அழகன் 7
அதன் பின் வந்த நாட்கள் இருவருக்கும் சற்று விரைவாகத்தான் நகர்ந்தது. உறவுகள் சொந்தம் பந்தம் என்று..!
அதுபோல இரவெல்லாம் அவளை அழகனிடமிருந்து அடைக்காத்தார் கலையரசி.
“இங்கன பாரு அழகா.. ஆண்டாளு வயசுல நம்ம வீட்ல ஒரு பொம்பள புள்ள வேற இருக்கு.. அது ஞாபகம் இர்க்கா உனக்கு?” என்றதும்,
அழகனோ அம்மாவைக் கண்டு பல்லை கடிக்க… அவரோ மகனை முறைக்க.. ஆண்டளோ ஆனந்தத்தில் குதிக்க.. என்று மூவருக்கும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வீட்டில் இருந்து மற்றவர்களுக்கு தெரியவில்லை.
மூட்டு வலி காரணமாக சொக்கியம்மாவால் படி ஏற முடியாத காரணத்தினால் அவரது அறையை கீழே மாற்றி வெகு ஆண்டுகள் ஆகிறது.
அதனால் மாடியில் நடக்கிற இந்த கூத்து எதுவும் அவருக்குத் தெரியாமல் இருந்தது.
அதுவும் இல்லாமல் சாதாரணமாகவே பெரிய கட்டுக் குடும்பம் அவர்களது..!
சும்மாவே உறவினர்களின் போக்குவரத்து மற்ற வீடுகளை விட அதிகமாகவே இருக்கும். அதுவும் போஸ்பாண்டி விவசாய கட்சி ஒன்றில் இருப்பதால், அவரோடு நாலுபேர் எப்பவும் சுற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
கேட்கவே வேண்டாம் அழகன் வீடு ஆட்கள் நடமாட்டத்தோடு ஜே ஜே என்று தான் இருக்கும்…
உறவினர்களின் காது குத்து, கல்யாணம் காட்சி சடங்கு என்று விழாக்களுக்கு அழைக்க வருபவர்களும்,
“இங்கன திருப்பரங்குன்றத்துக்கு வந்தேன்.. அப்படியே பெரியம்மாவையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.. இப்போ பெரியப்பாவுக்கு பரவாயில்லீங்களா..” என்று வரும் உறவுகளும்,
அவ்வப்போது இந்த கட்சி ஆட்கள் விவசாயிகள் என்று வீடு நிறைக்க ஆட்கள் இருக்க..
சொக்கியம்மாளின் பார்வை பகலில் பெரும்பாலும் பேரன் பேத்தியை இப்போதெல்லாம் கவனிப்பதில்லை..!
இரவிலோ சுத்தம்..!
பேரனின் அன்றைய செல்ல அழைப்பிற்கு பின் எல்லாம் சரியாக விட்டது என்று நினைப்பிலோ இல்லை சரியாக விடுமோ என்று நினைப்பிலோ.. அவர்களை கண்காணிக்காமல் விட்டுவிட்டார்.
அவருக்கு கலையரசியின் இந்த செயல் தெரிந்திருந்தால்.. அதுவும் பேரனுக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்று தெரிந்திருந்தால்..
பொங்கி எழுந்து மருமகளின் கொண்டையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி… வார்த்தைகளால் விலாசி தள்ளி… மருமகள் எடுத்த தன்
மருமகளையும் அவரது மருமகளையும் சேர்த்தே அம்மா வீட்டிற்கு விரட்டி அடித்திருப்பார்..!!
“நீங்க ரெண்டு பேருமே வேணாம் போங்கடி.. என் புள்ளைக்கும் பேரனுக்கும் வேற நல்ல புள்ளையா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க, இந்த சொக்கியம்மாளுக்கு தெரியும்” என்று..!
ஏதோ கலையரசி நல்ல நேரம் இதுவரை மாமியாரிடம் மாட்டாமல் இருக்கிறார்..!
இங்கே இவ்வளவு பிரச்சனைகள் இருக்க.. இதில் மறு வீட்டுக்கு அழைக்க சாரங்கபாணியும் இரங்கநாயகி வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
“என்ன சாரங்கா.. புள்ளைங்கள மறு வீட்டுக்கு எங்கன கூட்டிட்டு போக போற? உன்னோட பூர்வீக வீட்டுக்கா இல்ல ஸ்ரீவில்லிபுத்தூருக்கா?” என்று கேட்டார் அப்பத்தா.
மனைவியை ஒரு முறை திரும்பி பார்த்தவர் “ஏற்கனவே சொந்த ஊருக்கு ஒரு முறை மருவனையும் மவளையும் மறு வீட்டு கூட்டிட்டு போயிட்டு வந்தாச்சு அய்த்த.. அதனால ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தான் கூட்டிட்டு போறோம்..” என்றவர்,
“அங்கன ஒரு சின்னதா விருந்து மாதிரி வைக்க ஏற்பாடு பண்ணி இருக்கோம் அய்த்த.. நான் தொழில் செய்யறது அங்கன தேன். கூட்டாளிக தொழில் சம்பந்தமாக நிறைய பேர் தோஸ்து இருக்காய்ங்க.. அதுல பாதி பேரால இங்கன கல்யாணத்துக்கு வர முடியல. அதனால ஒரு விருந்து மாதிரி வைக்கலாம்னு யோசிச்சோம். நீங்களும் குடும்பத்தோடு வாங்க” என்று அழைத்தார்.
சங்கரபாணி அருகே போஸ் பாண்டி அமர்ந்திருக்க அவர்களுக்கு சற்றே தள்ளி அப்பத்தாவுக்கு எதிரே அழகன்.
கலையரசியும் ரங்கநாயகியும் அப்பத்தா அருகே நின்று இருந்தனர்.
அங்கயற்கண்ணி அவ்வூரில் உள்ள நடுநிலை அரசு பள்ளியில் கணக்கு ஆசிரியையாக இருக்கிறாள். அண்ணன் கல்யாணத்திற்கு எடுத்திருந்த விடுமுறைகள் தீர்ந்துவிட அவள் அன்று பள்ளிக்கு சென்று இருந்தாள்.
இங்கு நடப்பவற்றிக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அமர்ந்திருந்தாள் அப்பத்தா அருகே ஆண்டாள்.
“அங்கன நடக்குற விருந்துக்கு நாங்கல்லாம்..” என்று ஆரம்பித்த அப்பத்தா பேரனின் கண்களில் என்ன கண்டாரோ அதை புரிந்து கொண்டவரோ..
“நாங்க எல்லாம் எதுக்குயா? வேணாம்.. வேணாம்.. அங்கன நாங்க எதுக்குங்கறேன்? நீ உன் மருமவனையும் உன் மவளையும் கூட்டுட்டு போ..! நாங்க எல்லாம் வந்தா எங்கள கவனிப்பியா இல்ல விருந்தாளிய கவனிப்பியா?”
“எப்படியும் சொந்த ஊருல உன் அங்காளி பங்காளிகளுக்கு எல்லாம் விருந்து வைக்கணும் தானே? அப்ப நாங்க எல்லாம் வந்துகுறோம்” என்று முடிவெடுத்தார் சொக்கியம்மாள்.
“என்ன மாமி நீங்களே இப்படி சொல்றேள்?” என்று ரங்கநாயகி ஆரம்பிக்க..
கலையரசியோ “அய்த்த சொல்றது சரிதான் நாயகி, இங்கன வேலையே தலைக்கு மேலே இருக்கு. போயிட்டு மறுநாளே வந்துட போறாக.. அதுக்கு எதுக்கு குடும்பமே? விடு இன்னொரு நாளு பார்த்துக்கலாம்” என்று தம்பி மனைவியை சமாதானப்படுத்தியவர் அறியவில்லை, அவர் மகனை பற்றி..!
மறு வீடு இன்று ஒரு நாள் தானே என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது சாரங்கபாணி வசிக்கும் வீட்டிற்கு சென்றனர் புது மணத் தம்பதிகள்.
அன்று மாலை அவர் விருந்து போல அக்கம் பக்கத்தினரை அழைத்து வைத்தார்.
வாழ்த்தி பரிசுகள் கொடுத்து அவர்களோடு பேசி சிரித்து என்ற நேரம் சென்று கொண்டிருந்தது.
அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு மாடிலேயே இந்த விருந்து உபச்சார விழா நடைபெற்றுக் கொண்டிருக்க..
சாப்பாடும் பஃபே முறையில் தான் ஏற்பாடு பண்ணி இருந்தார்.
அதனால் அவரவர்களுக்கு பிடித்த உணவுகளை எடுத்து நண்பர்களாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
சாரங்கபாணி தன் சிநேகிதர்களோடு பேசிக் கொண்டிருக்க.. அவர் அருகில் அமர்ந்திருந்த அழகனோ அவ்வப்போது கை மறைவில் கொட்டாவி விடுவதும்.. உடம்பை முறுக்கி கைகளை நெட்டி எடுப்பதுமாய்.. தன் தாய் மாமனின் கவனத்தை தன் மீது திருப்பிக் கொண்டிருந்தான்..!
முதலில் அவருமே சரியாக கவனிக்கவில்லை.
அவன் அருகில் இருந்த சாரங்கபாணியின் நண்பரும் அதனை கவனித்து விட்டு,
“என்ன புது மாப்பிள்ள.. டயர்டா? இல்ல தூக்கமா?” என்று சிரிப்போடு கேட்க..
அதில்தான் கவனமுற்று மருமகனை சாரங்கபாணி பார்க்க.. அவனும் அசட்டு சிரிப்போடு மீண்டும் ஒரு கொட்டாவியை கைமறைவில் விட்டபடி இருந்தான்.
அவ்வளவுதான்..! “என்ன அழகா டயர்டா இருந்தா சொல்லலாம் இல்ல ஒரு நிமிஷம்..” என்றவர் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்த மனைவியை அருகில் அழைத்து காதில் கிசுகிசுத்தார்.
ஆண்டாளும் வெகு சுவாரசியமாக அந்த ஊரில் அவளுக்கு இருக்கும் பெண் தோழிகளிடம்.. அவளோடு கல்லூரியில் படித்தவர்கள், படித்து அருகே ஊரிலேயே கட்டிக் கொடுத்த பெண்கள் என்று ஒரு பத்து பேர் வந்திருக்க, அவர்களோடு ஐக்கியமாகிவிட்டாள்.
அழகனின் ஆஜானபாகுவான உடல் அமைப்பும்.. வளமான தோற்றமும்.. அவனின் திரண்ட புஜங்களை இறுக்கிப் பிடித்திருந்த வெண்ணிற சட்டையும்.. திண்ணிய மார்பும் கற்றை மீசையும்.. களையான முகமும்.. ஆண்டாளின் தோழிகளை கவர்ந்ததில் வியப்பில்லை..!
அதில் ஒருத்தி “ஏன் ஆண்டாளு.. உன் வீட்டுக்காரர் மதுரை பக்கம்னு கேள்விப்பட்டேன்.. அதுக்கு தகுந்தாப்ல நல்லா ஆங்குதோதா தான் இருக்காரு.. எங்க அப்பாவும் தாற் பார்த்து கொடுத்தாரே ஒருத்தருக்கு, பெரிய சென்னை சிட்டி ஆளு தான்.. வெள்ளையா இருக்காரே தவிர.. ஒன்னும் இல்லை” என்று அவள் பெருமூச்சு விட்டாள் அழகனை கண்டு.
மற்ற பெண்களை “ஆமான் டி ஒன்னும் இல்லாம தான் நீ வயித்த தள்ளிட்டு வந்திருக்க இல்ல” என்று அவளின் ஆறு மாத கர்ப்பத்தை பார்த்து கிண்டலாக கூற..
“அது வேற டிபார்ட்மெண்ட்.! இது வேற டிபார்ட்மெண்டரி டி பக்கிகளா” என்றதும், மீண்டும் பெண்களுக்குள் க்ளுக் என்று கள்ளச் சிரிப்புகள்..!
அவளை ஒட்டிய இன்னொருத்தியும் “அவ சொன்னது தப்பு இல்ல..! இங்க இருக்கிற ஆம்பளைங்களை விட உன் வீட்டுக்காரு நல்ல உயரம்தான்.. அதுவும் ஆம்ஸ் கட்.. சான்ஸே இல்ல..!” என்று சிலாகித்து கூற..
“அடியே நீங்க எல்லாம் பொண்ணுங்களாடி? ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு விஷ் பண்ண வந்துட்டு.. அவளுக்கு முன்னாலேயே அவ புருஷனை சைட் அடிக்கிறீங்களே? அவ புருஷன் நமக்கெல்லாம் அண்ணன் டி..!” என்று நேர்மையின் திருவுருவாய் ஒருத்தி கூற..
“அடியே இவ்வளவு அம்சமா இருக்கிறவரு யாருக்கு அண்ணனா வேணும்? வேணா நீ வச்சுக்கோ அண்ணனா..!” என்றாள் ஒருத்தி.
“ஏய் ஆண்டாளு.. இன்னிலிருந்து நீ எனக்கு அக்காவ உன்னை நான் தத்து எடுத்துட்டேன். அந்த கற்றை மீசை கள்ளழகர் எங்களுக்கெல்லாம் மாமா டி” என்றாள் இன்னொருத்தி.
அதற்கு மற்ற பெண்கள் வெடித்து சிரிக்க..
ஆண்டாள் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் “நம்ம வீட்டுக்காரர் என்ன அவ்வளவு அம்சமா.. அழகாவா இருக்காரு?” என்று இவள் திரும்பி பார்க்கும் சமயம், தன் கற்றை மீசையை முறுக்கி விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்த கள்வனை கண்டவளுக்கோ கள்ளழகன் கருப்பண்ணசாமியாகத் தான் தெரிந்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து தான் இவ்வாறு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
முதலில் அறிமுகம் முடித்துவிட்டு “நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க” என்று நாகரிகமாக பெண்களுக்கு பேச இடைவெளி விட்டு எழுந்து சென்று விட்டான் கள்ளழகன்.
அதிலிருந்து தான் இந்த பெண்களின் படை அவனை மாற்றி மாற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறது.
மகளின் அருகே வந்த ரங்கநாயகி “மாப்பிள்ளைக்கு தூக்கம் வந்துருச்சு போல.. அவருக்கு கீழே இருக்கிற உங்க ரூமுக்கு அழைச்சிட்டு போ” என்று அவர் மெல்லிய குரல் கூறி விட்டு,
“எல்லாரும் சாப்டீங்களா?’’என்று பொதுவாக விசாரித்து கல்யாணத்திற்கு கொடுத்த பாத்திரம் அடங்கிய தாம்பூலப் பையை அங்குள்ள பெண்களுக்கு கொடுத்தார்.
ஆண்டாளின் மனமோ அன்னையின் பேச்சில் திக் என்றது. மெல்ல பார்வையை திருப்பி கணவனை பார்க்க.. அவளின் கூர்பார்வையும் அவளைத்தான் வெறித்திருந்தது.
அது சொன்ன செய்தியோ “இன்று நீ என்னிடமிருந்து தப்ப முடியாது..! மாட்டுனடி பொம்மா..!” என்றுதான்.
அவளோ எச்சில் விழுங்கிக் கொண்டு மீண்டும் கணவனை பார்க்க ஓரக்காண்ணால் இப்பொழுது அவனது தோள்களோ ரகசிய சிரிப்பில் குலுங்கியது.
“அச்சோ.. பெருமாளே..! மாட்டுனேன்” என்று பதறியவள் இதயத்திலோ
இரவு நெருங்க நெருங்க திக் திக் என்று வேகமாக கடிகாரம் மணி அடித்தது.
‘எப்படி தப்பிப்பது? எப்படி தப்பிப்பது?’ என்று என்னென்னமோ எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளின் மண்டையில் ஒரு கட்டத்தில் மணி அடிக்க..
தோழிகளுடன் பேசுவது போலவே கீழே அவர்களை அழைத்து சென்று அவர்களை பேசி வழி அனுப்பி வைத்தவள், நேக்காக தன் அப்பா அம்மா அறைக்குள் சென்று உறங்கி விட்டாள்.
மருமகனின் பர்பாமன்ஸில் மனைவியை முறைத்தார் சாரங்கபாணி.
அவரோ கையை பிசைந்து கொண்டு இருங்கள் கீழே பிரண்ட்ஸ் வழியே அனுப்ப போனா நான் போய் பார்த்துட்டு வரேன் என்று கீழே வந்தவர் மகள் இல்லை காணும் என்று வெளியில் அங்கு இங்கு தேதி கடைசில அவள் தங்கள் அறையில் உறங்குவதை பார்த்து ஒரு பல்லை கடித்து ஆண்டாள் என்று அவர் தோளில் தட்ட..
“அம்மா போம்மா.. ரொம்ப டயர்டா இருக்கு..!” என்று தூக்கத்தில் உளறும் மகளை திட்ட முடியாமல் பார்த்தார்.
‘புதுப்பெண் அவளுக்கும் சோர்வு இருக்கும் தானே?’ என்று
ஆழ்ந்து உறங்கியவளை எழுப்ப முடியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க..
“பரவால்ல மாமி அவ தூங்கட்டும் ரெஸ்ட் எடுக்கட்டும்..! நான் அந்த அறையில உறங்குறேன்” என்று
புரிதலோடு சென்ற மருமகனை தவிப்பாக பார்க்க
“பரவால மாமி” என்று சென்றவன் முகத்திலோ, “பொம்மா.. தப்பிச்சிட்டல.. மாட்டுவடி நீ..!” என்று பொறுமியப்படி சென்று உறங்கினான்.
மறுநாள் காலை ஆண்டாளை எழுப்பி,
“ஆண்டாளு.. நானும் அப்பாவும் கோயிலுக்கு போறோம். மாப்பிள தூங்கிக்கிண்டு இருக்கிறார். காலையில சமைச்சு வச்சுட்டேன். நீ குளிச்சிட்டு சாமி கும்பிட்டு அவர எழுப்பி விடு, இரண்டு பேரும் சாப்பிடுங்கோ” என்று ரங்கநாயகியும் சாரங்கபாணியும் கோயிலுக்கு சென்றனர்.
ஆண்டாள் எழுந்து வந்து மெல்ல தன் அறையை எட்டிப் பார்த்தாள்.
அங்கே அழகனோ புதிதாய் மணமக்களுக்கு என்று வாங்கி போட்டிருந்த கட்டிலை ஆக்கிரமித்தபடி குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
“அவர்தான் நன்னா தூங்குறாரே.. அவர் எழ முன்ன குளிச்சிட்டு வந்துடுவோம்” என்று பூனைப் போல தன் உடுப்புகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பொது குளியலறை உள்ளே நுழைந்து துணிகளை கொடியில் போட்டவள், இரவில் தண்ணீரை நிறைத்துக் கொண்டிருந்தாள் குளிப்பதற்கு,
சட்டென அவன் அந்த அறைக்குள் நுழைய, அவனின் அரவம் கேட்டு பட்டென திரும்பினாள் பாவை..! கையில் வைத்திருந்த மக்கில் இருந்த தண்ணீர், அவள் மேல் அபிஷேகம் ஆனது.
கணவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் திடுக்கிடல் தோண்றியது..!
”அச்சோ… பெருமாளே.. என்னது… இங்கயே.. வந்துட்டேள்…?” என்று அவள் பதற..
”ஏன்.. வரக்கூடாதா..? ஆமா.. நேத்து ஏன் உங்க அம்மாப்பா அறையில் உறங்குனவ?” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் சென்றான்.
”அப்படி. . இல்ல.. னா. அது.. அது.. பிரண்ட்ஸ் கூட பேசிட்டு வந்தனா அப்படி தூக்கம் வந்து..?” என்று பயம் கலந்த குரலில் சொன்னாள்.
அவள் கையைப் பிடித்தவன்.
”இப்ப.. எதுக்கு தேவையில்லாம பயந்து சாகுற..? நான் உன் புருஷன் தானே?” என்று கேட்க,
”பயப்படாம… எப்படி… நீங்க.. போங்களேன்.. நானே குளிச்சிட்டு வரேன்..! ப்ளீஸ்..!” என்று கெஞ்சிய அவள் முகத்தில் பயம் அப்பியிருந்தது. அவளது உதடுகள் நடுங்கியது. அவள் பயத்தைப் போக்க… சட்டென அவளைக் கட்டிப் பிடித்தவன்,
“ரொம்ப பயமா இருந்தா இப்படி தட்டி பிடிச்சா பயம் வராதாம் பொம்மா..! இப்போ பயமா இருக்கா என்ன?” என்றவனின் கற்றை மீசையும் அடர்ந்த அதரங்களும் அவள் கழுத்தில் கோலம் போட.. எங்கே அவள் பதில் சொல்ல?
”ம்..ம்ம்…” என்று கண்களை மூடிக்கொண்டு திணறினாள்.
அவளின் வலை கரங்களை தன் வன் கரங்கள் கொண்டு பிடித்தவன்.. காலையில் சோர்வாய் இருந்த முகமும்.. கலைந்து இருந்த அவளது தலைமுடியும் அவளுக்கு சோபையான அழகை கொடுத்திருக்க,
ஜாக்கெட் புடவை தண்ணீரில் நனைந்து அவள் உடலோடு ஒட்டி இருக்க.. பயத்தில் துடித்த அவள் அதரங்களில் தண்ணீர் நனைந்து பன்னீரில் குளித்த ரோஜா என அவன் கண்களுக்கு தெரிய.. மேலும் அவள் முகமெங்கும் ஆங்காங்கே தண்ணீர் திவளைகள் வெயிலில் பட்டு வைரமென ஜொலிக்க.. அவளுக்கு அது ஒரு தனி அழகை தந்தது. அதற்கு மேல் பொறுக்க இல்லாதவனாய் அவள் முகத்தில் ஜொலித்த வைர கற்களை தன் உதடுகளால் விழுங்கிக் கொண்டிருந்தான் சுற்றுப்புற மறந்து..
கணவன் தான் என்று ஒரு மனது அவனின் இச்செயலை ஆதரித்தாலும்.. இப்படி குளியல் அறையில் அதிரடியாக புகுந்து இவன் செய்யும் இந்த செயல் அவளுக்கு ஒப்பானதாக இல்லாமல் அவனை தள்ளிவிட..
அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவளை அருகில் இருந்த ஒரு குறு சந்து சுவற்றில் சாய்த்து மெல்லமெல்ல தன் தாகத்தை தணித்து கொண்டு இருந்தான் அவள் முகத்தில் இருந்த தண்ணீரை பருகி..
அவனின் உதடுகள் அவளின் பிறை நெற்றி.. கூர் மூக்கு.. பளிங்கு கன்னங்கள் ரோஜா உதடுகள் என கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து கடைசியில் அவள் சிவப்புக்கல் மூக்குத்தியில் வந்து இளைப்பாறியது..!
பின்பு அவள் இதழில் அழுத்தமாக தன் அன்பை எழுதிவிட்டு அவளை விட முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அவளோ அவன் மார்பில் கை தள்ளிவிட்டு ஓட, "ஏய் பொம்மா நில்லுடி" என்றவனை மனதினில் திட்டிக் கொண்டே ஓடினாள்.
அதே நேரம் கோவில் சென்று திரும்பி இருந்து ரங்கநாயகி தம்பதியோ இவளை இப்படி நனைந்த உடையில் பார்த்து “என்னடி பாத்ரூமில் இருந்து இப்படி வர? குளிக்கலையா?” என்று கேட்க,
“ஹான்.. குளிச்சிட்டேன் மா..”
“ஈர ட்ரஸோட இருக்கேடி!”
“குளிச்சா ஈரம் படத்தானே செய்யும்.” என்று அவள் உளற..
அதேசமயம் அழகனோ “பொம்மா துண்டு எடுத்துட்டு வா” என்று தலையை மட்டும் வெளியே நீட்டி சொல்ல..
“போச்சு மானம் போச்சு..! இவரு வேணும்னே என்னை பழி வாங்கிட்டாரு..!” என்று ஆண்டாள் தலையில் கை வைத்துக் கொள்ள, இரங்கநாயகியோ ஒரு வெட்கச் சிரிப்போடு அவர்கள் அறைக்கு நுழைந்து விட்டார்.
சாரங்கபாணியோ மெல்லிய சிரி
ப்புடன் “நான் கடைக்கு கிளம்புறேன் நாயகி” என்று வெளியே சென்று விட்டார்..!
“பொம்மா..” என்ற அழகனின் குரலில் வேறு வழி இன்றி துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு வெளியே நின்றாள்.
தொடரும்..
