கள்வன் 15
கர்னலுக்கு 'ஜிதேந்தர் எப்படி மீண்டும் மெய்க்காவலராக வந்திருக்க முடியும்? இது நடந்திருக்க வாய்ப்பு இல்லையே!!' என்று யோசித்துக் கொண்டே இருந்தவர், உடனடியாக அவந்திகா ரெட்டியை தொடர்பு கொண்டார்.
அவர் ரிதியோடு ஊட்டியில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் ஓய்வு எடுப்பதாக கர்னலுக்கு கூறப்பட்டது. ஆமா கூறப்பட்டது!! அவந்திகாவிடம் நேரடியாக கர்னலால் பேச முடியவில்லை. அவரிடம் இருக்கும் பாதுகாவலர்கள் "யாரிடமும் மேடம் இப்பொழுது தொடர்பு கொள்ள விரும்பவில்லை!" என்று கூறி கத்தரித்து விட்டனர். ஏன் இது கூட ஜித்தேந்தரின் வேலையாக இருக்கக்கூடாது? எதற்கு என்னை நெருங்க விடாமல் தடுக்கிறான்? என்று விடை காண புறப்பட்டார்.
அதற்கு அவனை சந்தித்து பேசிய ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர், முதலில் ரோசையாவிடம் நடந்த அனைத்தையும் கூற வேண்டும். ஆனால்.. எதற்கும் முதலில் ஜித்துவிடம் பேசிவிட்டு வருவோம் என்று எப்பொழுதும் போல அவனது துவாரபாலகர்கள் இருவரையும் தான் பிடித்தார்.
ரகு கேட்டு சொல்கிறேன் என்ற ரகம் அதான் நம்ம மெகா!!
ஆனால் ஜிகா.. அதான் பபின்.. ஜித்துவின் பிரதிபலிப்பு அவன்!! ஜித்து இம்மென்றால் அந்த வேலையை கட்டி முடித்து வருபவன். அதனால் இவர் மெகா ரகுவை தொடர்பு கொண்டு ஜித்தேந்தரை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மனு தான் போட முடிந்தது. ஆனால் அந்த மனுவை ஏற்பதும் ஏற்காததும் மன்னன் அவனே!!
ஜித்து சொன்னதை அப்படியே சந்து எழுத்து மாறாமல் ஒப்புவித்தான் ரகு கர்னலிடம்.
"என்ன.. என்னது பால் டப்பாவா?? யார் அது?" என்று அவர் புரியாமல் கேட்க.. புளிப்போட்டு விளக்கிக் கூறினான் ரகு யார் அந்த பால் டப்பா என்று!!
இன்னும் அவருக்கு தலைவலி தான் வந்தது. இருக்கும் பிரச்சினைகளில் இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியாமல் "நானும் பார்த்தே ஆக வேண்டும்!!" என்று மீண்டும் மீண்டும் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார் கர்னல்.
"இப்போ இருக்கும் மனநிலையில் உங்ககிட்ட என்னால் பேச முடியாது!! மீறி பேசினால்.. பேச்சுவார்த்தை ஏதாவது விபரீதத்தில் கொண்டுபோய் முடிந்தால்.. அதற்கு நான் பொறுப்பல்ல!!" என்று ஜித்துவிடமிருந்து அவருக்கு வாய்ஸ் மெசேஜ் வர.. மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
"ரொம்பத்தான் அடங்கி போவது மாதிரி நடிப்பு!! அத்தனையும் வேஷம்!! சரியான கேடி பையன்!!" என்று அவனாக கர்னலை தொடர்பு கொள்ளும் வரை, அவரால் புலம்பிக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.
ஆனால் இரண்டு நாட்களுக்கு மேலே அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அன்று அவன் அவர்களுக்கான அறையில் இருந்து வெளிவரும்போது மீண்டும் ஜித்து முன்னால் வந்து மெகா நிற்க.. இரு விரலால் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், "கர்னலை நாளை காலை 10 மணிக்கு வரச் சொல்!!" என்று அனுப்பி வைத்தான்.
அவன் உணவருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்து நின்ற ஜிகாவை பார்த்தவன் சொல்லு என்பதாய் கையசைக்க..
"பாஸ்.. அந்த நாய் நாக பிரசாத்.." தயங்கி தயங்கி நின்றவன் "ஹாஸ்பிடலில் இருந்து தப்பி விட்டானா?" என்று கேட்டான் ஜித்து.
இது எப்படி சொல்வது என்ற பயங்கர பீதியோடு தான் வந்தான் ஜிகா. கண்டிப்பாக ஏகே பாட்டிசெவனால் தொடர்ந்து சுடுவது போல இவனின் வார்த்தை குண்டுகளை தாங்க வேண்டுமே.. அத்தனை பெரிய பாதுகாப்பு கொடுக்கும் அவர்களிடமிருந்தே ஒருவன் தப்பி போவதென்றால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவனுக்கு கண்களை மூடி அவன் வார்த்தை குண்டுகளுக்காக காத்திருக்க.. ஜித்துவின் வார்த்தையில் வெறித்து பார்த்தான்.
"ம்ம்ம்.. போ!" என்று மட்டும் கூறிய ஜிதேந்திர் மிக மிக மெதுவாக தனது உணவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
என்ன நம்ம இவ்வளவு சொல்கிறோம் அவரிடமிருந்து ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லையே என்று ஜிகா பபின் மெல்ல கண்களைத் திறக்க..
"விஷயம் அவ்வளோ தான் என்றால்... நீ போகலாம்!!" என்று நாசுக்காக டிஷூவினால் தனது அழுத்தமான உதடுகளை ஒற்றி எடுத்தவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.
முன்னை விட இப்போது தான் ரொம்ப பயம் பிடித்தது ஜிகாவிற்கு. ஏனென்றால் துப்பாக்கி குண்டுகள் என துளைக்கும் அவன் வார்த்தைகளை விட அமைதியாக இருக்கும் ஜிதேந்தர் பல அணுகுண்டுகளுக்கு சமமானவன் என்று அவனுக்கு தெரியும்.
"பாஸ்.. என்ன செய்ய காத்திருக்கிறார்?" என்று யோசனையோடு செல்லும் அவனை பார்த்திருந்தான் ஜிகா.
நாக பிரசாத் வத்ஸவ் இருவரையும் இவனின் ஆட்கள் கொண்டு சென்று தனித்தனியாக வைத்திருந்தனர். வத்ஸவை சகல வசதிகளுடன் ஒரு ரூமில் கைதியாக வைக்க சொன்னான். பிரசாத் காலில் அவன் இறக்கிய புல்லட்டுகளால் அவனை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கிருக்கும் மருத்துவர்களும் இவர்கள் ஆட்கள் என்பதால் குண்டைப் பற்றி ஒன்றுமே கேட்காமல் அதை அகற்றி விட்டு அவனுக்கு வைத்தியம் செய்தனர். இரண்டு நாட்களாக ஐஸியூவில் இருந்தவன் அதன் பின்னே நார்மலாக, அறைக்கு மாற்றப்பட்டான்.
அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு வளையத்தை வைத்திருந்தான் ஜித்து. கண்ணுக்குத் தெரியும் செக்யூரிட்டியை விட.. ஆண் செவிலியர்.. கூட்டும் ஆயா.. துடைக்கும் வேலையாள்.. பெண் செவிலியர் இப்படி ஏகப்பட்ட ஆட்கள் அவனை சுற்றி இருந்தாலும் தெரியாம இருந்தாலும்.. அவனுக்கு தெரிய வேண்டும் என்று இரண்டே இரண்டு செக்யூரிட்டியை கண் எதிரே வைத்திருந்தான் ஜித்து.
இவற்றையெல்லாம் தாண்டி எப்படி அவன் தப்பித்து இருப்பான்? என்பது தான் ஜிகாவின் ஆகப் பெரும் கவலை.. அது அவன் தப்பித்ததனால் இல்லை. இதன் பிறகு ஜித்துவின் கையில் அவன் மாட்டினால் அவன் என்னவாக போகிறானோ என்று.. அவனின் நிலையை நினைத்து தான்!!
ரகுவிடம் சொன்னதுபோல் சரியாக பத்து மணிக்கு வந்து சேர்ந்தார் கர்னல். அவரின் இரு பாதுகாவலரோடு.. ஜித்து இப்பொழுது தங்கியிருக்கும் வீட்டிற்கு.
அவரை வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து செல்லாமல் பக்கவாட்டில் இருக்கும் தோட்டத்திற்கு தான் அழைத்து சென்றான் மெகா.. பிரச்சனைகளை தவிர்க்க..
சிறிது நேரத்தில் அங்கே வந்த ஜிதேந்தரை பார்த்த கர்னலின் முகத்தில் ஒரு மெச்சுதல். எப்பொழுதும் அவன் அவனது உடைகளின் நேர்த்திக்கு கொடுப்பதை பார்த்து. அம்மாதிரி இல்லாமல் பார்த்தது அவனை அன்று வாஹினியை கடத்தியிருந்தபோது..
அவரிடம் தலையசைப்பு கொடுத்து எதிர் இருக்கையில் இருந்தவன் கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக இருந்தாலும், அப்படி இல்லை என்பது அவனின் உடல் மொழியில் அப்பட்டமாக தெரிந்தது.
"வெல்.. இப்படி என்னை பாக்க தான் வந்திங்கன்னு சொல்லியிருந்தால் வெரைட்டி வெரைட்டியா போட்டோஷாப் எடுத்து உங்களுக்கு போட்டோஸ் அனுப்பி இருப்பேனே!" என்றான் சிரிக்காமல்..
அதை அவர் ரசித்து சிரித்து "பேச்சும் இன்னும் மாறவே இல்லை தஸ்யூதா!!" என்றார்.
"அப்போ ஆளும் மாறவில்லை என்று அர்த்தம்.. ம்ம்ம்..??" என தாடையை தடவி யோசித்தவன், "அப்படி எல்லாம் கற்பனை கூட பண்ணிக்காதீங்க!!" என்றான் சற்று மிடுக்காகவே!!
"சரி இந்த பேச்செல்லாம் எதற்கு?? எப்போ ஹிரண்மையாவை அவளது வீட்டில் கொண்டு வந்து விடப் போற??" என்றார்.
"அவ அவ வீட்ல தானே இருக்கா!!" என்றான் அவனும் விடாமல்..
"ம்ப்ச்.. தஸ்யூதா!! ஏன் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கறேனு தெரியல.. புரியாதாவனுக்கு தான் புரிய வைக்கலாம்.. உன்னை மாதிரி அதிபுத்திசாலிக்கு எல்லாம்.." என்று பெருமூச்சு விட்டார்.
அவனும் நீங்க எவ்வளவு வேணாலும் பேசிக் கொள்ளுங்கள் என்று அவரையே பார்த்த வண்ணம் தான் அமர்ந்திருந்தான்.
சிறுது நேரம் தன் யோசனையில் இருந்தவர் "இங்கே பாரு இந்த பிரச்சனை சின்ன பிரச்சினை கிடையாது. இது நீ மட்டும் எடுக்கிற முடிவும் கிடையாது!!" என்று அவர் ஆரம்பிக்கும் முன்னே கையை உயர்த்தித் தடுத்தவன் "அதற்கான பதிலை சொல்லட்டும் நீங்க சொல்ல வேண்டாம்!!" என்றான் வேகமாக..
"சரி அவகிட்ட நான் இதை பத்தி எதுவுமே பேசல.. ஆனால் அவ இருக்க வேண்டிய இடம் இது கிடையாது. முதல்ல அவளை வீட்டில் கொண்டு வந்து விடு. ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் அது அந்த குடும்பத்தை கண்டிப்பா பாதிக்கும். ஆனால் ராணி அந்தஸ்தில் உள்ள அந்த பெண்ணுக்கு பிரச்சினை என்றால் அது அவள் வம்சத்தையும் சேர்த்து தான் பாதிக்கும். உனக்கு ஏன் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குற?" என்று சற்று காட்டமாகவே அவர் கேட்டார்.
'அவர் கேட்பது நியாயம்தானே அந்த அந்தஸ்து.. ராணி…' என்று கண்களை மூடி கைவிரல்களை இறுக்க அவனின் நரம்புகள் எல்லாம் புடைத்தது அந்த கணத்தை தாங்க முடியாமல்…
"நீ விருப்பப்படி அவளை தூக்கிக் கொண்டு பறக்க முடியாது. அதனால் இது எல்லாம் விட்டுட்டு அவளை கொண்டு வந்து வீட்டில் விட பாரு!" என்றார் மீண்டும்..
"முடியாது!! விட முடியாது!!" என்று இவனும் சற்று தெனாவட்டாக பதில் உரைக்க..
"அப்படி எல்லாம் ஒருநாள் சொல்லவே முடியாது தஸ்யூதா.. அதனால் அதற்கு பின்னான விளைவையும் நீதான் சந்திக்க நேரும்!" என்று அவன் கண்களை பார்த்து கூற..
"எப்படிப்பட்ட பின் விளைவையும் சந்திக்கும் மனோ தைரியமும்.. புத்தி சாதுர்யமும் எனக்கு இருக்கு கர்னல் சார்!!" என்று நக்கல் வழியே உதட்டை சுழித்தான் ஜித்து.
"கண்டிப்பாக.. நீ அவளை அவளை விட வேண்டும். உன் குடும்பத்தை மட்டுமல்ல.. உன் வம்சத்திற்கு பெரிய பழி உண்டாகும். அதுமட்டுமல்ல ரோசையா என்னதான் நெருங்கி பழகினாலும் உனக்கு குடும்ப வாரிசை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கவே மாட்டான். புரிஞ்சுக்கோ தஸ்யூ.. உனக்கும் அவளுக்கும் கல்யாணம் என்பது இந்த ஜென்மத்தில் ஈடேறாது. அவளுக்கு பொறுத்தமான மாப்பிள்ளை…" என்று அவர் சொல்லி முடிக்கும் முன், அதுவரை ஆத்திரத்தில் கையை இறுக்க மூடி இருந்தவன் கை சட்டென்று தன் முதுகுக்குப் பின்னால் இருந்த ரிவால்வரை எடுத்து அவர் நெற்றியில் வைத்து விட்டான்.
இதை பால்கனியில் இருந்து பார்த்த வாஹினிக்கு சர்வமும் ஒடுங்கிய போனது. என்னதான் இவர்களெல்லாம் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அலைந்தாலும் அவர்கள் நலன்களுக்காக தீயவர்களை சுடும்போது இல்லாத ஒரு பரிதவிப்பு.. தன் அப்பாவுக்கு நெருக்கமான நண்பரின் நெற்றியில் அவன் துப்பாக்கியை வைத்தவுடன் வந்துவிட்டது.
"அங்க கை வைத்து இங்க கை வைத்து கடைசியில் என் வீட்டு ஆட்களையே சுடும் அளவுக்கு வந்து விட்டானே?? இவனையெல்லாம்…!!" என்று ஒரு வேகமாக இவள் ஓடி அந்த பரந்த தோட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து போகும் முன்பே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க அப்படியே அமர்ந்து விட்டாள் வாஹினி.
துப்பாக்கி சத்ததுக்கு குறையாத சத்தத்துடன் அவளது இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. இரு காதுகளையும் பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு கண்கள் சொருகியது. "என் ஜித்துவா.. என் ஜித்துவா இப்படி செய்தது?" என்று அவளால் அதை தாங்க முடியவில்லை. அவளுக்கு மிகவும் பிடித்த அப்பாவின் ஆத்ம நண்பர் கர்னல்.. கூடவே இவளது நலனில் அக்கறை காட்டும் மிக முக்கிய மனிதர்.
அவரைப் போய் சுட்டு விட்டானே? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன் மனதில்? என்று முதலில் பயந்து ஒடுங்கி அமர்ந்தவள், அடுத்த கணம் வீறு கொண்ட வேங்கையாக எழுந்து அவனை நோக்கி சென்றாள்.
முன்னே இருக்கையில் கர்னல் சாய்ந்திருக்க அவர் முன்னே கால்களை விரித்து நின்று கொண்டு, சினம் தணியாமல் துப்பாக்கியால் தன் தொடையில் வேகமாக தட்டியபடி நின்று கொண்டிருந்தான், இவளுக்கு முதுகை காட்டி ஜித்தேந்தர்.
அப்படி ஒரு கோபம் கண்மண் தெரியாமல் வர "டேய் ஜித்து..!!" என்று அவள் கத்திய கத்தலில் தன் நினைவுக்கு திரும்பிய ஜிதேந்தர் திரும்பிப் பார்க்க…
கழுத்தில் மண்டை ஓடு மாலையும்.. கைகளில் விதவித பயங்கர ஆயுதங்களும்.. உக்கிரத்தில் அனலாய் கொதிக்கும் தேகமும்.. கண்கள் வழியே கனலைக் கக்கினால் கட்டாயமாக காடே பற்றிக் கொள்ளுமளவுக்கு ஜொலித்த கண்களுமாய் இருக்கும் பத்ரகாளிக்கு இணையான மினி ருத்ரகாளியாய் நின்று கொண்டிருந்தாள் வாஹினி..
திரும்பியவன் தன் ஸ்கேனர் கண்களால் அவனை ஸ்கேன் செய்ய.. அவனது சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியவள், "எவ்வளவு தைரியம் இருந்தா என் அங்கிளை நீ சுட்டு இருப்ப? என்னடா பாவம் பண்ணாரு உனக்கு? என்ன பாவம் பண்ணினார்? எங்க அப்பாவுக்கு கொடுத்த வாக்குக்காக என் பின்னாடியே என் பாதுகாப்புக்காக சுத்திக்கிட்டு இருக்காரு தெரியுமா? இதுவரைக்கும் கல்யாணம் கூட பண்ணாதவர்.. அதற்கு வெளி உலகத்துக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் எனக்கு தெரியும் எதனால் பண்ணலைனு.. என்னை அவர் பெறாத மகளா தான் பார்க்கிறார்.. அவரை போய்.. ஷூட் பண்ணி இருக்க.. உன்னை என்ன செய்தால் தகும்?" என்று தன் தளிர் விரல்களின் மென்மையை விடுத்து வலிக்க வலிக்க அவனுக்கு அடித்தாள். கண்ட இடங்களிலும் கன்னங்கள் கழுத்து மார்பு என்று கோபம் அவள் கண்களை மறைக்க அவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் கோபம் குறையும் என்று பார்த்தவன் குறையாமல் போக சட்டென்று இரு கைகளையும் பற்றி "போதும்டி வலிக்கும்!! வலிக்குது.." என்றான்.
"வலிக்கட்டும்!! நல்லா வலிக்கட்டும்!! உனக்கு இன்னும் வலிக்கட்டும். என் கையில் மட்டும் கன் இருந்தது வைச்சுக்கோ.. உன்னை.. உன்னை…" என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவன் நெஞ்சிலேயே தஞ்சம் கொண்டு அழத் தொடங்கினாள்.
காதலும் நீ!!
அதன் காயமும் நீ!!
அதற்கான மருந்தும் நீ!!
என்று அவள் சொல்லாமல் சொல்ல அவளது தலையை ஆதுரமாக தடவியவன், அவளது கைகளை பற்றி உள்ளங்கையில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான் "நான் வலிக்கும் சொன்னது எனக்கு இல்லடி.. உன் கைகளுக்கு தான்!! எவ்வளவு மென்மையான கை தெரியுமா உனக்கு? அப்படி சுள்ளு சுள்ளுனு அடிக்கிற? இது எப்பேர்பட்ட உடம்பு தெரியுமா?? எந்த சூழ்நிலையையும் தாங்கும் வண்ணம் உரமேறிய உடம்பு!! இதுல உன் வீரத்தை காட்டாதே பால் டப்பா.. வீணா உனக்குத்தான் புண்ணாகும்!!" என்று மீண்டும் அவளது கையை இறுக்கி முத்தம் கொடுத்து அவளை அணைத்துக் கொள்ள…
இவனை எந்த வகையில் சேர்ப்பது? சரியான காதல் தீவிரவாதியாய் இருக்கிறான். அவனை அந்த அடி அடிக்கிறேன் என் கைகளுக்கு வலிக்கும் என்று எனக்கு ஆறுதல் கூறுகிறான். அவனது காதலை முழுவதுமாக ஏற்க முடியாமலும்.. அவன் செய்த செயலை தாங்க முடியாமலும்.. அவள் கண்ணீர் விட "ஏன் ஜித்து.. ஏன் இப்படி பண்ணின? பாவம் தெரியுமா அங்கிள்!! எனக்காக தானே பேச வந்தார். கண்டிப்பா எனக்காக தான் வந்திருப்பார். எனக்கு தெரியும்!! அவரைப் போய்.. இப்படி பண்ணிட்டியே?? பாவம் பெரிய பாவம்.. பாவா!! இந்த பாவம் எல்லாம் நம்மை தானே சேரும். நம்மை என்றால் நம் பிள்ளைகளை தானே சேரும் பாவா.. நம் பிள்ளைகளுக்கு ஆஸ்தி அந்தஸ்து என்று சேர்த்து வைக்கலாம். ஆனால் இப்படி பாவங்களை எல்லாம் சேர்த்து வைக்கக் கூடாது பாவா.... இப்பொழுது இளமையின் துடிப்பில் ஆணவத்தில் அதிகாரத்தில் என்ன வேணாலும் ஆட்டம் போடுபவர்கள் பின்னாளில் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது பாவா. அவர்களின் அத்தனை ஆட்டம் அவர்களின் பிள்ளைகளின் தலையில்தான் விடியும். அதை பார்த்து பார்த்து மனம் நொந்து போக நேரும். நம் குழந்தைகளுக்கு அந்த மாதிரி எல்லாம் வேண்டாம் வேண்டாம் பாவா! இதெல்லாம் பாவம் பாவா.. இதோட விட்டுடு!! பாவா.. ப்ளீஸ் பாவா!!" என்று அவனை அணைத்துக் கொண்டு பைத்தியமாக ஏதேதோ பேசி உளறிக் அழுது கொண்டிருந்தாள்.
அவளின் பாவாவில் உருகி நின்றவன், "சரி சரி இனிமே நான் எதுவும் பண்ணல!! ஆனால்.. பாவத்திற்காக அல்ல.. ஆனால் பாவிகளை என்னால் தண்டிக்காமல் இருக்க முடியாது பால் டப்பா!!" என்று அவள் காதில் முத்தமிட்டு முத்தமிட்டு கூறிக் கொண்டிருந்தான்.
"ஆனாலும் அங்கு பாரடி.." என்று அவளை நிமிர்த்தியவன் "உன் அங்கிளுக்கு ஒன்னும் ஆகல. இவ்வளவு நேரம் நீ அடித்த அடியையும் அழுகையையும் கேட்டு கேட்டு திவ்யமாக தான் உட்கார்ந்திருக்கார். திரும்பி பாரடி முதலில்.." என்று அவளை திருப்பி காட்ட அங்கே இருக்கைகள் சாய்ந்த வண்ணம் இவர்கள் இருவரையும் தான் காணாத கண்ட அதிசயத்தை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார் கர்னல்.
அவளிடமிருந்து அவனை தள்ளியவள், "அங்கிள்.." என்று அவளது காலடியில் அமர்ந்து "சாரி.. சாரி அங்கிள். எனக்காக அவனை மன்னிச்சிருங்க அங்கிள்.. ப்ளீஸ் என்ன இருந்தாலும் இந்த மாதிரி அவன் செய்திருக்கக்கூடாது கிறுக்கு பய.. தெரியாமல் செய்திட்டான்.. ரோட்ல போற பைத்தியம் என்று நினைத்து அவனை மன்னித்துவிடுங்கள் அங்கிள்.. எனக்காக.. உங்க ஹிமா குட்டிக்காக.. ப்ளீஸ்.. ப்ளீஸ் அங்கிள்!! அவன் சரியான குரங்கு பயல்.. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேங்குறான்.. எந்த நேரத்தில் இவனை பெத்தார்களோ இவனை?? சரியான முசுட்டு குறும்பன்!! சரியான காதல் தீவிரவாதி!!" என்று அவள் அடுக்கிக் கொண்டே செல்ல அதுவரை இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து கடகடவென்று வாய்விட்டுச் சிரித்தார் கர்னல்.
"ஹிமா.. ஹிமா.. ஹிமா.. உனக்காகத்தான் இதுவரை அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் நீ எனக்காக அவனிடமும்.. அவனுக்காக என்னிடமும்.. பேசுவதை பார்க்கும் போது, என் மீதான அன்பும்.. அவன் மீதான நேசமும் தெள்ளத் தெளிவாக புரிகிறது!! ஆனால் அதை இந்த கிறுக்கு பய கேட்கமாட்டான். எல்லாத்தையும் சுமூகமாக முடிக்க தான் நான் எண்ணுகிறேன். அதையெல்லாம் அடித்து உடைக்கவே வந்து பிறந்திருக்கிறான் தறுதலைப் பயல்" என்று அவளைப் போலவே அவரும் ஏக வசனத்தில் பேச…
"இப்போது தெரிகிறது!! இவள் ஏன் இப்படி அவளது ஸ்டேட்டஸ்க்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அது எங்கிருந்து கற்றுக் கொண்டாள் என்று இப்போதுதான் எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.. கர்னல்!!" என்றான் கோபத்தில் இருவரையும் முறைத்துக்கொண்டே ஜிதேந்தர்.
ஆமாம் பாரபட்சமில்லாமல் இருவருமே அவனை தாங்கி பேசுவதுபோல கழுவி கழுவி ஊத்திக் கொண்டிருந்தால் அவனும் என்னதான் செய்வான்??
"நான் இங்கே வந்து பேசியது எல்லாம் எதற்காக தெரியுமா? தெரியாதா?" என்று அவனைக் கூர்ந்து பார்த்து கேட்க..
"வேறு எதுக்கு?? எல்லாம் உங்க நண்பரின் மகள் திரும்ப அந்த அரண்மனைக்கு வர வேண்டும்!! ராணியாக பொறுப்பேற்க வேண்டும்!! போதாத குறைக்கு அந்த சொட்டை தலையன் எவனையாவது மாப்பிள்ளை என்று நிறுத்தவேண்டும்!! இல்லை அந்தப் பருத்த பரங்கிக்காய் அம்மாயி தன் மகனை மாப்பிள்ளையாக இவளுக்கு ஜோடி சேர்க்க வேண்டும்!! இதுக்கெல்லாம் தானே??" என்று அவன் ஆத்திரத்தில் வெடிக்க…
"இல்லை தஸ்யூதா!! நான் இங்கே வந்தது உனக்காக!! உன் காதலுக்காக!! நீங்கள் இருவரும் சேர்வதற்காக!! எவ்வளவு சீக்கிரமே அவளை கொண்டுவந்து அவளது இடத்தில் வைக்க முடியுமோ.. அப்போது தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி இவளை நீ தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக பறந்து கொண்டிருந்தால்.. அவளுக்கான அங்கீகாரம் எப்படி கிடைக்கும்? அங்கீகாரத்தோடு அவளது கரம் பற்றினால் தான் உன் காதலுக்கு மரியாதை கிட்டும். அதை விடுத்து இப்படி சிறை பிடித்து தூக்கி சென்றால், அதற்கு பெயர் வேறு.. புரிந்து கொள் தஸ்யூதா!! உனக்காக தான் பேசுகிறேன்" என்று அவனது கையை எட்டிப் பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொள்ள..
சிறுது நேரம் நிலைகொள்ளாமல் நடை பயின்றவன், "நாளைக்கு காலை இங்கிருந்து கிளம்பலாம்!!" என்றவன் "எக்ஸ்கியூஸ் அஸ்.. கர்னல்!!" என்றவன் அமர்ந்திருந்தவளை அப்படியே அள்ளிக் கொண்டு சென்றான்.
"இவனை திருத்தவே முடியாது!!" என்று கர்னல் தன் ஆட்களோடு பேச உள்ளே சென்று விட்டார்.
அந்த தோட்டத்தின் க்ரீன் ஹவுஸூக்குள் அவளை அள்ளிச் சென்றவனின் உதடுகள் இடைவிடாது அவள் கன்னத்தில் அளித்த மென் முத்தத்தை உள்ளூர ரசித்தாலும்.. அது பிடிக்காததைப் போல லேசாக அசைந்து முகத்தை பின்னிழுத்தாள் வாஹினி. ஆனாலும் அவளது முகம் சிவந்து வெட்கப் புன்னகை சிந்த.. அவளின் உள்ளத் தவிப்பின் படபடப்பு வெளிப்பட.. அவன் முத்தத்தால் பரவிய மெல்லிய சூடு கன்னத்தில் இருந்து உடல் முழுக்க பரவி விரவி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் கையை தன் கையில் எடுத்து அவளின் இளந்தளிர் விரல்களைக் கோர்த்து கொண்டான். உதடுகள் என்னவோ முத்தமழையை பொழிய அவளுக்குள் கிறக்கமான ஒரு சிலிர்ப்பெழுந்தது. அவள் உதடுகளோ.. பாவா!! பாவா!! என்று மொழிந்தது.
அவளின் பாவாவில் உருகி அவளை மெதுவாக அணைத்தான். அவள் முகத்தை நெருங்கி அவளின் மிருதுவான இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான். அவன் இதழணைப்பில் இருந்து மீள நினைத்து மெல்ல நெளிந்தாள். அவனோ விட முடியாமல் தவித்தான். ஒரு முத்தத்துடன் நிறைவு பெற முடியுமா என்ன அவன் உள்ளத் தவிப்பு?? அவளால் ஏற்பட்ட தாபம்??
மீண்டும் அவள் கன்னச் சிவப்பில் முத்தம் கொடுத்து ஆரம்பிக்க.. லேசான திமிறலுடன் அதை அனுமதித்தவள், இரண்டு முத்தங்கள் இருபதாக மாற.. அவனின் அணைப்பைத் தவிர்த்து விலகினாள். அவள் உணர்ச்சி பாவங்களுக்கேற்ப மாறும் அவளின் கண் பாவைகளும்.. கன்னக் குழைவும்.. மூக்கு நெளிவும்.. உதடுகளின் சுழிவும்.. கை கால்களின் அசைவுகளும் அவனை வெகுவாக ஈர்த்தது காந்தம் போல..
அவளின் விழியசைவு.. உதட்டுச் சுழிவு.. கழுத்து நரம்புகளின் மெல்லிய துடிப்பசைவும் தாண்டி அவனது கண்க
ள் கீழே பயணிக்க.. விம்மியெழும் மென்மைகளின் ஏற்ற இறக்கங்களை பார்வையால் விழுங்கினான். அவள் அதை உணர்ந்து கூச்சம் கொண்டு அவன் மார்பில் தஞ்சம் கொண்டாள் வஞ்சியவள்!!
நாளை இந்த காதல் புறாவுக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ அந்த அரண்மனை…
