தேன்மழை💞 (1)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 23
Thread starter  

பசுமையின் பிரதேசமாக காட்சியளிக்கும் கேரள மலைப்பகுதி! காண்போரை விழி மூடாமல் மலைத்திட செய்யும் மாலை நேரப்பொழுது.

 

சாளரத்தின் வழியே வீசிய மெல்லிய தென்றல் அலை அலையான அவன் கேசத்தை மிக மென்மையாக வருடிவிட, அவன் இதழ்களில் புன்னகை.  

 

பிரதீஷ்(நாயகன்)

 

பெயருக்கேற்ப அமைதியான முகம் தான். குட்டி குட்டி கருவிழிகள் ஆனால் அதில் கூரிய பார்வை. 

 

எதிரே இருந்த மலைமுகடை வெறித்தான்.

 

மாலை நேர கதிரவன் மறையும் காட்சி அவன் கண்களில் ரசனையை பரவ விட்டது.

 

இவையெல்லாம் இன்று தான் புதிதாக கண்டு ரசிக்க கேரளத்திற்கு புதியவன் அல்ல.

 

ஆனால், அவன் கருவிழிகளுக்கு இவையெல்லாம் புதிதாக தோன்றும். ஏதோவொரு நினைவு மனதை வருடும் போதெல்லாம்.

 

பிரதீஷ் பாலக்காட்டில் பிரபல மருத்துவமனையில் கதிரியக்க மருத்துவராக பணிபுரிகிறான் கடந்த ஒன்றரை ஆண்டாக. நன்கு தமிழ் பேசக்கூடிய தமிழ் பையன் தான்.

 

ஆனால், சில பல காரணங்களால் கேரளாவில் அவன் பாட்டி, தாத்தாவோடு தங்கியுள்ளான்.

 

அலைபேசியின் அழைப்பில் தான் நாயகனுக்கு கவனம் சிதறியது. தலையை சிலுப்பிக் கொண்டு, பெருமூச்சு ஒன்று விட்டப்படி அழைப்பை எற்றான்.

 

"டாக்டர் பிரதீஷ்?"

 

"எஸ் மிஸ் ரீனா!"

 

"சார் நீங்க வந்தா தான் ஒரு பேஷன்ட்க்கு ஸ்கேன் பாத்துட்டு, ஆப்ரேஷன் டேட் சொல்ல முடியும். டாக்டர் உங்களுக்காக வெயிட் பண்ணுறாங்க.."

 

"ம்ம்.. ஐ வில் கம் வித்தின் ஹாஃல்ப் ஹவர்!" என்றவன் ரீனா அதை செவியில் வாங்கினாளா இல்லையா என யோசித்திடாது போனை வைத்தான். 

 

குளியலறைக்குள் புகுந்தவன் மனதில் அவள் புகுந்து கொள்ள, இதமான நீர் மேனி தொட்டு ஓடியப்படி அவளின் இறுக்கம் நீரில் வேரூன்ற வைத்தது.

 

அந்நினைவில் சில நொடிகள் ஸ்தம்பித்து போனவன் சுயம் மறந்து போக, சிந்தை கலைத்தது என்னவோ பாட்டி சாவித்திரி தான்.

 

"பிரதீஷ் நேரமாச்சு கிளம்பலையா ஹாஸ்ப்பிட்டல்க்கு?" என குரலிட்டப்படி அறைக்குள் நுழைய, "இதோ டென் மினிட்ஸ் வந்துறேன் பாட்டி" என்றான் அவசரம் புரிந்து.

 

அதே வேகத்தில் குளித்து வந்தவன், கேசத்தை துவட்டியப்படி ஃபார்மல் ஷர்ட் அண்ட் பேண்ட்டிற்கு மாறினான். என்ன ஃபார்மல் ஷர்ட் என்றாலும் அவனது அடையாளம் வெண்ணிற கோட் தானே, அதையும் அவதி அவதியாக எடுத்துக்கொண்டு கிளம்பியவன் டைனிங்கில் அமர்ந்தான்.

 

தட்டில் உள்ள இட்லிக்கு என்ன சட்னி உள்ளது என கூட பாராது, அவசரமாக உண்பவனை கண்டு தான் பால் எடுத்து வர சாவித்திரி நகர்ந்தார். 

 

அதற்குள் அவனது தாத்தாவான சண்முகம் அவர்கள் பேரன் மனம் எதைப்பற்றி பேசினால் கோணுமோ, அதனை நேரங்காலம் பார்க்காது பேசிவிட்டார்.

 

"கண்ணா, சித்தி தெய்வானை இந்த திருவிழாக்கு பால் குடம் எடுக்கிறா. நானும் பாட்டியும் கிளம்புறோம். நீயும் வந்தா.." என கூறி முடிக்கும் முன்னமே அதற்கான பதிலை உணவில் கை கழுவி தெரிவித்து விட்டான்.

 

கணவனின் குரல் கேட்ட, நொடியே பதறியடித்து வந்தார் சாவித்திரி. கோட்டை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென வெளியேறினான் பிரதீஷ்.

 

வெளியே செல்பவனை அழைக்க கூடாது என நிதானித்தவர், கடும் முறைப்பாக கணவனை ஏறிட்டார்.

 

அவரோ, "நீயும் பேச மாட்டே. நானும் பேசக்கூடாதுன்னு சொன்னா அப்போ எப்போ தான் இவன் மனசு மாறும்?" என சரியான கேள்வியை கேட்டதும் வாய் மூடிக்கொண்டார் சாவித்திரி. 

 

இருப்பினும், பேரன் சாப்பிடாமல் சென்றது மனம் கேட்கவில்லை. அதனால் மீண்டும் அவருக்கு கோவமே முன்னுக்கு வந்தது.

 

"அவன் சாப்புடுறதே ரெண்டு வேலை. இப்படியா பண்ணுவீங்க? அவனுக்குன்னு தான் சூடா இட்லியை ஊத்தி எடுத்துட்டு வந்தேன். ஐயோ.. பிள்ளை சாப்பிடாம போறானே.." என அவர் அழாத குறையாக புலம்பினார்.

 

"கெடுக்குறதே நீ தான் சாவித்திரி! யாரும் வேணாம்ன்னு எத்தனை மாசம் இப்படி இருப்பான்? அவன் செட்டு பசங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.

 

ஏன் அடுத்த வாரம் அவன் ஃபிரண்ட் யாதவ்க்கு கூட கல்யாணம் ஆகப்போகுது. இப்படியே நீ செல்லம் குடுக்குறதுல தான் அவன் தலை மேல ஆடுறான்." என சற்றே காட்டமாக பேசிட, அவன் சாப்பிடவில்லை என்னும் வேதனை தாளாமல் அவரோ "வாயை மூடிட்டு போய் படுங்க!" என்று விட்டு அங்கிருந்து அடுக்களை நோக்கி நகர்ந்தார்.

 

காரில் பயணித்தவன் மனமோ ஏகத்துக்கும் அந்த ஏசி காரில் கொதித்து போய் தான் இருந்தது. 

 

புன்னகை நிறைந்த ஆடவன் முகம், இறுக்கத்திற்கு உருவேறியது. 

 

சிந்தையோ, அப்பெயரை விருப்பமின்றி கூறி கறுவியது.

 

'பேர் வச்சிருக்காங்க பாரு. தெய்வானை, பொங்க பானைன்னு வெளங்காதவனுங்க!' என அவன் தாளிக்கும் நேரம் அலறியது அலைபேசி.

 

"எஸ் ரீனா!"

 

"சார் உங்களுக்காக வெயிட்டிங். அவங்க ரிலேட்டிவ் ஹெர்னியா பேஷன்ட் வந்துருக்காங்க. அதான் அகைன் போன் பண்ண சொன்னாங்க." என விஷயத்தை கூறிய நொடி, பொங்கி விட்டான் ரிஷப்ஷன் பெண்ணிடம்.

 

"நானும் மனுஷன் தான். ஹாஸ்ப்பிட்டல்க்கு ஃபிளைட் வாங்கி விட்டா பறந்து வந்துருப்பேன். ஏன் இவ்வளவு நாள் ஹெர்னியால இருந்தவங்க இப்போ பத்து நிமிஷம் இருக்க மாட்டாங்களா? ஆன் தே வே ரீனா." என்றவன் மீண்டும் பட்டென வைத்தான்.

 

விழிகளில் சட்டென வந்து போனது அவளின் முகம். சரியாக கண்டும் காணாத முகம். அடிக்கடி கனவில் வந்து காதலை கூறும் விதம் இப்படியொரு பெண் இருக்கிறாளா? என யோசிக்க வைத்தது.

 

அதே சிந்தனையோடு ஹாஸ்பிட்டல் வந்தவன் காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைய, நர்ஸ் மற்றும் ரிஷப்ஷன் பெண் உட்பட குட் ஈவினிங் என்றிட தலையசைத்து விட்டு வேகமாக ஸ்கேன் அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கு இருந்த நர்சிடம் கேஸ் ஒவ்வொன்றையும் வருமாறு தெரிவிக்க, முதலாக வந்தது ஹெர்னியா பேசன்ட் தான். இருட்டான அறையில் உள்ளே நுழையவே பேசன்டாக வந்த பெண்ணிற்கு, சற்றே அடி வயிற்றில் ஏதோ ஒன்று புரள துவங்கியது. 

 

உடன் வந்த பெண் ஒருத்தி அவளின் அத்தையை தேற்றி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

ஸ்கேனை பார்த்தப்படி அவன் அந்நோயினால் அவரின் பாதிப்பு நிலை பற்றி கூற, அவருக்கோ இதயத்துடிப்பு வெளியே அவரின் காதில் விழுந்தது.

 

"இது நார்மல்லா லேடிஸ்க்கு வர ஃபிமோரல் ஹெர்னியா தான் பயப்பட தேவையில்லை. ஆப்ரேஷன் பண்ணிக்கிறது தான் நல்லது. அதுவும் உங்களுக்கு வலி மூணு மாசமா இருக்குன்னு சொல்லுறீங்க." என பேசிக்கொண்டே அவரது சுவாசத்தை உள்ளிழுத்தும், நிறுத்தியும் ஸ்கேன் செய்தவன் இறுதியாக மேற்புற தொடைப்பகுதி வரை இறங்கியுள்ள குடலிறக்கத்தை விரிவாக விளக்கினான்.

 

படுத்திருந்தவர் கரமோ ஆறுதலுக்காக அவளின் கையை இறுக பற்றிட, அவளும் அழுத்தி பிடித்துக் கொண்டாள். 

 

ஒருவழியாக ஸ்கேன் முடிந்து அவர் வெளியே வர, அவளின் மனமோ அவனது தொழிலை சரியாக செய்த போதும் ஏதோ அக்கறையாக கூறியது போன்று எண்ணியது.

 

அவன் அடுத்தடுத்த கேஸில் மூழ்கியிட, அவளின் அத்தை வேதகியோ, "என்ன மா மாப்பிளை பிடிச்சுருக்கு தானே? இன்னும் ஏதாவது அவருக்கு டெஸ்ட் இருக்கா? வீட்டுல அப்போ சரின்னு சொல்லிடலாம் தானே?" என அவர் புடவையை சரி செய்தப்படி ஸ்கேன் அறைக்கு வெளியே நின்று பட்டென கேட்டுவிட, பிருந்தா முகம் தான் செங்கொழுந்தாக சிவப்பேறியது.

 

"ஷ்ஹ்ஹ்.. அவங்க உள்ளே தான் இருக்காங்க. தெரிஞ்சா அவ்வளவு தான். எதுனாலும் வீட்டுல போய் பேசிக்கலாம். பேசாமல் கிளம்பி வாங்க. ரிப்போர்ட் வரவும் டாக்டரை பாத்துட்டு, ஆப்ரேஷன் டேட் எப்போன்னு கேட்டு போலாம் அத்தை." என அவளோ மெல்லமாக கூற, அவரோ "உனக்கு நிச்சயம் முடியட்டும் பண்ணிக்கலாம்." என்றார் நோயினை பற்றி எண்ணாது.

 

இருவரும் காரில் வீடு வந்தடைந்தனர். மிகுந்த வசதி படைத்தவர்கள் என கூறாமல் கூறும் அமைப்புடைய வீடு தான் அவளது அத்தை வீடு. 

 

வந்து சேரும் வரை நமைச்சல் தான் அவளிடம் பிரதீஷ் பற்றி. அவர் நோயிற்காக வந்ததை விட, அவளுக்காக வந்தது தான் உண்மை.

 

அவர் தான் பரவாயில்லை என்றால், சண்முகம் அவர்களோ பிருந்தா தனது பேரனை பார்த்து விட்டாளா என ஒருமுறைக்கு பலமுறை அவளின் முடிவை அறிந்து கொள்ள போன் செய்து விட்டார்.

 

"பிருந்தா, பாரு அவங்க தாத்தாவுக்கு உன்னை பேரனுக்கு கல்யாணம் வைக்க எவ்வளவு ஆசைன்னு. பையன்னும் நல்லா தான் இருக்கான். நீ என்ன சொல்லுற?" என்றவர் வீட்டில் நுழைந்ததுமே அவள் ஆசுவாசம் அடையும் முன்பு, விருப்பம் தெரிந்து கொள்ள பரபரத்தார்.

 

ஹேண்ட் பேக்கை கழட்டி ஒரு ஓரம் வைத்தவள், மெதுவாக மூச்சை உள்ளிழுத்து விட்டப்படி அவன் பெயருக்கு பின்னால் இருந்த படிப்பை நினைவு படுத்திக் கொண்டாள். மனமோ, இது சரி வருமா? இல்லை தேவையில்லாத ஆசையா கூட எண்ண வைத்தது.

 

"அத்தை, அவங்க தாத்தா சொல்லலாம். டாக்டருக்கு படிச்சவங்க அதே ஃப்ரவஷன்ல தான் மேரேஜ் பண்ணிப்பாங்க. நான் எம்.டெக் முடிச்சுருக்கேன். இது எப்படி?" என்றவள் விழிகள் முதலில் இருந்த தெளிவை விட, மனம் உணர்த்திய குழப்பத்தில் விரிந்தது.

 

"முதல அவன் உன்னை நேர்ல பாக்கட்டும் மா!" என்றதில், அவளோ அவரை முறைப்பாக பார்த்தாள். அவருக்கு உண்மையில் அம்முறைப்பு ஏன் என புரியவில்லை.

 

"அத்தை.. சின்ன பையன் தான் அதுக்குன்னு அவன்னு சொல்லாதீங்க!" என்றாள் முகத்தை ஒருவாறு வைத்துக் கொண்டு.

 

"சரி.. சரி.. நான் சொல்லல மா. உடனே நீ ஆடாதே. விஷயத்தை உன் அப்பா கிட்ட சொல்லிட்டு வர்றேன். நாளைக்கி காலையில கோயம்புத்தூர் போக எல்லாம் பேக் பண்ணு பிருந்தா. உன் மாமா வர்றதுக்குள்ள சப்பாத்தி போட்டு வைக்கிறேன்." என்றவர் பேசியப்படி கிட்சனுக்குள் புகுந்து கொண்டார்.

 

அவர் அங்கிருந்து சென்றிருந்தாலும், எண்ணங்களோ அவன் பக்கம் சாய்ந்தது. மருத்துவமனையில் அவன் உள்ளே நுழைந்தது முதல், பேச்சு, நடை, உடை என அனைத்தும் அகக்கண்ணில் பிம்பமாக வந்தது பிருந்தாவிற்கு.

 

பிருந்தாவும் நல்ல நிறம் தான். சற்றே பூசினாற் போல தேகம். 25 வயது முடியவுள்ளது. வீட்டிலும் பெண்பார்க்கும் படலம் மும்மரமாக, அப்போது தான் அவளின் மாமா மூலம் வரனாக பிரதீஷ் போட்டோ கையில் கிடைத்தது.

 

அவனின் மிடுக்கான உடை, ஸ்டைலான பார்வை, கூலர்ஸ் அணிந்தும் அணியாத போட்டோ எல்லாம் அவள் கையில் கிடைத்தது.

 

முதலில் டாக்டர் மாப்பிளை வேண்டவே வேண்டாம் என்றாள் எல்லோரிடமும். உடல்நிலை சரியில்லை என வேதகி கூற, அவளும் அவரை காண ஊருக்கு வந்தாள்.

 

அவனை நேரில் கண்டால் கண்டிப்பாக மனம் மாறும் என்று தான் அழைத்து சென்றார் மருத்துவமனைக்கு. அவள் மனம் மாறியதை விட குழம்பி போனது தான் மிச்சம்.

 

அவனோ சேட்டு பையன் போல் கலராக இருக்க, காதல் ஏதேனும் இருக்குமோ என யோசித்தாள். பிறகு இது பேராசை எனக்கூட சிந்தித்தாள்.

 

முடிவு கிடைக்காத விடையில் குழம்பியவள், "அத்தை.. அத்தை.." என அழைத்தாள். அவரும் ஏதோ அவசர கதியாக அழைக்கிறாள் போலும் என நினைத்து ஓடி வந்தார்.

 

"என்ன பிருந்தா?" என்று கொண்டே சப்பாத்தி மாவை பிசைந்த கையோடு அவர் வந்து நிற்க..

 

"அத்தை.. அவங்க வீட்டுக்கு என் போட்டோ அனுப்பியாச்சா?"

 

"அதெல்லாம் ஒரு வாரம் முன்னாடியே அனுப்பியாச்சு. இந்த வாரம் வெள்ளிக்கிழமை உன்னை பொண்ணு பாக்க வரதா சொல்லிருக்காங்க மா. அநேகமா நாம போகவும், அவங்க ரெண்டு நாள் கழிச்சு வரவும் சரியா இருக்கும்."

 

"என் போட்டோ மாப்பிளை பாத்தாங்களா? டிகிரி ஓகே யா அப்போ?" 

 

அவரும் உறுதியாக, "அதெல்லாம் சரின்னு சொல்லிட்டான்!" என்றவர் நாக்கை கடித்துக் கொண்டு, "ஓகேன்னு சொல்லிட்டாங்க மா! தம்பி வேலையா இருந்தனால உன்னை கவனிக்கல." என்றார் சண்முகம் அவர்கள் உரைத்த பொய்யை உண்மையென நம்பி.

 

             

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top