மூன்று தினங்களுக்கு பின்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம், கவலை, இன்பங்களோடு நாட்கள் கடந்திருந்தது. பிரதீஷ் நடவடிக்கை எல்லோரையும் வெகுவாக கோவமடைய வைத்திருந்தாலும், ஈரைந்து திங்கள் பாதுகாத்து பெற்ற அன்னை மனம் தான் யாரிடமும் கூறி அழ முடியாத நிலையில் மன பாரமாக இருந்தது.
மகனோ திருமணம் வேண்டாமென எல்லோர் முன் அறிவித்து விட்டு சென்றதில் இருந்து, கல்யாணி தான் கணவரிடம் வாங்காத வசையெல்லாம் கேட்டு கொண்டார்.
ஏன் அவர் உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவை கூட அவர் விட்டு வைக்கவில்லை. அவரே இப்போது தான் அழுது சோர்ந்து உறங்கினார். உறங்காத சதாசிவம் அவர்களோ, ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் மனைவியை அழைத்தார்.
அவரோ கண்களை திறக்க முடியாமல் வாரிச்சுருட்டி எழுந்து அமர, "உன் பையனுக்கு போன் பண்ணு.." என்றார் கரகரத்த குரலில். அதிலே அவரின் உறக்கம் பறி போனது.
"இந்நேரத்துல எதுக்குங்க? அவன் தூங்கிட்டிருப்பான். மணியை பாருங்க.." என்றவர் சுவர் கடிகாரத்தை பார்க்க, சதாசிவம் அவர்களோ மனைவியை பொசுக்கி விடுவது போல் பார்த்தார்.
"நான் சொல்லுறதை நீ கேளு. எனக்கு ஒன்னும் நீ பாடம் நடத்த வேணாம்." என்றார் கட்டளையாக. இதற்கு மேல் அவர் அதை செய்யாது இருந்தால் அவ்வளவு தான், அவரை எப்படி துச்சமாக பேச முடியுமோ அப்படி பேசி விடுவார்.
திருவிழா என்பதால் தான் தெய்வானை வீட்டில் இருந்தனர். நேற்று காலைப் பொழுதிலே அவர்களின் வீட்டிற்கு திரும்பி விட்டனர். அதனால் மாடியில் இருக்கும் பெரிய மகன் மற்றும் மருமகள் காதிற்கு எதுவும் விழாது என்னும் தைரியத்தில் மீண்டும் வசை பாட துவங்கி விட்டார்.
"இவனை படிக்க வச்சது தான் என் முதல் தப்பு. ரெண்டாவது எனக்கு நல்ல பிள்ளையா இருப்பான்னு நினைச்சேன். அதுல மண்ணை வாரி இறைச்சிட்டான். இப்போ அவனை கொல்லாம விட்டது தான் தப்பு." என அவர் சற்றே ஆத்திரமாக பேசியதில், கல்யாணி அவர்களுக்கு தான் நெஞ்சடைத்து போனது.
"என்னங்க.. பேச்சு இது.. மூணுல ஒரு பிள்ளை.. அப்படி தான்.. அதுக்குன்னு இப்படியா பேசுவீங்க.." என்றவர் காதில் இருந்த போனை கீழே வைத்தார். மகன் அழைப்பை ஏற்கவில்லை என்பதை புரிந்து கொண்ட சாதாசிவமோ, "விடியட்டும்.. இவனுக்கு இருக்கு.." என தன்னிலை மறந்து வெறி பிடித்தவராய் கூறுவதை கண்ட கல்யாணி தான் மேலும் வேதனை தாளாது கண்ணீர் உகுத்தார்.
பாலக்காடு(ஆலத்தூர்)
இரவு 1.27மணி
வான் மகள் பூசிய அஞ்சனையை, அவ்வறையும் தனதாக்கி பூசிக்கொண்டது அந்த நள்ளிரவில்.
விசாலமான அந்த அறையில், பிரதீஷை கட்டியணைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் குஷி.
இருவரின் மூச்சு விடும் சத்தத்திற்கு, அறையில் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஃபேன் போட்டியிட்டது. குஷி உறங்கி கொண்டிருந்தவள், ஃபேன் நின்று போனதில் திடுமென கண் விழித்தாள்.
"மாமா.. மாமா.. கரண்டு போச்சு.. பாட்டி ரூம்க்கு போலாம்.. எனக்கு பயமா இருக்கு.." என உறங்கி கொண்டிருந்தவனை தட்டியெழுப்பி கூற, அவனோ உறக்கத்திலே அவளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கினான்.
'முதல ups வாங்கி மாட்டணும். நானும் சொல்லி அலுத்து போனது தான் மிச்சம்.' என நொந்து கொண்டவன், ஜன்னல் கதவை திறந்து வைத்து விட்டு, மீண்டும் மெத்தையில் சரிந்தான். மறுபடியும் ஃபேன் சுழல துவங்கியது. தூக்கத்தில் விருட்டென எழுந்து கொண்டதில், அவன் நேத்திரங்கள் மீண்டும் சோர்வோடு சொருகின.
அது வரை இருந்த மின்சாரம் டப்டப்பென மின்னி மீண்டும் அணைந்து போனது. மயான அமைதியை கொண்டிருந்த அவ்விடத்தில், சிறு சிறு பூச்சியினங்கள் மற்றும் ஒருவித பறவையினங்கள் சத்தம் மெல்ல கேட்க துவங்கி, ஒரு சில கணத்திற்கு பின் பேரிரைச்சல் போல் ஒலி எழுப்பியது.
அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் வாரி எழுந்து அமர்ந்து கொண்டான். அவ்விரைச்சல் அவனை காதடைக்க வைப்பது போல் இருந்தது. எழுந்தவன் கடுப்போடு ஜன்னல் கதவை அறைந்து சாற்றினான்.
மல்லாக்க படுத்தவன் விழிகள் மெல்ல மூடியதில், அவள் நினைவு சாமரம் வீசியது. இதுவரை நேரில் காணாத ஒருவளை கனவில் கண்டு கொண்டு, ஒருவித மயக்கத்தில் இருக்கிறான்.
நிச்சயம் அவளது முகத்தை அவன் மனதார என்று அடையாளம் காண்கிறானோ, அன்று அவள் கரம் பிடிப்பானா? இல்லை விதி வலியது என்பதை உணர்வாளா அவள் என்பது யாரும் அறியா ஒன்று.
"பிரதீஷ்ஹ்ஹ்.." என ஒருவித தகிப்பில் அவன் பெயரை உச்சரிக்க, அவனோ அவளது வெற்றிடையை இடது கையால் வருடியப்படி அவள் காதோரம் நா கோலமிட்டுக் கொண்டிருந்தான்.
"ம்ம்.. என்ன?" என்றான் மேலும் தாபமான குரலில்.
"கையை எடு டா.." என்றவள் அவனது குறுகுறுப்பை தாக்கு பிடிக்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்.
அவளது இடையில் இருந்த கையை விலக்க முயற்சிக்க, அவனோ அவள் கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்து அழுந்த பற்றிக் கொண்டான்.
கன்னமோடு கன்னம் சேர்த்து சூடு பரப்பியவன், அவள் குழலை முன் தோளில் ஒதுக்கி விட்டான். அதில் மேலும், அவன் விரல் பட்ட இடம் கண்டு அவள் நெளிந்ததில் திமிற முடியாதபடி அணைப்பு இறுகியது.
அவன் இதழ்கள் உஷ்ண மூச்சுக்காற்றோடு முதுகில் ஊற, அவள் தான் கூச்செறிந்து புது ஈனஸ்வரத்தில் அவன் பெயரை உச்சரித்தாள்.
கன்னத்தில் இருந்த அவளது உள்ளங்கையில், அந்த அமைதி பரவியிருந்த அறை அதிர முத்தமிட; அவனது வலிய மார்பில் இருந்து விலக முயற்சித்தாள்.
முயற்சி தோற்று போனதில், "ப்ளீஸ்.. பிரதீஷ்.. லீவ் மீ.." என்றதில் அவளை விட்டான். ஆனால், அவள் யாசித்ததற்காக அல்ல.
அவனோ விஷமம் சிந்தும் புன்னகையோடு, அவளை அள்ளி அணைக்க முற்பட்டான். திண்ணிய மாரில் கை வைத்து அவனை தடுத்தவள் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாது திணறி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஆடவனின் வெற்று மேனியில் அணையிட்டு இருந்த கையை எடுத்து விட்டாள்.
அழுத்தமாய் அவள் கன்னம் பிடித்து திருப்பிட, பயத்தில் இறுக விழி மூடிக்கொண்டாள்.
"என்ன பயமா.." என்றான் ஹஸ்கி குரலில்.
அதற்கு அவள் பதில் கூறும் நிலையில் இல்லை என்பதை நன்கு அறிந்து கொண்டே, அக்கேள்வியை கேட்டான்.
அவனோ ரசித்து.. ருசித்து.. அவள் இதழை பதமாய் கொய்து எடுக்க லேசாக தலை சரிய, முன்னேறிட..
டமாரென ஒரு சத்தம் கனவு போதையை கலைத்திட, விருட்டென எழுந்தான்.
ஆழ்ந்து மூச்செடுத்த பின் அது கனவென அவன் அறிந்து கொண்டான். அத்தனையும் நிதர்சனம் என அவன் மூழ்கியிருக்க, ஏதோ ஒரு சத்தம் அவனது ஒரு முத்தத்தை கெடுத்து விட்டதில் ஆத்திரமடைந்தான்.
"அவ வரதே பெரிசு.. நானும் ஏதேதோ ட்ரை பண்ணி.. சே.. என்ன கருமம் விழுந்து தொலைச்சதுன்னு தெரியல.. அடியே எங்க டி இருக்க? கனவுல வந்து என்னையும் எதையும் பண்ண விடாம, நீயும் பண்ணாம ஏன் டி சாகடிக்கிற? இனிமேல் வராதே.." என்றவன் புலம்பிடும் நேரம் மீண்டும் டொம்மென ஒரு சத்தம் அவனது தாப உணர்ச்சியை தெளிவைடைய வைத்தது.
மொபைலில் இருந்த டார்ச்சை ஆன் செய்து பார்த்தான். அழகுக்கு என அவன் வாங்கி வைத்த ஃபிளவர் வாஷ் கீழே விழுந்து நொறுங்கி போயிருந்தது.
அவன் இருந்த மூட்க்கு உண்மையில், எப்படி இது உடைந்தது என அவன் யோசிக்கவில்லை. மாறாக அம்முத்தம், அவள் முகம் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சற்று எதிரே இருந்த ஜன்னல் கண்ணாடியில், நீரை விட சற்று திடமான ஒரு திரவம் வழிவதை மொபைல் வெளிச்சத்தில் பார்த்தான். அவன் கண்களில் உண்மையில் பயம் இல்லை. அது என்ன என காணவே இலக்காக இருந்தான். அது ஏதோ முதலில் ஊர்ந்து செல்வது போல் சென்று எழுத்தும், எண்ணாக மாறியது.
71 நாட்கள்
என சில நொடிகள் தெரிந்த எழுத்துக்கு பின், மிக பயங்கரமான நாய் ஊளையிடும் சத்தம் அவன் செவியை அடைத்தது. முதலில் ஒரு நாய் தொடங்கி, அதன் பின் பல நாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிட்டதில் அவன் விழிகளில் இப்போது தான் பயம் விரவியது.
நொடி பொழுதில் அவ்வெழுத்து மறைந்து போனது. ஆனால், அவன் விழிகளிலும் மனதிலும் ஆக்கிரமித்திருந்த பயத்தை அவனால் தான் யாரிடமும் கூற முடியவில்லை.
யாருமில்லா தனியறையில், இருள் நிறைந்த வேளையில் இப்படியொரு நிகழ்வு யாருக்கு தான் உறக்கத்தை தரும். முற்றிலும் தொலைந்து போனது அவன் தூக்கம்.
இது கனவா? இல்லை பிரமையா? என அவன் யோசிக்கும் நேரம், மீண்டும் அவ்வெழுத்து மின்னி மின்னி மறைந்தது. பிரதீஷ் அவன் நெஞ்சில் கை வைத்தப்படி, பயத்தில் மெத்தையிலே மயக்கம் கொண்டு சரிந்தும் விட்டான்.
அதன் பின் வந்தது கனவா? இல்லை எதிர்கால நிஜமோ? ஏதோ ஒன்று அவனையே விழியோரம் நீர் சுரக்க வைத்தது.
இளம் வயது பெண்ணோருத்தி, புதிய மஞ்சள் கயிறு கூட பிரித்து கோட்காத நாளுக்குள் தான் அவர்கள் திருமணம் முடிந்த நாளான நிலையில், தொண்டை கிழிய அவன் பெயரை உச்சரித்தாள்.
"பிரதீஷ்.. பிரதீஷ்.."
"கண்ணை திறந்து பாரு டா.. என்னை பாரு.. பிரதீஷ்.. என்னை விட்டு போயிட்டயே.. டேய் பிரதீஷ்.. என்னை பாரு..
அய்யோ.. கடவுளே.. இப்படியொரு நிலையிலயா உன்னை நான் பாக்கணும்? வார்த்தைக்கு வார்த்தை லவ்வை சொல்லுன்னு சொன்னயே..
அதெல்லாம் காது குடுத்து கேக்காத.. மாதிரி.. இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போன?" என்றவள் கண்ணீரும் கம்பலையுமாக அவன் உயிர் துறந்ததை நினைத்து கதறிட, கனவு கண்டு கொண்டிருந்த நாயகன் கண்ணிலே நீர் கசிந்தது.
"பாரு டா.. நீ கட்டுன தாலியை இவ்வளவு சீக்கிரம்.. நீயே அத்து வீசுற.." என்னும் போதே ரத்தம் படிந்திருந்த அவன் நெஞ்சில் புதைந்து, அடித்து அழுதாள் துக்கம் தாளாது.
பதறி எழுந்தான் பிரதீஷ். அவளது ஓலம், அவனையே கண்கள் கலங்க வைத்தது. அவனுக்கு நடந்த விபத்து கூட பெரிதாக தெரியவில்லை. அப்பெண்ணின் வலி நிறைந்த கூக்குரல், அவன் நெஞ்சையே கூரிட்டது அதை மீட்டி பார்த்த தருணம்.
ஆனால், சற்று முன் நடந்த வினோதமான நிகழ்வு அவன் நினைவில் இருந்து முழுவதும் காணாமல் போனது.
வழக்கம் போல் இக்கனவை பற்றி சிந்தித்தவன் மனமோ, "ஆமா.. இன்னும் எவளும் வரலை. இதுல கல்யாணம் ஆகி சாக போறேனா? சரி அதுக்கு முன்னாடி அந்த சீனை மட்டும் பண்ணிடு டி. செத்தாலும் நிம்மதியா சாவேன்.
சீன் ரொம்ப முக்கியம். அகைன் சொல்லுறேன்.." என்று தானாக பேசிக்கொண்டே குளியலறை நோக்கி நடந்தான். ஒரு குளியலுக்கு பின் அவன் உடல் கொண்ட சூடும், அசதியும் காணாமல் போனது.
'எவ அவ? கனவுல வந்தே டிஸ்டர்ப் பண்ணுறா? ஒருவேளை நேர்ல வந்தா..' என அவன் மனமோ தலை துவட்டியப்படி யோசிக்க, மூளையோ 'வாய்ப்பில்லை' என்றது எகத்தாளமாக.
இதுவரை இல்லாத மின்சாரம் பட்டென வந்திட, ஃபேனும் இயல்பாக சுழன்றது.
'இனி நீ வந்தா என்ன? வரலைனா என்ன?' என எண்ணியவன் மணியை பார்க்க, மணி மூன்று என்பதை எண்ணி அழாத குறையாக நொந்து கொண்டான்.
'நேர்ல என் அப்பன் தொல்லை. கனவுல உன் தொல்லை. மனுஷனை வாழவும் விட மாட்டுறீங்க, சாகவும் விட மாட்டுறீங்க' என புலம்பி தவித்தவன், மொபைலை நோண்டி முடித்து உறங்கிட விடியற்காலை ஆனது.
தேன்மழை💖💖
