அத்தியாயம் 40
.வா பாப்பா..” என்று அவள் கை கோர்த்தவனை கண்டு அவள் திடுக்கிட்டாள் என்றால்..
இருவரையும் சேர்ந்து பார்த்ததில் அழகப்பன் அதிர்ச்சியானர் என்றால் குறை... ஆருஷியின் சூல் தாங்கிய வயிற்றை கண்டதும் பேரதிர்ச்சியானதே மிகை…!!
“ஆரு.. என்ன இது? என்ன கருமம் இது?” என்று அவர் திக்கி திணறி கூறினார் இல்லை இல்லை கத்தினார் அதிர்ச்சி குறையாமல்..!
சும்மாவா?? எப்படிப்பட்ட பேர் அதிர்ச்சி அவருக்கு இது..!
வந்து இருப்பவன் தனது பேரன் என்றாலும் தனக்கு பிடிக்காத மருமகளின் மகன்..! தன் இனத்தைச் சேர்ந்தவன் கிடையாது.! தன் நாட்டை சேர்ந்தவன் கிடையாது..! தன் மதத்தை சேர்ந்தவன் கிடையாது..! பின் எப்படி அவனை நான் என் பேரனாக ஏற்றுக் கொள்வது?
என் இனத்தின் வித்து என் இனத்தில் விதைக்கப்பட்டு.. வளர்ந்து வந்தால் தான் என் குடும்பத்திற்கு பெருமை கௌரவம் எல்லாம்..!
அதை விட்டு வேறு ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு அதிலிருந்து வருபவன் எல்லாம் என் பேரனா? என் கண்ணால் கூட தீண்ட மாட்டேன் அவனை..! என்று பெரிதாக முறுக்கிக் கொண்டு படுத்திருந்தவரின் அடுத்த பிரம்மாஸ்திரமே ஆருஷி தான்.
அவள் தான் என் வாரிசு..! என் மகளின் மகள்..! என் ரத்தம்.. என் இனம்.. என் மதம்.. என் வாரிசு..!
ஆம் அவள் மட்டுமே என்னுடைய வாரிசு..! அவளை என் இனத்திலேயே ஒருவனுக்கு.. ஏன் வேறு ஒருவனை தேட வேண்டும்? கையிலே இருக்கிறானே என் பங்காளியின் பேரன்.. கிரிதரனின் மகன்.. சுக்ரேஷ்..! அவனுக்கே திருமணம் முடித்து என் கையிலே வைத்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு வரும் வாரிசு தான் என் உண்மையான வாரிசு..! இந்த குடும்பத்தின் அடுத்த வாரிசு..! அந்த வாரிசுக்கு தான் இந்த சொத்து சுகம் எல்லாம்..!
இந்த சொத்தில் ஒரு பைசா கூட வந்திருக்கிறவனுக்கு தரக்கூடாது விரட்டி அடிக்க வேண்டும்..! ஆம்.. ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் அவனை..!
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்னை பத்தி? இந்த அழகப்பன் படுத்த படுக்கையாக படுத்து விட்டால் அவனால் ஒன்னும் பண்ண முடியாது என்று நினைக்கிறானா? உன் வயசைவிட என் அனுபவம் பெருசு டா..! தாத்தானாம் நான் இவனுக்கு? ம்ஹீம்.. இவன் என் பேரன் என்று கூறினால், இவன் என் மகனுக்கே பிறக்கவில்லை என்று கூறி சாதிப்பேன்.
எப்படி நிரூபிப்பானாம் என் மகனுக்கு தான் இவன் பிறந்தான் என்று? என் மகன் தான் இறந்து விட்டான் என்று வள்ளியம்மை அவன் சென்ற பிறகு அத்தனை அழுதாளே..!
ம்ஹூம்.. அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. அல்ப ஆயுசுல போயிட்டான். இங்கே இருந்து நான் சொல்ற பெண்ணை கல்யாணம் கட்டி இருந்தால் இப்படி அல்பாய்சுலில் சென்று இருப்பானா? கண்டிப்பாக மாட்டான்..! அப்பன் பேச்சு கேட்காமல் சென்றதால் தான் இன்று இந்த அவனிலேயே அவன் இல்லாமல் போய்விட்டான். புத்தி கெட்டவன்..! அதிர்ஷ்ட கட்டை..!" என்று இறந்து போன மகன் மீது பாசம் வைக்காமல், அதற்கு சற்றும் வருந்தாமல் பழி சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
இப்படியாக ஏதேதோ கற்பனைகள்.. எண்ணங்கள்.. எல்லாம் ஓடிக்கொண்டே இருந்தது இரவு முழுவதும் அழகப்பன் பொல்லாத அந்த ஆணவமிக்க மண்டைக்குள்..!
இன்றைய சூழலில் அவர் மகன் இல்லாவிடினும் இவரை வைத்து ஒரு சிறிய டிஎன்ஏ பரிசோதனை செய்தால் போதுமே? ராவண் இவர்கள் பேரன் தான் என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் ரீதியாக கண்டுபிடித்து விடலாமே..!
ஆனால் அவர் அதை எல்லாம் யோசிக்கவே இல்லை..!
அவருக்கு அவர் விரும்பாத பெண்ணோடு மகன் சென்று அந்தப் பெண் மூலம் பெற்றுக் கொண்ட பையன் இந்த வீட்டுக்கு வாரிசாக வரக்கூடாது..! வரவே கூடாது..! என்று மட்டும் தான் மனதில் பெரிதாக ஓடிக் கொண்டிருந்தது..!
இப்படி ஆருஷியை வைத்து அவர் பெரிய மனக்கோட்டை கட்டிட அந்த மனக்கோட்டை எல்லாம் சீட்டு கோட்டை போல சிதறடித்தான் ஒற்றை வார்த்தையில் அதுவும் நெருக்கமான அந்த “பாப்பா” என்ற வார்த்தையில்…
அவள் அவரின் பிரம்மாஸ்திரம் அல்லவா?
அந்த பிரம்மாஸ்திரத்தை அவருக்கு எதிராக திருப்பி விட்டிருந்தான் ராவண் திரேந்திரன் மாறவேல்..!
எந்த பேத்தியை வைத்து தன் குடும்ப வாரிசை பெற்று ராவண் முகத்தில் கரியை பூசி விரட்டி விட வேண்டும் என்று நினைத்தாரோ…
அந்த ராவண் மூலமாகவே இந்த வீட்டுக்கு அடுத்த சந்ததியை அதுவும் அவரின் செல்லப்பேத்தியின் மூலமாகவே வருகிறது என்றால்??
சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை அதிர்ச்சி அவர் எதிர்பார்க்கவே இல்லை.
கண்கள் நிலைக்குத்தை நின்றது முதலில் அவன் கோர்த்திருந்த ஆருஷியின் கைகளில்.. அடுத்து ஆருஷியின் கைகள் மீதே.. ஆம்..! அவள் சற்றே பயத்தோடு அவளது சுல்தாங்கிய வயிற்றின் மேல் கை வைத்திருக்க… அவரின் பார்வை கூர் ஈட்டியாய் குத்தி கிழித்தது.
தாத்தாவின் பார்வை தன் வயிற்றில் தான் அதிக கோபத்தோடு படுகிறது என்பதை கண்டவளுக்கு உடம்பு லேசாக நடுங்கிற்று. அவள் கையை கோர்த்திருந்து அவளோடு உரசிக் கொண்டு நின்ற ராவண்னுக்கு அவளின் பயம் அப்பட்டமாக தெரிய..
மற்றொரு கையை அவள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “ஏன் பாப்பா நடுங்குற? உங்க தாத்தா தானே? நான் கூட இருக்கேன் தானே? அப்புறம் என்ன பயம்?’ என்று அவள் பயத்தை போக்க அவன் ஆறுதலாக பேச..
‘அட போடா.! உன் கூட நான் நிற்கிறது தான் பயமே.! நீ இல்லாம இந்த குழந்தை வேற ஒருவர் மூலமாக வந்ததுனு சொன்னா கூட இந்த ஆளு ஒத்துக்குவாரோ என்னவோ? ஆனா பையனோட பையன் உன்னையே ஏத்துக்க மாட்டாரு.. இதுல உன் மூலமா வந்த இந்த குழந்தையையா ஏத்துக்க போறாரு?’ என்று தாத்தாவை ஆதி முதல் அந்தம் வரை என்று அனைத்தும் அறிந்து வைத்திருந்த ஆருஷியின் எண்ணங்கள் அவ்வாறுதான் ஓடின..!
ஆனால் அதுதான் உண்மை அல்லவா? அவரின் எண்ணங்களை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருந்த ஆருஷி சற்று நடுக்கத்தோடு “தாத்தா..” என்று அழைக்க..
“என்ன செஞ்சு வச்சுட்டு வந்திருக்க.. இந்த வீட்டுக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே? அப்படியும் மீறி இந்த பயலோட நீ..?” என்று அவர் உறும…
என்ன சொல்லுவாள்? காதலிக்கும் போது இவன் மாமன் மகன் என்று தெரியாது என்றா சொல்ல முடியுமா?
இல்லை மாமன் மகன் என்று தெரிந்தே தான் இவனை காதலித்தேன் என்றா சொல்ல முடியுமா?
எது சொன்னாலும் இப்போது தாத்தாவிடம் குற்றமாகும். முதல் குற்றம் இவள் காதலித்தது.. இரண்டாவது குற்றம் மாமா பையனை காதலித்தது..!
இரண்டு குற்றத்தையும் இவள் செய்து வந்திருக்கிறாள். பின் எங்கணம் அவரிடம் சமாதானத்தை இவள் எதிர்பார்க்க??
“அது வந்து தாத்தா.. அது வந்து..” என்று இவள் இழுக்க…
தனது பிரம்மாஸ்திரம் தனது கண் முன்னாலேயே தவிடுப்பொடியானதே கண்டு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அழகப்பன் மாறவேலால்..!
“வள்ளி..!” என்று அவர் தன் பலம் கொண்ட மட்டும் கத்த…
அந்த அறைக்கு வெளியே நின்று தான் வள்ளியமையும் ரூபிணியும் குசு குசு என்று பேசிக்கொண்டே கையை பிசைந்து கொண்டு நின்றனர்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ரூபி? உங்க மாமா சொன்னாருனு ரொம்ப அக்கறையா மெனக்கெட்டு அவங்க ரெண்டு பேரையும் ஏன் இப்போ அவரு கண்ணு முன்னாடி நிப்பாட்டுன? அந்த மனுசனுக்கு ஏற்கனவே என் பையன பிடிக்காது.. என் மருமகளை பிடிக்கவே பிடிக்காது.. ஏன் என் பேரனையும் கூட பிடிக்காது..! இப்போ என் பேத்தி முழுகாம இருக்க.. அதுவும் அவருக்கு பிடிக்காத பேரன் மூலம்.. என்னன்னு கரிச்சிக்கொட்ட போறாரோ அந்த மனுஷன்? நீ எதுக்கும் கிரிக்கும், சுக்ரேஷூக்கும் போனை போட்டு வர சொல்லு” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்..
“வள்ளி..!” என்று நாராசமாக அவர் காதில் விழ “இந்தா கூப்பிட்டுட்டாருல.. நான் போய் உள்ள என்ன பஞ்சாயத்துனு பார்க்கிறேன்.. நீ சீக்கிரம் அவங்கள வர சொல்லு” என்றவர், “என்னங்க??” என்றபடி உள்ளே சென்றார்.
“இங்க பாரு.. இங்க பாரு..” என்று பேரனையும் பேத்தியும் அவர் கை காட்ட..
இவர் சென்று பேரன் பேத்தி முன்னால் நின்று இருவருக்கும் இரண்டு கைகளால் திருஷ்டி எடுத்து “என் கண்ணே பட்டுடும் போல.. அம்சா இருக்கிங்க இரண்டு பேரும்” என்று திஷ்டி கழிக்க.. அதனை வெறுப்போடு பார்த்தார் அழகப்பன்.
“அப்போ நீங்க எல்லாம் கூட்டு சதியா” என்று அவர் கத்த..
“இங்க பாருங்க.. உங்க பேத்தி அவன் தான் மாமா மகனே தெரியாம காதலிச்சு இருக்கா. உங்க பேரனும் அப்படித்தான். அவனுக்கும் இவ தான் அத்த பொண்ணுன்னு தெரியாது. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சு இங்க வந்தாங்க.. நாங்க ஏத்துக்கிட்டோம். என்ன இருந்தாலும் அவன் என் பேரன்.. இவ என் பேத்தி.. எப்படி நான் விட்டுக் கொடுக்க முடியும்? பையன தான் தூக்கி கொடுத்துட்டேன்..! பேரன நான் விட்டுக் கொடுக்க முடியாது. அதுவும் இப்ப கொள்ளுப்பேர புள்ளைங்க வேற வரப்போறாங்க.. இன்னமும் கோபத்தை பிடித்து வைத்துக்கொண்டா இருக்க முடியும்?” என்றவர் சற்று எரிச்சலோடு கணவனை பார்த்தா
ர்.
மனைவி இடம் இந்த எதிர் பேச்சை அழகப்பன் எதிர்பார்க்கவில்லை..!
வருவான் அசுரன்..!
