காலை 10.40மணி
ராசிகா தோழியின் வீட்டில் இருந்து விடைபெற நினைக்க, அஸ்வத் அப்போது தான் வெளியே சென்று விட்டு பைக்கில் வந்து இறங்கினான். அவள் கிளம்புவதால், ஆர்த்தி மற்றும் அவளின் அன்னை வாசல் வரை வந்து வழியனுப்ப நின்றிருந்தனர்.
"வேலை வேலைன்னு இல்லாம அடிக்கடி கால் பண்ணு. ஒழுங்கா உடம்பை பாத்துக்க."
"நீயும் உடம்பை பாத்துக்க. அதை விட்டுட்டு கண்டதை யோசிக்காதே ராசிகா!" என்றாள் அழுத்தமாய். அதற்கு புன்னகையோடு சேர்ந்த தலையசைப்பை தந்து விட்டு வெளியேறியவளை, "எதுல போற?" என்றான் அஸ்வத்.
"ஆட்டோ சொல்லிருக்கு!" என்றாள் ஒருவித பயங்கலந்த குரலில். பயம் அவன் மீதல்ல. நேற்று நடந்ததை உளறிவிடுவானோ என்பது தான் அவளது பயமே.
"வா டிராப் பண்ணிறேன்." என்றவன் அவள் அனுமதி கூட பெறாது வண்டியை ஸ்டார்ட் செய்ய, மற்ற இருவரும் கை சைகையில் பை என்றதும் அவள் மறுத்தா பேச முடியும். ஏறி அமர்ந்து விட்டாள் மௌனமாக.
வண்டியும் வழக்கத்தை விட வேகமாக செல்ல, "கொஞ்சம் மெதுவா போ அஸ்வத்! பயமா இருக்கு." என்றவளை கண்ணாடி வழியே ஆழ்ந்து பார்த்தான்.
அஸ்வத் 27 வயதாகிறது. பேங்கில் பணிபுரிகிறான். கல்லூரியில் காதல் ஆஃபர் பல வந்த போதும், இவளை தான் மிக பிடித்து போனது. வேறு ஒருத்தியாக இருந்தால் காதலை கூறியிருப்பான், தங்கையின் தோழி என்பதால் சற்றே தயக்கம்.
"ராசிகா"
"சொல்லு அஸ்வத்"
"எப்போ ஊருக்கு கிளம்புற?"
"நாளைக்கி ஈவ்னிங்"
"யாரு கூட?"
"நான் மட்டும் தான்."
தனியே செல்கிறாள் என்றதும் ஒருவித நெருடல் உண்டாக, "நான் கார் எடுத்துட்டு வரவா?" என புன்னகை மலர கேட்டவனை கண்டு அவளுக்கு தான் தேவையில்லாத வேலை என தோன்றியது.
"வேணாம் ட்ரெயின் தானே நானே போய்டுவேன்."
"ஜங்கஷன் வரவா?"
"ஏன் நாளைக்கி பேங்க் போற வேலை இல்லையா?"
"இருக்கு. சொன்னா டைம் கேட்டுட்டு வருவேன்."
"வேணாம் நான் பத்தரமா போய்டுவேன்."
"சரி போயிட்டு போன் பண்ணு. நான் போன் பண்ணலைனாலும் நீயே போன் பண்ணு."
"ம்ம்ம்.."
"எல்லாத்துக்கும் ம்ம் தானா?" என்றவன் சலிப்பாக கூற, "ஏன் என்ன சொல்லணும்?" என்றாள் புன்னகையோடு.
"சரி காலுக்கு எதுவும் ஆயின்ட்மென்ட் போட்டயா? ரெஸ்ட் எடுத்துட்டு ஊருக்கு போலாமே?"
"இல்லை ஒரு ஆட் ஒன்னு இருக்கு. கண்டிப்பா போயாகணும்."
"ம்ம்.."
"நீ மட்டும் ம்ம் சொல்லுற. நான் சொன்னா மட்டும் ஏன் பிடிக்கல?"
"அதெல்லாம் அப்படி தான் கேள்வியா கேக்காம வா.."
"சரி தான்.. போ.."
"போ.. அவ்வளவு தானா?" என ஏதோ எதிர்பார்த்தவன் மறந்து அதை கேட்டும் விட, "நேரா அங்க பார்த்து வண்டியை ஓட்டுங்க அஸ்வத்!" என்றாள் சமாளிப்பாக. அவனும் அவளை சீண்ட நினைக்க, அவளோ "அஸ்வத், ப்ளீஸ்.. ஏதாவது காமெடி பண்ணாம போங்க" என்றாள் அழுத்தமாக.
"எது காமெடியா? அது சரி!!"
'இவன் இம்சை தாங்க முடியல. ஒன் சைடா லவ் பண்ணும் போதே இப்படினா, ஓகே சொன்னா பின்னாடியே பாடி கார்ட் மாதிரி வருவான் போல. அய்யோ இவன்லாம் நமக்கு செட்டே ஆக மாட்டான்.' என தானாக புலம்பிக் கொண்டிருப்பவளை காதல் ரசம் சொட்ட பார்த்தவனை, அவளது அலைபேசி அலறி திசை திருப்பியது.
அவள் ஹலோ என்றதுமே பைக்கை ஓரங்கட்டினான்.
"ம்ம் வீட்டுக்கு தான் வந்திட்டுருக்கேன் மா. ஒரு ஹால்ஃப் ஹவர் ஆகும்!"
"நீ இங்க வந்து என்ன வெட்டி முறிக்க போற. ஆர்த்தி அம்மாட்டா பேசிட்டேன். இருந்துட்டு சாயங்காலம் போல வா.." என்றதும் அவள் முகமோ சுணங்க, காதில் விழுந்த அஸ்வத்திற்கு தான் ஏக ஆனந்தமாகியது.
அவள் போனை வைத்ததுமே ரிவர்ஸ் எடுத்து வீடு நோக்கி புறப்பட்டான். தனது அம்மா போனில் பேசியது, வால்யூம் அதிகமாக இருந்ததில் காதில் விழுந்ததை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக முகத்தை தொங்க போட்டு கொண்டாள்.
மாலை 5.25மணி
தெய்வானை அவர்கள் வீட்டின் கூடத்தில், வீட்டினரில் ஒரு சில பெரியவர்கள் முகம் கலவரமாக காட்சியளிக்க அமர்ந்திருந்தனர்.
"மனுஷனா இவன்? இல்லை தெரியாம கேக்குறேன். மனுஷனா டி இவன்?" என சதாசிவம் காட்டு கத்தாக கத்தினார். பெண் பார்க்க போன இடத்தில் மகன் செய்த செயல் மற்றும் பேசிய பேச்சை நினைத்து.
சண்முகம் அவர்களோ, "எல்லாம் இவளை சொல்லணும். உன் செல்லம் தான் சாவித்திரி. ஒரு மூணாவது மனுஷங்க வீட்டுல போய் நம்மளை எப்படி தலைகுனிய வச்சுட்டான்.
அதுவும் அந்த பொண்ணு கிட்ட அப்படியா பேசணும்?" என அவரும் அவர் பங்கிற்கு சாமி ஆட, பாட்டி தான் வாயை மூடுங்கள் என்பது உள்ளங்கையை காண்பித்தார்.
முருகன்(தெய்வானை கணவர்) அவர்களோ, "இவன் பெரிய இளவரசன். இவர் வர வரை அந்த பொண்ணு இலவு காத்த கிளி மாதிரி ஒக்காந்துருக்கணும் பாரு. கொஞ்சமாவது அறிவு இருக்கா அண்ணே? இப்படி பேசுறான்." என அவர் பங்கிற்கு அவரும் காய, குஷியோ மாமாவை விட்டு தராது பேசினாள்.
"ஏன் மாமாவை திட்டனும். தாத்தா மாமா கேட்ட மாதிரி. இன்னொரு பொண்ணை பாக்கலாம்.." என அவள் மழலை மொழியில் கூற, அத்தனை பேரும் அவளை முறைத்து பார்த்தனர்.
"தாத்தா முறைக்காதீங்க. மாமா வரட்டும் சொல்லி விடுறேன்.." என்றவளை ருத்ரா வாய் பொத்தி அழைத்து சென்று விட்டாள்.
அன்னை கல்யாணி தான் எதை நினைத்து கவலை கொள்வது என்பது போல் விசும்பலோடு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இரவு அந்த பூசாரி கூறியதை இதுவரை அவர் யாரிடமும் கூறவில்லை. கூறியிருந்தால் கூட கொஞ்சம் மன பாரம் குறையும். போதா குறைக்கு அவன் பெண் வீட்டில் நடந்து கொண்ட விதம் அவரை மேலும் வாட்டியெடுக்க எங்கோ வெறித்தபடி இருந்தார்.
"கல்யாணி உன்னை தான் கேக்குறேன். அவனுக்கு கல்யாணம் பண்ணலாமா? வேணாமான்னு அவன்கிட்டயே கேட்டு நைட்டுக்குள்ள முடிவு சொல்லுற. இல்லை தோளுக்கு மேல வளந்த பையன்னு பாக்க மாட்டேன்.." என அவர் கர்ஜிக்கும் நேரம் பிரதீஷ் உள்ளே நுழைவது கண்டு முருகன் அவர்களோ, மணிக்கட்டை பற்ற வாய் பொத்தி விட்டார் தந்தையவர்.
அவன் இல்லாத போது தான் இப்பேச்சு. அவன் இருந்தால், ஏன் அவனிடம் நேருக்கு நேர் மல்லுக்கு சென்றால் கூட எங்கோ வெறித்தபடி அமர்ந்திருப்பான். இல்லை அத்தனை கோவத்தையும் உணவில் காட்டுவான். இதற்கெல்லாம் காரணமும் இவர்கள் அவன் மீது முன்பு சுமத்திய பழி தான்.
பிரதீஷ் வீட்டின் கூடத்தில் நடக்கும் மீட்டிங்கை பார்த்தும் பாக்காதது போல் கடந்து செல்ல, எல்லோருக்கும் அவனை அடி பின்னி விடலாம் என்பது போல் தான் இருந்தது.
"பாட்டி, சாப்பாடு எடுத்துட்டு வாங்க பசிக்குது. வேற யாரு செஞ்சதும் வேணாம்." என அவன் அழுத்திக் கூறி நகர, அனைவரின் விழிகளும் அவன் மீது அனல் பார்வை வீசியது.
பிரதீஷ் மீது இவ்வளவு கோவம் வர என்ன செய்திருப்பான்? உண்மையில் அவன் மனதில் பட்டதையும், இயல்பான குணத்தையும் பிருந்தா வீட்டில் காட்டினான். ஆனால், இவர்களுக்கு தான் அது அவுமானம் போல் தோன்றியது.
பெண் பார்க்க சென்றவர்களுக்கு முதல் உபசரிப்பாக, குடிக்க நீர் கொண்டு வந்து கொடுத்தார் அவளது அன்னை ராணி. சில நிமிடங்கள் இரு வீட்டாரும் பேசி கொண்டிருந்தனர். அதன் பின் பிருந்தா கையில் டீயோடு வந்தாள்.
எல்லோரும் டீயை எடுத்துக் கொள்ள, பிரதீஷும் எடுத்துக் கொண்டான். அவன் எடுத்த பின்பு நிம்மதி பெருமூச்சு விட்டது என்னவோ, சாவித்திரி பாட்டி தான்.
"மாப்பிளை இதான் பொண்ணு.." என்றார் பெண் வீட்டில் ஒருவர். அவன் ஒரு ஒப்புக்கு பார்த்தான். பார்த்து விட்டு அப்போதே திரும்பிக் கொள்ள பிருந்தா பூ முகம் தான் வாடியது.
அதன் பின் மிச்சர் மற்றும் அல்வா கொண்டு வந்து கொடுத்தார் பெண் வீட்டு உறவினர் ஒருவர். அதையும் எடுத்து ஒரு ஓரம் வைத்தவன் விழிகள் பெண்ணை தவிர எங்கெங்கோ அலை பாய்ந்து பதிந்தது.
கௌதமன்(பிருந்தா அப்பா), "மாப்பிளை டீ எடுத்துக்கோங்க." என்றார். அவனும் தலையசைப்பை குடுக்க, சரி என்று விட்டு பெண்ணிடம் அப்போதே சம்மதம் கேட்டனர் சூசகமாக அங்கிருந்த பெண் வீட்டினரின் ஒரு சிலர்.
பிருந்தா, "கொஞ்சம் அமைதியா இருங்க. அவர் டீயை கூட எடுத்துக்கல. இப்போ இது ரொம்ப முக்கியம் பிடிச்சுருக்கா? இல்லையான்னு?" என அவளும் ரகசியமாக கூறி வினவியை அடைத்து விட்டாள்.
வேதகி அவர்களோ, "மாப்பிளை தம்பி டீ எடுத்துக்கோங்க. ஏன் டீ சாப்பிட மாட்டீங்களா?" என கேட்க,
"டீ பிடிக்காது." என்றான் வெளிப்படையாகவே.
கௌதமன், "தம்பி அப்போ ஜூஸ் பால் எதுவும் கொண்டு வர சொல்லவா?" என அவர் கேட்டது தான் நொடி, மூடியிருந்த வாய் வீட்டினரை தாக்கியது.
"நான் கண்ட நேரத்துல கண்டதை சாப்பிட மாட்டேன். அதே போல யாரோட கட்டாயத்துக்காகவும் எதுவும் விருப்பம் இல்லாம சாப்பிட மாட்டேன்!" என்றான் அழுத்தம் திருத்தமாய், தன் வீட்டினரை ஒருவாறு பார்த்தபடி.
அவன் பேசிய பேச்சில் உடன் வந்த அனைவர் முகமும் இருளடைய, "தம்பி.. அப்போ அந்த அல்வா சாப்பிடலாமே.. கொஞ்சம்.." என்றார் ராணி தயக்கமாக.
'அய்யோ.. இவனை பத்தி தெரியாம பேசுறாங்களே. கடவுளே! இவனுக்கு கல்யாணம் பண்ணுறதுக்குள்ள எத்தனை பேர் ஜீவன் போகுமோ?' என சாவித்திரி பாட்டி நொந்து கொண்டது தான் மிச்சம்.
"அம்மா தப்பா நினைக்காதீங்க. நிஜமா நான் பசிக்காம சாப்பிட மாட்டேன். தென், நான் இந்த ஃபார்மலிட்டிஸ் எல்லாம் பெரிசா எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன். மத்தவங்க சாப்பிட்டாங்களே அது போதும்." என்றவனை விடாது, கௌதமன் மேலும் கட்டாயப்படுத்த அவனுக்கு லேசாக கோவம் எட்டி பார்த்தது தான் உண்மை.
"எனக்கு பிடிக்கிறது, உங்களுக்கு பிடிக்காது. உங்களுக்கு பிடிக்கிறது எனக்கு பிடிக்காது. எப்படி சொல்ல, எனக்கு என் பாட்டி செய்யுற கோதுமை பால் அல்வா தான் பிடிக்கும். வந்த இடத்துல அதை எதிர் பாக்க முடியாது.
ஏன் இதையே செய்யலன்னு நான் உங்க கூட சண்டை போடவும் முடியாது. அதுனால, என்னை தவிர எல்லாரும் சாப்பிட்டதே எனக்கு சந்தோஷம் தான் சார்!" என்றதில், எல்லோர் முகத்தில் நிறைந்திருந்த மகிழ்ச்சி தான் படிப்படியாக காணாமல் போனது.
பெண் வீட்டினர் அவனது பேச்சில் எல்லோரும் திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பிரதீஷ் வீட்டாட்கள், போய் தகவல் கூறுகிறோம் என விடைபெற நினைக்கும் போது மீண்டும் குறுக்கிட்டான்.
"வெல், இப்போ நான் கேரளால ஒர்க் பண்ணுறேன். வேற ஹாஸ்ப்பிட்டல் ட்ரை பண்ணுறேன். அங்க எப்படியும் டூ ஆர் த்ரீ மந்த்ல கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். அங்க கிடைச்சுட்டுட்டா கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கிறேன். இல்லைனா கொஞ்சம் டைம் ஆகும்.
அதர்வைஸ் வீட்டுல கம்பல் பண்ணவும் தான் வந்தேன். பொண்ணை பிடிச்சுருக்குன்னு சொல்லி டைம் கேக்க முடியாது இந்த விஷயத்துல. என்னை விட பெட்டரான மாப்பிள்ளை வந்தா ஒருவேளை உங்களுக்கோ இல்லை அவங்களுக்கோ பிடிக்கலாம்.
அப்படி உங்களுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க!" என்றவன் நேராக எழுந்து சென்று பெண்ணிடம் தனது விசிட்டிங் கார்டை நீட்டிட, எல்லோரும் ஒரு நொடி விக்கித்து போயினர்.
அங்கேயே பிரதீஷ் வீட்டினருக்கு இவன் என்ன பிள்ளை என்பது போல் முகம் சுளித்து விட்டனர். அவர்களும் இவன் செயலில் கோவத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, சங்கடமான மன நிலையில் விடைபெற்றனர்.
தேன்மழை💖💖
