தூகை 8

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

8

 

இன்று..!

அன்று‌ மச்சானை சீண்டி கலாய்த்தவன் இன்று அவனுக்காக காலையிலிருந்து கால் கடுக்க தவம் இருக்கிறான் ஆதவ் நிரஞ்சன்..!

காலையில் மனைவியிடம் இருந்து ஃபோன் வந்ததிலிருந்து இவனும் பல தடவை திரும்ப அழைத்து விட்டான்.‌ ஆனால் அவளோ ஃபோனை எடுக்க காணும்.

அவளை தேடி சென்று என்னவென்று பார்க்க ஒரு நிமிடமாகாது நிரஞ்சனுக்கு. ஆனால் அவள் செல்லும்போது கடைசியாக சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளை தேடி போகாமல் இருக்கிறான். 

அதே நேரம் ‘அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ? எதுக்காக கால் செஞ்சா? ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் வைக்கலாம் தானே? இவளால பேச முடியல என்ன புள்ளைய விட்டாவது பேச சொல்லி இருக்கலாமே? ஒருவேளை பிள்ளைக்கு ஏதாவது இருக்குமோ?’ என்று காலையிலேயே அத்தனை மன உளைச்சல் அவனுக்கு..!

அருகில் இல்லாத மனைவி மகளின் நலனை நேரில் கண்டுகொண்டால் இன்றி அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்ற வேக வேகமாக கிளம்பி சென்றான் ஆதவ் நிரஞ்சன்.

எப்பொழுதும் சொல்லிவிட்டு செல்லும் மகன் இன்று அரக்க பறக்க ஓடுவ குழப்பமாக பார்த்தார் பிரேமா கூட..

அரைகுறையாக குளித்து வேக வேகமாக காரை எடுத்துக் கொண்டு மேகா தற்போது குடி இருக்கும் வீட்டிற்கு சற்று தள்ளி நின்று கொண்டான் நிரஞ்சன்.

எப்படியும் மகளை பள்ளிக்கு அழைத்துக் கொண்டு அவள் வண்டியில் இவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு சீக்கிரமாக வந்து காத்திருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது நடக்கவே இல்லை.

ஒன்பது மணி வரை நின்று பார்த்து விட்டான். மகளை அழைத்துக் கொண்டு மனைவி செல்லவே இல்லை. எட்டு மணிக்கு எல்லாம் சென்று விடுவாள். எட்டு அரைக்கு மகளுக்கு பள்ளி ஆரம்பம்.

“இன்று ஏன் இன்னும் சொல்லவில்லை? என்னவாயிற்று? ஒருவேளை அவங்க அம்மா வீட்டுக்கு சென்று விட்டாளா? இல்லை பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையா?” என்று யோசித்துக் கொண்டே நின்றவனுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை.‌ 

இரண்டு அடி அவள் வீட்டை நோக்கி எடுத்தும் வைத்து விட்டான். ஆனால் தன்னால் அவளுக்கு மீண்டும் மன கஷ்டம் வேண்டாம் என்று காரில் ஏறி அமர்ந்து இருக்கையில் தலை சாய்த்து அமர்ந்தவனுக்கு அத்தனை வேதனையாக இருந்தது தன் நிலையை நினைத்து..!

காரில் சென்றவனுக்கு மனைவியின் பிறந்த வீட்டை மிதிக்க அத்தனை தயக்கம். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் புதிதாக போய் நிற்கவும் ஒரு கூச்சம்..!

அதே நேரம் தான் செய்த தவறை அவர்களிடம் கண்டிப்பாக மனைவி கூறியிருப்பாள். அவர்கள் முன் நிற்க அவமானம் வேறு..!

 அதனால் சிறிது நேரம் அவர்கள் வீட்டு முன்னால் காரை வைத்துக்கொண்டு நின்றவன், பின்பு முதலில் பெண்ணை சென்று பார்க்கலாம் என்று பள்ளிக்கு சென்று மகளுக்கு லஞ்ச் கொடுக்க வேண்டும் என்று போகும்போதே இவன் வாங்கி சென்று இருந்த மகளுக்கு பிடித்த உணவினை அவள் வகுப்பு ஆசிரியரை பார்த்து கொடுத்தான்‌

அவளும் நிரஞ்சனிடம் வாங்கி மிருவிடம் கொடுத்தவள் “உங்க பொண்ணு தான் காலையிலேயே டிபன் கொண்டு வந்துட்டாளாமே சார்? நீங்க வேற எதுக்கு கொண்டு வந்து இருக்கீங்க?” என்று கேட்க.. அப்படி ஒரு ஆசுவாசம் நிரஞ்சனிடம்.

“அப்பாடி மகள் நலமாக இருக்கிறாள்.! மகளுக்கு சமைத்துக் கொடுத்திருக்கிறாள் என்றால் மனைவியும் நலமே..!” என்று தன் இரு இதயத்தையும் நினைத்து பெருமூச்சு விட்டவன் “இல்ல மேடம் அவளுக்கு புடிச்ச சாப்பாடு அதான்..” என்று அசட்டுத்தனமாக ஏதோ கூறி சமாளித்து வந்து விட்டான். 

அன்று பேங்கிற்கு லீவு சொல்லியவன் சென்றது என்னவோ மச்சானை தேடித்தான்..!

மச்சான் அவனது கோட்டாவில் வழக்கமாக நின்றிருக்கும் இரண்டு மூன்று இடங்களில் தேடிவிட்டு கடைசியாக ஒரு இடத்தில் அவன் இருப்பதை அறிந்து அங்கே வந்து நின்றான். 

விகர்த்தனனும் மிக மும்மரமாக தன் வேலையில் ஈடுபட்டு இருக்க.. அவனிடம் சென்று பேச ஏதோ ஒன்று தடுத்தது நிரஞ்சனுக்கு.

‘சரி சற்று பொறுப்போம்’ என்று தள்ளி இருக்கும் டீ கடையில் ஒரு டீ வாங்கி குடித்துக் கொண்டே, விகர்த்தனன் சற்று பிரீ ஆனதும் போய் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு டீயை குடித்தான். 

ஆக.. இதுவரை 5 டீ உள்ளே போனது தான் மிச்சம். ஆனால் விகர்த்ததனிடம் சென்று இவனால் பேசவே முடியவில்லை. வரிசையாக யாராவது ஒருத்தர் வர.. அவர்களிடம் இவன் செக் அப் செய்து கொண்டு இருக்க.. இப்படியாக நேரம் சென்றிருந்தது.

அதையும் தாண்டி அவன் ஃப்ரீயாக நின்று இருந்தால் அவனை நெருங்கவே அத்தனை தயக்கம் நிரஞ்சனுக்கு.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அந்த டீக்கடையில் நின்றிருக்கிறான். வெறுமனே நின்று இருக்க தயங்கி தான் டீயை வாங்கி உறிஞ்சிக் கொண்டு நின்றிருக்கிறான் நிரஞ்சன்.

நிரஞ்சனை எப்பவோ பார்த்து விட்டான் விகர்த்தனன். மாமன் எதற்காக தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்ற ஒரு அனுமானமும் அவனுக்கு உண்டு. ஆனால் அவராக வரட்டும் என்று இவன் அமைதியாகவே நின்றிருந்தான். 

ஆறாவது டீயினை கேட்டவனை ஒருவித அதிர்ச்சியோடு பார்த்த டீக்கடைக்காரர் மறக்காமல் டீயை கொடுத்து “சார் சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க.. இந்த டீக்கடை என்னோடுது தான். ஆனாலும் ரெண்டு மணி நேரத்துல ஆறு டீ எல்லாம் ரொம்ப ஓவர் சார்.. உடம்ப பாத்துக்கோங்க..” என்று ஃப்ரீயாக அட்வைஸ் வேற கொடுத்து அவன் கையில் டீ க்ளாஸை திணிக்க.. 

“எல்லாம் என் நேரம்” என்று டீயை கேன்சல் செய்துவிட்டு பெருமூச்சினை‌ ஒன்று இழுத்து வேகமாக விட்டு தன்னை திடப்படபடுத்தி.. ‘மச்சான் என்ன திட்டினாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் நிரஞ்சா.. மனசை திடப்படுத்திக் கொள்’ என்று இம்சை அரசன் வடிவேல் பாணியில் தனக்குத்தானே கூறிக்கொண்டு மச்சானை நோக்கி நடந்து சென்றான் நிரஞ்சன். 

நிரஞ்சன் அருகில் வந்து நின்றாலும் அவனை கண்டுகொள்ளாமல் கான்ஸ்டபிளிடம் ஏதோ ஏவிக்கொண்டு அடுத்தடுத்து வருபவர்களை விசாரித்துக் கொண்டு நின்றிருந்த விகர்த்தனனை கண்டதும் “டேய் குடும்பத்தில் யாராவது ஒரு ஆள் படுத்துங்கடா.. குடும்பமே படுத்தினீங்கன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது..!” என்று கத்த வேண்டும் போல தோன்றியது நிரஞ்சனுக்கு.

ஆனால் அப்படி கத்தி விட முடியாதே..! முகத்தில் அடித்தது போல நீ யாரென்று கேட்டு அனுப்பி விடுவானே..! என்று தலையை உலுக்கிக் கொண்டான்.

“சக்தி..” என்று மெதுவாக அழைத்தான் நிரஞ்சன். வீட்டில் அவனை சக்தி என்று தான் அழைப்பர் அனைவரும். மேகவதனி தம்பியை பற்றி பேசும்போது சக்தி என்று பேசுவதால் அப்பெயரே நிரஞ்சன் மனதினில் அவனைப் பற்றி பதிந்திருக்க மனைவி வழிக் கொண்டு இவனும் சக்தி என்றே அழைத்தான். 

விகர்த்தனன் இதை எதிர்பார்க்கவில்லை. சக்தி என்று வீட்டார் மட்டுமே அழைக்க.. நிரஞ்சனும் அப்படியே அழைக்கவும் ஒரு கணம் தடுமாறியவன் தன்னை மீட்டுக் கொண்டு என்ன என்று பார்வையால் அவனைப் பார்த்தான். ஆனால் வாயை திறக்கவே இல்லை சாமான்யமாக..! விடாக்கண்டன்..!

“ப்ளீஸ் கொஞ்சம் பேசணுமே.. ரொம்ப எல்லாம் வேணாம் ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் ப்ளீஸ் சக்தி.. ப்ளீஸ்..” என்று மெல்லிய குரலில் கெஞ்சவே செய்தான் நிரஞ்சன். அவனுக்கு அவன் மனைவியை பற்றி அறிந்து கொண்டே ஆக வேண்டுமே..!

ஆனால் உடனே ஒத்துக் கொண்டால் அது சக்தி அல்லவே? ஒரு அரை மணி நேரம் அவனைக் கெஞ்ச விட்டு அதன் பிறகு மனம் இரங்குவது போல இரண்டடி தனியாக வந்து நின்றான் விகர்த்தனன். 

‘மலையேற மச்சான் உதவி தேவைன்னு‌ சொன்னாங்க இவனை மலை இரக்கவே பெரும்பாடாக இருக்கே’ என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டவன் “சக்தி எனக்கு மேகாவை பார்க்கணும்” என்று கலங்கிய குரலில்..

அவனது அன்பு பொய்யில்லை அக்கா மீதான அக்கறையும் பொய்யில்லை.. இவர்களுக்குள் இருக்கும் காதலும் பொயில்லை..! ஆனால் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பதை பற்றி இன்னவரை மேகா யாரிடமும் கூறவில்லை. அதனால் விகர்த்தனனுக்கும் இவருக்குள்ளான பிரச்சினை பற்றி தெரியாததால் அமைதியாக மாமனைப் பார்த்து “ரொம்ப தான் அக்கறை போல..” என்று நக்கலாக கேட்டான்.

“ப்ளீஸ் சக்தி.. நான் தப்புதான்..! எல்லாம் என் தப்புதான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். 2 மாசமா நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். குழந்தையையாவது ஈவினிங் டைம்ல பாக்கிறேன். பேசுவேன்.. ஆனா அவள் கிட்ட..” என்று கலங்கிய கண்களை மச்சானுக்கு காட்டாமல் தலையை திருப்பிக்கொண்டு கண்களை துடைத்துக் கொண்டான்.

“திடீரென காலைல ஃபோன் பண்ணுனா.. நான் எடுக்குறதுக்குள்ள கட் ஆகிட்டு. திருப்ப ஒரு 50 தடவையாவது நான் கூப்பிட்டு இருப்பேன். அவ ரெஸ்பான்ஸே பண்ணல சக்தி. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. வீட்டு பக்கம் போனேன் குழந்தை விடும்போது எப்படியும் பாக்கலாம்னு.. ஆனா அவ கொண்டு வந்து விடல.. ஆட்டோல அனுப்பிட்டா போல. ஸ்கூல்ல போய் மிருவ பார்த்துட்டு தான் வரேன். அவளுக்கு சமைச்சும் கொடுத்திருக்கா.. ஆனா எதுக்கு ஃபோன் பண்ணா எனக்கு தெரியல.. நல்லா இருக்கேன்னு அவ வாயில இருந்து ஒரு வார்த்தை நான் கேட்கணும். ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணேன்..” என்று தன் முன்னே கெஞ்சலோடு நின்றிருக்கும் மாமனை பார்க்க ஒரு ஆணாக பாவமாகத்தான் இருந்தது விகர்த்தனனுக்கு.

ஆனால் இவன் தான் அன்று தன் அக்காளை காதல் என்ற பெயரில் எங்களை எல்லாம் விட்டு கடத்தி சென்றது.. பல ஆண்டுகளாக திரும்பி கூட பார்க்காமல் இருந்தது.. இப்பொழுது இரண்டு மாதங்களுக்கு முன் எதையும் கூறாமல் தங்கள் வீட்டுக்கு வந்து நின்ற அக்காவின் ஓய்ந்த நிலைக்கும் காரணம்‌ இவன் தான்..!

மகளை கண்டு பெற்றோர் வருந்தவும் இவன் தான் காரணம்..! 

ஆனால்.. ஆனால்.. தான் செய்தது தப்பு என்று தனக்குத்தானே ஒப்புக்கொடுத்து நின்று கெஞ்சும் இவரிடம் எங்கணம் கோபத்தை காட்டுவது? என்ன செய்வது? என்று புரியாமல் பார்த்தவன்..

வேறு வழி இன்றி அக்காவுக்கு அழைத்தான். வெகு நேரம் சென்றே எடுத்தாள் மேகா.

“அவர் பக்கத்துல இருக்காரா இருந்தா போனை ஸ்பீக்கர்ல போடு சக்தி” என்றாள்.

அசந்து தான் போனான் அக்காளின் இந்த புரிதலை கண்டு விகர்த்தனன்.

மாமனை பார்த்துக் கொண்டே தன்னுடைய ஃபோனை ஸ்பீக்கரில் போட்டான்‌ விகர்த்தனன்.

“நாளைக்கு காலைல 10 மணிக்கு ரேஷ்மா ஹாஸ்பிட்டலுக்கு வந்துருங்க” என்று கூறி அழைப்பை நிறுத்திவிட்டாள் மேகவதனி.

என்ன என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றிருந்தவன் விகர்த்தனனிடம் தலையாட்டிவிட்டு தன் காரை நோக்கி ஆழ்ந்த யோசனையோடும்.. மனம் நிறைந்த பாரத்தோடும்.. மனைவிக்கு ஏதும் இருக்கக் கூடாது என்ற பெரும் வேண்டுதலோடும் சென்றான் ஆதவ் நிரஞ்சன்.

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top