அத்தியாயம் 41
மனைவியின் இந்த எதிர்ப்பேச்சை எதிர்பார்க்காத அழகப்பன் அதிர்ந்தார். பின்பு சொத்துபத்தை வைத்து அவர்களை மிரட்டி பார்த்தார்.
"என்னால ஒத்துக்க முடியாது..! முடியவே முடியாது..! நான் இவங்கள ஏத்துக்கவே மாட்டேன்..! என் சொத்துல ஒரு சல்லி பைசா கூட இவங்களுக்கு கிடையாது. எல்லாத்தையும் நான் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வச்சாலும் வைப்பேனே ஒழிய உங்களுக்கு எல்லாம் கொடுக்க மாட்டேன்.. எல்லாரும் நடுத்தெருவுல நில்லுங்க.. அப்பதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..” என்று அவர் கத்தி தீர்த்தார்.
“ச்சை..!” என்று மனம் விட்டுப் போனது வள்ளியம்மைக்கு.
இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவர் எண்ணற்ற அட்டூழியங்கள் அநீதிகள் வியாபாரத்திற்காகவும் வீட்டு கௌரவத்திற்காகவும் செய்திருக்கிறார். அதனை எல்லாம் பொறுமையோடு கடந்தார். ஏன் மகனை கூட விட்டுக் கொடுத்தவர் தான். ஆனால் இப்பொழுது எக்காரணத்தைக் கொண்டும் பேரனையும் பேத்தியையும் அவரால் விட்டுக் கொடுக்க முடியாது..!
“உங்க சொத்து யாருக்கு வேணும்? என் பொண்டாட்டி பிள்ளைகளை வச்சு பாத்துக்குற அளவுக்கு நான் நல்லாவே சம்பாதிக்கிறேன். அதுவும் இல்லாம எங்க அப்பாவும் எனக்கு சொத்து சேர்த்து வச்சுட்டு தான் போயிருக்காரு.? அடுத்தவங்களை எல்லாம் நம்பி நாங்க நின்றதில்ல..!” என்று எகத்தாளமாக கூறினான் ராவண்.
தாத்தாவின் பேச்சில் அதிர்ந்து தான் நின்று இருந்தாள் ஆருஷி..!
‘எங்களையே இவ்வளவு பேசுகிறார் என்றால்.. அன்று மாமாவையும் அத்தையையும் எவ்வளவு பேசி இருப்பார்?’ என்று அவளுக்கு கண்கள் கலங்கியது. ஆனால் பிடிவாதமாக கலங்கிய நீரை எல்லாம் உள்ளே இழுத்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“எது ? சொத்தெல்லாம் நீங்க சம்பாதித்தா? நீங்க மட்டுமே சம்பாதித்ததா?” என்று திருப்பி கேட்ட வள்ளியம்மையை அழகப்பன் முறைப்போடு பார்க்க..
“நீங்க இந்த ஊருக்கு வந்து தொழில் ஆரம்பிக்கும் போது என் நகைகளை எல்லாம் கேட்டீங்க.. என் அப்பா வீட்டில எனக்கு போட்ட நகைகளை எல்லாம் உங்க கிட்ட கொடுத்தேன். அத வைச்சு தான் இந்த தொழில ஆரம்பிச்சீங்க.. ஆக மூலதனம் என்னோடது..! நீங்க மட்டும் இல்ல ஆரம்ப காலத்துல நானும் இந்த பாத்திரக்கடைக்காக எவ்வளவு உழைச்சேன் தெரியுமா?”
“இதோ நிக்கிறாளே உங்க பேத்தி.. இவ அம்மாவும் அப்பாவும் கூட அந்த கடைக்காக அவ்வளவு உழைச்சு இருக்காங்க.. அப்படி இருக்கும்போது நீங்க மட்டுமே சம்பாதிச்சேன் சம்பாதிச்சேன்னு மாரு தட்டுறதுல எந்த புண்ணியமும் கிடையாது..!”
“இதோ.. நீங்க படுத்த படுக்கையா இத்தனை வருஷம் இருக்கீங்களே.. இப்ப எல்லாம் இந்த சொத்தை யார் பார்த்துகிட்டா? என் புள்ள மாதிரி இருக்குற கிரி தானே? இன்னொரு பேரனான சுக்ரேஷன்தானே? என்னமோ நீங்களே சம்பாதித்த மாதிரி இத்தனை கொந்தளிக்கிறீங்க?” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது தான் கிரிதரனும் சுக்ரேஷும் ரூபிணியோடு உள்ளே நுழைந்து “என்ன? என்ன பிரச்சனை பெரியம்மா?" என்று கேட்டார்.
“இந்த சொத்தெல்லாம் உங்க பெரியப்பாவுக்கு மட்டும்தானாம். நாம எல்லாம் ஒண்ணுமே செய்யலையாம். அதனால அவர் பேச்சைக் கேட்காத நமக்கு எந்த சொத்தும் கொடுக்காம, இந்த சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்கப் போறாராம்..!” என்றார்.
கிரிதரன் பெரியப்பாவை பார்த்து “இந்த சொத்துல எனக்கு எந்த பங்கும் உரிமையும் கிடையாது பெரியப்பா. நான் இந்த தொழிலுல இறங்கும்போது நீங்க என்னிடம் அது தெளிவா சொன்னது தான். லாபத்தில் இவ்வளவு பர்சன்ட் உனக்கு பங்கு உண்டுனு சொன்னிங்க. அது இந்நாள் வரைக்கும் சரியாகத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க.. அதனால உங்க சொத்துல சொந்தம் கொண்டாடுற அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவன் நான் கிடையாது.. என் பிள்ளையும் அந்த மாதிரி எண்ணம் கொண்டவன் கிடையாது. அதனால உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க என்ன வேணாலும் செய்யலாம்” என்றார் கிரிதரன்.
“அடேய் லூசு கிரி… என்னமோ உங்க பெரியப்பன் மட்டுமே சொந்தமாக கை காசு போட்டு தொழிலை தொடங்கி கஷ்டப்பட்டு உழைச்சது மாதிரி பேசுற? இதுல என் பங்கும் இருக்கு? என் பிள்ளைங்க பங்கும் இருக்கு. அது எப்படி நான் விட்டுக்கொடுப்பேன்? இவர் தூக்கி அனாதை ஆசிரமத்தில் கொடுக்க நான் விட்டுடுவேனா? அன்னைக்கு என் பையனுக்கு தான் என்னால போராட முடியல.. ஆனா இன்னைக்கு ஏன் பேர புள்ளைங்களுக்காகவும் கொள்ளு பேர புள்ளைங்களுக்காகவும் நான் இவர் மேல கேஸ் கூட போடுவேன்” என்றதும் மனைவியின் இந்த பேச்சில் ஆடிப் போய்விட்டார் அழகப்பன்.
இப்படி எல்லாம் தன் மனைவிக்கு பேச தெரியுமா என்று அவர் பார்க்க…
“என்ன ரொம்ப பாக்குறீங்க? நீங்க ஊர் ஊரா தொழிலுக்காக.. சரக்கு வாங்க வியாபாரத்தை பெருக்கனும் சுத்தும் போது இங்கே வியாபாரத்தை பார்த்துக் கொண்டது யாரு? கல்லாப்பெட்டியில் காலனா காசு கூட போகாம கட்டிக் காத்ததெல்லாம் இந்த வள்ளியம்மை ஆச்சியாக்கும்..! என்னமோ நீங்க மட்டும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மாதிரி பேசுறீங்க.. இப்போ உங்களுக்கு மாசம் எவ்வளவு செலவாகுது தெரியுமா? அந்த கணக்கு எல்லாம் எங்க போய் சொல்ல?” என்றதும் அவர் இப்பொழுது வெலவெலத்து போனார்.
“நீங்க யாரு என் பேரன் பேத்திய ஏத்துக்க மாட்டேன்னு சொல்றதுக்கு? நான் ஏத்துக்குவேன். அவங்களுக்கு உரிமையான வீடு இது. இங்க தான் அவங்க இருப்பாங்க.. உங்களால என்ன முடிந்ததோ பார்த்துக்கோங்க.
நாங்க எல்லாம் சேர்த்து உங்களை இனி ஏத்துக்க போறது கிடையாது..! காலம் போன கடைசியில் தனியா கடந்து கஷ்டப்படுங்க” என்றதும்
“வள்ளி.. நம்ம பேச்சைக் கேட்காமல் போனவனோட வாரிசுக்காக கட்டின புருஷனையே வேணாம்னு சொல்லுவியா நீ?” என்று அவர் மெதுவாக கூற..
“புள்ளைங்கள எல்லாத்துக்கும் கட்டாயப்படுத்த முடியாது..! அவன் அந்த பொண்ணு தான் விரும்புனானா நாம கட்டி வச்சிருந்திருக்கணும். ஆனா நீங்க குடும்ப கவுரவம்னு பார்த்து இப்ப நான் என் பொண்ணு புள்ளைனு எல்லாரையும் இழந்தது தான் மிச்சம்” என்று அழுதவரை அருகில் இருந்த ரூபிணியும் ஆருஷியும் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினர்.
“அப்புறம் உங்ககிட்ட தான் காசு இருக்கு இல்ல.. இனிமே உங்களை நீங்களே பாத்துக்கோங்க” என்றவர்
“இந்த ரூம்ல இருந்து என்னோட பொருள் எல்லாம் எடுத்து பக்கத்து ரூம்ல வை டி கமலா.. இந்த மனுஷன் அவர் பணத்தோட தனியாவே இருக்கட்டும்” என்றதும் ராவண்னுக்கோ சிரிப்பு முகிழ்த்தது. ஆச்சியின் இந்த ஆட்டத்தில்..!
“விடுங்க ஆச்சி.. அவர் தான் ஏதோ புரியாம பேசுறாருன்னா நீங்களும் அவருக்கு சரிக்கு சமமா நின்னுட்டு பேசுறீங்க” என்ற சுக்ரேஷ் தாத்தாவுக்காக பாவம் பார்க்க..
“இல்ல சுக்ரேஷ்.! இவ்வளவு நாளா நான் பொறுமையா போயிட்டேன். ஆனாலும் இனிமேலும் பொறுமையா போக முடியாது..!”
“சுக்ரேஷ் ப்ரோ சொல்றதும் சரிதானே ஆச்சி.. வயசான காலம். அவர தனியா விட்டீங்கன்னா நடுராத்திரியில் அவருக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துட்டுன்னா? அவருக்கு கீழே எதுவுமே வேலை செய்யாது தண்ணி குடிக்கணும்னா கூட என்ன பண்ணுவாரு? படுத்த படுக்கையா இருக்காரு என்னென்ன அசௌகரியங்கள் எல்லாம் வரும்? பாவம்..! அதெல்லாம் யாரு பார்ப்பா?” என்று மறைமுகமாக பாட்டனை மிரட்டினான் ராவண்.
“நீ எங்களை ஒதுக்கி வைத்தால் நஷ்டம் எங்களுக்கு இல்லை உனக்கு தான் மூடனே” என்று…!
அழகப்பனால் எதுவும் பேச முடியவில்லை. அதே நேரம் இவர்களை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
ராவண் பேச பேச அவர் பயந்த பார்வையை பார்த்து வள்ளியம்மைக்கு பாவமாக இருந்தாலும், ‘இந்த மனுஷனுக்கு இதெல்லாம் வேண்டும்’ என்று அமைதியாக நின்று கொண்டார்.
“வள்ளி.. வள்ளி..” என்று அவர் மெல்ல கூப்பிட.. அவரோ அதை காதில் வாங்கவே இல்லை.
“கிரி உங்க பெரியப்பாவை பார்த்துக்க தனியா ஆம்பளைங்க நர்ஸ் இருக்காங்களே.. அவங்கள ஏற்பாடு பண்ணு. அதுக்கு செலவாகிறத உங்க தாத்தா கணக்குல எழுதி வை” என்றதும் அவரோ மிரண்டே விட்டார் மனைவியின் இந்த அதிரடியில்..!
“அத்த விடுங்க அத்த.. பாவம் தான் மாமா” என்று ரூபிணி தான் அவருக்காக பரிந்து பேசினார்
“இந்த பொண்ணுக்காவது என் மேல பாசம் இருக்கே” என்று மனதுக்குள் நிம்மதி கொண்டார்.
“போதும் பெரியம்மா பேசுனது. பெரியப்பா கொஞ்சம் ரெஸ்ட் இருக்கட்டும். வாங்க நம்ம எல்லாம் வெளியில போலாம்” என்று அனைவரையும் வெளியே போக கிரிதரன் செல்ல.. தனிமரமாய் தனித்து படுத்திருந்த அழகப்பன் மாறவேலுக்குள் ராவண் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றாய் உருவம் பெற்று உலா வர.. அவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது.
அதே நேரம் அவர் காதருகே குனிந்த இராவண்..
“எங்க அம்மாவ என்ன சொன்னிங்க பெரிய மனுஷரே.. படுத்த பாவத்துக்கு பணத்தை கொடுத்து அனுப்பிடனுமா.. இப்போ உங்க பேத்திக்கும் அதையே நான் செய்யவா? இன்னொன்னு சொல்லட்டா.. நான் இன்னும் உங்க பேத்திக்கு சட்ட ரீதியா தர்ம ரீதியா புருஷன் ஆகல.. வெளிநாட்டில் இரண்டு பேரும் லிவ்விங் இன்ல தான் இருந்தோம். இவ யாருன்னு உண்மை எல்லாம் தெரிஞ்சு வயித்துல புள்ளையோட கழட்டி விட்டுட்டேன்.. எங்க அம்மா தான் அறிவுரை செஞ்சு அனுப்பி வச்சாங்க பாவமேனு” என்றதும் அத்தனை கோபம் அவருக்கு…
“டேய்..!” என்று நடுங்கும் கையால் அவன் சட்டையை பிடிக்க எத்தனிக்க அசால்ட்டாக தள்ளிவிட்டவன்…
“எந்த க்ளோரியா வேண்டாம். அவங்க ரத்தத்தில் உதித்த புள்ள வேண்டாம்னு நீ சொன்னியோ அதே புள்ள மூலமா தான் இனி உன் சந்ததிகள் பெருகும்..! யார நீ வேண்டாம்னு சொன்னியோ.. இனி அவங்க முன்னால தான் உனக்கு காலை தரிசனமே..! புரியலையா எங்க அம்மாவ வர சொல்லி இருக்கேன். இனி உன் மருமக காலையில உனக்கு தேவஸ்துதி பாடுவாங்க” என்றவன் கண் சிமிட்டி செல்ல..
“ஏய்.. ஏய்..” என்று அவன் சொல்லியவற்றை தாங்க முடியாமல் கத்தியவருக்கு லேசாக இழுத்திருந்த வாய் இப்பொழுது மொத்தமாக இழுத்துக் கொண்டது அதீத ரத்த அழுத்தத்தினால்..!
அதை திருப்தியோடு பார்த்தவன் மருத்துவருக்கு அழைத்து விஷயத்தை கூறி அவரை பார்க்க சொல்லிவிட்டு தன்னவளை தேடி தங்கள் அறைக்கு வர..
அவளோ ஓடி வந்து இவனை கட்டிணைத்து “நமக்கு இங்கே வேணாம் மாறா.. இவ்வளவு அவர் பேசுனதுக்கப்புறம் இந்த சொத்தும் வேண்டாம். எதுவும் வேண்டாம்.. நாம வேற எங்காவது போயிடலாம்
” என்று அழுதவளை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான் இராவண்…!
வருவான் அசுரன்..!
