9
காதலோடு நீலாம்பரி ஸ்ரீராமனை பார்க்க..
கீசாவோ அதிர்ச்சியோடு நீலாம்பரியிடமிருந்து ஸ்ரீராமனை விடுவிக்க பார்க்க..
மோகினியோ முடிந்தால் என் கட்டுப்பாட்டில் இருந்து நீலாம்பரியை பிரி பார்க்கலாம் என்று தோரணையாக பார்க்க..
பாவம் மருதுவும் வேணியும் தான் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தோடு இங்கே நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ஏனுங்க மாமா.. வெளிய நிக்குறிக.. உள்ள வாங்க மாமா" என்று கைகளைப் பிடித்து ஸ்ரீராமனை உள்ளே அழைத்து வந்தாள் நீலாம்பரி.
ஸ்ரீராமனோ "நீதான் அம்மணி.. என் கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்ட.. நீ வரலைன்னா என்ன நான் இங்கன வந்துட்டேன்.. உன்ற கூட வாழ வந்துட்டேன் அம்மணி" என்று அவளின் முகத்தைப் பார்த்து கூற..
மருதுவும் வேணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அக்கா என்று அலறினார்கள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன்ற விருப்பம் இல்லாமல் தாலி கட்டிட்டாருன்னு உட்கார்ந்து ஒப்பாரி வச்ச.. இப்ப என்னடான்னா அவர வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர.. உனக்கு என்னதான் ஆச்சு" என்று வேணி நீலாம்பரியை போட்டு உலுக்க..
"அதானே.. நானே இவர தேடிப்போய் நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கலாம்னு இருந்தேன். நீ என்னமோ அவரை பார்த்து பார்த்து உபசரிக்கிற" என்று மருது ஸ்ரீராமனை முறைத்தபடியே கூற..
"என்ன மச்சான்? என் சின்ன மச்சான்..
நறுக்குன்னு நாலு கேள்வி என்ன நானூறு கேள்வி வேணாலும் கேளு.. ஆனா இன்னிக்கு கேட்காத நாளைக்கு கேளு.. மொத மொத இன்னைக்கு தான் என்ற மாமியார் வூட்டுக்கு வந்திருக்கேன். புதுமாப்பிள்ளை எல்லாரும் சேர்ந்து ரவுண்டு கட்டனா எப்படி?? நீலுக்குட்டி நம்ம ரூம் எது டா செல்லம்?" என்று அவன் கேட்க..
அங்கே இருப்பதோ ஒரே ஒரு ரூம் அதுவும் வீட்டில் கல்யாணம் ஆகாத சின்னப்பெண் வேறு இருக்கிறாள்.. இவன் என்ன ரூமை கேட்கிறானே என்றெல்லாம் மனதுக்குள் எண்ணவில்லை நீலாம்பரி.. அவள் தான் இப்போது மோகினியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறாளே!!
இருக்கும் ஒரு அறையை அவனிடம் காட்டி "இதுதான் மாமா" என்றாள் அவள்..
"நெஜமாவே நம்ம அக்காவுக்கு என்னமோ ஆகிபோச்சு" என்று கணவனை கூட்டிக் கொண்டு அந்த சிறிய வீட்டை சுற்றிக் காட்டும் அக்காவையே விழிவிரித்து பார்த்தான் மருது.
அதற்குள் ஸ்ரீ ராமனைத் தேடி நாச்சியும் சங்கரபாண்டியனும் வந்திருக்க.. வந்தவர்களை வாங்க என்று உள்ளே அழைப்பதா? என்ன சொல்வது? என்று தெரியாமல் இவர்கள் இருவரும் விழிக்க..
பின்னே கொட்டகையில் இருந்த ஆடு மாடு கோழி என்று ஒன்றையும் விடாமல் அனைத்தையும் ஸ்ரீராமனிடம் நீலாம்பரி காட்ட.. அவனும் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பது போலவே அவள் கூறுபவை எல்லாத்தையும் ஆச்சரியத்தோடு ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான், அவள் காட்டியவற்றை அல்ல அவளைத்தான்!!
"அக்கா நாட்டாமை வந்திருக்கிறாரு" என்று கூற..
"நம்ம திடீர் நாட்டாமை இங்கன எதுக்கு வந்திருக்காரு?" என்று நாராயணனை நினைத்து ஸ்ரீராமன் கூறியவன் உள்ளே வந்து பார்க்க அங்கே தன் பெற்றோரை பார்த்து..
"வாங்கம்மா!! வாங்கப்பா!!" என்றான்.. மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும் பெற்றோரை வரவேற்கும் புது பெண்ணை போல..
"இப்போ எதுக்கு டா வீட்டை விட்டுட்டு பெட்டி படுக்கையோடு இங்கன வந்திருக்க" என்று சங்கரபாண்டியன் கேட்க..
"இது என்னப்பா கேள்வி.. கல்யாணமான ஒரு ஆண்மகனுக்கு பொண்டாட்டி எங்க இருக்காளோ அதுதான அவன் வீடு!! அதுதான் அயோத்தி!! என்ன நீலு குட்டி மாமா சொல்றது சரிதானே?" என்று பொண்டாட்டியிடம் அபிப்ராயம் கேட்க..
அவளும் தலையை தலையை ஆட்டிக்கொண்டு "கரெக்ட்ங்க மாமா!! கரெக்ட்ங்க!!" என்றாள்.
பஞ்சாயத்தில் பாய்ந்து பாய்ந்து பேசியவள், இப்போது பம்மிக்கொண்டு பேசுவதை பார்த்து சங்கரபாண்டியனுக்கோ ஏதோ சரியில்லை என்று புரிய..
"ஏன்டா.. ஏற்கனவே இங்கன வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கு.. இங்கன வந்து தங்கறேன்னு சொல்ற. ஒழுங்கா வீடு வந்து சேரு" என்று அவர் மிரட்ட..
"என்ற அம்மணி இல்லாம நான் வரமாட்டேன்" என்று அருகிலிருந்த நீலாம்பரியின் கைகளை அவன் கோர்த்துக் கொள்ள.. அவளும் அவன் கைகளை இறுக்கிக் கொண்டாள்.
சங்கரபாண்டியனோ கோபத்தில் கொந்தளிக்க, சட்டென்று நாச்சி அவரது கைகளைப் பற்றி.. "ஏனுங்க.. மாமா நம்ம பையன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்குறான்னு இவ்ளோ நாளா நாமும் என்னென்னமோ பண்ணிப் பார்த்தோமுங்க.. இப்ப அவனே பிடிச்சு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வாழ நினைக்கிறான். அதுக்கு ஏனுங்க நாம தடை சொல்லணும்.. நமக்கு இருக்கிறதே ஒத்த புள்ள தானுங்களே.. அவனையும் அழவிட்டு அப்படி என்னங்க மாமா, நாம சந்தோசமா இருந்துட போறோம்" என்று மூக்கை உறிஞ்சி நாச்சி கேட்க.. மனைவி அழுதால் தான் இந்த கணவனுக்கு தாங்காதே உடனே இருவரையும் பார்த்து "சரி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்றார்.
"இங்கே பாரு புள்ள.. உன்ற அப்பத்தாவோ வயசானவங்களா இருக்காங்க.. உன்ற அப்பனும் தண்ணி அடிச்சு சுத்துறான். இந்த ரெண்டு பிள்ளைகள எப்படி கரையேத்த போற" என்று சங்கரபாண்டியன் கேட்டார்.
அப்படியாவது நீலாம்பரி தன் தம்பி தங்கையை நினைத்து அவனை விட்டு விடுவாள் என்ற ஒரு சின்ன நப்பாசை..
என்னதான் நாட்டாமையாக இருந்து நாலு பேருக்கு பஞ்சாயத்து செய்தாலும் அவர் வீடு என்று வரும் பொழுது மகன் தன்னை மதிக்கவில்லையே என்ற எண்ணம் உள்ளுக்குள் அவருக்கு இருக்கத்தான் செய்தது. அதற்காக காதலுக்கு எதிராக கொடி பிடிப்பவர் அல்ல!!
ஆனால் நீலாம்பரியோ "அதனால என்னங்க மாமா என்ற தம்பியும் தங்கச்சியும் என்ற கூடவே கூட்டிட்டு வந்துர்றேனுங்க.. நீங்க சொல்ற மாதிரி அவங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே நான் தானுங்க.. அதுக்காக உங்கள எதிர்பார்த்து எல்லாம் இருக்க மாட்டேனுங்க.. என்ற சம்பாத்தியத்திலேயே அவங்கள நல்லபடியா பார்த்ததும் என்னால முடியுமுங்க" என்று நிமிர்ந்து அவள் பேச..
சங்கரபாண்டியனுக்கு அவளின் இந்த நிமிர்வு பிடிக்கவே செய்தது. ஸ்ரீராமனை கேட்கவா வேண்டும்?? வாயில் வாஸ்து பார்க்கும் அளவு திறந்து வைத்து தன்னவளை பார்த்தது நின்றான்.
அதன்பின் மருது மறுக்க மறுக்க..
வேணி தடுக்க தடுக்க..
கீசா பதற பதற..
மோகினி சந்தோசத்தில் குதிக்க குதிக்க..
நீலாம்பரியின் மொத்த குடும்பமும் சங்கரபாண்டியன் வீட்டிற்கு குடி பெயர்ந்தது.
ஆடு மாடு கோழியிலிருந்து அப்பத்தா வரை!!
சொர்ணமோ யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டார். நாச்சி தான் புதுமணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்.
மாடியில் இருக்கும் ஸ்ரீராமன் அறைக்கு அருகில் இருந்த அறையை மருதுவுக்கும் கீழே சொர்ணம் அறைக்கு அருகில் இருந்த அறையில் வேணியையும் தங்க வைத்தார் நாச்சி.
கீசாவோ ஸ்ரீராமன் அறைக்கு வெளியே நின்று கைகளை பிசைந்து கொண்டே நின்று கொண்டிருந்தது.
காரணம் அங்கே முதலிரவுக்கான ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டிருக்க.. இருவருமே தங்கள் சுயத்தில் இல்லாமல்.. ஒரு மாய வலையில் சிக்கி இருக்க.. இன்று மோகத்தில் திளைத்து இருந்தாலும் நாளைய விடியல் அவர்களை என்ன செய்யும் என்று புரியாமல்!!
கடுப்பு கடுப்பு மோகினி மீது ஒரே கடுப்பு கீசாவுக்கு.. இங்கே அருகில் தான் மோகினி இருக்கிறது என்று அதற்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆனால் கண்களுக்கு சிக்காமல் அருவமாக நின்று மோகினி கீசாவை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
"இங்க பாரு மோகினி.. நான் ஸ்ரீராமனை ஆட்டி வைக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு.. நீ தேவையில்லாம இதுல நுழைஞ்சு நீலுக்குட்டிய கஷ்டப் படுத்தாத" என்று அது மிரட்ட..
"எப்பவும் நீலுக்குட்டி நீலுக்குட்டி தானா??
அதைத்தாண்டி இந்த மோனுகுட்டி உன் கண்ணுக்கு தெரியவே தெரியாதா?" என்று கீசாவை பார்த்து மோகினி மோகனமாக கேட்க..
"ஆமா யாரு அந்த மோனுகுட்டி?" அதிமுக்கிய கேள்வியுடன் கீசா..
"நீலாம்பரி நீலுக்குட்டி..
மோகினி மோனுகுட்டி.." என்று தனது குட்டி கண்களில் காதல் பானத்தை கோர்த்து கீசாவின் இதயத்தை நோக்கி செலுத்த..
"மூணு யானை குட்டி மாதிரி இருந்துட்டு நீ மோனுகுட்டியா?" என்று அசால்டாக மோகினி செலுத்திய பானங்களை எல்லாம் கீசா தட்டிவிட..
"இங்க பாரு கீஷ் கண்ணா.. நான் உனக்காக பல நூற்றாண்டுகளா தவம் இருக்கேன்.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. எனக்கு நீதான் வேணும் இல்லேன்னா.. உன் நீலுக்குட்டி பர்பாமன்ஸ் இன்னும் படு மோகனமாய் இருக்கும்.. நாள பின்ன ஸ்ரீராமன் உன் கட்டுலிலிருந்து வெளிவந்தாலும், நீலாம்பரி என் கட்டுப்பாட்டில் தான் இருப்பா.. உன் நீலா காலி" என்று மூச்சு இறைக்க இறைக்க அது சபதம் எடுக்க..
"அவ காலி இல்ல காளி.. உன்னால முடிஞ்சா பாத்துக்கோ" என்றுவிட்டு ஸ்ரீராமன் அறைக்கு வெளியிலேயே அந்தரத்தில் படுத்துக்கொண்டது கீசா கண்களைமூடி..
ஆஞ்சநேயரின் பக்தன் இன்று மொத்தமாக மன்மதனால் ஆட்கொண்டு கண்களில் மோகனப் புன்னகையேந்தி.. தன் காதல் ரதியை ஆட்கொள்ள கிளம்பிவிட்டான்.
முறுக்கு மீசையும் திரண்ட புஜங்களும் அதற்கு தோதான வேஷ்டி சட்டையோடு
தேவன் என நிற்கும் தனது மாயவனை கண்ட பெண்ணவளுக்கோ, நாணம் வந்து ஒட்டிக்கொள்ள செங்காந்தள் என முகம் செம்மையுற தலைதாழ்த்தி நிலம் பார்த்தாள் பெண்.
"நீலு.. இனி நீயே என் ஆளு.. மாமாவை பாரு தங்கம்" என்று ரத்தம் நரம்பு சதை என அனைத்திலும் காதல் கரை புரண்டு ஓட.. கண் காது மூக்கு என அனைத்திலும் தாபம் வெடித்து சிதற.. கைகால்கள் எல்லாம் மோகத்தில் முறுக்கிக்கொண்டு அலைய, நிலம் பார்த்தவளை நிமிர்த்தி அவளின் அதரங்களை தனக்குள் புதைத்துக் கொண்டான் ஸ்ரீராமன்.
அதன்பின் மோகன ராகங்களும்..
சலங்கை கொலுசின் இசைகளும்..
பல கொஞ்சல் மொழிகளும்..
சில மிஞ்சல் தொணிகளும்..
அரங்கேற.. மொத்தமாக ஆஞ்சநேய பக்தன் தன் பிரம்மச்சரியத்தை துறந்து நீலாம்பரி என்னும் சிலையை வடிக்கும் சிற்பியானான்.
காலையில் முதலில் கண் விழித்த ஸ்ரீராமனோ "ஜெய் பஜ்ரங்கபலி" என்று தன் கைகளை நன்றாக தேய்த்து உள்ளங்கையை பார்க்க.. அதிலோ நீலாம்பரியின் குங்குமம் ஒட்டியிருக்க.. அந்த மாருதியின் பக்தனோ..
"என் ஐயன் மாருதியே.. என் பக்தியை மெச்சி எனக்கு குங்குமப் பிரசாதம் வழங்கி இருக்கிறாயே.. தன்யனானேன் பிரபுவே தன்யனானேன்" என்று அகமகிழ்ந்து கூற..
இந்த பயபுள்ள முழுசா பார்க்கல தன்னுடைய கோலத்தை.. பார்த்துட்டு இன்னும் என்ன என்ன பேசப்போகுதோ???
மெல்ல எழ முயன்றவனை ஏதோ ஒரு பாரம் நெஞ்சில் அழுத்த, என்னவென்று பார்த்தால் போர்வையால் போர்த்தி ஒரு உருவம் மட்டுமே தெரிந்தது. யாரு இப்படி போர்த்திகிட்டு நம்ம மேல படுத்து தூங்குறா எந்த நினைத்தவன் மெல்ல போர்வையை விலக்க..
கசங்கிய தலையும்.. சோபையான முகத்துடன் பெண்ணின் உருவம் தெரிய..
"அய்யோ!! அபச்சாரம்!! அபச்சாரம்!!" என்று அவன் சட்டென்று போர்வையை விலக்க..
அதன் பிறகு எங்கே அவன் பேச?? ஏனென்றால் இருவரும் இருந்த கோலம் அப்படி!! முற்றுமுழுதாக பல்லவனின் சிற்பங்களாக.. பிறந்த மேனியுடன் இருந்த தங்களை பார்த்தவனுக்கு பேச்சு வராத அதிர்ச்சி!!
முதன் முதலில் ஒரு பெண்ணை அவ்வாறு பார்த்தவனுக்கு வார்த்தை வராமல் சிக்கி தவிக்க சட்டென்று தன் கண்களை மூடிக்கொண்டான்.
'யார் இவள்? ஏன் இப்படி என் மீது வந்து படுத்து இருக்கிறா... அப்படி என்ன நடந்தது நமக்கு?' இருவரும் இருக்கும் நிலை என்ன நடந்திருக்கும் என்பதை எடுத்துக் கூறினாலும் ஆனால் அனுமனின் பக்தன் அதை ஒத்துக் கொள்ள மறுத்தான்.
"நமக்கே இவ்வளவு ஷாக்கா இருக்கு அப்போ அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு ஷாக்கா இருக்கும்?" என்று இந்த நினைத்தவன்.. "இல்லையில்லை.. அப்பத்தாவும் இந்த அம்மாவும் சேர்ந்து தான் இந்த பொண்ணை நம்ம தலையில கட்டி வெச்சு ஏதேதோ பண்ணியிருக்காங்க" என்று யோசித்தவனுக்கு அவர்கள் மீது கோபம் வர.. வந்து வச்சுக்கறேன் உங்கள என்று அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
போடி போ நேத்து நடத்தின ஆட்டத்துக்கு உன் குடும்பமே உன்ன வச்சு செய்ய போகுது..
அதன்பின் அவசரமாக தனது உடையை மாற்றியவன் கீழே சென்று சொர்ணத்தின் அறையை தட்ட.. "அப்பத்தா கதவ தொற!!" என்று அவன் கத்த..
"நிம்மதியா காலையில தூங்க கூட விட மாட்டேங்குறானே" என்றவாறே வந்து திறந்த அப்பத்தா, தன் பேரனை கண்டதும் நேற்று பஞ்சாயத்தில் அவன் செய்த வேலையை நினைத்து கோபம் கொண்டு "போடா போ எதுக்கு என்கிட்ட பேச வந்திருக்கிற" என்று உள்ளே செல்ல..
"நான் என்ன பண்ணனேன்?? நீயும் உன் மருமகளும் சேர்ந்து தான் யாரோ ஒரு பெண்ணை என் தலையில் கட்டிவைத்து இருக்கீக.. அவ என்ற ரூம்ல வந்து.. அய்யோ அபச்சாரம்!! அபச்சாரம்!!" என்றவன் வாயை பொத்திக் கொள்ள..
"எல்லா சமாச்சாரத்தையும் முடிச்சிட்டு இப்போ வந்து அபச்சாரம் அபச்சாரம் சொல்லு!!" என்ற கோபத்தில் பொங்கினார் சொர்ணம்.
அதன்பிறகு சங்கரபாண்டியன் அவனை முறைத்துக் கொண்டே செல்ல..
"ஒட்டுமொத்த குடும்பமே ஏன் நம்ம பார்த்து முறைத்துக் கொண்டே இருக்குறாக.. நான் தானே இவக பண்ணு காரியத்துக்கு முறைக்கணும்" என்று மனதில் அனைவரையும் திட்டிக்கொண்டே தன் அன்னையை நோக்கி சென்றான்.
முகமே அனைத்து விஷயங்களையும் சொல்ல நாச்சியோ வெட்கப்பட்டுக் கொண்டே.. "இந்தா கண்ணு.. சத்துமாவு கஞ்சி.. நீயும் குடிச்சிட்டு உன்ற வூட்டுக்காரிக்கும் எடுத்துட்டு போ" என்க..
இது வேறையா என்றவன், மெதுவாக அறைக்குள் நுழைய.. கேரளா பெண் போல் முண்டு கட்டிக்கொண்டு உக்கிரமாக நின்ற நீலாம்பரியோ..
"அடேய்!! நேத்து பஞ்சாயத்துல வைச்சு தாலிய கட்டுன.. இராத்தியோட இராத்திரியா என்னைய தூக்கிட்டு வந்து ஜோலிய முடிச்சிப்புட்டல்ல.. உன்னை சும்மா விடமாட்டேன்டா.. இரு இரு முனீஸ்வரனுக்கு நேந்து கிட்டு முட்டை மந்திரிச்சு வைக்கிறேன்" என்று அவள் கூச்சல் போட,
அவனும் அவளுக்கு சளைக்காதவனாய்,
"நானே ஒரு ஆஞ்சநேய பக்தன்..என் கற்பை சூறையாடிட்டு.. நீ எனக்கு முட்டை மந்திரிச்சு வைக்கிறியா?" என்று கை சட்டையை மடிக்கி கொண்டு அவளிடம் சண்டைக்கு செல்ல..
அவனது சட்டையை கொத்தாகப் பற்றி இழுக்க.. கோபத்துடன் நீலாம்பரியை பார்த்தான் ஸ்ரீராமன்.
அப்போதுதான் அந்தரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது கீசா விழிக்க இவர்கள் சத்தம் கேட்டு.. 'நம் கட்டில் இருந்து அவன் வெளியில் வந்துட்டான் போல' என்று நினைத்த, கீசா தன் நீலுக்குட்டியை காப்பாற்ற மீண்டும் அவனை கட்டுக்குள் கொண்டுவர... அக்னியாக கனன்ற ஸ்ரீராமனின் கண்கள், காதலோடு பார்க்க..
நீலாம்பரியோ பயந்து தான் போனாள். இவனின் கோபமே பரவாயில்லை என்பதாய் இருந்தது அவனது காதல்...
திகட்ட.. திகட்ட.. தீராத காதல்!!
சொக்க ரெடியா??
