பிருந்தாவோ ஊருக்கு வந்த பின்பும் அதே யோசனையில் தான் உழன்று கொண்டிருந்தாள். ஏன், மனம் கூட இப்போது அவளுக்கு எதிராகவே ஆலோசனை அளித்தது. அம்மா, அப்பாவிடம் இதை பற்றி பேச யோசனை செய்தவள் அத்தை வேதகியிடமே மீண்டும் கலந்தாலோசிக்க நினைத்தாள்.
அவரோ ஒரே வார்த்தையாக, "நல்லதே நினை. நல்லதே நடக்கும்!" என்றார் நம்பிக்கை அளிக்கும் விதமாக. ஆனாலும், அவள் மனதில் ஓயாது புயல் அடித்துக் கொண்டு தான் இருந்தது.
இரவு 8.43 மணி
ராஜீவ் வீட்டிற்கு வந்தவன், பிரதீஷை கோவிலுக்கு அழைத்தான். அவனோ அதற்கும் வாயே திறவாது, அவனை முறைப்பாக பார்த்து விட்டு டிவியில் கவனம் செலுத்தினான்.
"பாத்து எவ்வளவு நாள் ஆகுது. கலகலன்னு பேசுனா இவன் வாயில இருக்க முத்து உதுந்திடுமா என்ன? இப்படி ஒரு மனுஷனாஆஆ!" என வாய் விட்டே புலம்பியவன் அவன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகரும் வேலையில் கூட, அவனை அழுந்த ஒரு பார்வை பார்த்தான்.
பிரதீஷ் அவனை எவனோ ஒருவன் போல் பார்த்து விட்டு, சட்டென திரும்பிக்கொண்டான்.
"டேய் ஊருல திருட்டு அதிகமா நடக்குது. தூக்கம் வந்தா வீட்டை லாக் பண்ணிட்டு, மாடியையும் லாக் பண்ணிட்டு படு!" என்றவன் நாயகன் பதிலுக்காக காத்திருக்க, அவனோ டிவியை பார்த்தபடி தலையசைத்தான்.
"கொடுமை டா! இவனை கட்டிட்டு எவ சாக போறாளோ? இதுல ரெண்டு பொண்ணு!ம்ம்ஹ்.. அப்படியே பேசி நாலா கிழிச்சுடுவ பாரு நீயும்.." என முனங்கி செல்பவன் பேச்சு அவனின் இதழினோரம் மென்னகை பூக்க வைத்தது.
மேள தாளம் வாசிப்போடு, சேர்ந்து ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு கரகம் எடுத்திட ஐயருடன் கிளம்பினர். எப்படியும் கரகம் எடுத்து வீடு வந்து சேர நள்ளிரவாகிடும். எல்லோருக்கும் ஒரே கவலை பிரதீஷ் பற்றி தான்.
வருவானா, இல்லையா என்பது தான்..
கல்யாணியோ, "அத்தை உங்க பேரன் வருவானா?" என கலக்கமாக வினவ, அவரை தேற்றும் விதமாக, "வருவான் மா. வராம எங்க போய்ட போறான்?" என அவர் தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்தார்.
ஆனால், அவரின் மனமோ முழுமையாக ஏற்க மறுத்தது.
"இந்த வருஷம் நான் வந்ததே, பிரதீஷ் கல்யாணம் நடக்குமான்னு கேக்கத்தான். இப்படி வெளங்காத மாதிரி பேசுறவன் மனசு எப்போ மாறும்னு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்!" என்றவருக்கோ மனப்பாரம் அதிகமானது அவனை நேரில் கண்டதில் இருந்து.
ருத்ரா அன்னையின் உள்ளங்கை பற்றி ஆறுதல் அளித்தவள், "நிச்சயமா அண்ணன் மனசு பழசு மாதிரி மாறும் மா. நீ மனசை தளரவிட்டுறாதே.." என்க, அவருக்கு தான் நம்பும் மனமே வரவில்லை.
9'மணி வரை டிவி பார்த்தவன், 'ரொம்ப போர் அடிக்குதே!' என யோசிக்க வீட்டை பூட்டி விட்டு ஆசுவாசமாக வெளியே நடக்க நினைத்தான்.
ஊரே இருளுக்கும், அதன் அமைதிக்கும் கட்டுண்டு போனது போல் அப்படியொரு அமைதி.
தார் சாலை இல்லாத மண் ரோட்டில் கால் போன போக்கில், காற்றிலாடும் மரங்களின் சலசலப்பு சத்தத்தை ரசித்தபடி ஷார்ட்ஷினுள் இரு கையை நுழைத்து நடந்து கொண்டிருந்தான் பிரதீஷ்!
"அவள் வருவாளா..
அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா!
அவள் வருவாளா..
அவள் வருவாளா..
அவள் ஓரப்பர்வை என் உயிரை உறிஞ்சியதே..
அவள் அறிவாளா..
போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்..
அவள் வருவாளா.." என அவனும் வாய்க்கு வந்தப்படி பாடி நடந்த போது, இதமாக மேனி உரசி சென்ற தென்றல் உடலை சிலிர்க்க வைத்தது.
"ஒரே குளிரா இருக்கே.. ஊஃப்.." என உள்ளங்கை உரசி தானாக பேசி நடக்க, எங்கையோ கொலுசொலி அவனது செவியை நிறைத்தது.
திரும்பி பார்க்க தோணவில்லை. ஆனால் இப்போது அவனை நெருங்கியது போல் கேட்டது. நடையை தளர்த்தி விட்டு விழிகளை உருட்டி சுற்றி முற்றி பார்த்தான்.
ஆனால் சத்தம் மட்டும் காதை நிறைத்தவண்ணம் இருக்க, மனமோ பேயா இருக்குமோ என யோசிக்க வைத்தது.
"வர்றது வர.. ரெண்டா வா.. எனக்கு அதான் பிடிக்கும்.. ஒன்னா வராதே! லெஃப்ட்'ல போர் அடிச்சா ரைட்ல இருக்க பேய் கூட ஒரு கிஸ்ன்னு மாத்தி மாத்தி லிப்லாக் அடிச்சு விளையாடலாம்.." என்றான் வாய் விட்டு பேசி நக்கலாகவே.
அவனுக்கே அவன் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது.
"பேயா இருந்தா இப்போவே வந்திடு. வர்றது வர சோலோவா வராதே. எனக்கு சிங்கிள் வார்த்தையே பிடிக்காது கனவுல கூட. ஏன் பேயா இருந்த கூட..
நல்லா சம்பாரிக்கிறேன். ரெண்டு பேருக்கும் நல்லா சாப்பாடு போடுவேன். பட் குழந்தை மட்டும் வேணாம். இருக்கிற வரை ஹாப்பியா.. ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டே இருப்போம்!" என அவன் இடையில் கை வைத்து நின்று கொண்டு இடதுப்புறம் தூரத்தில் ஆடிடும் தென்னை மரத்தை பார்த்து கூறியவன் விழிகள் வலப்பக்கம் காண தவறி விட்டது.
எங்கிருந்தோ வந்த புகை அவனை மூச்சடைக்க வைக்க, திடீரென புரை ஏறியது போல் இருமல் வந்தது.
சில நொடிகளில் அடிவயிறு வலி எடுக்கும் அளவிற்கு இருமல் அதிகமாகியது. இருமலில் நிற்க முடியாது தடுமாறியவன், கால் முட்டியில் இரு கையை ஊன்றி குமட்டல் வரும் வரை இருமினான்.
தலையோ அதீத இருமலில் வலியை தர, சாப்பிட்டதெல்லாம் ஒருபுறம் வாந்தியாக வந்தது. நிற்க முடியாமல் நிலை தடுமாறி கீழே சுருண்டு விழுந்தான் பிரதீஷ்.
இரவு 11.40 மணி
அறையில் படுத்திருந்தப்படி கண் முழித்து பார்த்தவனுக்கு, நெஞ்செல்லாம் ஒரே எரிச்சல். ஏனென்று மட்டும் நினைவுக்கு வரவில்லை. மூச்சு விடும் போது புதிதாக கர் கரென்று சத்தம், தலையும் சுற்றுவது போலிருந்தது.
என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்து பார்த்தும் தோல்வியே கிட்டியது. அவன் வெளியே சென்றது வரை மட்டுமே நினைவில் இருக்க, அதன்பின் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை முடிந்த வரை யோசித்ததில் தலை வலி தான் அதிகமாகியது.
வயிறு காலியானதில் பசி ஒருபுறம் வாட்டிட, ஆயாசமாக அடுக்களை நோக்கி சென்றான். பெரிதாக சமைக்க தெரியாது இருந்தாலும், ஃபிரிட்ஜில் உள்ள மாவை எடுத்து தோசை வார்த்து உண்ணலாமென நினைத்தான்.
பசியில் கிறக்கம் வராத ஒரு குறை தான் பிரதீஷிற்கு!
விட்டால் எங்கேனும் விழுந்தே விடுவான். அவன் தோசை வார்த்த நொடி மடாரென ஒரு சத்தம் அதுவும் அவனது அறையின் அருகே தான் கேட்டது. பதட்டத்தில் அடுப்பை அணைத்து விட்டு, மிக சிரமப்பட்டு ஓட்டமாக ஓடினான் மாடியின் பக்கம்.
கரகம் எடுத்து வந்த பூசாரி, விபூதி வாங்க வந்த பக்தர்கள் ஒரு சிலருக்கு அருள்வாக்கு கூறிக்கொண்டிருந்தார். அதை நம்பாதவர்கள் வித்தியாசமாக பார்த்தபடி ஒதுக்கி நின்றிருக்க, நம்பிக்கை உள்ளவர்களோ அவரிடம் அருள்வாக்கு கேட்டு கொண்டிருந்தனர்.
அதிலும் கல்யாணி அம்மாவிற்கு அம்முதியவர் கூறும் அருள்வாக்கு மீது அத்தனை நம்பிக்கை. இதுவரை அவர் கூறியது நடந்துள்ளது என்பதால் இம்முறை, பிரதீஷ் திருமணம் பற்றி கேட்க நினைத்தார்.
"சாமி என் பையன் பிரதீஷ்க்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகிடுமா? அவன் மனசு மாறி அம்மான்னு கூப்பிடுவானா?" என அவரோ கண்ணீர் மல்க வினவ, பதில் தர வேண்டிய பூசாரியிடமோ பெரும் அமைதி.
"சாமி ஏதாவது சொல்லுங்க.. ஏன் அமைதியா இருக்கீங்க?" என அவர் கேவலோடு வினவ, அவரின் பதிலோ நெஞ்சடைக்க வைத்தது.
"மூணு பௌர்ணமி முடியட்டும் மா. அதுவரை அவன் விஷயமா எதுவும் சொல்ல முடியாது!" என்றார் அருளோடு.
அவரோ திகைப்பாக, "அதுக்கப்புறம் என் பையனுக்கு கல்யாணம் ஆகிடுமா சாமி?" என்க,
"உயிர் கண்டம் இருக்கு மா உன் பையனுக்கு. மூணு பௌர்ணமி முடியட்டும்." என்றவர் வேறேதும் கூறாது கடந்து செல்ல, பெற்ற அன்னையின் மனம் தான் அதை தாங்கிக்கொள்ள முடியாது கண்ணீர் உகுத்தது.
தனக்கு எது நேர்ந்தாலும் சரி, பிள்ளைகள் நலனை பற்றி யோசிப்பது தான் தாயின் மனம்.
இது உண்மையோ, பொய்யோ ஆனால் அவரின் நம்பகத்தன்மைக்கு அது அதிர்ச்சியை உண்டாக்கியது.
தெய்வானை அவர்கள் பால் குடம் எடுத்து செல்வதால் வீட்டினர் அவரோடு நின்றிருக்க, கல்யாணியை பற்றி யாரும் அந்நொடி யோசிக்கவில்லை.
மகன் பேசாமல் இருக்கும் வலியையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு உயிர் சேதம் என்றதும், நொடிந்து போய் ஒரு ஓரம் அமர்ந்து விட்டார் சுற்றி என்ன நடக்கிறதென சுயம் மறந்து.
மாடி நோக்கி சென்றவனுக்கு அசதியில் எப்பக்கம் செல்வது என தெரியாது, கண்ணோ பசியில் இருட்டியது.
திருடன் எவனோ வந்து விட்டானோ, என்னும் படபடப்பிலே அங்குமிங்கும் ஓடியவன் சத்தம் கேட்டது பிரமையாக இருக்குமோ என நினைத்து விட்டு, கீழே இறங்கினான்.
அவதி அவதியாக தோசை வார்த்து ஒரு டம்ளர் பாலை ஊற்றி உண்ட பின்பு தான் வயிறு நிறைந்தது. கை கழுவ எழுந்தவன் வாசல் கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதை கவனித்தான்.
'நாம எப்போ கதவை லாக் பண்ணுனோம். ஒன்னும் புரியலயே! எப்போ வந்தேன் வீட்டுக்கு?' என மீண்டும் அதே கேள்வியை அவன் மண்டையை குடையும் நேரம், ஹாலின் அருகே இருந்த அறையில் யாரோ மறைந்திருப்பது போன்று நிழல் தெரிந்தது.
மனமோ, இதுவும் பிரமையாக இருக்கலாம் என அறிவுறுத்த ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்தான். அந்த சோபாவின் பின்னால் இருந்த அறையில் இருந்து அவ்வுருவம், பூனை எட்டுகள் வைத்து நடந்து மாடி நோக்கி சென்றது.
தலை கவிழ்ந்து இருந்தவன் கண்கள், ஓரப்பார்வையில் ஏதோ செல்வது போல் விழ திடும்மென திரும்பி பார்த்தான்.
"ஹேய் யாருடா நீ.. நில்லு.." என கர்ஜித்தபடி விரட்டியோடினான். அவ்வுருவமோ, அவனை விட பல மடங்கு வேகமாக ஓட முயற்சித்து இறுதியில் விழுந்து அள்ளியது தான் மிச்சம்.
அதுவும், அவன் தங்கிருக்கும் ராஜீவ் அறை முன்பே..
ஓடி வந்தவன் சடேன் பிரேக் வைத்து, அதன் நடு முதுகில் ஒரு கால் வைத்து ஊன்றி நின்றான்.
அவன் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க சுதாரித்த உருவமோ, அவனது காலை குப்புற படுத்தபடி இடது கையால் தாக்க முயன்றது. அவனது அழுத்தம் கூடியதில் மூச்சு விடாது சிரமப்பட்ட அவ்வுருவம், முழு முயற்சியோடு போராடி திரும்பி விட்டது.
முகத்தில் கருப்பு மாஸ்க். விழிகள் மட்டும் தெரிய. உடையோ குளிருக்கு ஏற்ப ஜெர்கின் மற்றும் மண் கறை படிந்த ஜீன்.
இப்போதோ அவனது ஒற்றை கால் அதனது பிடியில் சிக்கிக் கொள்ள, பிரதீஷ் தான் நொண்டியாட்டம் ஆடிக்கொண்டிருந்தான். பிரதீஷ் சப்பென அறை வைத்திட, அவனது குரல்வளையை பிடித்து நெரித்த உருவம் பிடியில் இருந்த காலை விட்டது.
போராடியவன், சாதுர்யாமாக அதன் ஒரு கால் முட்டியில் எட்டி மிதிக்க, பெரும் அலறலோடு மடாரென கீழே விழுந்தது.
தேன்மழை💖💖
