12
கீசாவுக்கு தன் ஆசை அன்பு நீலு குட்டியை காணாமல் மனம் வருந்தி கண்ணீர் எல்லாம் வெந்நீராய் வர.. தன்னிலை மறந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த மோகினிக்கும் கீசாவின் கண்ணீர் வருத்தத்தைக் கொடுத்தது.
அவர்கள் பேசியதிலிருந்து ஸ்ரீராமன் நீலாம்பரி வீட்டை விட்டு அனுப்பி விட்டான் என்று தெரிந்ததும் இன்னும் வருத்தும் மேலாங்கியது கீசாவிற்கு.
மெதுவாக கீசாவின் தோள்களை தனது குட்டி கையை வைக்க திரும்பி பார்த்த கீசா "நான் தப்பு பண்ணிட்டேன்!! பெரிய தப்பு பண்ணிட்டேன்!!" என்று அழுதது..
தன் ஆசைக் காதலன் மனம் வருந்தி பேசுவதை பொறுக்காத மோகினி பொங்கி எழுந்து "நீ என்ன தப்பு பண்ணுனா? நீ ஒரு தப்பும் பண்ணல!! எல்லா தப்பும் பண்ணது அந்த ஸ்ரீராம் தான்!! பாரு அவன் குடும்பமே அவனை தள்ளி வைத்து இருக்கு. அதுல இருந்து தெரியலையா? முதல்ல அவனை சும்மா விடக்கூடாது. நான் இப்பவே போயி அவனை ஒரு வழியாய் ஆகிட்டு வரேன்" என்று கிளம்ப..
மோகினியின் கைப்பற்றி தடுத்தது கீசா. "இல்லை அவன் மீது என்ன தப்பு அவனை ஆட்டி வைத்தது எல்லாம் நான்!! நீலுவை ஆட்டி வைத்தது நீ!! பின்ன அவன குத்தம் சொல்லி புண்ணியம் இல்லை" என்ற மன வருத்தத்துடன் பேச, க்சாவின் அருகிலேயே அமர்ந்த மோகினி.. "அவன்தான் பிடிக்காமல் இருந்தானே!! பின்னையே நீ ஏன் அவனை இந்த ஆட்டு ஆட்டி வைத்து நீலாம்பரிய அவனோடு சேர்த்து வச்ச?"
"வேற என்ன? எல்லாம் முன்ஜென்ம காதல்தான்!!" என்றது கீசா..
"என்னது முன்ஜென்ம காதலா? யாருக்கு யாரோட?" என்று மோகினி பதற..
"ஸ்ரீராமுக்கு நீலாம்பரியின் மீது!! முன் ஜென்மத்தில் இளம் வயதிலேயே தன் குருவின் ஆசைப்படி சந்நியாசம் வாங்க சென்ற ஸ்ரீராமன், இடையின பெண்ணான நீலாம்பரி மீது கொண்ட ஆசையினால் குரு பேச்சை மறந்து அவளையே சுத்தி வந்து காதல் செய்ய.. அவனின் காதலுக்கு ஏற்ப நீலாம்பரியும் அவன் மீது காதல் கொள்ள.. தங்களின் கடமைகளை எல்லாம் மறந்து இருவரும் காதலில் இன்புற்றிருக்க.. இதை அறிந்த அவனது குருநாதர் சாபம் கொடுத்தார்!! எந்த காதலால் கடமைகளை மறந்தீர்களோ? அடுத்த பிறவியில் அந்தக் காதல் இல்லாமல் கடமையில் கட்டுண்டு திருமணமாகியும் சந்தோஷம் இல்லாமல் வாழ்வீர்கள்' என்று!!
"ஐயையோ!!" என்று பதறியது மோகினி.
"நான் கட்டுப்பட்டிருந்த குடும்பத்தின் பெண்ணாக நீலாம்பரி பிறந்தாள். அவளின் முன் ஜென்ம கதை எனக்கு தெரியுமாதலால் கொடுத்த வாக்கிற்காக ஸ்ரீராமனோடு இருவருக்கும் காதல் மலர வைக்க நான் பெரும்பாடு பட்டேன். ஆனால் என் முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆயிடுச்சு" என்று மோகினியிடம் வருத்தமாக கூறியது.
"நெஜமா நீ கொடுத்த வாக்குக்காக தான் நீலாம்பரிக்கு உதவி செய்தியா? எங்கே என் கண்ணை பார்த்து உண்மையை சொல்லு?" என்று மோகினி கேட்க..
வெண்ணை திருடிய கண்ணனாய் திருதிருவென முழித்தது கீசா. வெறும் வாக்குக்காக மட்டும் அது செய்யவில்லையே!!
நீலாம்பரியை பார்க்க பார்க்க அவள் மீது ஏற்பட்ட அன்பு நேசம்.. யாரும் ஆதரவுக்கு இல்லையென்றாலும் தனித்து செயல்படும் அவள் செயல்களின் மீது அலாதி பிரியம்.. குறி சொல்கிறேன் என்கிற போர்வையில் அவள் செய்யும் ஜாலகங்களை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு வரும் கீசாவிற்கு.. இதையெல்லாம் தாண்டி கீசாவின் மனதிற்கு பிடித்த.. நெருக்கமான பெண்ணவள்!!
பின்பு அதை தயங்காமல் ஒத்துக் கொண்டது மோகினியிடம். பெண்ணிற்கே தன்னவன் வேறு ஒரு பெண் மீது அன்பும் நேசமும் கொண்டால் பேயாய் மாறுவாள்!! குட்டிசாத்தான் ஆன மோகினி மட்டும் விடுமா என்ன?? உக்கிரமாக மாறி கீசாவை முறைக்க.. "இங்கே பாரு மோஹி குட்டி!! உன் மேலே உள்ளது காதல். ஆனால் நீலுக்குட்டி மேலே உள்ளது பிரியம்.. கண்டதையும் போட்டு குழப்பிக்காத சரியா? என் வாழ்க்கை உன்னோடு தான்!!" என்று ஏதேதோ டயலாக்கை பேசி ஒருவழியாக மோகினியை மலை இறக்கியது.
"இப்போது என்ன செய்யலாம்?" என்று மோகினி கேட்க..
"என் நீலுக் குட்டியை வீட்டை விட்டு விரட்டிய அந்த ஸ்ரீராமன் சும்மா விடப்போவதில்லை?" என்று வீறு கொண்டு எழ..
அவனுக்கு பக்கபலமாக மோகினியின் பல ஆயுதங்களை கையில் ஏந்திக்கொண்டு "இது போதுமா? இன்னும் வேணுமா?" என்று லுக்கு விட..
"நான் என்ன அவனை சம்ஹாரமா பண்ண போறேன்? அவன் சம்சாரத்தோட சேர்த்து வைக்க போறேன்!! முதல்ல இந்த ஆயுதங்கள் எல்லாம் தூக்கி போட்டு" என்றது கீசா.
அசட்டு சிரிப்போடு தன் ஆயுதங்களை மறைய வைத்த மோகினி கீசாவை பார்க்க..
"அவனுக்கு இந்த ஆயுதம் எல்லாம் கூடாது இதுக்கும் மேல!!" என்று கண்ணடிக்க அன்றிரவு கீசா மோகினி ஸ்ரீராமன் அறையில்!!
இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு வரவே ஸ்ரீராமுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. பெரும்பாலான நேரம் தனது தென்னந் தோப்பில் உள்ள மர வீட்டில் தூங்குபவன் அவ்வப்போது வீட்டுப்பக்கம் வருவான். முன்புபோல சாமி பக்தி அறவே இல்லை. எங்கே இவன் திரும்பவும் காவிக் கட்டிக்கொண்டால், நீலாவோடு இவன் அடித்து சேட்டைகளை சொல்லி இப்பொழுது காவி கட்டி திரிகிறான் என்று கேலி செய்வார்களோ என்று எண்ணி சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டான்.
அவ்வப்போது இரவில் அவனையுமறியாமல் நீலாம்பரியோடு சுகித்த சில நினைவுகள் சுகமாய் கனவாய் வரும். அதை கண்டுகொள்ளாமல் "மாயக்காரி!! வசியக்காரி!! என்னமோ எனக்கு வசியம் செய்து என்னைய இப்படி மாத்தி செய்ய வைச்சிட்டா" என்று மீண்டும் அவளையே திட்டு விட்டு கவுந்து படுத்து தூங்குவான்.
இன்றும் அதுபோல அவன் தூங்கிக் கொண்டிருக்க மெல்லிய நினைவலைகளாய் அந்த அறை முழுக்க அவர்களின் தோற்றங்கள் காட்சிப்பிழை தோன்றித் தோன்றி மறைந்தது.
கப்போர்ட்டின் அருகே அவள் பின்னாலிருந்து அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்து இவன் கொஞ்சுவதாய்..
குளித்து முடித்து ஒற்றைத் துண்டோடு வருபவன் அவளை அணைத்து இறுக்கி தலையிலுள்ள நீரை அவள் மீது சிலுப்பி குறும்பு செய்வதாய்..
திடீரென்று அவனுக்கு அருகில் அவனும் அவளும் கட்டி புரள்வதாய்..
தாபம் கொண்டு மோகம் நுழைந்து அவளுடன் ஒன்றுடன் ஒன்று கலந்து இன்பம் புரிவதாய்..
அவளை சுற்றி சுற்றி இவ்வாறு அவளும் அவனும் நினைவுகளில் கூடலும் மோகமுமாக இருப்பதை, கீசாவும் மோகினியும் தங்கள் லீலைகளை அவனிடம் காட்ட ஆஞ்சநேய பக்தன் அரைக்கிறுக்காய் ஆனான்.
"ஐயோ முடியலையே.. காசிக்குப் போனாலும் பாவம் தொலையாது மாதிரி என்னைய விட்டு அவ போனாலும் அவ நினைவு எல்லாத்தையும் மொத்தமா இங்கே போட்டுட்டு போயிட்டாளே!! பாவி நிம்மதியா தூங்க கூட விட மாட்டேங்கிறாளே!!" என்று புலம்பித் தவித்தான்.
அந்த சுக எண்ண அலைகளில் சிக்கி தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் தான் வரக்காணோம் அவனுக்கு!!
அது எப்படி அவனை தூங்க விடுவானா என்ன? கீசா!!
அடுத்த நாள் காலை அதிகாலையிலேயே அவன் தோப்புக்கு சென்று விட மகனின் இந்த தொழில் பக்தியை எண்ணி சங்கரபாண்டியன் மெச்சிக்கொண்டார்.
"அம்மணி.. பார்த்தியா என்ற புள்ளைய? தொழில எப்படிப் பார்க்கிறான் பாரு?" என்று அவர் வியந்து பேச, அவருக்கு டீ கொண்டுவந்து கொடுத்த நாச்சிக்கு அந்த சூடான டீயை அவர் தலையில் கொட்டி விடலாமா என்று ஆத்திரம் பொங்கியது.
"உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்காங்க மாமா? இந்த வயசுலயும் நண்டு வாங்கிக் கொடுத்து ஆட்டம் போடுற உங்களுக்கு.. என்ற புள்ளையோட தவிப்பு புரியலையா? அதுதான் வெரசா போறானுங்க மாமா!! என்னதான் மருமக மேல அவனுக்கு கோவம் இருந்தாலும் அவனுக்கும் இளவயசு தானுங்களே துணையை தேடும் தானுங்களே மாமா?" என்று அவர் கூற..
"நாம வேணா அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி பாப்போமா நாச்சி?" என்றார் சங்கரபாண்டி..
கையில் வைத்திருந்த காபியை நிஜமாகவே டங்கு என்று கீழே போட்டவர் "ஏற்கனவே ஒரு பொண்ணோட பாவத்தை வாங்கி கட்டியாச்சு? அடுத்து இன்னொரு பொண்ணா? அப்படி மட்டும் ஏதாவது செய்யுங்க.." என்று விட்டு அவர் சென்று விட்டார்.
ஒட்டு மொத்த குடும்பமுமே நீலாம்பரி என்ற பெண்ணை பிரிந்து ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தது. அவள் திரும்பி வந்து மகனோடு சேரும் வாய்ப்பு இல்லை என்று பெருமூச்சு விட்டவாறு சங்கரபாண்டியன் தனது அரசியலை பார்க்க சென்று விட்டார்.
அன்று இரவு ஸ்ரீ ராமன் "வீட்டுக்கு போனா தானே.. அவளோடு இருந்த அந்த ரூமில் படுத்தால் தானே.. அவளுடைய நினைவலைகள் என்னைய வந்து தாக்கும்?
இன்னைக்கு நைட்டு நான் தோப்பு மர வீட்டிலேயே தங்கிறேன்.. எப்படி அவ நினைவு வருது நானும் பார்க்கிறேன்?" என்று அவன் எண்ண, அவனை பார்த்து எள்ளி நகையாடியது கீசா.
தென்னை மரங்கள் சூழ்ந்த அந்த மர வீட்டில் சிலு சிலுவென்று காற்று அடிக்க.. போர்வைக்குள் சுகமாக சுருண்டு படுத்து குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் உள்ளே திடீரென்று வெம்மை புகுந்தது. எல்லாம் கீசாவின் மாயம் தான்!!
வீட்டிலாவது வெறும் நினைவலைகள் மட்டுமே வர.. இங்கேயோ இன்னும் கூடலின் போது அவளின் சினுங்கும் குரலும்.. இவனின் முத்த சத்தங்களும் தெள்ளத்தெளிவாக அவனின் காதில் விழுந்து அவனுக்கு விரகதாபத்தை ஏற்றியது.
இல்லையில்லை அவள் மீது எனக்கு எந்தவித உணர்வுமே இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் சிறு பொறி பற்றிக்கொண்டது என்னவோ உண்மை!!
தினம் தினம் இரவில் ஸ்ரீராமனை நீலாம்பரியின் உணர்வுகளோடு கலந்து தவிக்க விடுவது கீசாவின் வேலையாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கண்களை மூடி தன் என்ன அலைகளோடு நீலாம்பரி கலக்கச் செய்ய அது என்னமோ தோல்வியில்தான் முடிந்தது.
இவ்வாறு இரண்டு ஆண்டுகள் போய்விட..
அன்று சிங்கப்பூரில் நடைபெறும் இந்திய ஏற்றுமதி உரிமையாளர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆயுதமானான் ஸ்ரீராமன்!!
அவனுக்குத் தேவையானதை எடுத்து வைத்தாலும் "ஊரு ஊரா சுத்தி சம்பாதிச்சு என்ன புண்ணியம்? அசந்து மசந்து வரும்போது ஆதரவுக்கு பொண்டாட்டி இருக்காளா? இல்ல கொஞ்சறதுக்கு புள்ளைங்க தான் இருக்கா? என்று குத்த தவறவில்லை நாச்சி!!
"நாச்சி!!" என்று சங்கரபாண்டியன் அதட்ட..
"மாமா.." என்று இவர் முறைக்க..
முன்னெல்லாம் நாச்சி என்று அழைத்தால் மாமா என்று வெட்கம் மேவிட சிணுங்கி அழைக்கும் தன் செல்ல பெண்டாட்டி இன்று சீறும் வேங்கையாக முறைப்பதை பார்த்து அமைதியாகிவிட்டார் நாட்டாமை!!
இப்போதெல்லாம் நாட்டாமை வெளியில் மட்டுமே புலி!!.
சிங்கப்பூர் செல்வது ஸ்ரீராமன் மட்டுமல்ல!!
நல்லா'ஸ் குரூப்பைச் சேர்ந்த நீலாம்பரியும் நல்ல மருதுவும் தான். தந்தையின் தொழிலை கையில் எடுத்து தன் புத்தி கூர்மையால் அதை விரிவுபடுத்தியிருந்தான் ஸ்ரீராமன் என்றால், தங்களின் வீட்டை விற்று அதை முதலாகப் போட்டு தங்கள் உழைப்பின் மூலம் உயர்ந்திருந்தது அக்குடும்பம்.
நல்லா'ஸ் சிறு தானிய வகைகளும் மசாலா வகைகளும் இப்போதெல்லாம் நன்கு பிரபலம். இருவருடைய தொழிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை ஆதலால் ஸ்ரீராமனுக்கு இதன் உரிமையாளர் நீலாம்பரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே இல்லை!!
ஏனென்றால் அவனை பொறுத்தவரையில் நீலாம்பரி வசியக்காரி.. மாயக்காரி.. மைக்காரி.. இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றாலும் அவளது அந்த தொழிலை தான் பார்த்திருப்பாள் என்று திடமாக நம்பினான்.
ஆனால் நம் மிடுக்கு மேனகை நீலாம்பரி அவனின் எண்ணத்தை பொய்யாக்கி தொழிலை கையில் எடுத்து அதில் முன்னேறி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறாள். நீலவேணிக்கு இவர்களுக்கு சிறுதானியம் வழங்கும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த பையனையே திருமணம் செய்து வைக்க.. இப்பொழுது 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள் நீலவேணி!!
ஆனால் அக்காவின் வாழ்க்கையை நினைத்து மருதுவும் வேணியும் தங்கள் மனதிற்குள் வருந்தாத நாளே கிடையாது.
பரஞ்சோதி இப்போதெல்லாம் தனது குடிப்பழக்கத்தை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றிக்கொள்ள.. தந்தையின் இந்த மாறுதலில் மகிழ்ந்தவர்கள் அவருக்கான நாளை கொடுக்கவும் தவறவில்லை..
மருது தனது இளங்கலை முடித்து முற்று முதலாக தொழிலிலேயே இறங்கி இருந்தான். நெடுநெடுவென ஒல்லியான உருவம் மாறி முறுக்கிய தேகத்தோடு ஆண்மகனாக உலா வந்து கொண்டிருந்தான்.
தங்கைக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி.. அதற்குமேல் தந்தையை கட்டுப்பாட்டோடு இருக்க சொல்லி.. நீலவேணியின் கணவன் முருகனை அவர்கள் இல்லாத நாளில் கம்பெனியை பார்த்துக்க சொல்லிவிட்டு நீலாம்பரியும் மருதுவும், ஸ்ரீராமன் சிங்கப்பூர் சென்று அடுத்த நாள் இவர்கள் வந்து இறங்கினர்.
பிரம்மாண்டமான அந்த ஹாலில் இந்தியாவிலிருந்து பலர் சிறு தொழில் தொழில் செய்து ஏற்றுமதி செய்து வரும் பல வகைப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் அல்லது நிறுவனத்தின் சார்பாக வந்தவர்கள் என்று பெரும் கூட்டமே இருந்தது. மூன்று நாள் கலந்துரையாடல்.. அந்த ஹால் முழுக்க வந்திருந்தவர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆங்காங்கே மற்றவர்கள் கண் பார்வைக்கு வைத்திருந்தனர்.
ஒவ்வொன்றாக பார்த்து வந்துகொண்டிருந்தது ஸ்ரீராம் நல்லா'ஸ் மசாலா அருகில் நின்றிருந்த மருதுவை யாரோ என்று நினைத்து சிரித்த முகமாகவே கடந்து விட்டான். அவனுக்கு அடையாளம் தெரியவில்லை ஆனால் மருதுவுக்கு தெரியும் தானே அவனை!!
'இங்கு நாம் நின்றதற்கு பதிலாக அக்காவை நிறுத்தி இருந்திருக்கலாம். அப்போது அவரின் பார்வை போகும் போக்கை பார்த்து ரசித்து இருக்கணும்' என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அக்காவிடம் சொல்லலாமா என்று யோசித்து பின் வேண்டாம் என்று விட்டு விட்டான்.
முதல் நாள் கூட்டம் முடிந்து தன் அறைக்கு வர அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்தது ஃபேனில் அமர்ந்தபடி கீசாவும் மோகினியும்.
சிங்கப்பூர் வந்தாலும் அவனை விடுவதில்லை!! அவனுக்கு தானே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் எடுக்கவேண்டும்.. இவர்கள் இருவரும் அதே ப்ளைட்டில் மேலே அமர்ந்தபடி உல்லாசமாகவே பயணம் செய்து வந்தனர்.
இந்த இரண்டு வருடமாக அவனை ஒரு வழியாக்கி வச்சு செய்திருந்தது கீசா.. முன்னல்லாம் அவளது நினைவுகளை தவிர்த்து வந்தவன், இப்போது அதனுள் ஒரு சுகத்தை கண்டுகொண்டான். கீசா நீலாம்பரியின் நினைவுகளை பரப்பிவிடுதோ இல்லையோ அவனே தன் கண்களை மூடி நீலாம்பரியை நினைத்துக்கொண்டு கனவிலே குடித்தனம் நடத்த ஆரம்பித்தான்.
இரண்டாவது நாள் கூட்டத்தில் ஒவ்வொரு இளம் தொழில் அதிபரையும் சிறப்பித்து விருதுகள் வழங்க, இரண்டாவது வருடமாக அதை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான் புன்னகையோடு ஸ்ரீராமன். அடுத்து நல்லா'ஸ் மசாலா என்றவுடன், ஸ்ரீராம் மருதுவை எதிர்பார்த்து இருக்க.. ஆனால் விருது வாங்க வந்ததோ நீலாம்பரி!!
அதுவும் உயர்த்தி போட்டு ஒரு பொனிடைல் கையில்லாத ஜாக்கெட் அதற்கு காண்ட்ராஸ்ட் ஆக சேலை என ஆளே உருமாறி அமர்க்கையாக வந்தவளைப் பார்த்து அசந்து தான் போய் அமர்ந்தான் ஸ்ரீராமன். அவளை இன்னும் மந்திரக்காரி என்று மனதில் நினைத்து இருக்க.. அவளோ இன்று இளம் தொழிலதிபராக அவன் கண்முன்னே மிளிர்ந்தாள்.
ஆனாலும் அவளை நெருங்க இல்லை அவன். குற்றமுள்ள மனம் அல்லவா குறுகுறுத்து கொண்டே இருந்தது. அவள் பார்வை வட்டத்தில் நின்று இருந்தாலும் அவளை அணுகும் தைரியம் இல்லை.
அவள் பின்னே வால் பிடித்து அவள் தங்கியிருந்த ஹோட்டலை கண்டுபிடித்தவன் தனக்கும் அங்கேயே அறை புக் செய்துகொண்டு, அவளோடு எப்படி பேசுவது என்று தனக்குத் தானே யோசித்துக்கொண்டு நடைபயின்று கொண்டிருந்தவன் நீச்சல் குளத்திற்கு அருகே வந்திருக்க..
அப்போது அவனை இடித்துக் கொண்டு ஓடிய 3 வயது வாண்டு தொப்பு என்று குளத்தில் குதிக்க 'பச்சக்' என்று அவன் மீது தண்ணீர் தெளித்தது. முதலில் யாரென்று திட்ட வாயை திறந்தவன், அவன் அருகில் குளித்துக் கொண்டிருந்த மருதுவை இப்போது இனம் கண்டு கொண்டான்.
அப்படி என்றால்?? அப்படி என்றால்??
அது என் குழந்தையா? என்று நினைக்கவே அவனுக்கு பாசம் பொங்க.. அப்பொழுதுதான் உற்றுப்பார்த்தான் அவனைப்போலவே நெஞ்சின் மீது மகனுக்கு மச்சம் இருந்ததை!!
மேலே வந்து இருவரையும் ஆசையோடு பார்த்தவன் அள்ளிக்கொள்ள செல்ல.. இடையில் வந்து குழந்தையை தூக்கிக்கொண்ட நீலாம்பரி அவனை முறைத்து "என் குழந்தை இது?" என்று செல்ல முனைய.. அவள் கை
பிடித்து தடுத்தவன்..
அப்பா என்று அவன் ஆரம்பிக்கும் முன்னமே..
"நீ கிடையாது" என்று அமிலமாக சொற்களை உமிழ்ந்து சென்றவளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீ ராமன்!
