தூகை 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

17

 

அன்று..!

மேகா என்று கத்திக்கொண்டே வந்த நிரஞ்சன் குரலில் என்றும் இல்லாத சிறு எரிச்சல் இப்போது எல்லாம்..! அதை வதனியும் கண்டு கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் என் செய்வது? 

இப்போது எதற்கு கணவன் கூப்பிடுகிறான் என்று அவளுக்கு நன்றாக தெரியும் அமைதியாக சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இது மேகா? போன வாரம் தானே ஒரு லிட்டர் கடலை, நெய் அரை லிட்டரும் நல்லெண்ணை அரை லிட்டரும் வாங்கி வந்தேன். என்ன அதுக்குள்ள மறுபடியும் மளிகை சாமான் லிஸ்ட்ல அத எழுதி இருக்க?” கேட்டான்.

வீட்டு தலைவனாக அதிக பொறுப்புகள் அவன் தலையில் ஏற, எப்போது எல்லாம் இவ்வாறு சிறு சிறு விஷயத்திற்கும் சிடுசிடு என்று எரிந்து விழ ஆரம்பித்தான் மனைவியிடம். 

மனைவிக்குமே கணவனின் இந்த சுமை புரிகிறது ஆனாலும் என்ன செய்வது? நிரஞ்சனின் சகோதரிகள் அம்மாவை பார்க்க வரேன் என்று காலையில் வந்தார்கள் என்றால் மாலையில் தான் செல்கிறார்கள்.

போகும் போது “ஸ்கூல்ல இருந்து பிள்ளைக பசியோடு வந்து இருப்பாங்க. ஏதாவது கேப்பாங்க” என்று இங்கிருந்து செய்து கொண்டு செல்கிறார்கள். 

பிள்ளைகளுக்கு எனும் போது எப்படி வேண்டாம் என்றோ இல்லை முடியாது என்றோ தான் சொல்ல முடியுமா வதனியால்? 

அதைவிட அவள் ஒரு வார்த்தை செய்து தர முடியாது இல்லை வேலை இருக்கிறது என்று விட்டால்.. அவ்வளவுதான்..! அதைப் பிடித்துக் கொண்டு அம்மாவிடம் ஒரு புலம்பல் சகோதரனிடம் ஒரு புலம்பல் என்று மாறி மாறி இருவரும் பஞ்சாயத்து வேற வைப்பார்கள் என்று தெரியும்.

அதனாலேயே அலுப்பு பார்க்காமல் செய்து கொடுத்து விடுவாள். எப்பொழுதும் இவர்கள் குடும்பத்திற்கு வரும் மளிகை சாமான் பட்ஜெட் இப்பொழுது இரண்டு மடங்கு ஆகிறது. 

கூடவே தினசரி பிசியோதெரபிக் என்று வரும் பெண்ணுக்கும் வாராவாரம் கட்டணம் கொடுக்க வேண்டும் அந்த செலவு வேறு.!

வாரம் ஒரு முறை மருத்துவமனை சென்று வர கால் டாக்ஸி புக் செய்து அன்னையை அழைத்துக் கொண்டு சென்று வர வேண்டும். மாத்திரை மருந்து எக்ஸ்ரே ஸ்கேன் என்று இத்தியாதி இத்தியாதி என்று அது ஒரு கணிசமான தொகையைக் கறந்துவிடுகிறது.

எல்லாத்துக்கும் மேல இந்தோ அந்தோ என்று இழுத்துக் கொண்டிருக்கும் நிரஞ்சனின் பதவி உயர்வும் இன்னும் வந்த பாடு இல்லை. அது வந்தால் கணிசமாக சம்பள உயர்வு வரும்.‌ கொஞ்சம் சமாளித்து விடலாம் என்றால் அதுவும் அவனுக்கு ஆட்டம் காண்பிக்கிறது. 

இது எல்லாவற்றையும் சமாளித்து விடுவான். அவனின் காதல் கிழத்தி அருகில் இருந்தாள் என்றால்..! 

ஆனால் அவள் எப்பொழுதெல்லாம் பிரேமாவின் அறையில் தான் உறங்குகிறாள். மகளை கணவனோடு படுக்க வைத்துவிட்டு பிரேமா கட்டில்படுத்துக் கொள்ள, சிறு மெத்தையை கீழே விரித்து அவள் கீழேதான் படுத்துக் கொள்கிறாள். ஏதேனும் ஆத்திர அவசரத்திற்கு அவர் எழுந்தால், அவருக்கு பார்க்க வேண்டும் அல்லவா? 

தன் அம்மாவை மனைவி நன்றாக கவனித்துக் கொள்வது அவனுக்கு மன நிறைவை திருப்தியை சந்தோஷத்தை தருகிறது தான். ஆனால் அதையெல்லாம் தாண்டி.. அவளது ஸ்பரிசத்திற்காக ஏங்கும் அவனது காதல் மனம்..!

அது கிடைக்காமல் அவனின் மனது சிறு எரிச்சலையும் தகிப்பையும் ஏற்படுத்துகிறது. 

அதோடு கூட எக்கச்சக்கமாக ஆகும் இந்த வீட்டு செலவுகள் அவனை விழிப்பிதுங்க வைக்கிறது. 

கணவனை திரும்பிப் பார்த்தவள் பொறுமையாக “நம்ம மட்டும்னா பரவால்லங்க. அண்ணிக ரெண்டு வேளை இங்கதான் சாப்பிடுறாங்க. கூடவே நைட்டு போகும்போது பிள்ளைங்களுக்கும் எடுத்துட்டு போறாங்க.. அப்படி இருக்கும்போது என்னங்க பண்றது? கொஞ்ச நாளைக்க எப்படியாவது பல்ல கடிச்சு சமாளிச்சுப்போம்” என்று தேறுதல் வார்த்தைகளை ஆறுதலாக கூறினாள்.

இவன் இப்படி எரிந்து விழுவதற்கு அவளும் பதிலுக்கு பதில் “நான் என்ன எனக்கு செலவு செய்கிறேனா இல்லை என் பிறந்த வீட்டுக்கு செலவு செய்கிறேனா? இல்லை என் பிள்ளைக்கு செய்கிறேனா? எல்லாம் உனக்காகவும் உன் குடும்பத்துக்காக நான் நாயா உழைக்கிறேன்.. செலவெல்லாம் நல்லா பாருங்க.. உங்க அக்காமாரு ரெண்டு பேரும் கொட்டிக்கிறாங்க.. அவங்க பிள்ளைகளுக்கும் சேர்த்து இங்கே இருந்தே சமைச்சிட்டு போறாங்க.. அத்தனையும் சலிக்காம நானும் சமைச்சு கொடுக்கிறேன்ல.. இதெல்லாம் கேட்க ஒரு நாதி இல்ல எனக்கு. ஆனா.. செலவுனு சொல்லிட்டு மட்டும் என்கிட்ட வருவீங்களா?” என்று அவளும் எரிந்து விழலாம் தான்..!

சுடுச் சொல்லால் அவனை தாக்கலாம் தான்..! அவனுடன் சண்டை போடலாம் தான்..!

ஆனால் அதனால் என்ன பயன்? இருவரும் முட்டிக் கொள்ளத்தான் நேரிடும் என்று புரிந்தவள் அமைதியாக கணவனுக்கு எடுத்து கூறினாள்.

சட்டென மனைவியை இடுப்போடு இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவன், 

அவள் வாசத்தை சுவாசித்து.. அவள் ஸ்பரிசத்தை அனுபவித்து.. சிறிது நேரம் தன்னை அமைதி படுத்தியவன் “சத்தியமா முடியலடி..!” என்றான் தாபமாக. 

அவனின் இந்த முடியலடி என்ற வார்த்தைக்கான பொருள் மனைவி அவளுக்கு மட்டுமே புரியும்..!

என்னதான் குடும்ப சுமை பாரம் என்று கூறிக்கொண்டு புலம்பி திரிந்தாலும் அனைத்தையும் அழகிய தாம்பத்தியத்தில்..‌‌ மனைவி கொடுக்கும் அந்த ஆறுதலில்.. அந்த பெண்மையின் சுகத்தில் அனைத்தும்.. அனைத்துமே மறக்கடித்து புது உத்வேகத்தோடு மறுநாள் ஓட வைக்கும் அல்லவா?

மனைவி வாசம் கிட்டாமல்.. அவள் ஸ்பரிசமே படாமல்.. அவனால் முடியவில்லை. தொலைவிலிருந்து கண்களால் அவளை கொத்தி தின்றால் மட்டும் போதுமா? முடியாதே..!

அவளை இறுக்கி அணைத்து வேண்டும்..! 

அவளின் மென்மைகள் என் வன்மார்பில் முட்டி மோத வேண்டும்..!

அந்த மென்மைக்குள் நான் தொலைய வேண்டும்..!

அவளின் சிவந்த ஈர உதடுகளின் முத்தங்கள் அளவில்லாமல் வேண்டும்..!

ஒவ்வொரு முத்தத்திற்கும் பதிலாக பத்து முத்தங்கள் நான் திருப்பி தர வேண்டும்..!

அவளின் புடவை வாசம் வேண்டும்..!

அவளின் செல்லச் சிணுங்கல்களை கேட்க வேண்டும்..!

அவள் தலையில் சூடும் சிறு துணுக்கு ஆனாலும் அந்த பூவாசம் வேண்டும்..!

உடை கலைந்த ஆலிங்கனம் வேண்டும்..!

ஈருடல் ஓர் உடலாய் மாறும் அந்த அற்புத உணர்வுகள் வேண்டும்..!

இவ அத்தனைக்கும் மனைவி அருகில் வர வேண்டுமே??

என்று ஏக்கத்தோடு அவன் சுற்றிக் கொண்டிருக்க.. கணவனின் ஏக்கம் புரிந்து அவன் முதுகை வருடி ஆசுவாசப்படுத்திய மனைவி அவளோ “எல்லாம் கொஞ்ச நாள் தான் பா. சீக்கிரமே சரியாயிடும். நாம இதையும் கடந்து போயிடுவோம்” என்று கொஞ்சிப் பேசியதும் சிறு ஆறுதல் கொண்டவன், “சரி நான் பேங்க்கு கிளம்புறேன்” என்று கிளம்பினான்.

அம்மாவை பார்த்து அவரிடம் நலம் விசாரித்து காலை உணவு உண்டாகி விட்டதா? உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது? இரவு சரியாக உறங்கினாரா? வதனி சரியாக கவனித்துக் கொள்கிறாளா? சகோதரிகள் இருவரும் அவ்வப்போது வந்து செல்கின்றனரா? அவர்களுக்கு எந்த கவலையும் இல்லையே? இது போல எல்லாம் அவன் பேசி செல்லாவிட்டால்.. இரவு கலைத்து வருபவனை பிடித்துக்கொண்டு அத்தனை பேசி ஒரு வழியாக்கி விடுவார். 

இப்பொழுதும் மருமகளைப் பற்றி அத்தனை குறை தான் படித்தார்.

அவனின் மேகா தன் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்வாள். வருகிற தன் சகோதரிகளும் மனக்கோணாதவாறு அவர்களிடம் நடந்து கொள்வாள்.. இவளின் மனதை அவர்கள் நோகடித்தாலும் பூமாதேவி போல அனைத்தும் பொறுத்து வீட்டில் அமைதியை நிலைநாட்ட அவள் பெரும் பாடுபடுகிறாள் இன்று அனைத்தும் நிரஞ்சனுக்கு தெரியும்.

ஆனாலும் பேருக்காக அம்மாவிடம் இதெல்லாம் கேட்டு அதன் பின்னே வங்கிக்கு கிளம்பி சென்றான்.

நிரஞ்சனை நல்ல மனநிலையில் வதனி அனுப்பி வைத்தாலும் எதையாவது பேசி அவனது மனதை எரிச்சல் படுத்திய அனுப்பி வைப்பார் பிரேமா. 

மகன் எங்கே தன்னை கவனிக்காமல் விட்டு விடுவானோ? நமக்கு வைத்தியம் செய்வது தண்ட செலவு என்று மருமகள் தலையணை மந்திரம் ஓதி விடுவாளோ? இந்த வயதான காலத்தில் நம்மை பார்க்காமல் விட்டுவிடுவார்களோ? இல்லை ஏதாவது ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவார்களோ? நடக்க முடியவில்லை என்றால் பாத்ரூம் போக கூட நம்மால் முடியாதே?? என்ற அவரின் மனதின் பயமே அவரை இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள செய்தது. 

முன்னே விட இப்பொழுது வதனியை வார்த்தைகளால் வாட்டி வதைத்தார். கூடவும் பெண்களும் வந்துவிட மூவருமே சேர்ந்து, அம்மாவுக்கு இதை செய்தால் தான் உடம்பு நன்றாக இருக்கும்.. அப்படி செய்தால் தான் அவங்களுக்கு ருசியாக சாப்பிட பிடிக்கும்.. எளிதாக ஜீரணம் ஆகும் என்றெல்லாம் அவர்கள் அவளை ஒரு வழியாக்கினார். 

இவ்வளவு பேசுபவர்கள் அம்மாவுக்கு பிடித்ததை அம்மாவுக்கு நல்லது என்பதை அவர்தள் வீட்டில் இருந்தே சமைத்துக் கொண்டு வரலாம் அல்லவா? 

ஆனால் அது மாட்டார்கள்..! அம்மாவை பார்க்க வேண்டும் என்று அவசரத்தில் காலையிலே வந்து விடுவார்களாம். வந்து இங்கே இவளை போட்டு வாட்டி வதைப்பார்களாம். அவர்கள் கேட்டதை செய்து கொடுக்கவில்லை என்றால் அவள் நல்ல மருமகள் இல்லை என்று ஏசுவார்களாம்.

ம்ம்ம்.. கலி காலம்..!!

பெருமூச்சு விட்டு அமைதியாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறாள் வதனி அனைத்துக்கும் காரணம் அவளின் கணவனின் அளப்பரிய காதலும் அளவில்லா நேசமும் அலைக்கடலன பொங்கும் அன்பும்..!

‘இன்றும் கேண்டின்ல தான் சாப்பாடா?’ என்று எண்ணமே நிரஞ்சனுக்கு வெறுப்பாய் இருந்தது. ஏதோ ஒன்று இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. இப்பொழுது எல்லாம் அடிக்கடி மதிய உணவை கேண்டில் தான் முடிக்க வேண்டி இருக்கிறது.

ஏனென்றால் காலை மிருவை பள்ளிக்கு அனுப்பிய பிறகு வதனிக்கு முழு வேலை இழுத்துக் கொள்ளும். பிரேமாவை கவனிப்பதில் அவரை குளிப்பாட்டி.. உடைமாற்றி அவருக்கு காலை உணவு கொடுத்து.. மாத்திரை கொடுத்து.. உடற்பயிற்சி செய்ய வைத்து.. என்று அதிலேயே நேரம் சென்று விட எங்கிருந்து கணவனுக்கு மதியம் செய்து அனுப்புவது? 

நிரஞ்னுக்கும் புரிகிறது மனைவிக்கு அதிக வேலை என்று. அதனால் “நான் கேண்டினில பார்த்திருக்கிறேன் மேகா.. ஸ்ட்ரெஸ் ஆவாத” என்று வார்த்தைகளால் சொன்னாலும்.. மனதோ 

“பரவால்லங்க நான் உங்களுக்கு சமைச்சு தரேன்” என்று கூறும் மனைவியின் வார்த்தைகளை எதிர்பார்த்து ஏமாந்து போனது. 

அலுப்போடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அருகில் மற்றொருவன் அமர்ந்து உணவு கொண்டிருந்தான் அவன் ஜோதிமணி. அதுவும் போனில் யாரிடமோ அத்தனை சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.. அவன் எதிரில் வந்து அமர்ந்தார் சுந்தர்ராஜன். 

இவனை விட சற்று வயது மூத்த மனிதர் ரொம்ப காலமாக இதே கிளையில் கேஸியராக பணியாற்றி வருகிறார். கை அத்தனை சுத்தம். பெரிதாக யாரிடமும் அப்படி பேசி விட மாட்டார்.

“சொல்லுமா? சரிம்மா.! மறக்காம வாங்கிட்டு வரேன்மா” என்று உணர்ச்சி இல்லாத குரலில் அவர் பதில் கூற..

தன் அருகில் இருந்த நிரஞ்சனிடம் ஜோதிமணி அவரை சுட்டிக்காட்டி “பாவம் அவர். அவர் பொண்டாட்டி நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டேங்குறாங்க. ஏதாவது வாங்கிட்டு வா வாங்கிட்டு வானு சொல்லிட்டு இருப்பாங்க. இவரும் சலிக்காம எல்லாத்துக்கும் சரி சரி சொல்றார். பாவம் மனுஷன்” என்று கிசுகிசுத்தான்.

“வேலை செய்ற இடத்திலேயாவது நிம்மதியா சாப்பிடலாம்னு பார்த்தா அப்பவும் ஃபோன போட்டு அது வாங்கிட்டு வா.. இது வாங்கிட்டு வானு நொச்சம் பண்ணிக்கிட்டே இருந்தா என்னதான் பண்றது நிரஞ்சன் சார்?” என்று அவன் கேட்க, மெல்ல தலையசைத்து ஆமாம் என்று புன்னகைத்தான் நிரஞ்சன். 

ஏனென்றால் சற்று முன்புதான் மறக்காமல் மளிகை லிஸ்ட் வாங்கி வர சொல்லி வதனி ஃபோன் செய்திருந்தாள். 

“ஆனா நீங்க அப்படி ஒன்னும் வருத்தப்படுற மாதிரி தெரியலையே? ஜாலியா தானே பேசுறீங்க?” என்று நிரஞ்சன் கேட்டதும், 

ஜோதியோ சிரித்துக் கொண்டே “என் பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தேன் சார். அவனைப் நம்மள போல தான்” என்று சிரித்தான்.

ஜோதிமணியிடம் பேசிக் கொண்டே இருந்த நிரஞ்சன் “ஏதாவது பார்ட் டைம் ஜாப் இருந்தா எனக்கு சொல்றீங்களா?” என்றதும் அவன் அதிர்ச்சியோடு,

“என்ன சார்? நெக்ஸ்ட் மேனேஜர் போஸ்ட் உங்களுக்கு கிடைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க.. நீ என்ன இப்படி கேக்குறீங்க?” என்றான் அதிர்ச்சியோடு.

நிரஞ்சனும் தன் அம்மாவின் உடல்நிலை மற்றும் வீட்டின் பணப்பிரச்சனை அனைத்தும் கூறினான். 

“ரொம்ப கஷ்டம் தான் சார் உங்க நிலைம.. நான் ஒரு ஐடியா சொல்றேன். இப்ப புதுசா சில ஆப்ஸ் எல்லாம் வந்திருக்கு. இதுல நம்ம ரீல்ஸ் போடறதுல கூட சம்பாதிக்கலாம். நீங்க ரீல்ஸ் கூட போட வேணாம் ஜஸ்ட் அதுல லைவ்ல இருந்தாலே நிறைய பேர் வந்து கிஃப்ட் போடுவாங்க. அப்புறம் அதை அப்படியே பணமா கன்வெர்ட் பண்ணி தருவாங்க. நான் அதுல இருக்கேன். எனக்கு அதுல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்காங்க‌. உட்கார்ந்த இடத்திலேயே மாசம் 5000ல இருந்து 10,000 அதுல சம்பாதிக்கலாம்” என்றான்.

அப்படியா என்ன ஆப் என்றவனிடம் ‘வீ ஃப்ரெண்ட்ஸ்’ என்று அந்த ஆப்பை அவனிடம் காட்டி.. அதில் எப்படி லைவ் போக வேண்டும்.. எப்படி காயின்ஸ் பெற வேண்டும்.. என்று விதிமுறைகளை சொல்லிக் கொடுத்தான் ஜோதிமணி. 

எதுவும் இலவசமாக கிடைத்து விடாது..!

அப்படி கிடைக்குது என்றால் அதற்கான விலை ஒன்று உண்டு..!

நிரஞ்சனின் விலை என்னவோ??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top