விசாலாட்சி விதித்த நிபந்தனை, அஸ்வத்திற்கு மிக சவலான ஒன்று. இதுநாள் வரை தன் காதலை கூட கூறாதவன், அவள் விருப்பப்பட்டு நடிக்கும் விளம்பர நடிப்பு தேவையில்லை என்றால் எப்படி ஏற்றுக் கொள்வாள்?
தந்தையின் பேச்சிற்கே செவி சாய்க்கவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதற்கேற்ப, கௌதமன் அடித்தும் கூட அவள் அதை மாற்றிக் கொள்ளவில்லை.
போதாக்குறைக்கு, அவள் மனம் கவர்ந்த கள்வன் அதனை ஊக்குவிக்கும் போது, எப்படி அடியோடு விலகி செல்லும் எண்ணம் வரும்? தற்சமயம் கூட அதனை பற்றி தான் அவளுக்கு தெளிவாக பாடம் நடத்திக் கொண்டிருந்தான் பிரதீஷ்.
உள்ளம் உருக காதலித்தவளுக்கு, அவனது தன்னம்பிக்கையான பேச்சு மேலும் அவன் மீது மரியாதையையும், அதீத காதலையும் உண்டாக்கியது.
"ராசிகா! இது உன்னோட விருப்பம். எவன் சொன்னாலும் மாத்திக்காதே. தப்பு எது, சரி எதுன்னு தெரியாம நீயா போய் எங்கையும் விழ குழந்தை இல்லை புரியுதா?" என்றவன் அவளை சுற்றி வளைத்து தோளில் சாய்த்துக் கொண்டு, அடிவிழுந்த கன்னத்தை வருடிக் கொண்டிருந்தான்.
"என்ன மேடம் பதிலே பேசாம உம்முன்னு இருக்கீங்க?"
"ஒண்ணுமில்ல.."
"அடிச்சுட்டேன்னு கோவமா?"
"இல்லை.."
சட்டென அவளை விலக்கி விட்டு முகம் பார்த்தவனுக்கு, அவளின் அமைதி எதற்கானது என ஊகித்திட முடிந்தது.
"அவன் பேசுனான்னு நீ ஏன் ஃபீல் பண்ணுற? எவனோ ஒரு பைத்தியக்காரன்னு நினைச்சிக்கோ. எங்க நீ என்ன தப்பா நினைச்சிடுவயோன்னு நான் தான் பயந்துட்டேன் டி."
"ஆமாம்.. அப்படி ஒன்னு இருக்கோ.. நான் மறந்தே போய்ட்டேன்.." என்றவள் முகம் பிரகாசிக்க புன்னகைத்ததில், தானே சிந்தனையை தூண்டி விட்டோமோ என்றென்ணி தலையில் அடித்துக் கொண்டான்.
"பிரதீஷ்.. இங்க பாருங்க.. அவன் எதுக்கு டேம்க்கு வந்தான்.. உங்க ஃபிரண்ட்டா? சொல்லுங்க.."
"ஹேய் அவன் ஃபிரண்ட்லாம் இல்லை. ஒண்ணா படிச்சோம். அன்னேக்கி ஒன்னும் அவனை நாங்க கூப்பிடல. எங்களை எதார்த்தமா பாத்தான். சோ, கூப்பிட வேண்டிய நிலைமை. அதான் வந்தான்." என அவன் உண்மையை கூறியும், அவனை தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹேய் நம்பு டி.."
"பொய் இல்லையே?"
"உண்மை தான் ராசிகா!" என்றவன் மெல்ல அவள் கன்னம் கிள்ளி ஆட்டிட, அதரங்கள் சிவக்க முறுவலித்தாள்.
"சரி சாப்பிடுங்க. நான் கிளம்புறேன்.." என்றவள் கிளம்ப அவனும் குளிக்க சென்றான். குளித்து முடித்து வந்தவன், அவள் இன்னும் கிளம்பாமல் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருப்பதை கண்டு திகைப்பூண்டை மிதித்தவன் போல், "நீ இன்னும் போகலையா?" என்றான்.
"ம்ம்.. நான் போவேன்.. இல்லை இங்கயே பாய் போட்டு கூட படுப்பேன்.. முதல இங்க வாங்க.. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க.." என்றவள் ஆசிரியை போல் கையை கட்டிக்கொள்ள, அவனோ பயந்து நடுங்கும் மாணவனாக பாசாங்கு செய்தான்.
"உண்மையை சொல்லுங்க.. உங்க ஃபிரண்ட்டே இப்படினா? நீங்க?" என்றவள் அவன் கன்னம் கிள்ள, "நான் ரொம்ப மோசமானவனுங்க மேடம்.. ஊருக்குள்ள விசாரிச்சா கூட அப்படி தான் சொல்லுவாங்க.." என்றான் நின்ற இடத்திலே கையை கட்டிக்கொண்டு நெளிந்தப்படி.
"சரி நான் கேக்க வந்த விஷயமே வேற.."
"ஏன் வேற என்ன சந்தேகம்?" என்றவன் தலையை துவட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்க நடக்க, ஓடிவந்து அவன் முன்பு நின்றவளை கண்டு திக்கென ஆனது.
"மணி 11.30 ஆச்சு. வீட்டுக்கு கிளம்பு டி.."
"பேச்சை மாத்தாதீங்க.." என்றவள் உள்ளங்கை, அவனது உள்ளங்கையில் அழுந்த, இறுக பற்றிக் கொண்டான்.
"அவன் என்ன கேட்டான்னு.. உங்களுக்கு எப்படி தெரியும்? திடிர்னு அதை கேக்க காரணம் என்ன?"
"அது உனக்கு தேவையில்லாதது. மறந்துட்டு வேலையை பாரு.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கதவின் முன் நிறுத்தியும் நகர்பவளாக இல்லை.
"ஏதோ மறைக்கிறீங்க.. கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படி தான் மறைப்பீங்களா?" என உதட்டை சுளித்து ஒருவாறு அவன் முகம் பார்க்க, "அதை மேடம் கல்யாணம் பண்ணிட்டு சொல்லுங்க.." என்றவன் அவளை நகர விடாது அணையிட, அவனது பார்வையின் குறுகுறுப்பு தாள முடியாதவள் கெஞ்சலாக பார்த்ததில் நகன்று விட்டான்.
அவனுக்கு மட்டுமல்ல.. அவளுக்கும் அது ஏமாற்றமாகியது..
சிறு பார்வையிலே விலகி நின்று விட்டானே, ஒருவேளை அப்பார்வை பாரக்காமல் இருந்தால்? என தீவிரமாக யோசித்தவள் முகம் தானாக செம்மை கொண்டதில், நாணி கோணி சிரித்தாள்.
"எதுக்கு சிரிச்ச?" என்றவன் பட்டென அவள் நெற்றியோடு நெற்றி உரசி நின்று கேட்க, அவன் மூச்சு காற்று பட்டதில் புதுவித தகிப்பை உணர்ந்தவள், "ஒண்ணுமில்ல.." என்றாள் நெஞ்சம் படபடக்க.
"நான்.. போகவா?"
"தாராளமா.." என்றவன் மீண்டும் விலகி கை விரித்து நிற்க, அதில் மேலும் திகைத்து போய் அவனையே பார்த்தாள்.
இருவரின் விழிகளும் தீண்டியது தவிர. விரல்களோ, இதழ்களோ தீண்டிடவில்லை. ரசனையாக அவளையே விழி வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
புருவம் உயர்த்தி என்னவென கேட்டவனை கண்டு, தலை குனிந்தவள் விழிகள் படபடவென அடித்துக் கொண்டது. ஆழ மூச்சொன்று விடுத்து தன் சிந்தனைக்கு வேலியிட்டவள் அங்கிருந்து நகரும் நேரம், "ராசிகா!" என அழைத்தான்.
திரும்பவில்லை அவள்! சிலையாக
சமைந்து நின்றாள் அவனை காணாமல்.
அவள் தோளில் முகம் பதித்து, முதுகோடு நெஞ்சம் உரசி நின்றிருந்தான்.
இதயம் தொண்டைக்குழியில் சிக்கி கொண்டது போல் வேகம் கொண்டு துடிக்க, மூச்சு காற்றோ சீரோட்டம் இழந்தது அணங்கிற்கு.
"இங்கயே பாய் போட்டு படுக்குறேன்னு சொன்ன? கிளம்பிட்ட?" அவனது கிசுகிசுப்பு மிகுந்த குரல், அவளை படபடபக்க வைக்க..
"இல்..லை.. அது.. நான்.." என ஏதோ கூற விழைந்தும் அது முடியாத தடுமாற்றம், சிரிப்பை உண்டாக்க தோள் மீது பதிந்த அவனது முகத்தை திரும்பி பார்த்தாள் தவிப்பாக.
"டேக் கேர்.. குட் நைட்.." என மென் தீ மூட்ட மூக்கோடு மூக்கு உரசி, இதழ் தீண்டாமல் நூலளவு இடவெளியில் கூறியவனை கண்டு, திக்பிரம்மை பிடித்தாற் போல் பார்த்தாள்.
அவன் விலகளுக்கு பின்பு தான் சுயம் பெற்றாள். சிறு தொடுதலில் ஏதேதோ யோசிக்க வைத்து விட்டானே, என தலையில் அடிக்காத ஒரு குறை தான் அவளது நிலை.
"குட் நைட்.." என்றவன் விழிகளை சிமிட்டி, அவளை விலகி வழியனுப்பி விட்டு தூங்க சென்று விட்டான். ஏதோ ஒன்று நினைத்து ஏமாந்தவள், வீடு வந்ததும் ஏமாந்து போனதை எண்ணி குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அதற்கு அவன் அனுப்பிய பதில் கண்டவள் முகம் பன்மடங்கு குங்குமமாக சிவந்ததில், தலையணையில் தனது நாணத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது என அறிவுரை கூறுபவன், ஒருவன் இப்படி எல்லை மீறி பேசிய விடயம் யாதவ் மூலம் காதுக்கு வந்திட சும்மாவா இருப்பான்? அடித்து மூஞ்சி மொகரையெல்லாம் உடைத்து விட்டான். போதக்குறைக்கு சத்தமின்றி கொன்றே விடுவேன் என எச்சரிக்கையும் செய்து விட்டான் ரஞ்சித்திடம்.
மறக்க நினைப்பவளிடம் ஏன் இதனை கூற வேண்டுமென்று தான் கூறவில்லை அவளிடம்.
காலமும் பொழுதும் யாருக்காகவும் காத்திராது. அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருந்ததில் ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய தினம் அப்போது தான் வேலை முடித்து சீக்கிரமே வந்தவன் சோர்வில் உறங்க நினைக்க, அலைபேசி ஒலி எழுப்பி மொத்த தூக்கத்தையும் கெடுத்து வைத்தது.
அழைப்பை ஏற்றவன் சேதி கேட்டு, நேரங்காலம் பார்க்காது கோயம்புத்தூர் விரைந்தான். எது நடக்க கூடாது என நினைத்தானோ, அது இன்று நடந்து விட்டது.
முருகன் அவர்கள் கீழே விழுந்ததில், பலமான அடியால் பக்கவாதம் வந்துவிட்டது. ஒருபக்கம் கை, கால் செயல்படவில்லை. வாயும் கோணியது. சில வருடங்களுக்கு முன்பே அவருக்கு அதீத ரத்தக் கொழுப்பால் ஸ்ட்ரோக் வந்தது. அப்போதே மருத்துவர்கள் உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை செய்தார்.
தான் ஒரு மருத்துவனாக இருந்து கூறினால் கேட்க மாட்டார் என்றெண்ணி, வைத்தியம் செய்த டாக்டரை விட்டே இதை கூற சொல்லியிருந்தான் பிரதீஷ்.
விதி வலியது என்பது போல் அது இன்று நடந்திட, மருத்துவமனையில் படுத்த படுக்கையில் கிடந்தார் முருகன். மருத்துவர்களும் இயலும் வரை போராடி பார்த்து கையை விரித்து விட்டனர்.
அவனுக்கும் இது பற்றி தெரியாததல்ல. இனி எதுவும் பழைய நிலைக்கு திரும்ப போவதில்லை என ஊகித்தவன், போன் வழியே அவரின் நிலை என்னவென அம்மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.
சில மணி நேரங்களுக்கு பின் வீடு வந்தவன், படுத்த படுக்கையாக இருக்கும் முருகனை இயலாமையோடு பார்த்தான்.
சாவித்திரி பாட்டி பதறி துடித்து ஓடி வந்து அவனை கட்டிக்கொண்டு புலம்ப, மறுபுறம் தெய்வானை அவர்கள் அவனை நெருங்காமல் விலகி நின்று பார்த்தபடி வாய் பொத்தி அழுதார். இத்தகைய சூழ்நிலை வருமென எவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. விதி வலியது என உணராமல் யாவரும் அழுது கொண்டிருந்தனர்.
நிறைய விடயத்தில் அவனை இழிவாக பேசியுள்ளார். சித்தப்பா ஆகிற்றே. எப்படி அவன் மனம் இந்நிலையில் அவரை கண்டு வருந்தாமல் இருக்கும்?
"உங்களை இப்படி.. பாக்கவே கஷ்ட்டமா இருக்கு சித்தப்பா.." என அவன் கூறிய ஒரு வார்த்தையில் எல்லோரும் அழ ஆரம்பித்து விட்டனர்.
அவரது முகத்தை கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக நிமிர்ந்து பார்த்திடவில்லை. இன்று இந்நிலையில் காண விசனம் அடைந்தவன், என்ன பேசுவதென தெரியாமல் அவர் இடது உள்ளங்கைக்கு ஒரு அழுத்தம் தந்து விட்டு ராஜீவ்க்கு ஆறுதல் கூற வெளியேறினான்.
அப்போது கூட அவனை துச்சமாக தான் பார்த்து வைத்தார் பெற்றவரும், அவரை பெற்றவரும். விஷயமே வேறு அதனால் தான் அப்பார்வை காட்டமாக அவன் மீது படிந்தது.
ராசிகாவை அன்றிரவு அவன் காப்பாற்றிய சேதி, மாணிக்கம் அடியாட்கள் மூலம் சண்முகம் ஐயா காதை எட்டியது. முதலில் அவர் நம்பவில்லை. பின்பு நம்பி விட்டார்.
அவர் யாதவ் வருகை பற்றி கூறிய பின்பு தான், பேரன் மீண்டும் வயதுக்கு மீறிய விடயங்கள் எல்லாம் செய்கிறான் என தவறாக மனக்கணக்கிட்டார்.
சில மணி நேரம் ராஜீவ்விடம் பேசி ஆறுதல் அளித்தவன், முடிந்த வரை இனிமேலாவது கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு, யாதவ் வீட்டிற்கு கிளம்பினான் விடியற்காலை.
வாசல் நோக்கி செல்பவனை அழைத்தார் சண்முகம் அவர்கள். நடந்தது என்னவென தெரிந்த கொள்ளும் நோக்கில்.
அவரும் ஆரம்பத்தில் இருந்தே குதர்க்கமாக கேள்வி கேட்க, கடுப்புற்றவன் "இப்போ ரொம்ப முக்கியம். இன்னும் நீங்கலாம் என்னை ஆராய்ச்சி பண்ணுறதை விடலையா?" அவன் எத்தகைய நேரத்தில் எப்படியொரு கேள்வி கேட்கிறார் என நொந்தவன் வாய்க்கு வந்தப்படி பேசினான்.
"அவ என் பொண்டாட்டியா இருந்தா என்ன? வப்பாட்டியா இருந்தா உங்களுக்கு என்ன?" என்றவன் அதற்கு மேல் பேச்சை வளரக்காது காரை கிளப்பிக் கொண்டு பறந்து விட்டான்.
அவனது பேச்சில் சீற்றமாக பார்த்தப்படி நின்று விட்டார். வேறு என்ன செய்ய முடியும் அவரால்? பேசினால் ஏடாகூடமாக பேசுகிறான். பெண்ணை பார்த்து விட்டு, யாரோ ஒருவளுக்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறானே என்ற யோசனையோடு விக்கித்து நின்றார்.
"என்ன பா? என்ன சொல்லிட்டு போறான்?"
"அதை விடு சதாசிவா. வீடு கட்டுறது மட்டும் எந்த விதத்துலயும் தடை ஆகக்கூடாது."
"இல்லை பா.. அன்னேக்கி ரங்கராஜன் சாவு. இப்போ முருகன்.." என்றவர் ஒருவித பயத்தில் தயங்கிட..
"அவனுக்கு இது இப்போ வந்த பிரச்சனை இல்லை. இது ஏற்கனவே இருந்த ஒன்னு. இப்போ கீழ விழுந்ததுல நிரந்தரமா இந்த நிலைமைக்கு போய்ட்டான். இதுக்கும் மத்ததுக்கும் முடிச்சு போடுறது ரொம்ப தப்பு.."
"சரி பா.. அதை விடுங்க.. இவன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுறானா இல்லையா?"
"அவன் கல்யாணம் பண்ணாமா எங்க போய்ட போறான். நமக்கு கவுரவம் தான் முக்கியம் சதாசிவா. அவன் மத்த விஷயத்துல எப்படி வேணாலும் இருக்கட்டும். ஆனால், இதுல நம்ம முடிவு தான், நடக்கணும்.. நடத்தணும்.." என்றார் அவன் எண்ணத்தை சூனியம் ஆக்கும் விதமாக.
"எவ்வளவு திமிரு இவனுக்கு? வர கோவத்துக்கு, அப்படியே செவுள்ள அறை வைக்கலாம் போல இருக்கு. ரோட்ல எவளோடயோ கொஞ்சிட்டு நிக்கிறான். காதுல கேக்கும் போதே அவமானமா போய்டுச்சு.." என பெற்றவர் பொங்க, அவரை தோளில் தட்டிக் குடுத்து வில்லத்தனமாக ஒரு பார்வை பார்த்து வைத்தார் சண்முகம் அவர்கள்.
"அவன் எவ பின்னாடி வேணாலும் திரியட்டும். பொண்ணு நாம பாக்குறது தான் அவனுக்கு பொண்டாட்டி புரியுதா? எவளைய கல்யாணம் பண்ணுனாலும், இந்த வீட்டுல அவ நிம்மதியா இருந்துடுவாளா?"
தந்தையின் வார்த்தையை காதில் வாங்கிய போதும், அவருக்கு கோவம் மட்டும் குறையவில்லை. நள்ளிரவில் ராசிகாவோடு தெருவில் நின்று பேசியது முதற்கொண்டு, அவளை காப்பாற்றியது அனைத்தும் இருவருக்கும் தெரிந்து போனது.
'இவன் ஒருவனால் இன்னும் என்னவெல்லாம் அசிங்கம் வர போகிறதோ?' என உண்மை புரியாது, தந்தையானவர் அவரின் தந்தை பேச்சை கேட்டு தலை கால் புரியாது ஆடிக்கொண்டிருக்கிறார்.
பேதையின், தெகிட்டாத காதல் சூனியம் ஆகும் நாள் வந்தால் அவன் தாங்கிடுவானா?
தேன்மழை💖💖
