1
மதுரையம்பதி..!
தமிழ் வளர்த்த மதுரை..!
மல்லியின் மண் மதுரை..!
மதுரை என்றாலே ஏதோ அருவா, மார்க்கெட் சண்டை, ஜாதி பெருமை என்று தான் இருப்பார்கள் என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜாதிய மோதல், வித்யாசம் இல்லாத நகரம் இந்தியாவில் எங்குள்ளது? பெரு நகரங்களில் கொஞ்சம் குறைந்து தென்படும். ஆனாலும் அங்கெல்லாமும் கூட ஜாதிய, ஆணவக்கொலைகள் நடக்கிறதே!
மதுரையை போல பாசமான மக்களை பார்க்கவே முடியாது..! அவர்களின் எதார்த்த குணத்தை கண்டு மெய்சிலிர்க்காமல் இருக்க முடியாது..!
மதுரையின் அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் ஜகஜோதியாக அலங்கார விளக்குகளால் மின்னியது..!
கூடவே அந்த கால இளையராஜா இசையில் படு பிரபலமான படங்களான நம்ம கலர் கலர் சட்டை நாயகன் ராமராஜன்.. மைக் மோகன்.. விண்டேஜ் விஜயகாந்த் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பாடல்கள் எல்லாம் அந்த ஏரியாவையே அதிர வைக்க, பல இடங்களில் பெரிய பெரிய மைக் செட் வைத்து பாடல்கள் ஒலிபெருக்கி வாயிலாக மக்களை சென்று அடைந்தன..!
“என்னதேன் சொல்லு அந்த காலத்து பாட்டு பாட்டு தேன்.. அந்த இசையும் வரியும் அப்படியே நமக்குள்ள நிக்குது யா” என்று ஒரு பெருசு கூற..
“அதேதான் பங்காளி.. இப்போ போடுறானுய்ங்களே நல்லாவா இருக்கு? ராக்கு பாப்புனு ஏதேதோ சொல்றாய்ங்க வாய்க்குள்ள நுழையாத பேர் எல்லாம் வெச்சு அதுக்கு இவனுகளே ஒரு அர்த்தத்தை கண்டுபிடிச்சு பாட்டுனு ஒன்ன பாடுறாய்ங்க பாவி பயலுக.. எங்கயாவது மனச பய கேட்க முடியுதா? காதெல்லாம் கிர்ர்ரனு இருக்கு பங்காளி” என்று மற்றவரும் அவருக்கு ஒத்து ஊத..
இப்படியாக இரவு உணவு முடித்துவிட்டு வெற்றிலை பாக்கை குதிப்பி கொண்டே எம்எஸ்வி தொடங்கி இளையராஜா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி என்று அவர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்களையும் பாடல்களையும் பாடல் வரிகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர் சற்றே வயதான ஆட்டம் போட்டு முடித்த ஆண்கள் கூட்டம்..!
இந்த பக்கம் பெண்கள் கூட்டமோ மறுநாள் தங்களுக்கு தேவையான உடுப்புகளையும் அதற்கு தோதான அணிகலன்களையும் சரியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
“ஏட்டி.. என்னைய வெள்ளனவே எழுப்பி விட்டுடு டி.. அப்புறம் இந்த கூட்டத்துல என்னால குளிக்கவே முடியாது” என்று ஒருத்தி சொல்ல..
“அட நம்ம போஸ் அண்ணே பெரிய மண்டபமா தான் புடிச்சிருக்கு, அதெல்லாம் குளிக்க ரூமு நிறைய இருக்கு மயனி.. நீக கவலைப்படாதீக” என்று மற்றவள் கூற..
“ஏ அத்தாச்சி.. இந்த பூப்பந்த பத்திரமா வை பெரியம்மா கொடுத்து விட்டுச்சு..”
“என்ன வாசன.. என்ன வாசன..! எத்தனை ஊருல.. எத்தனை கல்யாணம் காட்சினு பார்த்திருப்போம்.. ஆனா நம்ம ஊரு மதுரை மல்லி மாதிரி எங்கேயுமே காணல.. அதுவும் இப்படி நெருக்கமா தொடுத்த செண்டு எங்கன கிடைக்கும் சொல்லு?” என்று அதை வாங்கியவள் பத்திரமாக வைத்தாள்.
“யேன் மயனி இந்த புடவை நல்லா இருக்கே எங்க எடுத்தீக?” என்று ஒருத்தி மற்றவள் பட்டு புடவை எடுத்து வைப்பதை பார்த்து கேட்க..
“எல்லாம் நம்ம கைத்தறி நகருல தேன் எடுத்தேன். என்னதான் கடையில தினுசு தினுசா வந்தாலும்.. பார்வைக்கு பளிச்சுன்னு இருந்தாலும்.. துணி நல்லாவே இருக்க மாட்டேங்குது. ரெண்டு தடவ கட்டுனா மூணாவது தடவ பட்டுப் புடவை பல்ல இளிச்சிட்டு போயிடுது. அதான் இந்த முறை கைத்தறி நகருக்கே போய் அங்கேயே எனக்கு புடிச்ச மாதிரி டிசைன சொல்லி கலர சொல்லி நெஞ்சு வாங்கிபுட்டேன் இல்ல..” என்று தன் அருமை பெருமையை ஒருத்தி பேச மற்றவர்கள் அவருக்கு தெரியாமல் ‘பாருங்க டி இவ பகுமானத்த..” என்று கண்களாலும் உதட்டு சுழிப்புகளாலும் பேசிக் கொண்டார்கள்.
என்னதான் உறவுமுறை நெருக்கமாக இருந்தாலும் அனைத்தையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டாலும் ஏதோ ஒரு மூலையில் பொறாமை தன்மையில் ‘இவளுக்கு வந்த வாழ்வ பாரு’ என்று சற்று குதர்க்கமாக யோசிக்கும் மனம் இந்த கலிகாலத்தில் நிறைந்து கிடைப்பதால் அவர்களை சொல்லி குற்றமில்லை..!!
“ஏட்டி.. ருக்மணி வந்து புள்ளக்கு பசியாத்தி தூங்க வையு.. ஆம்பளைக்கு 1008 வேலை கிடக்கு இவேன் என்னன்னா நொச்சி நொச்சின்னு அழுதுகிட்டே கிடக்கியான் கிறுக்கு பய மயேன்..! போ.. போ.. போய் தூங்க வை போ..!’ என்று சின்ராசு தன் மனைவி அதட்டிக் கொண்டிருக்க..
“உங்க ஆயிரத்தெட்டு வேல என்னன்னு எனக்கு தெரியாதா? நல்ல முட்ட முட்ட குடிச்சிட்டு மூலைக்கு ஒன்னா கெடப்பீக..! எங்களுக்கு தேன் இங்கன அத்தன வேல கெடக்கு.. நாங்க வேலையும் பார்த்துகிட்டு புள்ளயையும் பாத்துக்கிடணும்.. நீக மட்டும் சொகுசா போய் குடிச்சிட்டு வருவீகளா? நீ வாடா பொசகெட்ட பய மவனே..!” என்று மூன்று வயது பிள்ளை அழுகையை சமாதானப்படுத்திக் கொண்டே சென்றாள் அவள்.
“என்னைக்காவது ஒரு நாளு தேன் இப்படி சொந்த பந்தங்கள பார்த்து மாமா மச்சானு பங்காளினு சந்தோஷமா இருக்க முடுயுது..! நாம சந்தோஷமா இருந்தா வூட்டு பொம்பளைகளுக்கு பொறுக்கவே பொறுக்காதே..!” என்று வேட்டியை கட்டிக்கொண்டு சென்ற சின்ராசு,
“அடேய் களா.. என்னைய விட்டுப்பிடாதிய்ங்கடா எனக்கும் சேர்த்து ஒரு பங்கு எடுத்து வைங்க..!” என்றபடி குரல் கொடுத்துக் கொண்டே சென்றான்.
“வா அண்ணே.. வா அண்ணே.. வா அண்ணே..! உனக்கு இல்லாததா? அதெல்லாம் பெரியப்பா நிறைய வாங்கி கொடுத்திருக்குறாப்புல.. இன்னிக்கு ஒரே குஜால் தேன்.. வா வா..” என்று இளவயதை சற்று கடந்த கூட்டமும் இளைஞர்களும் கலந்த கூட்டமும் சின்ராசை வரவேற்க ஒரு பக்கம் ஆண்கள் கூட்டம் தங்களுக்குள் குஜாலாக குடித்து கும்மி அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஊரின் சத்தமான பாட்டு சத்தம்.. மக்களின் பேச்சு வழக்கு.. அவர்களின் கபடமில்லா முரட்டு தோற்றம்.. அணிகலன்களை அள்ளிப் போட்டுக் கொண்டு அம்பாள்களாக வளைய வரும் பெண்கள்..
முரட்டு மீசையை முறுக்கி வைத்துக் கொண்டு வேட்டியை பிடித்துக் கொண்டு கம்பீரமாக நடக்கும் அய்யனாரை போன்ற ஆண்கள்..
தண்டட்டி ஆட சுருங்கிய தோலும் கூர் கண்களுமாய் நெற்றிப்போட்டில் அடிக்குமாறு பேசும் அனுபவ கிழவிகள்..
ஏலேய்..! என்ற ஒற்றை வார்த்தையில் பொடுசுகளை அடக்கும் பெருசுகள் என்று இந்த ஊரில் வந்ததிலிருந்து பார்த்த அனைத்துமே பயமுறுத்தின அவளை..!
அவள் ஆண்டாள் நப்பின்னை..!
நாளைய கல்யாணத்தின் நாயகி.. மணப்பெண்.. எல்லாம் இவளே..!!
மருண்ட மான் விழிகளோடு ஜன்னல் வழியே வெளியே நடக்கும் ஆண்களின் கொட்டத்தை தான் சற்று மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதற்கு சற்று தூரத்தில் பெரிய பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து அலற விட்டுக் கொண்டிருந்த பாட்டுகளை கண்டு முகம் சுளித்தாள் பெண்ணவள்.
அவளோ காலையில் மங்களகரமாக ஆண்டாள் பாசுரங்களை கேட்டு வளர்ந்தவள், சினிமா பாடல்கள் பிடிக்காது என்று இல்லை..! இத்தனை அலற வைத்து கேட்கும் பழக்கம் இல்லை..!
‘இனி இதையும் பழகணுமா?’ என்று எச்சில் விழுங்க அந்த பயங்கர ஸ்பீக்கர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து பெரிய பெரிய பேனர்களை கண்டவள் “எத்தனை கோர்ட்டு ஆர்டர் போட்டாலும் இவா எல்லாம் திருந்தவே மாட்டாளா என்ன? இவ்வளவு பெரிய பேனர் எல்லாம் வச்சிருக்காளே.! யாருக்கு இப்படி இத்தனை பேனர்கள வச்சிருக்கா? நாளைக்கு கல்யாணத்துக்கு யாராவது முக்கியமானவா வரப்போறாளா? அரசியல்வாதி இந்த மாதிரி?” என்று அந்த பேனர்களை உற்றுப் பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள்.
ஆம் பேனர்களில் இருந்தது அவளும் அவனும் தான்..!
அதாகப்பட்டது.. நாளை கணவனாக வரப்போறவனின் அருகே இவளையும் வைத்து பல சினிமாக்களில் வருவது போல.. பலவித வேடங்களில் எடிட்டிங் செய்து வைக்கப்பட்டிருந்த பேனர்களை கண்டு நெஞ்சில் கை வைத்தவள், “ரங்கநாதா..! இது என்ன ஆண்டாளுக்கு வந்த சோதன..!” என்று விழி விரித்தாள்.
மாலையில் இங்கே வரும் பொழுது அவள் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் இருந்த அவள் அன்னை தான் “ஆண்டாள்.. மண்டபம் வரப்போறது.. முழிச்சுக்கோ முழிச்சுக்கோ..” என்று பதட்டமாக அவர் எழுப்பியதில் அரண்டு எழுந்தவள்,
அன்னை கொடுத்த டிஸ்ஸூவில் தன்னை சீர்படுத்தி லேசாக டச்சப் செய்து கொண்டு இருந்ததில் சாலையின் இரு பக்கம் இருந்த பேனர்களை அவள் கவனிக்க தவறினாள்.
மண்டபத்துக்கு அருகே இருந்த பேனர்களை கண்டே அவளுக்கு இத்தனை பயம் என்றால்.. வரவழியில் வைத்திருந்தவற்றை பார்த்து இருந்தால் அவள் நிலை என்னாகி இருக்குமோ?
அட..! இதையும் இனி அவள் பழகிக்க வேண்டியதுதான்..!
அந்நேரம் பார்த்து அவள் தோளில் யாரோ கை வைக்க பதறிப் போய் “ஆஆஆ..!” என்று அலறியவள் முன்னே கை வைத்து,
“ஏன் டி இப்படி கத்துற? சத்தம் போடாதே..! அமைதியாக இரு..!” என்று அதட்டினார் அவளது தாயார் ரங்கநாயகி.
ரங்கநாயகி பெயரைப் போலவே அந்த ரங்கநாதன் மீது ஈடில்லா பக்தியும் அன்பும் கொண்டவர், அதன் வெளிப்பாடாகவே தன் பெண்ணுக்கு ஆண்டாள் நப்பின்னை என்று அழகாக நாமக்கரணம் சூட்டினார்.
வெறும் ஆண்டாளின் நாமக்கரணம் சூட்டுயதோடு மட்டுமல்லாமல் ஆண்டாளைப் போலவே மகளும் பக்தியோடு வளர வேண்டும் என்று அந்த ரங்கநாதனை பற்றிய பெருமைகளையும் லீலைகளையும் எடுத்துக் கூறவார்.
ஆண்டாளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற அருமையான பெண். சிறுவயதிலிருந்தே அன்னையின் பேச்சைக் கேட்டு வளர்ந்த அவளும் அந்த அரங்கநாதன் மீது அளவில்லா அன்பையும் பக்தியையும் கொண்டிருந்தாள்.
தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் அந்த அரங்கநாதன் போலவே இருக்க வேண்டும் என்று அத்தனை ஆசை கொண்டாள்.
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்??
விதி ஏது? அதன் விளையாட்டு தான் ஏது? வாழ்வில் சுவாரசியங்கள் அற்றுப்போகும் அல்லவா?
“ஏன் டி இப்படி தூங்காம ஜன்னல் வழியே இருட்டையே வெறிச்சி வெறிச்சு பார்த்துண்டு இருக்கே? நேரத்தோடு தூங்கினா தானே காத்தால சீக்கிரம் எழுந்துக்க முடியும்? போ போ போய் தூங்கு போ.!” என்று அன்னை சாதாரணமாக கூற, அன்னையை கலங்கிய கண்களோடு குற்றம் சாற்றும் பார்வையோடு பார்த்தாள் பெண்.
விடிந்தால் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி கண்கள் கலங்க நிற்கும் பெண்ணை கண்டு அவரோ பதறினாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,
“ஏன் டி குழந்த.. இப்படி பார்க்கிற அம்மாவ பாசமா?” என்று ரங்கநாயகி புன்னைக்க..
“நோக்கு என்ன? சிரிப்ப.. நல்லா சிரி..! சின்ன வயசுல இருந்தே அந்த அரங்கநாதன் மாதிரி ஆம்படையான் வருவான்.. அவன மாதிரியே அன்பா அடக்கமா இருப்பானு சொல்லி சொல்லி வளர்த்துண்டு இப்ப திடீர்னு யாருக்கோ என்னை கட்டிக் கொடுக்கிற இல்ல..” என்று அவள் மூக்கை உறிஞ்ச..
“அட அசடே..! யாருக்கோ இல்லடி உன் சொந்த அத்தை பையனுக்கு தான்..! இதுக்கு தான் அழுதியா நானே கொஞ்சம் பதறிட்டேன்” என்றவர், மகளை அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து,
“கடவுள் மனுஷ ரூபயானு சொல்லுவாளோனோ.. அதே தான்..! கடவுளே நேர வரமாட்டார். ஏதாவது ஒரு மனுஷன் ரூபத்துல தான் வருவாருன்னு உனக்கு சொல்லி இருக்கேனோ இல்லையோ? அதே மாதிரி அந்த அரங்கநாதன் தான் இப்போ இந்த மாப்பிள்ளை ரூபத்தில் வந்திருக்கிறாருனு நினைச்சிக்கோடி கண்ணம்மா..!” என்றார் அழகாக பொண்ணுக்கு புரியும் விதமாக..!
ஆனால் இக்காலத்து பிள்ளைகள்தான் தான் பிடித்த முயலுக்கு 300 கால்கள் என்று சாதிக்கின்றனவே?? பின் எப்படி ஒத்துக்கொள்வாள்?
“அதெல்லாம் நேக்கு தெரியாதுமா..! நேக்கு அரங்கநாதன் மாதிரி அழகா அம்சமா சாந்தமா உள்ள மாப்பிள்ளயாண்டான பார்க்க சொன்னா.. நீ என்னன்னா அய்யனார் கணக்கா மாப்பிள்ளையாண்டானா பார்த்து வச்சி இருக்கேள்..! அவர பார்த்தாலே உள்ளுக்குள்ள நடுங்குறது நேக்கு..!” என்று அன்னையை சாடினாள்.
“ஐயனாரா??” என்று அதிர்ந்த ரங்கநாயகி பின் மெதுவாக புன்னகைத்து “அவரு அய்யனார் இல்லடி அழகர்..! கள்ளழகர்..!” என்று அவ்வளவு அன்போடு ரங்கநாயகி கூற,
அவளோ “அவரா? அழகரா? ம்க்கும்..!” என்று அவன் பெயரை கேட்டு முகம் சுளித்தாள்.
“ஏன் மா.. நோக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? நல்ல அய்யனார் கணக்கா 6 அடிக்கு, நன்னா உடம்பு வளர்த்து வச்சிண்டு இருக்குறவர பார்த்தா யாரும் அழகர்னு சொல்லுவாளா? யாராவது நம்புவாளா? இந்த அத்தை பேரை மாத்தி வச்சுட்டா.. அழகரை தூக்கிட்டு அய்யனாருனு வச்சிருக்கணும்..! தப்பு பண்ணிட்டா..! நேக்கு முதல் வேலையே.. இவர் ஆத்துக்கு போன உடனே கெஜட்டில இவர் பெயர மாத்தறதுதான்..!” என்று பேசிக்கொண்டு இருக்க..
ரங்கநாயகியோ “ஆண்டாளு.. சும்மா இரு டி..! வாய மூடு டி” என்று குறிப்பு சொன்னதை எல்லாம் அவள் கேட்கவே இல்லை..!
“ஏமா திடீரெனு எழுந்து நிற்கிறேள்..!” என்று அவள் அன்னையின் பார்வை சென்று திக்கை பார்க்க..
அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில்.. அவள் சொன்ன அதே ஆஜான பாகுவான தோற்றத்தில்.. முறுக்கிய பெரிய மீசையை சற்றே குறைத்து, அழகான கற்றை மீசையோடு.. அம்சமான கருமை தேகத்தோடு.. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அவளைத்தான் தீர்க்கமாக பார்த்துக் கொண்டு அவ
ளது அறை வாயிவை அடைத்தப்படி நின்றிருந்தான் கள்ளழகன்..!
நம்மை கொள்ளை கொள்ள வரும் இக்கதையின் நாயகன்..!!
தொடரும்..
