சொக்க வைத்த என் சுந்தரியே!!
ஜியா ஜானவி
பொள்ளாச்சி..
'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையின் அழகும் சிறப்பான தட்பவெட்ப நிலையும் தான் அதுக்கு காரணம்.
பொள்ளாச்சியை அப்படியே ஒரு ரவுண்டு வந்தோம்ன்னா அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்கள் இருக்கு. ஆனா நாம அங்க போக போறது இல்லை இப்போ... வேற எங்கே??
போடிகவுண்டன்பாளையம்!!
அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் கண் கொள்ளா இயற்கை வனப்பும் நமக்கு மனதில் ஒருவித சந்தோசமான உணர்வை தரும்.
எங்கெங்கு காணினும் தென்னைத் தோப்புகளும்.. வயல்களும்.. ஊடே மாந்தோப்புகளும் கண்களையும் நம் கருத்தையும் நிறைக்கும். தென்னை மரங்கள் அதிகமாக விளையும் ஊர் என்பதால், இளநீர் தான் பிரத்யேக விருந்து பானம்.
யாராவது விருந்தினர்கள் வந்தால் "வெட்டுறா இளநீய!!" என்று கேட்கும் குரல்களே இங்கு அதிகம்!!
பாசத்திலும்..
வீரத்திலும்..
வீம்பிலும்..
வம்பிலும்..
கம்பு வீச்சிலும்..
பக்தியிலும்..
அவர்களுக்கு நிகர் அவர்களே தான்!!
அம்புட்டு நல்லவங்க.. ம்ஹீம்.. நல்லவக
அவுக..
அந்த ஊரின் தற்போதைய நாட்டாமையான
சங்கரபாண்டியன் கவுண்டரை தான் பார்க்கப் போகிறோம். அக்கால நாட்டாமைகள் போல குதிரை பூட்டிய சாரட்டில் வலம் வரும் நாட்டாமை அல்ல இவர்..
ஜாக்குவார் இல் பறந்து பறந்து தீர்ப்பு வழங்கும் நவயுக நாட்டாமை. இவருக்கு அழகம்மை என்ற ஒரு தங்கை மட்டுமே. அவரை அருகில் உள்ள பெரிய கவுண்டம்பாளையத்தில் உள்ள ராஜசேகர் கவுண்டருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவருடைய தர்மபத்தினி வீரநாச்சி.. பேருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லா நபர். எதற்கும் அஞ்சி நடுங்கும் ஆனால் அந்த அச்சத்தையும் பயத்தையும் வெளியே காட்டிக் கொண்டால் கவுண்டர் அம்மாவின் கெத்து என்னாவது!!
ஆனால் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதில் மட்டும் அவருக்கு மிஞ்சிய ஆளே கிடையாது.
"ஏய் செவப்பி.. ஏன் புள்ள காலைல இருந்து அழுதுக்கிட்டே கிடக்கு" என்று தன் பண்ணையில் வேலை பார்க்கும் அந்த பெண்ணிடம் கேட்க...
"தெரியலைங்கம்மா.. நேத்திலிருந்து இப்படித்தான் அழுகுறான்" பிள்ளையை வாங்கி வயிற்றை தொட்டுப் பார்த்தவர்.. "புள்ளைக்கு மாந்தம் இருக்கும் போல.. பால் குடிக்கிற புள்ளய வச்சுட்டு கண்டதையும் திண்ணா.. அப்புறம் பிள்ளைக்கு சேராம என்ன செய்யும்?" என்றவர் அதற்கான வைத்தியத்தையும் கூறி சம்பளத்துடன் அவளை வீட்டுக்கும் அனுப்பி வைப்பார்.
வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் பணியாளர்களிடம் சவுக்கை கையில் எடுக்காத குறையாக விரட்டி விரட்டி வேலை வாங்கும் வித்தை அறியாத வெள்ளந்தி அவர். "அதுக்கெல்லாம் என்ற மருமவளுக்கு கூறு பத்தாது" என்று கையில் குடையுடன்.. வாயில் சவுக்குடனும் கிளம்பிடுவார் பண்ணை வேலையை கண்காணிக்க சங்கரபாண்டியன் நாட்டாமையின் அன்னையும்.. வீரநாச்சியின் அத்தையும்.. மறைந்த பூபதிபாண்டியன் மனைவியுமான சொர்ணாம்பாள்.
சங்கரபாண்டியனின் நாச்சி என்று ஒத்தை அழைப்பில் "இதோ வந்துட்டேன்ங்க மாமா" என்று கண்ணில் காதல் பொங்க.. கடைக்கால் விரல் நிலத்தில் உழவ..
முகம் செம்மை பூசிக்கொள்ள..
குரலோ குழைந்து வரும் நாச்சிக்கு..
இன்றும் கல்யாணம் ஆகி வந்த அதே பதினேழு வயது பெண் தான் அவருக்கு.
தன் கிடா மீசையை இடதுகையால் முறுக்கி விட்டு வலது கையில் அவர் தரும் நீர் மோரை பருகிக்கொண்டே தன் மனைவியும் பருகுவார் சங்கரபாண்டியன்.
"வரேன் அம்மணி" என்று இன்றைய பஞ்சாயத்துக்கு தான் கிளம்பினார். அம்மணி எல்லாம் அருகில் இருக்கும் போது தான்.. மற்றப்படி நாச்சி என்ற உரக்க அழைப்பே உலகுக்கே கேட்கும்.
"மாமா.. மதியத்துக்கு வந்துடுங்க. இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச அய்ரமீனும் குழம்பும், நண்டு வறுவலும்ங்க" என்று அவர் கூற..
சுற்று முற்றும் பார்த்த சங்கரபாண்டி தன் மனைவி அருகில் நெருங்கி "ஏன் அம்மணி.. ஏற்கனவே நம்ம ஆட்டம் களையக்கட்டும்.. இதுல நண்டு வேறையா.. ரெடியா இருந்துக்க அம்மணி" என்று கன்னம் கிள்ளி சொன்னார் சங்கரபாண்டியன்.
வீரநாச்சி திருமணமாகி வரும்போது அவருக்கு 18 வயதுதான் அடுத்த வருடமே அவர்களது மகன் பிறந்து விட... இந்த 43 வயதில் இன்னும் கட்டுக் கொலையாத வனப்புடன், பார்ப்பவருக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் போலவே இருப்பார்.
கணவனின் சொல்லில் இவருக்கு முகம் சிவந்தது.. "புள்ளைக்கே கண்ணாலம் பண்ற வயசாகுதுங்க மாமா.. இப்போ போய் இந்த பகடி பேச்சு தேவைங்களா?" என்று கேட்க..
"அப்போ வேணாமா அம்மணி?" என்று அவர் கேட்க.. எதை சொல்லுகிறார் என்று அவர் புரியாமல் இருக்க.. "என்னையத்தான் சொன்னேன் அம்மணி.. என்னையத்தான் சொன்னேன்" என்று சிறு கேலியை கூட புரிந்து கொள்ளாத மனைவியின் கள்ளமில்லா உள்ளத்தை நினைத்து பெருமிதமே அவருக்கு. ஆனாலும் இந்நாள் வரை அவருக்கு எல்லா விதத்திலும் உற்ற துணையாக கலியுக வாசுகி தான் அவர்.
"சரி வரேன் அம்மணி" என்றுவிட்டு வழக்கமான தன் பஞ்சாயத்தை பார்க்க சென்றார் அவர்.
என்ன பெரிய பஞ்சாயத்து வாய்கா வரப்பு சண்டை.. காதல் ஜோடியை கண்ட இடங்களில் பிடித்த வழக்கு.. அவன் வீட்டு மாடு என் வாயிலில் வந்து மேய்ந்தது.. என் வீட்டுத் தென்னை மரத்துல 10 தேங்காய் களவாடிட்டு போய்ட்டான்.. இப்படிப்பட்ட வழக்குகளை தான் கொஞ்ச நாட்களாக நாட்டாமையா நடத்தி வைத்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.
"யோவ் நாராயணா.. இன்னிக்கு என்னய்யா பஞ்சாயத்து? வரவர பஞ்சாயத்துக்கு வரணுன்னாலே கடுப்பாகுது. வரது எல்லாம் ஒரு பஞ்சாயத்தா? நம்மள வைத்து கேலிக் கூத்தாக வைக்கிறானுங்க" என்று அருகில் இருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உபநாட்டாமையும், இவருக்கும் நண்பருமான நாராயணமூர்த்தி இடம் சலித்துக் கொண்டு இருந்தார் நம்ம நாட்டாமை..
"ஆமா சங்கரா.. வரவர எனக்குமே அலுப்பா தான் இருக்கு.. வேற என்ன செய்ய நமக்கும் பொழுது போகனும்ல.. கூடவே நாலு பஞ்சாயத்து நடத்தி வைச்சாதான் நம்மளையும் ஊருல நாட்டாமைன்னு ஒத்துப்பானுங்க" என்று மீசையை தடவியப்படி சிரித்தார்.
"ஏன் நாராயணா இப்ப என்ன பிரச்சினை அங்க ஓடிக்கிட்டு இருக்கு?" என்றார் சங்கரன்.
"அதனாம்ல மேலத்தெரு கருப்பையா இருக்கானே அவனோட பையன் வடக்குத்தெரு சேதுவோட பொண்ணுக்கு நூலு விட்டிருக்கான்.. அதுதான் இன்னைக்கு பஞ்சாயத்து"
"இதெல்லாம் ஒரு பஞ்சாயத்து? ஆமா நாராயணா.. உன்ற பையன் வேலை விஷயமா சென்னை போனான் சொன்னியே.. சென்னையிலே வேலை கிடைச்சுதா?"
"அது எங்க சங்கரா கிடைச்சுச்சு? அப்பவே அந்த கேனப்பய மவன்கிட்ட சொன்னேன். இன்ஜினியரிங் படிக்காத படிக்காதனு. அதுல படிச்சாத்தான் பணம் கொட்டும்னு படிச்சுபுட்டு இப்ப வேலை கிடக்கலனு ஊர் ஊரா சுத்துறான். விவசாயத்த பாருன்னா எவன் தான் கேட்கிறான்?" என்று அலுத்துக் கொண்டு " உன்ற புள்ள எப்ப வரான் சங்கரா?"
"என்ற புள்ள நாளை மறுநா வரான். அதான் இன்னைக்கு ஒரு எட்டு பொள்ளாச்சி போய் அவனுக்கு ஒரு பைக்கு புக் பண்ணலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்"
என்றார்.
"படிப்ப முடிச்சு போட்டானா?"
"அப்படித்தான் நினைக்கிறேன்.. மூணு வருஷம் படிச்சான். அதுக்கு மேல ஏதோ ரெண்டு வருஷம் படிக்கோனும்னு வெளிநாட்டுல போய் தான் படிப்பேன்.. படிச்சிபுட்டு நாளைக்கு மறுநா வரான்"
"உன்ற வூட்டுலத்தான் இரண்டு காருங்க நிக்குதுல.. அதுல ஒன்னு எடுத்துட்டு போக சொல்ல வேண்டியதுதானே அவன"
"ஊருக்கு போகும் போதே அந்த பய சொல்லிட்டுத்தான் போனான். நா வெளியில போக வர எனக்கு காரு எல்லாம் சரி வராது பழைய வண்டியைப் போட்டு புது வண்டி வாங்கி வையுங்கன்னு.. வரும் போது வாங்கி வைக்கல ஆட்டமாடி தீர்த்திடுவான்.. அப்படியே அவங்க அப்பாத்தா மாதிரி..
போதாகுறைக்கு வீட்ல உள்ள ரெண்டு பொம்பளையங்களும் மாத்தி மாத்தி செல்லம் கொஞ்சுனா தலைக்கு மேல் ஏறாமல் என்ன தான் பண்ணுவான்?" என்றார் பெருமூச்சு விட்டவாறே..
"அவன அப்படியே இங்கே நம்ம சாதி சனத்துல ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சுடு.. அப்புறம் பஞ்சாயத்துன்னு வந்து நிக்க போறான்.. வெளிநாட்டுல படிச்சப்புள்ள பாரு" என்றார். அந்த நேரத்தில் எந்த தேவதைகள் ததாஸ்து சொன்னதோ பின்னாளில் அவனும் அதைத்தான் செய்து வைக்கப் போகிறான்..
"பார்ப்போம் நாராயணா.. அவனுக்கு இப்போ தான் 25 ஆகுது. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்" என்று இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனரே தவிர அங்கே நடக்கும் பஞ்சாயத்தை கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை.
அங்கே இரண்டு குடும்பங்களும் ஒன்றுடன் ஒன்று வாய் சண்டை இட்டது போதாதென்று அடுத்ததாக கைச்சண்டையை ஆரம்பிக்க.. அப்போதுதான் போனா போனது என்று நாட்டாமையாக உள்ளே நுழைந்தார் நம்ம சங்கர பாண்டியன்.
"என்னலே.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சும்மா ரெண்டு பேரும் பொங்கு கிட்டே இருக்கீங்க.. அப்புறம் நாட்டாமைனு நானு எதுக்கு இருக்கேன்? தொணநாட்டமைனு அவன் என்னாத்துக்கு இருக்கான்?"
ஒழுங்கா அவனவன் வேல வெட்டிய பாருங்க.. வெட்டியா ஓரண்டயை இழுக்காம வீட்டுக்கு போய் சேருங்க.. இன்னொரு தடவ உன் புள்ள அந்த பொண்ணுக்கு நூலு விட்டான் தெரிஞ்சிச்சு.. அம்புடுதேன்.." ஒரு வரலை காட்டி எச்சரித்தார்.
"அதேபோல உன் பொண்ணும் கண்ட கண்ட இடத்துல நிக்காம வீட்டுக்குள்ள ஒழுங்கா சமையல கத்துக்க சொல்லு... வெளியே எங்காச்சும் பார்த்தேன்" என்று இருவரையும் ஒரு ஏறு ஏறிவிட்டு வீட்டிற்கு சென்றார் சங்கரபாண்டியன் அயிரமீன் குழம்பு சாப்பிட..
நாச்சி அவருக்கு பார்த்து பார்த்து பரிமாற அயிரமீன் குழம்பையும் நண்டு வறுவலையும் ஒரு பிடி பிடித்தவர், இரவு மனைவியையும் விட்டு வைக்கவில்லை.
மறுநாள் காலை தன் மகனுக்காக வண்டி எடுக்க பொள்ளாச்சி கிளம்பினார் சங்கரபாண்டி.
"ஏலே முருகா.. வண்டிஎல்லாம் தொடச்சி வைச்சிட்டியாடா? பெட்ரோல் எல்லாம் போட்டு வைச்சியா? பாதி வழியில் ஏதாவது கெடக்கு மடக்கு பண்ணுனே அங்கேயே உன்னை தோள உரிச்சிப்புடுவேன்" என்றவர் நாச்சி "அப்புறம் வரேன் அம்மணி" என்று அருகிலிருந்து சொர்ணம்மாளிடம் "வரேனுங்க அம்மா" என்றார் அவர்.
"என்னது வரியா வா? பொள்ளாச்சிக்கு நானும் வருவேன். என்ற பேரனுக்கு புடிச்ச மாதிரி வண்டியை நான்தான் எடுப்பேன்" என்று அலும்பு செய்து அவருடன் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு போனார் சொர்ணாம்பாள்.
இவரு மகனிற்கு சாதாரண 110 சிசி பைக்கை பார்க்க.. அப்பத்தாவோ பேரனுக்கு
125சிசி 150சிசி இருக்கா? என்று பல விவரங்களை அள்ளி விட்டு பல பிட்டிங் எல்லாம் சேர்த்து தான் வாங்க வேண்டும் என சங்கரபாண்டினுக்கே தெரியாத பல விஷயங்கள் அசால்டாக கூறி பைக்கை ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்தனர் மாலை போல.
வெறும் வண்டி மட்டும் தானா? அது எப்படி ஆசை பேரனுக்கு அதை மட்டும் செய்வார்? இரண்டு வருடங்கள் கழித்து வரும் பேரனுக்காக ரூமையே புதிதாக மாற்றி வைத்தார். புதிதாய் கட்டில் மெத்தை என்று ஏசி முதல் அவன் பாத்ரூமில் புழங்கும் பக்கெட் வரை அனைத்தையும் புதிதாக மாற்றி வைத்தார் அவர்.
அதற்கு மேல் வீட்டில் அதை சுத்தம் செய்ய இதை சுத்தம் செய்ய என்று வீட்டு ஆட்கள் இடுப்பை எல்லாம் உடைத்தார்.
சங்கரபாண்டினுக்குத்தான் தலைவலி வந்தது. பேரன் வருவதற்கு முன்னே அம்மா ஆடும் ஆட்டம் தாங்கவில்லை. இதில் பேரன் வந்து அவனும் இவர்களோடு சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.
ஊரில் பல பஞ்சாயத்துக்களை இவர் நடத்தி வைக்க சொந்த வீட்டு பஞ்சாயத்தை எங்க போய் சொல்ல.. மருந்துக்கு மகன் என்றும் அவர் மதிக்க மாட்டார்.. பெற்ற அப்பன் என்றும் அவனும் மரியாதை கொடுக்க மாட்டான் என்று நினைத்தவாறு மறுநாள் தங்கள் மகனை வரவேற்க தேவையான ஆயுத்தங்களை செய்தனர்.
மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாயில்களை பலமுறை கூட்டி அழகழகாக ரங்கோலி கோலங்கள் போட்டு மாவிலை தோரணங்கள் என களை கட்டியது.
அப்பத்தாவிற்கோ நிலை கொள்ளவில்லை. இதுவரை ஐந்து முறை சேலை மாற்றி விட்டார். பின்னே பேரன் வரும்போது பார்க்க அம்சமாக இருக்க வேண்டாமா? அழுது வடிந்து கொண்டிருந்தால் பேரனுக்கு பிடிக்கவா செய்யும் என்று!!
அந்தப்பக்கம் நாச்சியா பிள்ளைக்கு பிடித்த பறப்பன ஊர்வன நடப்பன என அனைத்தையும் படித்து வந்து வறுவல் பொரியல் அவியல் சுக்கா மக்கா என்று அனைத்து வகையிலும் செய்து வைத்திருந்தார்.
இந்தப் பக்கம் சங்கரபாண்டியனும் இன்னும் பைக் வீடு வந்து சேரவில்லை என்று பொள்ளாச்சி டீலருக்கு போனை போட்டு விரட்டிகொண்டு இருந்தார்.
இடையிடையே கோயம்புத்தூருக்கு அனுப்பிவைத்த கார் டிரைவரிடம் "தம்பி வந்துட்டானா?" "பிளைட் வந்துருச்சா?" "ஏர்போர்ட்டை விட்டு வந்துட்டானா?" "வண்டில ஏறி விட்டானா?" என்று போனை போட்டு மூவரும் மாறி மாறி துளைத்தெடுக்க ஒரு கட்டத்தில் அவனுடைய போன் சார்ஜ் தீர்ந்து போய் மட்டையானது.
ஒருவழியாக இவர்களை எல்லாம் காக்க வைத்து நண்பகல் பதினோரு மணிக்கு மேல் அவர்களின் வீட்டு ஒற்றை வாரிசு.. அப்பத்தாவின் செல்லம்.. அன்னையின் அன்பு தங்கம்.. அப்பாவின் அதிரடி பையன் ஸ்ரீராமன் வந்த கார் அந்த வீட்டு வாயிலில் வந்து நுழைந்தது.
"அடியே.. இரஞ்சிதம்.. கோமதி.. செண்பகம் வாங்கடி.. வாங்கடி.. எல்லாரும் வாங்கடி!! ஆலம் எடுத்துட்டு வரிசையா வாங்கடி.. பேரன் வந்துட்டான்.. என்ற பேரன் வந்திட்டான்" என்று சந்தோச கூச்சலுடன் பேரனை காண ஆவலுடன் முதலில் காரை நோக்கி ஓடினார் சொர்ணம்.
அடுத்து சங்கரபாண்டியனும், அவருக்குப் பின்னே விழிகளில் அன்பை தேக்கிக்கொண்டு தன் மகனைக் காண ஆவலுடன் நின்று கொண்டிருந்தார் வீரநாச்சி..
இவர்கள் மூவர் மட்டும் இல்லை, அவர்கள் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் முதல் தெரிந்தவர் அறிந்தவர் என்று பாதி போடிகவுண்டன்பாளையமே அவர்கள் வீட்டு வாயிலில் தான் திரண்டு இருந்தது.
பாதிப்பேர் வீட்டு வாயிலில் நிற்க.. மீதிப்பேர் காம்பவுண்டில் மரக்கிளைகளில் தொத்திக்கொண்டு.. ஊரே திரண்டிருந்ததை பார்க்க அப்பாத்தாவிற்கோ பெருமை பிடிபடவில்லை..
ஒரு பக்கம் பெருமையாய் இருந்தாலும் மறுபக்கம் இவர்கள் கண்ணெல்லாம் தன் பேரன் மேல் விழுந்து விடுமோ என்று பயம் வேறு!!
அதற்காகத்தான் இத்தனை பேரை
ஆலம் கரைக்க ஒருத்தி.. பூசணிக்காய் திருஷ்டி எடுக்க ஒருத்தி.. மிளகாய் உப்பு வைத்து திஷ்டி கழிக்க மற்றொருத்தி என்று வகைவகையாக ஆட்களை நிறுத்தி வைத்திருந்தார் சொர்ணம் அப்பத்தா..
காரின் கதவை திறக்க அதிலிருந்து காவி வேட்டி கட்டிய கால் முதலில் தெரிந்தது..
அருகில் நின்ற மருமகளிடம் "ஏண்டி நாச்சியா.. ஆருடி அது? ஆரோ சாமியார் மாதிரி இருக்கு.. அவரு எதுக்கு நம்ம வூட்டுக்குள்ள வராக?" என்ற முணுமுணுப்பு...
நாச்சியோ அந்த சாமியாரைப் பார்த்து திகைத்தே விட்டார்.
நெற்றியில் பட்டை..
கழுத்தில் ருத்ராட்ச கொட்டை..
காவி சட்டை என்று அக்மார்க் சாமியாராக வந்து இறங்கினான் அவர்களின் ஒற்றை குல வாரிசு ஸ்ரீராமன்.
"என்னடா கோலம்??!!" என்று அனைவரும் அவனையே பார்த்திருக்க..
அப்பத்தா தான் பேரனின் இந்த நிலையை கண்டு அதிர்ச்சி.. அவனுக்காக பார்த்து பார்த்து செய்தது என்ன?? இப்பொழுது தன் பேரன் வந்து நிற்கும் நிலை என்ன?? என்று தள்ளாடி மருமகள் மேலேயே சாய்ந்து விட்டார்.
வந்தவனோ தன் தந்தையைப் பார்த்து "மகனே!! எனது உடமைகள் எல்லாம் கார் டிக்கியில் இருக்கு.. எடுத்துட்டு வர ஆணையிடு" என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைய..
"என்னது நானு உன்ற மகனா?" என்று சங்கரபாண்டியன் அதிர்ந்து நின்றார்.
"நானு உன்ற அப்பன் டா!! என்று அலற..
"யாருக்கும் யாரும் அப்பன் இல்லை..
அனைவருக்கும் அப்பன்.. என்னப்பன் மாருதி!!"
"ஜெய் ஜெய் பஜ்ரங்கபலி..
ஜெய் ஜெய் பஜ்ரங்கபலி.."
"எங்க எல்லாரும் சொல்லுங்க
ஜெய் ஜெய் பஜ்ரங்கபலி..
ஜெய் ஜெய் பஜ்ரங்கபலி" என்று அவன் பக்தியோடு கூற..
சுத்தியுள்ள ஒட்டுமொத்த ஊரும் அவனை பார்த்து கும்பிட்டு தாங்களும் "ஜெய ஜெய பஜ்ரங்கபலி" என்று கோஷமிட்டனர்.
வீட்டிற்க்குள் சென்றவன் தன் அறையில் நுழைந்து கொண்டான். கதவை திறந்த பாடும் இல்லை. அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க.. அப்பாத்தாவோ ஒப்பாரி வைத்தார்.
"என்ன அருமை பெருமையாக வளர்த்தேன்..
இப்படி சாமியாராக போகத்தானா??
என் ஆச ராசா!! நீ ஏன் போனா வேஸ்டா!!
நல்லா இருந்த புள்ளைய எப்படி அந்த அனுமாரு வந்து புடிப்பாரா??.
என்னது அனுமார் வந்து உன் பேரனை பிடித்தாரா?? என்னம்மா இது புதுசா இருக்கு!!
"எல்லோருக்கும் பேய் புடிச்சு பார்த்திருக்கோம்.. கிரகம் இந்த ஆஞ்சநேயரு புடிச்சு பார்த்ததுண்டா?? என்று சங்கரிடம் புலம்ப..
இது அனுமாருக்கு தெரியுமா?? நம்ம மைண்ட் வாய்ஸ்..
"இதை நானு அப்படியே சும்மா விடமாட்டேன். என்ற பேரன அந்த ஆஞ்சநேயர் கிட்ட இருந்து நான் பிரிக்கல.. நானு சொர்ணாமாபா இல்ல.. இல்ல!! என்று சபதம் போட்டார்.
"ஏலே முருகா.. நீ போய் நம்ம மேல தெருவில் இருக்கிற குறிக்காரிய வர சொல்லு" என்று அவனை அனுப்பி வைத்தார்.
"எதுக்குங்க மா.. குறிக்காரி எல்லாம்?" என்று கேட்ட சங்கரனிடம்..
"அவ வந்து பார்த்துட்டு சரியா சொல்லுவா.. மாசானி அம்மன் அருள் பெத்த குடும்பம். குறி மட்டுமல்ல சாமி.. பேயும் ஓட்டுறதுல அவங்க குடும்பம் ஃபேமஸ்..
எப்படியாவது என்ற பேரன பழையபடி மாத்தியே ஆவேன்" என்று அவர் கங்கணம் கட்டிக் கொள்ள.. நாச்சியோ பயந்து போனார்.
மெதுவாக தன் கணவனிடம் "ஏனுங்க மாமா.. அய்த்த சொல்ற மாதிரி நம்ளோட புள்ளைய ஆஞ்சிநேயர் புடிச்சிட்டாருங்களா மாமா?" என்று பயத்தோடு கேட்க.. தன் தலையிலேயே அடித்துக்கொண்டார் சங்கரபாண்டியன்.
சூரியன் மேற்குத் திசையில் மறைய காத்திருக்கும் அந்திமாலை வேலை..
அவர்கள் வீட்டுக்கு வந்தாள் அந்த குறிக்காரி..
கண்டாங்கி சேலை கட்டி..
கழுத்து நிறைய விதவித மாலைகள் போட்டு..
கொண்டையை சைடாக தூக்கி கட்டி..
நெற்றியில் வட்டமாக பெரிய பொட்டு வைத்து..
அஞ்சன கண்களில் அதிகமாக மையிட்டு..
உதட்டுச்சாயம் தீட்டிய சிவந்த அதரங்களோடு...
இதழ்கள் மீது ஒய்யாரமாக இருக்கும் கருநிற மச்சத்தோடு..
கையில் கருப்பு நிற கோலை சுழட்டியப்படி..
அவள் நீலாம்பரி..
தன் அறைக்குள் நுழைந்த இந்த குறிக்காரியை பார்த்த ஸ்ரீராமன்
அவளது அஞ்சன விழியில் அரண்டு போனான்..
கையில் வைத்திருந்த துளசி மாலையை வேகவேகமாக உருட்டி "ஜெய் ஜெய் பஜ்ரங்கபலி" என்று மனதுக்குள் உரு போட்டான்.
சொக்க ரெடியா?
