கள்வன் 7
அன்று முழுவதும் ஜித்து வீட்டுக்கே வரவில்லை. ஆனால் அவளுக்கு தேவையான உணவுகள் மட்டும் ஜிகா மெகா மூலம் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது. 'ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டான்.. நம் முகத்தைப் பார்க்க கூச்சப்பட்டு தரிசனம் தர மறுக்கிறான் போல' என்று இவளும் நினைத்தவாறு கொண்டு வந்த சாப்பாட்டை எல்லாம் ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தாள்.
மதியம் வரை அவர்கள் கொடுத்ததை உண்டவள், அதற்குப்பின் இரவுக்கு அது வேண்டும்! இது வேண்டும்! என்று ஆர்டர் போடவும்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். சாப்பிடும்போது அருகேதான் இருந்தனர். "ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா?" என்று இவள் சைகையில் கேட்க.. "ஆச்சு!! ஆச்சு!!" என்று தலையாட்டினர்.
"ஜித்து எங்கே?" என்று கேட்க அவர்களோ உதட்டை பிதுக்கினர்.
இவளும் தோளைக் குலுக்கிக் கொண்டு சாப்பிடுவதற்கு என்றே பிறந்தவள் போல வந்திருந்த சைனீஸ் தந்தூரி ஐட்டத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தாள்.
சத்தியமாக இவள் இப்படி சாப்பிடுவதைப் பார்த்தால், அன்னை அவந்திகாவோ.. அவளது சித்தி அனுமாலியோ.. தங்கை ரிதியோ கட்டாயம் அதிர்ச்சியில் வாயைப் பிளப்பது உறுதி!!
சோமையா பார்த்தால்.. அவ்வளவுதான்!! அட்வைஸ் பண்ணிய கொன்றுவிடுவார் மனுஷன்!! அத்தை என்ன செய்வார்? "நம் தகுதிக்கும் தரத்திற்கும் இதெல்லாம் நீ சாப்பிடும் சாப்பாடா!!" என்று அவர் ஒரு லெக்சர் அடிப்பார்.. என்று தன் குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவரையும் நினைத்துக்கொண்டே சாப்பாட்டை சாப்பிட்டவளுக்கு என்றோ அவளது தந்தை கூறிய அந்த வார்த்தை காதில் விழுந்தது.
"ஹிமா.. இப்ப இந்த வாழ்க்கையை நாம விரும்பி எடுக்கலைனாலும்.. இந்த பொறுப்புகளும் கடமைகளும் நம்மளை கட்டு போட்டு வைத்திருந்தாலும்.. என்றாவது ஒருநாள்.. ஒரு மணி நேரம்கூட நமக்கான நேரம் கிடைக்கும்!! அந்த நேரத்தை நமக்கு பிடித்ததை போல மாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக நம் கடமைகளை கண்டு பயந்து ஓடவோ.. இந்தக் கட்டில் இருந்து விடுபட வேண்டுமோ என்று நினைக்கக் கூடாது!! சரியா?" என்று கூறிவார்.
அத்தனை பெரிய சாம்ராஜ்யத்திற்கு ஒற்றை பெண் வாரிசு இவள்!! ஆண் வாரிசு இல்லையா? என்று கேட்பவர்களுக்கு எல்லாம்.. "என் பெண் தான்.. என் வாரிசு!!" என்று கர்வமாக உரைக்கும் தந்தை அவ்வப்போது இவளுக்கு அறிவுரையையும் அவளது கடமையையும் உணர்த்த தவறுவதில்லை.
ஆனால் இன்று தான் செய்து கொண்டிருப்பது சரியா? என்று கேள்வி எழும்போது.. எனக்கு பிடித்த அந்த என்றோ ஒரு நாள் இன்றாக இருக்கட்டுமே.. என்று நினைத்துக் கொண்டே உறங்கச் சென்றாள்.
நடு இரவில் ஜித்து வந்ததோ.. அவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றதையோ.. அவள் முகத்தில் கையில் ஏற்பட்ட சிராய்ப்புகளுக்கு மருந்து தடவியதையோ.. சிறு குழந்தை போல தலையணையை அணைத்து கொண்டு வாயை பிளந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் விழுந்த அவளது முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டதையோ.. அவளை நேராக படுக்க வைக்கும் போது சட்டை பட்டன் வழியாக காட்சி கொடுத்த பிறை நிலவை கண்டு ஸ்தம்பித்து நின்றதையோ.. பின்பு தன் தலையை உலுக்கிக் கொண்டு அவளது கழுத்து வரை போர்வையால் மூடிவிட்டு சென்றதையோ.. இது எதையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் நங்கை.
மறுநாள் காலை எழுந்து வந்தவள் அங்கிருந்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தில் ஏற்பட்ட அந்தக் காயங்கள் சிராய்ப்புகளைப் பார்த்தாள். அவற்றில் மறந்து போடப்பட்டதற்கான அறிகுறி இருக்க.. யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் பின் வெளியே வர.. அங்கே ஜித்து மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். பார்த்தவளுக்கு அவன் தான் போட்டுவிட்டு இருப்பான் என்று புரிய மெல்லிய புன்னகை அவளது வதனத்தில்!!
சற்று நேரம் அங்கு இங்கு என்று நடை பயின்றவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள.. மெல்ல அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். இதுவரை ஒருவித பயத்தில் இருந்தவளுக்கு நேற்று தான் எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விட்டதே.. என ஒரு குருட்டு தைரியம் வர.. வீட்டு வாசலில் நின்று கொண்டு அந்தப் பக்கம் போவோர் வருவோர் எல்லாம் அவளை பார்த்தால்.. அழகிய சிரிப்பை வாஹினி உதிர்க்க, அவர்களும் சிரித்து விட்டு சென்றனர்.
"என்னடா இந்த தெலுங்கு அம்மாயி திருமண வரவேற்பில நிக்குற பொண்ண போல.. எல்லாரையும் பாத்து சிரிச்சுக்கிட்டு நிக்குது" என்றபடியே ஜிகாவும் மெகாவும் அவளை நெருங்க அவர்களுக்கும் அதே சிரிப்பு இவள் உதிர்க்க…
மெதுவாக மெகா "அண்ணி..!!" என்று அழைத்தான். ஜிகா அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க "அப்புறம் அண்ணி தானடா!!" என்க..
"டேய்.. சின்ன அண்ணியா? பெரிய அண்ணியா? தெரியலையேடா!!" என்று சிரித்தான் ஜிகா.
மெகா சொன்ன அண்ணி எல்லாம் வாஹினிக்கு புரியவே இல்லை. அவளுக்கு புரிந்தது ஜிகா சொன்ன பெரிய அண்ணி.. பிரியாணியாக!!
"பிரியாணி.!!" என்று இவள் விழி விரித்து ஆசையாக கேட்க..
"என்னது பிரியாணியா? நான் எப்ப சொன்னேன்??" என்று ஜிகா தடுமாற..
மெகா விழுந்து விழுந்து சிரித்தான். "டேய் நீ சொன்ன பெரிய அண்ணி தான் அது காதுல.. பிரியாணியா மாறி விழுந்திருக்கு.. அதாவது கொரோனா வைரஸ் ஓமிக்ரானா உருமாறுனது போல.." என்றான்.
"அது பிரியாணி லேது. அண்ணி!! அண்ணி!! ப்ரதர் வொய்ஃப்.." என்று இவன் விம் பார் போட்டு விளக்க..
"ஹோ!!" என்று விழிகள் மின்ன சிரித்தவள், "அண்ணி காது வதின!!" என்றாள்.
"உங்க ஊர்ல அன்னைக்கு வதினவா?? சரி அப்படியே கூப்பிடுவோம்!! ஆமா வதின இப்ப எதுக்கு வெளிய நின்னு எல்லாரையும் பார்த்து சிரிக்கிற?" என்று கேட்க..
அவளோ மீண்டும் முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு தன் வயத்தை தடவி காட்டி "ஹங்கிரி!!' என்றாள்.
"டேய் இவ ஹங்கேரி.. ஹங்கரினு சொல்லி.. சொல்லி.. நாம பாய் கடையில வாங்கி வாங்கி கொடுத்துட்டே இருக்கோம் கடனா.. என்னைக்கு இது ஜித்துவுக்கு தெரிய போகுதோ? அவன் ஆங்கிரி பேர்ட்டா மாற போறானா??" என்று ஜிகா பயத்தோடு கூற..
"நேநு பாவா ஆங்கிரி பேர்டு காது அண்ணையா...
லவ் பேர்டு!!" என்று அவள் போட்டிருந்த சட்டையின் இரு நுனிகளையும் பிடித்து முறுக்கி கொண்டு வெட்கத்துடன் கூறியவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர் இருவரும்.
"சரி வா!!" என்று அவளை அழைத்துக்கொண்டு சவுண்டு சரோஜா கடைக்கு சென்றனர்.
இவளை குறுகுறுவென்று பார்த்த சரோஜாவிடம் "சரோ இதுதான் தெலுங்கு பார்ட்டி!! எங்க அண்ணிக்காரு!!" என்று அவன் அறிமுகப்படுத்தி வைக்க..
மெகாவின் கையை ஒரு தட்டுத் தட்டிய வாஹினி "அண்ணிகாரு காது அண்ணையா!! வதின..!!" என்று அழுத்தி சொன்னாள்.
"அதான் இப்ப ரொம்ப முக்கியம்!!" என்று கூறி, அவளுக்கு சாப்பாடு கொடுக்க சொல்ல.. சுடச்சுட மூன்று இட்லியை வைத்து அவளிடம் கொடுத்தாள் சரோ.
'இதெல்லாம் எந்த மூலைக்கு காணும் இவளுக்கு' என்று ஜிகாவும் மெகாவும் மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருக்க.. இவளோ சுடச்சுட இருந்த இட்லியை சாம்பார் மட்டும் இல்லாமல் கார சட்னியும் கைநீட்டி கேட்டு வாங்கி சரசர என்று உள்ளே தள்ள..
"பாவம்டா!! அந்த பொண்ணுக்கு ரொம்ப பசி போல.." என்று சரோ அவள் சாப்பிடுவதை பார்த்து கூற..
"ஆமா.. ஆமா.. ரொம்ப பசிதான்!!" என்று கூறிய ஜிகா, மெகா காதில் "டேய் அவ சாப்பிட ஆராம்பிச்சா இப்போதைக்கு முடிக்க மாட்டா.. எல்லாத்தையும் உள்ள தள்ளிடுவா.. சைட் கேப்பில் நாமும் சாப்பிட்டு விடுவோம்!!" என்று அவர்களும் அவள் எடுக்கும் முன் இட்லியை எடுத்துக் கொள்ள.. வாஹினி பாவம் போல பார்க்க..
"சரோ கடையில முட்டை தோசை சூப்பரா இருக்கும்!! உனக்கு முட்டை தோசை வாங்கி தரேன்.. இரு" என்று கூறி அவளுக்கு தோசை ரெடியாகும் கேப்பில் இவர்கள் தங்கள் நாஸ்தாவை முடித்தனர்.
புதிதாக அதுவும் தன் சமையலை ஆர்வமாக ருசித்து ரசித்து சாப்பிடும் பெண்ணவளை கண்டதும் ரொம்பவும் பிடித்து போனது சரோவுக்கு!! அவள் கேக்க கேக்க சுடச் சுட முட்டை தோசை ஊற்றிக் கொடுத்தாள். அதில் ஒரு முறை பொடி போட்டு கொஞ்சம் காரமாக கொடுக்க அதையே நான்கு உள்ளே தள்ளினாள் வாஹினி.
அந்த நாலு தோசை சாப்பிடும் நாற்பது நிமிடத்தில் அங்கு இருந்தவர்களை எல்லாம் பேசி பேசி இல்லையில்லை.. ஜாடை காட்டி பேசியே பிரண்டு பிடித்து வைத்தாள். அனைவரும் அவளை வதின வதின என்று அழைக்கும்படி வைத்துவிட்டாள்.
கூடவே அங்கு இருந்த குட்டி பசங்களோடு சேர்ந்து இவள் கொட்டம் அடக்க.. அந்த சத்தத்தில் விழித்த ஜித்து "காலங்காலையில யாருடா வீட்டு வாசல்ல நின்னு சத்தம் போடுறது??" பதினொன்று மணியை கடந்ததை கண்டுகொள்ளாமல் கடுப்புடன் கேட்டுக்கொண்டு வெளியே வந்தவனை, ஒரு இடி இடித்து விட்டு மின்னல் போல ஒரு உருவம் ஓட.. அவளைத் துரத்திக்கொண்டு சிறு புயலாய் ஐந்தாறு குட்டி உருவங்களும் ஓட.. இவன் கண்களை நன்றாகத் திறந்து பார்க்கும்போது அந்த இடமே ரண களமாய் காட்சியளித்தது.
அதற்குள் "வதின.. வதின.." என்று அழைத்துக் கொண்டு அந்தக் குட்டிப் பிள்ளைகள் மீண்டும் ஓடி வருவதைப் பார்த்ததும் "இவள் பேரு வதினாவா?" என்று அதுவரை அவள் பெயரை தெரிந்து வைத்திருக்கவில்லை என்று யோசனையோடு நின்றிருந்தான்.
இன்று இவளிடம் பேசி எப்படியாவது பேக் செய்து அனுப்பி ஆகவேண்டும் என்ற முடிவோடு சத்தமாக அவளை "வதின..!" என்று இவன் விளிக்க..
ஜித்து விளிப்பில் வாஹினி விழிக்க..
அங்கிருந்த குட்டி பசங்கள் எல்லாம் வாய் பொத்தி சிரித்தனர். "அண்ணாத்த.. என்ன நீயும் இவங்கள வதினனு கூப்பிடுற?" என்று ஒரு வாண்டு கேட்டுவிட..
"ஏண்டா.. நீங்க எல்லாம் மட்டும் கூப்பிடுறீங்க இல்ல.. இவளை இத்தனை நாள் என் வீட்ல வச்சு சோறு போட்டு வளத்து வர நான் மட்டும் பேர் சொல்லி கூப்பிடக்கூடாதா?? அடிங்க!! ஓடுங்கடா.. எல்லாம் காலங்காத்தால வந்து கத்தி கத்தி தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு.." என்று அதட்டியதோடு அருகிலிருந்த குச்சியையும் இவன் எடுத்துக் கொண்டு வர.. அத்தனை வாண்டுகளும் ஓட்டமாய் ஓடி விட்டன!!
திரும்பவும் அவள் புறம் திரும்பி "வதின.. உள்ள வா.. உன்கிட்ட பேசணும்!!" என்று கூறி அவன் முன்னே நடக்க.. அவளோ கீழ் பார்வையால் அவனை முறைத்தபடி நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
பின்னால் வராதவளைப் பார்த்தவன் "உன்ன தான் உள்ளே வா சொன்னேன்.. வா!!" என்று பற்களை கடித்தப்படி அவள் கையை பிடிக்க.. கையை உதறியவள் மீண்டும் அதே இடத்தில் நிற்க.. "ஏய் வதினா.. உன் கூட.. இப்ப என்னடி??" என்று கேட்க "டோன்ட் கால் மீ.. வதின!!" என்றாள்.
"ஏ பால் டப்பா!! அதான உன் பேரு.. அந்த வாண்டுகள் அதானே சொல்லிக் கூப்பிட்டு இருந்துச்சுங்க.. அப்புறம் நான் மட்டும் கூப்பிட கூடாதா??" என்று அவன் கேட்க..
"வதின.. நாட் மை நேம்! ஹிமா மை நேம்!!" என்றாள்.
"என்னது ஹிமா வா?? அதுக்கு அந்த வதினயே நல்லா இருக்கு. நான் அப்படியே கூப்பிடுறேன்!" என்றான் ஜித்து.
அப்போது ஜிகாவும் மெகாவும் "உன்னை பார்க்க ஒருத்தன் வந்து இருக்கான் டா.. வழக்கம்போல நம்ம ஏரியாவுக்கு வெளியே தான் நிப்பாடி வச்சிருக்கோம். பெரிய பார்ட்டி போல ஜித்து.. கார்ல எல்லாம் வந்திருக்கான். லம்பு அமௌண்ட் வரும் போல!!" என்று கூறிக் கொண்டே வந்தார்கள்.
"கார்ல வர அளவுக்கு பெரிய பார்ட்டி யாருடா??" என்று அவர்களிடம் யோசித்தவாறே கேட்டவன்.. "சரி.. சரி இவள உள்ள கூட்டிட்டு போங்க! ஏய் வதினா உள்ள போ!!" என்று இவன் கூற, ஜிகாவும் மெகாவும் பக்கென்று சிரித்து விட்டார்கள்.
"ஏன்டா.. இப்ப இங்க என்ன காமெடி சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் பல்ல பல்ல காட்டுறிங்க?" என்று அவர்களிடம் கடுப்பிடித்தான்.
அவர்களோ விஷயம் தெரிந்தால் இவன் அடிப்பானே என்று பயந்துகொண்டு கையை பிசைய.. "உங்க பாடி லாங்குவேஜே சரியில்லையே.. என்னடா பண்ணி வச்சீங்க?? ஒழுங்கா சொல்லல!!" என்று ஜித்து அதட்டியவாறு
சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட...
இருவரும் இரண்டிரண்டு அடிகளாக பின்னால் நகர்ந்து "அது வந்து.. அது வந்து.. வதின என்றால் அண்ணி..!!" என்று கூறி ஓடிப் போக..
"என்னது அண்ணியா? யாருக்கு அண்ணி??" என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் அவர்கள் ஓடியதும் இங்கே சிரிப்போடு நின்று கொண்டிருந்த வாஹினியின் தோற்றத்தை வைத்து புரிந்து கொண்டவன் "அடேய்.. நில்லுங்கடா..!! என்று அவர்களை துரத்திக் கொண்டு ஓடினான் ஜித்து!!
கர்னல் வாகினி பிறந்தநாள் விழா அன்று வீட்டில் எடுக்கப்பட்ட அனைத்து செக்யூரிட்டி புட்டேஜ்களையும் திரும்பத் திரும்ப இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு என்னமோ அந்த வெளியே சென்று காரில் தான் வாஹினி இருப்பாள் என்றே அவரது விசாரணை மூளை கூறியது.
அவ்வளவுதான் அடுத்த நிமிடம் அந்த கார் எங்கிருந்து வந்தது? அந்த காரில் வந்தவர்கள் யார்? அவரை பற்றிய அனைத்து விவரங்களும் கூட அந்த கார் இப்போது யாரிடம் இருக்கிறது? என்ற அனைத்து விவரங்களையும் காவல்துறையிடம் விசாரித்து சொல்லவில்லை..
இவரை போல இருக்கும் தனியார் துப்புறியும் துறையிடம் ஒப்படைத்தார். ஒரே நாளில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டுமென்று!!
அவர்களுடைய ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்.. பேருதான் கெஸ்ட் ஹவுஸ் ஆனால் அதுவும் ஒரு குட்டி அரண்மனை போன்று தான் காட்சியளித்தது. மின்சார கணைப்பு இருந்தாலும் அந்த பழையகாலத்து நெருப்பு கணைப்பிற்கு ஈடாகாது. அதன் அருகில்தான் சோகமே உருவாக அமர்ந்திருந்தார் அவந்திகா ரெட்டி!!
அவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர்களை போல பேர் சொல்லும் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை. ஆனால் அதே ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்.
ஏதோ ஒரு திருமணத்தில் பார்த்தவுடனேயே இவரது அழகும் அடக்க குணமும் ஸ்ரீநிவாச ரெட்டிக்கு பிடித்துவிட.. பெரியவர்கள் சம்மதத்துடன் தான் திருமணத்தை முடித்தார். ஆனாலும் வெள்ளந்தி குணமும் எளிதில் யாரையும் நம்பி விடும் அவரது சுபாவத்தையும் எவ்வளவோ முயன்றும் ஸ்ரீ்நிவாசால் மாற்றவே முடியவில்லை.
அவர் இருக்கும் அந்தப் பதவிக்கு எப்பொழுது வேணாலும் ஆபத்துக்கள் வருவது அதிகம்!! அது விரோதிகளை விட துரோகிகளால் தான் அதிகம் என்பதும் அவர் கண்கூடாக பார்த்தது. அப்படி இருக்க தனக்கு பின் தன் குடும்பத்தை எடுத்து நடத்தும் அந்த நிர்வாகத் திறமை.. ஆளுமை.. மனைவியிடம் இல்லாததை நினைத்து உள்ளுக்குள் வருந்தினாலும், அதை அவரிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
அவர் எப்படியோ அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். அவரை மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் அதற்கு பதில் தன் பெண்ணை செதுக்க முயன்றார். ஆனால் விதி சீக்கிரமே வந்துவிட.. இப்பொழுது பெண்ணை நல்ல முறையில் கரையேற்றும் பொறுப்புடன் அவந்திகா!! எந்த அரண்மனை சுமையும் இல்லாமல் இருக்கிற இந்த நாட்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று எளிய மக்களின் குழந்தைகளோடு குழந்தைகளாக வாஹினி!!
காலம் இவர்களுக்கு வைத்திருக்கும் கோலம் தான் என்ன!!
கர்னலின் நண்பர் கர்னலைப் போலவே அதிவிரைவு தான்!!
அவர் சொன்னபடியே அடுத்த நாள் இரவு அவர் கேட்ட அனைத்து தகவலையும் கொண்டு வந்து கொடுத்து விட்டார். அது படி அந்த கார்.. கடப்பாவில் சேர்ந்த ஒரு குவாரி அதிபரின் கார் என்றும் பிறந்தநாள் விழாவிற்காக அவர் அழைக்கப்பட்டார் என்றும் தெரிய வந்தது. ஆனால் அந்தக் கார் அன்று இரவே திருட்டு போனதாகவும்.. தற்சமயம் சென்னையில் திருட்டுக் காரை வாங்கும் ஒரு வியாபாரியிடம் அந்தக் கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது வரை அவர்கள் கண்டுபிடித்து கர்னலிடம் கூற..
வாஹினியைக் கண்டுப் பிடிக்கவென்று ஐந்து பேர் கொண்ட குழுவை யாரும் அறியாமல் உருவாக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தார் கர்னல்!!
மீண்டும் அந்த ரகசிய பேச்சுவார்த்தை அரண்மனையில்..
"கர்னல் வந்துட்டார்.. அதுக்குதான் அவ பிறந்த விழாவிலே எல்லா வேலையும் முடித்துவிட்டு என்று சொன்னேன்.. அப்போ அவர் வேற இடத்தில் கமிட்டாகி இருந்தார். இப்போ என்ன செய்வது?" என்று வழக்கம் போல் இந்த குரல் ஒருவித பதட்டத்துடன் கேட்க..
"இதை நான் எதிர்பார்த்தேன் தான்!!
கர்னல் அவ்வளவு சீக்கிரமாக விட்டு விடக் கூடியவர் இல்லை.. கர்னலுக்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும். முந்தியவன் கை மந்திரவாள்!! அவர் கைக்கு வாஹினி சென்றுவிடாமல் நம் கைக்கு வந்தால் தான் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும்!! நடத்திக் காட்டுவேன் நான்!!" என்று அந்தக் குரல் கர்ஜிக்க..
அந்த கர்ஜனையில் இந்த பக்கம் இருந்தவர் உடல் சற்று ஆடித்தான் அடங்கியது.
அதன்படி அந்த குரலுக்கு சொந்தக்காரன்.. வாஹினியை ஜித்துவிடமிருந்து கடத்திக் கொண்டு வர ஆணை பிறப்பித்தான்.
ஒரு பக்கம் கர்ணனின் காக்கும் படை..
மற்றொரு பக்கம் கடத்தல்காரனின் கடத்தல் படை..
இடையில் வாஹினி..
ஆனால் இது எதையும் அறியாமல்.. குளித்துவிட்டு மீண்டும் ஜித்துவின் உடைகளை அணிந்து கொண்டு.. இவள் அந்த பிள்ளைகளோடு பிள்ளைகளாக விளையாடிக் கொண்டிருக்க.. அவளை பார்த்துக் கொண்டே சென்ற ஹரிதாவின் விழிகளில் அவ்வளவு வன்மம்!!
அதிலும் ஜித்து உடையை பார்த்தவளுக்கு பத்தி கொண்டு வந்தது என்றால் அந்த தீயில் எண்ணெயை ஊற்றுவது போல.. கூடியிருந்த குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவரை வதன வதன என்று கூப்பிட்டு அந்த தீயில் பெட்ரோலை ஊற்றினார்கள்.
அதிலும் ஹரிதாவை பார்த்து விட்ட வாஹினியும் சற்றே ஜித்துவின் சட்டை காலரை தூக்கி விட்டு கூடியிருந்த பிள்ளைகளை பார்த்து "நே யாரு மீக்கு?" (நான் யாரு உங்களுக்கு??) என்று தெலுங்கில் கேட்க..
இவள் முதல் முறை கேட்கும் போது திருத்திருத்தவர்கள் அடுத்த முறை ஆங்கிலத்தில் கூறி.. அந்த பிள்ளைகளுக்கு புரிந்ததை போல விளக்கி வைத்திருக்க.. இந்த இரண்டு நாட்களில் அதற்கு பழகிவிட்டிருந்த குழந்தைகளும் "வதினனன..!!" என்று இழுத்து சத்தமாக கூற..
முகம் கொள்ளா புன்னகையோடு ஹரிதாவை பார்த்தவாறு "எல்லாருக்கும் சாக்லெட் வாங்கி தரேன்!! வாங்க!!" என்று தெலுங்கில் கூறி அழைத்து சென்றாள்.
எங்கிருந்தோ வந்தவள் என் மாமனை பிடித்து கொண்டதோடு மட்டுமில்லாமல்.. என் ஏரியா பசங்களை கொண்டே என்னை அந்நியப்படுத்தி விட்டாள் என்று கோபம் கனன்ற.. அங்கிருந்த சிறிய பெட்டி கடை முன் நின்று "எனக்கு இது வேண்டும்.. எனக்கு அந்த சாக்லேட் வேண்டும்!!" என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த குழந்தைகளையெல்லாம் விலக்கிவிட்டு வாஹினியை எட்டியை பிடித்து கீழே தள்ளினாள் ஹரிதா.
"ஆஆஆ…" என்று அலறலுடன் விழுந்து கைகால்களை பட்டிருந்த மணல் துகள்களை தட்டிவிட்டு எழுந்து நின்றவளின் ஆளுமையில் ஒரு கணம் திகைத்து தான் போனாள் ஹரிதா.
"நீ என்ன செஞ்சாலும் என் மாமாவ கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊர்ல வாழ முடியாதுடி!! நாங்க எல்லாம் இங்கேயே இருந்துகொண்டு ஒன்னு மண்ணா பழகுறவங்க.. நாங்க என்ன தொழில் பண்றோம் தெரியுமா உனக்கு?? திருட்டு!! இது எங்களுக்குள்ள பழகிப் போன ஒன்று. ஆனா உன்னால முடியுமா? ஜித்துக்கு பாதி நாள் வேலை இருக்கும். பாதி நாள் வேலை இருக்காது!! அந்த மாதிரி நேரத்துல நான் அவனுக்காக பிக்பாக்கெட் அடித்து விட்டு வந்து வீட்டை சமாளிப்பேன்!! உன்னால முடியுமா?" என்று சவால் விட்டாள் ஹரிதா. வேறு எந்த வகையிலும் இவளை வளைக்க முடியாது என்று.. தோற்கடிக்க முடியாது என்று!!
அவள் சொன்னது புரியாமல் அருகிலிருந்து சிறுமியிடம் கேட்க.. அவளுக்கு தெரிந்த ஓரளவு ஆங்கிலத்தில் ஹரிதா பேச்சின் முக்கிய சாராம்சத்தை மட்டும் திக்கி திணறி அவளிடம் கூறி வைக்க..
"இப்புடு ஒக்க ஹேண்ட் பேக் ந தொங்கதனம் சேவல?? அந்ததான?"
(இப்போ ஒரு ஹேண்ட் பேக்கை பிக்பாக்கெட் அடிக்கணும் அவ்வளவுதானே?? அடிச்சுட்டு வந்திடறேன்) என்று சவால் விட்டால் வாஹினி!!
பஞ்சத்து ஆண்டி பரம்பரை ஆண்டி என்று இருவரும் உண்டு..
அதுபோல பரம்பரை திருடனுக்கு உள்ள லாவகம் எல்லாம் பஞ்சத்துக்கு திருட வந்தவனிடம் இருக்காது. இவளோ சவால் விட்டுட்டு வந்தவள்.. ஜித்து இல்லாத நேரம் பார்த்து துணைக்கு ஜிகா மெகாவை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கடற்கரைக்கு சென்றாள் ஹேண் பேக்கை திருட..
