கள்வன் 19
நீலிமா ஓவியத்தைப் பார்த்து அது ஹிரன்மாயி அம்மாள் ஓவியம் என்றும்.. அவள் ரெட்டி வம்சத்தின் முதல் பெண்ணரசி என்றும்.. ஓவியத்தை வரைந்தது ஒரு திருடன் என்றும்.. அதுவும் இரத்தத்தால் வரையப்பட்டது என்றதை கேட்டதும் நீலிமாவின் கணவர் கொண்டலராவ் ராஜூக்கு, அவர் சொன்னது போல.. மூளை எல்லாம் குழம்பி குழம்பாகி காது வழியே வழிய காத்திருந்தது!!
"நீலி ஏற்கனவே அந்த குரு வேறு ஏகத்துக்கும் என்னை குழப்பி வச்சிருக்காரு.. நீயும் இந்த மாதிரி பண்ணினா நான் டோட்டலா ஷட்டவுன் ஆகிவிடுவேன்.. பின்ன உனக்கு தான் கஷ்டம்!! எதா இருந்தாலும் தெளிவா சொல்லு.. அதே நேரம் அதை சுருக்கமாகவும் சொல்லுடி!!" என்று தலையை பிடித்துக்கொண்டு கூறினார்.
அவர் சொன்ன மற்றதை எல்லாம் விட்டுவிட்டவர், "குரு என்ன சொன்னார் அதை முதலில் சொல்லுங்க?" என்று பரபரத்தார் நீலிமா.
"என்னன்னு சொல்ல.. நீ ஒரு கதை சொல்லுற.. அவர் ஒரு கதை சொல்லுறாரு?? என்னன்னே எனக்கு புரியல.." என்றார் சலிப்புடன்.
ம்ப்ச்.. இன்னைக்கு நீங்க குருவ பார்க்க போனீங்களா அங்க போய் என்ன பேசுறீங்க அதெல்லாம் முதல்ல தெளிவா சொல்லுங்க என்று நீலிமா கணவரை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தார்.
"ம்ம்ம்.. சொன்னாரு.. சொன்னாரு.. இதுவரை வந்ததெல்லாம் பிரச்சனையே இல்லையாம் இனிமேல் வருவது தான் பிரச்சனைனு சொன்னாரு!! வது கூட வேந்தன் இருக்கான். இனி அவன் பார்த்துப்பான் சென்னாரு!! பிரச்சனையையும் வதுவையும்!!"
அப்படியா சொன்னார் என்று யோசனையோடு நீலிமா நிற்க..
"நீ கேட்டதற்கு நான் பதில் சொன்னேன் இல்லையா?? இப்ப நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லு!! ஆமா அவர் சொன்ன அந்த வது நம் வாஹினியையா? அப்படி அது நம் வாஹினி என்றால், வேந்தன் யாரு?? இந்த ஓவியத்தை வரைந்தது ஒரு திருடன் என்றால், அவனுக்கும் இந்த அரசிக்கும் என்ன சம்பந்தம்? இப்போ வந்த அந்த வேந்தன் அப்போ ஏன் வரல? இல்லை வந்தாரா? வேந்தன்.. திருடன்.. அரசி!! இது என்ன முக்கோண காதலா?? தெளிவா சொல்லு நீலி!!" என்றார் நம்மை போலவே ஒன்றும் புரியாமல் இருந்த கொண்டலராவும்!!
அப்பப்பா.. எத்தனை கேள்வி?? என்று அவர் ஒரு கேள்வி கேட்க.. கணவர் முறைக்க..
"இப்படி இங்க நின்னுகிட்டு பேச முடியாது!! வாங்க.. நம்ம ரூமுக்கு போகலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்ததும் அறை கதவை சாத்திவிட்டு சோபாவில் கணவரை அமர வைத்து விட்டு அவரைப் பார்த்த வண்ணம் வாகாக அமர்ந்து கொண்டார் கதை சொல்ல…
நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்.. கிட்டத்தட்ட ரெட்டி வம்சம் தொடங்கப்பட்டபோது.. அப்போதைய மன்னர் சுமன் பிரதாப் ரெட்டி.. அவரது மனைவி லதாங்கி தேவி.. வெகுநாட்களாக குழந்தை இல்லாத அவர்களுக்கு பல விரதம் நோன்புகளுக்கு பிறகு பிறந்த பெண்தான் ஹிரன்மாயி ஜெயத்ரி!!
அண்ணனுக்கு வாரிசு இல்லை. அதற்கு பிறகு நம் பிள்ளை தான் வாரிசு என்று நினைத்திருந்த கஞ்சனராம ரெட்டிக்கு இது பெரும் அதிர்ச்சியான செய்திதான்!!
அப்பொழுது பத்து வயது நிரம்பியிருந்த அவரது மகன் சோமன் ரெட்டிக்கு இது பெரிய விஷயமாக படவில்லை.
காரணம் என்னதான் பெண் பிள்ளையாக அவள் இருந்தாலும் பெரியப்பாவுக்கு பின் ஆண் வாரிசான தனக்கு தான் சிம்மாசனமும் நாடும் என்ற நினைப்பில் தான் அவன் வளர்ந்து வந்தான்.
வெகுநாட்களாக பிள்ளை இல்லாத காரணத்தினால் நாட்டை சிறிது நாட்கள் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, இவர்கள் கோயில் குளங்களாக திரிந்து கடைசியாக ஒரு குருவின் ஆசிரமத்தில் தங்கியிருந்து அவருக்கு பணிவிடை செய்து.. அவர் சொன்ன நோன்புகளை செய்தபின் தான் அவர்களுக்கு ஹிரன்மாயி பிறந்தாள். அதனால் சிறிது காலம் அங்கேயே அவர்கள் தங்கி இருக்க கஞ்சன ராம ரெட்டிக்கு அது பெரும் வசதியானது.
அதன்பின் திரும்பவும் இவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையும் பொழுது ஹிரன்மாயிக்கு ஐந்து வயது பூர்த்தியாகி இருக்க.. அவள் சகல கலைகளும் கற்றுத் தேற அனைத்து வசதிகளும் மன்னன் மேற் பார்வையிலேயே நடந்தது.
ஆண்பிள்ளை இல்லை என்றால் என்ன? பெண் தான் இருக்கிறாளே!! அவளே எனது வாரிசு!! என்று வார்த்தைகள் இல்லா விட்டாலும் அவரது செயல்கள் உணர்த்தியது.
நல்லது செய்ய என்று நாலு பேர் இருக்கும்பொழுது, குட்டையை குழப்பி விட்டு அதில் குளிர்காய குறைந்தது இரண்டு பேராவது இருக்க மாட்டார்களா? அப்படி வந்து சேர்ந்தவர்கள் தான் அந்த அரண்மனையிலேயே அமைச்சர்களாக பதவி வகித்த இருவர். அவர்கள் சும்மா இருந்தாலாவது கொஞ்ச நாளில் கஞ்சனராம ரெட்டிக்கு அண்ணனின் இந்த செயல்கள் புரிந்து தாமாகவே ஒதுங்கி இருப்பாரோ என்னவோ?? ஆனால் இவர்கள் இரண்டு பேரும் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த அவரின் அரசுரிமை ஆசை தீக்கு லேசாக தூபம் போட்டு விசிறி வைத்து வீசிவிட.. அது கொழுந்து விட்டு எரியலானது.
எப்படி என்றால்??? ஐந்து வயதே நிரம்பிய சிறு பாலகியாக இருக்கும் தன் அண்ணன் பெண்ணையே கொல்லும் அளவுக்கு.. அவரின் வன்மம் வளர்ந்தது. எப்பொழுதும் எங்கேயும் நடக்கும் அதே வாரிசுரிமை பிரச்சனை தான்!!
ஆனால் ஏற்கனவே குழந்தை இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்ற மகளின் பாதுகாவலுக்கு என தனியாக மெய்க்காப்பாளர் படை ஒன்று நிறுவி இருந்தார் சுமன்பிரதாபன்.. அவர்களும் கண்ணுக்கு இமை போல கண்மணியாய் அவளை பார்த்துக் கொண்டனர்.
மெய் காப்பாளர் படை என்பது சாதாரண மற்ற வீரர்களை போன்று கிடையாது. தங்கள் உயிரை கொடுத்தேனும் அவளை காப்பாற்ற வேண்டும் சங்கல்பம் எடுத்தவர்கள்.
அப்படி நிகழாமல் போனால்.. அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்களின் வம்சத்தில் கடைசி உயிர் வரை கொன்று பழிதீர்த்து.. காட்டுக்குள் அப்பெண்ணுக்கு கோவில் கட்டி அவளை குலதெய்வமாக வழிபடுவதோடு.. அங்கேயே தங்களை வருத்தி மாண்டு போவார்கள். அப்படிப்பட்ட படையையே நிறுவி இருந்தார் சுமன் பிரதாபன் தன் பெண்ணின் பாதுகாப்பிற்கு!!
மெய்காப்பாளர் படையை தாண்டி கஞ்சனராமனாலும் அவரது படையாலும் ஹிரன்மாயியை நெருங்க முடியவில்லை.
காலங்கள் உருண்டோட சகல கலைகளையிலும் தேர்ந்து வீரமிக்க பெண்ணரசியாக.. அழகிய மேனகையாக மிளிர்ந்தாள் ஹிரன்மாயி. ஆனால் அவள் மீது வஞ்சம் கொண்ட அவளது சித்தாப்பாவின் குணம் மாறவேயில்லை.
அவளுக்கு முடிசூட்டவதோடு தகுந்த வரனையும் பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று சுதன் பிரதாபன் தனது குருவிடம் விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்நாட்டிற்கு புதிய பிரச்சினை ஒன்று உருவாகியது. அது.. வியாபாரத்திற்காக செல்லும் வியாபாரிகளிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்களையும் தங்க நாணயங்களும் கள்வர் கூட்டம் ஒன்று வந்து கவர்ந்து செல்வதாக…
"என்னது என் நாட்டில் கள்வர் கூட்டமா? என் மக்களுக்கு ஆபத்தா? அதுவும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வியாபாரிகள் இடமே அவர்களது கை வரிசையை காட்டுகிறார்களா?? விடமாட்டேன் அவர்களை!! ஒரு வழி ஆக்குகிறேன்!!" என்று சோமன் தனது உடைவாளை உருவி ஆக்ரோஷமாக பேச..
ஏற்கனவே ஹிரன்மாயி அரசி ஆக்குவதற்கு நிறைய தடைகள் இருக்கும் என்று குலகுரு நினைத்திருக்க.. இப்போது சோமனின் பேச்சில் 'என் நாடு! என் மக்கள்!' என்ற வார்த்தைகள் அதிகமாக காணப்படுவது கவனித்த சுகன்பிரதாபனும் ஒரு முடிவுக்கு வந்தார்.
அது.. அந்த கள்வர் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி மீண்டும் நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்களுக்கு என் நாட்டின் பாதி ராஜ்ஜியம் என்று!!
ஏற்கனவே பெரியப்பாவின் அரியணை தனக்கு கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சினை வரும் அதிலும் அவர் பெற்ற பெண்ணரிசியே செய்வாள் என்று எதிர்பார்த்திருந்த சோமனுக்கு இது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. "எப்படியும் அந்த கள்வர் கூட்ட தலைவனை என்னை தவிர யாராலும் அடக்க ஒடுக்க முடியாது. நானே அவர்கள் கூட்டத்தைப் பிடித்து கண்டந்துண்டமாக வெட்டி உங்கள் கால்களில் போடுகிறேன் அரசே!!" என்று வீரத்தோடு முழங்கியவன் தன் தந்தையை பார்த்து சதித் திட்டம் ஒன்றை தீட்டினான்.
கள்வர் கூட்டத்தைப் பிடித்து பாதி ராஜ்யத்தை வாங்கிய பின்னர் அவர்கள் படையின் பெரும் பகுதியை தங்கள் பக்கம் இழுத்து மீது இருக்கும் ராஜ்யத்தையும் அபகரித்து விடலாம் என்று தந்தையும் மகனும் தங்களுக்குள் சதி திட்டம் தீட்டினர். அவற்றையெல்லாம் முறியடிக்கவே ஒருத்தன் இருக்கிறான் என்பதை அறியாமல்!!
அதன்படி பெரும்படையை வியாபாரிகளாக உருமாற்றிக் கொண்டு சோமன், அவற்றுக்கு தலைமை தாங்கி கொண்டு காட்டு வழியே பிரயாணம் செய்ய.. இரண்டு நாட்கள் பிரயாணம் முடிவிலும் எந்த ஒரு கள்வர் கூட்டமும் அவர்கள் கண்களில் சிக்கவில்லை. ஏன் அப்படி ஒரு அரவமே அவர்களுக்கு வரவில்லை. பெரிதும் குழம்பிப் போனான் சோமன்!!
"ஒருவேளை நாம் வந்தது அவனுக்கு தெரிந்து விட்டதோ?? இல்லையெனில் வந்திருப்பானே!! ஒரு வேளை ஒற்றர்கள் மூலமாக அவனுக்கும் தகவல்கள் கிடைத்திருக்கலாம். பயந்துவிட்டான் போலும்!! தொடைநடுங்கி!! வியாபாரிகள் என்றதும் தன் கைவரிசையை காட்டியவன்.. இன்று வீரமிக்க படைத்தளபதி வருவதைப் பார்த்து பயந்து ஒளிந்து கொண்டான்!! கோழை பயல்!!" என்று எகத்தாளமாக தன் கூட்டத்தினரிடம் சிரித்துக் கொண்டவன், "நாம் வேறு யுக்தியை கையாளுவோம்!! ம்ம்.. புறப்படுங்கள்!!" என்று ஆணையிட.. திரும்பவும் நாட்டிற்கே திரும்பி விட்டனர் அனைவரும்.
இம்முறை சோமனின் மூளையில் விசித்திர திட்டம் ஒன்று தோன்றியது.. சற்றே வஞ்சகமாக!!
தனது சகோதரியின் துணையை அவன் நாட.. அண்ணன் இவ்வளவு தூரம் தன்னை மதித்து உதவி கேட்பது ஹிரன்மாயிக்கும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால்.. "எவ்வளவு வீரம் இருந்தாலும் நீ பெண்தானே!!" என்று அடிக்கடி இளப்பமாக கூறி திரிபவன்.. இன்று உதவி கேட்கும்போது கள்ளமில்லா உள்ளம் கொண்ட பாவையவளும், இவனின் பின்னால் இருக்கும் வன்மத்தையும் வஞ்சத்தையும் அறியாமல் சம்மதித்தாள்.
ஆம் தங்கையை இந்த தாக்குதலின்போது கொன்றுவிட்டால்…??? மொத்த நாடும் அல்லாமல் வில்லாமல் கிடைத்து விடுமே!! பழியை மொத்தமும் அந்த திருடன் மீது போட்டு விடலாம்!! என்று மிகப்பெரிய திட்டம் ஒன்று அப்பனுக்கும் மகனுக்கும் உருவாகி அதற்கான செயலிலும் இறங்கி இருந்தனர்.
"ஆனால்…மெய்காப்பாளர் படை தடையாக இருக்குமே இதற்கு??" என்று கஞ்சனராமன் தயங்க..
"இல்லை தந்தையே.. நானே ஹிரன்மாயிடம் நயிச்சியமாக பேசி.. மெய்காப்பாளர் படையை வர விடாமல் தடுத்துவிடுகிறேன். அப்படியும் வந்தாலும் ஓரிருவர் வரத் தான் செய்வார்கள். அவர்களுக்கும் விஷம் தொய்த்த அம்பு தயாராக இருக்கிறது தந்தையே!!" என்றவனின் கண்கள் வஞ்சத்தில் பளபளத்தது வஞ்சியவளை வஞ்சம் கொள்ள...
அதன்படி ஒரு திங்கள் கழித்து சாதாரண செல்வந்தரின் மகளாக பல்லக்கில் ஹிரன்மாயி வர.. அவளது துணைக்கு சில மெய்க்காப்பாளர் வீரர்களோடு சில வீரர்களும் பல்லக்கு தூக்கிகளும் கூடவே அவளது தோழிகள் என்று மீண்டும் அந்த காட்டில் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மருந்துக்கும் தங்கள் நாட்டு வீரர்கள் யாரும் அதில் இல்லாமல் தன்னிடம் விசுவாசமாக உள்ள வீரர்களையே அனுப்பியிருந்தான் சோமன். பின்னால் அவர்களை நீண்ட இடைவெளி விட்டு தொடர்ந்தது சோமனும் அவனது படையும்!!
எப்பொழுது கள்வர் கூட்டம் அவர்களை நெருங்கினாலும் தன்னிடமுள்ள.. அபாய சங்கினால் நாதம் எழுப்பி தங்கள் உதவியை நாட வேண்டும் என்று தங்கைக்கு பலமுறை அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.
சோமன் தனக்கு ஏற்ப ஒரு வஞ்சகத் திட்டத்தை ஏற்படுத்தி நடத்த இருக்க.. ஹிரன்மாயி வேறு ஒரு திட்டத்தோடு வந்தாள். அதன்படி அந்த சங்கை அவள் வழியில் ஓய்வெடுக்கும் போது அருகில் இருந்த தடாகத்தில் மூழ்கடித்துவிட்டாள். ஒரு படைக்குத் தலைமை வகித்து நடக்கவேண்டும் என்பது அவளது பெரு நாளைய கனவு!! இன்று அது நிறைவேற வேண்டும் என்பது அவளது திட்டம்!!
சோமன் ஒரு திட்டம் போட..
ஹிரன்மாயி மாற்று திட்டம் போட..
இவர்கள் இருவரது திட்டத்தையும் முடிக்க வந்த நின்றான் கள்வன் ஜலந்தரன் ஹர்ஷூமன்!!
அவர்கள் எதிர்பார்க்காத வேளையில் எதிர்பாராத இடத்தில் இருந்து சந்தித்தான் தன் படைகளோடு ஜலந்திரன்!!
அவர்களது சிறு படையை சுற்றிவளைத்து இருந்தது ஜலந்திரனின் கள்வர் கூட்டம். கள்வர்கள் என்றால் சமாணியமாவர்கள் அல்ல!! பல பேரை பந்தாடும் உடல் வலிமையும்.. என்ன அடித்துத் துன்புறுத்தினாலும் தன் கூட்டத்தை பற்றி ஒற்றை வார்த்தை வெளியிடாத மனவலிமையும் பெற்ற ஆஜானுபாகுவான ஆட்கள்!!
முகம் முழுவதும் மறைத்து, கூர் விழிகளோடு கையில் வாளுடன் முதுகில் கேடயத்துடன் குதிரையில் வந்து வழி மறைத்த அக்கூட்டத்தை பல்லக்கு திரையை விலக்கிப் பார்த்தாள் நம் நாயகி!!
பகலில் நிலவொன்று தன் மேகத் திரையை விலக்கிப் பார்த்தது போல அவ்வளவு ரசனைக்குரிய காட்சி!!
வாளின் கூர்மையை விட கண்களில் கூர்மை கொண்டு அக்கூட்டத்தை அலசிக் கொண்டிருந்த கள்வனின் பார்வையில் விழுந்தாள் ராணியவள்!!
நொடி நேரம் இரு விழிகளும் கூர் வாளை விட மிக ஆக்ரோஷமாக மோதி கொண்டது. கள்வனின் அந்த ஆக்ரோஷ பார்வை.. சிறிது சிறிதாக ரசனை பார்வையாக மாறி.. பின் எதிராளியிடம் சரணடைந்ததை உணர்ந்தான் ஜலந்திரன்!!
முகத்தில் ஒன்றையும் காட்டிக் கொள்ளாமல்.. தன் கணீர் கம்பீரக் குரலால்.. "அயல்நாட்டிற்கு சென்று கொண்டிருக்கும் செல்வந்தரின் மகளே!! உன்னிடம் இருக்கும் உடைமைகளையும் ஆபரணங்களையும் தங்க காசுகளையும் என்னிடம் கொடுத்து விட்டால்.. உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நான்!!" என்று அவன் முழங்க..
"யார் உயிருக்கு யார் உத்திரவாதம் தருவது?" என்று இகழ்ச்சியோடு உதடு வளைத்தவள் தன் பல்லக்குத் தூக்கிகள் இடம் சமிஞை செய்ய.. உடனே பல்லக்கு சற்று தாழ்வாக இறங்க, அது தரையிறங்கும் முன் நொடி நேரத்தில் அதிலிருந்து குதித்தாள் ஹிரன்மாயி!!
அவளின் அந்த செயலில் ஒரு மெச்சுதல் பார்வை ஜலந்திரன் கண்களில்!!
"ம்ம்ம் பெண்ணே!! தைரியம் தான் உனக்கு!! ஆகட்டும் ஆபரணங்களை கொடுத்துவிட்டு உன் வழியில் நீங்கள் செல்லலாம்!! நாங்கள் கள்வர்கள் தான். ஆனால் கயவர்கள் இல்லை!! பெண்ணின் மானத்தோடு விளையாட..!!" என்றான் ஜலந்திரன்!!
"உமக்கு அந்த ஆசையை வேறு இருக்கிறதா? தொட்டுப்பார் என்னை.. கிழித்துப் போடும் எனது கூர் வாள் உன்னை!!" என்று அவனை அவள் முறைத்து பார்க்க..
'கூர்வாளே.. வேண்டாமடி பெண்ணே!! உன் கணை தொடுக்கும் கயல் விழிகள் இருக்க..' என்று கற்பனை சிறகுகளில் பறந்த தன் மனதைக் கடிவாளமிட்டு நிறுத்தினான் கள்வன். "இது உன் செயலுக்கு உகந்ததல்ல ஜலந்திரா!! போதும் கடிவாளமிடு!! உன் கற்பனைக்கும்.. அவளது வாயுக்கும்!!" என்று அறிவு எடுத்துரைக்க…
அதன்பின் தன் கூட்டத்தாருக்கு அவன் சைகை காட்ட.. கூட்டம் மெல்ல மெல்ல அவர்களின் அருகே செல்ல முயல.. வெறும் வியாபாரிகள் என்றாலும் சிறு வீரர்கள் என்றாலும் பயந்து நடுங்குவார். ஆனால் இவர்களோ மெய்க்காப்பாளர்கள். கூடவே சோமனின் ஆட்கள் வேறு.. உடைகளில் மறைத்து வைத்திருந்த அவர்களுடைய உடைவாளுடன் தங்களை நோக்கி வந்த படையை அவர்கள் எதிர்க்க..
"ம்ம்ம்.. பலத்த திட்டம் தான் பெண்ணே!! என்னை கைது செய்ய இவ்வீரர்களால் இயலுமா?" என்று இடியென சிரித்தான் ஜலந்திரன்.
"பார்க்கத்தானே போகிறாய் என் வீரர்களின் வீரத்தையும்.. தோற்றுப்போய் என் காலடியில் நீ மண்டியிடும் நேரத்தையும்.." என்று அவள் வீர ஆவேசமாய் பேச..
"ம்ம்ம்!!??" என்று ஒற்றை வார்த்தையில் இகழ்ச்சியாக பார்த்தவனைப் பார்த்து பாய்ந்து வந்தது ஒரு சிறு குறு வாள்!! அதை தன் வாளால் அவன் தட்டிவிட, அவன் முன் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தாள் தன் உடை வாளை உருவியபடி பெண்ணரசி!!
"ம்ம்ம்.. ஆச்சரியம்!! ஆனாலும் உண்மை!! தளிர் கரங்களில் பிடி தளராத வாள்!! ஆனால் பெண்களிடம் என் வீரத்தை நான் காட்டமாட்டேன் பெண்ணே!!" என்று அவன் இன்னமும் தன் குதிரையில் மீது கைகளை தொடையில் ஊன்றிய படி கம்பீரமாக அமர்ந்திருக்க..
சட்டென்று தன் வீரர்களை நோக்கி வந்த கள்வர் கூட்டத்துக்குள் பாய்ந்தாள் பெண் புலியாக.. அவளின் வீரத்தையும்.. வாளை நேர்த்தியாக பிடித்து அவள் போடும் சண்டையையும்.. தன் கண்களில் சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜலந்திரன்!!
"என்ன ஜலந்திரா!! வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்!! பெண்களெல்லாம் நம் மோகத்திற்கும் தாபத்திற்கு மட்டுமே!! அவர்களை நம் மஞ்சத்தில் ஆட விடலாம்.. இப்படி வாள் கொண்டு ஆட விட்டு வேடிக்கை பார்க்க கூடாது!!" என்றான் கூட்டத்தில் ஒருவன்!!
"கற்சிலையாய் நீ வேடிக்கை பார்த்துக்கொண்டு இரு.. ஒரே வீச்சில் அவளை முடிக்கிறேன்!!" என்று பாய்ந்து சென்றவன் இரண்டே நிமிடங்களில் தரையில் வீழ்ந்தான் பெண்ணரசியின் வீரத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல்… அவன் நெஞ்சில் பாயவிருந்த வாளை தடுத்தது ஜலந்திரனின் வாள்!!
'கடைசியில் வந்து விட்டாயா?' என்று ஏளனமாக பார்வை ஹிரன்மாயிடம்!!
'பாவம் பார்த்தேன் பெண்ணே!' என்று பதில் உரைத்தது ஜலந்திரன் பார்வை!!
'முடிந்தால் மோதி பார்!!'
'முடியாமல் என்ன?? ஆனால்…:
'என்ன.. ஆனால்..??'
'நீ ஒரு பெண்!!'
'கீழே கிடப்பவனை பார்த்தும் என் வீரம் உனக்கு புரியவில்லையா??'
'புரிந்ததை.. வேண்டாம் என்கிறேன்!!'
"வீண் வாதம் வேண்டாம் கள்வனே!!" என்று அதுவரை விழி மொழியால் பேசிக் கொண்டிருந்தவர்கள் வார்த்தைகளில் ஜாலம் காட்ட. ஒரு சுழற்று சுழற்றி ஜலந்திரனின் வாளை தட்டிவிட்டாள் ஹிரன்மாயி!!
அப்படி அவள் சுழன்று தட்டி விடும் போது எப்படிப்பட்ட பராக்கிரமசாலிகளின் உடைவாளும் ஒன்று உடைந்து விழும்.. இல்லை அந்தரத்தில் பறந்து விடும்.. இவை இரண்டும் இல்லாமல் சற்று தளர்ந்த அவனது கைகள் மீண்டும் வாளை இறுகப் பற்றிக்கொள்ள.. விழி மொழி சண்டையிட்ட அவர்கள் இப்பொழுது வாளோடு சண்டையிட்டார்கள்.
அதற்குள் இரு மெய்க்காப்பாளர்கள் வந்து ஹிரன்மாயை சூழ்ந்துகொள்ள.. "இதுதான் பெண்!!" என்று இளக்காரமாக வளைந்தது ஜலந்திரனின் உதடுகள்.
உடனே மெய்க்காப்பாளர்களிடம் "எனக்கு என்ன நடந்தாலும் என் அருகே நீங்கள் வரக்கூடாது!! இது என் மீது ஆணை!!" என்று அவள் முறைக்க.. செய்வது அறியாது அவர்கள் இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். ஆனாலும் இவர்களின் வாட்போர் முடிவிலியாய் தொடர்ந்தது..
தங்கள் இளவரசி மீது கொண்ட நம்பிக்கையால்.. அவர்களும் சற்று தள்ளி இருந்த மற்ற பெண்களை பாதுகாக்க கள்வர் கூட்டத்திடம் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்கள் சண்டையிட்டுக் கொண்டே சற்றுத்தள்ளி வர எங்கிருந்தோ பாய்ந்து வந்த இரு அம்புகள் ஒன்று ஹிரன்மாயை நோக்கி வர.. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருந்ததால்.. அது இலக்கு மாறி சற்றே தள்ளி அருகில் இருந்த மரத்தில் போய் கொத்தியது. அது ஏதோ அறியாமல் வந்தது என்று விட்டு, மீண்டும் வாட்போரைத் தொடர.. அதற்கடுத்து கொத்தாக வந்த அத்தனை அம்புகளும் ஹிரன்மாயை குறிவைத்து வர.. சட்டென்று அவளின் இடையை வளைத்து அருகில் இருந்த புதருக்குள் உருண்டு விழுந்தான் ஜலந்திரன்!!
"ஏய்.. விடு! விடு!! என்னை தீண்டாதே!!" என்று அவள் கத்த அவளது வாயில் கை வைத்தவன் "உன்னை தான் குறி வைக்கிறார்கள்!! கண்டிப்பாக அவர்கள் என் ஆட்கள் இல்லை. உனக்குப் பின் ஏதும் சதி நடக்கிறது போலும். சற்று நேரம் அமைதியாக இரு" என்று அவன் கூற அதிலிருந்த உண்மை அவளையும் அமைதியாக்க..
பெரும் படை ஒன்று அவர்களை நோக்கி வருவது போல சத்தம் கேட்க "இனி இங்கு இருப்பது உன் உயிருக்கு ஆபத்து!! கிளம்பு என்னோடு!!" என்று அவன் அழைக்க..
"முடியாது!! ஒரு திருடனோடு என்னால் வர முடியாது!!" என்று
அவள் மறுக்க.. அடுத்து அவள் பேச இடம் கொடுக்காமல் ஒற்றைக் கையால் அவளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டவன், விசிலடிக்க அவனது புரவி பறந்து வர அதில் ஏறி அவ்விடம் விட்டுப் பறந்தான் ஜலந்திரன் பெண்ணவளோடு!!
