18
தாரிகா தன் அறையில் இங்குமங்கும் கோபத்தோடு நடந்து கொண்டிருந்தாள்.
சாப்பிட வந்தவளை வெறுப்பேற்றுவதற்காக வந்தனா பேசினாலும், 'தன் கணவன் அந்தப் பெண்ணைப் பார்க்க சென்று இருப்பது உண்மைதானே? இருக்கலாம்.. முன்னொரு காலத்தில் அவர்களுக்குள் காதல் இருந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு தாலி கட்டிய பின், என்னை தொட்டு ஆண்டபின், எப்படி அந்த பெண்ணை பார்க்க போகலாம்?' என்று மனதில் வலிமிக.. அடிபட்ட புலியாக கன்னம் வைத்து காத்திருந்தாள் கணவனை களவாட..
ஆம்!! களவாட தான். அந்தக் களவாடல் என்பது உடல் சார்ந்த உறவு மட்டும் கிடையாது மனம் சார்ந்த உணர்வுகளும் தான்.
அவளது மனம் என்னும் ஊஞ்சல் வேண்டும் வேண்டாம் என்று இரண்டு பக்கங்களும் ஆடி ஆடி கடைசியாக இப்போது கணவனின் பக்கம் கோபம் கொண்டு ஒதுங்கி நின்றது.
அந்த கோபத்துக்கு பின்னே இருக்கும் அவளது உரிமையையும் அவளின் மனதையும் கண்டுகொள்ளவில்லை. கண்டுக்கொண்டு காதல் கொள்ளும் காலம் வரும். கணவனை புரிந்துகொண்டு சீராட்டும் நாளும் வரும். ஆனால் இப்பொழுது கோபமும் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
மாலை நான்கு மணி போல வீடு வந்தவன்.. நடந்து நடந்து சோர்ந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளை சிறிது நேரம் பார்த்து நின்றுவிட்டு.. "ஏய்.. தாரிகா எழுந்திரு.. எழுந்திரு" என்று எழுப்பினான்.
அவளின் தூக்கத்தை தான் இத்தனை நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? அவள் விழிக்காததைக் கண்டு அருகில் இருந்த தண்ணீர் ஜக்கில் சிறிது நீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். அதில்தான் அவள் அரண்டு புரண்டு எழு, "சீக்கிரம் ரெடியாகு.. கோயிலுக்கு போகணும்!!" என்றவன் மீண்டும் வெளியே சென்று விட..
"இவர் பெரிய ராசா!! இவர் கட்டளையிட்டா நாம உடனே நடக்கணுமா.. போட முடியாது!!" என்று சுணங்கி மீண்டும் படுத்துக்கொள்ள முனைய..
மீண்டும் உள்ளே வந்தவன் "கோயிலுக்கு போகணும் சொன்னா.. மறுபடியும் தூங்குற.. ஒழுங்கா கிளம்பு.. அதுவும் புடவைதான் கட்டணும். இப்போ ஆரம்பிச்ச தான் ஆறு மணிக்குள்ள நீ முடிப்ப" என்றவன், கட்டிலின் மறு புறம் சென்று அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.
"இவனெல்லாம் என்ன டிசைன்!!" மனதுக்குள் பொரிந்தாலும் அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நூறும்.. போடவேண்டிய சண்டைகள் ஆயிரமும்.. அணிவகுத்து நிற்க.. இப்பொழுது வேண்டாம், கோவில் போய் விட்டு வந்து வைச்சிக்கலாம் கச்சேரியை என்று பெரிய மனதோடு கிளம்பினாள்.
அவள் அம்மா கொடுத்த பெட்டியில் ஒரு சேலை தேர்ந்தெடுக்கவே அவளுக்கு மலையை புரட்டும் உணர்வு.. இனி சேலை கட்ட வேண்டுமே?? அது மலையை தூக்கும் உணர்வு அவளுக்கு..
அன்று கணவன் செய்ததுபோல யூட்யூபில் 'சேலை கட்டுவது எப்படி?' என்று வீடியோவை ஓட விட்டு கட்ட முனைய.. அவள் எடுத்தது பனாரஸ் பட்டு வகை சார்ந்தது. வழுவழுவென்று இருக்கும் அது அவள் கைகளில் நிற்பேன் என்று அடம்பிடித்தது.
முயன்று முயன்று பார்த்தவள் அன்று மாதிரியே கோபம் கொண்டு அதை கழட்டி வீச.. ஒருக்களித்து ஒரு கையால் தலையைத் தாங்கி இவளைத்தான் பார்த்து இருந்தவன் முகத்தில் கரெக்டாக வந்து விழுந்தது அப்புடவை!!
"உனக்கு இதே வேலையா போச்சு என்ன?" என்று குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், தன் மேல் கிடந்த புடவையை எடுத்தவன் முறைப்போடு அவளை பார்த்தான்.
"போச்சு.. போச்சு.. மறுபடியும் அழ வைக்க போறான் இந்த காட்டான்!! எப்படியும் ஒரு அரைமணி நேரத்திற்காவது லக்சர் கொடுப்பான் போலயே.. மொதல்ல ஒரு டப்பா காட்டன் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இவன் பேசும்போது காதில் வைத்துக் கொண்டால் தான் காது தப்பும்" என்று மனம் அதுபாட்டுக்கு சிந்தனை செய்து கொண்டிருக்க.. கணவன் தன் அருகில் வந்ததோ நெருங்கி நின்றதோ அறியவில்லை.
"மொத மொத புடவை கட்ட ட்ரை பண்றவ இந்த மாதிரி புடவையா கட்டுவாங்க? சில்க் காட்டன் மாதிரி ஏதாவது ட்ரை பண்ணனும். அப்பதான் ப்ளீட் கொசுவம் எல்லாம் ஒழுங்காக இருக்கும். இது நழுவி நழுவி ஓடும்" என்றவன் வாய் அவளிடம் பேச, கை அதுபாட்டுக்கு அவளுக்கு சேலையை கட்டு விட்டுக் கொண்டிருந்தது.
அன்று நினைவில்லா கூடலில் இல்லாத கிளர்ச்சி..
மறுநாள் அவள் அங்கம் தொட்டு அவன் கட்டி விட்ட புடவையில் உண்டாகாத கிறக்கம்..
இன்று வெகு அருகாமையில் அவன் நிற்கும் போதே உண்டானது தோகை அவளுக்கு.. கூடவே வெகு நேர்த்தியாக அவன் கட்டி விட்ட புடவையும், தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் அவனின் தொடுகைகள் புதுவித உணர்ச்சியையும் தன் கணவன் என்ற உரிமையையும் அவள் மனதுக்குள் முகிழ.. மெல்லிய சாரல் வீசியது பெண் உள்ளத்தில்.
கண்கள் மூடி.. உதடு கடித்து.. வலது கால் பெருவிரலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி.. முக சிவப்பை அவள் அடக்கி முயல, "முடிஞ்சது கண்ண மூடி கனா காணாம சீக்கிரம் ரெடியாகு!!" என்றவன் குளியலறைக்குள் சென்று விட்டான்.
"அச்சோ!! அசிங்கப்படுத்திட்டானே அய்யனாரு!!" என்று புலம்பியவாறு அவள் ரெடியாகி கொண்டிருக்க குளித்துவிட்டு வந்தவன், கண்ணாடி ன்னே நிற்பவள் பின்னாடி நெருங்கி நின்றான்.
'இன்றைக்கு ஏன் இவன் இவ்வளவு படுத்துகிறான்?' என்று மனம் தடதடக்க.. கண்ணாடி ஊடே அவனை விழி அகலாமல் பார்த்தாள் மாது. அவளை அணைத்தவாறு பின் நின்றவன் கைகள் அவள் இடையை உரசிக்கொண்டு முன்னே வர இன்னும் கிடுகிடுத்தது நெஞ்சம் அவளுக்கு.
அவள் முன்னே இருந்த குங்குமச்சிமிழை எடுத்தவன் அதில் இருந்த குங்குமத்தை தன் இரு விரல்களால் எடுத்து, அவள் முகத்தை தன் புறம் திருப்பி, நெற்றியில் அழுந்த வைத்துவிட்டான்.
"இனி இங்கேயும் வைக்கணும் புரியுதா தரு!!" என்றவனது கிசுகிசுப்பான குரலில்.. வேற ஒரு உலகத்திற்கு செல்ல முயன்ற மனதை இறுக்கி பிடித்தாள் பெண்ணவள்.
அதன்பின் வழக்கமான அவனது இரண்டு பட்டன் சட்டை திறப்பு.. கைகாப்பு ஏற்றிவிடல்.. மீசையை முறுக்கி விடல்.. என்று செய்தவனை இம்முறை நேரடியாக பார்க்க துணிவில்லாமல் ஓரக்கண்ணால் பார்த்தாள்.
இருவரும் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் சென்று அர்ச்சனை செய்து தரிசனம் முடித்து, பிரகாரத்தில் அமர..
"தாரா!!" என்ற தழுதழுத்த குரலில் திரும்பி பார்க்க அங்கே ஆடலரசி நின்று கொண்டிருந்தார்.
"அம்மாஆஆஆ" என்ற கூவலுடன் ஓடிச் சென்று அன்னையை தழுவி கொண்டாள்.
"அத்த உங்க பொண்ண பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா?" என்று கேட்ட கணவனை ஆனந்த அதிர்ச்சியோடு பார்த்தாள் தாரிகா..
தொடரும்..
