23
அன்று..!!
அன்றைய தினம் அத்தோடு நிற்கவில்லை.!
நிரஞ்சன் முதன் முதலாக தப்பான புரிதல் கொண்டு கோபமாக பேசியதை வதனி பார்த்து அதிர்ந்திருந்தாள் என்றால்… அடுத்தடுத்து அவன் செய்ததும் இன்னும் அவள் நாளின் அதிர்ச்சிகளின் எண்ணிக்கையை கூட்டியது..!!
இவளோ கைகள் நடுங்க..
இதழ்கள் துடிக்க..
கண்கள் கலங்கி தவிக்க.. சமையல் கட்டிலுள்ள ஸ்லாப்பை பற்றியப்படி நின்றிருந்தாள்.
எத்துணை கணங்களோ… ஷணங்களோ… தெரியாது..!
அவன் கொடுத்த ரணங்களே எண்ணி சிலையாய் நின்றிருந்தாள் பேதை..!!
அதற்குள் அத்தனை தரம் அழைத்து விட்டார் பிரேமா. அவருக்கு இன்னும் தொடையில் எலும்பு முறிவு சரி ஆகவில்லை. முன்னை விட இப்பொழுது முன்னேற்றம் தான்.
தன் அறைக்குள்ளையே ஸ்டாண்ட் பிடித்து நடமாடுகிறார். ஆனாலும் கழிவுறைக்கு செல்லும் போது மருமகளின் உதவி தேவை அவருக்கு.
எங்கே மறுபடியும் விழுந்து பட்ட இடத்தில் அடிபட்டு விடுமோ என்று அவருக்கு கொள்ளை பயம்..!
அவர் பயமும் சரிதானே?
திரும்பும் அடிபட்டால் அவ்வளவுதான் படுத்த படுக்கை என்று ஏற்கனவே மருத்துவர் எச்சரித்திருக்க, அதனால் தான் மருமகளை அழைத்தார்.
இயற்கை உபாதைக்கு நம்மை அழைக்கும் போது கட்டுப்படுத்த முடியுமா என்ன?
சமையலறை வேலையை அப்படியே வைத்துவிட்டு மாமியாருக்கு உதவி செய்ய அவள் சென்று விட்டாள். அவள் முகம் கசங்கி கண்கள் கலங்கி இருப்பதை கண்டு கொண்டவர்,
“என்ன ஆச்சு? ஆதவன் எதா சத்தம் போட்டுட்டு இருந்தான்..! என்னவாம்? நீ என்ன தப்பு பண்ணின?” என்று கேட்க.. அவளோ ஒன்றும் இல்லை என்று தலையாட்டிவிட்டு அவருக்கு உதவி புரிந்தாள்.
இவர்கள் இருவருக்கும் சண்டை என்றால் அதுவும் நிரஞ்சன் அவளை திட்டி விட்டான் என்றால் உண்மையிலேயே இவர்களுக்கு எல்லாம் கொண்டாட்டமாக தான் இருக்கும்..!
இதை ஏன் இவர்களுக்கு சொல்லி, அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை.
“உன் முகம் ஏன் ஒரு மாதிரி அழுத மாதிரி இருக்கு?” என்று அவரும் விடாமல் கேட்டார்.
“கொஞ்சம் தலைவலி அத்த.. நைட்டு சரியா தூங்கல” என்றாள் பேச்சை மாற்றுவதற்காக..!
“ஓஓஓ… என்ன பாத்துக்கிறதுனால உன்னால நைட்டு தூங்க முடியல அதனால உனக்கு தலைவலி வந்துடுச்சு. அப்போ நான் தான் உனக்கு தலைவலியா?” என்று அவரும் காலையிலேயே அவர் புராணத்தை பாட.. இப்ப உண்மையிலேயே விண்விண்னென்று தலை வலித்தது வதனிக்கு.
அவளையும் அறியாமல் இடது கண்ணோரம் கண்ணீர் வடிய “அழுது கிழுது தொலைச்சுராத தாயே..! அப்புறம் உன் புருஷன் வந்து நான்தான் உன்னை கொடுமைப்படுத்துறேன்.. அழ வைக்கிறேன்னு என் மேல எறிஞ்சு விழுவான். இந்த வயசான காலத்துல.. அதுவும் பாத்ரூம் போறதுக்கு கூட உங்க உதவி எதிர்பார்க்கிற இந்த நேரத்துல.. அவனும் என்னை திட்டி மனச ஒடச்சா.. செத்து போறது தவிர வேறு வழியே இல்லை எனக்கெல்லாம்..!” என்று அவர் ஒரு ஒப்பாரி கூட்ட,
இன்று காலை ரொம்ப நல்ல விதமாகவே தனக்கு விடிந்ததை எண்ணி நொந்துக் கொள்ள மட்டுமே வதனியால் முடிந்தது.
நேற்று இரவு சொல்ல சொல்ல கேட்காமல் இரவு மிருகுட்டிக்கு செய்து வைத்திருந்த பாஸ்தாவை தின்றதின் விளைவுதான் இப்பொழுது காலையில் ஒத்துக் கொள்ளாமல் பிரேமாவுக்கு வயிற்றை கலக்கி விட்டது.
இதுவரை இரண்டு முறை போய் வந்து களைத்து போய் “எனக்கு கொஞ்சோண்டு எலுமிச்சை சாறு பிழிஞ்சு எடுத்துட்டு வாயேன்.. அப்பவாது நிக்குதானு பார்ப்போம். நேத்து தெரியாதத்தனமா சாப்டுட்டேன். எனக்கு வயிறு இப்போ ரொம்ப முடியல..” என்று சோர்ந்து போய் அமர்ந்தவரை பார்க்கவும் வதனிக்கு பாவமாகத்தான் இருந்தது.
வயசானவர்கள் இரண்டாவது பிள்ளை பருவம் என்பார்கள்..!!
அவருக்கும் சில நேரம் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் ஏதாவது பார்த்தால் தின்று விடும் ஆசை..!
சிறுபிள்ளைகள் சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையை பார்த்து நாவின் சுவை கட்டுப்படுத்த முடியாமல்.. சிறுபிள்ளை போல சொல்வதைக் கேட்காமல்.. உடலுக்கு ஒவ்வாததை தின்றுவிட்டு, பின் அவை செரிமானமாகாமல் இப்படி அவஸ்தைப்படும் முதியவர்கள் ஏராளம்..!
சிலரோ தன் தவறு என்று அதைப் பொறுத்துக் கொள்வார்கள். பிரேமா போன்ற ஆட்கள் அதற்கும் மருமகளே காரணம் என்று புலம்பி தவித்து அவர்களும் அவஸ்தை பட்டு, உதவிக்கு வந்தவர்களிடம் வேலையை வாங்கி விடுவார்கள்.
பிரேமா படும் அவஸ்தை கண்டு பாவம் பார்த்தது வதனியின் தாய்மை உள்ளம்..!
காலையிலிருந்து பிரேமாவை கவனித்தவள் அவ்வப்போது மிருக்குட்டியையும் கிளப்பிக் கொண்டிருக்க.. காலை உணவை பார்க்கவே இல்லை.
எப்பொழுதும் மிரு குட்டியை கிளப்பும் பொறுப்பு நிரஞ்சன் தான் பார்த்துக் கொள்வான்.
இன்று மனைவி கோபப்பட்டு பேசியதால் அவனுக்கும் செம கோவம் “அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன்? பார்ட் டைம் ஜாப் போனாலும் இந்நேரம் வீட்டுல இருக்க மாட்டேன் தானே..! இப்ப வீட்டுலேயும் இருக்கேன்
அதே நேரம் லைவ் போய் சம்பாதிக்கிறேன்.. இதுக்கு ரொம்ப தான் இவ பேசுறா? தினமும் நான் ஹெல்ப் பண்றேன் தானே? ஒரு நாள் தனியாவே செய்யட்டும் அப்ப தெரியும் என் அருமை..!” என்று வீம்பாய் அவன் அமர்ந்து கொள்ள அத்தனை காலை வேலைகளும் வதனியின் தலைமேல்..!!
ஒரு நாள் அல்லது ஒரு இக்கட்டான வேளையில் மனைவிக்கு உதவி செய்துவிட்டு ‘நான் உதவி செய்தேன்.! நான் உதவி செய்தேன்..!’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது ஆண்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. அது தன் வீடு.. அந்த வேலைகளும் தானும் செய்யப் வேண்டுமென.. என்று தான் இவர்களுக்கு புரிதல் வருமா?
மற்ற நாளாக இருந்தால் கூட சமையலையும் பார்த்து மகளையும் கிளப்பி விட்டிருப்பாள். எப்போதும் செய்வது தானே?!!
இன்று பிரேமாவுக்கு வயிற்றுப்போக்கு வேறு அவரையும் இடையிடையே கவனிக்க வேண்டிய இருப்பதால் வேலை தடைப்பட்டது..!
மகளுக்கு கூட பிரேமாவுக்கு செய்த ஓட்ஸ் கஞ்சிலேயே சிறிது சர்க்கரை சேர்த்து பால் ஊத்தி ஓட்ஸ் போரேஜ் என்று அதற்கு அழகாக பெயர் மாற்றி காலை உண்ண வைத்துவிட்டு, மதியத்துக்கு பிரட் ஆம்லெட் செய்து அனுப்பி விட்டாள்.
கணவனுக்கு தேங்காய் சட்னி அரைத்து காலையில் தோசை ஊற்றிக் கொள்ளலாம். மதியம் இன்னைக்கு ஒரு நாள் கேண்டினில் பார்த்துக்க சொல்லுவோம் என்ற நினைப்பில், அவள் மாமியாருக்கு உணவு கொடுத்துவிட்டு சட்னி அரைக்க செல்லும் நேரத்தில் தான் “சாப்பாடு ரெடியா?’ என்றபடி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் நிரஞ்சன்.
“இருங்க சட்னி அரைச்சிட்டு வந்திடுறேன்” என்றது தான் தாமதம்,
“அப்போ காலையில இருந்து நீ என்ன பண்ணிட்டு இருந்த? பாப்பாவ கிளப்பி அனுப்புவதற்கு இவ்வளவு நேரமா உனக்கு? சரி பாப்பாவுக்கு செஞ்சதே குடு. நான் அதையே சாப்பிட்டு கிளம்புறேன்” என்றவன் சமையலறையில் வந்து பார்க்க..
அங்கே ஓட்ஸ் கஞ்சி மிச்சமிருந்தது. “இந்த ஓட்ஸ் கஞ்சிய வைச்சு காலையில சமாளிச்சு இருக்க.. அப்புறம் என்ன வேலை உனக்கு? நான் இன்னைக்கு ஹெல்ப் பண்ண வரலனு நீயும் எனக்கு சாப்பாடு செய்யல அப்படித்தானே? சூப்பர்..!! இப்படித்தான் ஏட்டிக்கு போட்டியா நடந்துக்கணும்..!” என்று அவன் லஞ்ச் பேக்கை பார்க்க அதுவுமே கட்டப்படாமல் இருக்க.. அவளை முறைக்க..
“இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கேண்டின்ல..” என்று அவள் முடிக்கும் அதை வேகமாக கீழே தள்ளி விட்டான், பாத்திரம் கீழே விழுந்து சத்தம் காதை பிளக்க.. வதனி அதிர்ச்சி குறையாமல் அவனை பார்த்து ஏதோ சொல்ல வர, அவள் முன் கையை உயர்த்தி நிப்பாட்டு என்று காட்டினான்.
“இனிமே நான் கேண்டிலேயே பார்த்துக்கிறேன்” என்று வேகமாக வெளியேறினான்.
எப்பொழுதும் அன்னையிடம் சொல்லி செல்பவன், இன்று அன்னையிடம் கூட சொல்லாமல் அவன் சென்றுவிட வதனியை தான் போட்டு துளைத்தெடுத்தார்.
“ஏன் அவன் சொல்லாம போனான்? எப்படி சொல்லாம போனான்? அப்படி என்ன வேல உனக்கு அவனுக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்காம? அப்படியென்ன பெருசா வேலை செஞ்சு கிழிக்கிற நீ?” என்று அத்தனை கேள்விகளை கேட்டு குடைந்து, அவளையே குற்றம் சொல்லி படுத்தி எடுத்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பதில் கூற முடியாமல் “நீங்க ரெஸ்ட் எடுங்க மாத்திரை போட்டுட்டு” என்று மாத்திரை கொடுத்தவள் வேகமாக தங்கள் அறைக்கு வந்து கதவை தாழிட்டு விட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்து அழுதாள்.
யாரிடமாவது சொல்லி ஆறுதல் கேட்க மனம் ஏங்கியது..! தன் பிரச்சினையை சொல்லி இதற்கு என்ன தீர்வு என்று கேட்கலாம் என்றால் அதற்கும் யாரும் இல்லை..!
நெருங்கிய நண்பர்களோ இல்லை உறவில் நெருக்கமானவர்களோ என்று யாருமே இப்பொழுது இல்லை வதனிக்கு.
காதல் திருமணம் செய்த பொழுதில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது அப்போது அவர்களை தவிர்த்து விட்டாள். இப்பொழுது அனைவரும் இவள் கை எட்டும் தூரத்தில் இல்லாமல் வெகு தொலைவில் இருந்தனர்.
கதவை சாற்றி அங்கேயே அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளுக்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இல்லை..!
காதல் திருமணம் செய்வது தவறில்லை..!
அதை பெற்றவர்களை எதிர்த்து செய்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு தங்களை புரிய வைத்திருக்க வேண்டும். அதிலும் அவள் தவறி விட்டாள். கணவன் பிள்ளை அவர்கள் குடும்பம் என்று மட்டுமே இருந்தவளால் அவளுக்கென்று தனியாக நண்பர்களையோ நட்பு வட்டத்தையோ விரித்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் போக.. இன்று அதுவே அவள் தனிமையை கொடுமையாகியது…!
ஆணோ பெண்ணோ தனக்கு என்று சுயமாக சம்பாத்தியத்தை கொள்ள வேண்டும்.
அது..
சுயமரியாதையை
ஈட்டு தரும்..!
சுயத்தை பாதுகாக்கும்..!
பிறரை சார்ந்திராமல் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்க்கொள்ள வைக்கும்..!!
