அத்தியாயம் 14
சங்கர பாண்டியனுக்கு ஸ்ரீராமனிடமிருந்து போன் வர "என்னப்பா நல்லபடியா கூட்டம் எல்லாம் முடிஞ்சுதா.. நானு மதுரைக்கு வண்டி அனுப்பியிருக்கேன் கண்ணு.. அதுல வந்து சேர்ந்துருங்க தம்பி" என்று இவர் கூற..
"அதைவிடுங்க பா.. முக்கியமான விஷயமுங்க.. நீங்களும் அம்மாவும் உடனே கிளம்பி தேனிக்கு வாங்க" என்றான்.
"இப்ப எதுக்கு தேனிக்கு வரணும்னு ஏதாவது பிரச்சனையா?" என்று அவர் அதிர..
"ஆமா.. ஆமா.. நீங்க தானுங்க பேசி எல்லாத்தையும் சரி பண்ணி தரனோம். சீக்கிரம் அம்மாவையும் கூட்டிட்டு வாங்க" என்று அம்மாவில் அழுத்தம் கொடுத்து கூறினான் மகன்..
"என்ன ஏதுன்னு தெரியலையே?? எதுக்கு இப்படி உடனே வரச் சொல்கிறானுங்க மாமா?" என்று கணவன் கூறியதைக் கேட்ட நாச்சிக்கும் பதறத் தொடங்கியது. வேறு ஏதும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டானோ மகன் என்று.
அதுவரை மகன் மீது இருந்த கோபம் எல்லாம் மகனுக்கு ஒரு ஆபத்து பிரச்சனை என்றவுடன், சூரியனைக் கண்ட பனி துளியாய் விலகி ஓட.. அவசரமாக சொர்ணம் அப்பத்தாவிற்கு வேறு ஒரு ஆளை பார்த்துக்க சொல்லிவிட்டு சங்கரபாண்டியனும் நாச்சியும் தங்கள் காரில் புறப்பட்டனர் தேனியை நோக்கி...
ஸ்ரீராமன் விவரமாக தேனியை நெருங்கும் வேளையில் தான் கூறியிருந்தான். சங்கரபாண்டியன் வருவதற்குள் இவர்கள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். என்னதான் கழுத்தில் தாலி இருந்தாலும்..
"புருஷன் இவ்வளவு காலமாக வெளிநாட்டில் இருப்பான்?? அதுவும் பெற்ற பிள்ளையை கூட பார்க்க வராம?? என்று ஒவ்வொருவர் இவர்கள் காதுபடவே பேசியிருக்க.. இன்று அவர்கள் எல்லார் முகத்தில் கரியை பூசும் படி வந்து இறங்கிய ஸ்ரீராமனை பார்த்த அனைவருக்கும் வியப்பே!!
ஆனாலும் மனதில் உள்ள குப்பைகளை எல்லாம் மறைத்துக்கொண்டு, "எங்களுக்கு அப்பவே தெரியும் கண்ணு.. உன்ற புருஷன் சீக்கிரம் வந்து விடுவானு" என்று நாக்கில் தேன் தடவிய வார்த்தைகளால் வாழ்த்தி விட்டு சென்றது அந்தக் கூட்டங்கள்..
நீலவேணியும் முருகனும் வந்திருக்க மூவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள். பரஞ்சோதியின் காலில் மூவருமாக விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவருக்கு மனதில் இப்போது தான் வெகு நிம்மதி...
"நீலா.. நீயு உன்ற புருசன் கூட சேர்ந்துட்ட அந்த சந்தோஷத்தை எனக்கு கொண்டாடனும் போல இருக்கு புள்ள. இன்னிக்கு இராவு மட்டும் கொஞ்சம் ஊத்திக்கிறேனே?" என்று அவர் கேட்க மருது முறைத்த முறைப்பில் அடங்கிவிட்டார்.
இங்கே குடும்பமாக இவர்களெல்லாம் சிரித்துப் பேச.. பேச.. கீசாவோ கண்களில் ஏக்கத்துடன் தன் நீலுக்குட்டியை பார்த்தவண்ணம் வழக்கம் போல அவளது எதிரிலிருந்த ஒரு கப்போர்டு மீது அமர்ந்து இருந்தது. அருகில் மோகினியோ 'இவனை எல்லாம் திருத்த முடியாது' என்று தலையில் கைவைத்துக்கொண்டு திரும்பி உட்கார்ந்து இருந்தது.
ஸ்ரீராமனும் நிமலனை தன் மடியில் இருந்து சிறிதும் இறக்கவே இல்லை. அவனும் புதிதாக வந்த அப்பாவுடன் ஒட்டிக் கொண்டே இருந்தான். எல்லாரையும் விட புதிது புதிதாக நிறைய கேம் வைத்திருந்த அப்பாவை ரொம்பவே பிடித்து அவனுக்கு.
இவர்களெல்லாம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சங்கரபாண்டியன் தேனி வந்தவர் "எங்கே வரனும்?" என்று கேட்டு அழைக்க மருது விடம் கேட்டு அட்ரஸை சொன்னான் ஸ்ரீராமன்.
"யாரு வீடு அது? எதுக்கு அங்கன வர சொல்றான்? ஏன் உன்ற புள்ள எப்பவுமே புரியிற மாதிரி பேச மாட்டானா?" என்று மனைவியிடம் அவர் கடிந்து கொள்ள..
"தொழிலில நிறைய சம்பாதிச்சா உங்க புள்ள .. இப்படி ஏதாவது செஞ்சா உடனே என்ற புள்ளையா? நல்ல நியாயம் மாமா உங்க நியாயம்" என்றார் நாச்சி.
"வரவர நாச்சி நீயும் நல்லா பேச கத்துக்கிட்ட" என்று கூற..
"எவ்வளவு நாளைக்கு தானுங்க, நானும் புள்ள பூச்சாக இருக்கிறதுங்க மாமா.. அதுவும் இப்படி நான் மாறியத்துக்கு காரணமே நீங்களும் உங்க புள்ளையும் தானுங்க.. அதனால எல்லா பெருமையும் உங்களுக்கே!!" என்று அதையும் அவர் பக்கமே அவர் தள்ளி விட.. இனி வாயே திறக்கக் கூடாது என்று ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டார் சங்கர பாண்டியன்.
"யார் வீடு?" என்று யோசனையோடு உள்ளே நுழைந்தவர்களை.. மருது சென்று அழைக்க அப்பவும் மருதுவை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. உள்ளே நுழைந்தவர்கள் அங்கே தம்பதி சமேதராய் அதுவும் கையில் மகனோடு நின்றிருந்த தங்கள் மகனை பார்த்தவுடன் அப்படி ஒரு ஆனந்தம் நாச்சிக்கு..
"ஆத்தா.. கோட்டை மாரியாத்தா!! பெத்தனாட்சி அம்மா!! நானு வச்ச வேண்டுதல் எல்லாம் வீண் போகல.. குடும்பத்தோடு வந்து உங்க எல்லாத்துக்கும் பொங்க வைக்கிறேன் தாயே!!" என்று இரு கைகளையும் மேலே உயர்த்தி தனது நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.
ஸ்ரீராமன் புன்னகை முகமாக நின்றிருந்தான். நீலாம்பரியின் வதனத்திலேயே அவளது உள்ள மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிய மூவரும் சேர்ந்து தங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.
"உன்ற கல்யாணத்து அன்னைக்கு கூட இப்படி எங்க கால்ல எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலடா மகனே!!" என்று சங்கரபாண்டியன் கேலி போல் தன் வருத்தத்தை கூறினார்.
"நீ கவலைப் படாதீங்க பா.. ஒவ்வொரு கல்யாண நாளும் போதும் எங்களின் பிறந்தநாளும் போதும் முதல் ஆசிர்வாதம் உங்ககிட்ட தான்" என்ற மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.
அடுத்து விருந்து தடபுடலாக ரெடியாக அனைவருக்கும் மதிய விருந்து தங்கள் வீட்டு சார்பில் மருதுவும் நீலவேணி அமர்க்களப்படுத்தி விட.. கண்கள் கலங்க தனது புகுந்த வீட்டை நோக்கி புறப்பட்டாள் நீலாம்பரி.
காரில் சென்று கொண்டிருக்கையில் பேரனை தன் மடியை விட்டு இறக்கவில்லை நாச்சி.. அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. அவனது கை கால்களை பிடித்து தடவியவாறு கண்கள் கலங்க அமர்ந்திருந்தார் அவர்.
எத்தனை நாள் நினைத்து நினைத்து அழுது இருப்பார்!! வருந்தி இருப்பார்!!அனைத்திற்கும் பலனாய் மருமகளும் பேரனும்.. அவ்வளவு இனித்தது அவருக்கு!!
கலங்கிய மனைவியின் தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதலாக அணைத்துக் கொண்டார் சங்கரபாண்டியன்.
வீடு வந்தவர்களை இங்கேயும் ஆலம் கரைத்து உள்ளழைத்தார் நாச்சி. நேராக அப்பத்தாவிடம் சென்ற நீலாம்பரி அவரின் நிலையை நினைத்து அழுக.. அவரோ "பாத்தியா டி பேத்தி.. என்ற தாலி எவ்வளவு ஸ்ட்ராங்குனு.. நீயு எங்கன சுத்தினாலும் உன்னைய இங்கே வந்து சேர்த்துடுச்சு பாத்தியா?" என்று அவர் கூற.. "ஆமா! ஆமா!! ரொம்ப தான் ஸ்ட்ராங்கு மூணு வருசம் இடையில நடந்ததெல்லாம் மறந்து போன ஸ்ட்ராங்கு" என்று கேலி பேச அதன்பின் அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றனர்.
அதே ரூமில் அவள் சுற்றி சுற்றி பார்க்க மகனின் அழுகுரலில் கீழே சென்று அவனை தூக்கி வந்தாள். அதற்குள் சங்கரபாண்டியன் ஸ்ரீ ராமனை அழைத்து, மருமகள் பேரன் வந்ததை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் விருந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மகனோடு விவாதிக்க.. அப்போதுதான் கீசாவிடம் பேசும் தனிமை கிடைத்தது நீலாம்பரிக்கு!!
மகனை மடியில் போட்டுத் தட்டிக் கொண்டிருக்க அவன் அப்படியே உறங்கினான். அவனை மெல்ல மெத்தையில் கிடத்தி "கீசா.." என்று இவள் மென்மையிலும் மென்மையாக அழைக்க..
அதற்கென காத்துக் கிடந்தது போல அவள் முன்னே வந்து நின்றது அவளின் அன்பன் கீசா..
"உன் மேல நான் ரொம்ப கோபமா இருந்தேன் டா.. ஏன்டா என்னைய விட்டு போன? நானு ஒத்த வார்த்தை சொன்னா உடனே நீயு கோவிசாசிக்கிட்டு போயிருவியோ? என்னைய திரும்பி கூட பாக்க வரல இல்ல நீயு" என்று உரிமையோடு அதனிடம் இவள் சண்டையிட..
"வேறு யார் பேசி இருந்தாலும் எனக்கு கவலை இருந்திருக்காது. என் நீலுக்குட்டி பேசியது தான் எனக்கு மனதில் கொஞ்சம் ரணமாக வலித்தது. அதனாலதான் போயிட்டேன். ஆனால் உன்னை வீட்டை விட்டு துரத்திய உன் புருஷனை நான் சும்மா விடலையே!!" என்று அவன் கூற.. "என்னது??? திரும்பவும் அவரை உன்ற கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கியா? ஐய்யோ!! அப்போ அதனாலதான் அவரு என்னைய தேடி வந்தாரா?" என்று இவள் அலற..
"இல்லை... இல்லை.. அவனை முழுதாக என் கட்டுக்குள் வைக்கல.. உன் ஞாபகத்தை மட்டுமே அவனுக்கு அவ்வப்போது தோற்றுவித்தேன் நீலுக்குட்டி.. உள்ளுக்குள் அவனுக்குமே உன்மீது காதல் இருந்து இருக்கு. அவனுக்கு மட்டுமல்ல உனக்கும் உன் கணவன் மீது அவ்வளோ காதல்தான். நான் உங்கள் ரெண்டு பேரையும் தூண்டி விட்டு ஒரு சின்ன கருவிதான்" என்று அது அழகாக சிரிக்க..
அதன் உயரத்துக்கு மடிந்து அமர்ந்தவள் கீசாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அழுதாள்.
"நீயு மட்டும் அப்படி பண்ணலேன்னா இன்னிக்கு என்ற வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு எனக்கு யோசிக்கவே முடியல.. அந்த மூனு வருசம் கஷ்டப்பட்டாலும் அந்த கஷ்டத்திற்கேற்ற பிராப்தமும் நாங்க பெற்றோம் தானே!! ஆனாலும் என்ற மேல நீயு வைத்த இந்த கள்ளமில்லாத அன்புக்கு நானு என்ன பதில் செய்வானு எனக்கு தெரியல" என்றவள், பல நாள் அது ஆசைப்பட்டு கேட்ட முத்தத்தை இன்று அன்போடு அதன் கன்னத்தில் கொடுத்தாள், நீலாம்பரி.. கீசா கேட்காமலேயே!!
கீசாவிற்கும் வானத்தை வசப்படுத்திய உணர்வு.. அப்படி ஒரு ஆனந்தம் அதன் கண்களில்!! துள்ளிக்குதித்து பல்டி அடித்து அந்த அறையையே ஒருவழி ஆக்கியது. அதை கண்களில் சிரிப்பை பார்த்தவளுக்கு இன்னும் ஆயிரம் முத்தங்களை அன்பாக தனது இனிய தோழனுக்கு கொடுக்க பிரியப்பட்டாள்.
"கீசா.. நான் ஒன்னு சொல்லுவேன் நீயு தப்பா நினைச்சிக்க மாட்டல்ல" என்று தயக்கத்துடன் கேட்க..
"சொல்லு நீலுக்குட்டி!! என்ன வேணாலும் செய்வேன் உனக்காக!!!" என்று அவள் முன் வந்து நின்றது.
"இந்த உலகம் உனக்கு ஏற்றது இல்ல கீசா.. நீ உன்ற உலகத்துக்கு போயிடு.. அதுமட்டும் இல்ல நீயு இங்கே இருந்தா உன்ற கட்டால தான் அவரு என்ற கிட்ட பாசமா நடத்துகிறாரோ? காதலோடு கூடுறாரோன்னு சந்தேகம் எனக்குள் எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும்" என்று சங்கடமாக தனது மனதில் இருந்ததை அவள் கூறிவிட்டாள். ஆனால் இவ்வார்த்தைகள் கீசாவில் மனதில் கண்டிப்பாக வருத்தத்தை ஏற்படுத்தும்.. வலியை மிகுத்துக் காட்டும் என்றும் அவளுக்குத் தெரியும்.
அவள் சொன்னதை கேட்டதும் முகத்தில் வருத்தத்தை காட்டினாலும் பின்பு சிரித்தபடி "நானே அதை உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் நீலுக்குட்டி" என்றது, "மோஹி குட்டி!!" என்று அழைக்க அருகிலிருந்த மோகினியை அப்போதும் அவளால் பார்க்க முடியவில்லை.
"மோகினி உன்னை நீலுக்குட்டி கிட்ட காட்டு" என்று கூற, மோகினி அவள் கண்ணுக்கு தெரியும் படி வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் வாய்பிளந்து இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க..
"இதுதான் என்னுடைய இணை.. மோகினி!! மோஹி குட்டி!!" என்றது வெட்கத்துடன் சிரித்த மோகினியை பார்த்த நீலாம்பரிக்கும் மனதில் அப்படி ஒரு சந்தோஷம்.
"நான் இவரை எத்தனை ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து இருக்கேன் தெரியுமா நீலு? இவர் என்னை திரும்பி பார்க்கவே இல்லை.. நீ திட்டிய தூக்கத்துல கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கட்டுக்குள்ளேயே இருந்தவரை ஒருவழியாக மீண்டு வந்தேன். அப்புறம் என்னை கல்யாணம் பண்ணிக்க என்று சொன்னால என் நீலுக்குட்டி முன்னால தான் கல்யாணம் பண்ணிபேன் ஒரே பிடிவாதம்!!" என்று தன்னுடைய மனக்குறைகளை மோகினி கூற நீலாம்பரிக்கு கீசாவின் அன்பை நினைத்து மனது நிறைந்தது.
அதன்பின் தன் கழுத்தில் இருந்த சிறிய செயின் ஒன்றை கலட்டி கீசாவிடம் கொடுத்து "உங்க முறைப்படி எப்படி திருமணம் செய்விங்கன்னு எனக்கு எல்லாம் தெரியாது கீசா.. ஆனால் என்ற கண் முன்னால் இந்த செயினை போட்டு உன் இணையை கட்டிகிட்டு நீ சந்தோஷமா இருக்கணும்" என்றதும் அவள் சொன்னபடியே அந்த செயினை வாங்கி மோகினி கழுத்தில் போட்ட கீசா.. பின் அவளை வாழ்த்தி விட்டு வ மோகினியோடு தங்கள் உலகத்திற்குச் சென்றது.
எல்லாம் இனிமையாக முடிந்த சந்தோஷத்தில் தூங்கும் மகனை பார்த்து விட்டு குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தி வெளியில் வர..
சட்டென அவளை குளியலறைக்கு உள்ளே தள்ளி கதவை சாத்தினான் ஸ்ரீராமன். அவள் என்ன என்று உணரும் முன் அவளின் அதரங்களோடு தன் அதரங்களை பொருத்தினான். முதலில் சற்று அதிர்ந்தாலும் கணவனோடு ஒத்துழைத்து அவனை கைகளால் இறுக தழுவினாள் நீலாம்பரி. அவள் இதழ்களை ருசித்தபடி அவளை பாத்ரூம் சுவற்றில் அழுத்தினான். அவள் திமிறாமல் அவனை காதலோடு பார்க்க.. அவள் இதழ்களை விடுத்தவன் முகத்தை கழுத்துக்கு இறக்கினான் அதிரடியாக..
அவள் கழுத்தில்.. நெஞ்சுப் பரப்பில் எல்லாம் முத்தம் கொடுத்தான். அவள் கிறங்கி நிற்க.. இதழ்கள் செய்த வேலையை நாவினை கொண்டு செய்ய.. குறுகுறுப்பு தாளாமல் அவன் முகத்தை மார்பில் இருந்து தள்ளி விட்டாள். ஆனால் அவளை விலக விடாமல் அணைத்தவாரே கைகளில் அள்ளி கொண்டவன் மஞ்சத்தில் கிடத்த..
"ஐயோ மாமா!! விடுங்க போதும்.. ஏற்கனவே இன்னிக்கு நாள் பூரா வண்டியில வந்தது ரொம்ப அசதியா இருக்கு நாளைக்கு பாத்துக்கலாம் மாமா" என்று அவள் தூங்க முற்பட..
"என்னது?? நாளைக்கா?? ஏற்கனவே மூனு வருசத்துக்கு மேல ஆச்சு அம்மிணி.. அத்தனை நாளையும் ஈடு செய்ய வேண்டாமா?" என்றவன், புயலென அவளை ஆக்கிரமித்து பின்பு மெல்ல மெல்ல மென்மையை கையிலெடுத்து தன் அன்பை காதலை முழுமையாக கொண்டாடினான் அவளிடத்தில்..
5 வருடங்கள் கழித்த நிலையில்..
நீலாம்பரி ஸ்ரீராமன் அவர்களின் மகன் நிமிலனும் மகள் நிவேதிதாவும் அவர்களது தென்னந்தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
எட்டு வயது பெரியவனான நிமிலனுக்கு தன் நான்கு வயது தங்கை மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும், அவனுக்கு நிகராக அவளால் ஓடி விளையாட முடியாததால் "உன்னோடு விளையாட முடியாது போடி" என்று விட்டு தன் சக வயது நண்பர்களுடன் விளையாட சென்று விட்டான்.
தென்னந்தோப்பில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தவள் பக்கத்தில் ஒரு பந்து விழ அதை கையில் எடுத்து சுற்று முற்றும் பார்த்தாள் அந்த குட்டி!!
தென்னந்தோப்பு முழுவதையும் இப்போது பார்த்து கொள்வது நீலாம்பரி தான்!! ஸ்ரீராமன் மற்ற ஏற்றுமதி வேலைகளை பார்த்துக் கொள்கிறான். மகன் மட்டும் மற்ற பிள்ளைகளோடு விளையாடுவதை பார்த்து நீலாம்பரி, மகளை காணோம் என்று தேடி வந்தவள், மகள் தனியாக பந்தை மட்டும் உருட்டி உருட்டி சிரித்துக்கொண்டு விளையாடுவது பார்த்து அதிர்ந்தாள். 'அங்கே மகளை தவிர யாருமில்லையே.. யாருடன் விளையாடுகிறாள்?' என்று பயந்து மகளை அள்ளிக் கொண்டு விரைந்தாள் வீட்டுக்கு..
அந்த குட்டியோ பின்னால் திரும்பி அங்கு நின்றிருந்த குட்டி உருவத்துக்கு பை சொல்ல, அவ்வுருவமும் பதிலுக்கு பை சொன்னது.
அதே நேரம் சாத்தான்கள் உலகத்தில் மகனை காணாமல் தேடிய மோகினி... "அசீதா!! மீண்டும் பூலோகத்துக்கு போய்டியா" என்று அலறியது..
அன்பு என்பது இனம் மொழி நாடு எல்லாம்
கடந்த ஒன்று!!
அன்புகள் என்றுமே முடிவிலி தான்!!
அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வோம் அன்பை!!
அன்பே ஸ்வாசிதம்!!
அன்பே ஆனந்தம்!!
சுபம்!!
