தூகை 15

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

15

அன்று

பிரேமாவின் சத்தத்தில், அன்றில் பறவைகளாக முத்தத்தில் களித்திருந்த இருவரும் சட்டென பிரிந்து, ஒரு ஏக்கப் பார்வையோடு அடித்து பிடித்து பிரேமாவின் அறைக்கு ஓடினர்.

அங்கே கழிவறையில் வழுக்கி விழுந்துக் கிடந்தார் பிரேமா.

“அய்யோ அத்த..” என்ற வதனி பதறி அவரை தூக்க முயற்சிக்க.. முடியவில்லை அவளால் அவரை தூக்க..! அவர் சற்றே கனம்..!

கழிவறையில் என்றதும் முதலில் மனைவியை அனுப்பிய நிரஞ்சன் அவளின் அய்யோவில் பதறி அடித்துச் சென்று பார்த்தான்.

பின் அவனும் ஒரு கை படித்து தூக்க இருவரும் அவரை தூக்கி வந்து அவரது கட்டிலில் படுக்க வைத்தனர்.

“அய்யோ.. அம்மா.. போச்சே.. என் இடுப்பு போச்சே.. என் காலு போச்சே..” என்று வலியில் கத்திக் கொண்டே இருந்தார் அவர்‌.

பாவம் அறுபது வயதை தாண்டியவர் அவரால் அந்த வலியை தாங்க முடியவில்லை. கூடவே இப்படி கீழ விழுந்ததில் ‘ஏதாவது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ? அப்படி ஏற்பட்டு இருந்தால்.. கை கால் என்றால் கூட பரவாயில்லை இடுப்பு எலும்பு என்றால்?? அய்யய்யோ!? என் வாழ்க்கை முழுவதும் படுக்கையில் தானா? அடுத்தவரை நம்பி தான் இருக்க வேண்டுமா?’ என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள் அவரை பயமுறுத்த வலியும் சேர்ந்து கொள்ள விடாமல் அரற்றிக் கொண்டே இருந்தார் பிரேமா.

“கொஞ்ச நேரம் சும்மா இரு மா நீ. இப்படி கத்துக்கிட்டே இருந்தா நான் என்னன்னு பார்க்கிறது?” என்று எங்கே அடிபட்டது என்று தெரியாமல் மகனாக தவித்தான் நிரஞ்சன். 

“எனது கத்தாம இருக்கணுமா? எனக்கு இருக்கிற வலி எனக்கு தான் டா தெரியும். உனக்கு என்ன? ஐயோ!! எந்த இடத்தில எந்த எலும்பு உடைஞ்சதுன்னு தெரியலையே?? ஆண்டவா..! எல்லா இடமும் வலிக்குதே..! கைகால் இடுப்பு எல்லாம் வலிக்குது. அம்மா போச்சு நான் முடமா போக போறேன். இப்படியே படுக்கையிலே கடக்க போறேன் போல.. கடைசி காலத்துல எனக்கு இப்படியா நடக்கணும்?” என்று இன்னும் வாய்விட்டு அலறினார் பிரேமா. 

இப்பொழுது கணவனை முறைத்தாள் வதனி. “அவங்க சும்மா மெதுவா தான் கத்திக்கிட்டு இருந்தாங்க அவங்கள சீண்டி விட்டு இப்ப நல்லா பெருசா அலற விட்டுட்டீங்களே.!” என்று அடிகுரலில் கணவனிடம் கடிந்துக் கொண்டாள்.

“அத்த.. கொஞ்சம் என்கிட்ட காட்டுங்க. எந்த இடத்துல அடிபட்டு இருக்குனு பார்க்கிறேன். ரத்தம் எதுவும் வருதா பாக்குறேன்” என்று மெல்ல கேட்டாள்.

அதுவரை எலும்பு முறிவு பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவருக்கு இவள் ரத்தத்தை பற்றி ஞாபகப்படுத்தியவுடன் “இரத்தமா?? அய்யோ இரத்தம் போச்சுன்னா என்ன பண்ணுவேன் நானு? ஏற்கனவே நான் ரத்த சோகையா இருக்கேனு என் பொண்ணுங்க சொல்லிக்கிட்டே இருப்பாளுங்களே இப்போ அந்த ரத்தமும் போயிட்டா..??” என்று அவர் ஓயாது பேச இப்பொழுது மனைவியை முறைத்தான் கணவன்.

“இதுக்கு நானே பரவால்ல டி.! நீ ரொம்ப மோசமா அவங்களை பயமுறுத்தி விட்டுட்ட” என்று இவன் மென்குரலில் கடித்து விட்டு,

“நான் போய் 108க்கு போன் பண்ணிட்டு வரேன். நீ அம்மாவ பார்த்துக்கோ” என்று வெளியே சென்றான். இவள் பிரேமாவின் கைகளைப் பற்றி ஆதரவாக வருடிக்கொண்டே “அத்த கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும்” என்று ஆறுதல் கூறி அவரை தேற்றினாள். 

அது என்னவோ அப்பொழுது பிரேமாவுக்கு மருமகளின் ஆறுதல் கூட நக்கலாக கூறுவது போலவே தெரிந்தது. 

“உனக்கு என்னம்மா எனக்கு எலும்பு முறிஞ்சா நீ சந்தோஷமா இருப்ப.. உன்னை எதுவும் சொல்றதுக்கு நான் இருக்க மாட்டேன் இல்ல..!” என்று கோபத்தில் கத்தியவர், 

“நான் படுக்க படுக்கையா கடந்த எனக்கு செய்வதற்கு யார் இருக்கா?” என்று அடுத்த நிமிடம் அழுதார்.

இப்படி அந்நியன் மாதிரி மாறி மாறி பேசுபவரை கண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் கையை பிசைந்து அமைதியாகவே அருகே இருந்தாள்‌ வதனி. 

அதற்குள் 108 அழைத்து வந்திருந்தான் நிரஞ்சன். அதிலிருந்த ஊழியர்கள் மூலமாக மெல்ல மெல்ல ஆம்புலன்ஸில் பிரேமாவை ஏற்ற, அதற்குள் தேவையான சில உடுப்புகள் போர்வைகள் பிளாஸ்க் டம்ளர் பிரேமா சாப்பிடும் மருந்து மாத்திரைகள் என்று அனைத்தையும் ஒரு பிக் ஷாப்ரில் போட்டுக்கொண்டு, மகளையும் தூக்கிக்கொண்டு அவளுக்கு இரண்டு உடைகள் அவளுடைய வாட்டர் பாட்டில் ஸிப்பர் இரண்டு பிஸ்கட் பாக்கெட் என்று மின்னல் வேகத்தில் மகளுக்கும் பார்த்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னே வீட்டை பூட்டிக்கொண்டு ஓடினாள் வதனி.

அருகில் இருக்கும் ஒரு ஆர்த்தோ கேர் சென்டருக்கு தான் அழைத்து சென்றார்கள். 

பெருமூச்சோடு வதினி மகளை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க.. முதலில் எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்ட பிரேமாவிற்கு அவரது உடைகள் கழட்டி மருத்துவ கவுன் அணிவிக்கப்பட்டு எங்கெங்கே அடிபட்டது என்பதெல்லாம் கவனித்து அதற்கு முதலுதவி செய்து அதன் பின் எக்ஸ்ரே எடுக்க அனுப்பி வைக்கப்பட்டார். 

நல்ல வேளை அருகில் யாரும் இருக்கக்கூடாது என்று செவிலியர்கள் உத்தரவு போட்டார்கள் இல்லையென்றால் பேசி பேசி இல்லை இல்லை புலம்பி புலம்பிய மகனையும் மருமகளையும் ஒரு வழி ஆக்கி இருப்பார் பிரேமா. 

அம்மாவை வந்து மருத்துவமனையில் அனுமதித்த உடனே அக்காவுக்கும் தங்கைக்கும் அழைத்து கூறிவிட்டான் நிரஞ்சன். இல்லையென்றால் உடனே ஏன் சொல்லவில்லை என்று இரு பெண்களும் அத்தனை பாய்ந்து கொண்டு வருவார்களே..!!

ஆனால் விசித்திரம் என்னவோ “நீ என்னன்னு பாத்துட்டு சொல்லு ஆதவா.. நைட்ல நாங்க கிளம்பி வந்தா அங்க ஒன் கூட இருக்க கஷ்டம். ஹாஸ்பிடல்ல அலோவ் பண்ண மாட்டாங்க. நாளை காலை பிள்ளைங்களுக்கு ஸ்கூல் இருக்கு. பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு மாமாவையும் ஆபீஸ் அனுப்பிட்டு வரேன் ஆதவா” என்றனர் இருவரும் சொல்லி வைத்த மாதிரி ஒன்றாக..!

“இதுவே மத்த விஷயம்னா இந்நேரம் முந்தி கொண்டு வந்து இருப்பாளுங்க.. ஹாஸ்பிடல் செலவு பக்கத்தில் இருந்து பார்க்கணும்னா இவங்களுக்கு வர முடியாது” என்று மனதில் புகைந்தவன் சகோதரிகளின் இந்த சுயநல தன்மை சற்று எரிச்சல் கொடுத்தது. 

“பண உதவி செய்ய வேண்டாம் மேகா.. ஆனா நான் இருக்கிறேனு கூடமாட வந்து நிற்க வேண்டாமா? இங்கே இருப்பது அவங்களுக்கும் அம்மா தானே? எத்தனை கஷ்டப்பட்டு அவர்களை கட்டிக் கொடுத்திருப்பாங்க.. வரும்போதெல்லாம் அத்தனை தாங்குவாங்க.. இப்ப அவங்களுக்கு ஒன்னுனம் போது பொறுமையா நாளைக்கு வரேன்னு சொல்றாங்க.. இருக்கலாம் இங்கே வந்தால் நைட் தங்க முடியாமல் இருக்கலாம்..! அதற்காக அப்படியே பட்டவர்த்தமாவா சொல்வது? ஒரு பேச்சுக்காவது நாங்கள் வருகிறோம் டா அப்படின்னு கூட சொல்லலையே..!” என்று மனைவியிடம் தான் பொறுமிக் கொண்டிருந்தான்.

வழக்கம்போல அனைத்தையும் தாங்கும் பூமி மாதா போல அவன் புலம்புவது.. பிரேமாவின் கோபத்தையும் அழுகையையும் அனைத்தையும் தாங்கி அவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தாள் வதனி.

பிரேமாவுக்கு காலில் தசை பிசைவு ஏற்பட்டிருந்தது. ஆனால் இடுப்பு எலும்பு உடைந்திருந்தது. கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். 

அதற்கான செலவு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வரை ஆகப்படும் என்றும் கூறுவிட திகைத்துவிட்டான் ஆதவ் நிரஞ்சன்.

அவன் ஒரு மாத சம்பளக்காரன் மட்டுமே. சில ஈஎம்ஐ மற்றும் வீட்டு செலவு மகளுக்கு கல்வி மற்றும் அவளுக்கு இன்சூரன்ஸ் தன் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் என்று போக, அவனிடம் கையிருப்பு ஒரு 50 ஆயிரம் இருந்தது. அதற்கு மேல் என்ன செய்வது என்று விழிப்பிதுங்க.. கணவனின் திகைப்பை கண்ட வதனி கொஞ்சம் யோசிக்காமல் தன்னிடமுள்ள நகைகளை ஈடு வைக்க கொடுத்தாள்.

பிரேமாவும் கிட்டத்தட்ட 20 பவுன் வரை நகை வைத்திருக்கிறார். ஆனால் இந்த சமயத்தில் அவரிடம் கேட்கவா முடியும்? 

வதனியின் நகையை அவன் வாங்க யோசிக்க.. “பரவால்லங்க.. இந்த நகையெல்லாம் நீங்க வாங்கி கொடுத்தது தானே? உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது இது உபயோகப்படவில்லைனா எப்படிங்க?” சிரித்த முகமாகவே தான் கொடுத்தாள்.

“தாலி செயினை கழட்டாத மேகா..” என்று மற்ற நகைகள் கிட்டத்தட்ட, இந்த எட்டு வருடத்தில் அவளுக்கு என்று சேர்த்து இருந்த 10 பவுன் நகைகளையும் அடமானம் வைக்க, நான்கு லட்சம் தான் கிடைத்தது. அதை முதலில் கட்டி அம்மாவின் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தான்.

மறுநாள் வந்த சகோதரிகளோ அம்மாவை பார்ப்பதும் அழுவதும் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஊர்காயாக வதனியை குறை கூறுவதுமாக இருந்தார்களே ஒழிய ‘செலவுக்கு என்ன செய்தாய் ஆதவா? நாங்க ஏதாவது உதவட்டுமா?’ என்ற பெயருக்கு கூட கேட்கவில்லை. 

சகோதரிகளின் குணம் அறிந்து நிரஞ்சனும் வாய்விட்டு கேட்கவே இல்லை. ஆனாலும் ஒரு இக்கட்டு என்ற நேரத்தில் சகோதரிகள் உதவுவார்கள் என்று நினைக்க..

அவர்களோ விருந்தினர்களாக உணர்ந்து இவன் காசிலேயே உணவையும் முடித்து சென்றனர், பிரேமா மருத்துவமனையில் இருந்த அந்த பத்து நாட்களும்..!

இரண்டாவது நாளில் வீட்டிலிருந்து வந்த உணவைக் கண்டதும் முகம் சுழித்த நளினாவிடம், “நீ வரும்போது வாங்கிட்டு வர வேண்டியதுதானே? என்னால அந்த அளவுக்கு எல்லாம் செலவு பண்ண முடியாது. நானே மேகா நகை எல்லாம் வச்சு தான் அம்மா ஹாஸ்பிடல் செலவு பண்ணிட்டு இருக்கேன்” என்று கொஞ்சம் கோபமாக பேச, அதன் பின்னே இருவரும் அடங்கினர். 

ஆனாலும் ஒரு வாய் சோறு வீட்டில் இருந்து சமைத்து வந்து கொடுக்கவில்லை அன்னைக்கு. 

அவ்வப்போது பழங்கள் பேருக்கு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் என்று வாங்கி வந்தவர்கள் அந்த பழங்களை அவர்களை தின்று முடித்தனர் இரவுக்குள்..!

வதனி நிரஞ்சன் கண்டுகொள்ளவே இல்லை..!

பிரேமாவை டிஸ்சார்ஜ் செய்யும் பொழுது அவனுக்கு மேலும் மூன்று லட்சங்கள் கட்ட சொல்ல, சோர்ந்து போனவன் வேறு வழி இன்றி பர்சனல் லோன் எடுத்து மருத்துவமனை பில்லை செட்டில் செய்து அன்னையை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

அதன்பின் வந்த நாட்கள் அவனுக்கும் சரி வதனிக்கும் சரி ஒரு வித அழுத்தத்தில் தான் சென்றது..! அவன் வழி தவறவும் இதுவே காரணம் ஆகியது..!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top