அவளது எல்லை மீறிய பேச்சில் கடும் கோவமடைந்த பிரதீஷ், வீங்கியிருக்கும் கன்னத்திலே அறைந்து விட்டான். மிக பிரயத்தனப்பட்டு காப்பாத்திக் கொண்டு வந்தால், விட்டேற்றியாக பேசும்போது ஆடவனுக்கு கோவம் வரதா?
அவனும் அடிப்பட்ட வலியில் இருக்க, வஞ்சியவள் மேலும் ரணத்தை தர; அங்கு நிற்காது வெளியேறி சென்றவனை கன்னத்தை தாங்கி பிடித்தபடி கண்ணீர் கசிய பார்த்தாள்.
இருவரும் கிளம்பும் நொடி வரை பேசிக்கொள்ளவில்லை. அவனும் காரிடோரே தனக்கு நிம்மதியென இருந்து விட்டான். அவனை காணும் ஆசையில் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாள். அவள் மட்டும் இப்படியொரு நிகழ்வு நடக்கும் என கனவா கண்டாள்.
மணி சரியாக ஐந்தை எட்ட பத்து நிமிடங்கள் இருக்க, உள்ளே விறுவிறுவென நுழைந்தவன் சும்மா இருக்காது தானாக கறுவிட துவங்கினான்.
அவளோ, அப்போது தான் உறக்கத்தை தழுவியிருக்க.. ஒருக்கணம் அழுந்த அவளை பார்த்தவன் "மண்ணாங்கட்டி ரீடிங் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? எப்படி இருக்கணும் அறிவு இல்லையே.." என்று கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் குளித்து முடித்து வரும்போதும் ராசிகா உறங்கிக் கொண்டிருக்க, பார்த்திடவும் பாவமாக இருந்தது. என்ன நடந்தது என கேட்டால் கூறாமல் வித்தை காட்டுகிறாளே என சலித்துக் கொண்டவன், எப்படி எழுப்புவது என யோசித்தான்.
அவனது வேலையை ஜன்னல் சிறப்பாக செய்திட, மடாரென ஒருபக்க ஜன்னலின் கதவு அடித்துக் கொண்டதில் வாரிச்சுருட்டி எழுந்து கொண்டாள். அவனோ முதுகு காட்டி கண்ணாடி முன் நின்று, முன் கேசத்தை சரி செய்து கொண்டிருந்தான்.
"ஸாரி.."
செவிதனில் விழுந்தது நன்றாகவே. அழுத்தக்காரன் ஆகிற்றே! எப்படி திரும்புவான்?
"சாரின்னு சொன்னேன்.."
"..........."
"நீங்க தான் ஸாரி கேக்கணும். நான் போனா போகுதுன்னு கேட்டுட்டு இருக்கேன்.."
அவ்வறையில் யாருமில்லாது போல் நடமாடிக் கொண்டிருந்தான்.
அவளோ, அவனையே பார்த்திருக்க, "டைம் ஆகிடுச்சு. ரிஷப்ஷன்ல வெயிட் பண்ணுறேன்." என்றவன் எதுவும் பேசாது கிளம்பி செல்ல, பெண்ணவள் நெஞ்சமோ உலைக்களமாக கொதித்தது.
அவள் வரவும் ரூம் கீயை ஒப்படைத்து விட்டு, கார் நோக்கி சென்றவன் பின்னாலே அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாது ஓடினாள்.
சாலையில் மட்டுமே இலக்காக இருந்தவன், தன்னை ஒரு பார்வை பார்க்க மாட்டானா என ஏங்கினாள் வஞ்சியவள். அருகில் ஒருவள் இருக்கிறாள் என்ற உணர்வு இல்லாது வெறுமையாக அமர்ந்திருப்பவனை காண அவளுக்கு தான் உண்மையில் பெரும் வியப்பாக இருந்தது.
உறக்கத்திற்கு பின் அவளின் அழுகை குறைந்திருந்தாலும், மனமோ அவனது அருகாமை மீண்டும் கிடைக்காதா என ஒவ்வொரு நொடியும் அடித்துக் கொண்டது.
அதையறியாதவன் அல்ல ஆடவன். இருப்பினும் அவள் கூறிய வார்த்தை காயப்படுத்தியதில் தான், மௌனப்போர்வையை விளக்காது இருந்தான்.
கார் சிக்னலில் நின்றது. சிறிது நேரத்தில் அவளை இறக்கி விட வேண்டிய இடமும் வந்திடும். இதுவரை அவன் பேசுவான் என எதிர்பார்த்தவள், "பிரதீஷ்.. என்கிட்ட பேச மாட்டீங்களா?" என்றாள் நலிந்த குரலில்.
திரும்பிக் கூட பார்க்கவில்லை. அழைத்தாள் மீண்டும்..
"பிரதீஷ்! ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? நான் உங்களை பாக்கணும்ன்னு தான் வந்தேன். எனக்கு மட்டும் இப்படி நடக்கும்ன்னு தெரியுமா என்ன?" என்றவள் மீண்டும் விசும்ப..
"அவனுங்க நம்பர் வாங்கி தரேன் பேசு.." என்றான் முகத்தில் அறையாமல் அறைந்த படி.
பெண்ணவள் அவனிடமிருந்து அந்த பதிலை துளி கூட எதிர்பார்க்கவில்லை. உள்ளும் புறமும் உண்டான காயத்தில், முகத்தை திருப்பிக் கொண்டவள் மீண்டும் கரையத் துவங்கினாள்.
சில நிமிடங்களில் அவள் கூறிய இடமும் வந்திட, இறக்கி விட்டவன் ஒரு வார்த்தை கூட பேசாது ஏன் பாராது கிளம்பி விட்டான்.
அவளோ அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டை மெதுவாக திறந்து உள்ளே நுழைய, ஹாலில் முழித்தபடி படுத்திருந்த ஆர்த்தி காளியாக தலை தூக்கி பார்த்தாள்.
எங்கு செல்கிறாள்? என்ன செய்கிறாள்? என்னவென ஒன்றும் புரியாமல் புலம்பி போய் இருக்க, அவளது வருகை அமைதியை தந்திருந்தாலும், "எங்க டி போயிட்டு வர? என்ன பண்ணிட்டுருக்க நீ? யார் அவன்?" என்றாள் அவள் முக மாற்றத்தை கண்டவள்.
வந்தவள் முகத்தை மூடி அழ, அவளருகே அமர்ந்து கொண்டவள் என்னவென வினவ ஒன்று விடாது கூறி முடித்தவள், அவன் மீதுள்ள காதலையும் கூறினாள்.
"ஏன் டி தெரிஞ்சவனையே நம்பி இப்போ லவ் பண்ண முடியல. அவனை வேற பேர் தவிர பெரிசா எதுவும் தெரியாதுன்னு சொல்லுற.
எனக்கென்னமோ உனக்கு வர பிரச்சனை எல்லாம் இவன் தான் கிரியேட் பண்ணுறானோன்னு தோணுது." என்றாள் சந்தேக நோக்கில்.
"இல்லை டி.. அவங்க.. அப்படி கிடையாது.."
"ம்ம்.. மரியாதை எல்லாம் பலமா தான் இருக்கு.. அப்படின்னா ப்ரொபோஸ் பண்ணிட்டயா?"
"சொன்னேன்.. பதில் சொல்லல.."
"பேசாம உன் வேலையை பாரு. கண்ட கழிசடையயை தூக்கி சுமக்க உனக்கென்ன நேத்திக்கடனா?" என்றவள் தோழியின் நலன் கருதி தான் அவ்வார்த்தை கூறினாள்.
"ஐ லவ் ஹிம் ட்ருலி.." என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தாள் ஆர்த்தி.
"இந்த ராசாவா பாக்க தான் அர்த்த ராத்திரில ஊர்வலம் போனயா? வேலையை பாரு டி. வாயில நல்லா வருது. எவனையும் நம்பாதே.." என்றவள் அவளுக்கு சூடாக டீ போட்டு தர அவளும் குடித்து விட்டு, கசப்பான நிகழ்வால் எதிர்பாராது கிடைத்த அவனது அருகாமையை எண்ணி அதிலே லயித்திருந்தாள்.
வெகுவான யோசனைக்கு பின் அப்படியே உறங்கி போனவளை, ஆர்த்தி தான் அவளது நடவடிக்கை எதுவும் சரியில்லையே என்னும் ரீதியில் தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அதோடு நிறுத்தாதவள், அண்ணனிடம் இதனை பற்றி பேசிட நினைத்தாள்.
அவன் சாதாரணமாகவே அவளுக்காக உருகிடுவான். இது தெரிந்தால் என்ன குதி குதிப்பானோ? மூனிலும் விளங்காதவன் பேச்சு எப்போது அறிவார்ந்த விதமாக இருக்கும்?
காலை 8.44மணி
அலைபேசி ஒலியில் சிறிதாக உறக்கம் கலைந்தது நாயகனிற்கு. அவனது பாட்டி தான் அழைத்தார். எல்லோரும் கோவிலுக்கு செல்லவிருப்பதாக தகவல் கூறியவர், அவனது பதிலை எதிர்பாராமல் வைத்து விட்டார்.
பழகியவர்களுக்கு அவனது குணநலன் தெரியும். பழகாத ரதியவளுக்கு எப்படி அவனது மனம் புரியும்?
சில நிமிடங்களுக்கு பின் கண் விழித்தவன், அறையில் ராசிகாவை தேடினான். இன்னும் அதே ஹோட்டல் அறையில் இருக்கின்றோம் என்ற நினைப்பு தான். அவளிடம் வீராப்பு காட்டி விட்டு, இங்கு வந்து தேடி என்ன பிரயோஜனம்?
எழுந்தவன் குளித்து முடித்து வந்திட அலைபேசி மீண்டும் அலறியது. அவள் தான் மிஸ்ட் கால் குடுத்திருந்தாள். பார்த்து விட்டு அப்படியே வைத்து விட்டான்.
யாதவும் அந்நேரம் பார்த்து வர, பேச முடியாத சூழ்நிலையாகியது. வந்தவன் இனி எப்பிரச்சனை வராது என கூறியவன், திருட்டுத்தனமாக அவளை காண சென்றதை கூறி அங்கலாய்த்தான்.
"டேய் இப்படியொரு பிரச்சனை வரும்ன்னு தெரிஞ்சு தான் கிளம்புனேன். சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டுறா. என்ன சொல்ல?" என்றவன் எங்கையோ கிளம்புவதை கண்டு, "மேடம்மை மீட் பண்ணவா?" என்றான் யாதவ்.
"டேய்.. வீட்டுல ஊருக்கு போறாங்க எல்லாரும். என் திங்ஸ் கொஞ்சம் அங்க இருக்கு. எவனும் இல்லாத நேரம் தான் போய் எடுத்துட்டு வர முடியும்." என்றிட, அவனும் சரியென்று விட்டு மனைவியோடு வெளியே கிளம்புகிறேன் என்றான்.
ஆர்த்தி அவளுக்காக சமைத்துக் கொண்டிருக்க, ரசிகாவோ அவளின் பேக்கை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து, கிளம்பி வெளியே வந்தாள்.
"வந்துட்டயா சாப்பிடு டி. வெளியே போவோம்.." என்று கொண்டே இட்லி ஹாட் கேஸை தூக்கி வந்தவள், திடுக்கிட்டு பார்த்தாள்.
"ஹேய்.. என்ன டி எங்க கிளம்பிட்ட?"
"இல்லை டி எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கு. ஊருக்கு கிளம்புறேன். எதுவும் தப்பா நினைக்காத.." என்ற தோழியை தான் மேலிருந்து கீழ் வரை சுட்டெரிப்பது போல் பார்த்தாள்.
"ஒருத்தன் வந்தா ஃபிரண்ட்ஷிப்ல கூட சேஞ்சஸ் வரும்ன்னு சொல்லும் போது நம்பல. இப்போ நம்புறேன்.." என்றவள் பேச்சையெல்லாம் அவள் காதில் வாங்கவில்லை.
மனம் முழுக்க அவன்.. அவனது பெயரே ஒலித்தது..
"ஊருக்கு தானா? இல்லை டாக்டரை பாக்க போறயா?" என்றவள் கூர் விழியால் அவளின் முகத்தை ஆராய, அவளோ உணர்ச்சி துடைத்த முகத்தோடு இல்லை என்றாள்.
"நான் கிளம்புறேன் டி.. ஆட்டோக்கு போன் பண்ணு.." என பேச்சை வளர்க்காது கத்தரித்த ராசிகா தான், அவளுக்கு புதிதாக தெரிந்தாள்.
ராசிகாவை திட்டவும் முடியாமல், வெறுப்பை காட்டவும் முடியாமல் பலவித பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள். சில நிமிடங்களில் ஆட்டோ வந்திட, தோழியிடம் கடமைக்கு கூறி கிளம்புவது போல் கிளம்பினாள். அவள் சென்றது தான் மாயம், அஸ்வத்திற்கு அழைத்தாள்.
அவனோ அழைப்பை ஏற்கவில்லை. ராசிகா நடவடிக்கை மட்டுமின்றி, அவளிடம் புதிதாக மலர்ந்த காதல், அவனையும் இம்மியளவு கூட ஆர்த்திக்கு பிடிக்கவில்லை.
வரிசையாக போட்டப்பட்ட பெஞ்சில், பிருந்தா அம்மா, அப்பா, மாமா மூவரும் ஜோசியரை காண அமர்ந்திருந்தனர். ஆட்கள் ஒவ்வொருவரும் உள்ளே உள்ள அந்த ஜோசியரின் நிறையை பற்றி பேசுவது, ராணி அம்மா காதில் நன்றாகவே விழுந்தது. அதுவே அவருக்கு நிம்மதி பெருமூச்சை தந்தது.
அவரது அசிஸ்டேன்ட் ஒருவன், கௌதமன் பெயர் கூறி அழைக்க உள்ளே சென்றனர். சுவற்றில் வரிசையாக பொருத்தப்பட்ட சாமி போட்டோக்கள் முன்பு, டேபிள் ஒன்றில் கை வைத்து ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் ஜோசியர் சத்யவான்.
மூவரையும் வரவேற்று அமரக் கூறியவர், என்னவென வினவ பிருந்தா மற்றும் பிரதீஷ் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்க துவங்கினார்.
சில நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தவர், பிரதீஷ் ஜாதகத்தை உற்று பார்த்து விட்டு "பையனுக்கு கண்டமிருக்கே. சரியா பாக்கலயா எங்கையும் நீங்க?" என்றதில் மூவரும் அதிர்ந்தனர்.
"இல்லை ஐயா.. வேண்டிய குடும்பம்ன்னு பெரிசா எதுவும் பாக்கல" என்றார் ஜெயமோகன்.
கௌதமன், "கண்டமன்னா எந்த மாதிரி ஐயா? எதுவும் பரிகாரம் இருக்கா?" என அவர் வினவ..
"அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்துருக்காங்களா?" என்றார் ஜோசியர்.
"இல்லை ஐயா நாங்க மட்டும் தான் வந்திருக்கோம்."
"பையனுக்கு கண்டம் இருக்கு. ஆனால், உயிருக்கு எதுவும் ஆகாது. ஒரு பிரேதத்தால இம்சையில இருக்காரு. ஆனாலும், ஏதோ ஒன்னு இவரை காப்பாத்திட்டு இருக்கு.." என அவர் ஒவ்வொன்றாக கூற கூற, ராணி "இந்த மாப்பிளை வேண்டாம்" என்றார் கணவனிடம்.
அவரோ பார்வையாலே அவரின் வாயடைத்தவர், "நீங்க சொல்லுங்க ஐயா!" என்றார்.
"பையன் நல்ல தங்கமானவன் தான். நீங்க தாராளமா கல்யாணம் பண்ணலாம் அம்மா.."
"இல்லை.. ஏதோ ஆவின்னு சொன்னீங்களே அது என்ன ஐயா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. ரொம்ப வேண்டியவர் பையன்!" என்றார் ஜெயமோகன் பதட்டமாக.
"அது ஒரு ஆண் பிரேதம் போல இருக்கு. இவருக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், இவரை கடந்த ரெண்டு மாசமா இம்சிக்குது. அதே சூழ்நிலையில, இவர் இதுவரை பாதுகாப்பா இருக்க காரணம் ஏதோ ஒரு விடயம் அவர்கிட்ட இருக்கு."
மூவரும் இது என்ன புது புரளி என்பது போல் பார்த்தாலும், நம்பும்படியே இருந்தது.
"இதுக்கு பரிகாரம் ஏதாவது இருக்கா?"
"இருப்பத்தி மூணு நாள்ல அவங்க வீட்டுல கர்ம காரியம் ஒன்னு நடக்க வாய்ப்பிருக்கு. அது நடந்தா இந்த பையன் தப்பிச்சுடுவான். இதுக்கு மேல எல்லாம் அந்த கடவுள் கையில தான் இருக்கு." என்றிட மூவருக்குமே விழிகள் இடுங்கியது.
நல்ல விஷயம் பார்க்க வந்து, துக்க நிகழ்வு நடக்கவுள்ளது என்னும் இடியை இறக்கியதில் மூவரும் திகிலடைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
தேன்மழை💖💖
