Thread starter 14/01/2026 9:39 am
அவ்வுருவம் கீழே சரிந்ததுமே பிரதீஷ் அதை பலமாக தாக்கிட, முதலில் அதனிடமிருந்து வந்த குரலை தாக்கிடும் பதட்டத்தில் கவனிக்கவில்லை.
மிகவும் பிரயத்தனப்பட்டு முகத்தில் இருந்த மாஸ்க்கை கழட்டி தூர வீசினான். அவனது செயலில் போராட முடியாது போக, மாஸ்க்கும் சுலபமாகவே கழட்டப்பட்டது.
விழிகள் இரண்டும் கோழி குண்டுகளாக, வெளியே தெறித்து விடுமளவிற்கு அதிர்ச்சியில் விரிந்தது என்னவோ நாயகனுக்கு தான்!
தன் வீட்டினுள் நுழைந்தது ஒரு பெண்ணா? அதுவும் ஊரில் நடக்கும் திருட்டிற்கு இவளா காரணம் என்னும் அதிர்ச்சி பொங்க, "யார் நீ? ஊருல நடக்குற திருட்டுக்கு நீ தான் காரணமா? எப்படி வீட்டுக்குள்ள வந்த? எந்திரி டி.." என அவளை அரற்றியவனை கண்டு அவளோ அரண்டு நிற்க..
"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் திருடியெல்லாம் இல்லை சார்.. நம்புங்க.. என்னை கொலை பண்ண வர்றாங்க.. என்னை காப்பாத்திக்க தான் இங்க வந்தேன்.." என்றவள் கைக்கூப்பி அவனிடம் அழுது கெஞ்சிட, அவனோ அனல் கக்கிடும் மூச்சை விட்டப்படி, அவளை என்ன செய்யலாம் என்பது போல் பார்த்திருந்தான்.
"எவ்வளவு தைரியம் இருந்தா, திருட்டுத்தனமா வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டு என்னையவே அடிக்கிறயா?" என்றவன் அவள் கையினை திருகி முறுக்க, அவளோ ஐயோ அம்மா என வலி தாங்காது கூச்சலிட்டாள்.
"கையை விடுங்க ப்ளீஸ்.. வலிக்குது சார்.. நான் திருடி இல்லை.. ட்ரெஸ்ட் மீ! ஒரு குடும்பமே தூரத்திட்டு வருது.." என அவள் மீண்டும் தன்னிலையை பற்றி கூற, அதுவும் அவனுக்கு பொய்யாகவே தோன்றியது.
"மாடர்ன் களவாணியா நீ? இங்கிலிஷ் எல்லாம் பேசுற?"
"நான் இங்க திருட வரல சார்.."
"திருடி இல்லைனா அப்போ நீ என்ன தியாக செம்மல்லா?"
"அய்யோ சார் நம்புங்க என்னை.. நான் தப்பிச்சு போக வழி தெரியாம தான் இங்க வந்தேன்.. ப்ளீஸ் சார் உங்களை பாத்தா நல்லவரா இருக்கு.. என்னை காப்பாத்துங்க!" என்னும் போதே வீட்டின் வாயிற்கதவு தட்டப்பட்டது.
அதுவும் மிகவும் பலமாக தட்டியதிலே, மேலும் மிரட்சி கொண்டவளோ "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்னை காப்பாத்துங்க. நான் மட்டும் இங்க இருக்கேன்னு தெரிஞ்சா கொன்னுடுவாங்க. அவங்க பண்ணுன கொலையை பாத்துட்டேன்.." என்றவள் அவனது கரம் பற்றி கண்ணீர் மல்க கெஞ்சியதில் ஒருநொடி நம்பினானோ? என்னவோ?
அவனும் கதவை திறக்க, அவள் கூறியது போலவே அடியாட்கள் போல் ஐந்து பேர் நின்றிருந்தனர். பிரதீஷிற்கு அவள் மீது நம்பிக்கையில்லை என்பது உண்மை தான். ஆனால், இவர்களை கண்டதும் அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்க கூடாது என யோசித்தான்.
"யார் நீங்க? என்ன வேணும்?" என பதட்டத்தை வெளிக்கொணராது பேசினான்.
"இது வழியா ஒரு சின்ன பொண்ணு, பச்சை கலர் சுடி போட்டு போனதை பாத்தீங்களா? எங்க வீட்டுல இருக்கிறவங்க செயினை அத்துட்டு போய்டுச்சு. இந்த வீதி வழியா வந்ததை பாத்தோம். எங்க போனானு தெரியல." என ஐவரில் ஒருவன் நாசுக்காக பொய்யுரைத்தான்.
"இல்லைங்க.. நான் ஊருக்கு புதுசு. இப்போ தான் திருவிழாக்கு போயிட்டு வரேன்.." என பிரதீஷ் சமாளிக்க, ஒருவன் வாசலில் நின்றப்படியே வீட்டை எட்டிபார்த்தான்.
அவனை ஒருவாறு பார்த்த பிரதீஷை கண்டு, "சரி தம்பி அப்படி யாரையும் பாத்தா தென்னைந்தோப்பு மாணிக்கம் ஐயா வீட்டுக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.." என ஒருவன் நம்பர் எழுதி பேப்பரை நீட்ட, மறுக்காது வாங்கியவன் "கண்டிப்பா பண்ணுறேன்.." என்றான் தலையசைப்போடு.
அவர்கள் நகருவும் கதவை சாற்றி விட்டு ராஜீவ் அறை நோக்கி சென்றான். அறை நோக்கி செல்லும் வரை ஏதேதோ யோசித்தவனுக்கு, அவள் மீது முழுமனதாக நம்பிக்கை வரவில்லை.
ஏன் இவளே ஆளை அனுப்பி உளவு பார்த்துவிட்டு, திருட நினைக்க கூடாது என யோசித்தபடி உள்ளே நுழைய, "அவங்க போய்ட்டாங்களா? என்ன சொன்னீங்க? நான் இல்லைன்னு சொன்னீங்களா? என்னை காட்டி குடுக்கலையே?" என அவள் பதட்டமாக எழுந்து நின்று வினவ, அவன் கூறியது போல் அவள் அணிந்திருந்த பச்சை நிற டாப்பையும் ஓரமாக இருந்த ஜெர்கினை கவனித்தான்.
"யார் நீ? எந்த ஊரு? செயினை அத்துட்டயா? உண்மையா?" என்றவன் விழிகள் அவள் கழுத்தில் இருந்த செயின் மீது பதிய..
அவளோ அதிர்ந்த குரலில், "ஐயோ அவங்க பொய் சொல்லுறாங்க. நிஜமா நான் திருடி இல்லை. என் போன் ஃபிரண்ட் வீட்டுலயே விட்டுட்டேன். உங்க கிட்ட நான் யாருன்னு காட்ட எந்த ஃப்ரூப் இல்லை.." என மீண்டும் அவள் மரண பீதியிலே பேச, அவன் தான் அவளை கூர் விழியால் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
"எந்த ஊரு நீ? உன் பேர் என்ன? வீடு எங்க? எதுக்கு அவங்க துரத்துறாங்க உண்மையை சொல்லு.." என்றான் கைகளை கட்டிக்கொண்டு, குறுக்கு விசாரணை செய்யும் போலீஸ் போல்.
"என் பேர் ராசிகா! நான் திருவிழாக்கு என் ஃபிரண்டை பாக்க வந்தேன். வந்த இடத்துல இவங்க, ஒரு வீட்டுல ஒருத்தவங்களை தூக்குல தொங்க விடுறதை நான் ஜன்னல் வழியா பாத்துட்டேன். அப்போ இருந்து துரத்துறாங்க சார்.." என அவள் தாரை தாரையாக கண்ணீரை சிந்தி கூறியப்போதும், அவன் விழிகள் ஏனோ அவளின் செயின் மீதே பதிந்திருந்தது.
அதை கவனித்தவள், "இது என் செயின் தான். பாருங்க இன்ஷியல் R ன்னு போட்டுருக்கு.." என்றாள் அவனிடம் வெளியே எடுத்து காட்டி.
"சரி நம்புறேன். அவனுங்க கிட்ட மாட்டியிருந்த உன் நிலைமை என்ன.." என அவன் முழுதாக கூறும் முன்னே, மீண்டும் அவள் ஓவென அழுத் தொடங்கியிருந்தாள்.
"ஹேய் அவனுங்க தான் போய்ட்டாங்களே. ஏன் அழுற இப்போ? எனக்கு உன்மேல சந்தேகம் தான் இப்போ வரை." என்றவன் மேலும் அவளை ஆழம் பார்க்கும் விதமாக கூற, "என்னை வீட்டுல காணாம்ன்னு தேடுவாங்க.." என ஒப்பாரி வைக்க அவனுக்கு தான் தலைவலியாக போனது.
"எப்படி வந்தயோ அப்படியே போ.." என்றான் அசட்டையாக. உண்மையில் அவனுக்கு இவ்வளவு தூரம் பேசியதே வாய்க்கு பெரிய வேலை கொடுத்து விட்டோம் என தோன்றியதோ என்னவோ? அதனால், அவளின் நிலை பற்றி பெரிதாக எண்ணவில்லை.
"சரி கிளம்பு நானும் கதவை லாக் பண்ண.." என்றவன் நெடுநெடுவென கீழே இறங்க, "சார் நிஜமா எங்கிட்ட காட்ட எந்த ஃப்ரூப் இல்லை. நான் ஒரு ஆட்(Ad) பண்ணிருக்கேன். அது நெக்ஸ்ட் மந்த் 12த் ல டிவில வரும்.." என அவள் படபடவென பேச, படியில் இறங்கியவன் சட்டென திரும்பி பார்த்தான்.
"இங்க பாரு.. நீ ஒரு திருடி! இப்போ வரை என் மைண்ட்ல அப்படி தான் ஃபிக்ஸ் பண்ணி வச்சுருக்கேன். நீ அழுததுனால இரக்கப்பட்டு உன்னை காப்பாத்துனேன்.
அதை விட்டுட்டு, உன் ஹிஸ்டரியை தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன்? பேசாம கிளம்பு. உனக்கு அவ்வளவு தான் மரியாதை.." என்றவன் பார்வையும், பேச்சும் சினிமா வில்லன் போல் வந்ததில் பாவம் பாவையவள் பால் முகம் இருளடைந்தது.
"ஏன் டா ஊருக்கு வந்தோம்ன்னு இருக்கு.. சே! மனுஷனை நிம்மதியா இருக்க விடுறாங்களா" என புலம்பிக் கொண்டு அவன் கதவை திறக்க, அவளும் நன்றி கூறும் விதமாய் அவனை பார்த்தாள்.
"ஆமா.. எப்படி போவ? எதும் இல்லைன்னு சொன்ன? காந்திபுரம்க்கு இப்போ பஸ் இருக்கா?"
"இல்லை சார் இப்போ நான் காந்திபுரம் போகல. ஃபிரண்ட் வீட்டுக்கு தான் போகணும்.." என்றவள் முகத்தில் ஒருவித அச்சம் பரவியிருக்க, அவனின் விழிகளோ அவள் மீது சந்தேக பார்வை வீசியது.
'முகம் மட்டும் அப்பாவி போல் இருக்கு. ஆனால், யாரையும் நம்ப முடியாது' என மனமோ எச்சரிக்கை தர, "மக்ம்.. கிளம்பு!" என்றவனை, 'எப்படி செல்வேன். துணைக்கு வந்தால் தேவையில்லையே..' என்பது போல் அவள் ஏறிட, அவனோ கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக போ என்றதில் விறுவிறுவென வெளியேறினாள் ராசிகா.
நிலவின் வெளிச்சம் தவிர, தெரு விளக்கே இல்லாத மண் ரோட்டில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்தாள். திக்கு தெரிந்தாலும், தப்பித்து செல்வது என்பது சாதாரண விடயமா? அதே நிலையில் தான் அரக்க பறக்க நடந்தாள் வெறுங்காலில்.
"அம்மா அப்போவே சொன்னாங்க போகாதேன்னு.. கேக்காம வந்ததுக்கு எனக்கு இது தேவை தான், என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்!" என புலம்பியவள் காலில் செருப்பு இல்லாததை மறந்து விட்டாள்.
"ஆர்த்தி வீடு போய் சேர, எப்படியும் அரை மணி நேரம் ஆகுமே. அய்யோ.. என்னை ஏன் இப்படிலாம் சோதிக்குற? கொலை பண்ணுனவனுங்க அசால்ட்டா இருக்கானுங்க. எனக்கு தான் இப்போ உசுரு போற நிலைமையா இருக்கு.." என தானாக புலம்பிக் கொண்டு நடந்தவள் நடை தானாக பிரேக் அடித்தாற் போல் நின்றது எதிரே அவள் கண்ட காட்சியில்.
பயத்தில் இதயம் வேறு தாறுமாறாக எகுறி துடித்ததோடு, மனமும் இது தான் கடைசி நிமிடம் என எச்சரிக்கை விடுத்தது.
"ஆர்த்தி எங்க போனா ராசிகா?" என குரலிட்டப்படி அவளது அண்ணன் அஸ்வத் மாடியில் இருந்து கீழிறங்கி வந்தான்.
அவளும் அவள் எங்கு சென்றாள் என தெரியாமல் தான், வாயிலை வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். போதா குறைக்கு இவனும் அதே கேள்வியை கேட்க, அவளுக்கோ முகம் வெளிறியது.
ஆர்த்தி, ராசிகாவின் கல்லூரி தோழி. அஸ்வத்திற்கு, ராசிகா தான் உயிர். ஏன் அவள் மீது அப்படியொரு காதல் என்று கூட சொல்லலாம்.
அவளுக்கு அப்படி எதுவும் அவன் மீது எந்த வித அபிப்ராயம் இல்லை.
வீட்டின் கேட்டை நோக்கி சென்றவள், தெருவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். விட்டால் போதும் அழுதே விடுவாள் ஆர்த்தி. திருவிழா என்பதால் ராசிகா வீட்டில் இரவு தங்கி கொள்ளட்டும் என, அவள் வீட்டிற்கு தெரியப்படுத்தி விட்டாள்.
இப்போது எங்கு சென்றாள்? என்ன ஆனாள்? சொல்லமல் எங்கு சென்றாள் என பல கேள்விகள் அவளை கண்ணீர் வடிக்க செய்ய, கேவி அழுதவளை நோக்கி தான் வேகமாக வந்தான் அஸ்வத்.
"ஹேய் உன்கிட்ட தான் கேக்குறேன் ராசிகா எங்க? மணி 12மணிக்கு மேல ஆகுது. எங்க போயிருக்கா?"
அதற்கு பதில் கூற முடியாது, தலை கவிழ்ந்தபடி தெரியலை என்பது போல் ஆர்த்தி தலையசைக்க சப்பென அறை வைத்தான்.
"எது தெரியலயா? கூட தானே இருந்த. அவ எங்க போனானு பாக்காம என்ன கிழிச்சுட்டு இருந்த? அசால்ட்டா தெரியலன்னு சொல்லுற. யாரு அவங்க வீட்டுக்கு பதில் சொல்லுவா?" என அவன் கடுங்கோவத்தில் வினவ, அவளோ கேவி அழத் தொடங்கி விட்டாள்.
தங்கையை விட காதலும், காதலியும் தான் முக்கியம் என நினைத்தவன் "ஒழுங்கா அவளோட வீட்டுக்கு வா. இல்லையா அப்படியே போய்டு.." என்றவன் வண்டி சாவியை எடுக்க விழுந்தடித்து வீட்டினுள் ஓடினான்.
ஆர்த்தியோ தலையில் கை வைத்துக் கொண்டு படியிலே அழுதபடி அமர்ந்து விட்டாள்.
பைக்கை எடுக்க வெளியே வந்த அஸ்வத், அவள் கேவலை கண்டு மேலும் கொதித்து போய் "இப்படி அழுதா வந்துடுவாளா? கிளம்பு போய் பாத்துட்டு வர. ஃபிரண்ட் ஒருத்தி வந்தா அவளை பாத்துக்க தெரியாம என்ன புடுங்கிட்டு இருந்த? அதை விட என்ன வேலை உனக்கு?" என்றவன் மீண்டும் அவளை அறைய எட்டிப்பாயா..
அவளோ சுதாரித்து பின்னால் நகர்ந்து கொண்டாள். அவள் செயலில் மேலும் ஆத்திரம் அடைந்தவன், "பொண்ணா டி நீ? அவளை வர சொல்லிட்டு, காணாம் போக விட்டுட்டு இப்படி குத்த வச்சு அழுதுட்டு இருக்க.." என்க,
"அஸ்வத் நானே அவளை காணாம்ன்னு இருக்கேன்." என்றாள் கமறிய குரலில்.
"ஒப்பாரி வைக்கிறதை நிறுத்திட்டு கிளம்பு. எத்தனை மணி ஆனாலும், அவளோட தான் வீட்டுக்கு வரோம்.." என்றான் ஆவேஷமாக! காதலி காணாமல் போனதை நினைத்து..
தேன்மழை💖💖
