2
ஐராவதன் அன்னை தந்தை யாரென்று தெரியாத அநாதை.. அவனை எடுத்து வளர்த்தது என்னவோ தேவேந்திரன் தான்..!
இப்பொழுது அவன் வேலை செய்வதும் தேவேந்திரனுக்கு தான்.
அவர் வெட்டிக்கொண்டு வா என்றால்.. கட்டிக்கொண்டு எல்லாம் வரமாட்டான் மொத்தமாக அள்ளிக் கொண்டு வந்து விடும் சாமர்த்தியம் கொண்டவன்..!
ஆனால் அதே நேரம் பாசம் நேசம் அன்பு காட்ட யாரும் இல்லாமல் அதை என்னவென்று அறியாத முரட்டு குழந்தையவன்..!
இந்த முரட்டுக் குழந்தையை தன் அன்பினால் நேசத்தினால் பண்பினால் மாற்றப் போகிறவளோ அப்பொழுதுதான் தூத்துக்குடிக்கு பஸ் ஏறினாள்..!
//நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…//
என்று ரஜினியின் அந்த காலப் பாட்டை பாடிக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தான் ஐரா. அவன் இருக்கும் வீடோ அந்த காலப் பரதவர்களின் வழித் தோன்றல்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது.
கொஞ்சம் சத்தமாக அவன் ஆரம்பிக்க வாசலில் அமர்ந்து தன் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த தாய்மார்களும்.. அங்கங்கே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்த பெண்மணிகளும்.. சற்றே வயதான முதியவர்களும் காதில் பஞ்ச வைக்காத குறையாக கைகளால் காதை பொத்திக் கொண்டு முகத்தை சுழித்தனர்.
அதில் ஒரு வாயாடி பெண்மணியோ “இந்தா ஆரம்பிச்சிட்டான்லே.. இனி விடிய விடிய இப்படி வைச்சு செய்வான். கோட்டிபய..!” என்று வைதார்.
இன்னொரு பெரியவரோ “ஆமாலே.. ஒரே செர(தொந்தரவு)ப்படுத்திக்கிட்ட இருக்கானுவோ.. ஆச்சி அய்யாவெல்லாம் தூங்குறாவுலேனு இருக்கா? சல்லிப்பய..!” என்று அவரின் வசப்பாட்டுக்கு எசப்பாட்டு பாடினார்.
“என்னலே அமாசி.. எப்ப அந்த மருதம் பேசினாலும் கூடவே நீயும் என்ன எசப் பாட்டு பாடுறவன்.. அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் இதுவே உனக்கு வேலையாக போச்சுலே.. அவனோ எள வட்ட பைய.. ஏதோ குடிச்சிட்டு ஆடி பாடிட்டு தெரியுறானுவோ.. நீ ஏம்லே.. உம்ம ஜோலிய பாத்துட்டு தூங்குவே” என்றார் மற்றொரு வயதானவர். அந்த ஏரியாவுக்கு தலை கட்டான கனலேந்தி.
“ஏம்லே சொல்ல மாட்ட நீயு.. எல்லாம் நீ கொடுக்கிற இடம் தாம்லே.. அவன் பாட்டு போட்டாலே எனக்கு மண்ட குத்துலே.. செவி அடைக்கபா” என்று புலம்பினார் அமாசி.
//என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…//
என்று அடுத்தடுத்த வரிகள் பாடப்பட அதற்கு தகுந்தது போல் ஆடிக் கொண்டிருந்த ஐராவதை தான் வைத்து கண் வாங்காமல் பார்த்து இருந்தார் கனலேந்தி. அவர் முகத்தில் மெல்லிய புன்னகை அவனின் நடனத்தை பார்த்து..!
“ஏலே கனலேந்தி.. நான் பாட்டுக்கு இங்கே புலம்பிட்டு இருக்கிறவன் நீ புறத்தால அவன் ஆடுறதே பாத்துக்கிட்டு இருக்கியலே.. சரியான இடும்பு (திமிர்) புடிச்சவன்..” ஐராவிடம் நேராக பேச முடியாதவற்றையெல்லாம் இப்பொழுது கனலேந்தியிடம் குறைபட்டு கொள்ள.. அந்நேரம் மதுரமும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார்.
இதையெல்லாம் ஐராவுக்கு நேராக அமாசி பேசியிருந்தால்.. இந்நேரம் உயிரோடவே அவரை அந்த காலத்து தாழிப் பானையில் வைத்து மூடி புதைப்பது போலவே… கடற்கரை மணலில் வைத்து புதைத்திருப்பான்.
“இவகல்லாம் அவன் மூஞ்சிக்கு நேரே பேச தைரியம் இல்லாத பயலுவோ.. எல்லாம் புறத்தாலே பேசுற பயங்கொல்லி கூட்டம்” என்று நினைத்து சிரித்துக்கொண்டார் கனலேந்தி.
“அட விடுங்கப்பா ரெண்டு பேரும்.. ஏதோ இளந்தாரி பயலுக ஆட்டமா அடிக்கிறானுவோ.. நம்ம காலத்துல நம்ம போடாத ஆட்டமா? என்ன அப்பத்துல இந்த மாதிரி ஸ்பீக்கரு சவுண்டு தான் கிடையாது. ஊருக்கு ஒதுக்குப்புறமா பயந்துகிட்டு செஞ்சோம்.. இவனுங்க நட்ட நடு தெருவுக்குள்ள ஆடுறானுவோ..” என்று கனலேந்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே..
சட்டென்று மதுரத்துக்கு அருகில் சரக்கு குடித்து காலியான ஒரு பாட்டில் வந்து விழுந்து கிளீங் என்று சத்தத்தோடு நொறுங்க.. பதறிப் போயினர் புலம்பிக் கொண்டிருந்த மதுரமும் அமாசியும்.
இருவரையும் பார்த்து சிரித்த கனலேந்தி “இதுக்குத்தான் அந்த பய கிட்ட நான் மூஞ்சிக்கு நேரா எதுவும் வசவுறது கிடையாது. இப்பல ஒன் பக்கத்துல போட்ட பாட்டில என்னைக்கு மண்டையில போடுவானு யாருக்கு தெரியும்லே? சூதானமா இருந்துக்கோ மதுரம். பேசாம படுத்து தூங்குவே.. நான் பெறவாட்டி வாரேன்” என்று அங்கிருந்து கனலேந்தி கிளம்ப.. அமாசியோ அமைதியாக அந்த கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டார்.
மதுரமோ அப்பவும் வாய் ஓயாது “இருக்குறது குடிச வூட்டுல.. ஆனா ஆட்டம் எல்லாம் பாரு.. ஏதோ கொட்டாரத்தில் இருக்கிற மாதிரி.. குறுக்க சாய செத்த பொழுது விடறானுவோளா? ஆக்கங்கெட்டபையலுவோ..” என்று புலம்பியபடி வீட்டுக்குள் சென்று விட்டார்.
இப்படி தெருவுக்கு இரண்டு மூன்று பேரை புலம்ப விட்டு கதறடித்ததெல்லாம் கண்டுகொள்ளாமல் ஐரா ஐசக் சேவியர் மூன்று பேரும் குடித்து கும்மாளமிட்டு ஒரு வழியாக படுக்க சென்றனர் நள்ளிரவு தாண்டும் வேளையில்..
“ணே.. இங்கன இருந்த என் போர்வைய காணோம்ணே” என்று ஐசக் குடிபோதையில் குளறியபடியே கேட்க..
“அங்கன பாருலே அந்த சேவியர பய.. அவன்தான் அந்தப் போர்வையை கையிலி கணக்கா சுருட்டுக்கிட்டு கிடக்குதியான்” என்று ஐரா கூற..
வேகமாக சென்ற ஐசக் போர்வையில் சுருண்டு இருந்து சேவியரிடமிருந்து அதை உருவ முயல.. அவனோ கொஞ்சம் கூட புடுங்க முடியாத மாதிரி தன் உடம்போடு தோல் போல சுற்றிக் கொண்டு இருந்தான்.
“அண்ணே.. உடமாட்டேங்கும்லணே.. வாங்கி கொடுங்கணே” ஏதோ சின்ன பிள்ளை போல ஐராவிடம் புகார் செய்தான்.. அது மட்டுமில்லாமல் வாங்கி கொடுங்கண்ணே.. வாங்கி கொடுங்கண்ணே.. என்று சிறுபிள்ளை போல கத்தினான் தொண்டை கிழிய, அந்த இரவு வேளையில்..!
“காலம்புற ஆஜானுபாகுவான உடம்ப வைச்சிட்டு அடுத்தவள விரட்டுரானுவோ ரவுடி கணக்கா. இரவானா சலம்பல் செய்றானுவோ.. இவனுக அக்காபோறு தாங்க முடியல” என்று ஐராவின் அந்த பக்கம் உள்ள ஒரு பெண்மணி புலம்பிக் கொண்டு வாசக்கதவை வேகமாக அடித்து சாத்துவிட்டு உள்ளே சென்றார்.
‘யார் என்ன பேசினாலும் நமக்கு என்ன?’ என்பது போல இவனுங்க மூவரும் தனி ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
“ஏலேய்.. அவன் தேன் குறுக்க சாஞ்சுட்டான்ல.. நீனும் அடுத்தாப்புல குறுக்க சாயு.. உன்னுடைய கைலிய போர்வையா போத்திக்கலே..” என்றபடி அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் உடலை சாய்த்தான் ஐரா.
தூத்துக்குடி மணி காலை 6 மணி போல தன் காலை பதித்தாள் வேதிகா 10 மணிநேர பிரயானத்தின் முடிவில்..!
“எம்மாடி சென்னையில் இருந்து தூத்துக்குடி வர இவ்வளவு நேரமா?” என்று தான் கொண்டுவந்த ட்ராலியையும் சிறு கைப்பையும் கீழே வைத்து இடுப்பை பிடித்து இரண்டு புறமும் ஆட்டி தன் உடலை தளர்த்திக் கொண்டாள்.
அதிலும் அவள் வந்தது ஸ்லீப்பர் பஸ் தான். ஆனால் அதிலும் தான் எவ்வளவு நேரம் படுத்தே வருவது. உடலை ரொம்ப நேரமாக படுக்க வாட்டிலே வைத்திருந்தது அவளுக்கு சற்று சோம்பலாக இருக்க..
மெல்ல உடலை அந்தப் பக்கம் இந்த பக்கம் திரும்பி அவள் உடலில் சோம்பல் எடுக்க.. அவளது வஞ்சனை இல்லாமல் செழிந்திருந்த அங்க செழுமைகள் அங்கே பேருந்து நிலையத்திலிருந்த ஆண்களின் கண்களுக்கு எல்லாம் விருந்தானது.
அதற்காக அரைகுறை ஆடை எல்லாம் அவள் அணிந்து வரவில்லை. குர்தாவும் லூசான பளாசோ பேண்டும் தான் அணிந்திருந்தாள். அதற்கே தான் ஆண்கள் கூட்டம் ஜொள்ளியது.
பின் ஆட்டோவை அழைத்து ஏற்கனவே அவளது வரவுக்காக காத்திருந்த அந்த அப்பார்ட்மெண்டில் ஒற்றைப் படுக்கையறை வீட்டுக்குள் நுழைந்தாள்.
வேதிகா செவிலியர். அரசு மருத்துவமனை சென்னையில் பணியாற்றியவளுக்கு பணிமாற்றும் காரணமாக இங்கே தூத்துக்குடிக்கு வந்துள்ளாள்.
அவளுக்கு விடுதியிலோ இல்லை பேயிங் கெஸ்டாக தங்குவதோ சரிப்பட்டு வராது, காரணம் அவள் பணி நேரம் அப்படி..! அதற்கு தான் தனி வீடாக பார்த்திருந்தாள். அதிலும் தனி பெண்ணாக ஊருக்கு ஒதுக்கப்புறமாக வீடு எல்லாம் அவளுக்கு சரிப்பட்டு வராது. அப்பார்ட்மெண்ட்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று அங்கு ஒரு ஒற்றைப் படுக்கையறை வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தாள்..!
சிறிது நேரம் ஓய்வெடுத்தவள் பின்பு குளித்து செவிலியர் உடையுடன் கிளம்பியவள் அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனிடம் கேட்டு ஆட்டோ பிடித்து அவள் வேலை செய்யப் போகும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
“இனி இங்கு தான்..” என்று மனதில் நினைப்போடு வெளியே நின்று அந்த மருத்துவ முறையை நன்றாக பார்வையிட்டு மெல்ல அதனுள் அடியெடுத்து வைத்தாள்.
அங்கு உள்ள ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துவிட்டு “அப்பாடா..!” என்று அவளுக்கு கொடுத்த இடத்தில் அவள் அமரவு
ம் அவள் கழுத்தில் கத்தி வைக்கவும் சரியாக இருந்தது.
“ஐயோ அம்மா…” என்று அலறினாள் வேதிகா.
