கள்வன் 2
திருடி வந்த ஆடம்பர சொகுசு காரின் பேனட்டில் அமர்ந்து.. "ஏலேய்!! ஜிகா.. மெகா.. நான் பெட்டு கட்டுனது போல காரை தூக்கிட்டு வந்துட்டேன். பாத்திங்கள?? எடுங்கடா உங்க பெட்டு துட்டை!!" என்று குத்துக்கால் போட்டு அமர்ந்து அந்த காரை ஒரு ஆட்டு ஆட்ட..
வெளியில் ஏதோ சத்தம் கூச்சல் குழப்பமாக இருக்கிறதே என்று எழுந்து திருதிருவென்று அமர்ந்திருந்த வாஹினி.. அந்த இடமே புதுசாக இருக்க.. "ஐயையோ!!! யார் காருல் ஏறி படுத்து தூங்கினோம்?? எந்த இடம் தெரியலையே!!" என்று யோசித்தவாறு இருந்தவள் காரின் ஆட்டத்தில் இங்கும் அங்கும் ஆட.. "எர்த் க்வாக் வந்திடிச்சா??" என்றவாறு அவசரமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
ஜிகாவும் மெகாவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஜித்துவிடம் தங்கள் பெட் பணத்தை அந்த காரின் பேனட் மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
சட்டென்று ஜிகா முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பை போல விழி விரிய..
'என்னடா ஜிகா முகம் இப்படி ஜொலிஜொலிக்குது??' என்று திரும்பிப் பார்த்த மெகா அங்கிருந்த வாஹினியை பார்த்தவனின் கண்கள் இன்னும் விரிந்தது.
ஜிகா வாஹினியின் அழகை பார்த்து கண்கள் விரித்தான் என்றால் மெகாவோ அவள் கையில் காதில் கழுத்தில் அணிந்திருந்த வைரங்களை பார்த்து கண்களை விரித்தான்.
"ஜித்து.. ஜித்து.. அங்க பாரேன்!!" என்று வெளியே வராத குரலில் இருவரும் அவனைக் கூப்பிட.. அவனோ மிக முக்கியமாக அவர்கள் கொடுத்த பெட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான் கண அக்கறையாக.. அதில் ஒரு பிட்டு கூட தவறிடக்கூடாது என்று!!
இருவரும் அவனின் இரு தோள்களையும் பிடித்து உலுக்கி "திரும்பி பாருடா!!" என்று கத்த..
"ஏண்டா.. நான் திரும்பிப் பார்க்கிற கேபில என் கையில இருக்குற ரூபா நோட்டுல ஒன்னு இரண்டு உருவுலாமுனு பாக்கறீங்களா?? பக்கிகளா!! அப்படி எல்லாம் என்கிட்டே நடக்காதுடியோவ்.. நான் ஜித்து டா!!" என்றவன் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டுவிட்டு மீண்டும் பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
"இவனையெல்லாம்!! டேய்.. காருதான திருடப் போன.. என்னடா பொண்ணு தூக்கிட்டு வந்திருக்க?" என்று ஜிகா கேட்க..
"அதுதான்.. அதுவும் அந்த பொண்ண பாத்தா சாதாரணமா தெரியலடா!!" என்று மெகாவும் கூற.. இருவரும் அவனை திருப்பி அங்கு நின்றிருந்த வாஹினியை காட்ட..
"நம்ம தொழிலுக்கும் பொண்ணுக்கும் என்னடா சம்பந்தம்? நாமதான் அந்த பக்கமே போறது இல்லையே!!" என்றவாறு திரும்பிப் பார்த்தவன் அங்கு நின்றிருந்த வாஹினியை கண்டவன் உதடுகள் தன் போல "பால் டப்பா!!" என்று முணுமுணுத்தது.
அவன் கூறிய "பால் டப்பா!!" என்ற வார்த்தையை ஜிகாவும் மெகாவும் காதில் வாங்கவில்லை. அவர்கள் வாஹினியை பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
தன் எதிரே நிற்கும் மூன்று ஆடவர்களை பார்த்தாள். ஒருத்தன் காடு போல மண்டி இருந்த தலை.. இரண்டு வாரத் தாடி சாயம் போன ஜீன்ஸ்.. கருப்பு நிற பனியன் அதற்கு மேலே பட்டன்கள் போடப்படாத சட்டை என்றிருந்தான்.
ஒருத்தன் மெகாபிட் என்ற பேருக்கு தகுந்தவாறு கொஞ்சம் மெகா சைஸில் உருண்டு திரண்டு நின்றிருந்தான். மற்றவன் உயரத்திற்கு ஏற்ற எடையோடு இருந்தாலும் இருவர் முகத்தில் அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது சரியான ஃபிராடுகள் என்று!!
முதலில் மூன்று ஆடவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டோமே என்று சிறு பயம் இருந்தாலும், ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் எந்த ஊர் என்று தெரியாமலும் அவர்கள் பேசியது தெலுங்கு அல்ல என்று புரிந்தது. ஆனால் தமிழா? மலையாளமா? என்று தெரியவில்லை!!
மொழி தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அது என்ன மொழி என்றே தெரியவில்லை என்றால்??
அவளுக்கு பரிச்சியம் தெலுங்கு ஆங்கிலம் அவள் படிக்கும் இடத்தில் கூடவே ஹிந்தியும்.
"யாருடா நீங்க??" எல்லாம் என்று அவள் சுந்தரத் தெலுங்கில் கேட்டு வைக்க..
"என்ன டா இது!! உதயா சேனலா?? ஜெமினி சேனலா??" என்று மெகா கேட்க..
"ஒரு வார்த்தையை வைத்து கண்டு பிடிக்க முடியாது டா!! இருடா!! அடுத்த வார்த்தை பேசட்டும் அதை வச்சு எப்படி கரெக்டா கண்டு பிடிக்கிறேனு மட்டும் பாரு!!" என்று அவனுக்கு ஜிகா பதில் கொடுக்க..
"ஏய்!! யார் நீ?? எப்படி இந்த காருக்குள் வந்த?" என்று அடுக்கடுக்காக கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டே அவளை நோக்கி சென்றான் ஜித்து!!
முதலில் அவன் கேட்பது அவளுக்கு புரியவில்லை. ஆனால் ஏதோ கோபமாக பேசுகிறான் என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த கார் அவள் வீட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் வீட்டுக் காரா இல்லை பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த ஏதாவது ஒரு முக்கியமான நபருடையதா அல்லது தம் உறவினர்களோடதா யாரோடது என்று தெரியவில்லை!! திருடி வந்து இருக்கிறான் என்பது மட்டும் புரிய..
"எவரு டா நுவ்வு? எமிட்டி?? ம்ம்ம்? நேனனவரு நாக்கு தெலுசா? செப்பு ரா??" (யாரு டா நீ? என்ன? நான் யாரு தெரியுமா??) என்று இவள் திரும்பவும் தெலுங்கிலேயே படம் ஓட்ட..
"யாகூஊ!!! நான் கண்டுபிடிச்சிட்டேன்.. நான் கண்டுபிடிச்சிட்டேன்!!" என்று ஜிகா கத்த.. திரும்பி அவனைப்பார்த்த ஜித்து "இந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமாடா? கண்டுபிடிச்சிட்டியா? முதல்ல எந்த இடம் சொல்லுடா இதை பேக் பண்ணி பார்சல் அனுப்பனும் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டே இருக்கு!!" என்று அவன் ஜிகாவை பார்த்து கேட்டான்.
"அந்த பொண்ணு யார்னு எனக்கு எப்படி தெரியும்? அது பேசியது தெலுங்குனு தான் கண்டுபிடிச்சேன்!" என்று ஜித்துவுக்கு பதிலளித்தவன்,
"டேய் மெகா அது ஜெமினி இல்ல உதயா தான்டா!!" என்று பக்கத்தில் இருந்தவனிடம் கூற வேகமாக அவர்கள் அருகில் சென்ற ஜித்து இருவர் தலையையும் பிடித்து ஒரே முட்டு முட்ட.. அவர்கள் தலையை சுற்றி கிளிகள் பறந்தன.
"ஏண்டா.. அறிவு கெட்டவனுங்களா!! அந்தகார நான் பாலோ பண்ணிட்டு ஆந்திரா பக்கம் போறேன்னு சொல்லிட்டு தானடா போனேன். அப்புறம் என்ன.. இதுக்கு.. நீங்க ரெண்டு பேரும் அது ஜெமினியா உதயாவானானு சண்டை போட்டுகினு இருக்கீங்க..
முதல்ல இந்த பீஸ கிளப்பனும் டா யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க??" என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.
அவர்கள் தங்கியிருப்பது சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் இருக்கும் ஒரு அரசுக்குச் சொந்தமான ஒரு பொறம்போக்கு இடத்தில்!!
அதிலும் ஆங்காங்கே வீடுகள் கட்டிக் கொண்டு இவர்களை போல ஆட்கள் தான் இருந்தார்கள். அங்கு எல்லா வகையான ஆட்களையும் பார்க்க முடியும். அதாம்பா.. மொல்லமாரி.. முடிச்செவிக்கி மாதிரி.. பிளேடு பக்கிரி.. ஜெயின் சங்கரு.. ஹேண்ட் பேக் ஹரிதா.. ஏடிஎம் கார்டு ஏகா.. ஸ்கூட்டர் கூல் மணி… சைக்கிள் சின்ன மணி!! என்று பலதரப்பட்ட திருட்டு கும்பல் கலந்து வாழும் இடம்!!
ஆனால் இந்த திருட்டு எல்லாம் வெளியிடத்தில் மட்டும்தான். அவர்களுக்குள் மற்றொரு பொருட்களை எடுப்பது மறைப்பது எல்லாம் கிடையாது. அதை பொருத்தவரைக்கும் நீதிமான்கள் தான் அவர்கள்!!
இவர்கள் மூவரும் அங்குள்ள ஒரு வீட்டில் தான் தங்கி இருக்க.. இப்படி செல்வச் செழிப்போடு ஒரு பெண்ணை கூட்டி வருவதை பார்த்தால்.. என்ன ஏது என்று கேள்வி வரத்தானே செய்யும் என்று தான் ஜித்துவின் கவலை.
அதுவுமின்றி ஹேண்ட்பேக் ஹரிதா தான் ஜித்துவை காதலிக்கும் ஏக போக காதலி.. ஒரு தலைக்காதலி எல்லாமே!! அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் கட்டிங் ப்ளேடு இல்லாமலேயே வாஹினியை ஒரு வழி செய்து விடுவாள்.
"டேய்.. மொதல்ல இவ கிட்ட பேசி.. இவ யாரு என்னென்னு கண்டுபிடிக்கிறேன்!" என்று தனக்குத் தெரிந்த பட்டர் இங்கிலீஷில் ஒன்று ரெண்டை அவளிடம் போட்டு தாக்கினான்.. "ஹூ யூ? வேர் யூ கம்?" என்று ஜித்து விசாரிக்க..
"பாத்தியா நம்ம தல என்னமா இங்கிலீஷில பேசுது" என்று மெகா மெர்சலாக..
"ஆமாண்டா.. அந்த பொண்ணு எப்படி மிரண்டுபோய் நிக்குது பாரு!!" என்று ஜிகா சிலாகிக்க..
"அட கஷ்டகாலமே!! இவனுங்களுக்கு இங்கிலீஷ் ஒழுங்கா தெரியாதா? இப்போ இவர்களிடம் என்ன சொல்லி நான் இங்கே இருந்து எப்படி கிளம்புவது?" என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் யாரோ வருவது மாதிரி தெரிய..
"டேய் ஜித்து.. முதலில் இந்த பொண்ண உள்ள கொண்டு போ. அங்குட்டு யாரோ வர மாதிரி இருக்கு" என்று ஜிகா சொல்ல..
அவள் கையை பிடித்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல ஜித்து முயல.. அவளோ பயந்து.. முரண்டு பிடித்து தரையில் அப்படியே அமர்ந்து கொண்டாள்.
"என்னடா இதோட ரோதனையா போச்சு!! யாரோ வர மாதிரி இருக்கு.. யாராவது பார்த்தா என்ன சொல்லுவானுங்க.. அய்யே எழுந்திரி!!" என்று அவளை பிடித்து தூக்க முயல அவளோ வருவேனா என்று அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.
"ஏய் ஜித்து வர்றது உன்னோட லவ்வர் தாண்டா!!" என்று ஜிகா செல்ல..
"வாயிலேயே இரண்டு மிதிப்பேன் நாயே.. அவளை என் லவ்வருனு சொன்னேனா.. ஊர் பூரா அவ தான் சொல்லிக்கிட்டு திரியுறானா?? நீயும் அதையே சொல்லுவியா?? பல்லை பேர்த்து விடுவேன்!! ஜாக்கிரதை!!" என்று ஜிகாவிடம் கூறியவன் இவளிடம் திரும்பி "ஏ பால் டப்பா ஒழுங்கா எழுந்து என் கூட வரல.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!!" என்று கோபத்தில் இவன் கர்ஜிக்க.. அதெல்லாம் எங்கே அவளுக்கு புரிய..
அவளோ அமர்ந்த இடத்தில் இன்னும் சட்டமாக அமர்ந்துகொண்டாள். ஐம்பதாயிரம் மதிப்புள்ள அவள் அணிந்திருந்த பார்ட்டி கவுன் மண்ணில் அனாசயமாக அழுக்கு ஆவது எல்லாம் கருத்தில் கொள்ளாமல்..
ஹரிதா தான் இவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை தெரிந்த ஜித்து.. அவளை இன்னும் நெருங்கி எழுப்ப முயன்றான். ஆனால் சிறு பிள்ளைகள் அடம் பிடித்து கீழே படுத்து உருளுமே.. அந்த மாதிரி அவள் ராது.. ராகு.. (வரமாட்டேன்!! வரமாட்டேன்!!) என்று தெலுங்கில் கத்தினாள் கை கால்களை உதறி..
"நீ சரிப்பட மாட்டா.. பால் டப்பா!!" என்று பல்லை நறநறவென்று கடித்தவன், அவளை அலேக்காக தன்னோடு அணைத்து பிடித்து எழுந்து அப்படியே குடுகுடுவென்று தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்.
ஜிகாவும் மெகாவும் ஒரு நிமிடம் ஜெர்க்காகிதான் போனார்கள் இவனின் செயலில்!!
ஜித்து அப்படி எல்லாம் பெண்களை தொட்டு பேசுபவனோ வழிபவனோ கிடையாது.
அவனுக்கு ஆதாயம் ஆக வேண்டுமென்றால் காலையும் பிடிப்பான். நினைத்த காரியம் நடந்து விட்டது என்றால் காலை வாரிவிடவும் தயங்க மாட்டான் தான்!!
"ஆனாலும் கொஞ்சம் கிளுகிளுப்பாக தாண்டா இருக்கு.. இதையெல்லாம் பார்க்கும்போது!!" என்று மெகாவின் தோளில் பரோட்டாவை பிசைந்தான் சற்றே வெட்கப்பட்ட குரலில் ஜிகா…
"டேய்!! என்னடா நடக்குது.. ஜித்துவா இது!!" என்று அதிர்ச்சி விலகாமல் மெகா திரும்பி இவனைப் பார்க்க..
"அவனே அந்த பொண்ண கூட்டிட்டு வந்தான்.. கேட்டா தெரியலைன்னு சொன்னான்.. இப்ப அவனே உள்ள தூக்கிட்டு போய் கதவை சாத்திட்டான். இப்ப யாராவது கேட்டால் நாம என்னடா சொல்றது?" என்று ஜிகா கேட்க..
"ஆமா அந்த ஹரிதா புள்ள வேற நம்மள பாத்து தான் இங்க வந்துட்டு இருக்கு.. வா எஸ் ஆகிடலாம்!!" என்றவர்கள் அடுத்த நொடி வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று மறைந்தனர்.
ஹரிதா எட்டி இருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெண் இவர்களோடு நின்றிருந்தது போல தெரிந்தது. இன்னொரு உருவம் ஜித்து என்பதில் அவளுக்கு எவ்வித ஐயமுமில்லை. நூறு அடி தூரத்தில் இருந்தால் கூட அவனை கரெக்டாக கண்டுபிடித்து விடுவாள். "யார் அந்த பொண்ணு? எதுக்கு அவளை தூக்கிட்டு உள்ள போனான்?" என்று தெரியாமல் இவர்களை கேட்கலாம் என்று வந்தால் இவர்களும் ஓடிவிட்டார்கள் என்று குழப்பத்தோடு அந்தக் காரையும் ஜித்துவின் வீட்டையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிதா.
ஜித்து உள்ளே அழைத்து வந்து கதவை சாற்றிய மறுநிமிடமே வாஹினியின் முகம் பயத்தில் வெளுத்து விட்டது. 'ஐயையோ இன்னைக்கு என்னை இவன் படையல் போட்டுடுவான் போலயே??' என்று கை கால்கள் உதறல் எடுக்க.. அவனை உதைத்து அடித்து கடித்து என்று தனக்கு தெரிந்த எல்லா வித்தைகளையும் அவன் மேனியில் இவள் பரிசோதிக்க..
பாவம் எவ்வளவு தான் தாங்குவான்!! அவனும் வலிக்காத மாதிரியே எவ்வளவு தூரம் தான் நடிப்பது?? என்று நினைத்தவன் சட்டென்று அந்த வீட்டில் இருக்கும் ஒற்றை அறையில் இருந்த அவனது கட்டிலில் அவளை தூக்கி போட்டு கதவடைக்க..
அவளுக்கோ இதயம் சதாப்தி ரயிலை விட பல மடங்கு வேகத்தில் பயணித்தது. ஏதோ உருவமில்லா உருண்டை தொண்டையை வந்து கவ்விக்கொள்ள கண்களோ சாசர் போல விரிந்து இருக்க.. கைகளை தன் மார்புக்கு மத்தியில் பெருக்கல் குறி போட்டவள்,
"டேய்!! கிட்ட வராத டா.. என்கிட்ட வராத.. வந்தே மவனே சாவடிச்சிடுவேன்" என்று தெலுங்கில் மாட்டாலாடி கொண்டே அந்த அறையில் தன் கையில் அகப்பட்டது எல்லாம் அவன் மேல் தூக்கி தூக்கி அடிக்க.. அவனோ அந்த சின்ன அறையில் அவளிடம் தப்பித்து "ஏ பால் டப்பா.. நிறுத்துடி ராட்சசி!!" என்று அலறினான்.
அடுத்து அவள் கையில் எடுத்ததோ ஒரு கத்தி..
"அய்யோ.. கொன்னுடுவா போலையே கிராதகி!! கீழ போடுடி!! கீழ போடு" என்றவன் அவளிடம் இருந்து விலகி போக..
அவளோ கத்தியை காட்டி காட்டி மிரட்டி கொண்டிருந்தாள். சட்டென்று அவள் புறம் சென்றவன் அவள் கைகளை இறுகப் பற்றி நூலளவு இடைவெளியில்.. அவள் கையில் இருந்த கத்தியை பிடுங்க முயன்றான்.
அப்போதும் அவள், அவன் கைக்கு கொடுக்காமல் கத்தியை பின் பக்கம் மறைத்து வைத்தாள். அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றவன் முயற்சி தோல்வியே தான்.
பின்னால் மறைத்த கையை அவள் ஓரிடத்தில் வைக்காமல் அங்குமிங்குமாக நகர்த்திக் கொண்டே இருக்க அவன் கையும் அதனுடன் சேர்ந்து அசைந்து கொண்டே இருந்தது. நூல் அளவு இடைவெளி போய்.. மூச்சும் மூச்சும்
ஒன்றோடு ஒன்று கலக்கும் நெருக்கம்!!
அந்நிலை அவளுக்கு மூச்சடைக்க..
சட்டென்று சுதாரித்தவள் அவனை தள்ளி திரும்பி நின்று கொண்டாள்.
அவனோ எப்பாடுபட்டாவது கத்தியை பிடுங்கி விடும் நோக்கில்.. அவளை பின்னாலிருந்து அணைத்திருந்த நிலையில்.. அவனின் திண்ணிய மார்போ வஞ்சியவளின் முதுகோடு ஒட்டி நிற்க..
அவன் முகம் அவள் தோள்களிலும்.. கூந்தலிலும் மோதி.. உரசி.. அசைய.. தாடையை அவளது தோள்களில் அழுத்தமாக பதித்தவனின் மூச்சு அவளது காதுகளில் சூடாய் இறங்க..
அந்த நேரத்தில்தான் அவனின் கைகள் கத்திய பிடுங்க முயன்று.. முயன்று.. அந்த உரசல்.. தீண்டல்.. மெல்ல மெல்ல அழுத்தமாக மாறி..
கத்தியை விடுத்து அவளின் அங்கத்தை பிடித்து விட..
மின்னல் தாக்கியது போல கைகள் பளிச்சென பின் வாங்கியது ஜித்துவுக்கு!!
வாஹினியோ ஆடிப் போனாள். அவளின் சப்த நாடியும் ஒடுங்கிப் போக.. அப்படியே மடங்கி அமர்ந்து அழதாள்.
இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை அனாவசியமாக பல கார்களை அதுவும் பல பிரபலங்களிடமிருந்து தூக்கிவந்த ஜித்தனுக்கு.
குலுங்கி அழும் அவளை வெறித்தவாறு நின்றிருந்தான் ஜித்து!!
நேற்று இரவு வாஹினியின் அரண்மனையில்..
அண்ணன் மகள் தான் பார்த்த நாக பிரசாத்தை திருமணம் செய்ய எப்படியும் ஒத்துக் கொள்வாள் என்று நம்பிக்கையோடு நின்றிருந்தார் சோமையா..
அப்போதுதான் விஷயம் நீலிமா காதுக்கு சென்றடைந்தது. நாக பிரசாத்தோடுது பேசிக் கொண்டிருக்கிறாள் வாஹினி அதுவும் தனியாக என்று!! அவ்வளவுதான் தம்பியை பிடித்து பேயாட்டம் ஆடிவிட்டார்.
"என் மகன் இருக்கும் போது எப்படி நீ வேற ஒரு பையனை இங்க கூட்டிட்டு வந்து சம்மந்தம் பேசலாம்?? என் மகனுக்கு இல்லாத உரிமை அடுத்தவனுக்கு எப்படி வரும்?? அப்பா இல்லாத அவளை அப்பாவுக்காக தாங்குவான் என் மகன்!! அடுத்தவன் அப்படி செய்வானா?" என்று வத்ஸவ்-ஐ முன்னால் நிறுத்தி நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே அவர் செல்ல..
சோமையாவும் திரும்பி கொடுக்க ஆரம்பித்தார். "நான் பார்த்த மாப்பிள்ளை யார் தெரியுமா? படா பிசினஸ்மேன்!! ஆந்திரா மட்டும் கிடையாது சவுத் இந்தியா ஃபுல்லா அவருடைய தொழில் பரவி விரவிக் கிடக்குது. ஆனால் உன் மகன் என்ன பண்றான்? அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச தொழில்தான் இன்னமும் பாத்துட்டு இருக்கான். சொந்தமாக ஏதாவது செய்கிறானா? இந்த முப்பது வயசுக்குள்ள அவர் எவ்வளவு சாதிச்சுயிருக்கார் தெரியுமா? அப்படிப்பட்டவர் மாப்பிள்ளைய வந்தால்தான் இந்த அரண்மனையையும் என் அண்ணன் மகளையும் கட்டிக் காப்பாற்ற முடியும்!!" என்று அவரும் நாக பிரசாத்துக்கு ஃப்ரீயாக மார்க்கெட்டிங் செய்ய..
அக்கா தம்பியின் வாக்குவாதம் முடிவிலியாய் சென்றுகொண்டிருந்தது. அதை பார்த்த அவந்திகாக்கு பெரும் தலைவலி மட்டுமல்ல மனதிலும் அவ்வளவு வலி!!
கொண்டான் துணையிருந்தால் கூரை ஏறி கூறலாம்!! ஆனால் கொண்டானே இல்லை என்றால்?? இப்படி கண்டவர்களை நம்பி என்ன செய்ய முடியும்?? என்று தன் போல எண்ணிக் கொண்டிருந்தவர் இந்த அழுத்தம் தாங்காமல் சட்டென்று மயங்கி விழ..
உடனே வதின.. வதின.. என்று இருவரும் மாற்றி மாற்றி அவரை தட்டி எழுப்ப முயல.. அவந்திகா கண்விழித்தப்பாடில்லை.
"எல்லாம் உன்னால தாண்டா!!" என்று மீண்டும் நீலிமா தம்பி வசைபாட "உன்னால தான்!!" என்று அவர் அக்காவை வசைபாட.. பார்த்திருந்த நாக பிரசாத் "கொஞ்ச நேரம் சும்மா இருங்க!!" என்று இருவரையும் அதட்டிவிட்டு சட்டென்று காரை வர சொல்லி அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தான்.
இந்த களேபரத்தில் யாரும் சிறிது நேரம் வாஹினியை தேடவே இல்லை..
மருத்துவமனையிலும் அவந்திகாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீலிமா சோமையா அவரது மனைவி அனுமாலி வத்ஸவ் எல்லாம் நின்றிருக்க.. கூடவே நாகப் பிரசாத்தும் மருத்துவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
அதுவும் அவர்களின் ஆஸ்தான மருத்துவர்!! அவர் பேச்சுவாக்கில் "அவருடைய பழைய மெடிசின்ஸ் பிரஸ்கிரிப்ஷன்.. மெடிக்தல் ஹிஸ்டரி எல்லாம் வாஹினி மேடமுக்கு தெரியுமே!!" என்று அவர் கூறியவுடன் நாக பிரசாத் வாஹினியை தேட.. அவள் அங்கு இல்லை என்பது உரைத்தது.
அடுத்த நிமிடம் வாஹினியின் போனுக்கு சோமையா விட்டு கால் பண்ண சொன்னேன். அதுவும் அடித்து அடித்து ஓய்ந்து போய் இருந்தது அவளது அறையில்…
தன் மகளுக்கு அவர் அழைக்க பதட்டத்தில் அவளும் 'பெத்தம்மாவுக்கு எப்படி இருக்கு?' என்று அவள் கேட்கும் முன் "வாஹகனி எங்கே??" என்று இவர் கேட்க. அவளோ "அக்கா.. அப்போ உங்க கூட வரலையா??" என்று அவருக்கு குறையாத அதிர்ச்சியில் கத்தினாள்!!
அடுத்த இரண்டு மணி நேரம் அரண்மனையை சல்லடை போட்டு தேடியும் காணவில்லை.
அப்போது தான் அங்கு இருந்த சோமையாவின் நண்பர் ஒருவரின் காரும் காணாமல் போயிருந்தது தெரிய வர..
ஹிரண்மயா வாஹினி கடத்தப்பட்டாள் என்று அரண்மனை முழுவதும் பரவியது!
