தூகை 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

1

 

அன்று…

 

 

“ஆதவா… ஏய்.. ஆதவா…” என்று‌ அந்த அப்பார்ட்மெண்ட்டே அதிர அழைத்தார் பிரேமா..!

 

ஆதவ் நிரஞ்சன் அவர் ஆஸ்திக்கு என்று பெற்ற மகன். ஆனால் ஆஸ்தி என்னவோ அவனுக்கு கொடுத்த கல்வி மட்டுமே. ஆனால் ஆசைக்கென்று பெற்ற இரு மகள்களுக்கு நன்றாகவே சீர்வரிசை எல்லாம் செய்து அனுப்பினார் பிரேமா புகுந்த வீட்டிற்கு. கணவனின் இன்சூரன்ஸ் பணமும் மகனின் சம்பாத்தியத்தையும் வைத்து..!

 

“ஏம்மா.. என்னாச்சு? எதுக்கு இப்படி காலையிலேயே கத்துற?” என்றப்படி காலை நடைப்பயிற்சியை முடித்து, வாயிலில் இருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்தப்படி உள்ளே வந்தான் ஆதவ் நிரஞ்சன். முப்பத்தைந்தின்‌ ஆரம்பத்தில் இருக்கும் ஆண் மகன்..! அவ்வீட்டின் தலைவன்..!

 

சொத்து ஆஸ்தி கொடுக்கவில்லை என்றாலும் தன் அழகினை வனப்பினை கொடுந்திருந்தார் மகனுக்கு ஆஸ்தியாய்..!

 

‘என்றும் முப்பது..!’ என்ற பேனருக்கு மாடலாய் இவனை நிறுத்தலாம்..! உடம்பை நன்றாக பேணுவான். உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்று காலையிலேயே தன் உடற்பயிற்சியை தொடங்கிடுவான்.

 

மகனின் கையில் இருந்த பால் பாக்கெட்டுகளை பார்த்ததும் என்னவோ மகன் தொடக்கூடாததை தொட்ட மாதிரி முகத்தை சுழித்த பிரேமா “இந்த பால் பாக்கெட் கூட நீ தான் எடுத்துட்டு வரணுமா? உள்ள அந்த மகாராணி.. உன் பொண்டாட்டி அப்படி என்னதான் பண்றா? இது கூட எடுக்க மாட்டளாமா..” என்று புலம்பிய படியே எதற்கு மகனை அழைத்தார் என்பதை மறந்து அவன் கையில் இருந்த பால் பாக்கெட்டை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சமையலறை பக்கம் சென்றார். 

 

“எம்மா வதனி.. இந்த பால் பாக்கெட் கூட உன்னால எடுக்க முடியாதா? இத கூட என் புள்ள தான் செய்யணுமா? காலையில இத்தூண்டு சமையல் செய்றதுக்குள்ள நீ படுற அலுப்பு இருக்கு பாரு.. அப்பப்பா.. நானெல்லாம் அந்த காலத்துல நாலு நாத்தனார்‌ ஆறு கொழுந்தனுக்கு அசராம ஆக்கி போட்டவ.. ம்ஹூம் இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் மேல் வேல எல்லாத்தையும் புருஷன் கிட்ட தான் வாங்குறிங்க” என்றவர், எடுத்து வந்த பால் பாக்கெட்டுகளை ஃப்ரிட்ஜில் கூட வைக்காமல் அடுப்பு மேடை அருகில் வைத்து விட்டு சென்றார்.

 

அவரை ஓரக்கண்ணால் பார்த்து தலையாட்டிக் கொண்டாள் வதனி என்கிற மேகவதனி, ஆதவ் நிரஞ்சனின் ஆத்மார்த்த பத்தினி..! காதல் மனைவி..!

 

அவர் சொன்ன அந்த சமையல் என்பது காலை அதிக எண்ணெய் காரம் இல்லாமல் பிரேமாவுக்கு என்று தனியாக செய்ய வேண்டும். அதுவும் சத்துள்ளதாக செய்ய வேண்டும்..!

 

ஆனால் அதே சத்து உள்ளதை நிரஞ்சன் “என்ன இது சப்புனு இருக்கு?” என்று உண்ண மாட்டான். அதற்காக அவனுக்கு சற்றே காரசாரமாக ருசி பசியாக செய்ய வேண்டும்..! 

 

அவர்களின் ஒற்றை மகளோ சாதாரணமாக வீட்டில் செய்யும் தோசை இட்லி பூரி சப்பாத்தி இதையெல்லாம் கூட ட்ரெண்டியாக அதை உருவத்தை மாற்றி கொடுத்தால் மட்டுமே உண்ணும் விசித்திர ஏலியன்..! 

 

கூடவே மதிய உணவிற்கும் கணவன் மற்றும் மகளுக்கு செய்ய வேண்டும். இப்படி அந்த வீட்டில் இருக்கும் மூவருக்கும் காலைக்கு மூன்று விதமான சாப்பாடு.. பின் மதியம் மகளுக்கு தனியாக கணவனுக்கு தனியாக என்று கட்டி அனுப்ப வேண்டும்..! 

 

அப்போ மேகா உனக்கு? 

 

“எனக்கா??” என்று சிரித்தவள், “இவங்க எல்லாம் சாப்பிட்டு மிச்சம் உள்ளதை நான் சாப்பிட்டுப்பேன். இல்லன்னா வேஸ்ட் ஆயிடும் இல்லையா?” என்று சிரித்தவளின் முகமோ, ஒவ்வொரு நடுத்தர வர்க்க மனைவி மற்றும் அன்னையின் முகத்தினை நமக்கு ஞாபகம் மூட்டுவதாய்..!

 

“மிரு குட்டி.. எழுந்திரு..” என்று தன் எட்டு வயது மகள் மிருணாளினியை எழுப்பிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

 

“எழுந்திரு மிரு குட்டி.. சுடு தண்ணீர் போட்டு வச்சிருக்கேன். போய் சீக்கிரம் குளிச்சிட்டு வந்துருவியாம்..” என்று மகளை கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“எப்பவுமே சுடு தண்ணியிலேயே குளிக்க வைச்சு பழகாதீங்கன்னு சொல்றேன் எங்கையாவது கேக்குறீங்களா?” என்றவள் காலையில் கணவனுக்கு சத்துமாவு கஞ்சியை எடுத்து வந்தாள். மனைவியிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டவன் “பிள்ளைக்கு குளிரும், சளி பிடிக்கும் டி..!” என்றான் அத்தனை அக்கறையாய் உறங்கும் மகளின் தலையை வருடிவிட்டு..

 

“இப்படி சளி பிடிக்கும்.. அது பிடிக்கும்.. இது பிடிக்கும்னு.. கைக்குள் வைச்சு வளர்த்தா நம்ம பொண்ணு நோயாளியா தான் இருப்பா.. எல்லாத்திலும் விட்டு பழகணும். எல்லாத்தையும் பழகி பார்த்தா தான் அவ உடம்புக்கு எதிர்ப்பு சக்தி வரும் சொன்னா எங்க கேக்குறீங்க? ஆமா 40 வயசு ஆகுது நீங்களே இன்னும் சுடுதண்ணியில் தான் குளிக்குறீங்க எட்டு வயசு அது எப்படி கேட்கும்?” என்றாள்..

 

“ஏய் மேகா.. என்ன பொசுக்குன்னு எனக்கு 40 வயசுன்னு சொல்ற? முப்பத்தஞ்சு தான்டி ஆகுது..” என்றான் சத்து மாவு கஞ்சி குடித்துக் கொண்டு மனைவியை கண்களால் வருடியபடி..

 

அவளோ வாசல் பக்கம் ஒரு முறை பார்த்துவிட்டு கணவனின் டி ஷர்ட் காலரை பற்றி தன் முன் இழுத்து அடர்ந்த கற்றை மீசையில் ஆங்காங்கே எட்டிப் பார்த்து இரண்டு வெள்ளை முடிகளை காட்டி “மீசை நரச்சுட்டு மச்சான்..! அப்போ நீங்க கிழவன் தான்.! வயசானவர்தான்..!” என்று கண் சிமிட்டி செல்ல..

 

“என்ன‌ வயசாயிடுச்சா?” அதிர்ந்தவன் மனைவியை, சட்டென்று இடை வளைத்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தான் ஆதவ்..!

 

“எங்க.. என் கண்ண பாத்து சொல்லு? எனக்கு வயசு ஆயிடுச்சா? மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காது..! சொல்லு.. சொல்லு..” என்று கேட்டவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் 30 வயது பெண்ணவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன..

 

“விடுங்க ஆதவ்.. அப்புறம் உங்க அம்மாவுக்கு மூக்குல வேர்த்திடும்” என்று அவள் விலக முயல அவன் பிடி மிக இறுக்கமாக இருந்தது. 

 

“ஏய்.. நரைச்ச முடினு என் மீசையை அசிங்கப்படுத்திட்ட..! அது இப்போ ரொம்ப சோகமா இருக்கு. அதை சமாதானப்படுத்திட்டு நீ போ டி” என்றவனை பார்த்து திகைத்தவள், பின் வாய் விட்டு சிரித்தாள்.

 

“எதுக்கு இப்படி கட்டைய போறீங்கன்னு எனக்கு தெரியாதா? ஆனாலும் ஒன்னும் நடக்காது ராசா..” என்றாள் குறும்பாக..!

 

“நீ குடுக்காம நான் விடமாட்டேன்” என்றான் அவன் வீம்பாக..

 

“இன்னும் மூன்ணு எண்றதுக்குள்ள நீங்களே விட்டுடுவீங்க பாருங்க.. ஒன் டூ த்ரீ..” அவள் சொல்லி முடிக்கு முன்,

 

“காலையில என்ன சிரிப்பு வேண்டி இருக்கு.. சிரிப்பு..! புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பனும்னு தோணல.. புருஷன வேலைக்கு நேரத்தோடு அனுப்பணும் தெரியல.. இப்பதான் பேசி சிரிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா.. ஒரு குடும்ப பொம்பள செய்ற வேலையா இது? அது சரி.. நான் பார்த்து கட்டி வச்சிருந்தா.. இப்படிப்பட்ட பொறுப்பில்லாத பொண்ணையா பாத்து கட்டி வைச்சிருப்பேன்” என்று பிரேமா வழக்கம் போல அவர் பாட்டை ஆரம்பிக்க..

 

‘சொன்னேன்ல..!’ என்று கண்ணசைவில் காட்டி அவள் விலகும் போது… தலையாட்டி கொண்டவன் விலகி சென்ற மனைவியை இழுத்து ஒரு அவசர முத்தத்தை அழுத்தமாக அவள் இதழில் பதித்துவிட்டு அம்மாவை நோக்கி சென்றான். 

 

மேகா மிருணாளினியை எழுப்பி குளிக்க வைத்து அழைத்து வந்தாள்.

 

“தினமும் இதே பொழப்பா இருக்கு பாப்பா.. உன் வயசு எட்டாவது நீயே குளிச்சுக்கோன்னு சொன்னா கேட்காம இப்படி சோம்பேறியா படுத்து தூங்கிகிட்டே இருக்க..! இன்னைக்கு தான் லாஸ்ட் நாளிலிருந்து நீதான் குளிச்சுக்கணும்..!” என்று தினமும் பாடும் அதே பல்லவியைப் பாடிவிட்டு மகளுக்கு உடை எடுத்து வைத்து மீண்டும் அவளது ஆஸ்தான இடமான சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

ஒரு வழியாக மகளை கிளப்பிக்கொண்டு தானும் வங்கிக்கு கிளம்பினான் ஆதவ் நிரஞ்சன். வாயில் வரை வந்து அவர்களை வழியனப்பினாள்‌ வதனி..

 

அவர்கள் அப்பார்ட்மெண்டில் எதிரே பின் முப்பதில் இருக்கும் ரேவதி ப்ரொபஷராக ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றுகிறார். அவளும் அதே நேரம் கிளம்பி வந்தவள் “வாவ் ஆதவ்.. இன்னைக்கு லுக்கிங் ஸ்மார்ட்..!” என்றபடி கடந்து செல்ல..

 

அவளை பார்த்து சொல்ல “தேங்க்யூ மேம்” என்றவனின் முகத்திலோ அத்தனை மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக இடது கையால் சிகையை கோதிக் கொண்டு, மனைவியை பார்த்து கண்ணடித்தவனை முறைப்புடன் பார்த்தாள் வதனி..!

 

“ஏய் சும்மா ஒரு காம்ப்ளிமென்ட்..! அதுக்கு எல்லாம் போய் டென்ஷன் ஆக கூடாது மேகா மா..” என்று மனைவியின் கன்னத்தை தட்டி விட்டு செல்லும் கணவனை ஒரு அலுப்புடன் பார்த்து தலையாட்டியவள், 

 

“எத்தனை வயசு ஆனாலும் இந்த ஆம்பளைங்க மட்டும் மாறவே மாட்டாங்க.!” என்று உள்ளே நுழைந்தவளை அடுத்தடுத்து வீட்டு கடமைகள் அழைத்துக் கொண்டது. 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top