Thread starter 03/02/2026 3:42 am
17
மாரியின் தூறல்
மனமெங்கும்
இழைந்தோடிய இசைச்சாரல்!
முகிலின்
பொறிக் கீற்றல்
உன் ஓரப்பார்வையில்!
பேதையவள் அவன் வரவில்லை என்னும் ஏமாற்றத்தில் வாட்டமாக நடந்து கொண்டிருக்க, மனமோ அவனை கண்டப்படி கடிந்து கொண்டது. விழிகளோ நீர் சுரந்ததை உணர்ந்தும், துடைத்திட மனமில்லை.
விசும்பலாக நடந்து கொண்டிருந்தவளை அலைபேசி ஒலி, சுயம் மீட்ட சற்றே வேகம் கூட்டி நடந்தாள் வீட்டினை நோக்கி.
சில நொடியில் பைக் சத்தம் செவிப்பறையை துளைத்தது. எரிச்சலோடு திரும்பி பார்க்க; கள்ளனவன் ரசனையோடு பார்த்த பார்வையை மறைத்து கோவத்தை கூட்டி நின்றான்.
நின்றிருந்த தோரணையும், அவன் வருகையும் தகித்திருந்த நெஞ்சத்தை குளிரச் செய்ய, விலோசனங்கள் விரிய அலரவள் அவனை நின்ற இடத்தில் இருந்தே திகைப்பாக பார்த்திருந்தாள்.
அவனும் பதிலுக்கு பைக்கில் சாய்ந்து நின்றப்படி, கூர் பார்வை வீசினான்.
அவளே வந்து பேசட்டும் என பிரதீஷ் அசையாது இருக்க, காரிகையவளோ அவன் வந்த சந்தோஷத்தில் கண்ணீரை சுண்டி விட்டு அவன் முன்பு சென்று நின்றாள்.
கருவிழிகள் இரண்டும் நேர்க்கோட்டில் ஒன்றையொன்று ஊடுருவிட, "தாங்க்ஸ்.. எனக்காக வந்ததுக்கு.." என்றாள் வரியோடிய இதழின் ரேகை விரிய.
"நான் உனக்காக இங்க வரல.. ராசிகா நீங்க யாரு என்னனு தெரியாது. தேவையில்லாம ஆசையை வளத்துக்காதீங்க. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கரியரை பாருங்க.."
"ம்ம்.. பாத்துக்கிறேன்.. இல்லைனு சொல்லலையே.. ஆனால், எனக்காக வரலன்னு சொன்னதை மட்டும் நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்.." என்றவள் விஷமமாக நகைக்க, ஆணவன் கோவப் பார்வையோ அவளின் குறும்பு பேச்சில் கரைந்து மீண்டது.
இருப்பினும் அவளது எண்ணத்திற்கு வேலியிட நினைத்தவன், "எனக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். இப்படி மெசேஜ் பண்ணாதீங்க அது எனக்கு தான் இஸ்ஸு ஆகும்.." என அவளை கண்டிக்கும் நோக்கில் கூற, அவளோ "அப்பறம்.." என கையை கட்டிக்கொண்டு நின்றாள்.
'ஐயோ.. என் நிலைமை புரியாம இவ வேற ரோட்ல நின்னுட்டு வம்பிழுக்கிறா..' என நொந்தவன், "நான் கிளம்புறேன்" என்றிட..
நகரப் போனவனை, "எப்போ டைவர்ஸ் பண்ணுறீங்க சொல்லிட்டு போங்க." என்றாள் ஆவலாக அவனது பதிலை எதிர்பார்த்து.
அவளை முறைத்து பார்த்தவனுக்கு, அதே பார்வையை அவள் மீது காட்ட கடினமாகியது.
வண்டியை ஸ்டார்ட் செய்தவன் சிறிது தூரம் முன்னே சென்று, பின்னால் திரும்பி பார்த்தான். அவள் கையை கட்டிக்கொண்டு, தலையை ஒருப்பக்கமாக சாய்த்து முறுவலிக்க அவனையே அவதானித்திருந்தாள்.
யூ-டர்ன் எடுத்து அவளை நோக்கி சென்றவன், "ஏறுங்க டிராப் பண்ணிறேன்.." என அவளை பாராது கூற, ராசிகா அவனையே ஆழ்ந்து பார்த்திருந்தாள்.
"நடு ரோட்ல கண்ட நேரத்துல ஒரு பொண்ணு இப்படி நிக்கலாமா?"
"நான் நின்னா உங்களுக்கு என்ன? நீங்க போங்க.." என்றவள் சிலுப்பிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"இங்க பாருங்க.." என அவன் மீண்டும் அறிவுரை கூற விழைய, இரு கண்களையும் சிமிட்டி சிரித்தவளை கண்டு அவனுக்குள் தான் மின்சார பாய்ச்சல்.
"ராசிகா! எல்லா நேரமும் நான் சிரிச்சு பேசிட்டு இருக்க மாட்டேன். எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை. தேவையில்லாம கண்டதை கற்பனை பண்ணிக்காதீங்க. இந்த லவ்வெல்லாம் விட்டுட்டு வேற வேலையை பாருங்க.."
"நான் எப்போ லவ் பண்ணுறேன்னு சொன்னேன்? அப்போ.. நீங்க என்னை லவ் பண்ணுறீங்க.." என்றவள் நமட்டுச் சிரிப்பு சிரித்து, அவனை ஆழம் பார்த்தாள்.
"உங்களுக்கு நிஜமாவே என்கேஜ்மென்ட் ஆகிடுச்சா? இல்லை பொய் சொல்லுறீங்களா?"
"இதுக்கு பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை. நீங்க உங்க வேலையை பாருங்க. நான் என் வேலையை பாக்குறேன்." என்றவன் சரட்டென கிளம்பி விட்டான்.
கிளம்பியவன் வெகு தூரம் சென்று அவளை திரும்பி பார்க்க, அவள் அங்கேயே தான் நின்றிருந்தாள்.
"லவ் யூ பிரதீஷ்.. நீங்க என்னை லவ் பண்ணுறீங்க.. எனக்கு தெரியும்.. இல்லைன்னு பொய் மட்டும் சொல்லாதீங்க.. ஐ நொள ஃபேஸ் ரீடிங்.."
அவள் பேசியப்படி ரெண்டு எட்டு தான் பின்னால் எடுத்து வைத்திருப்பாள். எங்கிருந்து வந்தார்களோ அந்த தடியன்கள் மூன்று பேர். அவளை வாய் பொத்தி, குண்டுக்கட்டாக தூக்கி செல்வதை பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவன் எதை நினைத்து வந்தானோ அது போல் நடந்து விட்டது. நிச்சயம் அவளை மாணிக்கம் அடியாட்கள் தான் கடத்திருக்க வேண்டுமென தீர்மானித்தவன் அவர்கள் வீட்டை நோக்கி விரைந்தான்.
இரவு 12 மணி..
விழிகளில் அப்படியொரு கோவம். அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்ற வெறி அவனை அதி வேகத்தில் செல்ல வைத்ததது. அவள் பேசிய நினைவு, காதலை கூறிய விதம், காத்திருந்த நொடிகள் மட்டுமே அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் வீட்டை கண்டுபிடித்து வரும் முன், தடியன்கள் அவ்விடம் வந்து விட்டதை உள்ளே நின்றிருந்த காரை பார்த்து தெரிந்து கொண்டான்.
திறந்திருந்த கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவன், "யாரு வீட்டுல" என குரல் குடுத்தபடி நுழைய..
மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து, ஜன்னல் வழியே ஒருவர் எட்டி பார்த்தார்.
வீடோ பழைய காலத்து வீடு போல் மிக பெரிதாகவும், இன்னும் அதன் கம்பீரம் மாறாது நின்றிருந்தது. அவன் வாசல் கதவை தட்ட முனைய, கதவை திறந்தார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர்.
"யாரு பா நீ?" என அவர் ஐயத்தோடு வினவ, பிரதீஷ் அவருக்கு பதிலளிக்காது வீட்டினுள் நோட்டமிட்டான்.
அப்பெண் மீண்டும் அவனிடம் யாரென வினவ, "மாணிக்கம் ஐயா இல்லையா?" என வினவியவன் முகத்தில் அப்படியொரு கனல்.
"மேல இருக்காரு வர சொல்லுறேன்.." என்றவர் அழைக்க செல்ல, அவளுக்கு எதுவும் ஆகிட கூடாது என்பதால் தான் விஷயத்தை பொறுமையாக கையாண்டான்.
அவரும் யாரென காண வர, "எங்க அந்த பொண்ணு?" என்றவன் பல்லை கடிக்க, கழுத்து நரம்பும் புடைத்தது.
"எந்த பொண்ணு?" என்றவர் ஒன்றும் புரியாது அவனை எரிச்சலோடு ஏறிட, "ம்ம்.. உன் ஆளுங்க தூக்கிட்டு வந்தாங்களே அந்த பொண்ணு.." என்றான்.
இருவருக்கும் சில நொடிகள் வரை வாக்குவாதமே நடந்தது. அவரோ எதுவும் தெரியாது என்க, அவனோ மரியாதையின்றி பேசினான்.
"யாரு நீ? இந்நேரத்துல வந்து என்ன டா உளறிட்டு இருக்க?" என்றவர் வெகுவாக சீற, அவரது மனைவியோ கணவனை தனலாக பார்த்தார்.
ஊரில் இல்லாத நேரம் ஏதோ வயதுக்கு மீறிய சேட்டை செய்துள்ளார் என எண்ணியவர் "அந்த பையன் சொல்லுறது நெசமா?" என்றார் சந்தேக குரலில்.
"அடியே எந்த கிறுக்கு பையன் என்ன சொன்னாலும் நம்புவியா நீ? டேய் காமாட்சி இவனை என்னனு கவனி." என்றவர் யாரையோ அழைத்ததில், பிரதீஷ் வேகமாக சென்றவன் அவரது சட்டையை கொத்தாக பற்றினான்.
"டேய் அப்போ நான் என்ன பொய்யா சொல்லுறேன்? ஒழுங்கு மயிரா உன் ஆளை வர சொல்லு. இல்லை நடக்கிறதே வேற.." என அவன் எச்சரிக்கை விடுக்கும் நேரம் யாதவ் உள்ளே நுழைந்தான்.
பிரதீஷ் கையை அவர் உதறி தள்ளிய நொடி, அவரது ஆட்கள் பத்து பேருக்கு மேல் அங்கு சூழ்ந்து விட்டனர்.
அவரின் மனைவி கமலம், "யாரு டா பொண்ணை கடத்துனது? உங்க அண்ணன் சொல்லி தான் கடத்துனீங்களா?" என உச்சஸ்தாதியில் வினவ..
சுற்றி இருந்த அடியாட்களில் இருவர் மட்டும் தலையை தொங்க போட்டதில் "அடிங்.........." என்று கொண்டே யாதவ் சப்பென ஒருவனை அறை வைத்தான்.
அடியாட்கள் ஒன்றாக "டேய்..." என குரல் கொடுக்க, யாதவ் எல்லோரையும் தீயாக பார்த்தவன் "இந்த குரல் கொடுக்குற வேலை எல்லாம் வேணாம். எல்லாம் பொத்திட்டு இருக்கணும்." என்றபடி விரலுயர்த்தி எச்சரித்த யாதவை சுண்டைக்காய் பையன் என்பது போல் பார்த்தனர்.
ஒருவன் வந்து மாணிக்கம் அவரின் காதில் ஒருவிஷயத்தை கூறி தான் முடித்தான்.
மனைவியை உள்ளே செல் என கன்னசைக்க, அவரோ கணவனுக்கு துர்கா பூஜை நடத்திடும் பார்வை பார்த்தார்.
"போன்னு சொல்லுறேன்ல.. உள்ளே போ.."
அவரும் சென்றிட, "தம்பி ஏதோ தெரியாம தப்பு நடந்துடுச்சு.." என அவர் நயந்து கூற, "அப்போ தெரிஞ்சுருந்தா வேற பொண்ணை தூக்கிருப்பயா?" என பிரதீஷ் வினவும் நொடி, மாணிக்கத்தின் அண்ணன் நந்தன் அங்கு வந்தார்.
அவர் வரவும் எல்லோரும் பொட்டி பாம்பாக அடங்கி நின்றனர்.
"சில்லறை பயலுகளா. வெட்டிட்டு வாடான்னு சொன்னா, எவளையோ தூக்கிட்டு வந்துருக்கீங்க.." என நந்தன் சுருட்டை ஊதி தள்ளியப்படி பேசியதில் பிரதீஷிற்கு தான் படபடப்பு அதிகமானது.
நண்பனை கலக்கமாக பார்க்க, அவனோ விழியசைவிலே தான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
"டேய் அந்த பொண்ணை அனுப்பி வைங்க.."
நந்தனோ, "கம்னாட்டி நாய்களா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க. எவனை போட சொன்னா, பொண்ணை தூக்கிட்டு வந்துருக்கீங்க? எங்க டா அந்த பொண்ணு" என வினவ, கடத்தியதில் ஒருவன் "பின் பக்கம் அரிசி மூட்டை ரூம்ல இருக்கா.." என்றதும் செவியோடு சேர்த்து பிரதீஷ் அவனை அடிக்க பாய, அதற்குள் நந்தன் அவனை அறைந்து விட்டார்.
"கூட்டிட்டு வாங்க டா.."
அடியாட்கள் இருவர் அவளை அழைக்க செல்ல, மாணிக்கம் அவர்களோ "தம்பி தெரியாம தப்பு நடந்துடுச்சு. இனிமேல் இந்த மாதிரி எதுவும் நடக்காது." என்றார் பிரதீஷிடம் பவ்யமாக.
"சோறு தானே டா திங்குறீங்க. என்ன காரியம் பண்ணிருக்கீங்க? பையன் நமக்கு ரொம்ப வேண்டியவன். அவங்க வீட்டு பொண்ணையா தூக்குறது" என மாணிக்கம் அவரின் ஆட்களை கடிந்திட, அப்போது தான் பிரதீஷ் அவர் பேச்சை கவனித்தான்.
அதையெல்லாம் அவன் பெரிதாக எண்ணவில்லை. அவளை கண்டால் போதுமென இருந்தான். யாதவ் வெளியே காத்திருக்கிறேன் எனக் கூறி நகர, "ஐயா நல்லாருக்காரா?" என நந்தன் கேட்டது கூட பிரதீஷ் காதில் விழவில்லை.
அவள் என்ன நிலையில் இருக்கிறாளோ என்பது போலவே அவர்கள் சென்ற திசையை வெறித்து பார்திருந்தான்.
வந்திருந்த யாதவையும் நந்தன் பார்த்துள்ளதால், வெளியே கார் அருகே நின்றிருந்தவனிடம் மன்னிப்புக் கோரி விட்டு, எம்.பி மிக வேண்டியவர் என்றார். அதிலே அவன் புரிந்து கொண்டான். மாமனாரின் சில விடயங்களுக்கு, இவரின் மறைமுக உதவி தேவைப்படும் என்று.
அவனும் சமரசம் பேசி விட்டு, பிரதீஷை பற்றி பேச்செடுக்க; அவரோ சண்முகம் ஐயாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்றார். அதில் தான் யாதவ் புருவம் சுருக்கி பார்த்தான்.
சரி ஏதோ உள்ளூர் பழக்கம் என நினைத்தவன், ராசிகா வரவும் அவளை அழைத்துக் கொண்டு மூவரும் ஹோட்டலிற்கு சென்றனர்.
வீட்டிற்கு ஒரு பெண்ணோடு சென்றால் பிரச்சனை வரும் என யோசித்த யாதவ், ஹோட்டலில் அறை ஒன்றை ஏற்பாடு செய்தான்.
யாதவ் விடைபெற்று கிளம்பிட, அறையில் குத்த வைத்து அழுது கொண்டிருந்தவளை கண்டு பிரதீஷிற்கு பாவமாக இருந்தது.
முகத்தை உள்ளங்கையில் மூடி அழுது கொண்டிருப்பவள் அருகே அமர்ந்தவன், "சரி.. அழாதே.. இனி எந்த பிராப்லேம் வராது. எல்லாம் அவங்க கிட்ட பேசியாச்சு.." என கூறியும் அவள் கேவி அழுது கொண்டு இருந்தாள்.
"என்ன ஆச்சு. எதுக்கு அழுறீங்க? இப்போ இது வழக்கமா நடக்குற மாதிரி ஆகிடுச்சு. நீ எங்கயாவது மாட்டிக்கிறதும், நான் காப்பாத்த வரது என்ன புதுசா!" என அவன் நக்கலடிக்க, நீர் திரண்ட செம்மை படர்ந்த விழியோடு அவனை பார்த்தவள் மேலும் விசும்பிட ஆரம்பித்தாள்.
"வீட்டுல தேடுவாங்கன்னு.. அழுறயா?"
அவள் பதிலே பேசாமல் எழுந்து சென்று ஒரு ஓரத்தில் மெத்தையின் விளிம்பில் அமர்ந்து கொண்டு மீண்டும் அழ ஆரம்பிக்க, பிரதீஷிற்கு சினம் மூண்டது.
"ஹேய் இப்போ எதுக்கு டி அழுதுட்டுருக்க? எனக்கென்னனு நடு ரோட்ல வந்து நின்னு ஆட வேண்டியது. அப்பறம் எவனாவது தூக்கிட்டு போகாம என்ன பண்ணுவாங்க? நான் வந்ததும் உனக்கு என்ன சொன்னேன்?" என்றவன் கேள்வியோடு அவளை அழுத்தமாய் பார்க்க, அவள் நிமிரவில்லை.
கதவை திறந்தவன் படீரென அறைந்து விட்டு வெளியே சென்றான். அவளால் தான் சில விடயங்களை அவனிடம் கூற சங்கடமாக இருந்தது.
அதிக பழக்கமில்லாதவனிடம் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை எப்படி கூற முடியும்?
தடியன்கள் அன்று தப்பித்தவள் இன்று சிக்கி விட்டாள் என்பதில் கடத்தியதோடு, தவறாக தொட முயற்சித்ததில் அவளோ திமிறி கதறினாள். அதில் ஒருவன் ஓங்கி அறைந்து விட, அடியின் பலம் தாளாமல் மயங்கி விட்டாள்.
அன்று செய்த கொலையை, பார்த்தவளை இருவர் நன்கு அடையாளம் கண்டு வைத்திருந்தனர். அதில் அவள் நடித்த விளம்பரம் வேறு இருவருக்கும் காட்சியாகிட, என்றாவது ஒருநாள் சிக்கட்டும் கதையை முடித்து விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தனர்.
அத்தனை பேருக்கு அன்று நள்ளிரவில் சிறு பெண் தண்ணி காட்டி சென்றால், யாருக்கு தான் கோவம் வராது? சிக்கியதும் தூக்கி விட்டனர்.
அழுது சோர்ந்து போய் படுத்திருந்தவள் விழிகள், வெகு நேரத்திற்கு பின் அவன் எங்கு சென்றான் என ஆராய்ந்தது. கதவை திறந்து கொண்டு வருவானா என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச, சில நிமிடங்களுக்கு பின் அவனை தேடி வெளியே சென்றாள்.
காரிடோர் முழுவதும் தேடி பார்த்தாள் அங்கில்லை. மனதில் மீண்டும் பயம் சூழ, எல்லா அறைகளையும் பயத்தோடு பார்த்தப்படி கடந்தவளுக்கு அவனது குரல் கேட்டது. மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு போன் பேசியவனை சைடில் பாராது கடந்து சென்றாள்.
"ராசிகா"
சட்டென அவள் திரும்பி பார்க்கவும், அழைப்பை துண்டித்து விட்டான். யாதவிடம் தான் அவர்களை இதோடு விடக்கூடாது என பேசிக்கொண்டிருந்தான்.
அழுதழுது விழிகள் இரண்டும் வீங்கியிருங்க, அவளது சிரிப்பும் அந்த கண்ணீரில் மூழ்கி போயிருந்ததை கண்டவன், கன்னம் சிவந்திருப்பதையும் பார்த்தான்.
"போ.. வரேன்.." என கூறியும் அவள் நகராமல் நின்றருப்பதை ஒன்றும் புரியாமல் பார்த்தான்.
"இனிமேல் உங்களை தொல்லை பண்ண மாட்டேன். மார்னிங் 5மணிக்கு என்னை வீட்டுல விட்டுருங்க.."
அவனுக்கு தான் அவளது திடீர் மாற்றம் புதிதாக இருந்தது. எவ்வித சலனமற்று சரி என்றவனை கண்டு அவளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அறை நோக்கி சென்று விட்டாள்.
மணி 2.40
நின்று கொண்டு ஜன்னல் பக்கம் பார்வையை பதித்து அழுது கொண்டிருந்தவள் விசும்பல் அவனை ஏதோ செய்ய, "என்ன நடந்துச்சு? ஏன் கன்னம் வீங்கியிருக்கு?" என கேட்டான். அவளோ, இவன் தான் ஏதோ தவறு செய்தது போல் திரும்பி பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"அடிச்சாங்களா??"
"..........."
"வேற எதுவும் திட்டுனாங்களா?"
"..........."
"இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? சொன்னா தானே தெரியும்.."
"..........."
"ஹலோ.."
"............."
"ஏங்க உங்க கிட்ட தான் பேசுறேன்.."
"............."
"ராசிகாஆஆ.." என்றவன் குரல் கணீரென வர, சட்டென திரும்பியவள் "எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன? நீங்க ஏன் பதறுறீங்க இப்போ? காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி" என்றவள் கையெடுத்து கும்பிட்டாள்.
"அடிச்சாங்களான்னு தானே கேட்டேன்.. அதுக்கு என்ன பேசுறீங்க?"
"என்ன பேசணும் உங்களுக்கு இப்போ? என்ன பேசணும் சொல்லுங்க.."
"கன்னம் வீங்கியிருக்கு. கழுத்துல வேற காயமா இருக்கு.. ரொம்ப.." என அவன் கூறி முடிக்கும் முன் அவளோ, "உங்களை விட அவனுங்களே தேவையில்லை.." என்றாள் அவன் மீதுள்ள கோவத்தில்.
தேன்மழை💖💖
This thread was modified 3 weeks ago 2 times by Priyadinesh
This thread was modified 2 weeks ago by Jiya Janavi
