இன்று..!
இரவெல்லாம் நிரஞ்சனுக்கு உறக்கமே இல்லை.
‘என்னாயிற்று என்னவளுக்கு? என்ன உடல் உபாதையாக இருக்கும்? எதற்காக நாளைக்கு வரச் சொல்லி இருக்கிறாள்? அவள் உடலுக்கு என்ன ஆனது என்பதை அறிந்த கொள்ள கூடாத அளவுக்கா நான் அந்நியனாகி போனேன்? மேகா.. மேகா.. மேகா..!’ என்று இரவெல்லாம் தூங்காமல் அரற்றிக் கொண்டே இருந்தான்.
தலைவனை பிரிந்த தலைவிக்கு மட்டுமல்ல.. தலைவியை பிரிந்த இத்தலைவனுக்கும் தலையணையே ஆதரவு கொடுத்தது.
அதி காலையிலேயே எழுந்தவன், வேக வேகமாக அன்னையின் உடைகளை எடுத்து வந்து வாசிங்மெசினில் துவைத்து பால்கனியில் காய வைத்தான்.
அவர் அறையை சுத்தமாக பெருக்கி துடைத்து என்று காலையிலேயே சுறுசுறுப்பாக வேலை செய்யும் மகனை யோசனையோடு பார்த்தார் பிரேமா.
இதெல்லாம் மாலையிலோ அல்லது விடுமுறை நாளிலோ தானே செய்வான்? என்னானது இவனுக்கு இன்னைக்கு? நேத்தும் எங்கோ அவசரமாக சென்றானே? சென்றவன் மதியம் போல எனக்கு உணவு வரவழைத்துக் கொடுத்தான். பின் மாலை போல வந்தவன் முகம் அத்தனை பிரகாசமாக இல்லை.. வேலையில் பிரச்சனை வர வாய்ப்பில்லை. இப்போது தான் பதவி உயர்வு வந்திருக்கிறது. பின் என்னவாக இருக்கும்? பேத்திக்கோ அல்லது வதனிக்கோ எதாவது? இல்லையில்லை அப்படி இருந்தால் வதனி சொல்லி இருப்பாளே??’ என்று யோசனையோடு மகனையே பார்த்திருந்தார் பிரேமா.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரேமாவே மாலை போல பேத்திக்கு பேசுவது போல மருமகளிடம் பேசுவார். கணவனை தவிர்க்க முடிந்தவாளால்.. அவனை பெற்ற முதியவரை தவிர்க்க முடியவில்லை.
வேக வேகமாக உணவினை தயார் செய்து அம்மாவுக்கு எடுத்து வைத்தவன், “அம்மா.. காலை சாப்பாடு டைனிங் டேபிளில் இருக்கு. மத்தியானம் சாப்பாடுக்கு பக்கத்துல மெஸ் புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க.. அங்கிருந்து வரும்.. நான்.. நான் கிளம்புறேன்” என்று அன்னையை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றவனை கண்டவர், மகன் தன்னிடம் ஏதோ சொல்ல தவிக்கிறான் என்று புரிந்தவர், அதற்கு மேல் அவனை தவிக்க விட முடியாமல் “ஆதவா.. வா..” என்று கைகளை விரித்தார்.
என்ன இருந்தாலும் அம்மா இல்லையா? பெத்த மனம் பித்து அல்லவா?
“அம்மா..” என்று பல நாட்களுக்கு பிறகு அன்னையின் மடி சேர்ந்தவன், அடக்க முடியாமல் ஒரு மூச்சு அழுது முடித்தான்.
“நீயும்.. நீயும்.. என்னை ஒதுக்கிட்டல்ல..” என்று தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல அழும் மகனின் முதுகை நீவி விட்டவரின் கண்களிலும் கண்ணீர் தான்.
“என்னாச்சு ஆதவா? எதுக்கு காலையிலேயே இவ்வளவு தவிப்பு?” என்று அவர் ஆதூரமாக கேட்க..
“தெரியலையே.. தெரியலையே மா..” என்று சிறு பிள்ளை போல உதடு பிதுங்க அழுதவனை கண்டு அவரும் கலங்க..
“அம்மா.. அம்மா.. மேகாவுக்கு ஒன்னும் இருக்காதில்ல.. என்னமோ மனசு சரியில்லை..” என்று அவன் விசும்ப..
“அவ நல்ல மனசுக்கு அவ ரொம்ப நல்லா இருப்பா.. கவலைப்படாத..!” என்று மகனின் தலையை வருடினார்.
“ஆம்.. உண்மை தான்..! அவ நல்லவ தான்..! உண்மையானவ தான்..! ஆனா.. நான் நல்லவன் இல்லையே..! அவளுக்கு உண்மையா இல்லையே..! தன் தப்பு எதுவும் அவளை தாக்கிட கூடாது” என்று தனக்குள் தவித்தவன்,
சிறு நேரம் அன்னையின் மடியில் தலை வைத்திருந்தான், பின் “சரி ம்மா. நேரமாச்சு.. வரேன்” என்று கண்களை துடைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஒன்பது மணி போல அவள் இருக்கும் வீட்டுக்கு அருகில் காத்திருந்தான் காரோடு.
பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் தன் வண்டியில் வந்த மனைவியின் வழியை மறித்தவன், “வா மேகா.. காரிலேயே ஒன்னா போய்டலாம்” என்றவன் கொஞ்சம் கெஞ்சலோடு மனைவியின் முகம் பார்த்து நிற்க..
அவனை முறைத்தவள் அவனது காரினை கண்டதும் அவளது கண்களில் அத்தனை வலி..! பின் ரௌத்திரமாய் மாற.. கண்களாலேயே கண்ணகியாய் அவனை எரித்தவள்,
அடுத்த நிமிடமே ஆக்ஸிலேட்டரை முறுக்கி, அவனை சுற்றிக் கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
“மேகா.. மேகா..” என்று புலம்பி தவித்தவன், வேக வேகமாக காரில் ஏறி அதனை உயிர்ப்பித்து அவள் பின்னே சென்றான்.
மருத்துவமனை அடைந்ததும், அது தாய் சேய் நல மருத்துவமனை என்று கண்டவன் மனதுள்ளே சில ஆர்வங்கள்.. சில சந்தோஷங்கள்..! ஆயினும் மனதினூடே அவற்றை அடக்கி ஆவலாய் மனைவியை பார்த்தான்.
அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள், முன்னே வேகமாக செல்ல, பின்னால் நிரஞ்சனும் சென்றான் ஆர்வமாக..!
மேகவதனி வரவேற்பறையில் இருந்த செவிலியரிடம்,“சிஸ்டர் இன்னைக்கு அப்பாயிட்மெண்ட் இருக்கு.. டிஎன்சிக்கு” என்றதும் இதயம் பிளக்க..
“மேகா..!!” என்று அம்மருத்துவமனையே அதிர கத்தினான் ஆதவ் நிரஞ்சன்.
தொடரும்..
