அழகன் 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அழகன் 2

 

கள்ளழகனை கண்ட மாத்திரத்தில் காரிகையின் கண்களோ தன் எல்லை தாண்டி விரிந்து விழுங்கியது அவனை..!!

 

அவனும் அவளை தீர்க்கமாக உச்சாதி பாதம் வரை பார்த்துக் கொண்டே.. “அய்த்த உங்கள அப்பத்தா வர சொல்லுச்சு” என்றான் வார்த்தைகளை அழுத்தமாக கோர்த்து..!!

 

“மாமியா? என்னை வர சொன்னாளா? இதோ போறேன் தம்பி” என்று அவர் போக..

 

“உங்களைனா உங்கள மட்டும் இல்ல உங்க பொண்ணையும் தேன். அப்பத்தா பாக்கணும்னு வர சொல்லுச்சு” என்றபடி பேசியவன் கண்களோ இன்னும் அவளை விட்டு ஒரு இன்ச் கூட நகரவே இல்லை. ஆனால் வார்த்தையாடல் மட்டும் தன் மாமன் மனைவியிடம்…!

 

மகளையும் வருங்கால மருமகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கநாயகி. மகளோ அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததை உணர்ந்து கொண்டவர்,

 

 

“ஆண்டாள்.. எழுந்துகோ..! பெரியவா கூப்டு இருக்கா, போய் பார்த்திண்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வரணும் எழுந்திருடி” என்று ரங்கநாயகி மெல்லிய அதட்டல் போட, அதெல்லாம் எங்கே அவள் காதில் விழுந்தது?

 

ஆண்டாளோ அவனை கண்ட மாத்திரத்தில் இருந்து மந்திரித்து விட்டு கோழி போல அசைவற்று சமைந்து அமர்ந்திருந்தாள்.

 

“நீங்க முன்னால போங்க அய்த்த.. உங்க பொண்ணு கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்” என்றான் கொடுப்பில் சிரித்துக் கொண்டே அழகன்.

 

அதுவரை அதிர்ச்சியில் அமர்ந்தவள் செவிப்புலன் சட்டென்று இவன் கூறியவற்றை கிரகித்து மூளைக்கு அனுப்ப.. ‘ஐயையோ..!! தனியாவா?? இவராண்டவா?? ரங்கநாதா..!! நான் மாட்டேன் பா..!’ 

 

“மா செத்த நில்லு.. நானும் வரேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்..” என்று அன்னையை முந்திக்கொண்டு வாசல் அருகே போனவளை கண்டவனின் கற்றை மீசைக்கு அடியில் துடித்தன உதடுகள்..!!

 

கண்ணைக் காட்டி ரங்கநாயகியை அவன் அனுப்பி வைக்க அவரும் மெல்லிய சிரிப்போடு நகர்ந்துவிட்டார், மருமகனின் ஆசையை புரிந்துகொண்டு..!

 

அவள் வரும் முன் வாயிலை அடைத்தவாறு நின்றான். அவளோ அமைதியாக நின்றால் வழி விட்டு விடுவான் என்று அமைதியாக நிற்க..

 

அசராமல் அவனும் வாயிலை அடைத்துக் கொண்டு இருக்க.. அவளோ குனிந்த தலை நிமிராமல் இருக்க.. வெகு நேரம் ஆகியும் தன் முன்னே வழிவிடாமல் நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

‘இவர அண்ணாந்து பாக்குறச்சே கழுத்து வலிக்குதே.. எப்படி குடும்பம் நடத்த போறேன் இவர கட்டுண்டு?’ என்று மனதுக்குள் பயந்து வந்தாலும்,

 

 “செத்த நகருறேளா?” என்று மெல்லிய குரலில் கேட்டவளை பார்த்தவன் “என்ன சொன்ன சத்தமா சொல்லு? கேட்கல..!” என்றான் அவளை நெருங்கி நின்று..!

 

அதுவும் அவனின் அந்த அழுத்தமான குரல் அவளுக்கு இன்னும் படப்படத்து வர “செத்த நகருங்கோ.. பாட்டி பாக்கணும்னு சொன்னா” என்றாள் திக்கி திணறி.

 

“நானும் தேன் உன்கிட்ட இரண்டு நிமிசம் பேசணும்னு சொன்னேன்..!” என்றவன் திரும்பி அறைக்கு வெளியில் இருந்த இரங்கநாயகியை பார்த்து “நீங்க போயிட்டு இருங்க அய்த்த.. நாங்கள பேசிட்டு வரோம்” என்று அவரை மட்டும் அனுப்பி வைத்து விட்டு வாகாக மறைத்துக் கொண்டான் வாயிலை.. அவள் செல்லும் முன்னே..!

 

சிறு வயதில் பரதம் பயின்றவளுக்கு இப்பொழுது பயிலாமலேயே கதக்களி நடனம் ஆடுபவள் போல கை, கால் எல்லாம் உதறி எடுக்க.. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவன் முன்னே நின்றாள்.

 

“ஏய்.. இங்கன பாரு..!” என்று அதட்டியது போல பேச அவளோ, 

 

“ம்ம்ம்..” என்று மெல்லிய குரலில் பதில் கூற..

 

“ம்ப்ச்.. இந்தா மெல்லிசா பேசுறது.. பதுவுசா பாக்குறது.. இதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது. நான் ஏய் புள்ளனு கூப்பிடும்போது.. ஏனுங்க மாமான்னு என்னைய விட குரல ஒசத்தி பதில் சொன்னாதான் எனக்கு பிடிக்கும். இப்படி எப்ப பார்த்தாலும் குனிஞ்சு தல நிமிராம தலையை ஆட்டி ஆட்டி பேசுறதெல்லாம் வேலைக்கே ஆகாது. நான் ஊருல இல்லாத நேரம் வயலு தோட்டம்ன்னு போய்.. நின்னு குரலை ஒசத்தி வேலை வாங்க தெரியணும் ஆளுங்க கிட்ட.. புரியுதா?” என்று அவன் சற்று சத்தமாக கேட்க..

 

அவனின் சத்தத்தில் அவளுக்கு ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட வேக வேகமாக தலையாட்டினாள். 

 

அவளின் தலை ஆடுவதை விட அவள் காதில் அணிந்திருந்த அந்த சற்றே பெரிய ஜிமிக்கி அவள் அசைவுக்கு ஏற்ப அவள் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு செல்ல.. அதை சற்று ரசனையோடு பார்த்தவன் சுட்டு விரல் மற்றும் கட்டை விரலால் அவள் காதருகே சென்று அதை லேசாக சுண்டி விட்டான்.

 

அவனிடம் இதை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து அவனைப் பார்க்க.. சுண்டி விட்ட விரல்களோ இன்னும் அவள் காதருகே தான் இருந்தன. மெல்ல அவை பயணித்து அவளின் சிவந்த கன்னத்தில் தட்டி விட, அவள் அவன் ஸ்பரிசத்தை உணரும் முன்னே “வா போகலாம்” என்று முன்னே நடந்தான். 

 

பொதுவாகவே ஆண்களின் கை சற்று கடினமாகத்தான் இருக்கும். அதுவும் கடினமான வேலைகள் செய்யும் இவனுக்கு இன்னும் கடினத்தோடு இருக்க.. அவளின் மெல்லிய கன்னத்தில் ஏதோ பாறை முட்டியது போலவே இருந்தது. 

 

‘இவரு விரலால தொட்டத்துக்கே இப்படின்னா.. மத்ததெல்லாம்.. அச்சோ ரங்கா..!’ என்று தலை உலுக்கியவள் அவன் பின்னே பொம்மை போல நடந்து சென்றாள். 

 

சற்று முன்ன இந்தப் பொண்ண கட்ட வேண்டுமா? கண்டிப்பாக இந்த பொண்ண தான் கட்டியே ஆக வேண்டுமா? என்று கவலையோடு தான் நின்று கொண்டிருந்தான் கள்ளழகன். 

 

அவனின் நண்பனான கருப்பன் கூட “பங்கு.. கவலைப்படுறதுனால கருவாடு கடலுக்கு போய் வாழ போறதா என்ன?” என்று கேட்க..

 

“ஒழுங்கா ஓடிடு..! ஏதோ தொண மாப்பிள்ள வேணுங்கிறதுக்காக தேன் உன்னைய உள்ள விட்டு இருக்கேன். நீயும் இந்த கல்யாணத்துல சதி செஞ்சேன்னு எனக்கு தெரியும்..! கல்யாணம் முடியுற வரைக்கும் வாய நீ தொறந்த மவனே.. அம்புடுதேன்..!” என்று மீசையை முறுக்கி அவன் அதட்டியதை கண்டவன்,

 

“என்னா பங்கு.. இப்படி பேசிபுட்ட.. நான் சதி எல்லாம் பண்ணுவேனா அதுவும் என் உயிர் நண்பன் உனக்கு பண்ணுவேனா?” என்று அவன் பாவமாக கேட்டான்.

 

இவனோ வலது கையில் இருந்த தங்க காப்பை முறுக்கியவாறே பார்க்க.. கள்ளழகனின் முரட்டு கையும் அதிலிருந்த முறுக்கிய காப்பையும் பார்த்தவன், கூடவே நரம்பு புடைப்பதையும் பார்த்தவன்,

 

எச்சில் விழுங்கியவாறு “ஹி.. ஹி.. பங்கு நம்ம மச்சான் சின்ராசு பேச்சுலர் பார்ட்டின்னு கூப்பிடியான் அப்பவே.. நான் தேன் உனக்கு தொணையா இருக்கலாம்னு இருந்தேன். உனக்கு தான் தொணையே தேவைப்படாது போலயே இப்ப.. நான் போய் என்னன்னு எட்டி ரெண்டு வார்த்த விசாரிச்சுட்டு வந்துடறேன் பங்கு” என்று நடையை கட்டி விட்டான்.

 

“இந்த தண்ணி பார்ட்டி எல்லாம் வைக்காதன்னு சொன்னா அப்பாரு கேட்கிறதே கிடையாது..! இந்த வயசுலயும் இவரு மாமா மச்சான் சோக்காளியோட தண்ணி அடிச்சிட்டு கூத்தடிச்சு ஆட்டம் போடுறாரு.. நம்ம சொன்னா கேக்கவா போறாரு.. இவிய்ங்க எல்லாம் இந்த மாதிரி கூடுறதே தண்ணி அடிக்க தேன்” என்று அவன் உடுப்பை மாற்ற, அந்நேரத்தில் அவன் அறை கதவு தட்டப்பட்டது.

 

யார் என்று திறந்து பார்க்க, இவன் தங்கை உறவுமுறை பெண் நின்று கொண்டிருந்தாள்.

 

“என்ன ருக்கு.. புள்ளய தூங்க வைக்காம இங்கன வந்து என்ன செஞ்சிட்டு இருக்குற நீனு?” என்று அதிகார தொணியோடு கேட்வனின் அன்பு புரிந்தவளாய்,

 

“இல்லண்ணே.. அப்பத்தா உன்னைய பாக்கணும்னு கூட்டியார சொல்லுச்சு” என்றாள்.

 

“இந்நேரத்துலயா? என்னைய பாக்கவா?” என்றதும்,

 

“ஆம்ணே.. உன்கிட்ட எதுவும் முக்கியமா சேதி சொல்லனுமாம். உன்னைய கூட்டி வர சொல்லுச்சு” என்றாள் அவள். 

 

“அதுக்கு அழுகிற புள்ளய தூங்க வைக்காம இப்படி எதுக்கு நீ தூக்கிட்டு வரவ? யார்கிட்டயாவது சொல்லிவிட்டா என்ன?”

 

“ம்க்கும்.. நல்லா சொன்னீக போக.. ஒரு ஆம்பள ஆளையும் இங்கன காணோம். பூரா பயலுவோலும் அங்கன சரக்கு அடிச்சிட்டு பாட்டுக்கு ஆட்டம் போட்டு கிடக்கிறானுவோ.. இதுல எங்கிட்டு அவிய்ங்கள புடிச்சு.. அவிய்ங்க கிட்ட நான் சேதிய சொல்லி.. அந்த சேதி அவிய்ங்களுக்கு புரிஞ்சு.. அதை கேட்டுட்டு சாயாம கொள்ளாம நேரா நடந்து வந்து உங்க கிட்ட சொல்ல..?? அதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும் போங்க..” என்று அவள் சடைத்துக் கொள்ள..

 

சிரித்துக் கொண்டவன் “கல்யாணம் காட்சினா இதெல்லாம் இருக்க தானே செய்யும்” 

 

“இல்லைனாலும்.. இவிய்ங்க எல்லாம் நிப்பாட்ட போறாய்ங்களா என்ன?” என்றவன், அவளிடம் அழுத பிள்ளையை வாங்கி இவன் தோளில் தட்டிக் கொண்டே அவளோடு சேர்ந்து நடந்தான்.

 

“அது என்னமோ போங்க ணே.. இவிய்ங்க பூரா பயலுகளும் கல்யாண காட்சிக்கு வரதே குடிக்க தேன்” என்றவள்,

 

“சரி ணே.. நான் இங்கன ரூம்ல தான் தங்கி இருக்கேன். நீங்க இவன குடுத்துட்டு போய் அப்பத்தாவ பாருங்க.. நான் போய் இவன தூங்க வைக்கிறேன்.. கோட்டிபய மயேன் தூங்காம அடம் பண்றியான்..” என்று மகனை தூக்கிக்கொண்டு அவள் இருக்கும் அறைக்குள் சென்றாள் ருக்மணி.

 

உள்ளே நுழைந்தவன் அங்கு தண்டட்டியாட கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்த அவனது அப்பத்தாவை பார்த்தான். வயது எப்படியும் எண்பது இருக்கும். ஆனால் தோல் சுருக்கம் நரையும் மட்டுமே அவரின் வயதை காட்ட.. அவரின் கூர் பார்வையும் வெண்கல குரலும் ‘எனக்கு இன்னும் வயசு ஆகல டா’ என்று கட்டியம் கூறும்..!

 

“வா ராசா வா.. என்னய்யா இது புது மாப்பிள்ளையா பட்டு துணி உடுத்தாம கதிர் சொக்காவ போட்டுட்டு சுத்துறவன்? எங்க உங்க ஐயன்? அதுக்கு மேல உங்க ஆத்தா என்ன பண்றா இதெல்லாம் கூட கவனிக்காம.. கூப்பிடு அவள..” என்று இந்த வயதிலும் மருமகளோடு மல்லுக்கு நிக்க முயன்றவரின் கையை பற்றியவன்,

 

“நலுங்கு வைக்கும் போது பட்டு வேட்டி சட்டையில தானே இருந்தேன் அப்பத்தா.. அதுக்கப்புறம் அது ஒரே கசகசன்னு, அதோட வர்றவங்களையும் கவனிக்கணும்ல.. அங்கிட்டு இங்கிட்டு போயிட்டு வர எனக்கு அது தோது படல.. அதேன் வழக்கம் போல கதிர் சட்டைக்கு மாறிட்டேன். இதுக்கு போய் இந்த வயசுல நீ எங்க அம்மை கிட்ட சண்டை போட போறியா? எங்க அம்மைக்கே இப்ப மருமக வரப்போறா? அவுக இனி மாமியாராக போறாங்களாக்கும்” என்றான் அப்பத்தாவிடம் சிரித்துக் கொண்டே..!

 

“ம்க்கும்.. அப்படியே வந்துட்டாலும்..! உங்க ஆத்தா மாமியாரு ஆயிட்டாலும்..! உங்க ஆத்தாளுக்கே இன்னும் கூறு பத்தல.. இதுல இவ மருமகள வச்சு கட்டி மேய்ச்சு.. இந்த சொத்தை எப்படி ஆளப்போறானு நானும் பார்க்க தான போறேன்?” என்று தண்டட்டி ஆட, அவர் பேசியதை கண்டவனுக்கு,

 

இனி வீட்டில் வெறும் மாமியார் சண்டை மட்டும் நடக்காது..! 

 

மாமியாருக்கும் மாமியாருக்குமே சண்டை நடக்கும் போலவே என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

அந்த காலத்து மனிதர்களுக்கு தங்களைப் போல தங்கள் பிள்ளைகள் கட்டுக்கோப்பாக குடும்பத்தை நடத்தி செல்வார்களா என்பது இன்றுவரை சந்தேகம்..! அவர்கள் ஒரு சில விஷயத்தில் தவறும் போது அதை சுட்டிக்காட்டி பேசி தன் பழைய கால வாழ்க்கையை பேசவில்லை என்றால் அவர்களுக்கு தின்றது செரிக்கவே செரிக்காது..!

 

அதற்காக பிள்ளைகள் மீது அன்பு இல்லை பாசம் இல்லை என்றாலும் கிடையாது..!

 

என்ன இன்னும் பிள்ளைகளை தங்கள் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.. அது தவறும் போது இவர்களின் வாயும் சிதறும்..!

 

அவ்வளவே..!!

 

“சரி சரி என்ன விஷயத்துக்கு இந்த இராவுல தூங்காம என்னைய வர சொன்ன?” என்று கேட்டான் அழகன்.

 

“எல்லாம் என் பேத்தியை பார்க்கத்தேன்” என்றார் அவர். 

 

அவரின் பேத்தி என்றால் தன் தங்கையை குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தவன், “அவ அம்மாவோட அடுத்த ரூம்ல தேன் இருக்கா.. கூப்பிட்டுக்க வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு என்னைய வர சொன்ன நீனு அப்பத்தா?” முறைத்தான் அழகன். 

 

“அட கிறுக்க பய மவனே‌.! அவள கூப்பிடறதுக்கு உன்னைய ஏன் டா பேராண்டி நான் வர சொல்ல போறேன்? நான் பாக்க நினைச்சது யேன் வீட்டுக்கு வர போற பேத்திய.. அதேன் உன் மாமன் மகள..” என்றார்.

 

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் “இரு யாரையாவது விட்டு கூட்டிட்டு வர சொல்றேன்”

 

“ஏலேய்.. இரும்டா.. சுத்த வெவரம் தெரியதவனா இருக்கியான். இரு இரு நீயே போய் கூட்டிட்டு வா” என்றதும் அவன் திடுக்கிட்டான். 

 

“ஏன் அப்பத்தா உனக்கு இந்த கொலவெறி? ஆத்தி..! இந்த இராத்திரில நான் போய் அவ முன்னால நிக்கணும்.. அவ என்ன பாத்து சத்தம் போட்டு அலற வா?” என்று தன் நிறத்தையே ஜாடையாக கூறி அவன் சிரிக்க அவனை முறைத்துப் பார்த்தவர், 

 

“ஆம்பளைங்களுக்கு என்ன நெறம் வேண்டி கிடக்கு..! மனசுதான் முக்கியம்..! குடும்பத்த வைச்சு தாங்குறானா? கட்டின பொஞ்சாதியையயும் பெத்த புள்ளைங்களையும் நல்லபடியா பார்த்துக்கிறானா? கட்டு கோப்பா குடும்பத்தை கொண்டு போறானா? முடிஞ்ச அளவு சொத்து சேர்க்கிறான அதுதான் முக்கியம் அப்பு..! நெறம் கெடக்குது நெறம்” என்று அவர் முகம் சுளிக்க…

 

“அப்போ என் இரண்டு விட்ட மாமனோட பொண்ணு அங்கயற்கண்ணிய கட்டி வச்சிருக்க வேண்டியது தானே?” என்று கேட்டதும் அப்பத்தா ஙே என்று விழித்தார்.

 

ஏனென்றால் இதேபோல நிறத்தை சொல்லி தான் “அந்த கருப்பட்டிக்கு என் ராசா கேக்குதா?” என்று அத்தனை சண்டை போட்டார் மகனிடம்..!

 

இன்று பேரனின் நிறத்தை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பேத்தியின் நிறம் இருப்பதைக் கண்டு அவருக்கு பெருமைதான்..! ஆனால் பேரன் தன்னைத்தானே குறைவாக பேசிக்கொள்வது அவருக்கு பொறுக்கவில்லை..! ஒற்றை பேரன் அல்லவா??

 

அப்பத்தா முகம் போன போக்கை கண்டு சிரித்துக் கொண்டவன்,

 

“சரி சரி இரு கூட்டிட்டு வரேன்” என்றுதான் அவன் ஆண்டாளின் அறைக்கு சென்றது. 

 

இவர்களுக்கு முன்னமே வந்த ரங்கநாயகி “மாமி கூப்பிட்டேளா?” என்றப்படி அடக்கமாக நின்றார். 

 

கலையரசியின் தம்பி மனைவியை பலமுறை பார்த்திருக்கிறார் பேசி பழகியும் இருக்கிறார். அவரின் அடக்கம் இவருக்கு பிடித்தம்.

 

“இப்பதான் மாமிய பாக்கணும்னு தோணுதா உனக்கு நாயகி?” என்று அவர் சற்று அதிகாரமாக கேட்க..

 

“அச்சோ.. தப்பா எடுத்துக்காதேள் மாமி.. வந்தது இருந்து நலுங்கு வைக்க அது இதுன்னு வேலையா இருந்துட்டேன். அப்புறம் நீங்க ஓய்வு எடுக்கிறதா மன்னி சொன்னா.. அதான் உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு..” அவர் மென்று முழுங்க..

 

“சரி சரி.. எங்க உன் பொண்ண காணோம்” என்று கேட்டார். 

 

“தம்பி அழைச்சிட்டு வரார்..” என்றார் ரங்கநாயகி. 

 

“அது என்ன தம்பினு சொல்றவ? நல்ல வாய் நிறைய மாப்பிள்ளைனு கூப்பிடு” என்றவரின் பேச்சில், புன்னகையோடு “மாப்பிள்ளை அழைச்சிண்டு வர்றார் மாமி” என்றார் ரங்கநாயகி. 

 

பயந்து பயந்து வந்த ஆண்டாளை “கிட்ட வா..” என்று கணீரென்ற குரலில் அழைத்தார் கள்ளழகனின் அப்பத்தா சொக்கியம்மாள்.

 

தயங்கி.. தயங்கி.. பயந்து பயந்து.. மெல்ல அவர் அருகே அவள் செல்ல..

 

“வா ஆத்தா.. நல்ல தைகிரியமா இருக்க வேணாமா? அழகன கட்டிக்க போறவ என்னமோ பம்பி பம்பிக்கிட்டு வர.. பக்கமா வா அப்பத்தா தானே வா.. இப்படி வந்து நில்லு பக்கத்துல..” என்று அவரின் வெண்கல குரலில் வேகமாக நட

ந்தவள் அழகிய பொம்மை போல அவர் அருகே நின்றாள் ஆண்டாள்.

 

அடுத்து அவர் கேட்ட கேள்வியில் முகம் சுளிக்க தலை சுற்ற நின்றாள் ஆண்டாள் நப்பின்னை..!!

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top