9
அன்று
நளினாவின் இரண்டாவது மகளுக்கு அன்று பிறந்தநாள் நிரஞ்சன் குடும்பமாக சென்று இருந்தான் தங்கையின் மகளை வாழ்த்த..
குடும்ப விழாக்கள் என்றால் நிரஞ்சன் பக்கத்து விழாக்களில் மட்டுமே பங்கேற்பாள் மேகா. அவளது குடும்பம் தான் அவளை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டதே..!
முதலில் காதல் போதையில் கணவன் அருகாமையில் அவை எல்லாம் பெரிதாக தோன்றவில்லை மேகவதனிக்கு. ஆனால்.. நாட்கள் வருடங்கள் செல்ல செல்ல.. பெரும் மன உளைச்சலை கொடுத்தது மேகவதனிக்கு.
“இன்னுமா உங்க வீட்டுல உன்னை ஏத்துக்கல..?”
“ம்ஹும்.. நல்லாத்தான் போ.. ஊரு உலகத்துல நடக்காத அதிசயமா நடந்திடிச்சு.. உங்க அப்பா அம்மா இன்னும் உன் கூட அன்னம் தண்ணி புழங்க மாட்டேங்குறாங்க.. என்னமோ போ வதனி..!”
“கட்டுன புடவையோட இல்லையில்ல போட்டுயிருந்த சுடிதாரோட வந்த நீ.. ஒரு நகை நட்டு உண்டா? ஒரு பண்டபாத்திரம் தான் உண்டா? இல்ல விளக்கேத்த வந்த மகாலட்சுமி அந்த விளக்கு தான் எடுத்திட்டு வந்தியா? ஆனாலும்.. எங்க அக்கா பிரேமா உன்னை பெருந்தன்மையா ஏத்துக்கல.. உங்க வீட்டுல ஏன் இந்த வீம்பு?”
“அண்ணி.. அது வீம்பு இல்ல.. எங்க பேச்சு வார்த்தை வச்சிக்கிட்டா நகை நட்டு சீர் செய்யணும்.. வருசா வருசம் பொங்க சீர் தீபாவளி சீர் செய்யணுமே தள்ளியே இருக்காங்க போல வதனி வீட்டுல” என்று கூறி கொல்லென்று சிரித்தார் பிரேமாவின் ஒன்னு விட்ட நாத்தனார் கோகிலா..!
இதையெல்லாம் பார்த்து ஏதோ வேண்டாத மருமகளை நல்லாப்படியாக பார்த்துக் கொள்ளும் மாமியாராய் அந்த பாகுபலி சிலையாய் உயர்ந்து நின்றார் அவர்களது பேச்சின் வீரியத்தில் பிரேமா..!
“என்ன பண்றது கோகிலா.. பையன் ஆசைப்பட்டுட்டான். இவளும் அவனை நம்பி வீட்டை விட்டு வந்துட்டா.. ம்ஹீம்.. இப்போ ஒரு புள்ளையும் ஆச்சு..! இனி சீருனு பார்க்க முடியுமா? இல்ல சீதனத்தை தான் பார்க்க முடியுமா சொல்லு.. எல்லாம் இது தான் விதிச்சதுனு காலத்த கடத்த வேண்டியது தான்” என்ற மாமியாரின் பேச்சில் முழுதாய் மனதில் அடி வாங்க.. வெடுக்கென்று கலங்கிய கண்களோடு அவரை நிமிர்ந்து பார்த்தாள் மேகவதனி.
அவரோ இவளை கண்டு கொள்ளாது, கணவன் இல்லாது தானும் தன் மகனும் கஷ்டப்பட்டு பாடுபட்டு இரண்டு மகள்களுக்கும் நகை நட்டு சீர் செனத்தி எவ்வாறு சபை நிறைக்க செய்து கல்யாணம் செய்து வைத்தார் என்பதை கண்ணீர் மல்க உருக்கமாக கூறிக் கொண்டிருந்தார் பிரேமா.
அங்கிருந்த கூட்டமும் அவரது பேச்சுக்கு உருகி முந்தானையில் மூக்கை உறிஞ்சி கொண்டு அமர்ந்திருக்க.. பார்த்து இருந்த மேகவதனிக்கு மனம் அத்தனை வலித்தது.
“இன்னும் எத்தனை காலம் தான் டா இதெல்லாம் பேசிட்டே இருப்பீங்க.. பத்து வருஷம் ஓடிருச்சுடா.. இன்னுமாடா பண்ட பாத்திரம் குடுக்கலன்னு சொல்லிட்டு இருக்கீங்க? எந்த காலத்துல டா இருக்கீங்க நீங்க எல்லாம்? ஆனால் எந்த காலத்தில் இருந்தாலும் இந்த சமுதாயம் இப்படித்தான். இவர்களை கடந்து விட தான் மனது துடிக்கிறது. ஆனால் கடக்க முடியவில்லையே..” கண்கள் கரித்துக் கொண்டு வர எழுந்து செல்லவும் அவளால் முடியாது.
கணவனை பார்க்க நிரஞ்சன் ஆண்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். மெல்ல நாத்தனாரிடம் “ரெஸ்ட் ரூம் போகணும் அண்ணி” என்று சொல்லியபடி கழிவறையில் புகுந்து கொண்டவளின் கண்களோ கண்ணீரை நிறுத்தமால் உகுத்துக் கொண்டு இருந்தது.
“மேகா. மேகா.. எங்க மேகா?” என்றபடி மனைவியை தேடிக்கொண்டு வந்த மகனை அருகில் இருந்து உறவினர்களிடம் கண்ணை காட்டி விட்டு “இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தா வதனி.. எங்க கூட பேச பிடிக்கல போல அதான் எங்கையாவது தனியா உக்காந்து இருப்பா” என்றார் பிரேமா.
அத்தனை பேரும் முன்பு அம்மாவை திட்ட முடியாமல் அவரை முறைத்துப் பார்த்தவன் தங்கை நளினாவிடம் விசாரித்தான்.
அவளோ வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தவள் “அண்ணி பாத்ரூம் பக்கம் போனாங்கனு நினைக்கிறேன் அண்ணா” என்றாள்.
மேகா என்று வெளியில் இருந்து அவன் சத்தம் கொடுக்க.. அதுவரை தன்னிலை குறித்தே அத்தனை இறக்கமாக நினைத்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் மேகவதனி.
‘அன்று பாசமாய் வளர்த்த பெற்றோர்களை அழ வைத்து.. அவர்களை வலியில் துடிக்க வைத்த.. அந்த கர்மா இன்று தன்னை தாக்குகிறதோ.. எல்லாம் தேவை தான் எனக்கு..! காதலுக்காக வீட்டில் இருந்தே போராடி இருக்க வேண்டும்..! இப்படி ஓடி வந்து திருமணம் செய்து இன்றுவரை ஒவ்வொரு வாயிலும் அரைபட்டுக் கொண்டிருக்கிறோமே..!’ என்று வேதனையில் உழன்றுக் கொண்டிருந்த நேரத்தில்..
கணவனின் மேகா என்ற குரலில் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை முகத்தை நன்றாக கழுவிட்டு “என்னங்க..” என்றபடி வெளியே வந்தாள்.
மனைவியின் குரல் ஙஞணநமன போடுவதைக் கண்டு “அழுதியா டி?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான் ஆதவ் நிரஞ்சன்.
“யாராவது ஏதாவது பேசினா திருப்பி பேசுனு சொல்லி இருக்கேன் தானே? இன்னுமா அழுதுகிட்டே இருப்ப?” என்று கடிந்தான்.
அவள் அமைதியாக நிலத்தை நோக்க, அவளின் இந்த அமைதி அவளுக்காக இல்லை தனக்காக என்று புரிந்தவன்,
“மேகா மா..” என்று அவளது புஜத்தை இறுக்கி பிடித்தான். அவளை இறுக்கி அணைக்க முடியாத சூழ்நிலையை கருதி..
அவனுக்கும் புரிந்தது. வீட்டில் சற்று வாயை அடக்கமாக வைத்திருக்கும் அம்மா இப்படி உறவினர்களோடு சேர்ந்தால் அவர்கள் வாய்க்கு அவலாக இன்னும் தன் மனைவி அரைபடுவதை கண்டு கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை கட்டுப்படுத்தவே முடியவில்லை அவனால். ஏதாவது மனைவி ஆதரவாக கண்டித்து கூறினால், உடனே “நான் உன்னை அப்படி அன்பு காட்டி வளர்த்தேன்.. இப்படி பாசம் கொட்டி வளர்த்தேன்.. நான் என்ன உன் பொண்டாட்டி வீட்டு சீதனத்தை கேட்டனா? சொத்து பத்து கேட்டேனா? என்னோட மனதாங்கலை நாலு பேர் கிட்ட சொல்லி அழ கூடவா கூடாது..?” என்று அழுபவரை எங்கணம் கண்டிப்பது என்று தெரியாமல் விட்டு விடுபவன் மனைவியை தேற்ற முயன்றான்.
“சரி வா பங்க்ஷன் ஆரம்பிக்க போகுது. கிப்ட் கொடுத்துட்டு நாம கிளம்புவோம்” என்றான் மனைவியின் மனநிலை புரிந்து கணவனாய் நிரஞ்சன்.
“இல்லங்க வேணாம்..! உடனே கிளம்பினால் நளினா அண்ணி வருத்தப்படுவாங்க” என்று அவளின் வருத்தப்படுவார்கள் என்ற மறைபொருளின் பின்னே இருப்பது கோபப்படுவார்கள்… பின் நேரம் கிடைக்கும் சொல்லி சொல்லி பேசுவார்கள் என்பதே..!
“இல்ல.. இல்ல.. கிளம்பலாம். எனக்கு ஒரு வேலை இருக்குனு நான் பொய் சொல்லிக்கிறேன் வா..” என்று அவள் வீம்பு செய்ய..
வேண்டாங்க என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மேகவதனி.
அப்பொழுது அப்பக்கம் வந்த நிரஞ்சனின் அக்கா ஆர்த்தி “என்னடா அங்க எல்லாரும் பர்த்டே பார்ட்டிக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க.. இங்க புருஷன் பொண்டாட்டி என்னடா தனியா கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வர…
“அர்ஜென்டா ஒரு இடத்துக்கு போகணும் ஆர்த்தி. சீனியர் மேனேஜர் வரச் சொல்றாரு. ஏதோ ஒரு பெரிய க்ளைன்ட் வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்காராம். அதுதான் பங்க்ஷன் முடிச்சிட்டு நாம கிளம்புவோம்னு சொன்னா இப்ப வேண்டாம்னு சொல்லி தடுத்துக்கிட்டு இருக்கா” என்றான்.
“இவ வேண்டாம் என்று தடுக்கிறாளா?” என்று நம்பாமல் தம்பி மனைவியை பார்த்தவர் “சரி சரி வா முதல்ல பங்க்ஷன் முடிக்கலாம்” என்று அனைவரும் நளினாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கொண்டு மனைவி இங்கே இருந்து எங்கே தங்கைக்கு அத்தனை வேலையும் செய்து கொடுத்து, அவர்கள் உறவினர்களையும் கவனித்து.. போதாக்குறைக்கு அவர்கள் உண்ண வயிற்றுக்கு உணவு பரிமாறுவளையே வாய்க்கு உணவாக மெல்லும் இவர்களிடம் மேலும் மனைவியை விட்டு வைக்க முடியாமல்..
“அவசரமா சீனியர் மேனேஜர் வர சொல்றாரு. நான் போய் ஆகணும் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வீட்லதான் இருக்கு நான் மேகாவ கூட்டிட்டு கிளம்புறேன்” என்றவனை குடும்பமே திகைத்து பார்த்தது.
“என்ன அதுக்குள்ள கிளம்புறிங்க?
“இன்னும் விசேஷமே முடியலையே?”
“சாப்பிடாம கிளம்புவியா?” என்று ஒவ்வொருத்தரும் பிடித்து வைத்து கேட்க..
இவன் நளினாவின் கணவரின் கையை பிடித்து “மச்சான்.. நீங்க கொஞ்சம் புரிந்துகொள்ளுங்களேன். சீனியர் அப்பவே கூப்பிட்டார் நான் கொஞ்சம் டைம் எக்ஸ்க்யூஸ் கேட்டு இருக்கேன். மிருக் குட்டி அம்மாவோட வரட்டும். நான் மேகாவ கூட்டிட்டு கிளம்புறேன்.. பைல் எல்லாம் வேற எங்க வச்சிருக்கேனு தேடித் தான் எடுக்கணும்” என்று டென்ஷனாக அவ்வப்போது அவன் நெற்றியை நீவிக் கொண்டு அவஸ்தையோடு நின்றியிருக்க..
அவனை புரிந்து கொண்ட நளினாவின் கணவர் “சரி மச்சான் நீங்க கிளம்புங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம பாத்துக்கலாம்” என்று அவனை அனுப்பி வைக்க மற்றவர்களால் ஒன்றும் கூற முடியவில்லை.
வீட்டு பக்கம் செல்லாமல் கணவன் வேறு எங்கேயோ செல்கிறானே என்று யோசித்தாள்,
“எங்க போறோம்? சொல்லுங்க மிஸ்டர் ஆதவ் நிரஞ்சன்..! எங்க உங்க பொண்டாட்டிய கடத்திட்டு போறீங்க?” என்று அவன் தோளில் துப்பாக்கி வைப்பது போல வைத்து அவள் செல்லமாக மிரட்ட..
சைடு கண்ணாடி மிரரில் அவளுடைய முகத்தை அட்ஜஸ்ட் செய்தவன்.. “உன்னை எங்கையாவது அழகான இடத்திற்கு கூட்டி செல்ல தான் டி ஆசை. ஆனா.. என்னால உன்னை விட அழகான ஒரு இடத்தை தேடி பிடிக்க முடியவில்லையே.. எனவே தான் அட்லீஸ்ட் இந்த பயணத்தை அழகாக ஆகலாம்னு உன்னை இந்த வழியில் கூட்டி போகிறேன்..” என்று அவள் இதுவரை செல்லாத மனதுக்கு ரம்யமான ஆட்கள் அதிகம் இல்லாத வழியில் கடற்கரை வழியாக அழைத்து சென்றான்.
அவன் சொன்னது போலவே… அந்த வழி இயற்கை காட்சியுடன் இதமான குளிர் காற்றுடன் மிக அற்புதமான பயணமாக இருந்தது.
மேகவதனி கணவனை பின்புறமாக இறுக்க அணைத்து கொண்டாள். எதும் கூற வார்த்தை இல்லாமல்.. வராமல்..!
பின்னாலிருந்து எக்கி அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
மனைவியிடம் இதனை சற்றும் எதிர்பார்க்காத நிரஞ்சன் சட்டென்று வண்டி ஒட்டிய படியே திரும்பி பார்த்தான்.
கண்களில் காதல் வழியே உணர்வு பெருக்கோடு இருந்த மனைவியை கண்டவன்,
பின் எந்த தயக்கமும் இன்றி அவளின் உதட்டில் முத்தம் இட்டு திரும்பி வண்டி சரியாக ஒட்டி சென்று கொண்டு இருந்தான்…
மேகவதனியோ நிரஞ்சன் கழுத்தில் தன் மூச்சி காற்றின் சூடுடோடு அவனை இறுக்கி அணைத்து கொண்டே வந்தாள் வழி நெடுக…!
வாழ்வியலின் அடுத்த அழகான தருணம்.. இணைகளின் அழகிய புரிதல்..! அழியாக் காதல்..
