நிகரில்லா நேசமிதுவோ!!!
நேசம் : 1
அவசரமெல்லாம் காலை எட்டு மணிக்கு பள்ளியை வந்தடைவதற்கு மட்டும் தான். மாலை சௌகரியமாக பள்ளிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் சிறிது நேரம் விளையாடிவிட்டே வீட்டிற்கு செல்ல மனம் வரும் எட்டி வயது சிறுமி நிலாவுக்கு. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையாக அமைந்து விட, பறந்து பறந்து ஹோம்வொர்க் எழுதும் பதட்டம் கூட இல்லாது நிம்மதியாக ஊஞ்சலில் அமர்ந்து தந்தையுடன் கதையளந்துக் கொண்டிருந்தாள்.
அவள் தந்தை கிருஷ்ணாவும் மெதுவாக மகளை ஆட்டி விட்டபடி அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
"அப்பா… என் ப்ரெண்ட் காவியா பர்த்டேக்கு அவ அப்பா அவ உயரத்துக்கு பெரிய டெடிபியர் வாங்கி கொடுத்து இருக்காங்க… என் பர்த்டேக்கு எனக்கும் அது மாதிரி ஒன்னு வாங்கி தரீங்களா?" என்று பின்னால் நிற்கும் தந்தை முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே பிள்ளை கேட்க,
"அதுக்கு எதுக்கு டா பர்த்டே வர காத்திருக்கனும்? அப்பா இன்னைக்கே வாங்கி தரேன்" என்றான் கிருஷ்ணா. தன் மகள் எதற்கும் ஏங்கி நிற்க கூடாது என்ற தவிப்பு அவனிடம்.
"அய்யோ வேணாம். அப்புறம் மீரா திட்டுவா?" மெல்லிய பயத்துடன் மறுத்தாள் சிறியவள்.
"ஏன்? என்கிட்ட இருந்து எதுவும் வாங்க கூடாது சொல்லி இருக்காளா?" என்று கண்களை சுருக்கி கேட்டவனிடன்,
"ம்ஹும்… அப்படியெல்லாம் எதுவும் இல்ல. தேவையில்லாம உங்களுக்கு செலவு வைக்க கூடாது சொல்லி இருக்கா" என்றாள்.
'என் பொண்ணுக்கு நான் பண்றது தேவை இல்லாததா? பிள்ளை மனசில என்னலாம் பதிய வைக்கிறா?' என்று மீரா மீது கோபம் தான் வந்தது அவனுக்கு.
"அதான் நீங்க பர்த்டேக்கு கிஃப்ட் பண்ணா எதுவும் சொல்ல மாட்டா" என்று குட்டி பக்கா பிளானோடு கேட்க,
"ஹ்ம்ம்" என்று பிள்ளைக்காக மட்டுமே இதழ் வளைய, பார்வை மொத்தமும் அனலாக சற்று தொலைவில் கல்பெஞ்சில் அமர்ந்து, டைரியில் குறிப்பெடுத்து கொண்டிருந்த அரக்கி மீது தான் பதிந்திருந்தது.
நிலாவிற்கு இவன் உயிர் கொடுத்த தந்தை என்றால் அவள் தான் கருவறை தாங்கி பிரசவித்த தாய், மீரா.
அவன் உயிரை சுமந்து, அவனுக்கு உயிர் கொடுத்தவர்களை அவனிடம் இருந்து பிரித்த அவன் அரக்கி, சிடு மூஞ்சி, லேடி ஹிட்லர் எல்லாம் அவள் தான் அவனுக்கு.
அவன் இருண்ட பக்கங்களுக்கு வழிகாட்டி, அவன் இலட்சியத்திற்கு வழி கொடுத்து, வாழ்க்கையை சிதைத்த சூர்ப்பனகை. அரக்க கூட்டத்தின் தலைவி. விட்டால் உலகில் உள்ள அத்தனை பட்ட பெயர்களையும் அவளுக்கு வைப்பான். அந்த அளவுக்கு கோபம் அவள் மீது.
ஆனால் எதுவும் செய்ய முடியாது தவித்துக் கொண்டிருக்கிறான்.
பார்வை அவள் மீது அரை கணம் தான் பதிந்தது. கிடைக்கும் சொற்ப நேரத்தில் அந்த விடியா மூஞ்சி மீராவை பார்த்து கொண்டிருக்க அவன் விரும்பவில்லை. மகளுடன் மட்டுமே நினைவுகளை சேகரிக்க விரும்பியவன், "நிலா குட்டி, அஞ்சு எப்படி இருக்கா?" என்று தன் அன்னையை பற்றி விசாரித்தபடி அவர்கள் உரையாடல் அங்கே தொடர,
இங்கே குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மீரா அருகே வந்து அமர்ந்தாள், நிலா வகுப்பில் பயிலும் நந்துவின் அம்மா சுபா. அந்த சிறுவனும் அங்கே தான் சறுக்கு மரம் விளையாடி கொண்டிருந்தான்.
"நிலா அம்மா" என்று அழைக்கவும், மீராவும் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
வலுக்கட்டாயமாக இதழை இழுத்து சிரித்து வைத்தவள், "நான் நந்துவோட அம்மா" என்று விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை கை காட்டா, மீரா விழிகளும் சிறுவன் மீது பதிந்து மீண்டது.
"நந்து எப்பவும் நிலா பத்தி தான் வீட்ல பேசிட்டே இருப்பான். ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்" என்றவள், தான் வந்த வேலையை மெதுவாக ஆரம்பித்தாள்.
"நீங்களும், நிலா அப்பாவும் ஒன்னா இல்லனு கேள்வி பட்டேன். இந்த காலத்துல எல்லாரும் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டு, அதை விட அவசர அவசரமா டிவோர்ஸும் பண்ணிகிறீங்க" என்று குரலில் மட்டும் வருத்தம் வழிந்தோட, அவரை தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
"பிள்ளைக்காகவாது சேர்ந்து வாழலாமே!" என்று அறிவுரை வழங்க அவர் தயாராகி, "டிவோரஸ் வாங்கிட்டீங்களா?" என்று கேட்க,
மீரா தலையோ மறுப்பாக இட வலமாக அசைந்தது.
"அப்போ இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கு. நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க" என்று பெரிய மகான் போல் ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்து விட்ட மிதப்பில் சுபா நெஞ்சை நிமிர்த்தி நேராக அமர,
"கல்யாணம் பண்ணா தானே டிவோர்ஸ் வாங்கணும்" என்ற மீரா பதிலில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அமர்ந்து இருந்தவள் இதயமோ ஒரு நிமிடம் அதிர்ந்து இயங்க, அப்படியே விழியை திருப்பி மீராவை பார்த்தாள்.
எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாது நேர்கொண்ட பார்வையாக சுபாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
"அப்போ நிலா?"
"என் குழந்தை."
"அவர்?" என்று கிருஷ்ணா புறம் விரல்கள் மட்டும் அசைய,
"நிலாவோட அப்பா" என்ற பதிலில் சகலமும் ஆடி போனது சுபாவுக்கு.
அவளே மகன் தன்னிடம் சொன்ன அரைகுறை செய்திகளை கோர்த்து, ஏதோ டிவோர்ஸ் கேஸ் போல, சிறிது நேரம் சுவாரஸ்யமாக அவள் வாழ்க்கையை அலசலாம் என்று எண்ணி பேச்சு கொடுத்திருக்க, மீராவோ இன்னும் சுவாரஸ்யமாக்கி அவள் தலையை பிய்த்துக் கொள்ள வைத்தாள் அல்லவா!
ஒரு நிமிடம் தலையை தாங்கியிருந்த சுபாவோ, "எனக்கு புரிஞ்சுருச்சு. ரெண்டு பேரும் காதலிச்சு இருக்கீங்க, முன்ன பின்ன அப்படி இப்படி இருந்ததுல நிலா உருவாகிட்டா அப்படி தானே" என்று கேட்க,
"காதலா?" என்று மீரா முகத்தை சுருக்கிய தினுசிலே புரிந்தது, காதல் என்ற வார்த்தை அவர்கள் வாழ்வுக்கு வேப்பங்காய் என்று.
“அப்போ அதுவும் இல்லையா?” என்று சுபா குழம்பிய முகத்துடன் கேட்க,
"குழந்தை பெத்துக்க, காதலிக்கனும், கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லையே" என்று திருப்பி கேட்டாள் மீரா.
"அப்போ நிலா எப்படி?" என்று அதிர்ந்து கேட்ட சுபாவிடம்,
"ஏன்? ஒரு குழந்தை பெத்த உங்களுக்கு தெரியாது, குழந்தை எப்படி வரும்னு" என்ற பதிலில் அதிர்ந்து வாயில் கை வைத்தவள், மீராவை விட்டு ஒரு அடி தள்ளி அமர, இதழ்களை கடக்காத ஏளன புன்னகை மீரா இதழ்களில்.
சலிப்பாக சுபாவை பார்த்தவள், "நிலா கெட்டிங் லேட்… கம்" என்று மகளை அழைக்க,
அவளோ அப்போது தான் தந்தையின் பயிற்சியில் கம்பிகள் மீது ஏற முயன்று கொண்டிருந்தாள்.
"அம்மா… இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம் பிளீஸ்" என்று பிள்ளை கெஞ்ச, பதிலேதும் இல்லை. கையை கட்டிக் கொண்டு ஒரே ஒரு பார்வை தான் தந்தை தோளில் தாவி அவளே இறங்கி ஓடி வந்தாள்.
'ராட்சஸி பிள்ளையை கூட பார்வையாலே மிரட்டி வைக்கிறா.' என்று அவளின் ஒவ்வொரு செயலுக்கும் அவள் மீது வீண் கோபம் கொண்டான் அவன்.
"பை ப்பா" என்று கிருஷ்ணாவுக்கு கை காட்டி விட்டு நிலா அன்னை கையை பிடித்துக் கொள்ள,
அவனோ "நிலா" என்று மகளை அருகே அழைத்தவன், காரில் இருந்து சாக்லேட் பாக்ஸ் ஒன்றை எடுத்து கொடுக்க, கொள்ளை இன்பம் பிள்ளை முகத்தில்.
"மொத்தமும் எனக்கா?" என்று ஆசையாக கேட்டவள் “ஆம்” என்று அவன் தலை அசையவும், "லவ் யூ சோ மச் ப்பா" என்று அவன் கன்னத்தில் இச்சு வைத்த பிள்ளை கன்னத்தில் அவனும் இதழ் பதிக்க, வெறுமையான முகத்துடன் தான் மீரா அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"கார்ல ஏறு, உன்ன வீட்ல விடுறேன்" என்று அழைத்தவனிடம், "வேணாம் மீராவ ஏன் தனியா விட்டுட்டு வந்தனு கேட்டு நெல்லையாண்டார் திட்டுவார்." என்று மறுத்தவள் மீண்டும் தந்தை கன்னத்தை எச்சிலாக்கி விட்டே அன்னையிடம் ஓடி வந்தாள்.
"இவளுக்கும் வேலை இல்லை, அவருக்கும் புத்தி இல்ல… இவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்கார்" என்று தன்னுடன் இல்லாது தன் எதிரிக்கு துணை நிற்கும் தந்தை மீது கோபம் தான் வந்தது கிருஷ்ணாவுக்கு.
"ம்மா… அப்பா கூட கார்ல போலாமா?" தந்தையிடம் மறுத்தாலும், ஆசையாக அன்னையிடம் அனுமதி கேட்டு சிறியவள் நிற்க,
"நீ கார்ல வா" என்ற மீராவோ ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்திருந்தாள்.
"வேணாம்" என்ற பிள்ளையும் முகத்தை சுருக்கி கொண்டே ஸ்கூட்டியில் முன்னால் வந்து ஏறி கொள்ள, மகள் தலை மறையும் வரை நின்று பார்த்தவனும், காரில் ஏறி ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த போனை ஆன் பண்ண, ஐம்பது அழைப்புகள் நிவாசினி என்ற பெயரில் வந்து விழுந்து இருந்தது.
பேரன்ஸ் டீச்சர் மீட்டிங்காக வந்திருந்தவன், இத்தனை நேரம் பிள்ளையுடன் இன்பமாக கழித்திருக்க, இப்போது தந்தை முகம் களைந்து, வியாபார வர்த்தகனாக இறுக்கமான முகத்துடன் தன் காரியத்தரசி நிவாசினிக்கு திருப்பி அழைத்தான். அதன் பிறகு இயல்பான சிரிப்பை அவன் இதழ்கள் மறந்து தான் போனது.
“அம்மா… என் பிரெண்ட்ஸ் காவியா, நந்து, சிவேஷ் அப்பா, அம்மாலாம் ஒரே வீட்ல தான் இருக்காங்க. கிருஷ்ணா மட்டும் ஏன் நம்ம கூட இல்ல. நாமளும் ஒன்னா ஒரே வீட்ல இருந்தா ஜாலியா இருக்கும்ல” என்று பிள்ளை ஏக்கமாக கேட்க, நிலாவிடம் தான் அதற்கு எந்த பதிலும் இல்லை.
“இன்னைக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி கொடுத்தாங்க?” என்று மகள் கேள்விக்கு தடை போட்டு வேறு கவனத்தை கொண்டு வர முயன்றாள்.
இருவேறு துருவங்கள் தான் இருவரும்…
இணை சேரும் நாளை எதிர் நோக்கி அவர்கள் குடும்பம் காத்திருக்க…
இணையா காதலர்கள் பெயரை கொண்ட இருவரின் கரங்களும் இணையுமா!
காதல் கொண்டு இரு மனம் இணையவில்லை.
மாங்கல்யம் சூடி மணமுடிக்கவில்லை.
அவன் உயிரை அவள் சுமக்க,
விருப்பமில்லா ஒரு பந்தம்.
இணையவும் இல்லை
விலகவும் வழி இல்லை.
சூப்பர்
சேர்ந்தும்
சேராத வானம் பூமி போல
சேராத காதல் இது
சேர்த்து பிடித்திருக்கு
சின்ன சிறிய நிலா.... 💐🤩