவன் மீது வீச..
“ப்ளீஸ் மேகா..! வார்த்தையால கொல்லாதே வலிக்குது” என்று அவன் நெஞ்சை நீவிகொள்ள..
“அச்சோ பாவம்..! இவருக்கு நான் பேசினது மட்டும் தான் வலிக்குது. அவனா இவர் இன்னொரு பொண்ணோட கூத்தடிச்சத என் கண்ணால பார்த்தும் போல எனக்கு அப்படியே குளுகுளுன்னு இருந்துச்சு” என்று இவள் பதிலடி கொடுக்க..
“எவ்வளவு வேணாலும் திட்டு, என்ன வேணாலும் சொல்லு.. ஆனா பிரிஞ்சு போகாதடி” என்று அவள் கைப்பற்றி அதில் தலை வைத்தான் நிரஞ்சன்.
“என்ன தொடாத..! முதல்ல நீ கைய விடு” என்று அவனிடமிருந்து கையை உதறினாள்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தட்டச்சு செய்வதால் அவளது கையின் விரல்கள் எல்லாம் சற்று கடினமுற்று இருந்தது. கரடு முரடான அவள் கைகளின் கீறலில் அவன் கண்களில் நீர்..!
“என்ன மேகா இது.. கை எல்லாம் இவ்வளவு காய்ச்சி போன மாதிரி இருக்கு?” என்று அவள் கைப்பற்றி அந்த சிறு வெளிச்சத்தில் அவன் கேட்க..
“பொண்டாட்டிய விட்டுட்டு ஊர்ல உள்ள பொண்ணு கூட எல்லாம் புருஷன் மேய போனா.. பொண்டாட்டியோட நிலைமை இதுதான். அதுவும் சரியான படிப்பு இல்லன்னா.. இன்னும் மோசம்” என்றவள் இப்பொழுது அவனிடமிருந்து சற்று விலகி அமர்ந்து கொண்டாள்.
“எங்கே இருந்தேன் இத்தனை நாளும், என்னவளை இத்தனை நாளும் இப்படி பாடுபட வைத்திருக்கிறேன் பாவி நான்…
எத்தனைச் சொத்துக்கள் சேர்த்தால் என்ன? எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்திட்டேன்?” என்று வலியோடு அவளைப் பார்த்தான்.
“எனக்கு தூக்கம் வருது. டயர்டா இருக்கு. உங்க கிட்ட இந்த மாதிரி என்னால டெய்லி போராட முடியாது. உங்களால என் நிம்மதியே போயிடுது. டென்ஷனாகுது. ஸ்ட்ரஸ் ஆகுது. தயவு செய்து போய்டுங்க. என் வீட்டில் இருந்தும்.. என்னோட வாழ்க்கையிலிருந்தும் போயிடுங்க. இனியாவது என்னை நிம்மதியா வாழ விடுங்க என் பிள்ளைகளோட” என்றவள் திரும்பி மகள் புறம் படுத்துக் கொண்டாள்.
கண்டிப்பாக அவன் சென்று விடுவான் என்று தெரியும் அவளுக்கு. அவனும் திரும்பி திரும்பி அவளை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்..
காலையில் நிம்மதியாக உணர்ந்தாள் எழும்போதே வதனி. எப்படியும் நிரஞ்சன் இருக்க மாட்டான் என்று தெரியும் அவளுக்கு.
“அவன் தான் எப்போ எப்போனு இருந்தானே.. ஸ்ட்ரஸ் மன அழுத்தம் சொன்னதுலேயே நைட்டோட நைட்டாவே ஓடிப் போயிருப்பான்” என்று நினைத்தவள், முகம் கழுவி வர அவள் முன்னே சுடச்சுட காஃபியை நீட்டியபடி சிரித்த முகத்தோடு நின்று இருந்தான் நிரஞ்சன்.
அந்த காஃபியை அவள் தட்டி விட முயல சட்டென்று அதை மறைத்து நின்றவன் “ஒரே ஒரு நிமிஷம் மேகா நான் சொல்றதை கேளு..”
“ஒரு எழவும் நீ சொல்ல வேணாம். இங்க இருந்து போனு சொன்னேன் உன்ன.. ஏன் என் உயிரை எடுக்குற?” என்று கத்தினாள்.
“ப்ளீஸ் மேகா.. இத்தனை வருசமும் உன் நிழல் தான் குடும்பம் இருந்துச்சு. என்னோட சம்பளத்துல இல்ல.. அத நான் நல்லாவே புரிஞ்சுகிட்டன். நான் தவறுன நாட்கள்ல நாங்க அத்தனை பேரிருந்தும் உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவ நீ.. எனக்கு அது நல்லா புரிஞ்சுது”
“சரி புரிஞ்சதுனால ஐயா என்ன பண்ண போறீங்க? கண்ணகி மாதிரி எனக்கும் பீச்சல ஒரு சிலை வைக்க போறீங்களா?” என்று கைகட்டி அவள் நின்று கேட்ட விதமே.. அவனை சற்று அச்சுறுத்தியது.
இத்தனை நாட்களில் மென்மையான மேகாவை பார்த்து இருந்தவன், இப்போது சில நாட்களாக தான் அவளுள் இருக்கும் இந்த பிடிவாதம் கோபம் திமிர் அனைத்தையுமே காண்கிறான். அதெல்லாம் அவளது தலைகனம் அல்ல அவளின் கவசம் சுய கௌரவம்..!
“எனக்கு தெரியும் மேகா. நான் இல்லேனா கூட நீ தைரியமாக வாழுவ.. ரெண்டு குழந்தைகளையும் நல்லா தான் பாத்துக்குவ.. ஏன் என் அம்மாவ கூட நீ நல்லா பாத்துப்ப” என்றதும் அவள் மனது லேசாய் பதறியது இவன் என்ன பேச வருகிறான் என்று..!
“பைத்தியம் போல தற்கொலை அது இது என்று பேசி விடுவானோ?” என்று அவளின் முன்னால் காதல் கொண்ட மனம் இப்போது பதறியது உண்மை.
என்னதான் ஒருவன் தப்பு செய்திருந்தாலும் அதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் ஒழிய உயிரை பறிப்பது தவறு அல்லவா? என்று அவளுக்கு லேசாய் உடல் படப்படத்தது. ஆனால் அதனை அவனிடம் காட்டிக் கொள்ள அவள் பிரியப்படவில்லை. தன் பலவீனத்தை அவன் பலமாக கூடும் என்று அறிந்திருந்தவள் தீர்க்கமாய் அவனை முறைத்தாள்.
“ஆனா.. என்னால நீ இல்லாம இருக்க முடியாது. பிள்ளைக கொஞ்சும் மொழி கேட்காமல் வாழ முடியாது. நீயில்லாமல் என் வாழ்க்கைய நினைச்சும் பார்க்க முடியல என்னால…”
“உன்னைத் தொலைச்சு இனி இருக்க முடியும்னு தோணல.. அதுக்கு உயிர விடலாம்.
நீ இருக்கும் வரை தான்
ஆண் என்ற,
என் திமிரெல்லாம்…
என் அகங்காரமெல்லாம்..
என் கோபமெல்லாம்..” என்றவன் அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து..
“நான் சத்தியமாகச் சொல்கிறேன் மேகா..! நீ மட்டும் போதுமடி எனக்கு.
உன்னை விட எதுவும் இனி
என்னை ஈர்க்காது. இனிமேல்..
சாகும் வரை உன் காலடி போதும்.. அதற்கு மேல் எதையும் நான் வேண்டல..!
வெறும் உடலால் இணைபவர்கள்
கணவன் மனைவி இல்லனு காலம் எனக்கு நல்லாவே பாடத்தை கத்துக் கொடுத்துட்டு.. ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி.. அந்த கணவனுக்கான தகுதி எனக்கு இல்லைனு தெரியும். ஆனாலும் இந்த வீட்டில் ஒரு ஓரமா உங்களை எல்லாம் பார்த்திட்டு இருந்துட்டு போறேனே” என்று கண்ணீர் வழிய கெஞ்சினான் நிரஞ்சன்.
தொடரும்..
