அழகன் 8
“என்ன பொம்மா.. மாமன சைட் அடிச்சது போதுமா? இல்ல உள்ள வந்து நிதானமா சைட் அடிக்கிறியா?” என்று பாதி கதவை திறந்து, அதிலே சாய்ந்து நின்றவனின் கவர்ச்சியில் கலவரமானாள் ஆண்டாள்.
பின்ன.. ஒற்றை துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, உருண்டு திரண்ட புஜங்களையும்.. விடைத்த திண்ணிய மார்பையும் காட்டிக்கொண்டு நிற்பவனை கண்டால்.. பெண்ணவளின் பூஞ்சை மனதில் கலவரம் ஆகுமா? ஆகாதா?
அதிலும் தண்ணீர் பிடித்து இருப்பான் போல குளிக்க.. அதெல்லாம் அவன் மீது சிதறி இருக்க..
அவன் வன் நெஞ்சில் இருக்கும் கருகருவென சுருண்டு இருந்த முடிகளின் மேலே வைரத்துளிகளாய் அங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன..!
அந்நீர் துளிகளை கண்டதும் பெண்ணவளுக்கு தொண்டை வறண்டது.
அவளின் நிலையைக் கண்டுக்கொண்டவனோ கொடுப்புக்குள் நாக்கே சுழற்றி, “என்ன பொம்மா.. தாகமா இருக்கா? நான் வேணா தீர்க்கட்டா?” என்று சற்றே முன்னே குனிந்து அவளது காதில் கிசுகிசுக்க..
“இல்ல னா.. தாகம் எல்லாம் இல்லையே..!” என்றவளின் பார்வை இப்போது அவன் முகத்தை விட்டு இறங்கவில்லை.
அதிலும் ட்ரிம் செய்திருந்த அந்த கற்றை மீசையிலும் மற்றும் லேசான தாடியிலும் கூட நீர் திவளைகள் மின்ன.. கந்தவர்னாய் கள்ளவனாய் கவர்ந்தான் கள்ளழகன்..!
மற்ற நேரத்தில் என்றால் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்த்திருக்க மாட்டாள். நேற்றிலிருந்து இவனை அணு அணுவாக புகழ்ந்து தள்ளிய அவளது தோழிகள் ஒரு புறம்.. காலையில் அவன் செய்த சில்மிஷன் மறுபுறம் என்று பெண்ணவள் மனது ஒரு வித தடுமாற்றத்திலேயே சுழன்று கொண்டு இருக்க..
அதிலும் இவனது இந்த முழு ஆண்மை நிறைந்த தோற்றம் அவள் மனதை இன்னும் சலனப்படுத்தியது..!
சலனப்படுவதும் பின் சபலப்படுவதும்.. காதலின் முதலடி..!
அதில் வெற்றிகரமாக தனது காலை எடுத்து வைத்திருந்தாள் ஆண்டாள் நப்பினை..!
“இன்னும் எம்புட்டு நேரம் தேன் அந்த துண்ட உன் கையிலே வச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்குற போற பொம்மா? இப்படியே மாமன நீ சைட் அடிக்கிறத பாக்க எனக்கும் சந்தோஷமா தேன் இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல அயித்த கூப்பிடுவாய்ங்க.. சாப்பிட” என்று அவன் கண் சிமிட்டிசிரித்ததும்,
ஏதோ கனவில் இருந்து விழித்தவள் போல சட்டென்று துண்டை அவன் கையில் திணித்துவிட்டு ஓட்டமாக ஓடி தன் அறைக்குள் புகுந்தவள், குளியலறையில் சென்று தான் தன் ஓட்டத்தை நிறுத்தி, கதவில் சாய்ந்து உள்ளத் தகிப்பை பெரு மூச்சின் மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.
அதன் பின் அவள் குளித்து வர, இருவரும் காலை உணவு உண்ணாததை கண்டு மகளைக் கடிந்துக் கொண்ட ரங்கநாயகி இருவருக்கும் காலை உணவை பரிமாறி, அதன்பின் கோயில் சென்றுவர பணித்தார்.
இளஞ்ஜோடி கோயிலுக்கு ஆண்டாளை ஷேவிக்க சென்றதும்..
“ஏன்னா.. மாப்பிள்ளைக்கு அசைவம் தான் செய்யணுமா? சைவம் செஞ்சா மன்னி ஏதும் நினைச்சுப்பாளா?” என்று தயக்கத்தோடு கேட்ட மனைவியை கண்ட சாரங்கபாணி,
“எனக்கும் உனக்கும் கல்யாணம் நடந்து கிட்டத்தட்ட இருபத்திநாலு வருஷம் ஆகுது நாயகி.. இன்னும் என்னையும் புரிஞ்சுக்கல.. என் சொந்தங்களையும் நீ புரிஞ்சுக்கலையா?” என்று கேட்டார்.
எங்கு கணவன் கோபித்துக் கொண்டாரோ என்று பதட்டம் அடைந்தவர் “அப்படி இல்ல னா கல்யாணம் பண்ணி மொத தடவ வந்திருக்கா.. அதான்..” என்று அவர் கையை பிசைந்து கொண்டு எப்படி புரிய வைப்பது என்று தடுமாற..
மனைவியை அழைத்து தன் அருகில் அமர வைத்து கையை இறுகப் பற்றிக் கொண்ட சாரங்கபாணி,
“உன் கைய நான் இப்படி மொத மொத என்னைக்கு புடிச்சேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா நாயகி?” என்றதும் அவர் தலையசைக்க..
“அது வெறும் ஏதோ ஒரு கடமைக்காக இல்ல.. காதலுக்காக தேன். நான் உன்னைய காதல் செய்றேங்குறது.. உன்னைன்னா உன் எல்லாத்தையும் தேன்..! உன் விருப்பு வெறுப்பு உன் கஷ்ட நஷ்டம் உன் சம்பிரதாயம் எல்லாத்தையும் தேன் நாயகி. அதே போல தேன் என் சொந்தங்களும்..! உன்னைய முழுசா தேன் அவங்க மருமவளா ஏத்துக்கிட்டாய்ங்க என்னைய போல” என்றார்.
“புரிஞ்சுது னா” என்று கணவனின் தோளிலே சாய்ந்து கொண்டார் இரங்கநாயகி.
சிறிது நேரம் இருவரும் அப்படியே தங்களின் கடந்த காலத்திற்கு ஒருமுறை சென்று வந்து திரும்ப.. மெல்ல மனைவியின் கன்னம் தட்டியவர்,
“நாயகி நேரம் ஆயிடுச்சு பசங்க கோவிலில் இருந்து வந்துருவாய்ங்க.. நீ சமையல ஆரம்பி.. ஏதாவது வேணும்னா சொல்லு நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றதும்,
“இருங்க நான் செத்த போய் ஒரு தடவ எல்லாம் சரி பார்த்துட்டு வந்துடுறேன்” என்றவர் சமையலுக்கு என்று ஏற்கனவே வாங்கி வைத்தவற்றையெல்லாம் திரும்ப ஒருமுறை சரிபார்த்து, விட்டுப் போனவற்றையெல்லாம் கணவனிடம் வாங்க பணித்தவர் துரிதமாக சமையல் வேலையை தொடங்கினர்.
அழகன் ஆண்டாள்… இதான் முதன்முதலாக இருவரும் கோவிலுக்கு வருவதில்லை. ஏற்கனவே குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு தான் வந்தார்கள்.
ஆனாலும் இப்படி தனிமையாக இருவரும் மட்டுமே சென்று இருக்கவில்லை. ஒரு பஸ் முழுக்க அங்காளி பங்காளி சொந்த பந்தத்தோடு தான் சென்று விட்டு வந்தனர்.
கூட்டத்தோடு கூட்டமாக சென்று வந்தது எல்லாம் பெரியதாக அவர்கள் மனதில் பதியவில்லை.
பெரிதாக தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை இருவருக்குள்ளும்..!
இன்றோ.. கணவனின் தோளோடு தன் தோள் உரச, தன் மென் பட்டு புடவை அவனின் காட்டன் வெள்ளை சட்டையோடு உரச உரச… அந்த மெல்லிய சத்தம் கூட அவளுக்குள் ஏதோ செய்தது..!
எதுவும் பேசாமல் அமைதியாக செல்லும் இருவருக்குள்ளும் மனதில் அத்தனை அமைதியும் மகிழ்வும்..!
அந்த கோவிலில் ஆண்டாளுக்கு தெரிந்தவர்கள் எதிர்பட்டவர்களிடம் எல்லாம் சிரித்த முகத்தோடு பேசி கணவனையும் அறிமுகப்படுத்தினாள்.
“ஹான்.. மாமி.. இவர் தான் என் ஆத்துக்காரர்..”
“வணக்கம் ணே.. ஆமா.. ஆமா.. இவரு தான் என் வீட்டுக்காரர்..”
“ஹாய் டி.. ஆமா.. இவர் தான் என் ஹஸ்பெண்ட்” என்று
வித விதமாய் வித்தியாசமான முறைகளில் அழைத்து தன் கணவன் என்று அவள் சற்று வெட்கத்தோடும் சிவந்த முகத்தோடும் கூறுகையில் ஜிவ்வென்று தான் இருந்தது நம் அழகனுக்கும்..!
அதிலும் அவள் மற்றவர்களிடம் அவனை அறிமுகப்படுத்தி விட்டு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து சிவந்து வெட்கப்படும்போது மெல்ல தனது மீசையை நீவி விட்டு கொள்வான் அழகன் அழகாய்..!
மனம் நிறைவாய் ஆண்டாளை தரிசனம் செய்துவிட்டு, சிறிது நேரம் அருகருகே அமர்ந்து அந்த கோவிலின் இதமான அமைதியையும்.. கோவில் மணியோசையையும்.. தங்களுக்குள் உள்வாங்கி அதன் பின்னே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்..!
இவர்கள் வருவதற்குள் கணவனின் உதவியோடு சமையலை முடித்து இருந்தார் இரங்கநாயகி.
“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்” என்று இரங்கநாயகியின் மரியாதையான அழைப்பில் சற்று வித்தியாமாய் உணர்ந்தான் அழகன்..!
“வழக்கம் போல அழகன்னே கூப்பிடுங்க அய்த்த… சும்மா அப்பாத்தா சொல்லுச்சு.. ஆயா சொல்லுச்சுனு நீங்க மாப்ளனு கூப்பிடுறது எனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்குங்க அய்த்த” என்றான் அழகன்.
“அது.. முன்ன அப்படி கூப்பிட சரி மாப்ள.. இப்ப அப்படி கூப்பிட்டா நன்னா இருக்காது. கூட மாமியும் மாப்ளனே கூப்பிட சொல்லி நான் அப்படி கூப்பிடாம போன பெரியவா பேச்ச மதிக்காதது போல ஆயிடும்..” என்று அவரும் தன்னிலை விளக்கம் கொடுக்க,
“ஏன் அழகா நானுமே உன்னைய சின்னதுல இருந்து மாப்ளனு தானே கூப்பிடுறேன்” என்றதும்,
“அது சரி.. உங்க இஷ்டம் தேன்” என்றவன் சாப்பிட அமர, அவர் போட்ட பெரிய தலை வாழையிலையை கண்டே மிரண்டவன், அதில் பரிமாறிய பக்ஷனங்களையும் பதார்த்தங்களையும் கண்டு திகைத்து மனைவியை பார்க்க..
அவளோ கண் முழி ரெண்டும் வெளியே வந்து விடும் அளவு அப்படி பார்த்துக் கொண்டிருந்தாள், அன்னையையும் அவர் பரிமாறியவற்றையும்..!
கிட்ட திட்ட 51 வகை உணவு பதார்த்தங்கள் அவன் இலையில் வைக்கப்பட்டிருந்தன..!
“அய்த்த.. என்ன இது? இம்புட்டு சமைச்சி வைச்சு இருக்கீக?” என்று ஆனந்த அதிர்ச்சியோடு அழகன் கேட்க..
“இதெல்லாம் ஒரு விஷயமா மாப்ள, நன்னா சாப்பிடுங்கோ” என்று ஏக மரியாதையோடு நின்றவர்,
மகளை கண்களால் காண்பித்து ‘நீ பார்த்து பரிமாறு.!’ என்று சொல்ல அவளோ அன்னையை முறைத்தாள்.
“பொம்மா.. நீயாவது அய்த்த கிட்ட சொல்ல கூடாது, பாரு எவ்வளோ செஞ்சி இருக்காங்கனு” என்றவன் மனைவியிடம் குறைப்பட,
அவளோ “நோக்கு இத்தன பதார்த்தம் செய்ய தெரியும்னு நேக்கு இன்னிக்கு தான்மா தெரிஞ்சது” என்று குறை கூறினாள்.
அவளின் வருத்தம் அவளுக்கு..!
‘இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்த்து வருவார்களாம்.. திடீரென்று ஒருத்தனுக்கு மணமுடித்து வைத்தவுடன், பெண்ணின் மீது கொண்ட பாசத்தை அப்படியே தூக்கி வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை இடம் வைத்துவிடுவார்களாம்.. கூடவே மரியாதையும் கொடுத்து, பெண்ணை அத்தோடு விட்டுவிடுவார்களாம்..! இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை..!” என்று நினைத்தவள், இப்பொழுது ஆதரவுக்கு அவள் தந்தையை பார்க்க..
சாரங்கபாணியோ மிகவும் முக்கியமாக அழகனின் இலையில் இருந்த பதார்த்தங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தவர்,
“ஏ நாயகி.. ஒரு பதார்த்தம் குறையுது பாரு.. என்னத்த விட்டவ?” என்றவர் மீண்டும் ஒருமுறை எல்லாத்தையும் பார்த்துவிட்டு “பாரேன்.. அந்த பருப்பு உசிலி வைக்கவே இல்ல.. பாரு.. போய் எடுத்துட்டு வா” என்றார்.
இரங்கநாயகியும் பார்த்துவிட்டு “ஆமானா.. மறந்துட்டேன் பார்த்தேளா..! நீங்க சமத்து னா.. மன்னிச்சுக்கோங்க மாப்ள” என்று அழகனிடம் மன்னிப்பு கேட்டவர், வேகமாக எடுத்து வந்து வைத்தார்.
“ஆனாலும் உங்க கண்ணு பயங்கர ஷார்ப் னா” என்று கணவனை அவர் பாராட்ட..
“உன்னைய விட இல்ல” என்று மனைவியை அவர் சிலாகிக்க..
‘போதும் போதும் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் நிறுத்துங்கோ..!” என்றாள் சற்றே கடுப்போடு ஆண்டாள்.
“ஆண்டாள்..!” என்று ரங்கநாயகியின் அதட்டலில், தன்னை சமாளித்தவள்,
“முதலில் உங்க மாப்ள சாப்பிடட்டுமா.. அப்புறம் உங்கள யாரு சமத்துனு பட்டிமன்றம் வைக்கலாம்” என்றாள் சற்றே கோபத்தோடு.
பின் அம்மாவின் கண்கள் சொன்ன கண்டனத்தில், அமைதியின் உருவாய் மாறி, “அவரு மொத சாப்பிடட்டும்.. அந்த பதார்த்தம் தீர்ந்து போன நான் ரீபில் பண்றேன் மா சரியா?” என்று கேட்டவளை பார்த்து,
“சரி தான்.. அப்படி மாப்ள பக்கத்துல உக்காந்திண்டு ஒன்னு ஒன்னா எடுத்து பரிமாறு சரியா? எதுவும் வேணும்னா என்ன கேளு” என்று பொறுப்பான அம்மாவை அவர் கூற, இவளோ நறநறவென்று பல்லை கடித்தாள்.
“நீ இப்படி வா..!” என்றவன் மனைவி அருகில் வந்ததும் கையை பிடித்து இழுத்து தன்னருகில் உட்கார வைக்க.. அவளும் கணவனின் திடீர் இழுப்பில் தடுமாறி அவன் மேலே விழுந்து வைத்தாள்.
அவளை தாங்கி பிடிக்கிறேன் பேர்வழி என்று அவனது கை அவளது வளவள இடுப்பில் நங்கூரமாய் நச்சென்று பாய்ந்து பிடித்துக் கொண்டது இறுக்கமாய்..!
‘பெற்றோர்கள் முன்னிலையில் இது என்ன எப்படி செய்கிறான்?’ என்று யாரும் அறியாமல் அவனை முறைத்தவாறு கைகளை அவள் எடுத்து விட..
அவனும் “இதுக்கு தான் ஒழுங்கா சாப்பிடணும் காத்தடிச்சா பறக்குற மாதிரி இருந்துகிட்டு பேச்சு வேற உனக்கு..! இவ்வளவு ஐட்டத்தையும் முதல்ல நீ தான் சாப்பிட போற” என்றதும் அவள் பீதியாகி கணவனை பார்த்து.. வேணாம் என்று தலையசைத்தாள்.
“சேர்ந்து சாப்பிடுவோம்” என்ற மருமகனின் என்று செயலில் பெற்றவர்கள் மனம் நிறைய இருவரையும் அத்தனை ஆனந்தத்தோடு பார்த்தனர்.
“இத சாப்பிடு பாரு.. இது நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் சாப்பிடு.. இது காரமில்ல சாப்பிடு” என்று அவன் சாப்பிட்ட எச்சில் கையோடு அவளுக்கும் ஊட்டி விட.. எடுத்துக் கொடுக்க..
என்று இருக்க, அவளுக்கு அத்தனை தர்மசங்கடம்..!
திருமணத்தன்று ஒரே ஒரு முறை தான் அவன் ஊட்டி விட்டான். ஆனால் இவளோ தன் விரல் அவன் உதடு அருகே கொண்டு சென்றாலும் பட்டம் படாமல் தான் ஊட்டினாள்.
அவனும் அவளுக்கு ஊட்டி விட்டவன், அவளைப் பார்த்து லேசாக கண்சிமிட்டி அதை விரலை அவன் சுவைத்து சாப்பிடும் பொழுது.. ஏதோ சொல்லத் தெரியாத உருண்டை தொண்டைக்குள் அடைத்தது ஆண்டாளுக்கு.
“அய்த்த.. இதுல பரிமாறியதே போதும். நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுகிறோம் நீங்களும் சாப்பிடுங்க” என்றவன், சொன்னதோடு நிற்காமல் அப்படியே சாப்பிட,
“இல்ல மாப்ள..! இன்னைக்கு உங்களுக்கு தான் விருந்து. நீங்க சாப்பிட்டு முடிங்கோ.. அப்புறம் நானும் மாமாவும் சாப்பிட்டுக்குவோம்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் இரங்கநாயகி.
சரி என்று இவர்கள் சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் இருவரும் சாப்பிட.. அவர்களுக்கு பரிமாற என்று ஆண்டாளும் அங்கேயே அமர்ந்து இருந்தாள்.
சாரங்கபாணி அவ்வளவையும் சாப்பிடவில்லை. அவருக்கு பிடித்தமானவற்றை சாப்பிட்டு விட்டு “தாம்பூலம் மறந்துட்டேன் போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று அவர் சென்றார்.
ரங்கநாயகி மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்க…
“ஏன் அய்த்த..உங்களுக்கு 80ஸ் ஹீரோல யாரு ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்டான் அழகன்.
அவரோ சற்று யோசித்து “80 னா நாங்க சின்னதுல உள்ள காலத்துல கேக்குறீங்களா மாப்ள?” என்று கேட்டதும், ஆம் என்று அவன் தலையசைக்க..
சிறிது நேரம் யோசித்து “கார்த்திக்கும் பிரபுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாப்ள” என்றார்.
“அதானே..!” என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன் “பிரபுவோட சின்னத்தம்பி படத்த பார்த்திருக்கீங்களா அயத்த.. எப்படி இவளும் உங்க கூடவே உக்காந்துட்டு அந்த படத்தை எல்லாம் பார்ப்பாளா?” என்று அழகன் கேட்க..
“இப்போ வர படம் எல்லாம் அவ்வளோ நன்னாவா இருக்கு? அதுக்கு அந்த கால படம் எல்லாம் எவ்வளவோ தேவல மாப்ள.. பாட்டும் அருமையா இருக்கும்.. கதையும் அருமையா இருக்கும்” என்றவர் மருமகன் கேட்ட, அந்த சின்ன தம்பி பட பாடல்ளை கூற வந்தவர் சட்டென்று ஏதோ புரிவது போல் இருக்க, மகளைப் பார்த்தார்.
அவளோ அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று பரிமாறிக் கொண்டிருக்க..
‘போச்சு.. இந்த பொண்ணு என்னமோ பண்ணி வச்சிருக்கா.. அதான் மாப்ள இப்படி பேசுறார்” என்று பல்லை கடித்தவர்,
சாரங்கபாணி வெற்றிலை பாக்கு வாங்கி கொடுத்ததும் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டு இருக்க, “நான் செத்த குறுக்க சாய்றேன் மாமா, சாய்ந்திரம் போல ஊருக்கு கிளம்பனும்” என்று மனைவியை பார்த்து கூறிவிட்டு அறைக்குள் சென்று படுத்து விட்டான்.
சாரங்கபாணி அவர்கள் அறைக்கு சென்று விட, அதன் பின் மகளுக்கு ஆரம்பித்தார் லட்சார்ச்சனையை ரங்கநாயகி..!
“நீ என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா ஆண்டாள்? நோக்கு கல்யாணம் பேசறச்ச.. எல்லாம் தெளிவா தானே சொல்லிக் கொடுத்தேன்.. பத்தாதுக்கு இந்த காலத்து பிள்ளைகளுக்கு நாங்க புதுசா சொல்லிக் கொடுக்கணுமானோ? என்ன உங்க பிரண்ட்ஸூங்குள்ள தாற் ஏ டு இஸட் எல்லாம் டீடைலா பேசுறேளே?” என்று அவர் பொரிய,
“அம்மா.. அம்மா மாதிரி பேசுமா” என்று முகத்தை திருப்பினாள் ஆண்டாள்.
“ஆஹான்.. அப்புறம் இன்னைக்கு மாப்ள இப்படி பேச என்ன காரணம்? நீ என்ன பண்ணி வச்ச அவரான்ட?” என்று ஆரம்பித்தவர் விடவே இல்லை அவளை..!
“உங்களுக்குள் இருக்கிறத முதல்ல பேசி சரி பண்ணிக்கோங்க ஆண்டாள். அடுத்த முறை பொறந்த ஆத்து வர்றச்சே இப்படி அவருக்கு பயந்து நீ எங்க ரூம்ல தூங்குகிறதும்.. அவர் தனியா படுக்கிறதும் நன்னா இல்ல சொல்லிட்டேன் ஆமா..” என்று தான் மகளை கண்டு கொண்டதை அவர் சொல்ல.. அமைதியாய் கேட்டவள் சரி சரி என்று தலையாட்டினாள்.
இதற்கு மேல் இருந்தால் அம்மா இன்னும் பாடம் எடுப்பாள் என்று கணவன் கிளம்பு என்றதும் வேகவேகமாக கிளம்பி அவனோடு மதுரைக்கு வந்து சேர்ந்தாள்.
இவர்கள் வரவே இரவாகிவிட்டது. மறுநாள் காலை ஆண்டாள் எழுந்து பார்க்கும்போது அருகில் அழகன் இல்லை.
“வழக்கம் போல கர்லாக் கட்டைய உருட்ட போயிட்டாரு மனுஷன்” என்று யோசித்தபடி வெளியில் வர, அப்பத்தா அவளை அழைத்தவர், விருந்துக்கு சென்றது பற்றி கேட்டார்.
“பரவாயில்லையே நாயகி.. 51 பலகாரங்களை தனியாவா செஞ்சா? அப்புறம் மாப்ள கவனிப்புனா சும்மாவா?” என்று ரங்கநாயகியை அவர் சிலாகித்துக் கூற.. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் ஆண்டாள்.
அச்சமயம் பார்த்து உள்ளே வந்த அழகனை கண்டு அப்பத்தா அவனை அருகில் அழைக்க.. “நீங்க அவராண்ட பேசிட்டு இருங்க ஆச்சி நான் அத்தை கிட்ட போய் பேசிட்டு வரேன்” என்று நழுவி விட்டாள்.
கணவனை கண்டதும் ஓடும் பெண்ணை தான் இருவரும் ஆயாசமாக பார்த்தனர்.
“இப்படியே எவ்ளோ நாளுக்கு தள்ளி தள்ளி இருக்க போற? உன்ன பத்தி அவளும் நல்லா தெரிஞ்சுக்கணும் இல்லையா? கொஞ்ச நாளைக்கு வயிலு வேலை.. தொழில்னு ஓடாம அந்த பொண்ணுக்கு கொஞ்ச நேரம் செலவு பண்ணு பேராண்டி.. உன்ன பத்தி சொல்லு.. அவள பத்தி தெரிஞ்சுக்கோ?”
“என்னைய பத்தி சொல்ல என்ன இருக்கு அப்பத்தா.. சின்ன வயசுல இருந்து அவ என்னைய பாத்துகிட்டு தானே இருக்கா?” என்றான்.
“சின்ன வயசுல உறவு பொண்ணா அவ பாக்குறது வேற.. இப்போ உரிமையுள்ள பொண்டாட்டியா பாக்குறது வேற டா பேராண்டி.. போ.. போ. “ என்று விரட்டி விட்டார் பேரனை அவன் மனைவியிடம்,
சரி என்று அவனும் காலை உணவு முடித்து அவளை ஜிம் இருந்த அறைக்கு அடுத்த அறைக்கு அழைத்து சென்றான்.
“வாவ்.. இவ்வளவு அவார்ட்ஸ் ட்ராஃபிஸ் எல்லாம் நீங்க வாங்குனதா னா..?” என்று தன் ஸ்ட்ராபெரி க்ளாஸ் போட்ட உதட்டைப் பிளந்து கேட்ட மனைவியை கண்டு மனதுக்குள் மனதாப்புக்கள் பூத்தது அழகனுக்கு..!
ஆமா என்று சட்டை கலரை தூக்கிவிட்டு மார்த்தட்டி கொள்ள தான் அவனுக்கு அத்தனை ஆர்வமாக இருந்தது. ஆனாலும் உள்ளே உள்ள அந்த வெள்ளை உள்ளம் இல்லை என்று மறுதலித்தது.
“ம்ப்ச்.. இதெல்லாம் நான் வாங்குனது இல்ல..;” என்று அவன் வாய் திறந்து சொல்லும் முன்..
“வாவ்.. ஏன்னா.. பிண்றேள் போங்கோ. நீங்க அவ்ளோ நல்லா படிக்கிற பிள்ளையாண்டானா ஸ்கூல் காலேஜ் டைம்ல… நேக்கு தெரியதுவே தெரியாது னா. நானெல்லாம் அவ்ரேஜ் ஸ்டுடெண்ட் தான். இதெல்லாம் பார்க்குறச்ச நேக்கு அப்படியே கூஸ்பம்ஸ் ஆகுதுனா…!” என்று தன் வெள்ளை வெள்ளீரேன்ற தந்த கைகளை அவன் முன் நீட்டினாள் ஆண்டாள்.
அவள் கையின் மென்மையையும் வெள்ளையையும் பார்த்தவனுக்கு அதனை தொட்டு தடவி பார்க்க ஆசை மூண்டது.
தொட்டால் அவ்வளோ தான்.. கத்தி ஊரை கூட்டி விடுவாள் இந்த அத்தையின் லிட்டில் மருமகள் என்று பயந்தவன், எச்சிலை விழுங்கி ஆசையை விழுங்கிக் கொண்டான்..!
“என்னான்னா…. இந்த ஷில்டுல பெஸ்ட் பெர்ஃபாமர்.. பெஸ்ட் பிடிக்காதவர்னு என்னமோ எழுதியிருக்கு” என்று நெற்றி சுருக்கி கணவனை சந்தேகமாக பார்த்தாள்.
“அதெல்லாம் நான் வாங்குனது கிடையாது நம்ம கடம்பனும் வெள்ளையனும் வாங்கினது” என்றான்.
“என்ன நீங்க வாங்கலையா? நான் உங்களை படிப்பாளினுல நினைச்சேன்.. ?”
“நீ என்ன படிப்பாளி பப்பாளினு நினைக்குறதுக்கெல்லாம் நானா பொறுப்பு?” என்று மார்புக்கு குறுக்காக கட்டி நின்ற கேட்ட கணவனை கண்டவளுக்கு வழக்கமான போல தொண்டை வரள நாக்கு தந்தியடித்தது அடுத்த வார்த்தை பேச…
“இதெல்லாம் என் தம்பிக வாங்குனது. ரொம்ப திறமைசாலிக.. எட்டு பட்டி ஜில்லாவுலேயும் அவிய்ங்கள போல திறமைசாலிகள கண்டுபிடிக்க முடியாது. எல்லாம் அவிய்ங்க விளையாட்டுக்கு பரிசா கிடைச்சது” என்றான் மீசையை முறுக்கி கர்வமாக..!
“ஓஹ் படிப்புக்கு இல்லையா?”
“ம்ப்ச்.. இந்த படிப்புக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு.. நான் இருக்குற பக்கம் அது வராது. அது இருக்குற பக்கமும் நானும் போக மாட்டேன்” என்று கூறியவனை கண்டவளுக்கு “நீங்க என்ன படிச்சு இருக்கேள்?” என்று கேட்கும் தைரியம் இல்லாமல் போனது.
அங்கிருந்த ஒவ்வொரு பரிசு பொருளையும் காட்டி பெருமையாய் அவன் பேச..
‘என்ன இவரு பெருமை கேட்க வந்தா.. அவரு தம்பிக பெருமையை பேசுறாரு.. ஆமா.. இவரு அத்தைக்கு ஒத்த புள்ள தானே? அப்போ தம்பிக் யாரா இருக்கும்.. பெருமாளே..! மாமாவுக்கு இன்னொரு ஆம்படையாள் உண்டோ?’ என்று நினைத்தவள் அதனை கேட்க முடியாமல் தவித்தாள்.
அவள் அவனை நிமிர்ந்து பார்ப்பதும்.. பின் தலை குனிவதுமாய் இருக்க.. ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள் என்று புரிந்தவன்,
“இப்ப என்ன உனக்கு கடம்பன் வெள்ளையன் யாருன்னு தெரியணும் அப்படித்தானே?” என்று கேட்க..
அவசரமாக தலையை ஆட்டி ஆமோதித்தாள்.
“என் தம்பிங்க.. அவனுக பின்னால தான் இருக்கானுவோ.. வா உன்னைய அவய்ங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த..
அவனுங்களுக்கு தன் கணவனே தேவலாம் என்பது போல பார்வை பார்த்தவள், மயங்கி சரிந்தாள்.
ஆம் பின்னே.. கடம்பன் என்பவன் நல்லா நாவல் பழ நிறத்தில் அங்கே சாம்பலை நிறத்தை பூசியப்படி ஆஜானுபாகுவான உயரத்தில் கொம்புகளை மண்ணில் அவ்வப்போது உரசியப்படி கண கம்பீரமாக நிற்கும் அவனது ஜல்லிக்கட்டு காளை..!
அட.. நீங்க நினைத்ததும் சரிதான்..! வெள்ளையன்.. வெள்ளை வெளீரென்று நிறத்தில் பிஸ்கட் கலரை தெளித்து விட்டது போல நெடு நெடுவென்று நன்றாக சீவிய கொம்பை சிலிர்த்துக் கொண்டு நிற்கும் மற்றொரு காளை..!
இவை இரண்டும் அழகினை கண்ட அன்பில் சிலிர்த்து மா என்று அழைக்க.. ஜல்லிக்கட்டை வெறும் செய்தியில் மட்டுமே பார்த்தவளுக்கு
தன் முன்னே வேங்கையென சிலிர்த்துக் கொண்டு இருக்கும் அந்த இரு காளைகளும் கண்டதும்.. அவ்வளோ தான் தன் போல மயங்கி சரிந்தாள்..!
“சரியா போச்சு.. இதுக்கு
ம் பயமா? மயங்கிட்டாளா? என்ன பாத்து மயங்குடினா.. என்ன சுத்தி உள்ளத எல்லாம் பார்த்து மயக்கம் போட்டு விழுந்துகிட்டே இருக்கா.. இவள... எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆத்தா கிழவி தான்.. எம்மோவ்..!” என்று கத்தியிருந்தான் அழகன்.. கள்ளழகன்..!
தொடரும்..
