கள்வன் 20
"ஒரு திருடனோடு என்னால் வர முடியாது!!" என்று அவள் கத்தியதை எல்லாம் காதில் வாங்காமல்.. அவளை ஒற்றைக் கையால் அலேக்காக தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டவன் தன் புரவியில் அமர்ந்து அவ்விடத்தைவிட்டு பறந்தான் சோமனின் படைகள் அவ்விடம் வருவதற்குள்…
மெல்ல புலர்ந்தது இளங்காலைப் பொழுது..
பறவைகளின் இனிய குரலோசைகளும்…
சிறு சிட்டுகளின் ரீங்கார சத்தங்களும்…
தென்றல் காற்றின் மெல்லிய ஈரமும்..
ஹிரன்மாயி காதுகளிலும் தேகங்களிலும் வந்து வந்து மோத.. அவளின் சிப்பி இமைகள் படபடவென பட்டாம்பூச்சி சிறகுகளை போல படப்படத்து.. தன் சிறகுகளை மெல்ல விரிக்க.. அவள் இருந்த குகை போன்ற அமைப்பை பார்த்து அதிர்ந்து எழுந்தவளுக்கு அப்பொழுதுதான் நேற்றைய நிகழ்வுகள் நிழற்படங்கள் ஆக கண்முன்னே ஓட.. முதலில் தன் ஆடைகளை தான் ஆராய்ச்சியாக பார்த்தாள்.
"மயக்கத்தில் இருக்கும் பெண்ணை துகிலிரிக்கும் கயவன் இல்லை யான்!!" என்ற கோப குரலில் ஒருமுறை மேனி துடித்து அடங்கியது ஹிரன்மாயிக்கு!!
ஒரு முறை மட்டுமே உதடு கடித்து தலைகுனித்தவள், அடுத்த கணம் அவனை நிமிர்ந்து பார்த்து..
"தவறில்லையே அதில்!! ஒரு கள்வன் ஒரு கன்னிப்பெண்ணை கவர்ந்து வந்திருக்கும் பொழுது.. இதைக்கூட நான் சரி பார்க்கவில்லை என்றால்.. நான் எல்லாம் பெண்ணா??" என்றாள் அவளும் பதிலுக்கு..
"பெண்ணல்ல.. பெண்ணரசி!! சரி தானே!!" என்றான், அவன் அவளை தீர்க்கமாக பார்த்துக்கொண்டு.
'கண்டுகொண்டான் கள்வன்!' என்று சிறு மெச்சுதல் பார்வை மட்டுமே ஹிரன்மாயிடம்..
"ஆம்!! கண்டு கொண்டேன்!!
என் முன் உருவிய வாளுடன் நின்ற பொழுதினில் உன் வீரத்தை கண்டு கொண்டேன்!!
நீ வாள் பிடித்து சுழற்றும் வேளைதனில் வீர மிக்க நங்கை என்று கண்டு கொண்டேன்!!
என்னுடனே சரிக்கு சமமாக நீ சமரிடும் பொழுது எல்லாம் கற்ற வித்தகி என்று கண்டு கொண்டேன்!!
ஆனால்.. உன்னை கொல்லவென்று சரம் தொடுத்து வந்த அம்புகளை கண்டதும் நீ சாதாரண வித்தகி மட்டுமல்ல. . விஜயங்களை கொண்டுவரும் இளவரசி என்றும் கண்டு கொண்டேன்!!"
'கூடவே என் மனதும் உன்னிடம் பறிபோனது என கண்டுகொண்டேனடி!' என்று கடைசி வாக்கியத்தை மட்டும் தனக்குள் முடித்துக் கொண்டான் ஜலந்திரன்.
"பரவாயில்லை!! இனி பாதகமில்லை!! ஒழுங்காக என்னை விடுவித்து விடு" என்று அரசியின் நிமிர்வுடன் அவள் கூற. .
"நான் எங்கே உங்களை சிறை செய்திருக்கிறேன் இளவரசி!!" என்று இரு கைகளையும் ஜலந்திரன் விரிக்க.. அப்பொழுது அவன் மேனி மீது போர்த்திருந்த மேலாடை காற்றில் படப்படத்து, ஒரு பக்கம் சரிய.. அவனது இடது கை புஜத்தில் பச்சிலை வைத்து போட்டுயிருந்த கட்டை மீறி இரத்தம் கசிவதை கண்டு நெற்றி சுருங்க யோசித்தவளின் எண்ணங்கள் பின்னோக்கி செல்ல. ..
"வரமாட்டேன்!! எனை தீண்டாதே!! என்று வம்பிழுத்தவளை வம்படியாக இடை வளைத்து தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவன் புரவியின் மீது ஏறி வரும் சமயத்தில்.. பாய்ந்து வந்த அம்புகளில் ஒன்று அவள் மீது பாய்வதற்கு வர.. அவன் முதுகு பின்னால் இருந்த அவளது கண்கள் தன்னை நோக்கி வந்த அம்பை பார்த்ததும் தெரிந்தது.. 'இனி அவ்வளவுதான்!! மரணத்திற்கு தயாராகுவோம்!!' என்று அவள் கண்மூடி இருக்கையில்.. சட்டென்று ஜலந்திரன் அவளை தன் முன்னால் இழுத்துப் போட.. வந்த அம்போ அவளை முழங்கையை லேசாக உரசி சென்று, அவனது கை புஜத்தை பதம் பார்த்தது.
"கள்வா!! உனது கை…" என்று அவள் ஏதோ கூறும் முன் ஒரு கையால் அவளை அணைத்து பிடித்தபடியே மறு கையால் தன் புஜத்தில் குத்தி இருந்த அம்பை பிடுங்கி எறிய முயன்றவன், என்ன நினைத்தானோ தனது அம்பாரியில் அதை சொருகிக்கொண்டான். அவளது மேலாடையின் முந்தானையை தன் கைகளால் இறுக்கமாக சுற்றிக் கொண்டான் கொண்டவனை போல!! அவளைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினான் கள்வன்!!
"இதெல்லாம் எனக்கு சாதாரணம் பெண்ணே!! ஒரு அம்பு தொய்த்து இந்த ஜலந்திரன் விழுந்து விடுவானா என்ன??" என்று கேலியாக அவளிடம் கதைத்தவன் அதன்பின்னே புயல் வேகத்தில் புரவியை செலுத்த.. சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல மயக்கம் கொண்டாள் மாது.
தன் முன் வீரமாக சண்டையிட்டவள் தன் ரத்தத்தை பார்த்து மயங்கி விட்டாளா?? இருக்காதே!! அவ்வளவு கோழை அல்லவே அவள்!! என்று யோசித்தவன் தன் அம்பாரியிலிருந்த அம்பை எடுத்து முகர்ந்து பார்க்க.. சற்றே நெடி ஏறியது அவனுக்கு.
ஏதோ சரியில்லை என்று புரிந்தவன், இப்பொழுது அவளை தன் இடத்திற்கு அழைத்துச் செல்ல நேரம் இல்லை என்று அருகில் இருந்த குகையில் அவளை கிடத்திவிட்டு தனக்கு தெரிந்த பச்சிலைகளை எடுத்து தன் காயத்திற்கும் அவளது காயத்திற்கும் மருந்தை வைத்து கட்டினான்.
"சந்தேகமே இல்லை இது விஷமே தான்!! ஆனால் ஒரு சாதாரண செல்வந்தர் பெண்ணை கொல்லுவதற்கு இத்தனை விஷம் தொய்த்த அம்புகள் ஏன் பாய் வேண்டும்?? அப்படி இவள் யார் ஆகத்தான் இருக்கும்?" என்று யோசித்தவன் மெல்ல மெல்ல திரையை விலக்கி அவள் பார்த்தது முதல் தன்னுடன் சரிநிகராக நின்று சமர் செய்தது வரை யோசித்தவனுக்கு சற்று ஏதோ புலப்பட்டது போல இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப்பகுதியில் இவர்களது சமிக்ஞை ஒலி கேட்க.. அவளை தனியே விட்டுச் செல்லவும் மனமின்றி.. வேறு வழியின்றி அந்த குகையை சிலபல இலை தழைகளால் மறைத்தவன், சமிக்ஞை ஒலி கேட்ட இடம் சென்றான், இவனும் சமிக்ஞை ஒலி கொடுத்துக் கொண்டே..
"ஜலந்திரா வசமாக மாட்டிக் கொண்டோம். நாம் நினைத்தது போல வந்தது செல்வந்தர் குமரி அல்ல.. வேந்தனின் குமரி!! நம் நாட்டு இளவரசி" என்றான் வந்தவன்.
"இதை எதிர் பார்த்தேன்!!" என்றான் யோசனையோடு ஜலந்திரன்.
"ஆம்!! அந்த சோமன் தான் நம்மை பிடிக்கவேண்டுமென இளவரசியைப் பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறான். கூடவே நம் அனைவரையும் தாக்க விஷம் தொய்த்த அம்புகள் சரமாரியாக வந்து விழுந்ததில்.. நம் வீரர்கள் மட்டுமின்றி இளவரசிக்கு காவலுக்கென்று வந்த மெய்க்காப்பளர்களும், சில வீரர்களும் அவரது தோழிகள் சிலரும் பலியாக்கப்பட்டனர்.
தப்பித்த நமது சில வீரர்களை நான் நம் வைத்தியரிடம் கொண்டு சென்றுவிட்டு விட்டேன். அவர் சில பச்சிலைகளை கொடுத்து வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார். உனக்கு ஒன்றும் இல்லையே? நீ நலம் தானே??" என்று அவனது நண்பனும் அந்த கூட்டத்தில் ஒருவனுமான சஞ்சீவன் கேட்க..
தன் கையை அவன் புறம் திருப்பியவன் "எனக்கும் சந்தேகம் வந்தது. அதனால் நம் வைத்தியர் எப்போதும் சொல்லும் பச்சிலைகள் கொண்டே என் கைக்கு கை வைத்தியம் பார்த்துக் கொண்டேன். அதை பற்றி ஒன்றும் பாதகமில்லை. ஆனால்…" என்று அவன் இழுக்க..
"என்ன ஆனால்…"
"அந்த இளவரசி என்னோடுதான் இருக்கிறாள்" என்றதும் அதிர்ந்த சஞ்சீவன், "என்ன சொல்கிறாய் ஜலந்திரா?? அது இன்னும் பெரும் பழியை நம் மீது அல்லவா சுமத்தும்!!" என்று திடுக்கிட்டான்.
"ஆம்!! ஏற்கனவே அங்க மாண்ட வீரர்களை நாம்தான் கொன்றோம் என்று இந்நேரம் திசைதிருப்பி இருப்பான் சோமன். கூடவே இளவரசியையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருக்கிறோம் என்று அந்த பழியையும் நம் மீது சுமத்தி விடுவான் சுளுவாக.. அவனையும் அவனது தந்தையும் பற்றி அறிந்தது தானே!!" என்று எகத்தாளமாக உதடு சுளித்தான் ஜலந்திரன்.
"நாம் எதற்காக இத்தொழிலை கையில் எடுத்தோம்.. ஆனால் இப்பொழுது இது வேற மாதிரி செல்கிறதே.. நம் நோக்கம் என்ன? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன?" என்று இக்கட்டில் மாட்டிக்கொண்ட வருத்தத்தில் பேசினான் சஞ்சீவன்.
"வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்!! அதைப் போல பாம்பின் கால் பாம்பறியும் சஞ்சீவா!! நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்!! எப்படியும் சோமன் நம்மை தொடர்பு கொள்ள முயல்வான்.. அதற்கு நீ இந்தக் காட்டிலேயே அலைந்து கொண்டிரு.. அவன் நம்மைத் தொடர்பு கொள்ள நினைக்கையில் அவனிடம் நீ பேச வேண்டும்"
"என்ன???!! அந்த கயவனிடம் நான் பேச வேண்டுமா??" என்று முறுக்கிக்கொண்டு நின்றவனின் முதுகை தட்டிக் கொடுத்த ஜலந்திரன்..
"வீரியத்தை விட காரியம் முக்கியம் சஞ்சீவா!! புரிந்து நடந்து கொள்வாய் என நினைக்கிறேன்!!" என்று கண் சிமிட்ட..
"புரிகிறது!! புரிகிறது!! நீ திட்டம் தீட்டி கட்டம் வகுத்து விட்டாய். அந்த கட்டத்தில் அவனை வாகாக மாட்டி விட வேண்டியது மட்டுமே இனி என் பொறுப்பு!! கவலை வேண்டாமடா நண்பன் இருக்கையில்!!" என்று ஜலந்திரனை தோளோடு அணைத்தவன், "நான் வருகிறேன்.. பத்திரம்!!" என்று அவன் கூற..
"ஏன்?? என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று ஜலந்திரன் கோபமாக பேச..
"ஹா.. ஹா.. ஹா.. நான் பத்திரம் என்றதே உன்னை தான் டா மடையா!!
அழகிய இளவரசி..
இருள் சூழ்ந்த நேரம்..
அதனால் கவனமாக இருந்து கொள்!!" என்று நமட்டு சிரிப்போடு அவன் கூறி செல்ல "சஞ்சீவா..!!!" என்று கத்திய ஜலந்திரனின் குரலில் முன்னிருந்த கோபம் இல்லை.
மெல்ல தன் சிகையை கோதிக் கொண்டவன் விரைவாக அந்த குகையை நோக்கிச் சென்றான்.
இரண்டு மூன்று முறை அவள் கையில் இருந்த பச்சிலையை மாற்றி வேறு கட்டிவிட்டான்.
இரவு முழுவதும் சற்றும் கண் அயராமல் அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவன், சுள்ளிகளைப் பொறுக்கி கற்களை கொண்டு தீ மூட்டி குளிர் காய்ந்தான்.
தீ!!! குளிரை விரட்ட வா?? இள மனதில் தோன்றிய தாபத்தை ஓட்டவா??
அதை எதையும் இப்பொழுது கூறாமல்.. தன் கையை அதிர்ச்சியாக பார்த்த இளவரசியை தான் இவனும் கண் சிமிட்டாமல் பார்த்தான்.
"பெரிய வீராங்கணை என்ற நினைப்பு!! லேசாக உரசி சென்ற விஷம் தொய்த்த அம்பையே தாங்க முடியாமல், பொத்தென்று மயங்கி விட்டாய்.. இதில் வாய்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை உனக்கு!!" என்றான் ஜலந்திரன் நக்கலாக..
மற்றவற்றை எல்லாம் விடுத்தவள், "விஷம் தொய்ந்து அம்பா? யார் எய்த்தது? எங்கிருந்து வந்தது?" என்று தனது முழங்கையில் பார்க்க அவன் பச்சிலை போட்டு கட்டி இருந்ததை பார்த்து "நிஜமாகவே வா கள்வா?" என்றாள்.
"அப்போது.. அப்போது.. என் கூட வந்த வீரர்கள்.. என் தோழிகள்.." என்று இவள் பதட்டத்தோடு கேட்க..
"தெரியவில்லை இளவரசியாரே!! அதில் பாதிக்கும் மேல் மாண்டு போனதாக காற்று வழி செய்தி வந்தது. அதுமட்டுமல்ல அப்படி மாண்டு போனவர்களின் பாதிக்கு மேல் என் கூட்டாளிகளும் கூட..!!"
"நாட்டை காக்கும் வீரர்கள் மரணமும்..
பொருட்களைக் கவர்ந்து செல்லும் கள்வர்களின் மரணமும் ஒன்றா??" என்று வீராவேசமாக பேசிய இளவரசியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன்..
"இருவருமே மனிதர்கள்தான் இளவரசி!! அதுமட்டுமல்ல.. ஒருவன் நல்லவனாக வாழ்வதும்.. கெட்டவனாக மாறுவதும்.. அவன் கையில் மட்டுமே அல்ல!!" என்றவனின் பார்வை சொன்ன செய்தியை படிக்க முடியாமல் கூர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்!!
ஜலந்திரன் நினைத்தது போலதான் சோமனும் நாடு முழுக்க பரப்பி விட்டான். கள்வனை பிடிக்க மாறுவேடத்தில் சென்ற இளவரசியையும் அவர்களது கூட்டத்தையும் கள்வர் கூட்டம் தாக்கி, விஷ அம்புகளால் அவர்களை கொன்று விட்டு இளவரசியை கவர்ந்து சென்று விட்டது என்று!!
சுகன்பிரதாபன் ஓய்ந்து போனார் மகளை காணாது இந்த ஒரே நாளில்.. லதாங்கி தேவியின் நிலைமை கூறி மாளாது. பூஜையறையே பலியாக கிடந்தார். தவம் இருந்து ஒற்றை மகளை பெற்று.. அருமை பெருமையாக வளர்த்து.. பல கலைகளையும் கற்று கொடுத்து.. போற்றி போற்றி வளர்த்தவர் இன்று யாரோ கள்வனின் பிடியில்.. நினைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது லதாங்கிக்கு.
"எந்த அரசும் வேண்டாம்!! அரியணையும் வேண்டாம்!! என் பெண்ணை ஏதேனும் ஒரு அரசனுக்கு மணமுடித்து வைத்து விடுங்கள். அவள் கணவன் பிள்ளைகள் என்று வாழ்வதை பார்த்தால் எனக்குப் போதும்.. அந்தக் கள்வனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு இந்த அரியணையை கொடுத்துவிடுங்கள் அரசே!!" என்று தன் கணவனின் காலை பிடித்துக் கதறிக் கொண்டிருந்தார் அன்னை..
சுகன்பிரதாபனுக்கு தன் மகளின் வீரமும் செருக்கும் நன்றாக தெரியும். எப்படியும் இந்த இன்னலில் இருந்து அவள் மீண்டு விடுவாள் என்று அவரிடம் நம்பிக்கை இருந்தது அரசனாக..
ஆனாலும் தந்தையல்லவா?? ஓய்ந்துதான் போனார்.
இச்சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து கஞ்சனராம ரெட்டியும் சோமனும் மக்களிடையே பல யூகங்களை பரப்பி விட்டனர்.
கன்னிப் பெண்ணை கடத்தி சென்ற கயவன் அவளை கன்னியாக தான் வைத்திருப்பானா??
களங்கம் அடைந்த பெண்ணவள் இனி அரசாள தகுதி உடையவளோ??
அங்ஙனம் ஆண்டால்... நம் நாட்டின் மானம் கப்பலேறி சென்று விடும்!!
என்று பலரால் பலதரப்பட்ட வார்த்தைகள் கூர் கத்திகளாக வந்து பாய்ந்தது சுகன்பிரதாபன் மற்றும் லதாங்கி நெஞ்சத்தில்!!
ஆனாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கை ஒன்றே பற்றென.. எதிர்வினை ஆற்றாமல் தன் மகளை தேடும் பணியை முடுக்கி விட்டார் அரசர். கூடவே மெய்காப்பாளர் படையையும்.. அரசு ஆணையிடும் முன்னே வந்து விட்டிருந்தது அப்படை. காட்டை சல்லடை போட்டுத் தேடி தங்கள் இளவரசியை கண்டுபிடிக்க..
ஒருபுறம் வீரர்கள் மறுபுறம் மெய்காப்பாளர் வீரர்கள் அதற்கிடையே சோமனின் ஆட்கள்.. அனைவரும் அவ்விடத்தை வலைபோட்டு தேடியும்.. கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. ஹிரன்மாயியையும் அவளைக் கவர்ந்து சென்ற கள்வனையும்!!
பின் சோமன் தனது அந்தரங்க ஆள் ஒருவன் மூலம் தூது விட்டான் ஜலந்திரனுக்கு.
ஜலந்திரனுக்கு பதில் சஞ்சீவன் செல்ல, அவனிடம் அவர்களிடம் பிணைக் கைதியாக இருக்கும் ராணியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலில் மிரட்டல் விடுத்தான்.
"உன்னையும் நாங்கள் அறிவோம் உன்னை அனுப்பியவரையும் நாங்கள் அறிவோம்!!" என்று எகத்தாளமாக சஞ்சீவன் சிரிக்க அதற்குப்பின் "நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோமா? எங்களுக்குத் தேவை.. அதாவது எங்கள் தலைவனுக்கு தேவை அரியணை!! உங்களுக்குத் தேவையோ கணக்கு வழக்கில்லா பொற்காசுகள்.. நீங்கள் இளவரசியை கொன்றுவிடுங்கள், அதற்கு ஈடாக மூட்டை மூட்டையாக தங்க ஆபரண நகைகளோடு பொற்காசுகள் கொண்டுவந்து குவிப்பார் எங்கள் தலைவர்!!" என்று கூற...
சஞ்சீவனும் ஒத்துக்கொண்டான் ஜலந்திரன் திட்டப்படி.. உயிரற்ற இளவரசியின் உடம்பை எங்கு கொண்டு வந்து ஒப்படைப்பது என்பதை பிறகு சொல்கிறேன் என்று சஞ்சீவன் சென்றுவிட, தங்கள் திட்டம் நிறைவேறியது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர் கஞ்சனராமனும் சோமனும் சோம பானத்தை குடித்து.. குளித்து… களித்து..
அதன்படி சஞ்சீவன் வர சொன்ன இடத்திற்கு மூட்டை மூட்டையாய் தங்கக் காசுகளை அள்ளிக்கொண்டு இரண்டு புரவிகளில் சோமனும் அவனது படை வீரர்கள் ஐந்து பேர் மட்டுமே சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பின்னால் எதுவும் படைகள் வருகிறதா என்று அங்கங்கு உள்ள மரங்களில் அமர்ந்து கண்காணித்தபடி இருந்தனர் கள்வர் கூட்டத்தினர்..
இவர்கள் வந்து வெகு நேரம் கழித்தே வந்தான் ஜலந்திரன். தன் தோளில் சுமந்து வந்த உயிரற்ற சடலமான ஹிரன்மாயியை சோமன் முன்னால் போட்டான் ஜலந்திரன்.
"அப்பாடி!! இப்போது தான் எனக்கு நிம்மதி!! இந்தா பிடி உனக்கு தேவையான சன்மானம்" என்று இரண்டு புரவியில் வந்த மூட்டைகளை அவன் ஆட்கள் எடுத்துக் கீழே வைத்தனர்.
"ஆகட்டும்.. அந்த சடலத்தை இந்த புரவியில் ஏற்றுங்களடா!" என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த சோமனிடம், "அந்த கவலை உனக்கு எதற்கு? நானே செய்கிறேன்!" என்ற ஜலந்திரன் சடலத்தை அந்த புரவியில் ஏற்றி விட..
"இதோடு நம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. நீ செல்லலாம்" என்று ஜலந்திரன் கட்டளையிட..
தன்னருகே வந்த புரவியில் இருந்த ஹிரன்மாயி சடலத்தை பார்த்தவன் "எல்லாம் எனக்கு சாதகமாக
முடிந்துவிட்டது. ஒழிந்தாள் இவள்!! அரியணையும் வந்தது. நாடும் எனதானது.. இனி நீ இறப்பது ஒன்று தான்.." அவனை நோக்கி தன் குரு வாளை வீச.. சட்டென அந்த குருவாள் மேலே பறக்க.. திரும்பி பார்த்தவன் கண்களில் அத்தனை அதிர்ச்சி!!
