Share:
Notifications
Clear all

சுந்தரியே 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

4

 

அறைக்குள் செல்வதற்கு முன்னதாக நாச்சியையும் சொர்ணத்தையும் பார்த்து "கதவ நல்லா வெளியில பூட்டிகோ அப்பத்தா.. உள்ளே என்ன சத்தம் கேட்டாலும் அவசரப்பட்டு தொடரக் கூடாது.. நான் போடுற பூசையில அந்த ஆஞ்சநேயரே பயந்துகிட்டு உன்ற பேரன் உடம்பிலிருந்து பிச்சிக்கிட்டு போய்விடுவாரு.. பார்த்துக்கோ.. கவலைப்படாதீக" என்று சொல்லிவிட்டு தான் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

கண்களை மூடி கைகளில் வேப்பிலையை வைத்து ஆடிக்கொண்டு, தனக்குத் தெரிந்தவற்றை மந்திரம் என்ற பெயரில் ஜெபித்துக் கொண்டு, கை தேர்ந்த நடிகையாக இல்லையில்லை சாமியாரிணியாக நின்றிருந்தாள் நீலாம்பரி..

 

அதே நேரம் அறைக்குள் அந்த அரை இஞ்சு மஞ்சள் துணியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஸ்ரீ ராமன்.. 

 

நம் கிறுக்கு பயபுள்ள கீசனோ இந்த அனுமன் பக்தனை வைத்து குறிக்காரியிடம் சற்று விளையாண்டால் தான் என்ன? என்று யோசித்தது..

 

வேண்டா வெறுப்பாக அந்த அரை இஞ்சு உடையை அணிந்து கொண்டு வெளியே வந்த ஸ்ரீ ராமனை கண்ட நீலாம்பரிகோ மனதில் சற்றே சலனம்..

 

கட்டுமஸ்தான உடம்புடன் ஆறடி உயரத்துக்கும் நிமிர்ந்து நிற்கும் அழகிய ஆண்மகன்... அகன்ற மார்பும் திரண்ட புஜங்களும் தொப்பை சிறிதுமின்றி படிகட்டு தேகத்துடன்.. கால்கள் இரண்டும் தேக்கு மரத்தை ஒத்தது போல.. கூடவே வெளிநாட்டு வாசம் அவனுக்கு நிறத்தைக் கொஞ்சம் கூட்டி கொடுத்திருக்க..‌ யாரும் இதுவரை அசைக்காத நீலாம்பரியின் மனத்தை சிறிதே அசைத்து பார்த்தான் இந்த ஸ்ரீராமன்..

 

 

"அடியே நீ இப்போ ஆத்தாடி ஆத்தா... மனச ஸ்டெடியா வச்சுக்கோ!! ஸ்டெடியா வச்சுக்கோ!!" என்று தனக்குள் பேசியவாறு அவன் தேகத்தில் இருந்து கண்களை எடுக்காமலே நின்றிருந்தாள் நீலாம்பரி.

 

கீசனோ நீலாம்பரி முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே, அவனின் முதல் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க.. அதுவரை எதிரே நின்றவளை ஏதோ ஒரு அரிய வகை ஜந்துவை போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் பார்வை சற்றே மாற ஆரம்பித்தது.

 

பொதுவாக நீலாம்பரி கன்னி பூசையை கல்யாணம் ஆகாத பெண்களை வைத்து தான் போடுவாள். அதுவும் அவர்களை உட்காரவைத்து குடம் குடமாக மஞ்சள் தண்ணீரை ஊற்றி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் மந்திரங்களாக ஜெபித்து இரவுவரை ஓட்டிவிட்டு அவர்களிடமிருந்து கன்னி பூஜைக்கு என புடவையும் மற்ற பொருட்களையும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவாள்.

 

 

நாட்டாமைக்கார வீட்டிலிருந்து இவளை வரச்சொல்லி குறி கேட்க.. ஏற்கனவே முருகன் மூலம் அனைத்தும் அறிந்திருந்தாள். சும்மா பூஜை என்று சொல்லி முடிந்த அளவு கரந்து விடலாம்.. எப்படி ஒரு பெண் நெருங்கி பழகினால் ஆணின் மனது சலனப்பட்டு சீக்கிரமே அவனும் இதிலிருந்து மாறி விடுவான் என்று அவள் நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்க.. இடையில் கீசா வந்து குழப்புவான் என்று எதிர்பார்த்தாளா என்ன?

 

 

தனக்கு முன்னால் நின்றிருந்த அவனை அருகில் இருந்த சிறுப் பீடத்தைக் காட்டி அமர சொல்ல.. அவனோ அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

 

"ஏன் இவன் ஒரு மாதிரியா பார்க்கிறான்?' என்று நினைத்துக் கொண்டு தன் விழிகளை உருட்டி மிரட்டி அதில் உட்கார் என்று இவள் கட்டளையிட..

 

 

"பெண்ணே.. என் மனம் உன் காலடியில் உட்கார தான் ஆசை கொள்கிறது.. வெறும் அந்த பீடத்தில் உட்கார்ந்து நான் என்ன செய்வது!!" என்று செந்தமிழில் அவன் காதல் வசனங்கள் பேச ஆரம்பிக்க..

 

அவளோ அதிர்ந்து அவனைத்தான் மேலும் கீழும் பார்த்தாள். "நீ அப்புறமா அதெல்லாம் உட்காரலாம். இப்ப இதுல உட்காரு" என்று சொல்ல அவனும்.. "அதெல்லாம் முடியவே முடியாது கண்ணே!!" என்றான்.

 

"என்னால முடியலடா உன்கூட" என்று திட்டிக் கொண்டே அவனை இழுத்து வந்து அந்த இடத்தில் உட்கார வைக்க அவள் முனைய..

 

"அன்பே.. உன் கரங்கள் பட்ட இடமெல்லாம் என் தேகம் தகிக்கிறது. அதை அணைக்க என்னை அணைப்பாயா???" என்று கேட்க..

 

'இவன் என்றா ஒரு மாதிரியா பேசிக்கிட்டே போறான்!!' என்று உள்ளுக்குள் அவளுக்கு மணியடிக்க.. சுற்றுமுற்றும் கண்களால் துலாவினாள். சரியாக அந்த அறையில் உள்ள மர பீரோவில் மேல் அமர்ந்து இவர்களைத்தான் பார்த்துக் கொண்டு இல்லை இல்லை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தது கீசா..

 

 

கோபத்தில் முகம் சிவக்க பற்களை நறநறவென கடித்தபடி கீசாவை முறைத்துப் பார்த்து.. "கீசா உன்ற வேலைய இதுல காட்டாத. அவன் அனுமன் பக்தன் தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விடாத.. கூடவே இது நாட்டாமக்கார வூடு ஆலமரத்தடி பஞ்சாயத்து கூட்டிட்டுவானுக.. ஒழுங்கா உன்ற வாலை சுருட்டிகிட்டு அங்கே உட்காரு" என்று அவள் கத்த..

 

ஸ்ரீராமும் திரும்பி பார்த்தவன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.. பின் நீலாம்பரியை நெருங்கியவன் "செல்லமே உனக்கு ஏன் இவ்வளவு கோபம்.. யார் எந்த பஞ்சாயத்தைக் கூட்டினாலும் அதை நாம் இருவரும் சேர்ந்தே சமாளிப்போம் வா. இந்த காளையின் நெஞ்சத்தில் இந்த வஞ்சிக்கு மட்டுமே மஞ்சம்.. வந்து தஞ்சம் கொள்ளவா" என்று பேசிக் கொண்டே செல்ல..

 

நீலாவுக்கோ கண்கள் இரண்டும் வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு விரிந்தது. 

இப்படியே போயிட்டு இருந்தா இது சரியில்லை என்று நினைத்தவள்.. சட்டென்று அருகில் இருந்து வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு கையை மேலே தூக்கி உடலை முறுக்கி நாக்கை ஒருவாறு சுழட்டி ஊஊஊஊ என்று கத்தி "ஆத்தா டா நானு ஆத்தா கிட்ட நீயு காதல் வசனங்கள எல்லாம் பேசுறியா? ஒழுங்காகப் பீடத்தில உட்காரு இல்லை" என்று அவள் அதட்ட..

 

"என் கண்மணிக்குள் புகுந்திருக்கும் ஆத்தாவே.. சற்று நேரம் நீ வெளியே இருப்பாயாக.. நான் அவளுடன் சரசம் கொள்ள வேண்டும்" என்று அவன் கண்கள் கிறக்கமாக வைத்து அவளை அழைக்க..

 

"அடிங்க ஆத்தாகிட்ட லவ் டயலாக் பேசுறதோட, சரசம் கேட்குதோ உனக்கு.. ஒழுங்கா நீ உட்காரு டா" என்று தரதரவென்று அவனை இழுத்து அதில் உட்கார வைத்து, அவன் சுதாரிக்கும் முன் அருகில் இருந்த குடத்தில் இருந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து அவன் தலையை ஊத்தி இருந்தாள்.

அடுத்தடுத்து இரண்டு மூன்று குடங்களை அவள் காலி செய்ய.. அவனோ அந்த இரவு வேலை குளிரில் ஏற்கனவே உடம்பில் அரைகஜம் மட்டுமே துணி இருக்க.. இப்பொழுது இவள் ஊற்றும் தண்ணீரில் உடம்பு வெடவெடத்தது அவனுக்கு.

 

 

தண்ணீரை ஊற்றி விட்டு அவன் முன் அமர்ந்து இவள் அங்கிருக்கும் பத்ரகாளிக்கு மலர்களை தூவி பூஜை செய்ய ஆரம்பிக்க.. ஸ்ரீராமின் கண்களோ இவளைத்தான் ரசிக்க ஆரம்பித்து இருந்தது. இதுவெல்லாம் கீசாவின் வேலை என்று தெரிந்து தான் இருந்தது அவளுக்கு. ஸ்ரீராமன் பேசுவதால் எதுவும் கோபம் எழவில்லை எல்லாம் கீசாவின் மேல்தான்.

 

 

இப்படியே சிறிது நேரம் செல்ல இவள் பூஜை செய்ய அவனோ குளிரில் வெடவெடத்து போய் இருகைகளையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு குளிரை முடிந்தமட்டும் விரட்டியபடி அமர்ந்திருந்தான்.

 

அதற்குள் எழுந்து கை நிறைய வேப்பிலை எடுத்து அவன் கைகளில் கொடுத்து இதை பிடித்துக்கொண்டு "ஆத்தாவை மூனு முறை சுத்தி வா" என்று அவள் கூற... 

 

அவனோ அந்த வேப்பிலையை வாங்கி அவளை சுற்றி வந்தான். "அடேய் நான் சொன்னது அந்த ஆத்தாவ டா" என்று அருகில் இருக்கும் பத்ரகாளி போட்டோவை காட்ட.. இவனோ அதை சற்றும் கண்டுகொள்ளாமல் இவளையே சுற்றிவர.. "நீதான் சொன்னாய் அன்பே!! உன்னுள் ஆத்தா இருப்பதாக.. அதனால் நான் உன்னையே சுற்றுகிறேன்" சுற்றியவன்.. விநாயகர் சிவன் பார்வதியை சுற்றி பேசியதை போல, ஸ்ரீராமன் பேசியவாறு அவளை சுற்றி முடித்து அவள் முன் வந்து நின்றான். அவள் தன் கையிலிருந்த வேப்பிலையில் சிறிது விபூதியை எடுத்து அதை சேர்த்து அவன் கையில் கொடுத்து "இது பிரசாதம் இதை உன்ற வாயில் போட்டுகோ" என்றாள். அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே அதில் வாயில் போட்டுக்கொண்டு மென்று கொண்டிருந்தான்.

 

அவளோ தலையில் அடித்துக்கொண்டு கீசாவை தான் முறைத்துப் பார்த்து வாய்க்குள் ஏதோ ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அதை திட்டிக் கொண்டிருந்தாள். ஸ்ரீராமனோ அவளது படபடவென பேசும் ஆரஞ்சு சுளை உதடுகளை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவள் கன்னம் பற்றி இழுத்து அவளது அதரங்களை தன்வசம் படுத்திருந்தான். இவளோ அதிர்ந்த நிலையில்.. கைகள் பாட்டு அந்தரத்தில் நிற்க கண்களவு விரிந்த நிலையில்.. அப்படியே சிலையாக சமைந்தாள்.

 

அவனோ அவளது உதடுகளில் தன் உதட்டைப் பதித்து அவன் வாயில் இருந்த வேப்பிலை பிரசாதத்தை அவள் இதழ்களுக்கு இடையில் வைத்து ஏதோ தேனை உறிஞ்சுவது போல உறிந்து கொண்டிருந்தான் அவன்.

 

கீசாவோ இவர்களைப் பார்த்து வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டது தனது குட்டி கைகளால்.. "நீலுக்குட்டி வேப்பிலை கிஸ் சூப்பர்" என்று கமெண்ட் வேற!!

 

"கசக்கும் வேப்பிலை கூட உன் அதரங்கள் பட்ட நொடி கரும்பென இனிக்கிறதே என் தேனே!!" என்று அவள்‌ உதட்டை நீவிக் கொண்டே கூற..

 

"அடிங்க.. உன்னை" என்று‌ அருகில் இருக்கும் தேங்காய் உடைக்கும்‌ அருவாளை அவள் தூக்க.. "எனக்கு மோட்சம் கொடுக்க.. இந்த வீச்சு அருவாள் எதுக்கு? உன் கண் வீச்சே போதுமடி என் அன்பே!!" என்று அவன் உருக..

 

"அம்மே!!" என்று விழித்தாள் பெண்.. இனி தாங்காது என்று நினைத்து "நீ வூட்டுக்கு வா.. உன்னைய காளிக்கு பொலி போடுறேன்‌" என்று கீசாவிடம்‌ கூறிவிட்டு இவள் வெளியே செல்ல முயல.. அவனோ "என்னை விட்டு நீங்காத கண்ணே!! நீ என்னை நீங்கினால் என்னால் தாங்க முடியாது.. தூங்க முடியாது" என்று உளறியப்படி அவளை நெருங்க.. அவளோ பயந்து ஓட.. இவ்வளவு களேபரம் இங்கே நடந்து கொண்டிருக்க வெளியில்..

 

நாச்சியும் சொர்ணமும் தங்கள் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அந்த அறைக்கு வெளியே மூலையில் அமர்ந்திருந்தனர். சங்கர பாண்டியனோ இவர்கள் செய்வது ஒன்றும் பிடித்தம் இல்லை என்று அப்பொழுதே உறங்கச் சென்றுவிட்டார்.

 

"ஏண்டி நாச்சி.. கன்னி பூச தெரியும் இது என்னடி காள பூசை" என்று மருமகளைக் கேட்க..

 

"நான் என்னத்த கண்டேன் அய்த்த.. எனக்கு வூடு வுட்டா மாமா.. மாமாவ வுட்டா நீங்க இதுதான் எனக்கு தெரியும்" என்று அவள் அப்பாவியாக சொல்ல..

 

"கல்யாணமாகி 26 வருஷம் ஆகுது.. இன்னும் நீ இப்பதான் சமஞ்ச பொண்ணு மாதிரியே பேசிகிட்டு இருக்க" என்று அவர் அந்நிலையிலும் தன் மருமகளை திட்ட..

 

"ஏன் அய்த்த.. கன்னி பூசையில் பொண்ணுங்கள வைச்சு ஏதேதோ பண்ணுவாங்களாமே.. அதே மாதிரி நம்ம அப்பூச்சியும் அப்படி பண்ணுவாங்களோ?" என்று இவர் பயந்துகொண்டு கேட்க..

 

"ஏன்டி பயமுறுததுற.. என்ற பேரன் என்ன பாடு படறானோ தெரியலையே இந்த சிறுக்கி மக கிட்ட.. நல்ல நாளிலேயே பேய் ஓட்டுறேன்.. பிசாச போடுறேன்னு வர்றவங்க எல்லாரையும் ஒரு பாடு படுத்திடுவா.. நாம போதாத காலம் இவகிட்ட போக வேண்டியதா போச்சு.. ஏதோ எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி" என்று அவர் விசனப்பட கொண்டு அமர்ந்து இருக்க..

 

"ஏன் அய்த்த.. நம்ம அப்பூச்சியையும் அந்த குறிக்காரி அடிப்பாளா?" என்று கண்களை விரித்துப் நடுங்கிக் கொண்டே அவர் கேட்க..

 

"அப்படி எல்லாம் விட்ருவேனா நானு.. இதுவரைக்கும் என்ற பேரன் மேலே நானே கை வைச்சதில்ல.. அடுத்தவள கை வைக்க விட்டுடுவேனா?" என்று அவர் வீர தீரமாக பேசினார்.

 

"ஆனாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமாக தான் இருக்கு.. எதுக்கும் நாம கதவுகிட்டே உட்கார்ந்துக்குவோம்.. ஏதாவது சத்தம் கேட்டா டக்குனு இந்த பக்கம் கதவ தொறந்து புள்ளைய கூட்டிட்டு வந்திரலாம்" என்று சொர்ணமும் நாச்சியும் பேசிக் கொண்டு கதவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க.... ஆனால் உள்ளே இவர்கள் நினைத்ததற்கு தலைகீழாக நடந்து கொண்டிருந்தது.

 

 

அடுத்த நொடி கதவு தட்டும் சத்தம் கேட்டு இவர்கள் இரண்டு பெரும் பரபரப்பானாரகள்.

 

"அய்த்த கதவு தட்டுற சத்தம் கேட்குது.. இப்ப நாம என்ன பண்ணலாம்.. வந்து கதவ தொரந்து நம்ம புள்ளைய கூட்டிட்டு வந்திரலாமா?" என்று நாச்சி கேட்க..

 

"இரு இரு சத்த பொறுப்போம். நமக்கும் இன்னையோட பூச முடிஞ்சு எல்லாம் சரியான நல்லதுதானே" என்று இருவரும் எழுந்து கதவருகில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

இன்னும் சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் வேகமாக கேட்க..

 

நாச்சி தன் கைகளைப் பிசைந்துகொண்டு "அய்யோ அய்த்த.. அந்த புள்ள கிட்ட என்ற மகன் ரொம்ப கஷ்டப்படுது போலயே.. முதல்ல கதவு திறந்து விடுங்க" என்று அவர் மன்றாட..

 

"இன்னும் கொஞ்சம் பார்ப்போம் நாச்சி.. செத்த நேரம் இரு" என்றவர் கதவை பார்த்துக் கொண்டிருக்க.. உள்ளிருந்த தீனமான குரல் கேட்க.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நாச்சியும் சொர்ணமும் சேர்ந்து கதவை திறந்து விட்டார்கள்.

 

அடுத்த நொடி தலையெல்லாம் களைந்து வியர்வையில் குளித்து அலங்கோலமாக அவர்கள் முன் வந்து நின்று நீலாமபரியைப் பார்த்து இருவரும் அதிர்ந்து போக..

 

"அய்யோ என்ன காப்பாத்துக.. யாராவது என்னைய காப்பாத்துக" என்று அவள் அழுததை கேட்டு மேலும் திடுக்கிட்டுப் போக..

 

அவளைத் துரத்திக் கொண்டு வந்த அவர்களின் குல வாரிசு ஆஞ்சநேய பக்தன் ஸ்ரீராமனைக் கண்டதும் இருவரும் மயக்கம் போடாத குறைதான்.. அந்த குறையை அவர்களது சீமந்த புத்திரன் தீர்த்து வைத்தான் அடுத்து பேசியதை கேட்டு..

 

"அன்பே என்னை விட்டு போகாதே.. வா வா என் அருகிலே.. நாம் சொர்க்க லோகம் காண்போம் காதலில் மூழ்கி" என்று வசனங்கள் பேசிக்கொண்டே அவளை நெருங்க அவள் பயந்து நாச்சி பின்னாலும் சொர்ணம் பின்னாலும் ஒளிந்து கொண்டாள்.

 

என்னடா நீலாம்பரிக்கு வந்த சோதனை!!

 

சொர்ணமும் நாச்சியும் இவன் செய்த அட்டூழியங்களை பார்த்து பேயடித்தது போல உறைந்து நிற்க.. 

 

இன்னும் ஸ்ரீராமனோ நீலாம்பரியை பார்த்து காதல் வசனங்களை பிதற்றிக் கொண்டே இருக்க.. 

 

"அப்பத்தா தயவுசெய்து உன்ற பேரன அதாண்ட கூட்டிட்டு போ.. நானும் பார்த்தாலும் பார்த்தேன் இந்த மாதிரி ஒருத்தனை பார்க்கவே இல்ல.. கொஞ்சம் போய் இருந்தா என்ன முழுசா கற்பழித்து இருப்பான்.. நீயும் வேண்டாம் உன்ற பேரன் பூசையும் வேண்டாம். ஆள விடுங்கடா சாமி!!" என்று அவள் நகர போக..

 

அவனோ போக விட்டால்தானே.. "கண்ணே நாம் காதல் செய்வோம்.. புது யுகம் படைப்போம்" என்று அவள் பின்னால் செல்ல.. இவர்கள் போட்ட சத்தத்தில் கூச்சலில் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியன் எழுந்து வந்தவர், அங்கே நடந்து கொண்டு இருந்தவற்றை பார்த்து நம்ப முடியாமல் தனது இரு கண்களையும் நன்றாக தேய்த்து விட்டு திரும்ப பார்க்க..

தான் கண்டது கனவில்லை பொய்யில்லை நிஜம் தான் என்று உணர்ந்துக் கொண்டவர் விரிந்து தன் மகன் அருகே சென்றார்.

 

"டேய் ஸ்ரீராமா.. என்றா பண்ணிட்டு இருக்க ஒரு பொம்பள புள்ளகிட்ட" என்று தந்தையாக இல்லாமல் நாட்டாமையாக மாறி அவர் பேச..

 

"யாரடா நீ? அற்ப மானிடா!!" என்று பார்ப்பது போல அவரை பார்த்து வைத்தவன்..

கூடவே தனது காதலியை பிடித்துப்போகும் வில்லனாகவே அவரைப் பார்த்தான்.

 

"எல்லோரும் சேர்ந்து என் காதலியை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறீர்களா? முடியாது!! எக்காலும் அது முடியாது!!" என்று வீறு கொண்டு நின்றவனைப் பார்த்து அனைவரும் பயந்து நடுங்க..

 

நம்ம கீஷ் (செல்லப்பெயர்) விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தது!!

 

நாளையும் நாயகன் இதுபோல் செந்தமிழில் காதல் வசனங்களை ‌பேசுவானா?? இல்லை அனுமன் பக்தனாக மிளிர்வானா??

 

நாளை பார்ப்போம்!!

 

சொக்க ரெடியா??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top