15
நேற்றைய கூடலின் மொத்த காரணம் தான் தான் என தன்னை குற்றம்சாட்டிய தாரிகாவை பார்த்து தயா கர்ஜிக்கும் குரலில்..
"யாருடி அய்யனாரு? குள்ளச்சி.. வாய தொறந்த ஒரே போடு தான். திங்குறதுக்கு பல் இருக்காது. பேசுறதுக்கு வாய் இருக்காது. என்ன நினைச்சுக்கிட்டு இருக்க என்னை பத்தி? ம்ம்ம் பொம்பள பொறுக்கினா? இல்ல பொண்ண பார்த்தா பாயுற காமுகன்னா?? மரியாதை.. மரியாதை வேணும் வார்த்தைல.. அது எனக்கு ரொம்ப முக்கியம்!! நான் யாருன்னு நினைச்ச? ஏதாவது அடாவடி பண்ண இந்த ரூமிலே வைச்சு பூட்டிடுவேன் சோறு தண்ணீர் கூட கொடுக்காமல்.." என்றவனை பார்த்து இன்னும் பயந்து போய் அமர்ந்து இருந்தாள்.
இதுநாள் வரை பெரிதாக இவளை யாரும் அதட்டியதும் திட்டியதும் கிடையாது. அன்னை ஒற்றை சொல் சொன்னாலே தந்தை பாய்ந்து வந்து மறைத்து காப்பாற்றிவிடுவார். அண்ணனும் வாயே திறக்க மாட்டான். அவனும் எப்போதாவது ஒற்றை வார்த்தை சொன்னால்.. பதிலுக்கு பத்து வார்த்தை பேசுவாள் இவள்..
அதுவும் இப்படி நெடுநெடுவென்று உயரத்தோடு.. சற்றே முறுக்கிய மீசையோடு.. சட்டையை முழங்கை வரை ஏற்றுக்கொண்டு.. ஏதோ சண்டைக்கு புறப்பட்ட சண்டியர் மாதிரி நின்று கொண்டிருந்த தயாளனை முதல்முறையாக சற்று கலவரத்தோடு பார்த்தாள்.
"நாவடக்கம் அது ரொம்ப முக்கியம்!! நீ படிச்சிருத்தா பெரிய ஆளா? உன்னை விட எத்தனை பேர் பெரிய படிப்பு படித்து எவ்வளவு உயரிய பதவியில் இருந்தும் அடக்கமா இருக்காங்க தெரியுமா? நிறைகுடம் தளம்பாது!! உன்னை மாதிரி குறைகுடம் தான் கூத்தாடும்!! இனி ஒரு தடவை இந்த மாதிரி நீ கத்திப் பேசுவதை பார்த்தேன்…" என்று புறங்கையால் அவளை அடிப்பதுபோல் கையை உயர்த்தியவன் "ஜாக்கிரதை!!" என்று மிரட்டினான்.
தயாளனுக்கு இப்படி ஒரு ஆத்திரம் இதுவரை வந்தது இல்லை. ஏற்கனவே ஏதோ தப்பு செய்தது போல அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி. இதில் அவளும் அவனையே குற்றம் சாட்டி பேச பொங்கியே விட்டான்.
பொதுவாக இம்மாதிரியான சூழலில் யாரும் பெண்ணுக்குத்தான் ஆதரவாகப் பேசுவார்கள். அவனை அறியாமல் நடந்தது என்று சொன்னாலும் யார் நம்புவார்கள்? காய்ந்த கிடந்தவன் கம்பஞ் சோலையை பார்த்தவுடன் பாய்ந்து விட்டான் என்று எள்ளி நகையாடுவார்கள். இதெல்லாம் எண்ணியபடியே தான் பொங்கும் கடல் என உள்மனது அலைகழிக்க வெளியே அமைதியாக அமர்ந்திருந்தான்.
இவள் ஏதாவது பேசினால் சொல்லிப் புரிய வைக்கலாம் என்று இவன் எதிர்பார்த்திருக்க.. அவனுக்கும் பேசும் வாய்ப்பே தராமல் இவள் எண்ணெயில் போட்டு கடுகென பொரிந்து தள்ள.. இதுவரை கடைபிடித்த நிதானம் அமைதி எல்லாம் பறந்து போனது அவனுக்கு.
அவனும் சாதாரண ஆண்மகன் தானே!! அவனுக்குள்ளும் பாசம் அன்பு போல காதலும் மோகமும் இருப்பது இயல்பு. அதிலும் என்னதான் அவசர திருமணம் என்றாலும் இனி இவள் தான் தன் வாழ்க்கை எனும் போது.. இப்படி அவளுடனான கூடலில் கொஞ்சமும் வருத்தமில்லை அவனுக்கு.
மன பொருத்தத்தை தவிர மற்ற அனைத்து பொருத்தம் பார்த்து பெற்றோர்கள் செய்யும் திருமணத்தில் கூட இந்த சடங்கை செய்வார்கள். அவர்களுக்குள் மனம் பொருந்தி வாழ்கையை ஆரம்பிக்கட்டும் என்றெல்லாம் விடமாட்டார்கள். அந்த பொண்ணுக்கு சிறிது அவகாசம் கொடுப்போம் என்றும் நினைக்கவும் மாட்டார்கள்.
மறுநாள் வரும் பெண்களின் முகத்தை கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் உற்று உற்றுப் பார்ப்பதும், அவளிடம் கேலியாக கிண்டலாக பேசுவதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம் என்னவோ அந்த பெண் அவனை கட்டிக் கொண்டதே பத்தாவது மாதத்தில் அவர்களுக்கு வாரிசு கொடுக்கத்தான் என்ற ரீதியில் தான் அவர்களது எதிர்பார்ப்பு. இப்படி தான் இந்த சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் இருப்பது.
மனம் பற்றி யோசிக்க மாட்டீர்களா? என்று யாரேனும் கேட்டால்…
"அதெல்லாம் காலப்போக்கில் சரி ஆயிடுமா கண்ணுங்களா.. உங்க தாத்தனோட சந்தோஷமா இருந்து நானும் நாலு புள்ளை பெத்துகலையா? என்று அசால்டாக சொல்லும் அப்பத்தாக்களும் உண்டு!!
"போகப் போக சரியாயிடும் பாப்பா.. சரி ஆகலைனாலும் இதுதான் வாழ்க்கை எனும் போது நாமே சரி படுத்திக் கொள்வோம். நானும் அப்பாவும் சண்டை போட்டாலும் இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டு நல்லா தானே இருக்கிறோம்" என்று சொல்லும் அம்மாக்களும் உண்டு.
இப்படி இருக்கும் சமூகத்தில் தன் மனைவியின் மனதை அறிந்து புரிந்து தான் மற்றது எல்லாம் நினைத்திருந்த ஆண்மகன் தான் தயாளன்.
ஆனால் பாட்டியின் கைங்கர்யத்தால் நேற்று மோகம் காட்டாற்று வெள்ளமென கரை தாண்டி விட்டது. இனி வருந்திப் பயனில்லை. அவளையும் இதைப்பற்றி யோசிக்க விடக்கூடாது என்றுதான் கத்திவிட்டு இருந்தான்.
"இப்படியே உட்கார்ந்தா ஆச்சா? போய் சுத்தப்படுத்திட்டு உடையை மாற்று கீழே போகணும்" என்று கூறியவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்துவிட..
"நீங்க கொஞ்சம் வெளியில…" என்றவள் அவனின் முறைப்பில்.. அழுகை முட்டி நிற்க.. "சீக்கிரம்!!" என்றவாறு அவன் வெளியே சென்றான்.
அவளுக்காக சிறிது நேரம் கொடுத்து மீண்டும் உள்ளே வந்து பார்க்க புடவையை சுற்றி கொண்டு நின்றாளே தவிர கட்டவில்லை.
"ம்ப்ச் என்னடி.." என்று அலுத்துக் கொண்டான் நேற்று அவள் சொன்ன புடவை கட்டத் தெரியாது என்ற வார்த்தையில்.
"ஒன்னு தெரியலைனா தெரிஞ்சுக்கணும்.. கைல ஸ்மார்ட்போன் வச்சுக்கிட்டு பொழுதுக்கும் பேசிக்கிட்டு சேட் மட்டும் பண்ணினால் போதாது" என்றவன் அவள் போனை எடுத்து யூ டூபில் புடவை கட்டுவது எப்படி என்ற தலைப்பில் வீடியோவை தேடி அவள் முன்னே வைக்க..
அப்பவும் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு அலுப்பு தான் வந்தது. ஏற்கனவே மணி பத்தை தாண்டி சென்று விட்டது. இந்நிலையில் பாட்டி வேறு கோவிலுக்கு போகவேண்டும் என்று கதவைத் தட்டி சொல்லிவிட்டு சென்று விட கீழே சென்ற விட்டார். அவர்கள் முகத்தை எப்படிப் பார்ப்பது? என்று சங்கடம். இதில் இவள் இன்னும் தாமதம் செய்கிறாளே என்று கோபம்..
சட்டென்று அவளது புடவையை பிடுங்கியவன் அந்த வீடியோவை பார்த்து அவனுக்கு தெரிந்த வகையில் கட்டிவிட்டான்.
"கீழ நேரா போய் இடது பக்கம் திரும்பினா ஃபர்ஸ்ட் ரூம் என்னது. அங்க போ.. நான் பின்னாடி உனக்கு டிரஸ் எல்லாம் எங்க இருக்குன்னு கேட்டு எடுத்துட்டு வரேன்" என்றவன் கூற.. வேகமாக தலையை ஆட்டியவள் அவள் முந்தானையைப் போர்த்திக் கொண்டு அவசரமாக கீழே இறங்கினாள்.
ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கென காத்துக்கொண்டிருந்த வந்தனாவுக்கு.. மருமகளின் இந்த சோபையான முகமும் கசங்கிய சேலை கட்டும் பல விஷயங்களை சொல்ல..
நெஞ்சில் கை வைத்து அமரந்து விட்டார்.
ஆனால் ராசாமணி பாட்டிக்கு சொல்ல முடியா மகிழ்ச்சி முகத்தில்..
தொடரும்..