அழகன் 9
“எம்மோவ்.. அம்புடுதேன் பார்த்துக்கோ..”
“யய்யா.. ஏன் யா இம்புட்டு கோவம்? நான் சொல்றத கேளும்யா.. அவளே பாவம், பூஞ்ச உடம்புக்காரி” என்று கலையரசி மகனிடம் தண்மையாய் பேச,
“எதே பூஞ்ச உடம்புக்காரியா? உன் தம்பி பொண்டாட்டி நல்ல தயிரும் வெண்ணையுமா கொடுத்து தேன் வளர்த்து வச்சிருக்காக..”
“நெசம் தேன்… ஆனாலும் ஆண்டாளு, நம்ம கண்ணியோட சின்ன பொண்ணு..” என்றவரை கண்டவன், பல்லைக் கடித்தான்.
“எம்மோவ்.. என்னமா நெனைச்சிட்டு இருக்க நீ? என்ன தான் உன் கோளாறு?” என்று அவன் கத்த..
“யய்யா.. சத்தம் போடாதயா உன் அப்பத்தா காதுல விழுந்துறபோது. சரியான பாம்பு காது என் மாமியாளுக்கு..!” என்று எக்கி மகனின் வாயை பொத்தி சுற்றும் மற்றும் பார்த்தார் கலையரசி.
எங்காவது சொக்கியம்மாள் கண்ணில் தென்படுகிறாரா என்று..!
இல்லை என்றதும் தான் அவருக்கு பெருமூச்சு வந்தது..!
விஷயம் பெருசாக ஒன்றும் இல்லை..!
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மறு வீடு சென்று வந்த முதல் ஒரே அறையில் இருந்தபோது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
ஆனால் அப்பத்தா சொன்னதும் அவளுடன் பழகுகிறேன் என்று தன்னை பற்றி எல்லாம் கூற விளைந்தான் அழகன் ஆசையாக..!
அதிலும் தான் ஆசை ஆசையாக வளர்க்கும் கடம்பனையும் வெள்ளையனையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்துச் சென்றிருந்தான் அழகன்.
ஆனால் பழகுவதற்கு குழந்தையாக இருந்தாலும் பார்ப்பதற்கு கொலை நடுங்க வைக்கும், அந்த இரண்டு கொம்பு சீவிய காங்கேயம் காளைகளைக் கண்டதும் காரிகையோ மீண்டும் மயங்கி விழுந்து விட்டாள்.
“பாரு யேன் தம்பிகளா.. இந்த ஜில்லா ஜல்லிக்கிட்டுல அவனுகள அடக்க யாருமே இல்ல..” என்று ஆரம்பித்தவன், ஜல்லிக்கட்டு பற்றி விலாவரியாக விவரிக்க... விவரம் கேட்க இருந்தவளோ மயங்கி சரிந்திருந்தாள்..!
ஜல்லிக்கட்டு அல்லது சல்லிக்கட்டு..!
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்..!
அதோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த "சல்லிக் காசு" என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது.
மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு ஆனது.
அழகனின் ஊரான அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் பிரசித்தி பெற்றதாகும்..!
அதுவும் பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டுக்கு என்றே மாட்டை வளர்த்தி.. அதுக்கு ஏற்றவாறு மாடுகளுக்கு பயிற்சி அளித்து.. ஜல்லிக்கட்டு சமயத்தில் எந்த வீரராலும் பிடிக்க முடியாத முரட்டுக்காளையாக அடங்கா காளையாக வளைய வரும் அழகன் வீட்டு காளைகள்..!
ஜல்லிக்கட்டில் மாடு பிடிபடவில்லை என்றால், பெரும்பாலும் மாட்டின் உரிமையாளரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார் அல்லது குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் மாட்டின் உரிமையாளருக்கே வழங்கப்படும். இது மாட்டின் உரிமையாளருக்கு பெருமையையும், சில சமயம் பரிசுகளையும் கொண்டுவரும்..!
மேலும் பல சமயங்களில் பிடிபடாத காளைகள் 'வீரக் காளைகள்' எனப் போற்றப்பட்டு, அடுத்தடுத்த போட்டிகளில் அதிக முக்கியத்துவம் பெறும்.
அத்தனை சிறப்பு வாய்ந்த வீர காளைகள் தான் இப்பொழுது அழகனிடம் இருக்கும் கடம்பனும் வெள்ளையனும்..!
அதில் தான் எத்தனை பெருமை.. எத்தனை கர்வம்..
எத்தனை திமிர் அழகனுக்கு..!
ஆம்.. அவனின் திமிரும்..
அவன் காளைகளின் திமிலும்..
அத்துணை ஆளுமை..!
தமிழும் திமிலும் தமிழனின் அடையாளங்கள் அல்லவா??
இப்படி கர்வமுடன் வலம் வந்தவன் அழகன், அவன் பெருமையாக வளர்க்கும் காளைகளைக் கண்டு அவனது மனைவியே பயந்து மயக்கம் போட்டு விழுந்தால்.. அவனின் மனநிலை எப்படித்தான் இருக்கும்?
அதற்கும் கொஞ்சமும் குறையாமல் அவனது அம்மாவே அவள் பூஞ்சை உடம்புக்காரி.. மிகவும் பயந்தவள்.. அவளை இப்படி எல்லாம் போட்டு படுத்தாதே.. காளைகளிடம் கொண்டு செல்லாதே.. என்று கூறினால்? எத்தனை கடுப்பாக இருக்கும் அழகனுக்கு??
போதாத குறைக்கு,
“புள்ளைக்கு மனபலமே இல்ல.. ஒரு பத்து நாளு என்கூடவே ஆண்டாளு இராவு தங்கி கிடட்டும்யா.. பாண்டி கோவிலுக்கு போயிட்டு ஒருமுறை பூச போட்டு, விபூதி அடிச்சிட்டு வந்தா புள்ளைக்கு கொஞ்சம் தெகிரியம் வரும்” என்றதும் இன்னும் கடுப்பாகி விட்டான் அழகன்.
“அம்புட்டு தேன்.. சொல்லிட்டேன்.. நானு..!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக அவன் உறும…
“யேன் இம்புட்டு கோவம் யா.. செத்த பொறு யா” என்று தாடையில் கை வைத்து மகனை பார்த்த கலையரசி, மகனை அடக்க முயல..
அவனோ ஜல்லிக்கட்டு காளையாய் மூக்கில் மூச்சை விட்டப்படி கிட்டி வாசலை தாண்ட முயன்று, அன்னையை முறைத்தவன்,
“இங்கன பாரு மா.. எனக்கும் பொறும ஒரு அளவுதேன்.. பொறும பறந்துச்சு.. அம்புட்டு தேன் அத்தன பேரும் பாத்துக்க” என்று மூக்கணாங்கயிறு கட்டியும் அடங்காத காளையாய் சிலுப்பிக் கொண்டு இருந்தவனை கண்டு சற்று துணுக்குற்றது கலையரசி மனம்.
எங்கே இவன் சத்தம் போட்டு அந்த சத்தத்தில் சௌக்கியம்மாள் வந்துவிடப் போகிறாரோ என்று தான் அவருக்கு பயமே..!
“அடேய்.. என்ன டா, யேன் பொஞ்சாதி கிட்ட ரகசியம் பேசிட்டு இருக்குறவன்? கடைக்கு போற ஐடியா எதுவும் இல்லையோ..” என்றப்படி வந்தார் போஸ்பாண்டி.
பர்னிச்சர் கடை ஒன்றை இரண்டு மூன்று இடங்களில் தொடங்கி அதனை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறான் அழகன்.
இதற்கு முன் அரிசி மண்டி ஒன்றை தொடங்கி அதுவும் மதுரையின் பல இடங்களில் ‘அழகன் அரிசி மண்டி’ என்று வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.
இவன் ஒரு தொழிலை தொடங்கி ஒரு கட்டத்தில் அதில் தன்னிறைவு பெற்று வியாபாரம் நன்முறையில் வந்த பின்.. அடுத்து வேற என்ன? வேற என்ன? என்று தான் அவனின் தேடல் துவங்கும்..!
இப்படியாக அரிசி மண்டியை அடுத்து அவன் தென் மாவட்டங்களுக்கு பார்சல் கொரியர் அனுப்பும் லாரி புக்கிங் ஆபிஸ் செய்யும் தொழிலை தொடங்கினான். அதனையும் திறன் பட நடத்தி அதிலும் தன் ஜாகையை பதித்து இப்பொழுது பர்னிச்சர் கடையில் வந்து நிற்கிறான்..!
இதற்கு இடையில் அவர்களுக்கு இருக்கும் தோப்பு துறவு அதையும் ஒரு சுற்று வருவான் தந்தையோடு..!
இப்படி காலையில் எழுந்தால் நிற்க கூட நேரமில்லாமல் சுற்றும் மகன், இப்படி அம்மாவோடு நின்று பேசிக் கொண்டிருக்கிறானே, அப்படி என்ன முக்கியமாக விஷயமாக இருக்கும் என்று யோசனையோடு வந்தார் போஸ்பாண்டி..!
“ம்க்கும்.. அப்படியே ரகசியம் பேசிட்டாலும்..” என்று முணுமுணுத்தவனை அவர் என்னவென்று மீண்டும் கேட்க…
“ம்ம்ம்.. யேன் பொஞ்சாதி கூட இரகசியம் பேச விட்டு இருந்தா நான் யேன் உம்ம பொஞ்சாதி கிட்ட ரகசியம் பேசப் போறேன்?” என்றான் கடுப்பாக..!
“என்ன பேசுறியான் இவேன்? என்னென்னு தெளிவா சொல்லு டா மவனே?” என்று மகன் மற்றும் மனைவியை அவர் மாற்றி மாற்றி பார்க்க.. கலையரசியோ நெளிந்தார் கணவனைக் கண்டு..!
“நீயே சொல்லு உம்ம புருசன் கிட்ட..!” என்று இடது கையால் வேட்டியை மடித்து பிடித்துப்படி கோப வேகமாக சென்ற மகனை கண்டு கலையரசி பெருமூச்சு விட்டார்.
“என்ன கலை என்ன விசயம்? ஏன் அவேனுக்கு இம்புட்டு கோவம்?” கணவர் கேட்டதும்..
சுற்றி முற்றி பார்த்த கலையரசி கணவனின் அருகில் சென்று குசுகுசுக்க…
அதை கேட்டதும் அத்தனை கோபம் அவருக்கு.
“பொசக்கெட்டவளே.. அறிவு இருக்கா உனக்கு? நீயும் பொம்பளனு கண்டாங்கி கட்டிகிட்டு திரியுறவ? உன்னயெல்லாம்.. !!! புள்ளையே வெட்கம் விட்டு கேட்கும் அளவா வைச்சிருக்குறவ?” என்று கடிந்துக் கொண்டார்.
அந்நேரம் பார்த்து அங்கே வந்த அவர்களது அழகு பெத்த மருமகளோ..
“மாமா என்ன பண்றேள்? ஏன் அத்தைய திட்டுண்டு இருக்கேள்?” என்று மாமனை பார்த்தாள், அதனால் சற்றே கோபம் கூட…
“அதில்ல மருமவளே…” என்று ஆரம்பித்தவர் பின் மருமகளிடம் எப்படி மகனை பற்றி பேசுவது என்று தடுமாறி, பின் மனைவியை முறைத்து,
“பாரு.. உன்னால நான் எப்படி தடுமாறி நிக்கேனு.. மருமவ புள்ளக் கிட்ட நான் பேசுற பேச்சா இது.. அறிவுக் கெட்டவளே...” என்று மகனுக்கு குறையாத கோபத்துடன் மனைவியை கண்டு காண்டாகி பல்லைக் கடித்தார்.
“என்ன மாமா.. திரும்ப திரும்ப அத்தைய திட்டுண்டே இருக்கேள்?” என்று மாமனிடம் கோபப்பட்டவள்,
“இந்த ஆத்துக்கு வாக்கப்பட்டு வந்தா இவாளுக்கு எல்லாம் நாம் ரொம்ப இளப்பமாக போய்ட்டோமா? வாங்க அத்த.. நாம நம்ம பொறந்த ஆத்துக்கே போவோம்..” தன் மாமியாரும் அத்தையுமாகிய கலையரசியை கையோடு இழுத்துக் கொண்டு சென்ற மருமகளை கண்டவர்,
“ஒரு வூட்டுல இருந்து மாமியாளும் மருமவளும் வந்து எங்களுக்கு தேன் ஆப்பு வைக்கிறாளுவோ.. அடேய் மகனே.. இன்னைக்கு இராவு மொட்ட மாடியில உன் பக்கத்துலேயே எனக்கும் பாய போடு டா” தலையில் கை வைத்தார் போஸ்பாண்டி..!
அழகன் சென்றதெல்லாம் கணக்கே இல்லை என்று அத்தையோடு சேர்ந்து சமையல் அறையில் ஐக்கியமாகிவிட்டாள் ஆண்டாள்.
“ச்சூ.. அத்த.. செம காரம்.. இவ்வளோ காரம் சேர்த்து நீங்க சமைச்சு போட்டு தான், உங்க புள்ளைக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது…அதோட.. விசுக்கு விசுக்குன்னு வேட்டியை புடிச்சுகிட்டு கிளம்பிட்டாரு.. எல்லாம் உங்களால தான்” என்று காரகுழப்பை ருசித்தபடி கணவனை மாமியாரிடம் குறை பேசிக் கொண்டிருந்தாள்.
“எவடி அவ என் பேரன நாக்கு மேல பல்லை போட்டு பேசுறது?” என்றபடி சொக்கியமாள் சமையலறைக்குள் வர.. இரு பெண்களும் திருத்திரு வேலை முழித்தனர்.
“எவ மாமியா எவ மருமவனே தெரியல இந்த வூட்டுல?” என்றபடி இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைக்க..
அதில் அய்த்த சின்ன பொண்ணு…
ம்ம் சொல்லு.. அடுத்து உன் தம்பி பொண்ணு.. அதனால அவ என்ன பேசினாலும் ஈனு பல்ல இடிச்சுக்கிட்டு நிக்கிற.. இதெல்லாம் ஒரு குடும்பமா? இந்நேரத்துக்கு அவ பேசின பேச்சுக்கு மாமியாரா அவ காது புடிச்சி திருகி தலைல ரெண்டு கொட்டு போட்டு இருக்க வேணாம் நீனு” என்று சொக்கியம்மாள் பேச..
அது என்ன ஆச்சு காலையிலிருந்து எல்லாரும் எதுக்கெடுத்தாலும் எங்க அத்தையையே குறை சொல்லிட்டு இருக்கீங்க இப்படியே குறை சொல்லிட்டு இருந்தீங்க நான் எங்க அத்தையை கூட்டிட்டு எங்க அத்துக்கே போயிடுவ என்று மாமனிடம் சொன்ன அதே அறிக்கை சௌக்கியமாளிடம் அவள் பாலோ செய்ய…
“அதுக்கு என்னடி ஆத்தா.. ரெண்டு பேரும் நல்லா போங்க.. போய் அங்கனவே இருந்துக்கோங்க.. நான் என் புள்ளைக்கும் என் பேரனுக்கும் வேற நல்ல பொண்ணுங்களா.. பதிவுசான பொண்ணுங்களா.. குடும்பத்தை தாங்குற பொண்ணுங்களா.. பார்த்து கட்டி வைச்சிடுறேன்” என்றதும் அவள்
திடுக்கிட்டு அத்தையை பார்க்க,
‘தேவையா உனக்கு? வாயை மூடு.!’ என்று அதட்டினார் கலையரசி.
“இங்க பாரு அரசி.. உன் மருமவளுக்கு நீ சமையல் கத்துக் கொடுக்கிறது இருக்கட்டும்.. மொதல்ல குடும்பத்தை எப்படி நிர்வாகம் பண்ணனும் கத்துக் கொடு..! யார் யார்கிட்ட எப்படி பேசணும்னு கத்துக் கொடு..! எங்க எங்க எப்படி நடக்கணும் கத்துக் கொடு..! என் பேரன்.. கள்ளழகனோட பொண்டாட்டியா இருக்க கத்துக்கொடு..!” என்று ஒரு லிஸ்ட்டே அவர் போட.. தலை சுத்து போனது கலையரசிக்கு தான்.
பின்னே அவள்.. ஆண்டாள் நப்பின்னை.. அவர் தம்பியின் ஒற்றைச் செல்ல மகள்..! சிறுவயதில் இருந்து தாங்கி போற்றி அவளை வளர்த்து விட்டு, அவளையே தன் மருமகளாக கொண்டு வந்து விட்டு, எப்பொழுது அது சரியில்லை.. இது சரியில்லை.. என்று குற்றம் சொன்னால்.. அவள் மனது தாங்குமா? என்று கலையரசி பார்க்க..
ஆனால் சொக்கி அப்பத்தாவோ.. ‘அதெல்லாம் தெரியாது..! உன் மருமகளை நீ தான் திருத்தணும்..!’ என்று கண்டிஷன் போட்டார்.
“அப்புறமேட்டு.. ஏய் சின்ன சிறுக்கி இப்படி பொசு பொசுன்னு எங்கன பார்த்தாலும் நீ மயக்கம் போட்டு விழுந்தேன்னு வை.. அப்புறம் நாயகிக்கு நான் கொடுத்த வாக்கு தொறந்துட்டு.. உனக்கு நல்ல வெள்ளாட்டு கறியும் நாட்டுக்கோழி குழம்புமா வச்சு ஊட்டி விட்ருவேனு பாத்துக்கோ..! கள்ளழகன் பொண்டாட்டியா.. தெகிரியமா இருக்க வேணாமா?” என்று மாமியாரையும் மருமகளையும் நன்றாக ஏசி விட்டு சென்றார் சொக்கி அப்பத்தா.
ஒரு பெரிய சுனாமி வந்து ஓய்ந்தது போல் இருந்தது சமையலறை, சொக்கி அப்பத்தான் சென்றதும்..!
”எப்படி அத்த.. இவ்வளவு நாளா இந்த ஆச்சியை வைச்சு சமாளிச்சீங்க?” என்று அவள் அயர்ந்து கலையரசியை பார்க்க..
“அவங்க பலாப்பழம் மாதிரி ஆண்டாளு.. மேல தான் முள்ளாட்ட இருக்கும். உள்ள எத்தனை சுவையா இருப்பாங்க தெரியுமா? தப்ப காண்டா கொஞ்சம் கூட அவுகளுக்கு பொறுக்க முடியாதேன்.. அதுவே உனக்கு ஒன்னுனா உன் அப்பா அம்மாவுக்கு முன்னால.. ஏன் உன் புருஷனுக்கு முன்னால.. உனக்கு நிக்கிறது அவுகளா தான் இருப்பாக. அதனால நீயும் கொஞ்சம் கொஞ்சமா இந்த வீட்டு நடைமுறை எல்லாம் கத்துக்க பாரு..!” என்றவர்,
“என்னைக்கு நீ யேன் கூட படுக்கிறதோ அவுகளுக்கு தெரியுதோ அன்னைக்கு இருக்கு நமக்கு ரெண்டு பேருக்கும்..! உண்மையான பூச..! இதெல்லாம் வெறும் ட்ரையல் தான்..” என்றார் சிரித்துக் கொண்டே..!
“எதே? இம்புட்டு நேரம் அந்த ஆச்சி பேசினதெல்லாம் வெறும் ட்ரயலா?”
அவளும் கலவரமாகி, ‘ட்ரையலே இப்படி இருக்குனா.. அப்போ மெயின் பிக்சர்? வேணாம்.. வேணாம்..! நான் இனி எங்க ரூம்லயே படுத்துக்கிறேன் அத்த” என்று விட்டாள்.
“உனக்கெல்லாம் என்ன மாதிரி தாங்குற மாமியா சரி கிடையாதுடி மருமவளே.. . யேன் மாமியா மாதிரி உன்ன போட்டு வாங்குற மாமியா தேன் சரி..!” என்று சிரித்துக் கொண்டே சமையல் வேலையை அவர் பார்க்க.. அவரிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே அவளும் அவருக்கு உதவினாள்.
மதியம் இரண்டு மணி போல்.. அந்த மருத்துவமனை சற்றே அமைதியாக இருந்தது. காரணம் மதிய உணவு நேரம்..!
அவன் அப்போது தான் தன உணவினை எடுத்து வைத்து அமர்ந்திருந்தான் தன் தனி அறையில்…
சட்டென அவளது காது விரைப்புற்றது அவள் கொலுசின் ஒலி கேட்டு..!
“வந்திட்டா..!” என்று கடுப்போடு சொல்லிக் கொண்டான்.
இன்னும் கொலுசுகளின் ஒலி அவருக்கே கேட்க கேட்க..
அவனின் திண்ணிய தேகத்தினுள் சட்டென ஒரு விரைப்பு வந்து ஒட்டிக் கொண்டது.
அவளின் வருகை சற்றே தணித்திருந்த அவனது எரிச்சலை தூண்டி விட்டிருக்க.. அவன் அமர்ந்திருந்த தோற்றமே அவன் கடும் கோபத்தில் இருக்கிறான் என்பதை பறைசாற்ற…
அவனின் அறை கதவினை திறந்து ஒரப் பார்வையால் அவனை பார்த்தவளுக்கு மெல்லிய
சிரிப்பு தான் வந்தது. ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
“என்ன டாக்டர் சார்? சாப்பிட்டு இருக்கீகளா?” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து சாப்பிடுகிறீர்களா என்று கேட்க,
அவன் பார்வையோ சட்டென்று அவள் மீது அழுத்தமாக பதிந்தது.
முதுகை தண்டை உறைய வைக்கும் அவனின் கூர் பார்வையில் ஒரு நொடி உடல் தூக்கி வாரிப் போட்டாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் வழக்கமான உதடு சுழிப்போடு,
“இந்நேரத்துக்கு பேஷண்ட் வருவாங்கனு தெரியும் இல்ல? அப்புறம் என்ன சாப்பாடு வேண்டி இருக்கு உங்களுக்கு? வாங்க.. வாங்க… வந்து இந்த தம்பி பயல பாருங்க.. காலையில் இருந்து இவேன் சரியேயில்ல..” என்று கூறியவள் தான் உண்மையில் சரியில்லை என்று கணித்தான் இந்த மருத்துவன்.
சட்டென்று சாப்பாட்டில் இருந்து கையை உதறி எழுந்தவன், “இப்ப என்ன உன்னோட பிரச்சனை? நிம்மதியா மனுசன சாப்பிட கூட விட மாட்டேங்குற?” என்று அவள் கிட்டே நெருங்கி கண்களை உற்றுப் பார்த்து கேட்க..
“இது என்ன வம்பா போச்சு.. எதுக்கு ஆஸ்பத்திரி வச்சு நடத்துறீக? உடம்பு சரியில்லைனா வந்து காட்ட தானே..! வாங்கன்னு சொன்னேன் வராம இங்க வந்து தர்க்கம் பண்றீக? டாக்டருக்கு படிச்சா விருப்பு வெறுப்பு பசி தூக்கம் துக்கம் எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சு தான் ஆகணும் டாக்டரே..! அதுவும் அரசாங்க டாக்டர்ன்னா இன்னும் சூதானம் தேவ டாக்டரே..! ஏன்னா.. உங்களுக்கு சம்பளமே எங்க வரிப்பணத்தில இருந்து தேன் கொடுக்குறாய்ங்க” என்று அவளின் பேச்சில் அத்தனை கோபம் முகிழ்த்தது அவனுக்கு..!
ஆனாலும் இவளோடு இப்பொழுது தர்க்கம் பண்ணி இருக்கும் கொஞ்ச நெஞ்சம் ஆற்றலையும் அழித்துக் கொள்ள அவன் தயாரில்லை..!
“வா.. வந்து தொலை..!” என்று அவன் முன்னால் நடக்க சிரிப்புடனே அவன் பின்னால் சென்றாள் அவள்..!
“யாருக்கு என்ன ஆச்சு?” என்றபடி அவன் கேட்க..
“வேற யாருக்கு? என் தம்பி காங்கேயனுக்கு தேன்..! காலையிலிருந்து அழுத வண்ணமா இருக்கியான்.. ஒரு பொட்டு கூட சாப்பிடல” என்றாள் சோகமாக..!
அவனோ அவளையும் அவள் தம்பியையும் அழுத்தமாக பார்த்து, பின் லேசாக நெற்றியை நீவிக் கொண்டான்.
“உன் கூட பெரியவங்க வேற யாரும் வரலையா?” என்று கேட்டான்.
“நான் என்ன சின்ன புள்ளையா? நானே பெரியவ தேன் என்கிட்டயே சொல்லுக” என்றாள் வீம்பாக.
“இது எப்படி உன்கிட்ட நான் சொல்ல?” என்று சிறிது நேரம் அங்கே இங்கே பார்வையை சுழல் விட்டான், பின் தொண்டையை கணைத்தவன்,
“அது.. அது.. உன் தம்பிக்கு இணை கூட ஆசை வந்துருச்சு” என்றதும் அவள் விக்கித்து பார்க்க..
“இதுக்கு தான் வீட்ல இருந்து யாராவது பெரியவங்கள கூட்டிட்டு வான்னு சொன்னேன்..! ஏதாவது நல்ல ஜோடியா பார்த்து சேர்த்து விடுங்க. அப்புறம் சரியா போயிடும்” என்றான்.
“எதே? அவனுக்கா? அவேன் இன்னும் சின்ன புள்ள டாக்டரே..!” என்றாள் கண்களை விரித்து அவனிடம்..
“அடியே..!” என்று பல்லைக் கடித்தவன்,
“மனுசனுக்கு தான் சுற்றுச்சூழல் படிப்பு குடும்பம் அது இதுன்னு கட்டுப்பாடு எல்லாம் உண்டு..! மாடுகளுக்கு அதெல்லாம் கிடையாது. அதுக்கு தன் உணர்வுகள் மட்டும் தான் முக்கியம். புரிஞ்சுதா?” என்று சற்று ஆவேசமாக பேசியவன்,
“மொதல்ல.. வீட்ல பெரியவங்க இருந்தா அவங்க கிட்ட சொல்லு” என்று வேகமாக உள்ளே போனான்.
அங்கே சற்று தள்ளிக் கட்டி இருந்த மாட்டை சற்றே மிரட்சியோடு பார்த்தாள் அவள்..
ஆம்.. அந்த காளை மாடு தான் அவள் சொன்ன அவளின் தம்பி காங்கேயன்..!
அவள் அங்கயற்கண்ணி..!
தன் அண்ணன் அழகனை போல அவளும் ஜல்லிக்கட்டு காளையை தனியாகத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த காளையின் பெயர்தான் காங்கேயன்..!
என்னதான் ஆசிரியையாக அவள் பணியாற்றினாலும்.. அவளின் மோகம் இம்மாதிரி ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதில் தான்..!
சிறு வயதில் இருந்தே குடும்பத்தில் இம்மாதிரி பார்த்து வளர்ந்தவள் இப்பொழுது தனக்கே தனக்கு என்று ஒரு காளை வேண்டும் என்று அடம் பிடித்து, அண்ணனிடம் பிறந்தநாள் பரிசாக ஒரு காளையை வாங்கி வளர்த்து வருகிறாள்.
அழகன் கல்யாணத்தன்று கூட இதை பார்க்க தான் நடுவில் அவள் மண்டபத்திலிருந்து சென்று கலையரசியிடம் பின்பு வாங்கி கட்டியது.
அவளின் செல்ல தம்பி காங்கேயனும் அவள் தண்ணீர் வைத்து சாப்பாடு வைத்தால்தான் சாப்பிடுவான். வேறு யாரையும் அண்ட விட மாட்டான் அவன் அருகில்..! அழகனை தவிர..!
அவள் காளையை காண்பிக்க அழைத்து வந்து
மருத்துவனோ, அவ்வூரில் உள்ள கால்நடை மருத்துவன் சரபேந்திரன்..!
“ஏன் டா வெட்னரி டாக்டருக்கு படிச்சோம்? அதுவும் ஏன்டா எந்த ஊருக்கு வேலைக்கு வந்தோம்?” என்று நொந்து கொள்ளும் ஒரு அப்பாவி கால்நடை மருத்துவன்..!
தொடரும்..
