அத்தியாயம் 50
இராவண் சமையலறை வாசலில் நின்றிருந்தான். அவனுள் ஏகப்பட்ட
தடுமாற்றம்…! நிறைய குற்றவுணர்வுகள் கொழுந்து விட்டு எரிந்தன..!
குளோரியாவோ அவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தார்.
பல விநாடிகளா இல்லையில்லை சில மணிநேரங்களாக அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.
தண்ணீர் ஓசை அவ்வப்போது..! சட்டியில் சதிராடும் கரண்டியின் ஓசை மட்டுமே..!
“மாம்.. நீங்க… அப்பாவ தேர்வு பண்ணும்போது உங்களுக்கு
பயமா இல்லையா? வேறு நாடு.. மொழி.. கலாச்சாரம்…??” என்று அவன் இழுக்க..
குளோரியாவின் கைகளோ தன் வேலையை ஒரு நிமிடம் நிறுத்தின..!
ஆனால் மகனை திரும்பிப் பார்க்கவில்லை. அமைதியாக.. அழுத்தமாக தன் முன்னால் இருந்த அடுப்பு தீயை வெறித்தார்..!
“பயம் இருந்துச்சு தான்..! ஆனா.. நான் அவரை தேர்வு பண்ணல” என்றார்.
இராவண் குழம்பி “அப்போ?” என்று அம்மாவை பார்க்க..
குளோரியா மெதுவாக அவன் புறம் திரும்பியவர், “நான்
அவரோட காதலை
தேர்வு பண்ணினேன். எங்கள காதல் தேர்வு பண்ணிச்சு.. சில ஆண்கள் பொண்ணுங்க கூட சரியா
பேச மாட்டாங்க. ஏன்னா
பேச தெரியாததால இல்ல… காயப்பட்றுவோம்னு பயத்துல.. ஆனா உங்க அப்பா
என்னை விலக்கல..! எனக்காக
அவர் தன் குடும்பத்தையே விலக்கினார்.. அவர் காதலால் என்னை நிறைச்சார்.. நிறைந்துணையாய்..!”
“அப்பாவுக்கு குடும்பத்த விலக்குனதுல கஷ்டமா இல்லையா?”
“இல்லாமல் இருக்குமா..! அதிலும் அவர் அம்மா புள்ள..! அவரும் எவ்வளவு ட்ரை பண்ணாரு அவங்க கூட பேச, உறவை சரி பண்ண, பட் அவங்க வீட்ல இருந்து யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணல..” என்றார் பெருமூச்சோடு..!
“எப்படி உங்க இரண்டு பேரால அப்படி மத்தவங்க ஏத்துக்க முடிஞ்சுது.. உங்க உணவு பழக்கவழக்கங்களுக்கு அவரை நீங்கள் மாத்தினிங்களா? இல்ல அப்பா அவரோட உணவு பழக்க வழக்கத்துக்கு உங்கள மாத்தினாரா?” என்று கேட்டான்.
இதுவரை இவற்றையெல்லாம் ஊன்றி அவன் பார்த்ததும் இல்லை..!
அதைப்பற்றி பெற்றோர்களிடம் அவன் கேட்டதும் இல்லை..!
இன்று தந்தையின் கடைசி நிமிடங்களை பார்த்து பின் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உந்துதல். அதைவிட தன் தப்பை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாய் இருந்தான்.
“நான் அவர மாற்றணும்னு
முயற்சி பண்ணல. அதுபோல அவர் என்னை மாத்தனும்னு முயற்சி பண்ணல..! நாங்க எங்களை அப்படி ஏத்துக்கிட்டோம்..! மனுஷனை மாத்துற முயற்சி காதல் கிடையாது..!” என்ற அன்னையை ஆச்சரியமாக பார்த்தான் தனயன்.
“நான் அவருக்கான ஸ்பேஸ் குடுத்தேன்.. அதுபோல அவரும் எனக்கான ஸ்பேஸ் கொடுத்தார்..! காதல்ங்குறது மூச்சு முட்ட வைக்குறது இல்ல..! ஆசுவாசமாக மூச்சு வாங்க வைக்குறது..! நாமே நம் இணைக்கான மூச்சா மாறுவது” என்றார் குளோரியா.
“நான்.. எனக்கு.. ஃபர்ஸ்ட் அவள பிடிச்சியிருந்தது..! ஆனா.. ஏதோ ஒன்னு.. ம்ப்ச்.. நான் ரொம்ப கெட்டவன் இல்ல.. அரக்கன் இல்ல.. அசுரன் மாதிரி அவகிட்ட நடந்துக்கிட்ட இல்ல..” என்று அவன் விசும்ப..
குளோரியா இப்போதுஸதான்
முழுதாக திரும்பி மகனை பார்த்தார்.
இதுபோலெல்லாம் அவன் கலங்கி அழுது அவர் பார்த்ததே இல்லை..!
சிவேந்திரன் இறந்தபோது தந்நையை இழந்த மகனாய் அவன் அழுததைக் கண்டு தாயாய் அவனை அரவணைத்து இருந்தார்..! இருவரும் அவரின் இழப்பை தாங்காமல் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தனர் அந்த நேரத்தில்..!
ஆனால்.. இப்படி தன் தவறை நினைத்து அழுவான் என்று குளோரியா எதிர்பார்க்கவில்லை..!
ஆக.. இதுவே காதல் செய்த மாயம் தானே..!
இது போதும்..! இனிமே என் மகன் திருந்து விடுவான். அவன் செய்த தப்பை சரி செய்து விடுவான் என்ற நம்பிக்கை துளிர்ந்தது அவருக்கு. ஆனாலும் அதனை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை..!
“நீ அவள் விட்டு ஓடினதால
கெட்டவன் ஆகல..! அவ உன் மனசுல இருக்குறத தெரிஞ்சுக்காம நீ திரும்பிப் பார்க்காம ஓடினதால தான்
தொலைஞ்சிட்ட.. ஆமா உன்னை நீயே தொலைச்சிட்ட..!” என்று மகனின் தலையை ஆதூரமாக வருடினார் குளோரியார்.
“அப்போ… இப்போ நான் என்ன பண்ணனும்?” முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் பிள்ளை போல அன்னையின் முகம் பார்த்தான் இராவண்.
“திரும்பப் போ.. அவளட்டேயே திரும்ப போ.. அவளுக்கு உன்னை பிடிக்க வை..! அவள்ட்டேயே உன்னை பிடிச்சு வை..!” என்றார் சிறு புன்னகையோடு..!
“அப்போ.. இது தான்.. இப்படி புடிச்சு வைக்கிறது தான் காதலா??” என்று அவன் குழப்பமாய் கேட்க..
“ம்ஹூம்.. பிடிக்கறதும் இல்ல. பிடிச்சு வைக்குறதும் இல்ல.. தங்கறது..! அவ மனசுல நீ தங்குறது..! அவள் உடல் ஆவி மூச்சு எல்லாத்தையும் நீ கலந்து விரவி பரவி முற்றும் முழுதாக அவளுள் தங்கறது..!”
என்ற குளோரியா மகனை தீர்க்கமாக பார்க்க..
அம்மா அப்பாவின் காதல் வாழ்க்கை.. அம்மாவின் இந்த போதனை.. எல்லாம் அவனுக்குள் காதல் என்றால் என்னவென்று புரிய வைத்தது..!
தன் மீது ஆருஷி கொண்ட அந்த காதலை திரும்பி மீட்டெடுக்க வேண்டும் என்று எண்ணம் கிளர்ந்து எழுந்தது..!
அதற்கு முற்றுமுழுதாக தன்னவள் மீதான தன் காதலை தெளிந்து விட்டிருந்தான்..!
“நியூயார்க் நகரம்..
உறங்கும் வேலை..”
என்ற பாடல் போல..
அந்த நகரமே உறங்கிக் கொண்டிருக்க இவன் மட்டும் தன் கையில் இருந்த ஃபோனில் அவளுடனான் தன் நேசங்களை புகைப்படங்களாக பதிவு செய்திருக்க.. அதையெல்லாம் மீண்டும் ஒரு முறை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆம்.. மீண்டும் ஒரு முறை..! அவனுக்கு இயற்கை தந்திருக்கும் ஒரு சந்தர்ப்பம், மீண்டும் ஒருமுறை அவன் காதலை அவன் அடைய..!
அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டான் இந்த காதல் அரக்கன் இராவண்..!
“காதல்…
பிடிக்கறது இல்லை.
தங்கறது” என்ற குளோரியாவின் வார்த்தை அவன் காதுக்குள் ரீங்காரமாய் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க..
மெல்ல அவன் கண்களை மூடின.
அவன் நினைவுக்குள்..
அவளின் சிரிப்பு..
அவளின் அழுகை..
அவளின் கொஞ்சல்..
அவளின் கெஞ்சல்..
அவளின் காதல்..
அவளின் அந்தரங்கள்..
கடைசியாக.. அவளின் கை பிடிக்க முயன்ற நொடி..
அவன் கை விட்ட நொடி.. என்று அனைத்தும் சட்டு சட்டென்று அவனது நினைவில் உலா போக..
இப்போது அவன் கண்களில் ஈரம்..!
“பாப்பா.. ஐ மிஸ் யூ டி..! ரியலி ஐ மிஸ் யு டி..!” என்று குரல் கமற, தன் கையில் உள்ள அவரது போட்டோவை பார்த்து கூறினான்.
“நான் அவளை விட்டுப் போகல…
என்னை விட்டுப் போய்டடேன். என் காதலை விட்டுட்டு போய்ட்டேன்..!” என்று கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டவன்,
ஃபோனில் வாட்ஸ்அப்பில் அவளது எண்ணை எடுத்து,
“சாரி.. டா பாப்பா..” ம்ஹீம் அழித்தான்..!
“நான் தான் தப்பு டி பாப்பா..” ம்ஹீம் அழித்தான்..!
“பேட்லி மிஸ் யூ டி பாப்பா..”ம்ஹீம் அழித்தான்..!
“ரியலி.. ரியலி.. சாரி டி பாப்பா” ம்ஹீம் அழித்தான்..!
“ம்ஹூம்.. எதுவும் சரியில்ல.. நாளைக்கு அவளை கேம்பஸில் போய் பார்க்கலாம்..!” என்று முடிவெடுத்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் பிடித்துக் கொள்ள.. குளோரியாவும் அவனை சாடி விட்டு திரும்பவும் சென்றுவிட.. இவன் அவளை தேடி வந்த போது அங்கே ஆருஷி இல்லை..!
“நீ இங்க இல்லைன்னா உன்னை விட்டு விடுவேனா டி பாப்பா? நீ என்னவள் டி பாப்பா..! நோ ஒன் சேஞ்ச் இட்.. ஈவன் யூ” என்று அவளை தொடர்ந்து இந்தியாவும் வந்தான்..!
அவளுடனே இருக்க வேண்டும் என்றும், அவளை தன் காதலால் மாற்ற வேண்டும் என்றும், தம்பி தான் நான் காதலை மீட்டு எடுக்க வேண்டும் என்றும் தான் அவர்கள் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மருத்துவராக பணியில் சேர்ந்தான்.
அவளை சீண்டி சீண்டியே அவள் மனதில் உள்ளவற்றையெல்லாம் கொட்ட வைத்தான்..!
கோபத்தை மனதிலேயே வைத்திருந்தால் அது நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கும் தவிர.. அதன் தாக்கம் குறையாது..! அதன் வெப்பமும் தணியாது..!
அதுபோல தான் ஆருசின் கோபத்தையும் மனதிற்குள்ளே இருக்க விடாமல் வெளியே கொட்ட வைத்து, அவளை மீண்டும் ஒருமுறை காதலிக்க அவன் முயற்சி செய்ய..
எதிர்பார்ப்பாரத விதமாக அவன் பாப்பாவுக்குள்ளே ஒரு பாப்பா வந்து அவனை திக்கு முக்காட வைத்தது..!
இனி எல்லாம் சுகமே என்று அவன் நினைத்திருந்த வேளையில் அவனை விட்டு பிரிந்து போய் மீண்டும் அவனுக்கு ஒரு ஆட்டம் காட்டினாள் ஆருஷி..!
நீக்கமற நிறை பொருளாய் தன்னுள் நிறைந்துணையாய் தன்னவள் நிறைந்திருக்கிறாள் என்று பரி பூரணமாக இராவண் திரேந்திரன் மாறவேல் உணர்ந்த கணம் அது..!
“அப்புறம்.. அப்புறம் என்ன ஆச்சு?” அடுத்து என்ன நடந்தது என்று தெரியாதது போலவே, அவன் கைவளைவில் படுத்துக்கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தாள் ஆருஷி..!
அவள் கண்களோ குறும்பில் மின்ன.. அதரங்களோ வெடித்து கிளம்பும் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தது..!
“அப்புறம் அப்புறம் என்ன நடந்ததுனு உனக்கு தெரியாதுல்ல?” என்று அவளை விட குறும்பாக அவளைப் பார்த்தவன்,
“அப்புறம் ஒத்தே ஒத்த கிஸ் தான்.. இப்படி..” என்று அவளின் துடித்த அதரங்களை தன் அதரங்களுக்குள் கடித்து மென்று சுவைத்தவன்,
“இப்படி இப்படி.. ஒத்தே ஒத்த கிஸ் தான் டி கொடுத்தேன். என் பாப்பா.. கோபத்தை எல்லாம் மறந்துட்டு என் பின்னாடியே மயங்கி கிறங்கி வந்துட்டா” என்றவன் பொய்களாக அவிழ்த்து விட..
“எது? எது? நான் உன் கிஸ்ல மயங்கி உன் பின்னாடி வந்துட்டேனா? படவா ராஸ்கல்..! பொய்யா சொல்ற?” என்று தலையணையால் அவனை மொத்தி எடுத்தாள் ஆருஷி..!
இருவரும் சிறிது நேரம் விளையாட்டுக்குப் பின் மூச்சரைக்க பார்த்து மீண்டும் சிரித்தனர்.
“இனி.. என்னை விட்டு போகாத டி பாப்பா..! என் அப்பா என் அம்மாவை காதலிச்ச அளவு இல்லனாலும் கண்டிப்பா.. என் முழு மனசோட உன்னை காதிலிச்சிட்டே இருப்பான் இந்த இராவண்..!” என்றவன் தன் கையை அவள் முன்னே நீட்ட,
அதனை இறுக்கமாக பற்றி கொண்டவளோ, “என் நேசம் நீ.. என் காதல் நீ இராவணா..!” என்று அவனுடன் அணைந்துக் கொண்டாள்.
அதன்பின் இருவரும் உறங்க, காலையில் அழைப்பு மணி சத்தத்தில் அவசரமாக எழுந்தவன் அருகே பார்க்க.. அவனது ஆசை காரிகையோ இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள்.
“ராத்திரி கதை கேட்கிறேன்னு ரெண்டு மணி வரைக்கும் தூங்காம ஓட்டிட்டு.. இப்ப தூங்குறத பாரு.. சரியான இம்சை அரசி டி நீ” என்று செல்லமாக அவளை கடிந்து கொண்டவன், அவள் நெற்றியில் விழுந்து முடிகளை ஒதுக்கியவன், அழுத்தமாக முத்திட்டான்..
திரும்பவும் விடாமல் அழைப்பு மணி அ
ழைக்க.. அவசரமாக ஓடி வந்து கதவை திறந்தவன் ஆச்சரியத்தில் கண்களை விரித்தான்.
“குட் மார்னிங் கண்ணா..!” என்று அழகிய முறுவலோடு நின்று இருந்தார் குளோரியா..!
வருவான் அசுரன்...
