இரண்டு நாட்களுக்கு பின்..
முத்து முத்தாக சிதறிய மழைத்துளியில் குளித்தபடி கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. குஷியை காண அவளது அம்மா, அப்பா வந்துள்ளதால் வேலை முடியும் முன்னமே பெர்மிஷன் கேட்டு கிளம்பி விட்டான் பிரதீஷ்.
சோ'வென மழை. காரில் பரவிய லேசான குளிரூட்டி அவனது மனதையும் குளிரத்தான் செய்தது. ஏதோ களிப்பில் பரவசம் அடைந்து திளைத்திருந்தான். அது அவன் விரும்பி கேட்கும் பாடலால் உண்டான களிப்பா? இல்லை வேறெதேனும் என்பதா அவன் மட்டும் அறிந்த ஒன்று.
"மாமா எனக்கு சாக்லேட் வேணும். வாங்கி குடு.." என குஷி முன் சீட்டில் அமர்ந்து கொண்டு வினவ, "வாங்கலாம்.." என்றான் அசட்டையாக.
குஷி அதையே மீண்டும் மீண்டும் கேட்டு அழுவது போல் ஆகி விட்டாள். அவனோ கார் ஹைவேயில் செல்வதறிந்து, "இரு பப்பி.. வாங்கி தரேன் அழாதே. அப்பறம் மாமா பேச மாட்டேன். வாங்கி தரேன்.." என சமாதானம் செய்தான்.
"ரொம்ப நாளாச்சு. வாங்கி குடு.." என்றவள் வேண்டுமென அடம் பிடிக்க, இவளை இதற்கு மேல் சமன் செய்ய முடியாது என நினைத்தவன் காரை ஓரங்கட்ட இடம் தேடினான்.
ஒருவழியாக காரை ஓரங்கட்டி விட்டு கொட்டும் மழையில் அவளையும் குடைக்குள் தூக்கிக் கொண்டு, அளவான டிபார்ட்மென்ட் ஷாப்பிங்கில் உள்ளே நுழைந்தான்.
இறக்கி விட்டதும் ஓட்டமாக ஓடியவள், அவளுக்கான சாக்லேட்டை ஒவ்வொன்றாக எடுக்காமல் அள்ளி எடுத்தாள். ஓட்டமாய் ஓடி வந்து அவளை பிடித்தவன், "குஷி இவ்வளவும் நீ சாப்பிட போறயா?" என அவளது உயரத்திற்கு சமமாக அமர்ந்து கொண்டு கொஞ்சலாக வினவினான்.
"இல்லை.. இது மம்மிக்கு. இது டாடிக்கு.." என ஒவ்வொன்றாக அவள் எடுத்துக் காட்டி கூற, "சரி போலாமா?" என்றவன் அவளது கையில் உள்ளதை வாங்கிக் கொண்டு தூக்கினான்.
அவன் ரெண்டு எட்டு வைத்திருக்க, "அக்கா.." என அழைத்தபடி அவனையும் இறக்கி விட சொல்லி நச்சரித்தாள்.
"மாமா விடு.. அக்கா வந்துருக்கா.. நான் பேசிட்டு வரேன்.." என்றவள் பிடிவாதமாக கீழிறங்கியதில், சடீரென திரும்பி பார்த்தான்.
அவள் தான்! அவளே தான்.. எவளை காணவில்லை என ஹாஸ்ப்பிட்டலில் தேடினானோ, அவள் அங்கு வெள்ளை நிற சுடிதாரில் போனி டைலில், அளவான ஒப்பனையில் நின்றிருந்தாள். ராசிகா அவனை பார்த்தபடி, ஓடி வந்து காலை கட்டிக்கொண்ட குஷியோடு முட்டியிட்டு அமர்ந்து கொஞ்சலாக பேசுவதை புன்னகை மலர பார்த்தான்.
அவனோ, அவள் நெற்றியின் ஓரம் இருந்த காயத்தை தீவிரமாக பார்த்து நின்றிருந்தான். ஒரு சில நிமிடத்திற்கு பின், பில் போட்டு விட்டு குஷியை அழைக்க சென்றவனுக்கு, காயம் பற்றி கேட்க எண்ணம் தான்.
வாய் திறந்து பேசினால் அது பிரதீஷ் இல்லையே! அதனால், ஏதோ தெரியாமல் காயம் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தான்.
பிரதீஷ், குஷியை சமன் செய்ய அவளோ வீறிட்டு அழுதாள். ராசிகாவை தன் வீட்டிற்கு வருமாறு. பிரதீஷிற்கு கோவம் வலுத்தது. தூக்கிக் கொண்டு விறுவிறுவென நடந்தவனிடம் திமிறியவள், கத்தி கூச்சலிட்டதில் நடையை தளர்த்தி விட்டு அவளை திரும்பி பார்த்தான். அவளும் அக்குழந்தையை தான் பாவமாக பார்த்திருந்தாள்.
குஷியை இறக்கி விட, அவளோ ஓடிச்சென்று ராசிகா கையை பிடித்து இழுத்தாள். அவனுக்கு என்ன செய்வதென புரியவில்லை. விழி அசைவிலே இறைஞ்சியவன் கண்டு, குஷியை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
"சார் பாப்பா ரொம்ப அழுறா. நான் வாசல் வரை தூக்கி கொண்டு வந்து விடுறேன்." என்ற பின் தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. ஒருவழியாக அவளது குடைக்குள் தூக்கிக் கொண்டு வந்தவள், அவளை காருக்குள் உட்கார வைத்து விட்டாள். அவளோ சீட்டிலே தையா தக்கா ஆட்டம் ஆடி அழுததில், பிரதீஷ் அடிக்க பாய்ந்தான்.
"நீங்களும் மத்த பேரண்ட்ஸ் பண்ணுற தப்பை பண்ணாதீங்க." என காட்டமாக கூறியவளை, என் நேரம் என்பது போல் தலையில் அடித்துக் கொண்டு பார்த்தான்.
"குஷி என்ன பழக்கம் இது? இப்படி பிஹேவ் பண்ணுற? நாளையில இருந்து உன்னை எங்கையும் கூட்டிட்டு வர மாட்டேன்." என அதட்டலாக அவன் கூற, "மாமா.. ப்ளீஸ்.. அக்காவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் அம்மா கிட்ட காட்டலாம்.." என வீம்பாக அழுதவளை கண்டு அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
அதன் பின் அவளை செல்லமாக கொஞ்சி, கெஞ்சி சமன் செய்தவன் ஆட்டோவிற்காக காத்திருக்கும் அவளை தயக்கமாக பார்த்தான். டிராப் செய்கிறேன் என கூறினால் தவறாக நினைத்து விடுவளோ என யோசித்தவன், காரை ஸ்டார்ட் செய்ய கிளம்ப அவளே அழைத்தாள்.
"சார் என்னை சந்த்ரா நகர்ல டிராப் பண்ண முடியுமா?" என அவள் மிக தயக்கமாக கேட்டாள். எங்கு திட்டி விடுவானோ என்னும் பயம் தான். இதுவரை பலமுறை சந்தித்தும் அவளை பற்றி அவன் பெரிதாக வினவியது இல்லை. நன்றியை கூட உதாசீனம் செய்து விட்டானே அப்படிருக்கும் போது எப்படி அவனிடம் உதவியை தயங்கமால் கேட்பாள்?
"ஹ்ம்ம் வாங்க.." என்றவன் கதவை திறந்து விட, முன் சீட்டிலே குஷியை தூக்கி மடியில் வைத்து அமர்ந்தாள். குஷிக்கோ ஒரே சந்தோஷம். அவள் தன்னோடு வீட்டிற்கு தான் வருகிறாள் என நினைத்து.
அந்த 20நிமிட பயணத்தில் குஷியோடு அவள் விளையாட்டாக பேசி வருவது கண்டு அவனுக்கு வியப்பாக இருந்தது. அத்தனை அழகு கொஞ்சலிலும், அவளின் மழலை பேச்சிலும்.
"உன் அம்மா பேர் என்ன?"
"ருத்ரா" என்றவள், "அம்மா வந்துருக்காங்க. நீங்க என் வீட்டுக்கு வாங்க. நாம சாக்லேட் கொண்டு போய் தரலாம்." என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.
"பப்பி அடி வாங்கிடுவ. பேசாம இரு" என அவன் காரை ஓட்டியப்படி அதட்ட, அவளோ "தாங்க்ஸ்" என்றாள்.
அவளை பாராது, "ஏன்?" என்றான். ராசிகாவோ அன்று நடந்த நிகழ்வு முதல் இப்போது வரை ஏதேர்ச்சியாக உதவி செய்வதை கூறி நெகிழந்தாள்.
"இதுல என்ன இருக்கு. ஹெல்ப் பண்ணுறதுல என்ன ஆகிட போகுது?" என்றான் தோளை குலுக்கிக் கொண்டு. அதிசயமோ, அதிசயம் அவளிடம் முதன் முதலில் சிரித்த முகமாக பேசினான்.
"அப்போ ஏன் சார் ரிஷப்ஷன்ல தாங்க்ஸ் சொல்ல வந்தப்போ, என்னை தெரியாதுன்னு சொன்னீங்க?" என முகத்தை சுருக்கி பட்டென கேட்டு விட்டாள்.
"ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க அதான் அப்படி சொன்னேன். டோன்ட் மிஸ்டேக் மீ. இட்ஸ் மை நேச்சர்."
"இட்ஸ் ஓகே சார். உங்களை மறுபடி பாத்தா தாங்க்ஸ் சொல்ல நினைச்சேன். ரொம்ப தாங்க்ஸ் சார்." என்றாள் மீண்டும் அவன் செய்த பேருதவியை நினைவுப்படுத்தி.
"அக்கா.. என் மாமாவை உனக்கு முன்னேடியே தெரியுமா?" என குஷி சரியான கேள்வியை கேட்டு விட, "யாரு உன் மாமா?" என்றாள் விழிகளை சுருக்கி.
"இதான் என் மாமா.." என்றவள் பிரதீஷை கை காட்ட, அவளுக்கோ குழப்பம். அவனோ கண்டும் காணாதது போல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
"ஹேய் குஷி.. அப்பாவை போய் மாமான்னு சொல்லுற?"
"இது என் மாமா. அப்பா வீட்டுல இருக்காரு." என்றதில், சட்டென அவன் முகத்தை திரும்பி பார்த்தாள்.
"இது என் தங்கச்சி பொண்ணு." என்றான் அவன். அவளோ நாக்கை கடித்துக் கொண்டு, "சாரி சார் நான் உங்க குழந்தைன்னு நினைச்சேன்." என அவள் மன்னிப்புக் கோர, அவனோ சிரித்துக் கொண்டான்.
(நீயா டா சிரிச்ச.. அதுவும் இவ கிட்ட.. 🙄🙄)
"என் மாமாக்கு இனி தான் பொண்ணே பாக்கணும். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என குஷி விளையாட்டாக கேட்க..
அவளோ உதட்டை பிதுக்கி, இல்லை என தலையை மட்டும் அசைத்தாள்.
"என் மாமாவை பொண்ணு பாக்க வர சொல்லுறேன்."
அவளோ, "ஹ்ம்ம்.. வர சொல்லு.." என அவளும் பதிலளிக்க, பிரதீஷ் சடேன் பிரேக் அடித்து அவளை திரும்பி பார்த்தான்.
ராசிகாவோ, "ஸாரி சார்.. குழந்தை அப்படி.. பேசுச்சு.. அதான் நான்.." என அவள் பயந்து கொண்டு கூறுவது புரிந்தவன், "நான் ஒண்ணுமே இப்போ சொல்லலையே" என்றான் மலர்ந்த முகமாய்.
கோவப்படுப்பவனுக்கு கோவமில்லை. கொந்தளிக்கும் குணம் கொண்டவனுக்கு இப்போது அது சுத்தமாக வரவில்லை. அவளிடம் புன்னகையாக பேசினான்.
அவள் இறங்கும் இடம் வந்திட இறங்குகிறேன் என்றதும் காயம் பற்றி கேட்டே விட்டான்.
"என்ன காயம்? நெத்தியில?"
(நீயா டா இது 🙄 பொண்ணை பாக்கவும் மாறிட்டானோ!)
கார் கதவை திறந்து கொண்டு இறங்க போனவளிடம் அவன் கேட்டதினால் என்னவோ, சிறு விபத்து என பொய்யுரைத்தாள் காரிகை.
"ஹ்ம்ம்.. ஓகே டேக் கேர்.." என்றவன் அவளை எதிரே இருந்த ஜன்னல் வழி பார்த்து கூறி விடைபெற்றுக்கொண்டான். குஷி தான் வழக்கம் போல் அக்கா வீட்டிற்கு வரவில்லையா என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து விட்டாள்.
ஒரே அதட்டலில் அவளது வாயடைத்தவன் வீடு வந்து சேரும் வரை அவளை சமன் செய்ய முயற்சிக்கவில்லை.
வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் ஹரீஸிடம் மட்டும் நன்றாக பேசி விட்டு, ருத்ராவை வா என கூட கேளாது அறை நோக்கி சென்றான். இப்படி ஒரு உடன் பிறப்பா என நொந்தவள், மகளை தன்னோடே அழைத்துக் கொண்டு செல்ல தீர்மானித்து விட்டாள்.
எங்கு அவனை போலவே, கேவலமான குண நலன் வந்து விடுமோ என்ற எண்ணம் தான் அவளை அவனிடமிருந்து முழுவதுமாக பிரிக்க நினைத்தது.
பிரதீஷ் பாட்டி தாத்தா இருவரும் வேதகி அவர்களை நலம் விசாரித்து விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மனம் முழுவதும் ஏக ஆனந்தமாக இருந்தது. இருக்காத என்ன? பிருந்தாவிற்கு, வேறு எந்த மாப்பிள்ளையும் பார்க்க வேண்டாம். பிரதீஷ் சொன்னது போல் இரண்டு மாதங்களில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றனர்.
அதற்கு கௌதமனும் யோசிக்காமல் சம்மதித்து விட்டார். டாக்டர் மாப்பிளை அல்லவா? எப்படி மறுப்பு தெரிவிப்பார்? அதனால், மகள்களை கரையேற்றினால் போதும் என நினைத்தவர், சாவித்திரி பாட்டியின் உறுதி மொழியை நம்பி ராசிகவிற்கு மட்டும் வேறு மாப்பிளை பார்ப்போம் என முடிவெடுத்து விட்டார்.
"நான் என்னமோ நினைச்சேன் சாவித்திரி. உன் பேரன் அந்த பொண்ணுட்ட அதையே மறுபடி சொல்லிருக்கானா, கண்டிப்பா உண்மையா தான் இருக்கும். நான் தான் தப்பா நினைச்சுட்டேன்."
"நீங்க தப்பா நினைக்கிறது என்ன புதுசா? அவனே அந்த பொண்ணு கிட்ட உறுதியா சொல்லிருக்கான். அப்போ அவனுக்கும் அந்த பொண்ணு மேல ஆசை இருக்கு தானே?" என சாவித்திரி பாட்டி புன்னகை மலர, கணவனிடம் கூறும் போதே பிரதீஷ் கார் வாசலில் நிற்பதை கவனித்தார்.
"சரி சரி அவன் வந்துட்டான். நாம தெரிஞ்ச மாதிரி எதுவும் அவன்கிட்ட காட்டிக்க வேணாம். எப்போவும் போல சாதாரணமா இருங்க." என அவர் திட்டவட்டமாக கூற, அவரும் சரி என தலையசைத்தார்.
அறையில் நுழைந்தவனுக்கு வழமைக்கு மாறாக அவள் முகமே நிழல் உருவமாக தெரிந்தது. மீண்டும் அதே கேள்வி வேறு அவன் மண்டையை குடைந்தது.
'ஏன், அவளை அடிக்கடி காணும் சூழ்நிலை வரவேண்டும். யார் இவள்? எங்கோ பார்த்தவளை இங்கும் பார்க்க வேண்டுமா? அடுத்த முறை அவளை சந்திக்கும் வாய்ப்பு வருமா? அப்படி வந்தால்.. வரவில்லை என்றால்?' என சாளரத்தின் முன்பு நின்றபடி, விடையில்லா கேள்விக்கு விடை தேடி யோசித்துக் கொண்டிருந்தான்.
ராசிகா வீடு வந்து நுழையவும் அலைபேசி அலறிட, ஆர்த்தி வீடியோ கால் செய்ததறிந்து தனியே இடம் தேடி சென்றாள்.
அழைத்தது ஆர்த்தி என்றாலும், அதில் பேசியது அஸ்வத் என்பதால் அதிர்ந்து போனாள் பெண்ணவள்.
ஹாய் ஹலோ என்றவன் முகமோ அதிர்ச்சியில் உறைந்தது. நெற்றியில் அவ்வளவு பெரிய காயத்தை கண்டால் எப்படி தாங்கிக் கொள்வான் ஒருதலை காதலன்?
"ராசிகா என்ன ஆச்சு? எப்படி நெத்தியில இவ்வளவு பெரிய காயம் வந்துச்சு?" என அவன் பதட்டமாக கேட்க, அவளோ "கீழ விழுந்துட்டேன் அஸ்வத்" என்றாள் மிகச்சாதாரணமாக.
"கீழ விழ நீ என்ன சின்ன குழந்தையா? அதுவும் இவ்வளவு பெரிய காயம். என்ன டி உளறுற?" என அவள் மேல் கொண்ட அதீத அன்பால் டி என்று விட்டான். ராசிகாவோ, "அஸ்வத் டி சொல்லாதே எனக்கு பிடிக்காது." என்றாள் கண்டிப்பான பார்வையோடு.
"சரிங்க சொல்லல. காயம் எப்படி வந்துச்சு அதை சொல்லு." என்றவன் குரல் இப்போது அதிகாரமாக வர, "ப்ளீஸ் அதை விட்டுடு" என்றாள் லேசாக நீர் கோர்த்த விழிகளை, அவனை காணாது எங்கோ திருப்பியப்படி.
"ராசிகா நேர்ல இருந்த அறைஞ்சிடுவேன். என்ன நினைச்சுட்டுருக்க? கீழ விழுந்துட்டேன்னு பொய் சொல்லுற." என்றவன் முகம் கோவத்தில் மாறுவதை கண்டு, "அப்பாக்கு நான் ஆட்ல நடிக்கிறது பிடிக்கல" என்றாள்.
"சரி.. அப்பறம் என்ன நடந்துச்சு?" என அவன் கேட்டு தான் முடிக்க, கரைந்தவாறு நடந்ததை கூறி விட்டாள்.
அவனோ மொபைலில் தனது வீரத்தை காட்டி ஆவேஷமாக மொழிந்து கொண்டிருந்தான். ராசிகா ஓவென அழுத முகமாக இருப்பதை கண்டவனுக்கு, நெஞ்சமே நொறுங்கியது. காதல் கொண்டவன் மனம் எப்படி காதலியின் கண்ணீரை ஏற்கும்?
"ஹேய் ஏன் டி இப்படி அழுற? சொன்னா கேளு. அழாதே ராசி.." என அவனும் அனுதாபமாக கூற, அப்போது தான் பாவையவள் கேவி அழுதாள்.
"மார்னிங் வரேன். ஊருக்கு வரயா?"
"இல்லை அஸ்வத் வரல.. நான் அப்பறம் பேசுறேன்.." என்றவள் பட்டென போனை துண்டித்து விட்டாள்.
மீண்டும் நார்மல் காலில் போன் செய்தான். சில ரிங்கிற்கு பின் அழைப்பை ஏற்றவள் விசும்பலாக இருந்தாள் தவிர பேசவில்லை.
"ராசிகா மார்னிங் 10ஓ கிளாக் அங்க இருப்பேன். கிளம்பி இரு."
"நான் அங்க வந்து என்ன பண்ண அஸ்வத்?"
'என்னை கல்யாணம் பண்ணிக்கோ..' என அவனுக்கு வாய் திறந்து சொல்ல ஆசை தான். அவளிருக்கும் மனநிலையில் ஏன் அதை கூறி நோகடிக்க வேண்டுமென நினைத்தவன், "நான் அங்க உனக்கு வேற இடம் ரெடி பண்ணி தரேன். அது வரை வீட்டுல இரு.." என்றான் கனிவான குரலில்.
"வேண்டாம் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். உனக்கு ஏன் அலைச்சல்?"
"சொல்லுறதை மட்டும் கேளு.." என்றவன் அதற்கு மேல் பேசாது அழைப்பை துண்டித்து விட்டான். அவனுக்கும் அவள் அப்பா கூறியது சரியெனவே தோன்றியது. எதற்கும் நேரில் அழைத்து பேசி பார்ப்போம் என நினைத்தான்.
இரவு உணவு உண்ண கீழே வந்த பிரதீஷின் நேரமா? இல்லை இனி அவள் மீது உண்டாகப் போகும் பித்தோ என்னவோ, அவள் நடித்த விளம்பரத்தை காண நேர்ந்தது.
அது ஒரு ஃபேர்னஸ் கிரீம் ஆட். அவன் தற்சமயம் அவளை நேரில் கண்டதை விட மினிமினுப்பாகவும், இளமை கொஞ்சும் புன்னகையில் இருந்தாள். உண்டு கொண்டிருந்தவன் பார்வை அந்த விளம்பரத்தில் பதிய, குஷியோ "மாமா.. இந்த அக்காவை தானே பாத்தோம்.." என பட்டென போட்டுடைத்தாள்.
அவனுக்கோ முகம் வெளிறியது. எல்லோரும் ஒன்றாக அல்லவா உணவு உண்டு கொண்டிருந்தனர். விளம்பரத்தில் இலக்காக இருந்தவன் விழிகள், அவளிருப்பதை மறந்து விட்டு ஆ'வென ராசிகாவை அளவெடுத்தது.
இவள் வேறு இப்படி ஒரு விடயத்தைக் கூற, அவனுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என தெரியவில்லை. எல்லோரையும் திருதிருவென பார்த்தவன், "குஷி.. அது யாரோ ஒருத்தங்க.. நீ போய் இடிச்சது வேற அக்கா மேல.." என நடக்காத ஒரு நிகழ்வை கூறி, கை கழுவ எழுந்தான்.
அதை எல்லோரும் நம்பிட, மோப்ப சக்தியை சித்தி போல் மூக்கில் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கும் ருத்ரா தான் நம்பவில்லை. குஷியை தனியே அழைத்துக் கொண்டு சென்றவள் விசாரணை செய்ய அவளோ எல்லாவற்றையும் விளக்கமாக கூறி விட்டாள்.
'சித்தி சொன்ன மாதிரி, இன்னும் அந்த பொம்பளை பின்னாடி திரியுற புத்தி மட்டும் இவனை விட்டு போகல. அப்போ டைவர்ஸ் ஆனவ. இப்போ எவளோ?' என தலையில் அடித்துக் கொண்டு குஷியை கட்டியணைத்து உறங்கினாள் நய வஞ்சகி.
அவள் மனம் கோணுமோ என்று தான் அவளிடம் இன்று கூட சிரித்து பேசியதை எண்ணி தானாக பெருமப்பட்டுக் கொண்டான்.
அந்த விசாலமான அறையில் மெத்தையில் கால் நீட்டி அமர்ந்திருந்தவன், அவள் விளம்பரம் ஒவ்வொன்றையும் யூ-டியுபிள் பிளே செய்து பார்த்தான். அன்று அவளை சந்தேகித்த நொடிகளை எண்ணி, குற்றவுணர்ச்சி தான் வந்தது அவனுக்குள்.
விலோசனங்கள் இரண்டும் அவளது மதி முகம் கண்டு எங்கும் நகரவில்லை. அவளை காணும் நொடியில் தனக்குள் உண்டாகும் மாற்றத்தை என்னவென கூறுவது நினைத்தவனுக்கு, தன்னையும் மீறி சிரிப்பே வந்தது.
அதேநேரம் சுடு சொல் ஒன்று காதில் ரீங்காரமிட்டு, அலைபாயும் மனதை அடக்கியது.
'பொண்ணுங்கன்னா பின்னாடியே போய்டுவியா டா பொறுக்கி நாயே. அப்படி என்ன டா கல்யாணம் ஆனவ உனக்கு கேக்குது?' என்ற சொல்லை அன்னை கேட்டதை எப்படி மறப்பான்? தவறே செய்யாமல் சுமத்திய பழியை எண்ணி!
தேன்மழை💖💖
